வருத்தப்படாத கரடி சங்கம் :-)

Varutha Padatha Karadi Sangam

ன்னுடைய சிறு வயதில் நான் விரும்பிப் பார்த்த கார்ட்டூன் ஸ்பைடர் மேன் மற்றும் டாம் & ஜெர்ரி.

ஸ்பைடர் மேன் மற்றும் டாம் & ஜெர்ரி

ஸ்பைடர் மேன் அப்போது DD யில் ஞாயிறு மாலை 5.30 மணிக்குப் ஒளிபரப்புவார்கள்.

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது. எனவே, எங்கள் உறவினர் வீட்டில் இருக்கும் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் பார்க்க இதற்காகவே செல்வேன்.

மிக மிகப் பிரபலமான பாடல். அப்போது இதன் இசையும் பாடலும் மனப்பாடமாகத் தெரியும், இன்று வரை நினைவு இருப்பது வியப்பே! சில விசயங்கள் நமக்கு எப்போதுமே மறப்பதில்லை.

இதன் பிறகு இன்று வரை விரும்பி பார்ப்பது சலிக்காமல் டாம் & ஜெர்ரி மட்டுமே! இதைப் பல வருடங்களாகப் பார்க்கிறேன் ஆனால், அலுக்கவே இல்லை.

டாமின் முகச் சேட்டைகள், உடல் மொழிகள் எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பையே தரும்.

இதன் பிறகு என்னை எந்தக் கார்ட்டூனும் இது போலக் கவரவில்லை ஆனால், சமீபத்தில் சுட்டி தொலைக்காட்சியில் வரும் “வருத்தப்படாத கரடி சங்கம்” எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது.

வீட்டுல பசங்க இருந்தால், பெரும்பாலும் கார்ட்டூன் தான் ஓடிக்கொண்டு இருக்கும். அதில் எனக்கு நாட்டமில்லை. என் விருப்பம் எப்போதும் பாடல் மற்றும் திரைப்படங்கள் தான்.

வருத்தப்படாத கரடி சங்கம்

ஆனால், எதேச்சையாக ஒரு நாள் “வருத்தப்படாத கரடி சங்கம்” வந்த போது இரண்டு கரடிகள் மற்றும் வேட்டைக்காரரின் உடல் மொழிகளும் பேச்சும் ஈர்த்தது.

குறிப்பாகத் தம்பியாக வரும் கரடியின் உச்சரிப்பு எனக்குச் சிரிப்பையே வரவழைக்கும். தம்பி கரடியின் குரலுக்கும் சேட்டைக்கும் அப்பாவித்தனத்துக்கும் தீவிர ரசிகன் ஆகி விட்டேன்.

தற்போது பசங்களுக்குப் போட்டியாக நானும் பார்க்க உட்கார்ந்து விடுகிறேன். இந்தக் கார்ட்டூன் வந்தால், பசங்க “அப்பா! உங்களுக்குப் பிடிச்ச கார்ட்டூன்.. வாங்க!” என்று அழைக்கிறார்கள்.

வேட்டைக்காரராக வருபவர் வடிவேல் போலப் பேசுவது, அவ்வப்போது நகைச்சுவையான வசனத்தைப் பேசுவது என்று கலக்குகிறார்.

தம்பி கரடி பேசினாலே என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை 🙂 . இதை ரசிக்க முக்கியக் காரணம் இதனுடைய அப்பாவித்தனமும் குரலுமே!

பின்னணிக் குரல்

இவற்றுக்குப் பின்னணிக் குரல் கொடுப்பவர்கள் அசத்தல். இவர்கள் வீட்டுல கூட இப்படியே பேசுவார்களோ என்று எனக்குச் சந்தேகம் 🙂 .

ஆக மொத்தத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என்னைக் கவர்ந்த கார்ட்டூன். இந்தக் கார்ட்டூனின் வெற்றிக்குக் காரணம் இவர்களின் பின்னணி குரலே! என்றால் அது மிகையல்ல.

அண்ணன் தம்பி கரடிகள், வேட்டைக்காரருக்கு குரல் கொடுக்கும் நபர்களை நேரில் சந்திக்க ரொம்ப விருப்பம். தூள் கிளப்புறாங்க மூவரும்.

உங்களுக்கு நேரமிருந்தால், ஒரு முறை பாருங்கள்..  நீங்களும் ரசிக்க வாய்ப்புள்ளது.

டேய்! அண்ணா.. பாருடா.. 😀 😀 . தினமும் இரவு 10 மணிக்கு.

{ 4 comments… add one }
 • Balasubramanian April 26, 2017, 8:22 AM

  எனக்கும் மிக பிடித்த நிகழ்ச்சி. தமிழ் வசனங்கள் மிக மிக வேடிக்கையானவை.

 • karthikeyan April 26, 2017, 8:44 AM

  அந்த டேய் அண்ணா யாருங்கண்ணா ?

  நம்ம லெவலுக்கு (?) ஒரு நிகழ்ச்சி சொல்லுங்க அண்ணா

 • Mohamed Yasin April 29, 2017, 7:25 AM

  கிரி, சிறு வயதில் மாயாவி & ஜங்கிள் புக் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. பள்ளி பருவத்தில் சந்திரகாந்தா & அலிப் லைலா தொடரை ஒரு வாரம் கூட தவறவிட்டது கிடையாது. 11 வது படிக்கும் போது சக்திமான் தொடரையும் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

  ஆனால் தற்போது எந்த கார்டுனையும் பார்ப்பது இல்லை. எப்போதாவது பாப்பாய் அலுவலகத்தில் யூடூப்பில் பார்ப்பதுண்டு. வீட்டில் டிவி இல்லாததால் என் பையனுக்கும் கார்ட்டூன் அதிகம் பார்க்கும் வாய்ப்பு இல்லை. அவன் உலகம் விளையாட்டு பொருட்கள், ரயில், விமானம், Lamp Post , கார் என வித்தியாசமாக உள்ளது. உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து KG1 பள்ளிக்கு செல்கிறான்.

 • கிரி May 7, 2017, 3:01 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @கார்த்திக் பார்க்க போறவங்க தான் 🙂

  @ஜங்கிள் புக் பாடல் இன்னும் நினைவில் உள்ளது..

  பையன் பள்ளிக்கு அனுப்புவது உடனில் செல்வது செமையா இருக்கும்.. நான் உடன் செல்ல முடியவில்லை.. ஆனால் கிளம்பும் போது பார்க்க நன்றாக இருக்கும் 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz