ரஜினி முதன் முறையாக நாயகனாக நடித்த பைரவி படத்தை இயக்கியவர் இயக்குநர் பாஸ்கர், இவருடைய மகன் பாலாஜி பிரபு.
இவர் ஒவ்வொரு YouTube சேனலிலும், ஒவ்வொரு காணொளியிலும் தொடர்ந்து ஒரே பொய்யைக் கூறிக்கொண்டுள்ளார்.
அதுவும் சம்பந்தமே இல்லாத இடத்திலும் இதையே கூறி வருவதால், ரசிகனாக கடுப்பாகி எழுதிய கட்டுரையே இது.
பைரவி
ரஜினி வில்லனாக நடித்துக்கொண்டு இருந்த போது அவரது திறமையில் கவரப்பட்டு நாயகனாக வைத்து எடுக்கத் தயாரிப்பாளர் கலைஞானம் திட்டமிடுகிறார்.
இதற்கு ரஜினி பயப்படுகிறார் காரணம், வில்லனாக வாழ்க்கை நிம்மதியாக உள்ளது, அவர் எதிர்பார்த்த வசதிகள், வருமானம் கிடைத்ததால் இதை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
பின்னர் தைரியம் கூறி நடிக்க வைக்கிறார் கலைஞானம்.
பட நிதி உதவிக்காகத் தேவரிடம் கேட்ட போது ஒத்துக்கொள்ளும் தேவர், நாயகன் ரஜினி என்று அறிந்த பிறகு மறுத்து விடுகிறார்.
நாயகனை மாற்றினால் நிதி உதவி செய்வதாகக் கூறுகிறார் ஆனால், கலைஞானம் தன் முடிவில் உறுதியாக இருந்து தேவர் கோரிக்கையை மறுத்து விடுகிறார்.
பாஸ்கர்
கதை கலைஞானம், இந்நேரத்தில் இயக்கத்துக்கு வேறு ஒருவரைத் தேடுகிறார்.
இந்நேரத்தில் இயக்குநர் ஸ்ரீதர் போன்றவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து கொண்டு இருந்த பாஸ்கர் பட வாய்ப்புக்காக திருப்பதி சென்று வேண்டி வருகிறார்.
இந்நிலையில் கலைஞானத்தை சந்தித்த பாஸ்கரை, கலைஞானம் அவரது படத்தை இயக்கித்தரக் கேட்கிறார்.
கலைஞானம் அவர்கள் கூறியது போல ரஜினியை நாயகனாக வைத்துப் பாஸ்கர் இயக்குகிறார், படமும் பெரிய வெற்றி பெறுகிறது.
பாலாஜி பிரபு
பிரச்சனை என்னவென்றால்,
தன் அப்பா தான் ரஜினியை நாயகனாக அறிமுகப்படுத்தினார் என்று கூறியதோடு, அப்பாவுக்கு மரியாதை கொடுக்கவில்லை, இறப்புக்கு வரவில்லை என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறார் பாலாஜி பிரபு.
சதுரங்க வேட்டை படத்தில் ஒவ்வொரு பொய்யிலும் ஓர் உண்மை இருக்கனும் அப்போது தான் நம்புவார்கள் என்று நட்டி கூறுவார்.
மற்றவர்கள் விஷயத்தில் எப்படியோ ரஜினி விஷயத்தில் ஒவ்வொரு உண்மையிலும் ஒவ்வொரு பொய்யைக் கலந்து கூறுகிறார்.
அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலசந்தருக்கு கொடுக்கும் மரியாதையைத் தன் அப்பாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தரை பற்றிக் கூறுவது போல, நாயகனாக அறிமுகப்படுத்திய தன் அப்பாவையும் ரஜினி குறிப்பிட எதிர்பார்க்கிறார்.
இதை ஒவ்வொரு பேட்டியிலும் தொடர்ந்து கூறுகிறார். வேறு ஒருவரை பற்றிப் பேசும் போதும் இதை அவசியமே இல்லாமல் நுழைத்துக் கூறுகிறார்.
இது என்ன அநியாயம்!
ரஜினியை நாயகனாக அறிமுகப்படுத்தியது கலைஞானம்.
ரஜினி தான் நாயகனாக வேண்டும் என்று திரையுலகின் தயாரிப்பு உச்சங்களில் ஒருவரான தேவரையே தவிர்த்தவர்.
ஆனால், வாய்ப்பு தேடி வந்தவர் பாஸ்கர். இவர் இல்லையென்றால், இன்னொரு இயக்குநரை வைத்துக் கலைஞானம் எடுத்து இருப்பார், கதையும் அவருடையது.
இந்நிலையில் தன் அப்பா தான் அறிமுகப்படுத்தினார் என்று பாலாஜி பிரபு புளுகி வருகிறார். இவர் அப்பாவுக்கே வாய்ப்பு கொடுத்தது கலைஞானம்.
வாய்ப்பு தேடி போனவர் ஒருவரை அறிமுகப்படுத்துவது சாத்தியமா?! இதில் என்ன லாஜிக் உள்ளது?
ரஜினிக்கு மட்டுமே தெரியும்
இவருடைய அப்பா இறப்புக்கு எதனால் ரஜினி செல்லவில்லை என்று தெரியாது, அதைத் தலைவர் தான் கூற வேண்டும்.
இவர் இப்படி வெளிப்படையாக ஒருவரைத் தாழ்த்தி பொய் கூறி வருகையில், அந்தக் காலத்தில் இவர்கள் எப்படி நடந்து இருப்பார்கள்?!
இவர்கள் நடத்தையில் ஏதாவது பிடிக்காமல் போய் இருக்கலாம் அல்லது வேறு நியாயமான காரணங்களால் செல்லாமல் இருந்து இருக்கலாம்.
தலைவருக்கு மட்டுமே தெரியும்.
அருணாச்சலம் பட உதவி
தனது அருணாச்சலம் படத்தின் மூலம் பல கலைஞர்களுக்கு உதவி செய்தார். அவர்களை முதலீடு இல்லாமல் பங்குதாரர்களாக்கி பட வருமானத்தில் அனைவருக்கும் ₹25 லட்சம் கொடுத்தார்.
பண்டரிபாய், VK ராமசாமி, கலைஞானம் உட்பட எட்டு நபர்களுக்கு இப்படத்தின் மூலமாக உதவினார்.
கலைஞானம் தனக்கு சம்பளம் கொடுத்த முதலாளி என்பதால், அவரிடம் எப்படி அவருக்கு உதவுவதாக கூறுவது என்று, ‘உங்களால் இணைந்து கொள்ள முடியுமா?‘ என்று வேண்டுகோளாக ரஜினி வைத்தார்.
இதைக் கலைஞானமே பேட்டியில் கூறினார்.
மன்னன் படத்தில் நடித்த பண்டாரி பாய் விபத்தில் கையை இழந்து இருந்தார், VK ராமசாமி வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்ட நிலையில் இருந்தார்.
காளி படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டு குதிரைகள் இறந்து, பொருளாதார இழப்புத் தயாரிப்பாளர் ஹேம்நாத்துக்கு ஏற்பட்டது. இதை மனதில் வைத்து அவரையும் பங்குதாரராக இணைத்தார்.
VK ராமசாமி அவர்களின் அப்போதைய பேட்டி பிரபலமாக இருந்தது. 1997 ல் ₹25 லட்சம் என்பது தற்போது பல கோடிகளுக்குச் சமம்.
பாஸ்கருக்கு உதவி
இதே போன்று இயக்குநர் பாஸ்கரையும் அழைத்து, இவ்வாறு தலைவர் கூறியுள்ளார்.
அப்போது பாஸ்கரும் தயாரிப்பாளராக இருந்துள்ளதால், படத்தில் எந்தப்பங்கும் இல்லாமல் பணத்தை பெறுவதை அவமானமாகக் கருதி மறுத்துள்ளார்.
ரஜினிக்கும் தர்மசங்கடமாகியுள்ளது.
ரஜினி இவருக்கு உதவ வேண்டும் என்ற கட்டாயமில்லை. இருப்பினும் நினைவு வைத்து மற்றவர்களுடன் அழைத்துள்ளார்.
இவ்வாறு உதவ நினைத்த ரஜினியையே விமர்சிக்கத் தனி மனம் வேண்டும், அதுவும் பொய்யைக் கூறி.
மறுத்தது தவறில்லை
பாஸ்கர் தயாரிப்பாளராக இருந்தவர், பல படங்களைத் தயாரித்தவர். எனவே, பலருக்கு சம்பளம் கொடுத்தவரிடம் இப்படிக் கூறினால், ஏற்றுக்கொள்வது சிரமம்.
எனவே, இதை அவர் நிலையிலிருந்து பார்த்தால், மறுத்தது தவறு என்று தோன்றவில்லை ஆனால், அதற்காக ரஜினி மதிக்கவில்லை என்று கூறுவது தவறு.
இதே கலைஞானம் அவர்களிடம் இந்த விமர்சனம் பற்றிக்கேட்டால், கிழித்து தொங்க விட்டு விடுவார். தற்போது வயதானதால் (95+) அவரால் பேட்டி கொடுக்க முடியாது.
இதனால் பாலாஜி பிரபு ஆட்டம்போட்டுக்கொண்டுள்ளார்.
பைரவி படத்தோடு ரஜினி முடிந்து பெங்களூரே திரும்பி இருந்தால், இன்று தலைவரைப் பற்றிப் பேசுவாரா?!
விஜய்
தலைவரைத் தான் இப்படி பேசுகிறார் என்றால், விஜயை மேலும் ஒருபடி மேலே சென்று நாறடிக்கிறார்.
விஜய் முதல் நான்கு படங்கள் (நாளைய தீர்ப்பு, செந்தூர பாண்டி, ரசிகன், தேவா). நேரடி / மறைமுக தயாரிப்பாளர் அவரது அப்பா சந்திரசேகர்.
அடுத்த படம் ‘ராஜாவின் பார்வையிலே’ தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன். இப்படத்தில் அஜித்தும் கௌரவ வேடத்தில் (Flashback) நடித்து இருந்தார்.
இதன் பிறகு வந்த படமே விஷ்ணு. இதைத் தயாரித்தவர் பாஸ்கர். அப்போது மூன்று லட்சம் சம்பளமாகவும், ஒரு லட்சம் முன்பணமாகவும் கொடுத்துள்ளார்கள்.
குமுதம் விமர்சனத்தில் விஜயை Body shaming செய்து இருந்தும் அவரை நாயகனாகத் தேர்ந்தெடுத்தோம் என்று பாலாஜி பிரபு கூறினார்.
குமுதம் என்னவோ ஒரு முறை தான் எழுதினார்கள், இவரோ விஜயை பற்றிப் பேசும் போதெல்லாம் குமுதம் குறிப்பிட்ட வார்த்தையைக்கூறி வெளிப்படையாக ஒவ்வொரு முறையும் அவமானப்படுத்துகிறார்.
அதாவது இவர் என்ன கூற வருகிறார் என்றால், குமுதம் விமர்சித்த நடிகருக்கு நாங்க வாய்ப்பு கொடுத்தோம் என்பது போலவே பேசுகிறார்.
விஜய் மீதிருந்த பார்வையை மாற்றி, அவருக்கு ஒரு திருப்பத்தைக் கொடுத்தது ‘பூவே உனக்காக’ விக்ரமன் என்றால் கூட ஒரு நியாயம் உள்ளது.
விஜயை குமுதம் கூறியது ரசிகன் படத்துக்காக, அதன் பிறகு தேவா, ராஜாவின் பார்வையிலே என்று இரு படங்கள் நடித்து விட்டார் ஆனால், பாலாஜி பிரபுவோ முந்தைய படத்துக்கு வந்த விமர்சனம் போல அதையே கூறிக்கொண்டுள்ளார்.
மற்ற கலைஞர்கள்
இதே போன்று இவர்கள் இயக்கத்தில், தயாரிப்பில் நடித்த அனைவரையும் கண்டபடி விமர்சிக்கிறார்.
ஜீவனுக்கு முன் பணம் கொடுத்துள்ளார்கள் ஆனால், இடையில் ஜீவன் நடித்த காக்க காக்க, நான் அவனில்லை வந்து அவர் பிரபலமாகி சந்தை மதிப்பு அதிகமானதால், சம்பளம் அதிகம் கேட்டுள்ளார்.
ஆனால், முன்னரே போட்ட ஒப்பந்தத்தால், அப்படியே தொடர ஜீவனும் இயக்குநரும் தோட்டா படத்து செலவை இழுத்து விட்டார்கள்.
இதனால், கடுப்பான பாலாஜி பிரபு, ‘நான் அவனில்லை படத்தில் ஜீவன் நடிக்கவே இல்லை, எல்லாத்துக்கும் ஒரே முகபாவனையைக் கொடுத்தார்‘ என்று கூறினார்.
நடிக்கவே தெரியாத ஒருவரை கட்டாயப்படுத்தி எதற்கு நடிக்க வைக்க வேண்டும்? முன்னரே தெரிந்தது நல்லது என்று கழட்டி விட்டு இருக்கலாமே!
அவருக்கு சந்தை மதிப்பு இருந்தது தானே காரணம்!
பாலசந்தர்
‘உங்க அப்பா செய்த சாதனைகளில் சிறந்ததாக எதைக்கூறுகிறீர்கள்?‘ என்று பேட்டியெடுப்பவர் கேட்டதும்,
கூச்சமே இல்லாமல் திரும்பவும், ‘ரஜினியை அப்பா அறிமுகப்படுத்தி அவர் சூப்பர்ஸ்டார் ஆகி விட்டார் அதே போல, விஷ்ணு படத்தைத் தயாரித்து விஜயும் சூப்பர்ஸ்டார் ஆகி விட்டார்‘ என்று கூறுகிறார்.
தலைவருக்கு அறிமுகம் கொடுத்து அவரின் திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர் இயக்குநர் பாலசந்தர்.
அவருக்கு இன்று வரை நன்றியுடன், அதே மரியாதையுடன் இருக்கிறார். அதோடு பாலசந்தர் கேட்டுக்கொண்டதற்காக அவர் தயாரிப்பில் நடித்துக்கொடுத்துள்ளார்.
பாலசந்தர் பொருளாதாரத்தில் சிரமமான நிலையிலிருந்த போது, அவரிடம் சென்ற கலைப்புலி தாணு,
‘ரஜினி கிட்ட ஏன் நீங்க உதவி கேட்கக் கூடாது?‘ என்று கேட்டதற்கு,
‘அவனும் எவ்வளவு தான்யா பண்ணுவான்!‘ என்று பாலசந்தர் கூறியதாக கௌதமிக்கு அளித்த பேட்டியில் தாணு கூறினார்.
அதன் பிறகு வந்த படமே குசேலன் என்று நினைக்கிறன்.
பாஸ்கர் பங்கு எங்கே உள்ளது?
பாஸ்கரா ரஜினியை அறிமுகப்படுத்தினார்? அவரா நாயகனாகக் கொண்டு வந்தார்? ஆனால், தன் அப்பா அறிமுகம் செய்ததாக பாலாஜி பிரபு தொடர்ந்து பொய்யைக் பரப்பிக்கொண்டுள்ளார்.
தனக்கு உதவி செய்தவர்களை ரஜினி என்றும் மறந்ததில்லை, மரியாதை கொடுக்கத் தவறியதில்லை.
இவர் அப்பாவுக்கும் உதவக் கேட்டுள்ளார் ஆனால், அவர் மறுத்து விட்டார். அதற்கு ரஜினி என்ன செய்ய முடியும்?
கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டிலிருக்கிறார் என்று விழாவில் சிவக்குமார் கூறியதைக்கேட்டு 1 கோடி மதிப்பில் விருகம்பாக்கத்தில் வீடு வாங்கிக்கொடுத்துள்ளார்.
பேட்டி
இவர் தலைவரை பற்றிப் பேசியதும், உடனே அவசரப்பட்டு எழுதவில்லை. மற்ற காணொளிகளில் என்ன கூறியுள்ளார் என்று பார்த்தேன்.
இவருடைய ஒவ்வொரு பேட்டியுமே மற்றவர்களைக் குறை கூறுவதாகவே உள்ளது.
திரைத்துறையில் இவர் அப்பா மட்டும் தான் ஒழுக்கம், சிறந்தவர்கள், நியாயமானவர்கள், சரியாக நடப்பவர்கள் என்பது போலவே இவரது பேச்சு உள்ளது.
அப்படி இல்லையென்றால், பாராட்டுவது போலப் பாராட்டிப் பின்னர் சேற்றை வாரி அடிப்பது.
இது எப்படி இருக்குன்னா, ஒரு சிலர் எல்லாத்தையும் கூறி நாறடித்து விட்டு, பின்னர், நமக்கு எதற்கு அடுத்தவன் விஷயம் என்பார்கள். இவருக்கு சரியாகப் பொருந்தும்.
தோட்டா படத்துக்குப் பிறகு ஊதாரி என்ற படம் தயாரித்து இன்னும் வெளியாகவில்லை, இவர் படத்தில் நடித்தால், பின்னர் YouTube காணொளியில் திட்டு வாங்க தயாராக வேண்டியது தான்.
வள்ளி படத்தில் ஒருவர், உடன் பேசிக்கொண்டுள்ள நபர் வெளியேறினால், அவரைப் பற்றிக் குறை கூறிப் பேசுவார், அதனால் அருகில் உள்ளவர்கள் வெளியே செல்லப் பயப்படுவார்கள், தன்னையும் திட்டுவார் என்று.
ஒருவேளை இவர் போன்ற நபர்களை மனதில் வைத்துத்தான் வள்ளி படத்தில் தலைவர் இப்படியொரு காட்சி வைத்தாரோ என்னவோ!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நீங்கள் எப்படி முட்டுக் கொடுத்தாலும், பாஸ்கர் தான் ரஜினியை தான் இயக்கிய படத்தில் அறிமுகம் செய்தார் என்பது உண்மைதான்.
அதை ஏன் ஏற்க முடியவில்லை?
ரஜினி என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா? அவர் கருத்து அவர் சொல்றதுக்கு அவருக்கு உரிமை இல்லையா? உங்களை மாதிரி ஒரு ரஜினி ஜால்ராவ பார்த்ததே இல்ல ரஜினிய பிடிக்கலாம் ஆனால் ரஜினி பைத்தியமா இருக்கக்கூடாது தலைவர தலைவன்னு சொல்றீங்களே அவர் என்ன தலைவரா இருந்தார் உங்களுக்கெல்லாம். அவர் கோடி கோடியா சம்பாதித்து சொத்து சேர்த்தார். அவர் மீது வைத்த விமர்சனத்திற்கு ரஜினியை சேர்ந்தவர்களே எந்த பதிலும் சொல்லாமல் இருக்கும்போது நீங்கள் எதற்கு முந்திரிக்கொட்டை மாதிரி அதற்கு நான் பதில் சொல்கிறேன் நான் ரஜினி ரசிகன் என பீத்திக் கொள்கிறீர்கள்
படத்தைப் பார்த்தா விடுங்க சும்மா தலைவர் தலைவர்ன்னு ரொம்ப ஓவரா போகாதீங்க. உங்களைப் போன்று முட்டாள்தனமான பைத்தியக்காரத்தனமான ரசிகர்களால் தான் ரஜினி இப்படி வாழ்கிறார். ரஜினி ஒரு பொய்யர் ஒவ்வொரு ஆடியோ விழாவிலும் ஏக்கச்சக்கமான கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டு நிறைய பொய் சொல்கிறார். அவர் யாருக்கும் உண்மையாக இருந்ததே இல்லை அவர் பல ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார் அவர் சுயநலவாதி பணப்பேய் பிடித்த கஞ்சப் பிசினாரி. யாராலும் வெற்றியோ அவர்களுக்கு நன்றாக ஜால்ரா அடித்து தன்னோட வாழ்வை நன்றாக பார்த்துக் கொள்வார் அவருக்கு என்று எந்த ஒரு கொள்கையும் கிடையாது. தன்னை வைத்து தேசியத்திற்கு எதிராக சில இயக்குனர்கள் படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்தும் தனக்கு ஒவ்வொரு படத்திற்கும் 150 கோடி வந்தால் போதும் என இருக்கிறார். நீங்கள் எந்தவிதமான கருத்து வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என்று தன்னுடைய கொள்கையை கூட விட்டுக்கொடுத்த நயவஞ்சகன்.
கிரி.. தற்போதைய சூழலில் இவற்றையெல்லாம் தவிர்க்க இயலாதது.. எல்லா செலிபிரேட்டிகளும் இதை கடந்து தான் வரவேண்டும்.. சூழ்நிலை அது போல மாறி விட்டது..
ரஜினி, விஜய், அஜித் மற்றும் எந்த துறையில் சாதித்தவர்கள் மீது தவறான விமர்சனங்கள் வந்தாலும், அது எவ்வகையிலும் அவர்களை பாதிக்காது..அது விமர்சனங்கள் செய்பவர்களும் தெரியும்..
தனிப்பட்ட முறையில் இந்த பதிவு கூட அவசியமான ஒன்றாக தோன்றவில்லை.. (எழுதுவதும் / எழுதாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.. ஆனால் என் மனதில் தோன்றியதை கூறுகிறேன்.. பாலாஜி பிரபு ஒருவருக்காக நீங்கள் பதிலளிக்க நினைத்தால், இவர் போல 100 / 1000 நபர்கள் வருவார்கள்). சில சமயம் கண்டு கொள்வதை விட, கடந்து செல்வது தான் சரியாக இருக்கும்..
@சுந்தர்
“நீங்கள் எப்படி முட்டுக் கொடுத்தாலும், பாஸ்கர் தான் ரஜினியை தான் இயக்கிய படத்தில் அறிமுகம் செய்தார் என்பது உண்மைதான்.”
சீரியஸான கட்டுரையில் வடிவேலுவின் ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்’ நகைச்சுவையை நினைவுபடுத்தி கலகலப்பாக்க வைக்கும் உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி சுந்தர் 🙏 .
@ராமகிருஷ்ணன்
“ரஜினி என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா? ”
அப்படி ஏதும் கட்டுரையில் கூறவில்லையே! தாராளமா விமர்சனம் செய்ங்க எனக்கென்ன!
“கருத்து அவர் சொல்றதுக்கு அவருக்கு உரிமை இல்லையா?”
அதே மாதிரி அவர் கருத்துக்கு எதிர் கருத்து சொல்ல எனக்கு உரிமையில்லையா! பொதுவில் தானே கருத்து கூறுகிறார்.
அப்படின்னா எனக்கும் விமர்சிக்க உரிமை இருக்கு, கேட்பேன்.
“படத்தைப் பார்த்தா விடுங்க சும்மா தலைவர் தலைவர்ன்னு ரொம்ப ஓவரா போகாதீங்க.”
அப்படித்தான் கூறுவேன் . . பிடிக்கலைன்னா படிக்க வேண்டாம். நானா வந்து படிக்கச் சொன்னேன்!
உங்களுக்கு பிடித்த மாதிரி, ரஜினியை திட்டி எழுதுபவர்கள் 1000 பேர் இருக்காங்க. அவர்களை படித்துத் திருப்தி அடையவும்.
உங்களுக்கு பிடித்ததை எழுத, பிடிக்காததை எழுதாமல் இருக்க இங்க நான் இல்லை.
“ஜால்ரா, ரஜினி பைத்தியமா, முந்திரிக்கொட்டை, பைத்தியக்காரத்தனமான ரசிகர்களால், பணப்பேய், கஞ்சப் பிசினாரி, நயவஞ்சகன்” இதெல்லாம் நீங்க உதிர்த்த முத்துகள்.
ரஜினி ரசிகனாக என் விமர்சனத்தைப் பாலாஜி பிரபு மீது நாகரீகமாக முன் வைத்துள்ளேன் ஆனால், ரஜினியை வெறுக்கும் நீங்க வைத்துள்ள விமர்சனம் தரம் எப்படி இருக்கு பாருங்க!
அதோடு என் விமர்சனம் ஆதாரப்பூர்வமாக இருக்கு, உங்கள் கருத்தில் வன்மம் மட்டுமே இருக்கு, வேறு எந்த விவரங்களும் இல்லை.
கொடுக்கப்படும் கருத்துரிமையை சரியாக பயன்படுத்துங்க. உங்களுக்கு ஒருத்தர் பிடிக்கலைனு இஷ்டத்துக்கு பேசக் கூடாது.
உங்களைப்போலவே அநாகரீகமாக திரும்பப் பேச எனக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகுது?!
@யாசின்
“சில சமயம் கண்டு கொள்வதை விட, கடந்து செல்வது தான் சரியாக இருக்கும்..”
உண்மை தான் யாசின்.
முதல் முறை கூறிய போது கடந்து சென்று விட்டேன், இரண்டாம் முறையும் கடந்து சென்று விட்டேன் ஆனால், தொடர்ந்து இதையே கூறியதால் கடுப்பாகி எழுதினேன்.
ரஜினியை எத்தனையோ பேர் விமர்சிக்கிறார்கள் அதற்கெல்லாம் நான் பதில் அளிப்பதில்லை ஆனால், இது ரஜினியின் திரையுலக அடிப்படை நிகழ்வு என்பதாலும், பாலாஜி பிரபு அப்பா அதில் சம்பந்தப்பட்டவர் என்பதாலும் எழுதினேன்.
சம்பந்தட்டவரே கூறும் போது அவர் கூறுவதை உண்மை என்று நம்புபவர்கள் உள்ளனர்.
நான் எழுதுவதால் எதுவும் மாறப்போவதில்லை ஆனால், இதை என் திருப்திக்காக எழுதினேன்.
தலைவர் ரசிகர் நண்பரிடம் இதை எழுதப்போவதாக கூறிய போது நீங்க கூறியதை தான் அவரும் கூறினார், அதற்கு மேற்கூறியதை தான் அவருக்கும் கூறினேன்.
அதோடு இது போல அரசியல் பற்றி எழுதுவதும் வீண் தான், நான் எழுதுவதால் எதுவும் மாறப்போவதில்லை ஆனால், என் ஆதங்கத்தை வெளிப்படுத்த இதுவொரு இடம் அவ்வளவே!