நடிகர் திலகத்துடன் ஒரு நிழற்படம் :-)

Actor Sivaji Ganesan

சில சம்பவங்கள் நாம் எதிர்பார்த்தும் நடக்காது, சில எந்த முயற்சியும் இல்லாமல் தானாகவே நடக்கும். அது போல ஒன்று தான் நடிகர் திலகம் அவர்களைச் சந்தித்ததும்.

திரைப்படப் படப்பிடிப்புகளின் மையமாகக் கோபி இருந்த போது, படப்பிடிப்புக்கு தவிர்க்க முடியாத ஒரு மாளிகை “CKS பங்களா” .

சின்னத்தம்பி, நாட்டாமை போன்ற பிரபலமான படங்களில் வரும் வீடு இதுவே. இங்கே வராத மூன்று பிரபலங்கள் எம்ஜிஆர், ரஜினி & கமல்.

நடிகர் திலகம்

நடிகர் திலகம் அவர்கள் இங்குப் படப்பிடிப்புக்கு வந்து போது, அவரைக் காண எங்கள் உறவினரின் முயற்சியில் சென்றோம். அப்போது அவர் காங்கிரஸில் இருந்ததாக நினைவு.

எனவே, காங் பிரமுகர் மூலம் என் அப்பா முயற்சித்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். என்ன திரைப்படப் படப்பிடிப்பு என்று நினைவில்லை, உடன் ராதாவும் இருந்ததாக நினைவு. “ஜல்லிக்கட்டு” படமாக இருக்குமோ!

அங்கு நடிகர் திலகத்துடன் எடுத்த நிழற்படத்தை அப்போது அந்த நிழற்படத்தின் மதிப்புத் தெரியாமல் எப்படியோ தவறவிட்டு இருந்தேன். அதை “கூகுள் ஃபோட்டோஸ்” பற்றி எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டு வருத்தப்பட்டு இருந்தேன்.

Readகூகுள் ஃபோட்டோஸ் தரும் அசத்தல் இலவச சேவைகள்

நாம் ஒன்றை தொலைத்து விட்டால், அது குறித்துச் சிந்தித்துக் கொண்டே இருந்து, நெருக்கமானவர்களிடம் பேசும் போது எதோ ஒரு வகையில் நமக்கு அது திரும்பக் கிடைத்து விடுகிறது அல்லது சுத்தம் செய்யும் போது எப்படியோ கண்ணில் பட்டு விடும்.

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய அண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்த போது “சிவாஜியுடன் எடுத்த படத்தைத் தொலைத்து விட்டேன்” என்று கூறிக்கொண்டு இருந்தேன்.

உடனே அவர் “அந்தப்படம் எங்கிட்ட தான் இருக்கிறது!” என்று அடுத்த முறை தேடி எடுத்து வைக்கிறேன் என்று கூறினார்.

சொன்ன மாதிரியே கடந்த முறை ஊருக்குச் செல்லும் போது எடுத்து வைத்து இருந்தார். என்னால் நம்பவே முடியவில்லை, கிடைத்ததை 🙂 .

எனக்கு நடிகர் திலகம் என்றால், நினைவுக்கு வரும் ரசிகர் சிங்கப்பூரில் இருந்த போது வலைப்பதிவராக அறிமுகமான நண்பர் ஜோ மில்டன். இவர் அதி தீவிர கமல் ரசிகர் நான் அதி தீவிர ரஜினி ரசிகன் 🙂 .

இரண்டு பேரும் கட்டுரைகளில் செம்ம விவாதம், சண்டையெல்லாம் போட்டு இருக்கிறோம் ஆனால், வரம்பு மீறியதில்லை. பின்னர் தான் இவர் கமல் ரசிகர் மட்டுமல்ல அதை விடத் தீவிரமான நடிகர் திலகம் ரசிகர் என்று தெரியவந்தது.

இவரை வம்பு இழுக்கவோ என்னவோ நடிகர் திலகத்தின் நடிப்பு மிகை நடிப்பு என்று எவராவது கட்டுரை எழுதி வைத்து இருப்பார்கள். செம்ம விவாதமாக இருக்கும்.

அதில் தன்னுடைய வாதத்தைச் சலிக்காமல் எடுத்து வைப்பார். மிகுந்த கோபக்காரர் 🙂 .

இவ்வளவு தீவிர ரசிகரான ஜோ, நடிகர் திலகத்துடன் நிழற்படம் எடுத்துக்கொள்ள வாய்ப்புக் கிடைத்ததா என்று தெரியவில்லை ஆனால், எனக்குச் சம்பந்தமே இல்லாமல் கிடைத்து விட்டது.

ஏனென்றால், என் அப்பா தான் விருப்பப்பட்டு அழைத்துச் சென்று இருந்தார். நான் சும்மா உடன் சென்று இருந்தேன். என்னுடைய அப்பா அப்போது காங்கிரஸில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.

அப்போது மின்னணு நிழற்படம் கிடையாது, Negative Roll மட்டும் உண்டு. எனவே, ஒரு முறை எடுத்தால், அதைச் சரி பார்க்க எல்லாம் முடியாது.

நடிகர் திலகம் கண்களை மூடும் போது நிழற்படம் எடுக்கப்பட்டு விட்டது, அது Print போட்ட பிறகே தெரிந்தது. இப்படத்தில் என் அருகே இருப்பது என்னுடைய அப்பா.

எனக்குக் கிடைத்த வாய்ப்பு ஒரு அதி தீவிர நடிகர் திலகம் ரசிகருக்கு கிடைத்து இருந்தால், ரொம்பச் சிறப்பாக இருந்து இருக்கும் என்று நினைத்தேன். அப்போதல்ல, தற்போது. அப்போது இதை யோசிக்கும் அளவுக்கு வயதில்லை.

Sivaji Ganesan

ராஜிவ் காந்தி

இன்னொரு பிரபலத்துடன் இதே போலச் சின்னப் பையனாக இருக்கும் போது நிழற்படம் எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது மறைந்த ராஜிவ் காந்தி அவர்கள்.

ராஜிவ் காந்தி அவர்கள் எங்கள் கோபிக்குப் பிரச்சாரத்திற்கு வந்து இருந்தார். அப்போது என் அப்பா காங் பிரமுகர் என்பதால், பலரில் ஒருவனாக அவருக்குப் பொன்னாடை அணிவித்தேன்.

அப்போது நிழற்படம் எடுக்கப்பட்டது ஆனால், அது என்ன ஆனது என்று தெரியவில்லை. அது கிடைக்கும் என்று நம்பிக்கையுமில்லை.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னோட அப்பா “லேம்ப்ரெட்டா” ஸ்கூட்டரை பேய் வேகத்தில் ஓட்டி வந்தார். என் அப்பா இவ்வளோ வேகமாக ஓட்டி வந்தது அன்று ஒரு நாள் மட்டுமே! 🙂

ரஜினி

நான் எந்தப் பிரபலத்துடனும் நிழற்படம் எடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டதில்லை. ஆனால், தானாக அமைந்து விடுகிறது.

ரஜினி ரசிகனான எனக்குப் பெரியளவில் முயற்சி எடுக்காமல் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு சில மாதங்களுக்கு முன்பு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த போது தலைவருடன் படம் எடுக்க வாய்ப்புக் கிடைத்தது.

அப்போதும், என்னை விட தகுதியான ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவருக்குக் கிடைத்து இருக்கலாம் என்று தான் நினைத்தேன்.

நானெல்லாம் சும்மா எதோ இணையத்தில் எழுதிட்டு இருக்கேன். மற்ற வெறித்தனமான ரஜினி ரசிகர்களை ஒப்பிடும் போது நான் ஒன்றுமே இல்லை. எனக்கு வாய்ப்புக் கிடைத்த போது கொஞ்சம் குற்ற உணர்வாகக் கூட இருந்தது.

தலைவரிடம் கூட நிழற்படம் எடுக்க வேண்டும் என்பது என் விருப்பமல்ல, அவரிடம் இரண்டு கேள்விகளாவது கேட்டு “கிரி Blog Excluisve” என்று போட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய பல வருட விருப்பம் 🙂 .

எப்போதும் போல அவசரப்படவில்லை ஏனென்றால், நிச்சயம் இது நடக்கும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரியும். Confidence 🙂 .

{ 3 comments… add one }
 • Logan November 29, 2017, 2:48 PM

  வாழ்த்துக்கள் கிரி

 • Mohamed Yasin December 6, 2017, 7:38 AM

  கிரி, ரொம்ப அமைதியா சாந்தமா நிக்கறீங்க!!! ஹி, ஹி, ஹி… பழைய புகைப்படங்களை பார்ப்பதில் உள்ள சுகமே, சுகம். கைபேசியில் கூட புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இல்லாதவன் நான். ஆனால் வீட்டில் இருக்கிற பழைய புகைப்படம், பழைய பள்ளி நோட்டு, புத்தகங்கள், பழைய சிறு குறிப்பு எழுதிய தாள்கள், பேருந்து கட்டண ரசீதுகள்… etc …

  இவைகள் எல்லாவற்றையும் தூக்கி போடாமல் ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை எடுத்து அனைத்தையும் எடுத்து பார்த்து, பழைய நினைவுகளை அசைபோட்ட பின் எடுத்து வைத்துவிடுவேன்.. எனக்கு மிகவும் பிடித்த இந்த பழக்கம், என் மனைவிக்கு சுத்தமாக பிடிக்காது..

  இந்த குப்பைகளை எப்ப தான் தூக்கி போடுவீங்களோனு, வசனம் வேற!!! என்ன சொல்லி புரிய வைக்க முடியும், அவைகள் குப்பைகள் அல்ல, என்றுமே மங்காத அழகான நினைவுகள் என்று!!! எந்த பிரபலத்துடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் இல்லை “ராகுல் திராவிடை” தவிர்த்து!!! உங்களோட same formula தான் அவரசம் இல்லை …I am waiting … பகிர்வுக்கு நன்றி கிரி.

 • கிரி December 20, 2017, 12:01 PM

  @லோகன் நன்றி

  @யாசின் என்னிடமும் இது போல சில இருக்கிறது. எப்பவாது எடுத்துக் பார்க்க தோன்றும். பார்த்துட்டு அப்படியே வைத்து விடுவேன்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz