தனி ஒருவன் “Tamilnadu Weather Man”

Tamilnadu Weather Man

வாழ்க்கையில் அனைவருக்கும் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் இரண்டே இரண்டு தான். விரும்பியது கிடைத்து அதைத் தொடர்வது, கிடைப்பதை வேறு வழியில்லாமல் தொடர்வது.

இந்த இரண்டோடு இன்னொன்று உள்ளது. விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும், விரும்பியதை ஏதாவது ஒரு வகையில் விட்டுக்கொடுக்காமல் தொடர்வது.

அதன் பெயர் தான் Passion.

Tamilnadu Weather Man

நம் அனைவருக்கும் குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் பரிட்சயம் என்றால் அது Tamilnadu Weather Man என்று அழைக்கப்படும் “பிரதீப் ஜான்” செல்லமாக PJ 🙂 .

2015 டிசம்பரில் சென்னையை புரட்டிப்போட்ட மழையின் போது நமக்கு அறிமுகமானவர்.

ஃபேஸ்புக்கில் எப்படியோ அறிமுகமானது இவரது பக்கம். இவருடைய அறிவிப்புகள் அப்போது வானிலை அறிக்கை மையம் கொடுப்பதற்கு ஈடாக இருந்ததால், அட! என்று வியப்பு ஆனது.

அன்று முதல் மிக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கவில்லை என்றாலும், கண்ணில் பட்டால் கவனிக்கும் பக்கமானது. பின்னர் அப்படியே தொடர்ந்து மழை என்றாலே இவர் பக்கத்தை மட்டுமே பார்க்கும் அளவுக்குக் கலக்கி வருகிறார்.

கொடுக்கும் தகவல்களை வறட்சியாக இல்லாமல் சுவாரசியமாக கொடுப்பார் [Damaal dumeel, rain pinni pedaleduthufying 🙂 ].

Passion

Passion

இவர் என்ன வேலை பார்க்கிறார் என்று தெரியவில்லை ஆனால், அவரது விருப்பம் வானிலை சம்பந்தப்பட்டது என்பது மட்டும் நாம் அனைவரும் அறிந்தது.

எனவே, விருப்பப் பணியில் இல்லை என்றாலும், மனதில் உள்ள விருப்பத்தைச் சிலரால் விட்டுக்கொடுக்க முடியாது.

எதோ ஒரு கட்டத்தில் நம்மை அறியாமலே நம் திறமை / விருப்பம் வெளிப்படும். அட! இது நல்லா இருக்கே.. என்று அதன் மேல் காதலாகி விடுவோம்.

பின் அது குறித்து மேலும் மேலும் தெரிந்து கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்வோம். அது குறித்தே நம் எண்ணங்கள் சுழன்று கொண்டு இருக்கும்.

இதன் பெயர் தான் Passion 🙂 .

Passion என்பதற்கும் ஆர்வக்கோளாறு என்பதற்கும் பெரிய வித்யாசம் உண்டு. ஆர்வக்கோளாறு என்பது தற்காலிகமானது Passion என்பது நிரந்தரமானது.

தனி ஒருவன்

Passion என்றால், மற்றவர்களைத் திரும்பி பார்க்க வைக்க வேண்டும். அட! இவன் கலக்குறான்யா.. தனித்துத் தெரிகிறான்யா! என்று மற்றவர்களை எண்ண வைக்க வேண்டும்.

பிரதீப் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கம் அனைவரையும் திரும்ப வைத்து இருக்கிறார்.

இது எவ்வளவு பெரிய செயல்! பிரம்மிக்க வைக்கிறது. பல பத்திரிகை பேட்டிகள், நேர்முகப் பேட்டிகள், மக்களின் எதிர்பார்ப்பு என்று அசத்தி வருகிறார். மிகப்பெரிய சாதனை!

புகழ் போதை

நாம் என்ன தான் மற்றவர்களிடம் புகழை தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை என்று வசனம் பேசினாலும், நம் மனதில் ஒரு ஓரத்தில் இவை இருந்து கொண்டே இருக்கும்.

இவற்றிடம் மிக எச்சரிக்கையாக இல்லையென்றால் நம் நிம்மதியையே அழித்து விடும்.

பிரதீப் நமக்கு இத்தகவல்களைக் கொடுப்பதற்காக இழந்தவை நம்மில் பலர் அறியாதது. இவரின் மனைவியை, குடும்பத்தைக் கேட்டால் கூறுவார்கள்.

எனவே, முடிந்தவரை இது போன்ற வானிலை செய்திகளைத் தெரிவிப்பதை விருப்பமாக வைத்துக்கொள்ள வேண்டும். விருப்பத்தில் இருந்து கடமையாக மாறினால் Passion என்பது வெறுப்பாகி விடும்.

எனவே, நமக்கு நேரம் இருக்கும் போது, குடும்பச் சூழ்நிலை அனுமதிக்கும் போது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

குடும்பம், நம் உடல் நலம், முதன்மைப் பணி, மற்றவைக்கு ஒதுக்கும் நேரம் போன்றவற்றுக்குப் பிறகே இந்த Passion யை வைத்துக்கொள்ள வேண்டும்.

இதில் தெளிவாக இருந்தால், என்றுமே வெறுப்பு, சலிப்பு, மன அழுத்தம், கோபம் வராமல் நம் Passion யை தொடரலாம் 🙂 .

சுருக்கமாக, நம்மை நாமே நெருக்கடிக்கு ஆளாக்கிக்கொள்ளக் கூடாது.

விமர்சனங்கள்

பொது வெளி என்று வந்து விட்டாலே முதலில் நாம் எதிர்கொள்ளப்பழக வேண்டியது விமர்சனங்களைத் தான். அறிமுகம் இல்லாதவரை பிரச்சினையில்லாமல் இருக்கும். ஓரளவு பிரபலம் ஆனால், நம்மைப் புரட்டிப்போட்டு விடும்.

இதை எதிர்கொள்ளாமல் ஒருவர் இருக்கவே முடியாது. துவக்கத்தில் இதைச் சமாளிப்பது என்பது சாதாரண விசயமில்லை. பிரதீப் இதை எதிர்கொள்வது தவிர்க்கவே முடியாது.

ஒருமுறை பிரதீப்பை பின்தொடருபவர் “நீங்க சென்னைக்கு மட்டுமே சொல்றீங்க மற்ற மாவட்டங்களுக்குச் சொல்வதில்லை அதனால், நீங்கள் Tamilnadu Weather Man என்பதற்குப் பதிலாக Chennai Weather Man என்று மாற்றிக்குங்க” என்று கூறி இருந்தார்.

பலர் மூளை என்ற ஒன்றை கழற்றி விட்டே இணையத்தில் சுற்றுவதால், இது போன்ற விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது.

உண்மையில் அந்தச் சமயத்தில் சென்னையில் தான் மழை குறித்த தகவல்கள் பரவலாக இருந்தது. எனவே, அது குறித்த தகவல்களைக் கூற முடிந்தது.

அதோடு அவர் Tamilnadu Weather Man என்ன.. International Weather Man கூட வைத்துட்டு எதையும் சொல்லலாம் 🙂 .

விருப்பம் இருந்தால் படி.. இல்லையா.. Unlike பண்ணிட்டு போயிட்டே இரு.

என்னுடைய இடத்தில் தீர்மானிக்க வேண்டியது நான்!

அது அவருடைய இடம்.. என்ன சொல்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவர். இதில் வந்து நீ ஏன் அதைச் சொல்லலை இதைச் சொல்லலை என்று கேட்க உரிமையில்லை.

பொதுவெளியில் வந்து விட்டால், இதைப் போன்ற கேள்விகளைத் தவிர்க்க முடியாது எனவே, இதைப் புறந்தள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

நான் எழுத வந்த ஆரம்ப காலத்தில் விமர்சனங்களை எதிர்கொள்வது பெரிய பிரச்சனையாக இருந்தது. இதுல சிக்கி சின்னாபின்னமாகி விட்டேன் 🙂 .

2009 ல் ரஜினி அவருடைய பிரச்சனைகளை அமைதியாக எதிர்கொண்ட விதம் எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. அமைதி, புறக்கணிப்பு மிகப்பெரிய ஆயுதங்கள்.

எனவே, பிரதீப் விமர்சனங்களைப் புறந்தள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து இடங்களிலும்

கடந்த இரு வருடங்களில் முன் கூட்டியே மழை தகவல் கொடுத்து பலருக்கு உதவி இருக்கிறார். கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து கால நிலை கொடுத்து அசத்தினார்.

சமீபத்தில் குஜராத், ராஜஸ்தானில் மழை செமத்தியாக அடிக்கப் போகிறது என்று முன்கூட்டியே தகவல் கொடுத்தார். இதைப் பார்த்த நம்ம மக்கள் அந்த ஊர் நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கைப் படுத்தினார்கள்.

இது மாதிரி அனைவருக்கும் உதவி வருகிறார். அவரிடம் “தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்த மாதிரி” சிலர் கேள்வி கேட்பது செம்ம கடுப்பா இருக்கு.

ஒரு சம்பவத்தைக் கூறியே ஆக வேண்டும் 🙂

ஒரு நாள் என் மனைவி என்னை அழைத்து “ஏங்க! மழை வரும்னு ஏன் சொல்லல.. பாருங்க.. துணி எல்லாம் நனைந்து விட்டது!” என்று கோபமாகி விட்டார்.

இது என்னடா வம்பா இருக்கு! என்றாகி விட்டது 🙂 .

பிரதீப் ஃபேஸ்புக்கில் மழை பற்றிய செய்தி பகிர்ந்தால், மனைவியை அழைத்துக் கூறி விடுவேன்.

இதனால், துணி காயப்போட்டு இருந்தால் எடுத்து விடுவார். மழை வருவது போல இருந்தால், என்னை அழைத்துக் கேட்பார். நானும் பிரதீப் என்ன போட்டு இருக்காரோ அதைக் கூறி வரும் வராது என்று தெரிவித்து விடுவேன்.

ஒருநாள் நான் கவனிக்கவில்லை அதனால் சொல்லவில்லை.. ஆனால், மழை வந்து விட்டது. இதுக்குத் தான் சண்டை. என்ன கொடுமை சார் 🙂 .

மனைவியிடம் கூறும் போது என் பையன் “அப்பா! Weather Man தான சொன்னாரு!” என்பான் 🙂 .

நேரா இங்க தான் வரீங்க போல..

Kabali - Nera inga than vareenga pola

பிரதீப்! நீங்க எங்களுக்குச் செய்யும் உதவிக்கு அளவே இல்லை. அலுவலகம், சுற்றுலா, வெளியே செல்லும் போது என்று எப்போதும் உங்கள் தகவல் உதவுகிறது.

அதுவும் குறிப்பாக 20 நிமிடங்கள் பெய்யும், 30 நிமிடங்கள் பெய்யும் என்று கூறுவது எங்களை முன்னேற்பாடாக திட்டங்களை முன் கூட்டியே மாற்றிக்கொள்ள உதவுகிறது.

சென்னையில் மழை அதிகமில்லை என்றாலும், வரும் மழைக்கு இவருடைய தகவல் மிக உதவுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கபாலி படத்தில் வருவது போல “நேரா இங்க தான் வரீங்க போல.. ” என்பது மாதிரி, மழை வருகிற மாதிரி இருந்தால், நேரா உங்க ஃபேஸ்புக் பக்கம் தான் வருகிறோம் 🙂 .

விமர்சனங்களைப் புறந்தள்ளுங்கள்

உங்கள் தகவலை எதிர்பார்த்து பலர் காத்துக்கொண்டு இருக்கையிலே சிலரின் முட்டாள்தனமான கருத்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

உங்களைப் பாராட்ட, வாழ்த்த ஆயிரக்கணக்கோர் இருக்கையிலே வெற்றுக் கூச்சல்களைப் புறந்தள்ளுங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.

Read: எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

விகடன் பேட்டி என்று நினைக்கிறேன், உங்கள் திருமணத்தன்று மழையென்று கூறி இருந்தீர்கள். இதை விட ஒருவருக்கு ஆசிர்வாதம் என்ன இருக்க முடியும்!?

நீங்கள் மேலும் பெரிய உயரங்களைத் தொட உங்கள் ரசிகர்களின் சார்பாக வாழ்த்துகள். உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எங்கள் நன்றிகள்.

Passion என்பது அழகான ரசனை, ரசித்துப் பழகி விட்டால், அது நம்மோட கலந்து விடும். அதைப் புறக்கணிப்பது என்பது இயலாத ஒன்று.

நம் கட்டுப்பாட்டில் Passion இருக்க வேண்டும், அதன் கட்டுப்பாட்டில் நாம் சென்று விட்டால் நம் சுதந்திரம், நிம்மதி பறி போய்விடும்.

உங்களுக்கான நேரத்தை செலவிட்ட பிறகு, இடி மின்னல் மழையாக வானிலைத் தகவல்களை எங்களுக்கு வழங்குங்கள் 🙂 .

{ 3 comments… add one }
  • Mohamed Yasin August 12, 2017, 12:44 PM

    இதுவரை இவரை பற்றிய எந்த தகவல்களும் எனக்கு தெரியாது. தற்போது இவரை பற்றிய செய்திகளை படிக்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. (நம் கட்டுப்பாட்டில் Passion இருக்க வேண்டும், அதன் கட்டுப்பாட்டில் நாம் சென்று விட்டால் நம் சுதந்திரம், நிம்மதி பறி போய்விடும்.) சில நண்பர்களை நேரில் கண்டு இருக்கிறேன். நீங்கள் கூறியவை 100 க்கு 100 உண்மை. அறிமுகத்திற்கு நன்றி கிரி.

  • காத்தவராயன் August 13, 2017, 3:54 AM

    மிகச்சிறப்பாக செயல்படுகிறார்.
    மழை பெய்வதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே உத்தேசமாக கூறிவிடுகிறார். அது மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.
    20 நாட்களுக்கு முன்பே இப்போது பெய்யும் மழை பற்றி கூறியிருந்தார்.

    இதே போல் கடந்த மாசிமாதம் பெய்த கோடை மழை பற்றியும் கூறியிருந்தார்.

  • கிரி August 16, 2017, 2:47 AM

    @யாசின் நீங்கள் தமிழ்நாட்டில் இல்லையாததால், உங்களுக்கு இவரின் தேவையில்லை. இங்கே இருந்து இருந்தால், அறிந்து இருக்க வாய்ப்புண்டு.

    @காத்தவராயன் சென்னையில் இவரின் குறிப்புகளின் மூலமே நான் முன்னேற்பாடாக இருந்து கொள்கிறேன் 🙂 .

Leave a Comment