நாய்ச்சண்டை “இது எங்க ஏரியா.. உள்ளே வராதே!”

MRTS Station

யில்நிலையத்தில் பார்த்த ஒரு நாய்ச்சண்டை ஒரு குறும்படம் பார்த்த மாதிரி இருந்தது 🙂 .

MRTS ரயில் நிலையம் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்து இருக்கும் அங்கு இருக்கும் நாய்களின் எண்ணிக்கையும் அதன் சண்டைகளும் மற்றும் தணிக்கை 🙂 நடவடிக்கைகளும்.

வழக்கம் போல அலுவலகம் செல்ல MRTS ரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.

ஒரு கருப்பு வெள்ளை நாய் ஒன்று எங்கள் நடைமேடையில் நடந்து வந்துகொண்டு இருக்க, அங்கே வந்த கொஞ்சம் பலமான செம்மி வண்ண நாய் இதைப் பார்த்துக் குரைத்தது.

கருப்பு வெள்ளை நாய் பார்க்க சாதுவாக இருந்ததால், எதிர்ப்புக் காட்டாமல் அமைதியாக ஒதுங்கிச் சென்றது.

இதைத் தனக்குச் சாதகமாக நினைத்ததோ என்னவோ கருப்பு வெள்ளை நாயை கடிக்கப் பாய்ந்தது. அதன் அருகே இருந்த ரயில்வே காவலர் (நம்ம ஊர்க்காரர்) லத்தியில் கீழே தட்டி அதட்ட செம்மி நாய் பின்வாங்கியது.

இதைப் பயன்படுத்திக் கருப்பு வெள்ளை நாய் வேகமாக நடைமேடையின் இறுதிக்கு சென்று கீழே இறங்கி தண்டவாளத்தைக் கடந்து அந்தப்பக்கம் உள்ள நடைமேடையில் ஏறிக்கொண்டது.

இதை நிலையத்தில் உள்ள அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்தச் செம்மி நாயும் அதே போல இறங்கி அடுத்த நடைமேடையில் ஏறி வேகமாகச் சென்று அந்த நாயை புரட்டி எடுத்து விட்டது, பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அங்கே இருந்த ஒருவர் சண்டையை விலக்க முயற்சித்தாலும், தன்னைக் கடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தள்ளியே இருந்தார்.

இறுதியில் கருப்பு வெள்ளை நாய் வலி தாங்காமல் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டது. அங்கே பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் அனைவர் முகத்திலும் பரிதாபம்.

நொண்டிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து செல்ல, ரயில் வந்து கொண்டு இருந்ததைப் பார்த்ததும், எனக்கு இதயத் துடிப்பு அதிகமாகி விட்டது. தள்ளி செல்லாமல், தண்டவாளத்தின் நடுவிலே சென்று கொண்டு இருக்கிறது.

அவசரத்தில் கையை விட்டால், அண்டாக்குள்ள கூடப் போகாது என்பது போல, பின்னர் தான் தெரிந்தது வந்த ரயில் பக்கத்துத் தண்டவாளத்தில் செல்கிறது என்று 🙂 .

தினமும் தான் பார்க்கிறேன் என்றாலும் பதட்டத்தில் வழக்கமாக எந்த நடைமேடையில் ரயில் வரும் என்று கூடக் குழம்பி விட்டது.

பின்னர் அந்தக் கருப்பு வெள்ளை நாய் நொண்டி கொண்டே இறுதிக்கு வந்து எங்கள் பகுதி நடைமேடையில் ஏறி இந்தப்பக்கம் வந்து விட்டது.

இதை அந்தப்பக்கம் இந்தச் செம்மி நாய்ப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பின் என்ன நினைத்ததோ வேகமாகப் பயணிகள் படிக்கட்டில் கீழே இறங்கிச் சென்றது.

(இந்த MRTS மாடி ரயில் நிலையம், தரை தளமல்ல).

நான் கூடச் சரி விட்டு விட்டது போல என்று நினைத்தால், படிக்கட்டில் இறங்கி கீழே சென்று இந்தப்பக்கம் படிக்கட்டில் ஏறி எங்கள் பக்கம் வருகிறது. மூளைக்கார நாய்!

என்னடா இது! விடாது கருப்பு போல இப்படி இந்த அப்பாவி நாயை இம்சிக்கிறதே!” என்று அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் கலக்கமாகி விட்டது.

இந்த நாய் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி கருப்பு வெள்ளை நாய் நடையை வேகமாக்கியது.

அங்கே வழக்கமாக நிற்கும் கல்லூரி மாணவ மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள் அனைவரும் “ஐயோ பாவம்” என்று பார்க்க, கருப்பு வெள்ளை நாயை நோக்கி செம்மி நாய் நகர்ந்தது.

இந்த நேரத்தில் இன்னொரு ரயில் வந்து கொண்டு இருக்கிறது.

எங்களைப் போலவே செய்வதறியாது நின்று கொண்டு இருந்த ரயில்வே காவலர் தன் அருகே செம்மி நாய் வரும்வரை பொறுமையாக இருந்து, அருகில் வந்தவுடன் லத்தியில் ஒன்னு இழுத்தாரு பாருங்க, ஒரே கத்தாகக் கத்திக்கொண்டு கீழே ஓட்டமெடுத்து விட்டது 🙂 .

இதைப் பார்த்த அங்கு இருந்த அனைவர் முகத்திலும் அப்பாடா! என்ற ஒரு நிம்மதி, திருப்தி. எனக்கும் 🙂 . எளியோரை வலியோர் வருத்தினால், அந்த வலியோரை வருத்த இன்னொரு வலியோர் வருவர் என்பது உண்மையோ!

அப்போது தான் வந்த ரயிலில் இருந்தவர்கள் காவலர் நாயை அடிப்பதைப் பார்த்து, “சும்மா போற நாயை இரக்கமில்லாமல் அடிக்கிறாரே!” என்று நினைத்து இருப்பார்கள் ஆனால், அங்கே இருந்த எங்களுக்கு மட்டுமே என்ன நடந்தது என்று தெரியும்.

இத்தனையும் 6 நிமிடங்களில் நடந்தது. எனக்கு ஒரு குறும்படம் பார்த்து முடித்த உணர்வு.

படம் இன்னும் முடியவில்லை….

அடுத்த நாள் காலை வழக்கம் போல ரயில் நிலையம் வருகிறேன், அதே செம்மி நாய் “நேற்று நடந்ததுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை” என்பது போல வாலை சுருட்டி தலையைப் புதைத்து அமைதியாகப் படுத்துக்கொண்டு இருந்தது 🙂 .

ஒருவேளை “இது எங்க ஏரியா.. உள்ளே வராதே!” என்று செம்மி நாய் நினைத்து இருக்குமோ! 🙂

{ 2 comments… add one }
  • Mohamed Yasin December 7, 2017, 1:07 PM

    இந்த மாதிரி நேரடி சண்டைகளை சின்ன வயதில் பார்த்ததுண்டு. சில நாய் சண்டைகளுக்கு நாமே நடுவராகவும் இருந்ததுண்டு. தற்போது நினைத்தால் பிரமிப்பாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. நாய்கள் மீது உங்களுக்கு அதிக அளவில் ஆர்வம் இருப்பதால், இந்த நேரடி சன்டையை மிகுந்த ஆர்வமாக பார்த்துஇருப்பீர்கள் என நம்புகிறேன். ஆர்வம் இல்லாதவர்கள் கடந்து சென்று இருப்பார்கள்.

    அடுத்த நாள் காலை – சம்பவம் செம்ம ட்விஸ்ட்… பகிர்வுக்கு நன்றி கிரி.

  • கிரி December 20, 2017, 12:03 PM

    “நாய்கள் மீது உங்களுக்கு அதிக அளவில் ஆர்வம் இருப்பதால், இந்த நேரடி சன்டையை மிகுந்த ஆர்வமாக பார்த்துஇருப்பீர்கள் என நம்புகிறேன். ஆர்வம் இல்லாதவர்கள் கடந்து சென்று இருப்பார்கள்.”

    இருக்கலாம் 🙂 ஆனால் மற்றவர்களும் பார்த்ததாகத் தான் தோன்றியது.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz