பெரியார்

Periyar

வெங்கட்ட நாயக்கருக்கும் சின்னதாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் பெரியார். வெங்கட்ட நாயக்கர் மிகவும் சிரமப்பட்டுப் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியவர்.

பள்ளியிலேயே மற்ற சாதி பையன்களோடு பழகக்கூடாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தீட்டை கிண்டலடித்தும் பெரியார் செயல்படுகிறார். இவரின் கிண்டலால், பகுத்தறிவு கேள்விகளால் பலர் கவரப்படுகிறார்கள்.

படிப்பில் பிரச்சனை செய்தாலும் தந்தையின் வியாபாரத்தில் திறமையானவராக இருக்கிறார். பின்னர் தான் காதலித்த நாகம்மையைத் திருமணம் செய்து தன்னுடைய பகுத்தறிவு கருத்தை மனைவியிடம் மூளைச் சலவை செய்கிறார்.

துவக்கத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பின்னர் வேறுவழியில்லாமல் பெரியாருக்கு ஒத்துப்போகிறார்.

தீண்டாமை குறித்து ஏற்பட்ட மனமாற்றம்

தந்தையின் மீது கொண்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கோபித்துக்கொண்டு காசி சென்று விடுகிறார். அங்கே தான் அவருக்குத் தீட்டு, தீண்டாமை குறித்த மனமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இங்கே பிராமணர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், இவரை எங்கும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனால் இவருக்குக் கடும் ஆத்திரமும் நெருக்கடியும் ஏற்படுகிறது.

பிராமணராக இல்லாததால் வேலை கிடைக்கவில்லையாதலால் பசியால் சாலையில் கிடக்கும் உணவை தின்று பசியாற வேண்டிய பரிதாப நிலை.

இதனால், முடியை மழித்துப்  பூணுல் போட்டுச் சென்று வேலை கேட்க, வேலை கிடைக்கிறது நிபந்தனையுடன். முக்கிய நிபந்தனையே அதிகாலையில் எழுந்து ஆற்றில் குளிக்க வேண்டும் என்பது.

பெரியாரை நான்கு நாட்கள் குளிக்க வேண்டாம் என்றாலும் மகிழ்ச்சியாக இருந்து விடுவார், இது அவருக்குப் பெரிய தலைவலியாகிறது.

இவர் துண்டை நனைத்து உடலை துடைத்து துவக்கத்தில் ஏமாற்றி விடுகிறார் ஆனால், விரைவில் இவர் செய்தது தெரியவர, வேலையை விட்டு துரத்தப்படுகிறார். பின்னர் சில நாட்கள் பிச்சையெடுத்து வாழ்க்கையை ஓட்டுகிறார்.

பின்னர் வேறு வழியில்லாமல் கிளம்பி கேரளா செல்லும் பெரியார், அவரது தந்தையின் நண்பர் வீட்டில் தங்கி கொள்கிறார் ஆனால், எப்படியோ இவர் இங்கே இருப்பதை அறிந்து இவரது தந்தை அழைத்துக் கொள்கிறார்.

தன்னுடைய கெட்ட பழக்கங்கள் விலை மாதரிடம் செல்வது உட்பட அனைத்தையும் நிறுத்தி பொறுப்பான நபராக மாறுகிறார்.

பெரியாரை ஊக்குவிக்கும் பொருட்டு இவரது தந்தை வியாபாரத்தை இவரையே கவனிக்க அறிவுறுத்துகிறார். வியாபாரத்தில் தனக்கு இருக்கும் திறமையால் பெரும் புகழ் அடைகிறார்.

இதன் காரணமாக, பல இடங்களில் பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அங்கெல்லாம் தன்னுடைய திறமையால், நேர்மையால் முத்திரை பதிக்கிறார்.

ஈரோடு நகரசபை தலைவர்

periyar rajaji

ஈரோடு நகரசபை தலைவராகப் பொறுப்பேற்று தன் நேர்மை குணத்தால், இங்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். ராஜாஜி இவரின் நிர்வாகத் திறமையைக் கேள்விப்பட்டுக் காங்கிரசுக்கு அழைக்கிறார்.

“வகுப்புவாரி” தீர்மானத்தைச் செயல்படுத்தினால் கட்சியில் இணைவதாகக் கூறுகிறார்.

காங்கிரஸ் குறித்து நல்ல எண்ணம் பெரியாருக்கு இல்லை காரணம், இங்கே பிராமணர்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதால்.

சரியான நேரத்தில் வகுப்பு வாரி தீர்மானத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்து பெரியாரை காங்கிரசுக்கு இழுக்கிறார் ராஜாஜி. இங்கே தனது பேச்சு திறமையால் அனைவரையும் கவர்கிறார் பெரியார்.

இது காங்கிரசுக்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது ஆனால், வகுப்புவாரி தீர்மானத்தைச் செயல்படுத்த காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோபத்தில் காங்கிரசை விட்டுப் பின்னால் வெளியேறி விடுகிறார்.

நீதிக்கட்சி

நீதிக்கட்சிக்காக தேர்தலில் பெரியார் போராடினாலும் காங்கிரஸே தேர்தலில் வெற்றிப் பெறுகிறது. பின்னாளில் இக்கட்சி தான் “திராவிடர் கழகம்” என்று பெயர் மாறுகிறது.

தேர்தல் தோல்வியால் கலகலத்து போன நீதிக்கட்சியில் இருந்த பலர் பதவிக்காகக் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிறார்கள். பெரியார் “பதவி ஆசை உள்ளவர்களை இனம் காண இது உதவியது” என்று குறிப்பிடுகிறார்.

நீதிக்கட்சியைப் பெயர் மாற்றும் போது தமிழர் குறித்துப் பெயர் வைக்கலாம் என்றால், கட்சியில் கன்னடர், தெலுங்கர் போன்றோர் இருந்ததால், அனைவரையும் உள்ளடக்கிய “திராவிடர் கழகம்” என்ற பெயர் தேர்வாகிறது.

மணியம்மை

periyar maniammai

உடல் நலப்பிரச்சனை காரணமாகப் பெரியாரின் மனைவி மறைந்ததால், தன்னை கவனித்துக்கொள்ளவும் உதவிக்கும் மணியம்மை என்ற பெண்ணை அமர்த்திக்கொள்கிறார். பின்னர் கட்சிப் பணியிலும் ஈடுபடுத்துகிறார்.

இக்காலகட்டங்களில் அண்ணாதுரை பெரியாருடன் இணைந்து அவரது கொள்கைகளைப் பரப்ப துணை நிற்கிறார். அண்ணாதுரை ஆங்கிலப் புலமை பெற்று இருந்ததால், மொழி பெயர்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கிறார்.

இந்தி எதிர்ப்பு

ஆட்சிக்கு வந்த ராஜாஜி இந்தி திணிப்பை (மூன்றாம் மொழியாக) செயல்படுத்த, இதற்குப் பெரியார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

வர்ணாசிரமும் இந்தி திணிப்பும் ஒட்டிப்பிறந்த இரட்டை பிசாசுகள்” என்று கடுமையாக விமர்சிக்கிறார்.

ஏற்கனவே, நூறுக்குப் பத்துச் சதவீதம் தான் பிராமணர் அல்லாத மாணவர்களே தேர்ச்சி அடைந்து வருகிறார்கள். இந்த லட்சணத்தில் இந்தியை கட்டாயப் பாடமாக்கினால் பிராமண மாணவர்கள் மட்டும் தேர்ச்சி அடைவார்கள்.

மற்றவர்கள் ஒரே வகுப்பிலேயே முடங்கி விடுவார்கள். இது பிராமணர் அல்லாத மாணவர்களை அழுத்தும் முயற்சி

என்று மேடைக்கு மேடை முழங்கத் தொடங்கினார் பெரியார்.

போராட்டம் வேகமெடுத்ததால், கொஞ்சம் கொஞ்சமாகப் பிடியை தளர்த்தியும் போராட்டம் நிற்கவில்லை என்பதால், வேறு வழியின்றி இந்தி திணிப்பை ராஜாஜி கை விடுகிறார்.

தமிழில் அதிகரித்த வடமொழி சொற்கள்

எனக்கு ரொம்ப வருடங்களாகப் புரியாத புதிராக “தமிழில் எப்படி இவ்வளவு வட மொழி சொற்கள் கலந்தன?” என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது.

60 – 70 ம் ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களில் இதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. நானும் “இங்கே இருந்து வட மொழி சொற்கள் கலப்பு ஏற்பட்ட இருக்குமோ!” என்று நினைத்தேன்.

பல்வேறு கேள்விகள், தேடல்களுக்குப் பிறகு இதற்கான காரணம் “பிராமண ஆசிரியர்கள்” தான் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

முற்காலத்தில் ஆசிரியர்கள் என்றால் பிராமணர்கள் தான். இவர்களைத் தவிர வேறு எவரும் ஆசிரியராக இருக்கவில்லை, வெகு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

பிராமணர்கள் பேச்சு வழக்கில் சமஸ்கிருதம் அதிகம் பயன்படுத்துவதால், பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு என்று அனைத்து இடங்களிலும் இவற்றையே கேட்டு பழகி மாணவர்களிடையே வட மொழி சொற்கள் கலந்து விட்டது.

இது காலமாற்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் தமிழில் வட மொழி சொற்களைப் பிரிக்க முடியாத அளவுக்குக் கலந்து விட்டன.

இதுவே நான் என்னுடைய தொடர் தேடலில் தெரிந்து கொண்டது. இதுவே Logic ஆகச் சரியாகவும் உள்ளது.

தற்போது வடமொழி சொற்களின் பயன்பாடு முந்தைய அளவுக்கு மோசமில்லாமல் குறைந்து விட்டாலும், பிரிக்கவே முடியாத சொற்கள் தமிழில் இணைந்தது எனக்குப் பெரும் வேதனை.

தமிழின் தனித்தன்மையை இவை சிதைக்கின்றன.

பெண் உரிமை, தீண்டாமை

பெண் உரிமைக்காகக் கடும் போராட்டம் நடத்தி இருக்கிறார்.

பெண்கள் சுயமாக அனைத்தையும் செய்யணும், அவர்களே முடிவு எடுக்கணும் என்று பெண்களுக்கு ஆதரவான கருத்துகளைப் பெண்களிடத்தே பேசியதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

பெண்களை அடிமையாக, வாய்ப்புத் தராமல் அடக்கும் ஆண்களுக்குப் பெரியார் கூறும் கருத்துகள் காதில் புகையைக் கொண்டு வந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை 🙂 .

பெண்களே “பெரியார்” என்ற பட்டத்தையும் அளித்து இருக்கிறார்கள்.

தீட்டு, கோவிலில் அனுமதி மறுக்கப்படுவது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் உரிமை போன்றவற்றுக்கு எதிராகக் கடும் போராட்டம் நடத்தி இருக்கிறார். அனைவரும் சமம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறார்.

இந்து மதம் வேண்டாம்

இந்து மத “வர்ணாசிரமம்” காரணமாக, தாழ்த்தப்பட்டவர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற வலியுறுத்துகிறார்.

கிறித்துவ மதத்தில் இந்து மதம் போல உள்ள உட்பிரிவுகளைக் குறிப்பிட்டு, இஸ்லாம் தான் அனைவரையும் சமமாக நடத்துகிறது எனவே, இஸ்லாமுக்கு மாறுங்கள் என்று வலியுறுத்துகிறார்.

காந்தியிடம் இந்து மதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்து இருக்கிறார். இதற்குக் காந்தி பதிலை அளிக்காததால் அவர் மீது கோபமாகிறார்.

மத மாற்றத்தில் ஏற்கனவே கூறிய கருத்தை திரும்பக் கூற விரும்புகிறேன்.

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இங்கே உள்ள அவமரியாதை காரணமாக மற்ற மதத்துக்கு மாறும் போது இட ஒதுக்கீடு சலுகையை இழக்கிறார்கள்.

அதை விட முக்கியமாக அங்கும் இரண்டாம் தர மக்களாகவே நடத்தப்படுகிறார்கள். எனவே, மத மாற்றம் என்பது தற்காலிக தீர்வே, நிரந்தர தீர்வல்ல.

இட ஒதுக்கீடு பயன்படுத்திக் கல்வி அறிவு பெற்றுச் சமூகத்தில் உயர்வதே இதிலிருந்து ஓரளவு விடுபட உதவி செய்யும்.

கறுப்புச் சட்டை

CN-Annadurai-M-Karunanidhi-MGR-Periyar

மற்றவர்களிடம் இருந்து தனித்துத் தெரிய கறுப்புச் சட்டை அணிய பெரியார் உத்தரவு இடுகிறார் ஆனால், இதற்கு அவரது கட்சியிலேயே பலருக்கு மாற்று கருத்து ஏற்படுகிறது.

குறிப்பாக அண்ணாதுரை கறுப்புச் சட்டை அணிய மறுக்கிறார். இது குறித்த மாநாட்டில் சட்டையை அணிந்தாலும் பின்னர் தொடரவில்லை.

இந்தி எதிர்ப்பு

ராஜாஜிக்கு பிறகு இந்தியை திணிக்கும் முடிவை “ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்” எடுக்க இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்புகிறது. போராட்டத்துக்கு அண்ணாதுரையைத் தலைமை ஏற்க பெரியார் முடிவு செய்கிறார்.

அண்ணாதுரை சார்பில் மாணவர்களிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலு பெற்றது.

வாரிசாக மணியம்மை

தனக்குப் பிறகும் தன்னுடைய சொத்துக்களுக்கும் வாரிசாக ஒரு சிறுவனைத் தத்தெடுக்க, கடைசி நேரத்தில் அவன் மறுத்து விடவே பெரியாரின் முயற்சி தடைபடுகிறது.

தனது வாரிசாகவும், கட்சி அடுத்த நபராகவும் அண்ணாதுரையை அறிவிக்காமல், நம்பாமல் இருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்துகிறது.

எனக்கும் வியப்பு! ஏன் அண்ணாதுரையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று யாருக்காவது சரியான காரணம் தெரியுமா? தெரிந்தால் கூறுங்கள்.

பின்னர் பெரியார் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே மணியம்மையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். மணியம்மைக்கு அப்போது 31 வயது.

அக்காலத்தில் பெண்களுக்கு (சிறுமிகளுக்கு) 14,15 வயதில் திருமணம் நடைபெற்று விடும்.

இதுவரை திருமணம் செய்து கொள்ளும் விருப்பமில்லாமல் மணியம்மை இருந்ததைப் பெரியார் காரணமாகக் கூறினாலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அனைவரின் எதிர்ப்பையும் மீறி மணியம்மையைப் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்.

அக்காலகட்டத்தில் பெண்ணைத் தத்தெடுத்து வாரிசாக்க முடியாது எனவே, மனைவியாக்கி வாரிசாக்கி விடுகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாதுரை “திராவிடர் முன்னேற்ற கழகம்” என்ற கட்சியைத் துவங்குகிறார். இதில் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாதுரையிடம் இருந்த கலைஞர், திமுகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

இவர்கள் பிரிந்தாலும் பெரியார் மீதான மரியாதையைத் தொடர்கிறார்கள்.

சாதிப்பெயர் நீக்கம்

கடைகளில் உள்ள சாதிப்பெயர்களும், மத அடையாளங்களும், இந்தி எழுத்துகளும் கறுப்பு மையால் அழிக்கப்படுகின்றன. இதற்குப் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பு.

“பிராமணாள் மட்டும்” என்று எழுதப்பட்டு இருந்த உணவகங்களில் பெயர்களைத் திராவிடர் கழகத்தினர் அழித்தனர். இந்தச் சமயத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றுக்கொண்டு இருந்தன.

தற்போது சாதி பெயரை இணைக்காமல் பெயர் கூறப்படுவது தமிழ் நாட்டில் மட்டுமே! என்பது நமக்குப் பெருமை. இன்னும் சிலர் சாதி பெயரை இணைத்துக்கொண்டாலும் 95% இணைக்காமல் தான் உள்ளனர். இதுவே பெரியாருக்கு கிடைத்த வெற்றி.

என்னுடைய தாத்தா சாதிப்பெயருடன் இருந்தார், என் அப்பா சாதி பெயருடன் இல்லை என்றாலும் அழைக்கப்பட்டார். என் பெயரில் சாதி பெயர் இல்லை வயதானவர்கள் மட்டும் சிலர் இன்னும் சாதிப்பெயரை இணைத்து அழைக்கின்றனர்.

என்னுடைய பசங்களுக்கு 90% மறக்கப்படும். என்னுடைய பேரன்கள் முற்றிலும் சாதிப்பெயர் அழைப்பு / குறிப்பிடல் இல்லாமல் இருப்பார்கள்.

இது பெரியாராலே சாத்தியமானது.

சாதிப் பெயரை அழிக்க முடிந்த பெரியாரால், சாதியை அழிக்க முடியவில்லை, முடியாது. இன்றும் அது ஃபேஸ்புக்கில் மறுவடிவம் எடுத்துள்ளது.

சாதி அழிய இன்னும் மூன்று தலைமுறைகள் ஆகலாம் ஆனாலும், முழுதும் அழியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

குலக்கல்வி திட்டம்

ராஜாஜி மீண்டும் குலக்கல்வி என்ற சர்ச்சையை ஆரம்பித்தார். அதாவது தச்சன் மகன் தச்சனாகவும், நாவிதன் மகன் நாவிதனாகவும் தொடர நிர்பந்திக்கப்பட்டது. இதற்காகப் பள்ளி அரை நேரம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இதற்குக் கடும் எதிர்ப்புப் போராட்டம்.

மேலோட்டமாகப் பார்த்தால், நம் குடும்பத் தொழிலை கற்றுக்கொள்வது நல்லது தானே என்பது போல இருக்கும் ஆனால், அதன் பின்னணி அபாயகரமானது.

இதைத் தடுக்க நினைத்தது பாராட்டத்தக்க செயல்.

இது போன்ற போராட்டங்களே தமிழகத்தை மற்ற மாநிலங்களில் இருந்து தனித்தும், பொருளாதார ரீதியாக மக்கள் உயர்ந்தும் இருக்க உதவி இருக்கிறது.

குலக்கல்விக்குக் காங்கிரசில் கிளம்பிய எதிர்ப்பு

குலக்கல்விக்குக் காங்கிரஸிலேயே எதிர்ப்பு கிளம்பியதால், காங்கிரஸ் தலைமை ராஜாஜியை நீக்கி விட்டு காமராஜரை முதலமைச்சராக அறிவித்தது.

காமராஜர் பதவியேற்று பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் “வகுப்புவாரி உரிமை” அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இவ்வறிவிப்பு பெரியாரை மகிழ்ச்சியடைய வைத்தது.

காமராஜர் முதலமைச்சர் என்றாலும் சட்டமன்ற உறுப்பினர் இல்லை, குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் நின்றார், இதற்குப் பெரியார் ஆதரவு தந்தார்.

குலக்கல்வி எதிர்ப்பு, வகுப்பு வாரி உரிமை ஆதரவு காரணமாகக் காமராஜ் மீது பெரியாருக்கு மதிப்பு ஏற்பட்டு இருந்தது.

வேறு யாரையும் ஆதரிக்க முடியாததால் “திமுக” காமராஜரையே ஆதரித்தது. அனைவர் ஆதரவால் காமராஜர் வெற்றி பெற்று (1954) முதல்வராகி “குலக்கல்வி” திட்டத்தை ரத்துச் செய்தார்.

திரும்பக் காமராஜருக்கு ஆதரவு தந்த பெரியார்

kamaraj periyar

திரும்ப நடந்த 1962 தேர்தலில் காமராஜருக்கு முழு ஆதரவை தெரிவித்தார் பெரியார். காமராஜருக்காகத் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக எதிர்த்து போட்டியிட்டது.

கடந்த தேர்தலை விடக் கூடுதல் இடத்தைத் திமுக பெற்று இருந்தாலும், அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் குறைந்த இடங்கள் என்றாலும், ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற்று காமராஜர் முதலமைச்சர் ஆனார்.

ராஜினாமா செய்த காமராஜர்

கட்சியை வளர்க்க பதவியில் இருப்பது சரியல்ல என்று ராஜினாமா செய்தார் காமராஜர். இதற்குப் பெரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்கொலைக்குச் சமமான முடிவை எடுத்து இருப்பதாகக் கோபப்பட்டார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி பலத்த சேதத்தைச் சந்திக்கப்போகிறது என்றும் எச்சரித்தார்.

மறக்க முடியாத ஜனவரி 26 1965

anti_hindi_protests

இன்று தான் இந்தி ஆட்சி மொழியாக்கப்படும் என்று மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகியது. இதைத் தொடர்ந்து இதைக் கையில் எடுத்த திமுகக் கடும் போராட்டத்தில் இறங்கியது.

மாணவர்கள் பொதுமக்கள் என்று பெரும் கலவரமாக மாறியது. 63 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சாலையெங்கும் போராட்டம் அனல் பறந்தது.

முதல்வர் பக்தவச்சலம் வன்முறையை ஒடுக்கக் களம் இறங்கினார். மாணவர்கள் சிலர் தீக்குளித்து இறந்தனர்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதை உணர்ந்த மத்திய அரசு இறங்கி வந்தது, ஆங்கிலமும் தொடரும் என்று அறிவித்தது.

காமராஜர் “இந்தி திணிப்பு நடக்காது” என்று உறுதி அளித்தும் திமுகப் போராட்டம் நடத்துவது செத்த பாம்பை அடிப்பது போல” என்று பெரியார் விமர்சிக்கிறார்.

அரசு வன்முறையைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் வன்முறையில் ஈடுபடும் கட்சியை (திமுக) தடை செய்யுங்கள்” என்கிறார்.

நிலைமை சிக்கலாவதை உணர்ந்த அண்ணாதுரை “எங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தமில்லை” என்று கூறி போராட்டத்தைக் கை விடுகிறார். நிலைமை கட்டுக்குள் வருகிறது.

ஆங்கிலம் கலந்து மாணவர்கள் பேசுவதை பெரியார் ஊக்குவித்து இருக்கிறார்.

தோல்வி அடைந்த காங்கிரஸ் / காமராஜர்

1967 தேர்தலில் திமுக வீரியமாகச் செயல்படுகிறது. திரைத்துறை பிரபலங்கள் மூலம் ஆதரவு திரட்டப்படுகிறது. “கூத்தாடிகள்” என்று பெரியார் விமர்சிக்கிறார்.

“மொழிப்போராட்டம்” காரணமாகத் திமுகக்கு பொதுமக்களிடையே ஆதரவு கிடைத்து இருக்கிறது.

இந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாக எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டு விடுகிறார். இந்த அனுதாப அலையும் சேர்த்து திமுகவை வெற்றி பெற வைக்கிறது.

49 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப் பெறுகிறது அதைவிட அதிர்ச்சியாக விருதுநகரில் காமராஜர் தோல்வியடைகிறார். பெரியாருக்கு இது பேரதிர்ச்சியாகிறது.

இதன் பிறகு காங்கிரஸ் இன்றுவரை (2018) ஆட்சியைப் பிடிக்கவில்லை.

முன்னரே பெரியார் கூறியது போலக் காமராஜர் ராஜினாமா செய்து இருக்கக்கூடாது என்று தோன்றியது. அப்போது ராஜினாமா செய்து விட்டுத் திரும்பத் தேர்தலில் நின்றதும் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

இது குறித்த விளக்கமான புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

முடிவு

உடல்நிலை காரணமாக அண்ணாதுரை, ராஜாஜி உயிரிழப்பு, கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக கட்சியை எம்ஜிஆர் உருவாக்கியது என்று தொடர்ச்சியான சம்பவங்கள். இந்த விசயத்தில் கலைஞருக்கே தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

இதன் பிறகு பெரியாரும் தன்னுடைய உடல்நிலை காரணமாக 1973 ம் ஆண்டு காலமானார்.

பெரியாருக்குப் பின் “திராவிடர் கழகம்” தலைமை பொறுப்பில் மணியம்மை  வந்தார் ஆனால், அவரும் சில வருடங்களில் காலமானதால், அவருக்குப் பிறகு இன்று வரை (ஜனவரி 2018) கி வீரமணி கட்சியை வழிநடத்தி வருகிறார்.

கேன்சர்

பெரியாருக்கு வாயில் கொப்பளங்கள் ஏற்பட்டு இருக்கிறது இதனால், மிகச் சிரமப்பட்டு இருக்கிறார்.

மருத்துவரிடம் சென்றதில் “மேடையில் பேசும் போது நாக்கை கடிப்பதாலோ, தூக்கத்தில் கடிப்பதாலோ கேன்சர் நோய் வந்திருக்கலாம்” என்று கூற, அதிர்ச்சியடைந்த பெரியாரை தைரியம் கூறி குணப்படுத்தி இருக்கிறார்.

இதற்கு நன்றி கூறிய பெரியார்,

உங்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த நோய்ல இருந்து என்னை மீட்கலைன்னா, நாத்திகன் என்பதால் தான் எனக்கு நாக்கில் கேன்சர் வந்தது என்று ஆத்திக ஆளுங்க சொல்லி, அவங்களுக்கு என் மேல தப்பான அபிப்பிராயம் வர மாதிரி செய்து இருப்பாங்க. அந்த நிலைமை வராமல் தடுத்துட்டீங்க

என்று கூறி இருக்கிறார்.

பெரியார் குறித்த என்னுடைய கருத்துகள் சில

பிராமணர்களும் மற்ற ஆதிக்கச் சாதியினரும் பெரியாரை கடுமையாக எதிர்க்கின்றனர், விமர்சிக்கின்றனர். சில கோபங்கள் நியாயமில்லை என்றாலும், புரிந்து கொள்ள முடிகிறது.

ஆதிக்கச் சாதியினர் (பிராமணர்கள் உட்பட) தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தி இருக்கிறார்கள், இன்னமும் நடத்துகிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் தொட்டால் தீட்டு மற்றும் கோவில், வீட்டில் அனுமதியில்லை என்ற நிலையே இன்று வரை தொடர்கிறது.

இரட்டை குவளை முறை காகித குவளையாக மாற்றம் பெற்று இருக்கிறதே தவிர இன்னும் பல இடங்களில் இதே தான் தொடர்கிறது. இன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்திய குவளைகளை ஆதிக்க சாதியினர் பயன்படுத்த மாட்டார்கள்.

பல நூறு ஆண்டுகளாக இவர்களை எழ விடாமல் அடிமை படுத்தியே வைத்து இருந்தார்கள். காலமாற்றம், இட ஒதுக்கீடு போன்றவை தாழ்த்தப்பட்ட மக்களையும் சமூகத்தில் முன்னேற வழி வகுத்தது.

இதற்குப் பெரியாரின் பங்கு பெருமளவு என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து இல்லை.

வைக்கம் வீரர்

கேரளாவில் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதை எதிர்த்து அனுமதியை பெற்றதாலே பெரியாருக்கு “வைக்கம் வீரர்” என்ற பெயரும் வந்தது.

இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களை எடுத்ததாலே தமிழகம் இன்று மற்ற மாநிலங்களை விடப் பொருளாதார ரீதியாக மக்களுக்குச் சம உரிமை போன்றவற்றில் முன்னேறி இருக்கிறது.

வட மாநிலங்களில் இன்னும் தாழ்த்தப்பட்டவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. அடிமை முறை இன்னும் தொடர காரணம் பெரியார் போன்றோர் அங்கு இல்லாததே.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அநீதி நடந்தால், அது ஊடகங்களில் கவனம் பெற்று பெரும் விவாதமாக மாறி விடுகிறது ஆனால், வட மாநிலங்களில் இதெல்லாம் கவனத்திலேயே கொள்ளப்படாது. எதோ ஒன்றிரண்டு செய்திகள் மட்டுமே கவனம் பெறும்.

ஆதிக்கச் சாதியினர்

நானும் ஒரு ஆதிக்கச் சாதியில் இருந்து வந்தவன் தான். என்னால் தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வுகளைக் கோபங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. பல நூறு ஆண்டுகளாக அடிமையாக இருந்த கோபம், அவர்களிடையே தற்போது வெளிப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட சாதியினர் சில நேரங்களில் தங்களை ஆதிக்கச் சாதியினர் இழிவுபடுத்தி விட்டார்கள் என்று வேண்டும் என்றே பொய்யாகக் கூறி, வன்கொடுமை சட்டத்தில் சிக்க வைத்து விடுகிறார்கள். இச்சட்டம் தவறாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

நமக்குக் கீழே இருந்தவன், கை கட்டி இருந்தவன், துண்டை இடுப்பில் கட்டி இருந்தவன் இன்று நம்மைக் கேள்வி கேட்கிறானா?! என்ற ஆதிக்கச் சாதியினர் கோபம்.

இது போன்ற நடைமுறை பிரச்சனைகளும் இரு தரப்பையும் மேலும் சிக்கலாக்குகிறது.

இட ஒதுக்கீடு குறித்துப் பேச எனக்கு நிறைய விஷயங்கள் உள்ளது, இது குறித்து மற்றொரு கட்டுரையில் எழுதுகிறேன், இதுவே பெரியதாக வந்து விட்டது.

பெரியார் என்றால் கடவுள் எதிர்ப்பு மட்டுமே அல்ல

பெரியார் வெறும் கடவுள் எதிர்ப்பு மட்டும் செய்யவில்லை, தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் அவர்களைச் சமமாக நடத்தவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களை மிகவும் கேவலமாகப் பேசுபவர்கள் ஒரே ஒரு முறை அவர்கள் நிலையில் இருந்து பாருங்கள், அவர்களின் சிரமங்கள் உங்களுக்குப் புரியும்.

தீண்டாமை, தீட்டு போன்றவற்றை அனுபவித்தாலே அதில் உள்ள வலி புரியும், பேசுவதால் விவாதங்களால் அதை உங்களால் உணர முடியாது.

முன்னரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். நான் சிங்கப்பூரில் இருந்த போது பேருந்தில் நான் வந்து அமர்ந்தவுடன் அருகில் இருந்த ஒரு சீனர் எழுந்து சென்று விட்டார்.

ஏன் எழுந்தார் என்று புரியவே சில நொடிகள் பிடித்தது, பின்னர் இது போன்ற சில சம்பவங்கள்.

என்னால் மற்றவர்கள் நிலையில் இருந்து யோசித்து அவர்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தாலும், சிங்கப்பூர் அனுபவம் எனக்கு தீண்டாமை வலியை கடுமையாக உணர்த்தியது.

அப்போதைக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை நான் அவமானமாகக் கருதவில்லை, தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வை புரிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பாகத் தான் கருதினேன்.

ரஜினி கூறியதை குறிப்பிட்டு முடிக்கிறேன்

பெரியார் ஒரு விருந்து போல, நமக்குப் பிடித்ததை எடுத்துக்கொண்டு பிடிக்காததைத் தவிர்த்து விடலாம்“.

ஆசிரியர் ஆர் முத்துக்குமார்

ஆசிரியர் ஆர் முத்துக்குமார் இப்புத்தகத்தில் மேலோட்டமாக அனைத்தையும் தொட்டு வந்து இருக்கிறார். விரிவான தகவல்களாக இல்லை, சிறிய புத்தகம்.

இருப்பினும் பெரியார் பற்றிச் சுருக்கமாக, முக்கியச் சம்பவங்களை இதில் அறிந்து கொள்ளலாம்.

இன்னும் விரிவான தகவல்களைக் கொண்ட பெரியார் புத்தகம் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். புத்தகத்தைப் பரிந்துரைத்த நண்பர் சூர்யாக்கு நன்றி 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

தீண்டாமை எப்போது ஒழியும்?

அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் (என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்திய நாவல்)

“இந்தி”யால் இந்தியா முன்னேறுகிறதா?

இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]

தமிழ்

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

அர்த்தமுள்ள இந்து மதம்

கர்ம வினையும் இந்து மதமும்

Adaminte Makan Abu [2011] ஒரு “ஹஜ்” பயண போராட்டம்

{ 5 comments… add one }
 • Revathy January 26, 2018, 3:33 AM

  Full book read panna satisfaction…. Thanks….

 • ராமகிருஷ்ணன் January 26, 2018, 5:27 AM

  பெரியார் தன் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த கேவலத்தை மிகச்சாதாரணமாக கடந்து விடுகிறீர்கள். சொத்து என்ற ஒரு காரணம் சொல்லி தப்பிக்க முடியாது.

  இன்னொன்று மிகப்பெரிய மோசடி இஸ்லாம் மதத்தில் சுதந்திரம் இருக்குறது இஸ்லாம் தான் அனைவரையும் சமமாக நடத்துகிறது எனவே, இஸ்லாமுக்கு மாறுங்கள் என்று வலியுறுத்துகிறார். என்று கூறுவது நகைப்புக்குரியது.

  பெண்கள் மசூதிக்கு செல்ல முடியாது. முழு உடலையும் மூடிக்கொண்டு செல்ல வேண்டும். இதை போல் இந்து மதம் சொன்னால் பார்பனீய அடிமைத்தனம். இதை தட்டிக்கேட்க குரல் கொடுக்க ஒரு பையலுக்கும் திராணி இல்லை.

  கேட்டால் நான் மற்ற மதங்களை பற்றி பேச விரும்பவில்லை என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள் இந்த இந்து மதத்தில் இருக்கும் நடுநிலை நக்கிகள். இந்த நடுநிலை நக்கிகளால் தான் இந்து மதத்திற்கு பிரச்சனை.

  இன்னொன்று பெரியார் அனைத்து மதத்தில் இருக்கும் மூடநம்பிக்கையை வெளுத்து வாங்கி உள்ளார். ஆனால் இந்த கயவர்கள் அதை மறைத்து இந்து மதம் பிராமணர்களை பற்றி கூறியதை மட்டும் கூறி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.

  துக்ளக் இதழில் இதை பற்றி எந்த எந்த மதம் கட்சி பற்றி பெரியார் எப்போது எந்த பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து உள்ளார் என்று தேதி வாரியாக விரிவாக பிரசுரித்து உள்ளார்கள் துக்ளக்கில். 2006 ம் ஆண்டு வந்த இதழ்களில்.

  அதில் ஒரு இடத்தில் (இந்த இஸ்லாமியனும் கிறிஸ்தவனும் இந்துக்களை பார்த்து கங்கையில் நீராடினால் பாவம் போய்விடுமா என்று கேட்கிறார்கள். அவர்கள் மட்டும் என்ன செய்கிறார்கள் பாவமன்னிப்பு கேட்டால் பாவம் போய்விடும் என்றும் தொழுகை செய்தால் மெக்காவிற்கு புனத பயணம் மேற்கொண்டால் பாவம் போய்விடும் என்று சொல்கிறார்கள் இதுவும் மூடநம்பிக்கை தான்) என்று பெரியார் சாடியுள்ளார்.

  ஆனால் இதை எவரும் சொல்ல மாட்டார்கள். பெரியார் பெயரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இந்த கயவர்கள். எவன் காலையாவது நக்கி பிழைப்பவன் தான் இந்த காங்கிரஸ் காரன் என்று சொல்லி உள்ளார். இன்னும் நிறைய சொல்லலாம். பிறகு எழுதுகிறேன்.

 • கிரி January 29, 2018, 5:15 AM

  @ரேவதி நன்றி

  @ராமகிருஷ்ணன் புத்தகத்தில் கூறியுள்ளவற்றை விமர்சனமாக கூறியுள்ளேன் அவ்வளவே. இதில் கூறியுள்ளவை அனைத்தும் எனக்கு ஏற்புடையது என்பது அர்த்தமல்ல.

  எனக்கும் பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.

  • ராமகிருஷ்ணன் January 31, 2018, 4:31 PM

   இன்னொரு விஷயம். ஒருவர் இல்லையென்றால் அவரை பற்றி நிறைய கட்டுக்கதைகளை, அவிழ்த்து விடுவார்கள். நம் காலத்தில் வாழ்ந்த ஜெயலலிதாவை பற்றி நம்மிடமே புருடா விடுகிறார்கள்.

   அவர் ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடிற்று. அம்மா அப்படி சொன்னார், இப்படி செய்தார். ராமராஜ்யம் என்பது ஜெயலலிதா ஆட்சியில் தான். என்று அவரை எதிர்த்தவர்கள் கூட சிலாகித்து தங்கள் கற்பனையை கலந்து உண்மையென பரப்புகிறார்கள்.

   ஆனால் உண்மை என்னவென்று நம் எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் மறைந்த ஜெயலலிதா பற்றியே இவ்வளவு கட்டுக்கதை என்றால் பலவருடங்கள் முன் வாழ்ந்த பெரியார் போன்றவர்களை பற்றி எப்படி எல்லாம் ரீல் விடுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

   பெரியார் ஒன்றும் மஹாத்மா அல்ல. அனைத்து மதத்தினரையும் மதிப்பது மட்டுமே மதச்சார்பின்மை.

   பிள்ளையர் சிலையை உடைத்து முஸ்லிம்களின் நோன்பு கஞ்சி குடித்தால் அதற்கு பெயர் மதச்சார்பின்மையா? இந்துக்களின் நம்பிக்கையை தெய்வத்தின் சிலையை உடைக்க பெரியாருக்கு யார் அதிகாரத்தை கொடுத்தது.?

   இதுபோல் மற்ற மதங்களை பற்றி பேசகூட திராணி இல்லாத இந்த கயவர்கள் இன்று சூத்திரன் பிராமணன் என்று பிரிவினைவாதம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பிராமணர்கள் அந்த காலத்தில் ஆட்டம் போட்டார்கள், கொடுமை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

   அதற்காக பிள்ளையார் சிலையை உடைப்பதா? பரவலாக இஸ்லாமிய தீவிரவாதம் இருக்கிறது என்பதற்காக அனைத்து இஸ்லாமியர்களும் தீவரவாதிகள் என்று சொன்னால் எப்படி ஏற்க முடியாதோ அதை போல் தான் அனைத்து பிராமணர்களும் அயோக்கியன் என்று சொல்வது.

   இப்போது எந்த பிராமணர்கள் அந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள்? பிராமணர்கள் வீட்டில் சூத்திரர் சாப்பிட முடியுமா என்று கேட்கிறார்கள்.

   நான் கேட்கிறேன் நம் வீட்டில் யார் சாப்பிட வேண்டும் என்று நான் தானே முடிவு செய்ய வேண்டும்? ஊரார் முடிவு செய்ய இது யார் வீடு.?

   வீரமணி போன்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த படித்த பையன் அல்லது பெண்ணை திருமணம் செய்து கொடுப்பாரா? இங்கே வெளி வேஷம் போடுகிறவர்களே அதிகம்.

   நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இப்போது பிராமணன் சூத்திரன் என்று இவர்கள் பேசுவது எல்லாம் இவர்களின் பிழைப்புக்காக மட்டுமே. ஜாதி இல்லை சொல்கிறவர்கள் மக்களை ஏன் ஜாதி சொல்லி பிளவு படுத்த வேண்டும்?

   ஆரம்பத்தில் இவர்கள் நாத்திகம் என்ற பெயரில் இஸ்லாமிய கிறிஸ்தவ மதம் பற்றியும் விமர்சனங்கள் வைத்தார்கள். அவர்களின் கடும் எதிர்ப்பால் பயந்து பின்வாங்கி இப்போது இந்து மதத்தை பிராமணர்களை துவேசித்து பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.

   இவ்வளவு நடந்தும் இப்போது உள்ள பிராமணர்களுக்கு படிப்பு, வேலைவாய்ப்பு என்று எதிலும் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடையாது இருந்தாலும் அவர்கள் தங்கள் திறைமையால் மட்டுமே முன்னேறி வருகிறார்கள்.

   வெளிநாடுகளில் எல்லாம் திறைமைக்கு மட்டுமே மதிப்பு. இன்று பல பிராமணர்கள் வெளிநாடுகளில் பல பெரிய பதவிகளில் இருந்து வருகிறார்கள். அதற்காக நான் மற்றவர்களை திறமை குறைந்தவர்கள் என்று சொல்லவில்லை.

   பிராமணர் அல்லாத பலபேர் பிராமணர்களை விட திறைமை மிக்கவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

   ஆனால் தங்கள் மூதாதையர் சிலர் செய்த செயல்களால் இன்று வரை தண்டனை அனுபவித்து அனைத்து அடிப்படை சலுகைகள் மறுக்கப்பட்டு அனைவராலும் அரசியல்வாதிகளாலும் பல துன்பங்கள் வந்தாலும் யாரு வம்புக்கும் செல்லாமல் தன் வேலையை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறோம்.

   இதிலும் சில பிராமணர்கள் தவறு செய்யலாம். நான் சொல்வது பெருவாரியான சதவீதமே. காலம் மாறிவிட்டது. இன்று நாங்கள் வாழ்வதே பெரிய விஷயம் தான். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

 • கிரி February 5, 2018, 3:29 PM

  உங்கள் வருத்தம் புரிகிறது. இந்த நிலை 10 / 20 ஆண்டுகளில் நடந்தது அல்ல, கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு மேலாக நடந்தது . எனவே, இது 50 வருடங்களில் மாற்றம் பெற்று விடாது.

  இந்த பிரச்சனைகள் தவிர்க்க முடியாதது. கசப்பான உண்மை என்றாலும், இது தான் எதார்த்தம்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz