“ஜெ” இறுதியில் சாதித்தது என்ன?!

Jeyalalitha

ழல் என்பது இந்தியாவில் கரையான் போல அரசியல்வாதிகளில் இருந்து அடிமட்ட பொதுமக்கள் வரை நீக்கமற பரவி விட்டது.

பெரியளவில் ஊழல் செய்பவர்கள் தங்கள் பணப் பலத்தால் தப்பிவிடுவதால், சிறியளவில் செய்பவர்கள் தங்களின் ஊழலுக்கு, லஞ்சத்துக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள்.

அதாவது “அவ்வளவு பணம் கொள்ளையடிக்கிறான் அவனை விட்டுட்டு என்னைப் பிடிக்கறாங்க!”

மக்களும் 2000 லஞ்சம் வாங்குபவனைக் கைது செய்தால், கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பவனை விட்டுவிட்டு இவனைப் பிடிக்கறாங்க என்று தவறை நியாயப்படுத்தும் மன நிலைக்கு வந்து விட்டார்கள்.

“ஜெ” ஊழல்

“ஜெ” முதல் முறையாக முதலமைச்சர் ஆன போது ஆர்வக் கோளாறில், கண்ணு மண்ணு தெரியாமல் ஊழல் செய்து மாட்டிக்கொண்டார். அதற்குத் தான் தற்போது சசியும் உள்ளே இருக்கிறார்.

இதன் அர்த்தம் அதன் பிறகு இவர்கள் ஊழல் செய்யவில்லை என்பதல்ல, மாட்டிக்காம எப்படி ஊழல் செய்வது என்று கற்று தேர்ந்து விட்டார்கள் அவ்வளவே!

“ஜெ” காலமாகி விட்டதால் அவர் செய்த / அனுமதித்த ஊழல்கள் சரியென்று ஆகி விடாது.

“ஜெ” க்குக் குடும்பமில்லை. எனவே ஒரு கட்டத்தில் ஊழலை நிறுத்தி மக்களுக்காகச் செய்ய அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அதைப் பயன்படுத்தவில்லை.

“ஜெ” க்கு இருந்த அதிகாரத்துக்கு, ஆளுமைத் திறனுக்கு எவ்வளவோ திட்டங்களை, பல நல்ல செயல்களை மக்களுக்காக அதிரடியாகச் செய்து இருக்கலாம். நேர்மையான திறமையான நிர்வாகத்தைக் கொடுத்து இருக்கலாம். ஏராளமான வாய்ப்புகள் இருந்தன.

ஒரு கற்பனை செய்து பாருங்கள்

“ஜெ” க்கு இருந்த ஆளுமைத் திறனுக்கு, அவருக்கு மற்றவர்களிடம் இருந்த பயத்துக்கு, அவர் என்ன சொன்னாலும் செய்யக் கூடிய அளவில் அரசாங்கத்தில் உள்ளவர்களும் கட்சியில் உள்ளவர்களும் இருந்தார்கள்.

அந்த அளவுக்கு அனைவரையும் மிரட்டி வைத்து இருந்தார். அதோடு குடும்பம் போன்ற மற்ற அரசியல்வாதிகளுக்கு இருக்கும் வழக்கமான நெருக்கடிகளும் இல்லை. எனவே, யாருக்கும் பயப்படக் கவலைப்படத் தேவையில்லை.

இதைப் பயன்படுத்தி, ஆற்று மணலை திருடுபவர்களைக் கடுமையாகத் தண்டித்து, ஆறு ஏரி குளங்களைத் தூர்வார கட்டளை பிறப்பித்து, சாலை முழுவதும் மரங்களை வளர்க்க உத்தரவிட்டு இருக்கலாம். நிர்வாகம் சரியாக செயல்படுகிறதா என்று கண் காணித்து இருக்கலாம்.

ஊழல் செய்பவர்களைப் பணியில் இருந்து நீக்கி, புதிய திட்டங்களில் கொள்ளை அடிப்பவர்களைக் கடுமையாகத் தண்டித்து என்று அற்புதமாக நிர்வாகம் செய்து இருக்க முடியும்.

மேற்கூறியவை எதுவுமே சாத்தியமற்ற சூழ்நிலை என்று கருத முடியாது, அனைத்துமே “ஜெ” செய்து இருக்க வாய்ப்புள்ளவையே! ஆனால், செய்யவில்லை.

இறுதியில் என்ன கிடைத்தது?

“ஜெ” இத்தனை ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளை அடித்து அவரால் அந்தப்பணத்தால் என்ன சாதிக்க முடிந்தது?

அவரால் அப்பலோ செல்ல முடியாமல் தவிர்க்க முடிந்ததா?

அவ்வளவு பணம் இருந்தும் 75 நாட்களாகப் படுக்கையில் தானே இருந்தார்!

இவர் கொள்ளையடித்த பணம் இவர் உடல் நிலையைச் சரி செய்ய முடிந்ததா?

எத்தனையோ திறமையான மருத்துவர்கள் இருந்தும் அவர்களாலும் இறப்பை தடுக்க முடியவில்லையே!

மக்களை ஏமாற்றி, வஞ்சித்து ஊழல் செய்த பணத்தை அவர் செல்லும் போது கொண்டு செல்ல முடிந்ததா?

அவர் ஆசை ஆசையாகக் கட்டிய போயஸ் தோட்ட வீட்டை கொண்டு செல்ல முடிந்ததா?

இப்பணத்தால் அவர் சாதித்தது என்ன? இதை அப்படியே ஒரு ஊழல் குடும்பத்துக்குச் செல்லத்தானே தற்போது வழி செய்து இருக்கிறார்.

இவ்வளவு பணத்தை மக்களுக்கு, அவர்களின் முன்னேற்றத்துக்கு, மாநில வளர்ச்சிக்குச் செய்து இருந்தால், இன்னும் பாராட்டி இருப்பார்களே!

ஊழல் செய்தும் சிறு உதவிகளுக்கே வாழ்த்தும் உள்ளங்கள், உண்மையாகவே உதவி செய்து இருந்தால், எப்படி வாழ்த்தி இருப்பார்கள்?!

செல்ஃபி / எங்கள் அம்ம்ம்ம்மா

இவ்வளவு நாட்களாக அவர் முன் கூனிக் குறுகிக் கொண்டு இருந்தவர்கள், பயப்பட்டவர்கள் இறந்த உடல் முன்பே செல்ஃபி எடுத்தார்களே!

சிறைக்குச் சென்ற போது கதறிக் கதறி அழுதவர்கள் கெக்கே பிக்கேன்னு உடல் முன்பு சிரிச்சுட்டு இருந்தார்களே!

அம்மா அம்மா என்று உருகிக்கொண்டு இருந்தவர்கள், இறந்த இரண்டே நாட்களில் மறந்து சசியே சரணம் என்றானார்களே!

சசிகலா அல்ல எங்கள் சின்னம்மா என்றவர்கள் இரு மாதங்களில் சின்னம்மா அல்ல “எங்கள் அம்ம்ம்ம்மா” என்று “ஜெ” இடத்தையே கொடுத்தார்களே!

“ஜெ” தன் முன்பு இருந்தவர்கள் அனைவரும் திறமையான நடிகர்கள் என்பதை நிரூபித்ததைத் தவிர தன் மிரட்டலால் சாதித்தது என்ன?

“தமிழக அரசின் திட்டம்” என்ற பெயரை வைக்காமல், அம்மா உணவகம், குடிநீர் என்று எல்லாத்திலும் “அம்மா அம்மா” என்று வைத்து இன்று இறுதியில் அரசு அலுவலங்களில் கூட “ஜெ” படத்தை வைக்க முடியவில்லையே!

இறுதியில் ஊழல் பேர்வழி என்ற பெயரோடு தானே சென்று இருக்கிறார். எதிர்காலம் இவரைத் தைரியமானவர் என்றாலும் ஊழல்வாதி என்றே நினைவு வைத்து இருக்கும்!

அன்றைய காமராஜர் போன்றவர்களை இன்று மக்கள் மதிக்கிறார்கள் ஆனால், தற்போதைய தலைவர்கள் மக்கள் மனதில் ஊழல்வாதிகள் என்ற பெயரிலேயே வீற்று இருப்பார்கள்.

எவ்வளவு பணம் கொள்ளை அடித்தாலும் அதைக் கொண்டு செல்லப் போவதில்லை என்பதை அரசியல்வாதிகள் உணரவும் போவதில்லை, எவ்வளவு அனுபவங்கள் கிடைத்தாலும் திருந்தவும் போவதில்லை.

“ஜெ” க்கு எவ்வளவோ ஊழல் இல்லாத சிறப்பான மக்கள் நிர்வாகத்தைக் கொடுக்கக் கூடிய வாய்ப்பிருந்தும் வீணடித்து விட்டாரே! என்ற ஆதங்கத்தில் எழுதியதே மேற்கூறியவை.

தொடர்புடைய கட்டுரை

செல்வி ஜெ. ஜெயலலிதா 1948 – 2016

கொசுறு

விரைவில், “ஜெ”, கலைஞருக்கு பிறகு மாறும் அரசியல் களம் / மக்கள் எண்ணம் பற்றிய கட்டுரை.

பிற்சேர்க்கை

மாறி வரும் தமிழகம் / தமிழர்கள்

{ 5 comments… add one }
 • Mohamed Yasin March 8, 2017, 9:32 AM

  கிரி, பணத்தை பற்றி முன்பு படித்த ஒன்று..(பணம் இல்லாதவன் தான் பணத்தை மதிப்பதில்லை) இது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. பணம் இல்லாதவன் பணத்தை தேட முயற்சிக்கிறான்; பணம் அதிகம் உள்ளவன் அதை இன்னும் இரட்டிப்பு செய்ய முயற்சி செய்கிறான்; பிரச்னையே இங்கு தான் ஆரம்பிக்கிறது.

  அடிப்படை பிரச்சனை என்னவென்றால் அதிகாரமும், பணமும் குறிப்பிட்ட இடங்களில் முழுவதுமாக ஒரே இடத்தில குவிக்கப்பட்டுள்ளது. அது பகிர்ந்து அளிக்கப்படாததே அடிப்படையான பிரச்சனை. நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள் “ஜெ” விற்கு மட்டும் அல்ல, அனைத்து அரசியல்வாதிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சாரும். அவர்களில் சதவீதம் வேண்டுமானால் வேறுபடலாம்.

  “ஜெ” விடம் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பு சென்னை வெள்ளத்திற்கு பிறகு ஏழைகளுக்கு ஏதேனும் புதிய நல்ல திட்டங்கள் அமையும் என்று நினைத்தேன். ஏனெனில் வெள்ளத்தின் பாதிப்பை ஏழைமுதல், பணக்காரர்கள் வரை கண்ணேதிரே கண்டனர். ஆனால்???

  நீங்கள் முன்பு குறிப்பிட்ட மயிலாப்பூர் MLA நடராஜன் போன்ற நேர்மையானவர்களை அடையாளம் கண்டு அவர்களில் மூலம் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம். இரண்டு ஆட்சிகளிலும் சகாயம் அவர்களில் துறைகளை மாற்றி, மாற்றி கொடுத்தார்களே தவிர, அவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. தற்போது பணி புரியும் துறை கூட முக்கியமான துறை அல்ல என்று நினைக்கிறேன்..

  “ஜெ” சொத்துகுவிப்பு வழக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. ராஜ்குமார் – சுவாதி கொலை வழக்கு நேற்று இறுதி தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வடநாட்டில் ஒரு சிலை நிறுவ 1000 கோடிக்கு மேல் திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் பல ஏக்கர் காட்டு பகுதியை அகற்றிவிட்டு ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது… இதுபோல பல நிகழ்வுகள் நடைபெற்று கொண்டு தான் வருகிறது.

  தவறு செய்தவன் திருந்தி மீண்டும் அந்த தவறை செய்ய கூடாது என்பதற்க்காக தான் சிறை சாலைகள் உள்ளது. ஆனால் அவைகளில் சிறப்பு சலுகைகள், சிறப்பு வகுப்புகள். அங்கு கூட பேதைமை உள்ளது. சிறையில் இருந்து கூட ஆட்சி நடத்தும் சூழல் உள்ளது.

  தனிமனித ஒழுக்கம், நேர்மை, அன்பு, அறம், எதிர்காலங்களில் இவைகளை தமிழ்மொழியில் காணமுடியுமா என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு இவ்வார்த்தைகளை நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. நிறைய பேசலாம் கிரி, மனசு வலிக்கிறது..

 • Sekar March 9, 2017, 1:27 PM

  சூப்பர் இந்த கேள்வியை நான் எல்லா தமிழனிடமு ம் எதிர் பார்க்கிறேன் . ஜெயா இருந்த வரை நிறைய பேர் பயத்திலும் , பலர் தன் சொந்த சாதிக்காரி என்ற நினைப்பிலும் அந்தம்மாவை எதிர் க்காமல் விட்டதன் பலன் , இன்று டாஸ்மாக் மணல் கொள்ளை ஊழல் எல்லாமே நியாயங்களாகி வித்தது . அதுவும் OPS மாதிரி ஒரு அமுக்குளி திருடன் எல்லாம் புனிதனாகி விட்டதுதான் கொடுமை

 • Srini March 9, 2017, 3:29 PM

  /*“ஜெ” க்கு இருந்த ஆளுமைத் திறனுக்கு*/ ????
  இது உண்மையா? … “its a myth” … அனைத்து முறையும் தவறான நிர்வாகம் செய்தவர் … திறமை, ஆளுமைத் திறன் அற்றவர் என்பதே உண்மை.

 • கிரி March 12, 2017, 5:04 PM

  @யாசின்

  “இரண்டு ஆட்சிகளிலும் சகாயம் அவர்களில் துறைகளை மாற்றி, மாற்றி கொடுத்தார்களே தவிர, அவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. தற்போது பணி புரியும் துறை கூட முக்கியமான துறை அல்ல என்று நினைக்கிறேன்..”

  இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு.

  “வடநாட்டில் ஒரு சிலை நிறுவ 1000 கோடிக்கு மேல் திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் பல ஏக்கர் காட்டு பகுதியை அகற்றிவிட்டு ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது… ”

  இதையெல்லாம் கேள்விப்படும் போது வரும் கோபம்… என்னமோ போங்க.

  @சேகர் அதே!

  @ஸ்ரீனி

  ஆளுமைத் திறன் வேறு தவறான நிர்வாகம் வேறு.

  ஆளுமைத் திறன் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது. மோடியை கூட ஒரு பயத்தில் / மரியாதையில் வைத்து இருந்தது. இதெல்லாம் தற்போது உள்ளவர்களிடம் சாத்தியமே இல்லை.

  தவறான நிர்வாகம்.. அவர் செய்தது பெரும்பான்மை அது தான். ஆளுமைத்திறன் இருந்தாலும் தவறான நிர்வாகத்தால், ஊழலால் பயனில்லாமல் போனது.

  மேலே யாசின் கூறிய சகாயத்தை எல்லாம் சரியாக பயன்படுத்தி இருந்தால்.. நினைத்துப் பாருங்கள்.

 • காத்தவராயன் March 29, 2017, 1:31 PM

  சிங்கம்3 இல் வில்லன் ஒரு டயலாக் சொல்லுவாறே!

  பணம் இவங்களுக்கு போதை.

Leave a Comment