பன்னிரண்டாம் ஆண்டில் கிரி Blog

12th Anniversary

ன்னிரண்டாம் ஆண்டில் கிரி Blog தளம் அடியெடுத்து வைக்கிறது. இதுவரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள்.

ஒரே மாதிரி எழுதினால் படிப்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படும் என்பதால், ஒவ்வொரு கட்டுரையும் தொடர்பில்லாமல் அடுத்தடுத்து எழுதுவது என்னை நெருக்கடியில் தள்ளுவதில்லை.

GiriBlog

ஒரு செய்தியைப் பார்த்து உடனே பொங்கி எழுதினால், இரண்டு நாட்களுக்குப் பிறகு அது வேறு ஒரு கோணத்தில் சரியாகப் படுகிறது அல்லது செய்தியே வேறாக இருக்கிறது.

அடடா! கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ! என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது.

எனவே, அடிக்கடி பொங்காமல் இருப்பது நாம் அவசரப்பட்டுக் கருத்தை கூறி பின் வருத்தப்படுவதைத் தவிர்க்க உதவுகிறது 🙂 . எப்படிக் கட்டுப்பாடாக இருந்தாலும், ஏதாவது ஒரு சமயத்தில் சறுக்கி விடுகிறது.

இருப்பினும் நான் அதைத் தவறு செய்ததாக நினைத்து வருந்துவதில்லை, அனுபவமாக எடுத்துக்கொண்டு நகர்ந்து விடுகிறேன்.

தவறு செய்வது இயல்பு

தவறே செய்யாமல் இருக்க நாம் என்ன கடவுளா! கடவுளே தவறு செய்து இருக்கிறார்கள் என்று படித்து இருக்கிறோம் அப்படி இருக்க, நாம் ஏமாத்திரமே!

அதனால், தவறு செய்து விட்டோம் என்று நாம் வருத்தப்பட, மனம் புழுங்க வேண்டியதில்லை.

இதை அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த முறை அந்தத் தவறை செய்யக் கூடாது என்று நேர்மறையாக எண்ணிக்கொண்டால், பிரச்சனையே இல்லை.

இது மன உளைச்சலை தடுக்கிறது, நம்மைப் பதட்டப்படாமல் வைத்து இருக்க உதவுகிறது. இது எனக்குச் செம்மையாக வேலை செய்கிறது 🙂 .

தமிழ்

நான் ஆங்கிலக்கலப்பு இல்லாமல் முடிந்த வரை தமிழில் தான் எழுத வேண்டும் என்பதைக் கடந்த ஒரு வருடமாகத் தீவிரமாகப் பின்பற்றி வருகிறேன்.

துவக்கத்தில் எனக்குச் சிரமமாக இருந்தாலும், தற்போது மிக மிக எளிதாகி விட்டது. எனக்கு எழுதும் போது ஆங்கில வார்த்தைகளே வருவதில்லை.

ரொம்பவே முடியாத வார்த்தைகளுக்கு, சரியான மாற்றுத் தமிழ் வார்த்தைகள் கிடைக்காத போது தான் ஆங்கிலம் பயன்படுத்துகிறேன்.

வழக்குத்தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், முழுக்கத் தமிழ் என்று இருந்தாலும், உங்களுக்குப் படிக்கக் கடினமாக இருக்காது என்று நம்புகிறேன்.

1: தமிழ்

2: தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

3: படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!

4: ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா?!

5புதியவர்களுக்கு – என்னைப் பற்றி

முழுவதும் தமிழில் படிப்பது கடினமா?!

முழுக்கத் தமிழில் படிப்பது உங்களுக்கு எப்படி உள்ளது? படிக்க விருப்பமாக உள்ளதா? அல்லது சிரமமாக உள்ளதா?

எளிமையான வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகிறேன். எனவே, உங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்காது என்று நம்புகிறேன்.

தமிழ் குறித்த உங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

தமிழ் என்றால் இனிமை

என்னுடைய விருப்பமெல்லாம் “கிரி தளத்துக்குச் சென்றால், முழுக்க நம் இனிமையான தமிழில் படிக்கலாம்!” என்ற எண்ணத்தைப் படிப்பவர்களிடம் தோற்றுவிக்க வேண்டும் என்பதே! 🙂 .

எழுதுவது கூட எப்படியோ பழகி விட்டேன் ஆனால், பேசுவதில் ஆங்கிலக் கலப்பில்லாமல் பேச முடியவில்லை என்று கூறி இருந்தேன். தற்போது இதற்கும் பயிற்சி எடுக்கிறேன், என்னால் வித்யாசத்தை உணர முடிகிறது.

அப்புறம்…

உங்களுக்குச் சில செய்திகளைக் கூற, அது குறித்து மேலும் படித்துத் தகவல்களைத் திரட்டுவதால், நான் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டு இருக்கிறேன்.

எனவே, அதற்கு உங்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

எழுதுவது என்பது எனக்கு விருப்பமாக உள்ளது. நெருக்கடிக்கு ஆளாகாமல் இருப்பதால் தான் தொடர்ந்து சுதந்திரமாக எழுத முடிகிறது. இதையே தொடர வேண்டும் என்பதே விருப்பம்.

கருத்துக் கூறுபவர்கள் மிகக் குறைந்து விட்டார்கள். முன்பு போல இல்லை, இருப்பினும் இது கால மாற்றம் என்று எடுத்துக்கொண்டு நகர வேண்டியது தான்.

முடிந்தவரை படிப்பவர்களுக்கு எளிமை செய்து கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். நானும் ஒரு வாசகனாக உங்கள் எதிர்பார்ப்புகளை அறிவேன்.

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் Instant Article வசதியை ஏற்படுத்தி இருந்தேன். இது உங்களுக்கு (திறன்பேசியில்) படிக்க வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி

எப்பவும் சொல்வது தான். அனைவருக்கும் அனைத்தும் பிடித்தது போல எழுத எவராலும் முடியாது அதில் நானும் விதிவிலக்கல்ல. எனவே, எழுதுவதில் எத்தனை சதவீதம் உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளது என்று மட்டும் பாருங்கள்.

பின் தொடரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்று போல் இன்றுவரை என் கட்டுரைகளுக்குச் சலிக்காமல் தொடர்ந்து கருத்து கூறும் நண்பர் யாசினுக்கு சிறப்பு நன்றி.

தொடர்பில் இருங்கள்! 🙂 .

அன்புடன்

கிரி

{ 8 comments… add one }
 • ராமலக்ஷ்மி August 16, 2017, 9:08 AM

  பன்னிரெண்டாம் ஆண்டு! மனமார்ந்த வாழ்த்துகள் 🙂 ! தொடரட்டும் தங்கள் பயனுள்ள தகவல் பதிவுகளும் அனுபவப் பகிர்வுகளும்! பலமுறை சொன்ன ஒன்றே எனினும் மீண்டும் பாராட்டுகிறேன் உங்கள் எளிய தூய தமிழ் நடையை.

 • ஜோதிஜி August 16, 2017, 9:39 AM

  வாழ்த்துக்கள்

 • Muhammadh Fahim August 17, 2017, 5:12 AM

  தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்து நடை மிகவும் எளிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

 • Mohamed Yasin August 17, 2017, 12:52 PM

  கிரி, பள்ளி பருவத்தில் ஒரு ஆசிரியர் கூறியது “வாழ்க்கையில் மிக கடினமான செயல்: எந்த ஒரு நல்ல விஷியத்தையும் தொடர்ந்து புரிவது தான்” கூர்ந்து கவனித்தால் சத்தியமான வரிகள். உங்களுக்கு பொருத்தமான வரிகள்.

  உங்களோட தளத்தோட சிறப்பே எளிமையாக இருப்பது தான்!!! உங்க உரைநடை, வாக்கிய தெளிவு, 99 % தூய தமிழ், தொழில்நுட்ப தகவல்கள், சினிமா, உறவுகள், குடும்பம், அயல்நாடு, பயணம், பாடல்கள், சொந்த அனுபவங்கள், சமுதாயம்.. என இன்னும் பல பரிமாணங்களில் பயணிப்பது சிறப்பான ஒன்று. குறை என்று கூற ஒன்றும் இல்லை..

  சில சமயங்களில் பழைய கட்டுரைகளை படிக்கும் போது நிறைய நண்பர்கள் கருத்துக்களை கூறி இருக்கின்றனர். மிக சாதாரணமான பதிவிற்கே (உதாரணம் : முடி வெட்டுதல் & சொந்த சமையல்) இது போன்ற பதிவிற்கு பின்னுட்டம் அதிகமாக காண முடிந்தது. ஆனால் சில என்னை பிரமிக்க வைத்த பதிவிற்கு யாரும் பின்னுட்டம் இடாததை பார்க்கும் போது ஒரு சிறிய வருத்தம் இருக்கும். சில பேர் வெட்டி வேலை என்று கூட கூறி இருக்கலாம்..

  இருப்பினும் அதையெல்லாம் தவிர்த்து உங்களுடைய பணியினை நீங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது உங்கள் தனி தன்மையை காட்டுகிறது.. இன்னும் நிறைய கூறலாம்!!!! வேண்டாம்…. நான் என்றும் உங்களுடன் தொடர்பில் இருப்பேன் என நம்புகிறேன்… அன்புக்கு நன்றி.. அடுத்த முறை 15 ஆம் ஆண்டில் சந்திப்போம்….

 • VIBULANANTHAN S August 17, 2017, 1:29 PM

  //இருப்பினும் நான் அதைத் தவறு செய்ததாக நினைத்து வருந்துவதில்லை, அனுபவமாக எடுத்துக்கொண்டு நகர்ந்து விடுகிறேன்.

  தவறு செய்வது இயல்பு

  தவறே செய்யாமல் இருக்க நாம் என்ன கடவுளா! கடவுளே தவறு செய்து இருக்கிறார்கள் என்று படித்து இருக்கிறோம் அப்படி இருக்க, நாம் ஏமாத்திரமே!

  அதனால், தவறு செய்து விட்டோம் என்று நாம் வருத்தப்பட, மனம் புழுங்க வேண்டியதில்லை.

  இதை அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த முறை அந்தத் தவறை செய்யக் கூடாது என்று நேர்மறையாக எண்ணிக்கொண்டால், பிரச்சனையே இல்லை\\
  நீங்கள் தற்போது பலருக்கும் அறிமுகமாகி வரும் ஞானி பகவத் ஐயா இந்த மாதிரியான அணுகுமுறையை அவர் சொல்லிவருகிறார்.இதுதான் சரியான அணுகுமுறை. நன்று சொன்னீர்கள்.

 • Karthikeyan August 18, 2017, 6:51 AM

  வாழ்த்துக்கள் அண்ணா…
  இதுவரை தங்கள் தளத்தை முழுவதும் தமிழில் படிப்பதில் எந்த ஒரு கடினமும் எனக்கு ஏற்பட்டது இல்லை.
  எனக்கு தெரிந்து எளிய தமிழில் அழகாக வலைத்தளத்தை தொடர்ந்து வருபவர் தாங்கள் மட்டுமே.
  பின்னூட்டம் இடுவதற்கு நேரமில்லை என்ற காரணத்தினாலே நான் இப்போதெல்லாம் தவிர்த்துவிடுகிறேன். ஆனால் தவறாமல் எல்லா பதிவுகளையும் படித்திவிடுகிறேன்.
  முன்பெல்லாம் புத்தக விமர்சனம் எழுதுவீர்கள் அது எனக்கு நிறைய புத்தகங்களை அறிந்து கொள்ள உதவியது. இப்போதெல்லாம் அது வருவதே இல்லை என்ன காரணம் என்று தெரியவில்லை. அதுமட்டும் தான் இப்போதைக்கு உள்ள குறை

 • Ashok August 20, 2017, 3:05 PM

  பன்னிரண்டு ஆண்டுகள் – வாழ்த்துக்கள் கிரி ! !

  உங்களின் அருமையான பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

  மிகவும் எளிமையான எழுத்து நடை மற்றும் சுவாரசியமான தகவல்கள் !! நன்றி !

 • வாழ்த்துக்கள் நண்பர் கிரி,உங்களின் ஒவ்வெறு பதிவும்,இயல்பான எழுத்து நடையும் சிறந்த நண்பரிடம் உரையாடிய அனுபவத்தையே தந்திருக்கின்றது, கிரிபிளாக் இன்னும் பல வயதினைக் கடக்க வாழ்த்துக்கள்.

Leave a Comment