தீபாவளி பயணம் 2024

6
தீபாவளி பயணம் 2024

தீபாவளிக்கு ஊருக்குச் சென்றதன் அனுபவமே இக்கட்டுரை

தீபாவளி

ஊருக்குச் செல்ல இரவு ரயிலுக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. எனவே, பகல் ரயிலில் தீபாவளிக்கு முதல் நாள் முன்பதிவு செய்தேன்.

பண்டிகை நாளில் முன்பதிவு செய்து இருந்தாலும், அதுவும் பகல் நேர ரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டி போலவே கூட்டம் அதிகமிருக்கும் என்பதால் AC யில் முன்பதிவு செய்தேன்.

அதிலும் கூட்டம் ஆனால், உள்ளே இருந்தவர்களை வெளியேற்றி விட்டார்கள்.

ஈரோடு வந்த பிறகு கூட்டம் அள்ளுகிறது, பேருந்து நிலையம் செல்லவே 45 நிமிடங்களுக்கு மேலானது (9.45 PM). ஒரு கடை விடாமல் அனைத்திலும் கூட்டம்.

வியாபாரம் பெரியளவில் நடந்தது மகிழ்ச்சி.

இந்தமுறை தீபாவளியன்று காலையில் தீபாவளி போலவே இல்லை, வெடி சத்தமே அதிகம் கேட்கவில்லை ஆனால், இரவில் நொறுக்கி தள்ளி விட்டார்கள்.

தற்போது பலரும் பகலில் வெடிப்பதை விட, இரவில் வெடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலை

மாணவர் விடுதி வார்டன் திரு கந்தசாமி அவர்களைப் பார்த்து வரலாமா என்று பள்ளி நண்பன் செந்தில் கேட்டதால், அதற்கான நேரத்தை ஒதுக்கிச் சென்றோம்.

இவர் வார்டனோடு எனக்கு வகுப்பு (ஆங்கிலம், கணிதம்) ஆசிரியரும் கூட.

ஈரோடு அருகே வெள்ளோடு என்ற ஊர் அருகே உள்ளது. கோபியிலிருந்து சித்தோடு வந்த பிறகு செந்தில் என்னை அவன் பைக்கில் அழைத்துக்கொண்டான்.

ஈரோடு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று வெள்ளோடு சென்றோம்.

வழியில் கொங்குப் பகுதியின் சிறப்பான, எனக்குப் பிடித்ததான பேக்கரி ஏராளம் இருந்தும், சஷ்டி விரதம் காரணமாகச் செல்ல முடியாததாகி விட்டது.

இவ்வகை கடையில் ஓய்வாக அமர்ந்து காஃபி குடிப்பது எனக்கு பிடித்தமானது.

வெள்ளோடு

வெள்ளோடு பகுதி பசுமை போர்த்தி அட்டகாசமாக இருந்தது. ஈரோடு, கோவை மாவட்டங்களில் கிராமத்து சாலைகள் மிகச்சிறப்பாக இருக்கும்.

வாகனம் ஓட்டிச்செல்லவே விருப்பமாக இருக்கும். சுருக்கமாக, கேவலமான சென்னை சாலைக்கு அப்படியே நேர் எதிராக இருக்கும்.

இயற்கையை ரசித்துக்கொண்டே விசாரித்துச் சென்றோம்.

பெரியவர் ஒருவர், ‘இப்படியே தெக்கால போயி, மெய்ன் ரோடு போயி, வடக்கால திரும்பி, மேற்கால போங்க அங்க தான் வாத்தியார் வீடு இருக்கு‘ என்று கூறினார். எனக்கு ஒன்றும் புரியல, செந்திலுக்கு புரிந்தது.

இவர் கூறியதுக்கும் ஆசிரியர் இருந்த இடத்துக்கும் 2 கிமீ தூரம் இருக்கும். வாத்தியார் வீடு என்றால் கிராமத்தில் இன்றும் அதே மதிப்பு, அறிமுகம் உள்ளது.

பெரியவர் கூறியதில் சந்தேகம் இருந்தது ஆனால், அவர் கூறியது சரியாக இருந்தது.

கிராமம்

இப்பகுதியில் அட்டகாசமான வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அட! இங்கெல்லாம் இப்படி வீடுகள் கட்டுகிறார்களா! என்று வியப்பாக இருந்தது.

நகரத்து வீட்டுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல.

கிட்டத்தட்ட ஊருக்குச் சென்று விட்டோம் ஆனால், கிராமத்தில் ஆட்களே இல்லை, கண்ணில் தென்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இருந்தவர்களும் 90% வயதானவர்களே! அனைவரும் வேலைக்குச் சென்று விட்டார்களோ!

வாகனத்தில் வந்தவரிடம் ஆசிரியர் வீடு எங்கே உள்ளது என்று கேட்டவுடன் அவர் விளக்கினாலும் நாங்க விழிப்பதை பார்த்து, ‘சரி வாங்க நானே அழைத்துச் செல்கிறேன்‘ என்று அவரே அழைத்துச் சென்று வீட்டின் அருகே நிறுத்தி விட்டார்.

என்ன தான் சொல்லுங்க.. கிராமத்து மக்கள் செம தான் 🙂 .

ஆசிரியர்

எங்கள் ஆசிரியர் அப்போது போலவே தற்போதும் இருந்தார், பெயரைக்கூறியதும் அடையாளம் தெரிந்து கொண்டார்.

மாணவர் விடுதியில் இவரிடம் செமையா திட்டும் அடியும் வாங்கியுள்ளோம் 🙂 .

எவன்டா அங்க நடமாடிட்டு இருக்கிறது?‘ ன்னு குரல் கேட்டதும் அமைதியாகி அவனவன் கமுக்கமா அறையில் ஒதுங்கி விடுவானுக.

அவர் என்ன செய்து கொண்டுள்ளார்? நாங்கள் என்ன செய்கிறோம்? என்பது போன்ற வழக்கமான விசாரிப்புகள் நடந்தன.

அவரது அம்மாவும் இருந்தார். அவரிடமும் ஆசிரியர் மற்றும் அவரது மனைவியிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்பி விட்டோம்.

பெரியளவில் திட்டமிடா சந்திப்பு. எனக்கு வேற இவ்வளோ தூரம் வந்து அவர் இல்லையென்றால் என்ன செய்வது என்று யோசனை.

எனவே, ‘அவரை அழைத்துக் கேளு‘ என்றால், ‘அவரிடம் பேசப் பயமா இருக்கு‘ என்கிறான் 🙂 ஆனால், நல்லவேளை அவர் இருந்தார்.

அடுத்த முறை பள்ளி நண்பர்களைச் சந்திக்கலாம் என்று செந்தில் கூறியுள்ளான். இதுபோன்று பல முறை திட்டமிட்டும் செயல்படுத்த முடியவில்லை.

கோபி காஃபி

கோபியில் நஞ்சகவுண்டன் பாளையம் செல்லும் வழியில் உள்ள பாப்புலர் பேக்கரியில் காஃபி குடிக்க சென்று கேட்டால், அரை டம்ளர் தான் வைத்தான்.

என்னடா அளவை குறைத்துட்டே போறானுகளேன்னு கொஞ்சம் குடித்துவிட்டு மொபைல் பார்த்துட்டு இருந்தால், குடித்துவிட்டேன் என்று நினைத்து மீதியை எடுத்துட்டு போய்ட்டான்.

அடப்பாவி! கொடுத்ததே அரை டம்ளர், அதிலையும் பாதியைக் கொண்டு போய்ட்டானே என்று கடுப்பாகி விட்டது.

சென்னையிலேயே காஃபி ₹15 தான் ஆனால், கோபியில் ₹18 அதிலும் பாதி அளவு. இனி இந்தக்கடைக்குப் போக மாட்டேன்.

ரயில்

சென்னை திரும்பும் போது இரவு நேர ரயிலில் பயணச்சீட்டு கிடைக்கவில்லையென்பதால், பகல் நேர ரயிலில் முன்பதிவு செய்தேன்.

AC எதற்கு? சாதாரண வகுப்பிலேயே சென்று விடலாம்‘ என்றார் மனைவி, ‘கூட்டமாக இருக்கும் நசுக்கி விடுவாங்க‘ என்றேன், பரவாயில்லை என்றார்.

சரி நமக்கென்ன என்று இதிலேயே முன்பதிவு செய்து இருந்தேன். ஜோலார்பேட்டை வந்ததும், முன்பதிவில்லா பெட்டி போல மாறி விட்டது.

TTR வரவே இல்லை, ஆளாளுக்கு கிடைத்த இடைவெளியில் நின்று கொண்டார்கள். இதில் பெண்களுக்குள்ளே சண்டை வேறு.

கடைசிப் பெட்டி

ஈரோட்டில் காத்து இருக்கும் போது சரக்கு ரயில் சென்றது, அதில் கடைசி பெட்டியில் Guard ஒருவர் நின்று கொண்டு கொடி ஆட்டிக்கொண்டு சென்றார்.

இது போன்று செல்ல வேண்டும் என்பது தான் என் சிறு வயது ஆசை, என் பையனே நான் நினைத்த வயது வந்துட்டான் ஆனாலும், எனக்கு இந்த விருப்பம் கொஞ்சம் கூடக் குறையவில்லை.

ரயில்வே துறையில் சேராமல் போய்ட்டோமே என்று மனசு ஏக்கமாக அந்தக்கடைசி பெட்டியைப் பார்த்துக்கொண்டே இருந்தது.

சரி ரயில்வே துறையில் தான் சேரமுடியாமல் போய் விட்டது, விதவிதமான ரயிலில் பயணிக்கும் விருப்பம் உள்ளது. இதுவாவது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

அதில் சுற்றுலா ரயில், Maharaja Express, Golden Chariot, Bharat Gaurav train, வரப்போகும் புல்லட் ரயில் உட்படப் பல்வேறு ரயில்கள் பட்டியலில் உள்ளது 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

6 COMMENTS

  1. சின்ன வயதில் தீபாவளி சமயத்தில் நடந்த நினைவுகளை தற்போது அமைதியான நேரத்தில் நினைத்து பார்க்கும் போது அந்த நாட்கள் எவ்வளவு அழகாக இருந்தது என தற்போது உண்மையில் பீல் பண்ண வைக்கிறது..

    எவ்வளவு நினைவுகள் நெஞ்சில் பொக்கிஷமாக புதைந்து கிடைக்கிறது.. நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் போதும், தீபாவளி பலகாரங்களை சேர்ந்து சாப்பிட்ட போதும் ஏற்பட்ட சந்தோஷங்கள், மகிழ்ச்சிகள் இனி வாழ்வில் எந்த தருணத்திலும் ஏற்படப் போவதில்லை..

    கிராமங்களில் மட்டும் தான் நிறைய விஷியங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.. நகரத்தில் இவற்றையெல்லாம் என்றோ கொன்று புதைத்து விட்டோம்.. கிராமங்களின் அழகோ அழகு.. எளிய மனிதர்கள், எதிர்பார்ப்பில்லாமல் பழகுவது, கனிவான குணம், உறவுகளை பேணுவது, அழகிய முறையில் நட்புபாராட்டுவது என பலவற்றை கிராமங்களில் மட்டுமே இன்னும் காண முடியும்..

    கோவையில் பணிபுரிந்த சமயத்தில் தான் எனக்கு பேக்கரி கலாச்சாரம் அறிமுகம்.. எங்கள் ஊரில் அந்த சமயத்தில் இந்த பழக்கம் கிடையாது.. தாபாவில் உணவருந்தியதும் / பேக்கரியில் நொறுக்கு தீனிகள் சாப்பிட்டதும் சக்தியின் நட்பு ஏற்பட்ட பிறகு தான்..

    அதுபோல காலை உணவை முடித்த உடன் காபி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்று கொடுத்தது சக்தி தான்.. அதுவரை நான் காலை உணவை அருந்திய பின் காபி சாப்பிட்டதில்லை.. குறிப்பாக இருவரும் அதிகம் சாப்பிட்ட காலை உணவு பொங்கல்.. தற்போதும் பொங்கல் சாப்பிடும் போது மட்டும் இதை தொடர்ந்து வருகிறேன்..

    கல்லுரி படிக்கும் சமயத்தில் நண்பர்களுடன் (கடலூர் / பாண்டிசேரி) பேக்கரிக்கு சென்றாலே என்னுடைய விருப்பம் மீன் பண் தான்.. அது எல்லா நண்பர்களுக்கும் தெரியும்.. மீன் பண் முதன் முதலில் சாப்பிட்ட உடனே அது மிகவும் பிடித்து போனது.. இடையில் பல வருடம் சாப்பிடவில்லை..

    கடந்த முறை நண்பர்களுடன் சந்திப்பின் போது, இறுதியில் தேநீர் அருந்த அருகில் இருந்த பேக்கரிக்கு சென்ற போது, எல்லோரும் ஆளுக்கு ஒன்று ஆர்டர் செய்து முடித்த பின், நான் மீன் பண்ணை ஆர்டர் செய்தேன்.. இதை பார்த்த நண்பர்கள் என்னை ஒரு வழி ஆக்கி விட்டார்கள்.. சும்மா அவர்களை வெறுப்பேற்ற இன்னொரு மீன் பண்ணையும் ஆர்டர் செய்து சாப்பிட்டேன்..

    ஆனால் 15 வருடங்களாக சாப்பிடாமல் தீடிரென்று சாப்பிட்டதால் என்னால் முழுமையாக சுவையை உணர முடிவில்லை.. ஒரு வேளை தற்போது சுவை மாறி விட்டதா என்று தெரியவில்லை..பேக்கரி என்றாலே என்னை பொறுத்தவரை மீன் பண் தான்..

    ரயில்வே துறையையும், எங்கள் குடும்பத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது.. 75 வருடங்களுக்கு மேலான பந்தம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. தற்போதும் என் பெரியப்பாவின் மகன் பணி புரிந்து வருகிறார்..

  2. கிரி, கிராமத்தின் ரசிகரான நீங்கள் ஏன்
    இன்னும் மெய்யழகன் விமர்சனம் எழுதவில்லை?

  3. @யாசின்

    “கிராமங்களில் மட்டும் தான் நிறைய விஷியங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.. நகரத்தில் இவற்றையெல்லாம் என்றோ கொன்று புதைத்து விட்டோம்..”

    தற்போது வெடி விற்பனையே நகரத்தில் தான் அதிகம் உள்ளது.

    கிராமத்தில் கொண்டாடுகிறார்கள் ஆனால், வெடியின் அளவு குறைவு.

    “எதிர்பார்ப்பில்லாமல் பழகுவது, கனிவான குணம், உறவுகளை பேணுவது, அழகிய முறையில் நட்புபாராட்டுவது என பலவற்றை கிராமங்களில் மட்டுமே இன்னும் காண முடியும்.”

    இது உண்மை.

    “தாபாவில் உணவருந்தியதும் / பேக்கரியில் நொறுக்கு தீனிகள் சாப்பிட்டதும் சக்தியின் நட்பு ஏற்பட்ட பிறகு தான்”

    சக்தியுடன் ஏராளமான நினைவுகள் உங்களுக்கு உள்ளது.

    “கல்லுரி படிக்கும் சமயத்தில் நண்பர்களுடன் (கடலூர் / பாண்டிசேரி) பேக்கரிக்கு சென்றாலே என்னுடைய விருப்பம் மீன் பண் தான்”

    கேள்விப்பட்டதில்லை.

    மீனில் Fish Fry மட்டுமே சாப்பிடுவேன் 🙂 .

  4. @Fahim

    “கிரி, கிராமத்தின் ரசிகரான நீங்கள் ஏன் இன்னும் மெய்யழகன் விமர்சனம் எழுதவில்லை?”

    கேள்வி சிறியது பதில் பெரியது 🙂 .

    திரைப்படங்களைத் திரையரங்கு சென்று பார்ப்பதை என்றோ நிறுத்தி விட்டேன். வெகு சில படங்கள் மட்டுமே பார்க்கிறேன்.

    கடந்த ஐந்து வருடங்களில் திரையரங்கு சென்று பார்த்தது என்றால், அதிகபட்சம் 12 படங்கள் இருக்கலாம். அதில் ஐந்து படங்கள் தலைவர் படங்களாக இருக்கும்.

    இதுவே மெய்யழகன் பார்க்காததற்கு காரணம்.

    இன்னொன்று இடது சாரி ஆதரவு படங்களைப் பார்ப்பதில்லை. இதில் என் விருப்பக்கடவுள் முருகன் அருகில் பெரியாரையும் வைத்து இருந்த காட்சி இணையத்தில் வந்தது.

    கடுப்பாகி திரையரங்கு போகவே கூடாது என்று முடிவு செய்து விட்டேன். இதுவே காரணம்.

    இன்னமும் OTT யில் இப்படத்தை பார்க்கவில்லை, இந்த வாரத்தில் பார்த்து விடுவேன் என்று நினைக்கிறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!