நமக்கு வேற என்ன தம்பி குறை இருக்கு..!

Think_POSITIVE

ம்மாக்கு கடந்த சில வருடங்களாகச் சீரடி சாய்பாபா மீதான நம்பிக்கை அதிகமாகி விட்டது. அம்மாக்கு மட்டுமல்ல தமிழகத்தில் சாய் பாபாக்கான பக்தர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கோபியில் கூட இரு கோவில்கள் வந்து விட்டன.

தற்போதுள்ள திருட்டுச் சாமியார்களைத் தான் எனக்குப் பிடிக்காது, இவர் பிரச்சனையில்லை.

எனக்குப் பிடித்த ஆன்மீகவாதி வேதாத்ரி மகரிஷி மட்டுமே! நல்லவேளையாகத் தற்போதுள்ள ஆன்மீகவாதிகளின்!! கொடுமையை எல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்து விட்டார்.

அம்மா ஏதாவது பிரச்சனை என்றால், சாய்பாபாவிடம் வேண்டிக் கொண்டு இருப்பார்கள்.

சாய்பாபா பாவம் அவரும் எத்தனை பிரச்சனைகளைத் தான் பார்ப்பார்” என்று நானும் கிண்டல் பண்ணிட்டு இருப்பேன். Attack Baba என்று கிண்டல் செய்வேன் 🙂 .

சில சம்பவங்கள்

மூன்று வருடங்களுக்கு முன்பு என்னோட பையன் யுவன் எழுந்து நடக்காமல் தவழ்ந்து கொண்டே இருந்தான். அம்மா இவனுக்காகச் சச்சரிதம் ஒரு வாரம் படிக்க ஆரம்பித்தார்கள், மூன்று நாட்களிலேயே நடக்க ஆரம்பித்து விட்டான்.

நாம தான் பெரிய புடுங்கி ஆச்சே! சரி இது எதேச்சையாக நடந்து இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இருப்பினும் முழுமையாக நினைக்கவில்லை, ஏனென்றால், நமக்கும் மேல எதோ ஒரு சக்தி உள்ளது என்பதை முழுமையாக நம்புவன்.

எனவே, எதற்கும் எழுதி வைப்போம் என்று என்னுடைய தளத்தில் எழுதினேன். இதைப் படித்த நண்பர் ஒருவர் அவருடைய குழந்தை பிரச்சனைக்காக முயல்கிறேன் என்று கூறினார்.

சரி என்று அவருக்குச் சச்சரிதம் புத்தகம் வாங்கிக்கொடுத்தேன், அப்போது சிங்கப்பூரில் இருந்தேன். தற்போது லிட்டில் இந்தியாவிலேயே புத்தகம் கிடைக்கிறது.

வியாழன் காலை ஆரம்பித்து அடுத்தப் புதன் இரவுக்குள் படித்து முடிக்க வேண்டும்.

அவரும் அவர் குழந்தை பிரச்சனை சரியாகி விட்டது என்று கூறினார். சரி நம்ம தான் கொஞ்சம் சந்தேகப்பட்டு விட்டோமோ என்று நினைத்துக்கொண்டேன்.

இருப்பினும் நாம கூறி ஒருத்தர் பிரச்சனை சரியானால் மகிழ்ச்சி தானே!

பின் அதில் இருந்து யாராவது என்னிடம் பிரச்சனை என்று கூறினால், இதை முயற்சித்துப் பாருங்கள் என்று கூறுவேன். இதனால் லாபம் இருக்கோ இல்லையோ நட்டமில்லை.

அம்மாவும் தொடர்ச்சியாகச் சாய்பாபாவை வேண்டிக்கொண்டு இருப்பார்.

நானும் அம்மாவிடம், “அம்மா வணங்குவது வேறு.. சின்னப் பிரச்சனைகளைக் கூடப் பெரியதாக நினைத்து அதைக் கடவுள் சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. வேண்டுதல்களாக இருந்தாலும், அதிலும் ஒரு நியாயம் வேண்டும்” என்று கூறுவேன்.

அனைத்துப் பிரச்சனைகளையும் கடவுளே பார்த்து சரி செய்து கொடுக்க வேண்டும் என்றால், நாம எதுக்கு இருக்கிறோம்?!

நான் எப்போதுமே நேர்மறை எண்ணங்களைக் கொண்டு இருப்பவன். எதிர்மறை எண்ணங்களை அருகிலேயே சேர்க்க கூடாது என்று விரும்புகிறவன்.

ஏனென்றால், இவை நம்மைச் சோர்வடையச் செய்து விடும். மிக முக்கியமாக, நம்பிக்கை இழக்க செய்து விடும். இது மிகப்பெரிய ஆபத்து.

நேர்மறையாகச் சிந்திப்பதால் கிடைக்கும் பலன்கள்

Think POSITIVE

நேர்மறையாக நான் சிந்திக்க ஆரம்பித்த பிறகு எனக்கு நன்மைகளே நடந்து வருகின்றன. எனவே, இதன் மீதான என்னுடைய எண்ணங்கள் தீவிரமடைந்து விட்டன.

என்ன நடந்து விடப்போகிறது? பார்த்துக்கலாம்” என்று நினைப்பது கூடுதல் மன பலம்.

நாம யாரையும் ஏமாற்றல, கெடுக்கல அப்படி இருக்கும் போது நமக்கு எந்தக் கெடுதலும் நடந்து விடாது என்று முழுமையாக நம்புகிறேன்.

மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை.

சிரமங்கள் ஏற்பட்டாலும், ஏதாவது ஒரு காரணம் இருக்கும், பின்னர் நமக்குத் தெரிய வரும் என்று நினைப்பேன். என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன். அதே போல நான் நினைத்த மாதிரி அச்சம்பவத்தால் நன்மையும் ஏற்பட்டதுண்டு.

இன்னொரு வார்த்தையில் கூறுவதென்றால், பெரியளவில் பிரச்சனைகள் என்னை அணுகவில்லை.

அலுவலகத்தில் பிரச்சனைகள் வந்தாலும், பதட்டப்படாமல்… அதுவே சரியாகி விடும், பெரியளவில் எந்தப் பிரச்சனையும் நடக்காது என்று நம்புகிறேன்.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ.. சமீபத்தில் கூட ஒரு நெருக்கடி வந்தது ஆனால், அவைகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போனது.

இதனால் தேவையற்ற பயத்தால் ஏற்படும் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது.

எப்படி இருக்கீங்க?

ஒரு மாதத்துக்கு முன் என் சக அலுவலக ஊழியருடன் பேசிக்கொண்டு இருந்த போது “எப்படி இருக்கீங்க கிரி” என்றார். “சூப்பரா இருக்கேங்க” என்றேன்.

உடனே அவர் “கிரி! நீங்க எப்போதுமே நல்லா இல்லைனு சொன்னதே இல்லைல.. உங்க கிட்ட பேசும் போது இதைக் கேட்டால் உற்சாகமா இருக்கிறது” என்றார்.

ஏனென்றால், பெரும்பாலானவர்களிடம் கேட்டால், “எதோ போகுதுங்க.. சுமாரா இருக்கு.. என்னமோ ஓடுதுங்க ” என்று தான் கூறுவார்கள்.

இவர் எனக்கு 15 வருடப் பழக்கம். எனக்கே அப்போது தான் தோன்றியது “அட! நாம அப்ப இருந்தே இப்படித்தான் பேசிட்டு இருந்து இருக்கோம்” என்று .

அப்போது நேர்மறையாக இருக்க, போலியாக இருக்க முயற்சித்தேன். அதாவது வார்த்தைகளில் மட்டுமே நேர்மறை எண்ணங்கள் இருந்தன.

தற்போது இரு வருடங்களாக எண்ணங்களிலும் சேர்த்துக்கொண்ட பிறகு பல நல்லவைகள் நடக்க ஆரம்பித்து விட்டன அல்லது தீமைகள் குறைந்து விட்டன.

பழைய சம்பவங்களால் ஏற்பட்ட இழப்புகள் நினைவுக்கு வரும் போது, “இது தெரியாம நாம் பல வருடங்களை வீணடித்து விட்டோமே” என்று அவ்வப்போது எண்ணங்கள் வந்து போகும்.

நமக்கு என்னம்மா குறை!

பலரின் பிரச்சனைகளுக்கு விதியைக் காரணமாகக் கூறி தங்களை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் பல நிகழ்வுகளுக்கு காரணம் நம்முடைய தவறுகளே!

இதை என்று நாம் உணருகிறோமோ அன்று தான் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவோம்.

எனக்கு சில நேரங்களில் கடவுள் நமக்கு நம்முடைய தகுதிக்கு மீறி நிறைய கொடுக்கிறாரோ என்ற பயமே இருக்கும்.. அப்படி இருக்கையில் கடவுளிடம் அம்மா கூடுதலாக வேண்டுவது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

எனவே, என் அம்மாவிடம் “நமக்கு என்னம்மா குறை! மற்றவர்களை விட நாம நல்லாத்தானே இருக்கோம். இதற்கு மேல் கடவுளிடம் எதிர்பார்ப்பது நியாயமில்லை” என்று கூறிட்டே இருப்பேன்.

தற்போதும் எங்கள் குடும்பத்துக்குச் சில பிரச்சனைகள் உண்டு ஆனால், அவற்றைப் பிரச்சனைகளாக நான் நினைப்பதில்லை. இப்பிரச்சனைகளும் எதோ ஒரு காரணத்துக்காக என்று நம்புவேன்.

அம்மாக்கள் எப்போதுமே எதையாவது நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் வேண்டுதல்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எல்லையே கிடையாது.

இருப்பினும் நான் இரண்டு வருடங்களாகத் தொடர்ச்சியாக அம்மாவிடம் இது பற்றிப் பேசிக்கொண்டே இருந்தேன், சிங்கப்பூரில் இருந்த போது பேச வாய்ப்பில்லை ஆனால், தற்போது நேரில் உடன் இருப்பது வசதி. ஊரில் அனைவருடனும் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் 🙂 .

மாற்றங்கள் தேவை ஒவ்வொருவருக்கும்

சமீபமாக என் அம்மாவின் பேச்சில் மாற்றம் தெரிந்தது இருப்பினும் நான் எதுவும் கேட்கவில்லை.

ஒரு நாள் சச்சரிதம் படிக்கப் போகிறேன் என்றார்கள். என்ன வேண்டுதல்கள் என்று கேட்க அவர் கூறிய இரண்டுமே நியாயமானதாக இருந்தது. இவை எதுவுமே எங்கள் கையில் இல்லை.

என்னங்கம்மா! இரண்டு வேண்டுதல்கள்தானா..!” என்று நான் கிண்டலாகக் கேட்க, அதற்கு என் அம்மா கூறிய பதில் தான் தலைப்பில் இருப்பது.

வியப்படைந்து தொடர்ந்து பேசும் போது உண்மையாகவே மாறி விட்டார்கள் என்று தெரிந்தது, மகிழ்வாக இருந்தது. தற்போதெல்லாம் மிக உற்சாகமாக இருக்கிறார்கள்.

தற்போது பிரச்சனைகளை நினைத்து கவலைப்படுவதில்லை. அப்படியே இருந்தாலும், அதெல்லாம் தற்காலிக எண்ணங்கள் தான், தொடர்ச்சியாக இருப்பதில்லை.

நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் நம்மை மட்டுமல்ல நம் உடன் இருப்பவர்களையும் பலவீனப்படுத்தி விடும். எனவே, எதிர்மறையாகச் சிந்திக்காதீர்கள்.

பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அவரவர் தகுதிக்கேற்ப இருந்து கொண்டு தான் இருக்கும், சிலது வெளியே தெரியும், சிலது தெரியாது அவ்வளவே!

பிரச்சனைகளே இல்லையென்றால், வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல் சப்பென்று ஆகி விடும்.

ப்ரூஸ் லீ சொன்னது போல “பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை வேண்டாதீர்கள், வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பலத்தை வேண்டுங்கள்” .

மகிழ்ச்சி 🙂 .

Read எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

{ 5 comments… add one }
 • Someswaran October 3, 2017, 11:43 AM

  “சச்சரிதம்” என்றால் என்ன? சத்சரித்ரா என்பதும் சச்சரிதம் என்பதும் ஒன்று தானா?

  //பிரச்சனைகளே இல்லையென்றால், வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல் சப்பென்று ஆகி விடும்.// 100/100 உண்மை அண்ணா.

  நமக்கு நிகழப்போகும் நிகழ்வுகளே முன்கூட்டிய எண்ணங்களாக வருகிறதோ என்று சந்தேகமாக உள்ளது??

 • பிரவின்குமார் October 4, 2017, 3:53 AM

  நேர்மறை எண்ணங்கள் பற்றி மிக அருமையாக சொல்லி இருக்கீங்க கிரி அண்ணே..! எனக்கும் இதுபோன்று நிறைய நிகழ்வுகள் நடந்துள்ளன. முழு நம்பிக்கையுடனும் நேர்மறையான சிந்தனையுடனும் செய்கின்ற அனைத்து செயல்களிலும் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி கிடைத்தது எல்லாம் இது முடியுமா ? நடக்குமா ? என்று சந்தேகத்துடன் செய்ததுதான். நம் எண்ணங்களுக்கு மாபெரும் சக்தி உள்ளது என்று நம்புகிறேன். தங்களது இப்பதிவு எண்ணத்தை இன்னும் வலுவூட்டியுள்ளது.

 • Mohamed Yasin October 7, 2017, 6:54 AM

  வாழ்வின் ருசி தான், வாழ்வின் மர்மம். நாளை என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாதது தான் அதன் சூத்திரம். அடுத்தவரின் (அம்மா, மனைவி, நண்பர்கள்) உட்பட எவரது தனிப்பட்ட அந்தரங்களில் குறுக்கிடுவது கிடையாது. என் விஷயங்களில் அடுத்தவர்களது தலையீட்டையும் அனுமதிப்பது இல்லை.

  முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்டவன் நான். எனக்கு நடைபெறும் நன்மையும், தீமையும் கடவுளின் புறத்திலிருந்து நடக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். ஆனால் கடவுளின் பெயரை கொண்டு சித்தரிக்கப்படும் போலி சடங்குகளை முற்றிலும் வெறுப்பவன். வேண்டிய தேவைகளை கடவுளிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

  கடவுளுக்கும் நமக்கும் இடையில் போலியாக உள்ள மதகுருமார்களையோ, இடைத்தரகர்களையோ என்றுமே நம்புவதும், வழிபடுவதும் இல்லை. இது போன்ற நபர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யமாட்டேன். என்அம்மாவின் பிராத்தனையில், அவரது நம்பிக்கையில் நான் என்றுமே வாதிட்டது இல்லை. அந்த பிராத்தனையால் அவருக்கு வாழ்வின் மீது ஒரு பற்றும், பிடிப்பும், நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

  தன் வாழ்வின் கடைசி படிகளில் நின்று கொண்டிருப்பவரிடம், என்னுடைய முற்போக்கு சிந்தனையை அவர்மீது விதைத்து அந்த நம்பிக்கையை சீர்குலைக்க விரும்பவில்லை. நிச்சயமாக இந்த பிராத்தனை, வழிபாடுகளால் நன்மை நடக்கிறதோ இல்லையோ??? சத்தியமாக ஒரு சதவீதம் கூட தீமை இல்லை. நிறுவனத்தில் ஒரு சிறு பிரச்சனைகே மண்டை காயும் நமக்கு, அம்மாக்களுக்கு வரும் பிரச்சனை நமக்கு வந்தால் மண்டை வெடித்துவிடும்.

  25 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த ஒரு இளம் பெண் மறுமணம் செய்யாமல் 10 வயது பையனுடன், இந்த சமூகத்தில் எத்தனை விதமான துன்பங்கள் அனுபவித்திருப்பார் என்று நினைக்க முடியவில்லை. ஆனால் இத்தனை வருடங்கள் என் அம்மாவை வாழவைத்து அவரது பிராத்தனையும், தன்னம்பிக்கையும் மட்டுமே!!!! உலகில் என்றுமே கொண்டாடப்படவேண்டியவர்கள் எல்லா அம்மாக்களுமே……… பகிர்வுக்கு நன்றி. கிரி, உங்கள் பெற்றோருக்கு நலம் விசாரிப்புகளும், வாழ்த்துக்களும். பகிருங்கள்.

 • சந்திரசேகர் October 8, 2017, 4:08 PM

  அருமையான கட்டுரை, எனக்கும்
  நிறைய எதிர் மரை எண்ணங்கள் உள்ளது, அதை கண்டிப்பாக மாற்றம் வேண்டும்.
  @mohammed யாசின்
  உங்கள் அன்னை விஷயத்தில் நீங்கள் தலையிட அதது மிக சரி
  அதை போல் கிரி அவர் அன்னை விஷயத்தில் மிக சரியே
  எல்லாம் சூழ்நிலைதான் முடிவு செய்யும்

 • கிரி October 12, 2017, 3:46 AM

  @சோமேஸ்வரன் சச்சரிதம் என்பது சாய்பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு என்று நினைக்கிறேன்.

  “நமக்கு நிகழப்போகும் நிகழ்வுகளே முன்கூட்டிய எண்ணங்களாக வருகிறதோ என்று சந்தேகமாக உள்ளது”

  🙂 நம்ம எண்ணங்களின் வலிமை நடக்கப்போகும் நிகழ்வுகளின் முடிவை மாற்றும் காரணிகளாக உள்ளது.

  @பிரவீன் குமார் நலமா? 🙂

  நிச்சயமாக நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.. குறைந்தபட்சம் தீமையின் அளவைக் குறைக்கும்.

  @யாசின்

  “இது போன்ற நபர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யமாட்டேன்.”

  நல்ல முடிவு 🙂

  “இத்தனை வருடங்கள் என் அம்மாவை வாழவைத்து அவரது பிராத்தனையும், தன்னம்பிக்கையும் மட்டுமே!”

  இது அனைவரின் அம்மாவின் நிலை தான். கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லையென்றால், பலரின் நிலையையே நினைக்கவே முடியவில்லை.

  ஏதாவது ஒன்றின் மீது உள்ள நம்பிக்கை, பிடிப்பு தான் வாழ்க்கையை நடத்த உதவுகிறது. அது கடவுளாகவும் இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்.

  @சந்திரசேகர்

  எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி கூடும், நல்லவைகள் நடக்கும், தீமைகள் குறையும். இது என்னுடைய அனுபவப்பூர்வ உண்மை.

  நீங்கள் கூறிய “சூழ்நிலைகளே அனைத்தையும் முடிவு செய்கிறது” என்பது மிகச்சரி.

Leave a Comment