அவள் [2017] மிரட்டல்

Aval Tamil Movie Review

சித்தார்த் வீடு அருகே அதுல்குல்கர்னி குடும்பம் குடி வருகிறார்கள். இவருடைய பெண் ஜென்னி (அனிஷா) க்கு அனுமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறுகிறது. தற்கொலைக்கும் முயல்கிறார்.

மருத்துவரான சித்தார்த் அவர்களுக்கு உதவுகிறார். பின்னர் மனநல மருத்துவரான சுரேஷை அணுகுகிறார்கள்.

பின்னர் என்ன நடக்கிறது. எதனால் ஜென்னிக்கு இது போல நடக்கிறது? அதன் பின்னணி என்ன? என்று அறிய முற்படுகிறார்கள்.

இறுதியில் என்ன ஆகிறது? இதுவே படத்தின் கதை.

படம் வழக்கமான ஒரு பேய் படம் ஆனால், அதைச் சமரசம் இல்லாமல் கொடுத்ததில் தான் பார்வையாளர்களைக் கவர்ந்து இருக்கின்றனர்.

பேய் படத்துக்கு என்று இருக்கும் தனித்தன்மையைக் கெடுக்காமல் எடுத்து இருக்கிறார்கள்.

சித்தார்த் கூறியிருந்தார்..

நாங்கள் மணிரத்னம் பள்ளியில் வந்தவர்கள் (இவர் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றார்) எனவே, மோசமான இயக்கத்தில் படம் கொடுத்து விட மாட்டோம், நானும் இயக்குநர் Milind Rau வும் இணைந்து நான்கு வருடங்களாக மெருகேற்றி உருவாக்கிய கதை” என்று.

இவர்கள் கதைப்படி கூறுவதென்றால், அது உண்மை தான் என்று தோன்றுகிறது. கதையைக் குறை கூற பெரியளவில் வாய்ப்பில்லை.

சில கேள்விகளுக்கு நமக்குப் பதில் கிடைக்கிறது, இருப்பினும் சில கேள்விகள் பதில் இல்லாமலே முடிகின்றன.

Aval Tamil film

அதுல்குல்கர்னி பெண்ணாக வரும் ஜென்னி (அனிஷா) பேய் நடிப்பில் அசத்தி இருக்கிறார். படத்தில் சிறப்பான நடிப்பு இவரே! வேறு யாரும் நெருங்க முடியவில்லை.

எதோ விளையாட்டு பெண்ணாகத் தோன்றுபவர், நம்மை மிரட்டும் காட்சிகளில் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

மனநல மருத்துவரான சுரேஷ் பிரச்னையைக் கண்டறிய முயலும் ஆர்வம், அதற்காக விவரங்களைத் திரட்டுவது என்று தன்னுடைய கதாப்பாத்திரத்தை நிறைவாகச் செய்து இருக்கிறார்.

தலையில் அறுவை சிகிச்சை செய்யும் நிபுணராக வரும் சித்தார்த் நடிப்பில் என்னை அவ்வளவாகக் கவரவில்லை, வழக்கமான நடிப்பு.

சித்தார்த்க்கு 40 வயது ஆகிறது ஆனால், இன்னும் கல்லூரி மாணவன் போல இருப்பார். இது இந்தப்படத்தின் கதைக்கு லாபம் ஆனால், இதுவே மற்ற படங்களுக்குப் பிரச்சனையாக உள்ளது.

சின்னப் பையன் போல உள்ளதால், பல கதாப்பாத்திரங்களில் பொருத்தமில்லாததாகச் சென்று விடுகிறது. முகம் முதிர்ச்சியை காட்டததால், பாதிக்கப்படும் நடிகராக இவர் இருக்கிறார். பாவம், புது மாதிரியான பிரச்சனை 🙂 .

இவரின் மனைவியாக வரும் ஆண்ட்ரியா க்கு நடிக்கப் பெரியளவில் வாய்ப்புகள் இல்லை ஆனால், ஒரு மனைவியாகக் கவர்ந்து இருக்கிறார்.

படத்தின் கதை இமயமலை அடிவாரத்தில் நடப்பதாக வருகிறது. இதற்காக இந்தி வசனங்களை வைத்து நம்மைச் சோதிக்காமல் அனைவரும் தமிழ் பேசுபவர்களாகவே காட்டுவதால், கதையோடு ஒன்ற முடிகிறது.

சில கதாப்பாத்திரங்களே இருப்பதால், அனைவரும் தமிழ் பேசுவது உறுத்தலாகவும் இல்லை.

படத்தின் இசை வழக்கமான பேய் படங்களுக்கே உண்டான இசை. தனித்தன்மை என்று எதுவுமில்லை, புதுமையாக எதையாவது முயற்சித்து இருக்கலாம்.

படத்தில் நகைச்சுவை காட்சிகள் எதுவுமில்லை என்று சித்தார்த் கூறியிருந்தார் ஆனால், சில புன்முறுவல் காட்சிகள் வைத்து படத்தின் இயல்பை அழிக்காமல் இருந்து இருக்கிறார்.

படத்தில் முத்தக்காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் உள்ளது. படம் பேய் க்காக மட்டுமே A கொடுக்கப்படவில்லை. முத்த காட்சிகள் திணிக்கப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

படத்தைத் திரையரங்கில் பாருங்கள். பார்வையாளர்கள் தாங்கள் பயந்த காட்சிகளுக்குக் கை தட்டினார்கள்.

கர்ப்பினி பெண்கள் அவசியம் படத்தைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவர்களின் மனதை பாதிக்கும் காட்சிகள் உள்ளது.

இது போலப் பேய் படங்களில் பார்வையாளர்கள் பக்கம் இருந்து கிண்டல்கள் வரும், இதிலும் வந்தது ஆனால், ரொம்பக் கடுப்படிக்கவில்லை.

தயவு செய்து படம் பார்ப்பவர்கள் அமைதியாகப் பார்த்து நீங்களும் ரசித்துப் படம் பார்ப்பவர்களையும் ரசிக்க விடுங்கள்.

இழைத்து இழைத்துச் செதுக்கப்பட்ட கதை என்று சித்தார்த் கூறியிருந்தார். வேறு படங்களில் இருந்து சுட்டு இருக்க மாட்டார் என்று நம்புவோமாக 🙂 .

தயாரிப்பாளராக, கதாசிரியராக வெற்றி பெற்ற சித்தார்த்க்கு வாழ்த்துகள்.

எனக்குத் தமிழில் பிடித்த மூன்று பேய் படங்கள் “யாவரும் நலம்“, “ஈரம்” மற்றும் “டிமான்ட்டி காலனி“. தற்போது அவள் படமும்.

{ 4 comments… add one }
 • Srinivasan Uppili November 14, 2017, 1:09 AM

  Heavily inspired by The Conjuring and The Conjuring 2 என்று எனக்குத் தோன்றியது. எனினும் தமிழில் இது வரவேற்கத் தகுந்த முயற்சி தான்…

 • Mohamed Yasin November 18, 2017, 5:43 AM

  சித்தார்த் படம் எதனையும் இதுவரை பார்த்ததில்லை.. பாய்ஸ் படத்தை தவிர்த்து.. எனக்கும் அவர்க்கும் என்ன???? பூர்வஜென்ம பகை என்னவென்று தெரியவில்லை.. இந்த படத்தை பார்க்கும் ஆர்வமும் இல்லை. பகிர்வுக்கு நன்றி கிரி.

 • Rajkumar November 19, 2017, 8:31 AM

  ezra (மலையாளம்) படத்தை முன்னமே பார்த்துவிட்டதால் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எனக்கு பிடிக்கவில்லை.. (எஸ்ராவின் தழுவல்ன்னு கூட சொல்லலாம்)

 • கிரி November 29, 2017, 4:02 AM

  @ஸ்ரீநிவாசன் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு படங்களுமே இன்னும் பார்க்கவில்லை, பார்க்க வேண்டிய அவசரப்படாத பட்டியலில் உள்ளது.

  எனக்கு பேய் படங்களில் ஆர்வமில்லை, ஹாரர் படங்கள் தான் 🙂 .

  @யாசின் என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க 🙂

  @ராஜ்குமார் இப்படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz