சவுதியில் பணிக்குச் செல்லும் மஞ்சு வாரியர் பற்றிய கதையே Ayisha. Image Credit
Ayisha
சவுதியில் மிகப்பெரிய பணக்காரராக உள்ள நபரின் அரண்மனையில் வீட்டு வேலைக்குச் செல்கிறார் மஞ்சு வாரியர்.
அங்கே உள்ள முதலாளியின் அம்மா மிகவும் கோபக்காரர், வயதானவர். கடுமையாக நடந்து கொள்ளும் அவரை எப்படி மஞ்சு வாரியர் சமாளிக்கிறார் என்பதே Ayisha.
1980 ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து மாற்றங்களுடன் உருவான கதை.
சவூதி
அரபு நாடுகளுக்குப் பணிக்குச் சென்ற பெண்களை, ஆண்களை அங்கு எப்படிக் கொடூரமாக, மனிதத்தன்மையற்று நடத்துகிறார்கள் என்ற செய்தியே கேள்விப்பட்டுள்ளோம், சமீபத்தில் வந்த ஆடு ஜீவிதம் உட்பட.
செய்திகளில் இது போன்ற இடங்களில் மாட்டிக்கொண்டு காணொளி வெளியிட்டுத் தன்னை காப்பாற்றும்படி கேட்கும் செய்திகளே அதிகம் வருகின்றன.
ஆனால், இப்படம் அதற்கு முற்றிலும் மாறாக அங்கே எவ்வாறு மஞ்சு வாரியர் நடத்தப்படுகிறார் என்பதைக் காண்பிக்கிறது.
அரண்மனை
மிகப்பெரிய வீடு, ஏராளமான குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்குப் பணி செய்ய பணியாளர்கள், அப்பணியாளர்களைக் கண்காணிக்க ஒரு தலைமைப் பெண்.
அவ்வாறு உள்ள பணியாளர்களில் ஒருவராக மஞ்சு வாரியர்.
எப்படியொரு பணக்காரராக இருந்தால், இவ்வளவு பணியாளர்களை வைத்துக்கொள்ள முடியும்!
முதலாளி அம்மா
முதலாளியின் அம்மா வயதானவர், உடல்நலக்குறைவு காரணமாகச் சிரமப்படுபவர், அதனாலேயே அதிகக் கோபம் கொண்டவராக உள்ளார்.
அதாவது, உடல்நிலையால் ஏற்படும் பாதிப்புகளால் ஏற்படும் மனஉளைச்சல், கோபம்.
அரண்மனையில் இவர் என்ன கூறுகிறாரோ அதன்படியே அனைவரும் நடப்பர். இவருக்குப் பிடிக்காத ஒன்று அரண்மனையில் நடக்க முடியாது.
எனவே, பணியாளர்கள் இவரிடம் பயந்து இருப்பார்கள்.
மஞ்சு வாரியாரை விட இந்த அம்மா நடிப்பில் தூள் கிளப்பியுள்ளார். உணவுகளை அற்புதமாகப் பிரதிபலித்துள்ளார்.
பல இடங்களில் கண் கலங்க வைத்து விட்டார்.
இறந்த கணவரை நினைத்து உருகுவது, பழைய வாழ்க்கையை நினைப்பது, தொடர் உடல்நிலை காரணமாகக் கோபப்படுவது, இயலாமை என்று அபாரமான நடிப்பு.
நடிப்பு போலவே இல்லாமல், அக்காதப்பாத்திரமாகவே மாறியுள்ளார்.
மாற்றுக் கண்ணோட்டம்
பணியாளர்கள் விஷயத்தில் எதிர்மறை செய்தியாகவே சவூதி உள்ள நிலையில் இப்படம் மாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்கிறது.
முதலாளி நடந்து கொள்ளும் விதமும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக மஞ்சு வாரியர் பின்னணி தெரிந்தும் அவர் நடந்து கொள்ளும் முறை பாராட்டத்தக்கதாக இருந்தது.
சில விஷயங்களில் இங்கே நினைப்பது போல அங்கு ஆண், பெண் சூழ்நிலையில்லை.
ஒருவேளை இது 1980 காலகட்டமாக இருந்ததாலா, படத்துக்காக இவ்வாறு காண்பித்தார்களா அல்லது பணக்காரர்கள் வீட்டில் இது போன்று முற்போக்காக இருப்பார்களா என்பது தெரியவில்லை.
பணியாளர்கள் பல நாடுகளிலிருந்தும் வந்தும் பணி புரிகிறார்கள்.
ஒளிப்பதிவு கேரளா மற்றும் சவுதியைச் சுற்றிக்காண்பிக்கிறது. சவூதி கதை பெரும்பாலும் அரண்மனை, மருத்துவமனை பக்கமே இருப்பதால், மற்ற பகுதிகளை அதிகம் காண முடியவில்லை.
பாடல் உள்ளது ஆனால், திணிக்கப்பட்டது.
யார் பார்க்கலாம்?
அனைவரும் பார்க்கலாம்.
இப்படம் தோல்விப்படமே! எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
ஆங்கிலம், மலையாளம், அரபி மொழிகள் பேசப்படுவதால், பலருக்கும் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கும் என்பதால் கவராமல் போய் இருக்கலாம்.
ஆங்கில சப்டைட்டிலுடன் பார்த்ததால், எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.
எனக்கு இப்படம் பிடித்தது குறிப்பாக வயதான அம்மாவின் நடிப்பும், அவருடைய உணர்வுகளும் பல இடங்களில் கண் கலங்க வைத்தது.
எனவே, மேற்கூறிய தகவல்களில் உடன்பாடு இருந்தால் பார்க்கலாம், இல்லையேல் தவிர்க்கலாம்.
Amazon Prime ல் காணலாம்
Directed by Aamir Pallikkal
Written by Aashif Kakkodi
Produced by Zakariya Mohammed
Starring Manju Warrier, Mona Tawil, Krishna Sankar, Radhika
Cinematography Vishnu Sharma
Edited by Appu N. Battathiri
Music by M. Jayachandran
Release date 20 January 2023
Running time 142 minutes
Country India
Languages Malayalam, Arabic
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவில்லை.. இந்த பதிவை படித்த பிறகு படத்தோட முன்னோட்டத்தை பார்த்தேன்.. நன்றாக இருந்தது.. கொஞ்சம் செயற்கையாக இருப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.. இருந்தாலும் 1980 காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் படத்தை முழுவதும் பார்த்தால் தான் தெரியும்…
2011 இல் காவிய மாதவன் நடித்து வெளிவந்த கதாமா மலையாள திரைப்படம் கிட்டத்திட்ட இதே கதைக்களம் தான்.. தமிழில் பாலைவன ரோஜா என்ற பெயரில் youtube இல் உள்ளது.. காவிய மாதவன் மிகவும் அற்புதமாக நடித்து இருப்பார்.. வாய்ப்பு இருந்தால் இந்த படத்தை பார்க்கவும்..
@யாசின்
“கொஞ்சம் செயற்கையாக இருப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.. இருந்தாலும் 1980 காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் படத்தை முழுவதும் பார்த்தால் தான் தெரியும்”
உண்மைக்கதை 1980 ஆனால், பார்க்க 1980 காலம் போல இல்லை.
“வாய்ப்பு இருந்தால் இந்த படத்தை பார்க்கவும்..”
முயற்சிக்கிறேன் யாசின். ஏற்கனவே பார்க்க வேண்டியவை பட்டியலில் ஏராளம் உள்ளது. எப்ப பார்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை 🙂 .