மேயாத மான் [2017] A Laugh Riot

Meyaatha Maan

திர்பாராமல் சில படங்கள் நம்மைக் கவர்ந்து விடுவதுண்டு. பத்தோடு பதினொன்றாகத் தான் “மேயாத மான்” பார்க்கத் துவங்கினேன். கொஞ்ச நேரத்திலேயே படத்தோடு ஒன்றி விட்டேன்.

சமூகத்துக்குக் கருத்துக் கூறும் படமல்ல ஆனால், பொழுதுபோக்குப் படம். நம்மை மறந்து சிரிக்க வைக்கும் படம்.

படத்தில் என்னை வியப்படைய வைத்தவர்கள் இரண்டு பேர் ஒன்று இயக்குநர் ரத்ன குமார் மற்றொன்று வினோத் என்ற பெயரில் நடித்து இருக்கும் விவேக் பிரசன்னா.

படம் அப்படி ஒரு இயல்பு. எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் செயற்கையாக இல்லாமல் அந்தந்த இடங்களில் எடுக்கப்பட்டது. இதுவே படத்தோடு நாம் ஒன்ற மிக முக்கியக்காரணம்.

இது போலப் படங்கள் எடுப்பதில் எனக்கு இயக்குநர் ரஞ்சித் ரொம்பப் பிடிக்கும். இயல்புத்தன்மை கெடாமல் எடுப்பார். அட்டகத்தி, மெட்ராஸ் படங்கள் சிறந்த உதாரணம்.

இப்படம் ஒருதலைக் காதலை கூறுகிறது. வைபவ்க்கு நடிக்கச் சிறந்த வாய்ப்பு. வட சென்னை நபர் போன்ற கதாப்பாத்திரத்துக்கு வைபவ் பொருத்தமானவர் அல்ல இருப்பினும் முடிந்த வரை தன் தேர்வை நியாயப்படுத்தி இருக்கிறார்.

இங்கே பல பேருக்கு ஒரு தலைக் காதல் அனுபவம் இருக்கும், இல்லாதவர்கள் மிகக் குறைவு. எனக்கும் 🙂 .

Read: நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!

விவேக் பிரசன்னா

வைபவ் நண்பனாக வரும் வினோத் (விவேக் பிரசன்னா) யார் என்றால், சேதுபதி & விக்ரம் வேதா படங்களில் நகைச்சுவை வில்லனாகவும் பத்தோடு பதினொன்றாகவும் வந்து சென்றவர்.

யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதே புரியவில்லை. இப்படம் பார்த்தவர்களால் நிச்சயம் “அடப்பாவி! அந்த ஆளா இது?!” என்று வியப்படையாமல் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு நடிப்பில் நொறுக்கித் தள்ளி இருக்கிறார்.

இத்தனை நாளா எங்கயா இருந்தே!” என்று கேட்க வைக்கிறது. உண்மையாகவே மனுசன் கலக்கி இருக்கிறார். படம் முழுக்க இவரின் இயல்பான நடிப்பை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சிறப்பு முழுக்க இயக்குநரையே சேருகிறது.

இப்படி ஒரு திறமையான நடிகரையா நாம் சாதாரணமாக எடை போட்டோம் என்று இருந்தது.

நண்பன் தங்கச்சியைத் தன் தங்கச்சியாக நினைப்பதும் ஆனால், அவர் தன்னை காதலிப்பது தெரிந்து அதிர்ந்து பின் நண்பனின் அழுத்தத்தத்திலும் வினோத் காதலிக்கத் துவங்கும் காட்சிகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

அதுவும் “ஐயோ அது இல்ல.. லவ்வு” என்று காதலை சொல்லும் தருணங்களில் வெடிச்சிரிப்பு உறுதி 🙂 .

காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வதாக வைபவ் அடிக்கடி கூறி அது சொதப்பலில் தான் முடியும். எனவே, இவர் தற்கொலை செய்கிறேன் என்று கூறினாலே, நண்பர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

வைபவ் காதலிக்கும் பெண்ணாக மதுமிதா (பிரியா பவானி சங்கர்). செம்ம அழகு அதோட நம்மைக் கவரும் நடிப்பு.

ஒருதலை காதலில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் காதலிப்பது அடுத்தவருக்குத் தெரியாமலே சென்று விடுவது, இன்னொன்று தான் காதலித்து அடுத்தவர் காதலை மறுத்து விடுவது.

வைபவ் காதல் கிட்டத்தட்ட இரண்டிலும் வரும்.

மேயாத மான்

“மேயாத மான்” என்ற இசைக் குழுவை வைத்து நண்பன் திருமணத்தில் வைபவ் செய்வது செம்ம ரகளை. அதுவும் பெண் பாடகி “அம்மி அம்மி அம்மி மிதித்து” என்று ஆரம்பிக்கும் போது என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை 😀 .

ஒரு பெண் தெரியாமல் குளியறையில் வைபவை பூட்டி வைத்து விட இவர் உள்ளே இருந்து பேசுவது அட்டகாசம். செம்மையா எடுத்து இருக்காங்க.

நண்பன் என்பதற்கு வினோத் செம்ம பொருத்தம். வைபவ் “பார்ப்பதெல்லாம் அவ முகமாகத் தெரியுது, இந்த நிலாவில் கூட அவ முகம் தான் தெரிகிறது” என்று கூற, வினோத் நல்லா உத்துப் பார்த்து விட்டு கூறும் பதில் செம்ம 🙂 .

கலக்கிய சந்தோஷ் நாராயணன் & பிரதீப்

பாடலை முதல் முறையாகப் படம் பார்க்கும் போது தான் கேட்கிறேன். கேட்கும் போதே இசை சந்தோஷ் நாராயணன் மாதிரி இருக்கே என்று தேடினால் அவரே தான். அனைத்துப் பாடல்களும் அருமை. பிரதீப் என்பவரும் இசையில் இருக்கிறார்.

படத்தின் அனைத்துப் பாடல்களும் மான்டேஜ் பாடல்கள். அசத்தலோ அசத்தல். மிகச் சிறப்பாக ரசனையாக, கவிதையாகப் படமாக்கப்பட்டு இருக்கிறது. ஒளிப்பதிவாளருக்குச் சிறப்பு நன்றி.

என்னதான் இது இயக்குநர் திறமை என்றாலும் அதை அவர் நினைத்தபடி ஒளிப்பதிவாளர் கொண்டு வரவில்லை என்றால், இயக்குநரின் உழைப்புத் தெரியாது.

அந்த வகையில் இயக்குநரின் கற்பனைக்கு அசத்தல் வடிவம் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர். மிக அழகு.

நான் தற்போது YouTube ல் அடிக்கடி பார்க்கும் பாடல்களாக மேயாத மான் உள்ளது. ஒவ்வொன்றும் அவ்வளவு சிறப்பு, தனித்துவம்.

“ஏன்டி..ஏன்டி.. S மது” பாடலில் “என்னடா இது.. டாஸ்மாக் பாடலை தமிழ் படத்தில் நிறுத்தவே மாட்டார்களா!” என்று கடுப்பாக இருந்தது ஆனால், படமாக்கிய விதம் ரசிக்க வைத்தது.

இப்பாடலை பாடியவர்களில் ஒருவர் பெயரும் S மது 🙂 .

வட சென்னை பாடலை சந்தோஷ் நாராயணன் போல இதுவரை யாரும் கொடுத்தது இல்லை. மனுசன் பட்டையக் கிளப்புகிறார்.

“எங்க வீட்டு குத்து விளக்கு” கானா பாடல் பட்டாசு. அது என்னமோ எனக்கு வட சென்னை பாடல்கள் மீது ஒரு காதல் 🙂 . அதில் ஒரு உயிர்ப்பு இருப்பதாக என்னுடைய எண்ணம்.

இதில் வரும் மான்டேஜ் காட்சிகள் எல்லாம் அப்படி ஒரு இயல்பாக இருக்கும்.

“என் தங்கச்சி” பாடலும் இதே போல.. செம்ம செம்ம. படத்தில் மான்டேஜ் பாடல்களைச் சரவெடியாக எடுத்து இருக்கிறார்கள்.

வைபவ் தங்கச்சியாக வரும் பெண் அறிமுகம் போல. வழக்கமான ஒரு நபரை தேர்வு செய்யாமல் இவரைத் தேர்வு செய்தது சிறப்பு. இவரும் அசத்தலாக நடித்து இருக்கிறார்.

சர்ச்சைக் காட்சி

படத்தின் சர்ச்சையான காட்சியைத் தவிர்த்து இருக்கலாம். இது போல இல்லாமல் காட்சி அமைத்து இருக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கும் போது இது தேவையில்லை.

நம்ம ஆளுங்க அசத்தலாக இருக்கும் 90% படத்தை விட்டுட்டு 10% இதைப் பிடித்துக்கொண்டார்கள். இதை மாற்றி இருந்தால், அனைவரையும் கவர்ந்து இருக்கும்.

ப்ரியா பவானி சங்கர் அசத்தலான அறிமுகம். மிகை நடிப்பில்லாமல் ரொம்ப அழகாக நடித்துள்ளார், இவருக்கு நடிக்கவும் வாய்ப்பு. மான்டேஜ் காட்சிகளில் கலக்கலாக இருக்கிறார்.

பணக்கார வீட்டுப்பெண் வைபவை காதலிப்பது நெருடலாக இருந்தாலும், அதை ஓரளவுக்கு காட்சிகள் மூலம் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்து இருக்கிறார்கள்.

நான் சிங்கப்பூரில் இருந்த போது அலுவலக நண்பன் பாபு கூடத் தான் சென்று படங்கள் பார்ப்பேன். எங்கள் இருவருக்கும் பட ரசனையில் மிக ஒற்றுமை. இது போல எதிர்பாராமல் பார்த்து இருவரும் மிக ரசித்த படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”.

இப்படம் பாபு இல்லையே என்று ரொம்ப வருத்தப்பட்டேன். இருவரும் பார்த்து இருந்தால், இன்னும் கூடுதலாக ரசித்து இருப்பேன். இப்படமெல்லாம் நண்பர்களோடு கும்பலாகப் பார்த்தால் செம்ம ரகளையாக இருக்கும். சிரித்துக்கொண்டே இருக்கலாம்.

இது வரை நான் மூன்று முறை இப்படத்தைப் பார்த்து விட்டேன். நல்ல பொழுதுப்போக்குப் படத்தைக் கொடுத்த இயக்குநர் ரத்ன குமாருக்கு நன்றி 🙂 .

Directed by Rathna Kumar
Produced by Kaarthekeyen Santhanam
Starring Vaibhav Reddy, Priya Bhavani Shankar
Music by Santhosh Narayanan, Pradeep
Cinematography Vidhu Ayanna
Edited by Shafiq Muhammed Ali
Production company Stone Bench Creations
Release date 18 October 2017
Country India
Language Tamil

{ 4 comments… add one }
 • GMR December 26, 2017, 8:58 AM

  Hi Giri
  Music director name is Santhosh Narayanan and not sivan as mentioned
  Your writeup is good
  Thanks

 • Prabhu Kalidas December 29, 2017, 5:35 AM

  ஒரு அரை மொக்கை படத்துக்கு இவ்வளவு பாராட்டு மழையா

  fபன்னி கைஸ்

 • Mohamed Yasin December 30, 2017, 1:15 PM

  கிரி, படம் இன்னும் பார்க்க வில்லை. ஆனால் உங்க விமர்சனம் பட்டைய கிளப்புது. படத்தோட தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. (நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!) : தற்போது தான் படித்தேன். லவ் டுடே விஜய்யை நினைவில் கொண்டேன்.. மிகவும் சுவாரசியமாக இருந்தது.. பழைய நினைவுகளை அசைபோடுவது என்றுமே இனிமையான ஒன்று.. பகிர்வுக்கு நன்றி கிரி.

 • கிரி January 18, 2018, 4:57 AM

  @GMR நன்றி மாற்றி விட்டேன். சந்தோஷ் நாராயணன் என்று தெரியும் எழுதும் போது எப்படியோ மாறி விட்டது.

  @பிரபு காளிதாஸ் உங்களுக்கு ரொம்ப பிடித்த படம் கூட எனக்கு சூர மொக்கையாக தோன்ற வாய்ப்புள்ளது. இதெல்லாம் ஒவ்வொருவர் தனிப்பட்ட விருப்பம் / ரசனை.

  @யாசின் 🙂

Leave a Comment