விடாத கனவும் துரத்தும் கணக்கும்!

Vidathu-Karuppu

னவு வராத நபர் உலகில் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். விதிவிலக்காக யாரேனும் இருக்கலாம் அவ்வளவே! Image Credit – CinemaVattaram.com

பெரும்பாலும் நம் தின வாழ்க்கையில் அதிகம் பாதித்த சம்பவங்களே இரவில் கனவாக வரும்.

ஏதாவது ஒரு சம்பவம் மனதளவில் நம்மை மிக மகிழ்ச்சிப்படுத்தியிருக்கலாம், துன்பப்படுத்தி இருக்கலாம், அதனுடைய பாதிப்பு கனவாக விரியும்.

கனவு நேரலை

சில வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டுரையில் கனவு பற்றிக் குறிப்பிடும் போது கனவிலேயே சிந்திக்கிறேன், அதிலேயே முடிவும் எடுக்கிறேன் அதாவது கனவு நேரலையில் பங்கு கொள்வது போன்று என்று கூறி இருந்தேன்.

இது எனக்கு மட்டும் நடக்கிறதோ என்று நினைத்தால், கருத்துரையில் ஒருவர் எனக்கும் அது போல உள்ளது. நானும் கனவில் சிந்திப்பேன், முடிவெடுப்பேன் என்று கூறினார்.

சரி! பலருக்கும் நடக்கும் சம்பவம் போல என்று கருதிக் கொண்டேன்.

நாம் கனவில் இருக்கிறோமா?!

கனவு ஒரு தினுசாக விவகாரமாகப் போய்க் கொண்டு இருக்கிறது என்று தோன்றினால், இது கனவாக இருக்கும் நாம் விழிக்க வேண்டும் என்று நினைத்துப் பின் அதே போல விழித்து அப்பாடா! கனவு தான் என்று நிம்மதியடைந்து இருக்கிறேன்.

அதோடு நடக்கும் கனவிலேயே யோசித்து இது போலச் செய்யக்கூடாது என்று முடிவெடுப்பேன். கனவு சில நேரங்களில் என் கட்டுப்பாட்டில் இருக்கும், சில நேரங்களில் என் கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டு இருக்கும்.

இதை எல்லாவற்றையும் விட ஒரு கனவில் பாதியில் விழித்துப் பின் தூங்கி அது தொடர்ந்து திரும்ப விழித்துப் பின் தூங்கியவுடன் திரும்பத் தொடர்ந்து என்னைத் திகைக்க வைத்து இருக்கிறது 🙂 .

பொதுவா, விழித்து விட்டால் கனவு துண்டிக்கப்படும் ஆனால், எனக்குச் சில நேரங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

விட்டால்.. இரண்டாம் பாகம் எல்லாம் வரும் போல இருக்கு 😀 .

விடாத கனவும் துரத்தும் கணக்கும்

இவையெல்லாம் எனக்குப் பிரச்சனையில்லை.. என்னை ஒரு கனவு 20 வருடங்களுக்கும் மேலாகப் பாடாய் படுத்தி வருகிறது.

எனக்குக் கணக்குச் சுத்தமாக வராது. கணக்கில் தேர்வாகி விட்டால் அனைத்திலும் தேர்வு தான். இதற்குப் பயந்தே 11 ம் வகுப்பில் கணக்கே இல்லாத பிரிவு எடுத்தேன்.

எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. 9 ம் வகுப்பில் காலாண்டில் 36, அரையாண்டில் 35 மதிப்பெண்கள் பெற்றுத் தப்பித்தேன் பிழைத்தேன் என்று தேர்வானேன்.

அந்த அளவுக்குக் கணக்கு என்றால் எனக்குத் திகில் படம் போலவே இருக்கும். திகில் / ஹாரர் படமெல்லாம் கூடப் பயப்பட மாட்டேன் ஆனால், பொண்ணுக கரப்பான் பூச்சிக்கு பயப்படற மாதிரி கணக்கு என்றால் தெறித்து விடுவேன் 🙂 .

எனக்கு இந்தக் கணக்குப் பயம் மனதில் ஆழப்பதிந்து விட்டது போல, 20 வருடங்களாக எனக்கு இந்தக் கணக்குப் பிரச்சனை கனவாக வந்து இன்னும் என்னை இம்சித்துக் கொண்டு இருக்கிறது.

தம்பி! கணக்கு போட்டுட்டியா?! 🙂

கனவில் முழு ஆண்டுத் தேர்வு தொடங்குவது போல இருக்கும் ஆனால், கணக்குப் புத்தகம் மட்டும் தொட்டு இருக்கவே மாட்டேன். முழு ஆண்டுத் தேர்வு நெருங்கும் “கணக்குத் தேர்வு எப்படிடா எழுதுவது” என்ற பயம் என்னை வாட்ட ஆரம்பிக்கும்.

தேர்வுக்கு அனைவரும் தயாராகிக்கொண்டு இருப்பார்கள்.. அதோடு “கிரி கணக்கு தேர்வுக்குத் தயாராகிட்டியா!” என்று கேட்பார்கள். எனக்கும் என்னடா செய்வது! என்ற பயம் வயிற்றைப் புரட்டும். தூக்கம் கலைந்து எழுந்து விடுவேன்.

அப்பாடா! இது கனவு தான் என்ற நிம்மதி கிடைக்கும் பாருங்க.. அந்தச் சுகமே தனி! 🙂 .

கொசுத் தொல்லை தாங்கல…

இந்த மாதிரி தேர்வு குறித்த பல கனவுகள் பல விதங்களில் வந்து கொண்டு இருக்கிறது. வருடத்துக்கு மூன்று அல்லது ஐந்து முறை வந்து விடுகிறது. வழக்கம் போல கடந்த வாரம் வந்து என்னைக் கடுப்படித்து விட்டது.

இந்தக் கணக்குத் தொல்லையால் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறேன். இதில் இருந்து எப்படித் தப்பிப்பது என்றே தெரியவில்லை.

கவுண்டர் சொல்ற மாதிரி “டேய் நாராயணா! இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா.. எங்க போனாலும் பின் தொடர்ந்தே வருது…!” 🙂 .

{ 5 comments… add one }
 • Mohamed Yasin July 26, 2017, 6:22 AM

  கிரி, உண்மையிலே சுவாரசியமான நிகழ்வு தான்.. கனவு என்பது வேறு உலகம். எனக்கு கனவுகள் அடிக்கடி வரும். ஆனால் தூங்கி எழுந்த பின் பல கனவுகள் நினைவில் நிற்பதில்லை. சில சமயங்களில் 2 / 3 நிமிட தூக்கங்களில் கூட கனவு வருவது ஆச்சரியமாக இருக்கும்.

  பள்ளி பருவத்தில் தினமும் தூங்கும் போது புத்தகங்கள் படிப்பது என் வழக்கம். அது வரலாறு புத்தகமாக இருக்கும் இல்லை ராணி காமிஸ் மாயவியாக இருக்கும். 6 ம் வகுப்பு படிக்கும் போது 8 வகுப்பின் வரலாற்று புத்தகத்தை படிப்பேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் இறுதி தேர்வின் போது, என்னுடன் பக்கத்தில் அமர்ந்து சமூக அறிவியில் தேர்வு எழுதிய 9 வகுப்பு மாணவனுக்கு நான் சொல்லி கொடுத்தேன்..

  உங்கள் கனவு உண்மையில் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. உங்கள் கனவை போல் பல ஆண்டுகளாக தொடர் கனவு வருவது பயம் கலந்த சந்தோஷம். இன்றும் என்றாவது கனவில் போர் வீரனாகவும், தளபதியாகவும் இருக்கின்ற கனவு வந்தால் மகிழ்வாக இருக்கும். கணக்கு போட்டீங்களானு உங்க பசங்கள கேட்ககூடாதுனு தான் என்னவோ இந்த கனவு உங்களுக்கு திரும்ப திரும்ப வருது போல!!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

 • தமிழன் July 26, 2017, 7:55 AM

  “அப்பாடா! இது கனவு தான் என்ற நிம்மதி கிடைக்கும் பாருங்க.. அந்தச் சுகமே தனி”

  கிரி இது உங்களுக்கு மட்டும் வர்ற கனவு அல்ல. எனக்கும் வந்திருக்கு (7 -8 தடவை). ரொம்ப டென்ஷனாயிடும். இன்னும் படிக்கலையே, இப்போ எக்சாம் எழுதப்போகணுமே என்று. அப்புறம்தான், ‘இப்போ வேலைனா பார்க்கிறோம், நமக்கு எங்க எக்சாம்’ என்று தெளிந்தபிறகு சுகமான நிம்மதிதான்.

  இதுமாதிரி, நிறையதடவை, நான் பறப்பதுபோல் கனவு கண்டிருக்கிறேன்.

  இதைவிட விபரீதமான கனவு எனக்கு வரும் (அது கனவு என்று சொல்லவும் முடியாது. என் மனைவி வெளியூரில் நான் இங்கு). சிலசமயம் படுக்கையில் பக்கத்திலேயே அவள் படுத்திருப்பதுபோல் இருக்கும், அசைவு, மூச்சுச் சத்தம் எல்லாமே.

  நிஜமாகவே என்னுடைய பக்கத்தில் அவள் இருப்பதுபோல். போர்வை அசைப்பது எல்லாமே. அப்புறம் நான் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு தூங்கிவிடுவேன். (ஒருவேளை அவளும் நினைத்து, அமானுஷ்யமாக இங்கு வருவது சாத்தியமா தெரியவில்லை. ஆனால் நான் கதை அடிக்கவில்லை. இதுமாதிரி ஓரிரு கனவுகளைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏன் என் குழந்தைகளே அதை நம்பவில்லை)

 • someswaran July 26, 2017, 9:54 AM

  வேலைக்கு போயும் இந்த கல்வி உங்கள் கனவில் வந்து விளையாடுகிறதே. விடாதீங்க கிரி இளங்கலை கணிதம் படியுங்கள் (கனவில்) எல்லாம் சரியாகிவிடும். கணக்கா? கிரியா? மோதி பார்த்துவிடுங்கள்.

 • Rajkumar July 27, 2017, 3:11 PM

  எனக்கு கனவுல ஒரு கதையே வந்தது.. அதுக்கப்புறம் அதே மாதிரி ஒரு சினிமாவும் வந்தது.
  கதை இங்கே சொல்லனுமா ?

 • கிரி August 2, 2017, 6:13 AM

  @யாசின் “கணக்கு போட்டீங்களானு உங்க பசங்கள கேட்ககூடாதுனு தான் என்னவோ இந்த கனவு உங்களுக்கு திரும்ப திரும்ப வருது போல”

  🙂 🙂 என் பையன் கிட்ட தமிழ் பற்றி மட்டும் தான் பேசுவேன்.. தமிழ் தேர்வு குறித்து மட்டும் ஆர்வமாகக் கேட்பேன்.

  @தமிழன் கனவு எல்லோருக்கும் வித்யாசமாக இருக்கும் போல உள்ளது.. நிச்சயம் யாராவது இதை Phd செய்து இருப்பார்கள் 🙂 .

  தேர்வு பயம் பலருக்கும் இருந்து இருக்கும் போல.. எனக்கு துணைக்கு ஆள் இருக்கிறார்கள் 🙂

  @சோமேஸ்வரன் அதான் பாருங்க… வேலைக்கு வந்தும் இந்த தேர்வு இம்சை என்னை விட மாட்டேங்குது

  @ராஜ்குமார் கண்டிப்பா.. 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz