என்னைப் பற்றி
என் பெயர் கிரிராஜ் சுருக்கமாக கிரி. சொந்த ஊர் கோபிச்செட்டிபாளையம் தற்போது பணிக்காக சிங்கப்பூர் ல் உள்ளேன். +2 முடித்த பிறகு Aptech ல் ஒரு டிப்ளமோ செய்தேன் அது முடிந்த பிறகு உடனே வேலை கிடைக்கும் என்று முயற்சி செய்தேன் ஆனால் கிடைக்கவில்லை பல போராட்டங்களுக்குப் பிறகு கிஷ்கிந்தாவில் கம்ப்யூட்டர் கேம்ஸ் சொல்லிக்கொடுக்கும் வேலை கிடைத்தது. அதன் பிறகு கணிப்பொறி சர்வீஸ் செய்யும் பணியில் சேர்ந்தேன் அதன் பிறகு நண்பனின் உதவியால் ஒரு பன்னாட்டு (MNC) நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு இருக்கும் போதே மரியாதைக்காக BBA டிகிரி அஞ்சல் வழியில் படித்தேன். மற்றபடி இந்தப்படிப்பு எனக்கு எந்த வகையிலும் என் பணியில் உதவவில்லை.
அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள SWISS வங்கி கிளையில் (Production UNIX server support) சேர்ந்து அதன் பிறகு திரும்ப தற்போது முன்பு இருந்த நிறுவனத்திலேயே அவர்கள் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க சிங்கப்பூர் கிளையில் பணி புரிகிறேன். நான் இந்த அளவிற்கு வர முடிந்ததற்கு காரணம் என்னுடைய அனுபவம் நேர்மை உழைப்பு நேரம் தவறாமை ஆகும். இவை எல்லாம் சினிமா வசனங்களைப் போல இருந்தாலும் இதை விட முக்கியம் என்றால் அது என்னுடைய நண்பர்கள் செய்த உதவி என்னுடைய தந்தை எனக்கு சொல்லித்தந்த அறிவுரைகள். இவை இல்லாமல் இந்த நிலையை என்னால் கற்பனை கூட பண்ண முடியவில்லை. என்னுடைய முதல் பணியில் இருந்து தற்போதைய பணி வரை என் நண்பர்களின் பங்குள்ளது. இதோடு கொஞ்சம் அதிர்ஷ்டம் காரணம் என்னை விட திறமைசாலிகள் எனக்குத்தெரிந்தே எவ்வளோ பேரை நான் கடந்து வந்து இருக்கிறேன். என்னை விட கடும் உழைப்பாளிகள் திறமையானவர்கள் இருக்கும் போது கடவுள் அவர்களை விட எனக்கு கொஞ்சம் கருணை அதிகம் காட்டியிருப்பதாகவே கருதுகிறேன்.
எனக்கு திருமணமாகி வினய் என்ற மகன் இருக்கிறான். கொங்குப்பகுதியை சேர்ந்தவன் என்பதால் இயல்பாகவே எனக்கு நகைச்சுவை உணர்வுண்டு. அது பதிவெழுதும் போது அவ்வப்போது வெளிப்படும். இயற்கையை அதிகம் நேசிக்கிறேன் கோபியில் அதிகளவில் மரங்களை வளர்த்து வருகிறேன் என் தொல்லை தாங்காமல் இதற்கு ஆள் போட்டு என் பெற்றோர் பாதுகாத்து வருகின்றனர். இயற்கை சம்பந்தமாக நிறைய ஆசைகள் உண்டு அது நேரம் இடம் அனுமதிக்காமல் இருப்பதால் அவை இன்று வரை கனவாகவே உள்ளது. அழகான இயற்கையைக் கொண்ட இமயமலை செல்லவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
நான் பதிவு எழுத ஆரம்பித்தது 2006 ம் ஆண்டு. திரட்டிகள் பற்றி தெரிய வந்தது 2008 ம் ஆண்டாகும். தமிழ்மணம் திரட்டியில் இணைத்த பிறகே பல வாசகர்களைப் பெற்றேன். பதிவு எழுதுவதிற்கு அடிமை ஆகி விடக்கூடாது என்று அளவாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். எழுதுவது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம். தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கில்லை பிழையில்லாமல் எழுதுவதே நான் தமிழுக்கு செய்யும் பெரிய தொண்டு. என்னுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய விருப்பம். அதை நாகரீகமான முறையில் செய்து கொண்டு இருக்கிறேன். எனக்கு அனைத்து பிரிவுகளிலும் ஆர்வம் என்பதால் அனைத்து பிரிவுகளிலும் ஜனரஞ்சகமாக எழுதி வருகிறேன். பதிவுலகின் எந்த அரசியலிலும் கலக்காமல் என் வழி தனிவழியாக இருப்பது பதிவுலகிற்கு நான் செய்யும் பெரிய சேவை


Comments on this entry are closed.