இருமுகன் – தொடரி – றெக்க – தேவி – கொடி

iru-mugan-movie-poster

இருமுகன்

இரு வேடங்களில் விக்ரம். தனுஷ் போல ஒரு வெற்றி படத்துக்காகக் காத்திருந்தவருக்குக் கிடைத்த ஒரு பெரிய வெற்றி படம்.

திருநங்கையாக வரும் கதாப்பாத்திரத்தை விக்ரம் இன்னும் சிறப்பாகச் செய்து இருக்கலாம். ஒப்பனை காரணமாகவோ / வயதின் காரணமாகவோ விக்ரம் முகம் மாறுபட்டு இருந்தது.

Speed தொழில்நுட்பம் சுவாரசியமாக இருந்தது. நயன்தாராவை சுட்டதில் கேள்வி உள்ளது ஆனால், Spoiler கருதி குறிப்பிடவில்லை. தம்பி ராமையா நகைச்சுவை எனக்கு அவ்வளவாக திருப்தியில்லை அவர் பதவிக்கு அது பொருத்தமாக இல்லையென்பதால்.

இயக்குநர் ஆனந்த் ஷங்கரின் “அரிமா நம்பி” படம் அளவுக்கு இப்படம் என்னைக் கவரவில்லை. என் மனதுக்குத் திருப்தியான ஒரு படத்தை விக்ரமிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

தொடரி

நான் சமீபத்தில் பார்த்த படங்களிலேயே மிகக் கொடுமையான திரைப்படம் தொடரி தான்.

மைனா போன்ற எதார்த்தமான படங்களைச் சிறப்பான திரைக்கதையில் எடுத்த பிரபு சாலமன் தான் இப்படத்தையும் இயக்கினார் என்று கூறினால் நம்பச் சிரமமாக இருக்கும்.

தனுஷ் நடிக்க வேண்டிய படமே அல்ல!

படத்தில் கீர்த்திச் சுரேஷை எப்படியெல்லாம் கோமாளி போலச் சித்தரிக்க முடியுமோ அவ்வ்வ்வ்வ்ளவு செய்து தரைமட்டமாக்கி விட்டார் இயக்குநர். தமிழ்ப் படங்கள் என்றாலே நாயகிகளைக் கிறுக்குகளாகக் காட்டுவது வேண்டுதல் போல நடந்து கொள்கிறார்கள்.

நான் இதுவரை பார்த்ததிலேயே இந்த மாதிரி நாயகிகள் என்றால் பளிச்சென்று நினைவுக்கு வருவது லைலா, த்ரிஷா (விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற சில படங்கள் விதிவிலக்கு) மற்றும் ஜெனலியா தான்.

இவர்கள் மூவரையும் கோவில் கட்டி கும்பிடலாம் என்பது போலக் கீர்த்திச் சுரேஷை நடிக்க வைத்து இருக்கிறார்.

ஷப்பா! சத்தியமா முடியல.. இதுல போதாதற்குத் தனுஷ் வேற கூடச் சேர்ந்துக்கிட்டு 🙁 .

மிகவும் பரபரப்பான தருணங்களில் கிண்டல் செய்து கொண்டு பாட்டு பாடிட்டு மிகக் கொடுமையான காட்சியமைப்பு.

தேவி

பேயையே காட்டாமல் பேய் படம் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள் 🙂 . உண்மையாகவே வித விதமா யோசிக்கறாங்கப்பா..!

நீண்ட வருடங்களுக்குப் பிறகு பிரபு தேவா நடிக்க வந்துள்ளார். அலட்டிக்காமல் நடித்து / ஆடி அசத்தி இருக்கிறார். வயது தெரிவது வருத்தமாக இருக்கிறது ஆனால், முடிந்த வரை உறுத்தாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தமன்னா சாதாரணமாகவும் பேயாகவும் வந்து ரசிக்க வைக்கிறார். கூடவே செமத்தியா ஒரு நடனமும் ஆடுகிறார். இதை அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்து இருப்பீர்கள், படம் பார்க்கவில்லை என்றாலும்.

பிரபு தேவா நடனம் பார்க்கவே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய தயாரிப்பு என்றாலும், அடக்கி வாசித்து நம்மையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.

தமிழ் வாசனை குறைவு என்ற எரிச்சலைத் தவிர்த்துப் பார்த்தால் ரசிக்கக் கூடிய படமே!

இப்படத்தின் வெற்றியால், தயாரிப்பாளர்கள் “ஆடி” காரை இயக்குநர் விஜய்க்கு பரிசளித்துள்ளார்கள்.

றெக்க

இப்படத்தில் ஆயிரம் கேள்விகள். விஜய் சேதுபதி ஏன் இப்படத்தில் நடித்தார் என்று புரியவில்லை.

கடைசிவரை எதோ செய்யப் போகிறார் என்றே கொண்டு சென்று இறுதியில் ஒன்றுமே செய்யாமல் முடித்து விட்டார்கள், ஒரே ஒரு சண்டையைத் தவிர.

லட்சுமி மேனன் ஒப்பனையை ஏற்கனவே போதுமான அளவுக்குச் சமூகத்தளங்களில் கிண்டல் செய்து விட்டதால், அதைப் பற்றி ஒன்றும் கூற விரும்பவில்லை.

சுமார் படம்.

கொடி

சமீப படங்களால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த தனுஷுக்கு கொடி நிம்மதி அளித்துள்ளது. இரு வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார். தனுஷ் உடம்பு போட்டால் இன்னும் பல கதாப்பாத்திரங்களை அசத்தலாகச் செய்ய முடியும்.

த்ரிஷா வில்லியாக நடித்துள்ளார். த்ரிஷாக்கு நடிக்கச் சிறப்பான வாய்ப்பு ஆனால், அவருடைய முகம் உடல்வாகு இக்கதாப்பாத்திரத்துக்குச் சற்றும் பொருந்தவில்லை.

த்ரிஷா கதாபாத்திரத்துக்குச் சரியான நாயகியை தேர்வு செய்து இருந்தால், ரணகளமாக இருந்து இருக்கும். எப்படிக் கோட்டை விட்டார்கள்?!

இக்கதாப்பாத்திரத்துக்குக் கொஞ்சம் திமிரும், தெனாவெட்டும், கிராமத்து முகமாகவும் ஒரு பெண் நடித்து இருந்தால், பட்டாசாக இருந்து இருக்கும். நடிக்க, மிரட்ட ஏகப்பட்ட வாய்ப்பு. சரியான வாய்ப்பை தவறவிட்டது எனக்கு வருத்தமே!

கதையில் நிறையத் திருப்பங்கள், சலிப்பாக்காத திரைக்கதை. நிச்சயம் உங்களை ஏமாற்றாது.

{ 5 comments… add one }
 • Mohamed Yasin November 17, 2016, 7:25 AM

  நீண்ட நாட்களுக்கு பிறகு திரைப்படங்கள் குறித்த பதிவு, கிட்டத்திட்ட ஒரு ஆண்டுக்கு பின் பார்த்த படம் தொடரி.

  இன்னும் ஒரு ஆண்டுக்கு பின் அடுத்த படத்தை பார்க்க முடிவு செய்துள்ளேன்.

  தற்போது சில நாட்களாக MSV – கண்ணதாசன்-வாலி பாடல்களை கேட்டு வருகிறேன். பல நாட்களுக்கு பின் மீண்டும் கேட்டாலும் சிறிது கூட அலுப்பு தட்டவில்லை.

  MSV குறித்த சில தகவல்களை படிக்கும் போது – கேட்கும் போது நிச்சயம் அவர் ஒரு சகாப்தம் தான். பகிர்வுக்கு நன்றி கிரி.

 • Someswaran November 17, 2016, 1:02 PM

  Films like thodari has to come, then only we can welcome good movies and differentiate and compare movies.

 • Lenin Muthulingam November 19, 2016, 2:01 AM

  காஷ்மோரா பார்க்கவில்லையா?

 • kanagaraj November 19, 2016, 3:12 PM

  ப்ரோ டயம் இருந்தா டோன்ட் பிரி த் படம் பாருங்க.

 • கிரி November 22, 2016, 2:02 PM

  @யாசின் “இன்னும் ஒரு ஆண்டுக்கு பின் அடுத்த படத்தை பார்க்க முடிவு செய்துள்ளேன்”

  😀

  பழைய பாடல்கள் என்றும் இனியவையே!

  @சோமேஸ்வரன் ஐயோ அதற்காக இப்படி ஒரு தண்டனையா!!

  @லெனின் இதை வெளியிட்ட அன்று மாலை தான் பார்த்தேன். ஓகே படம்.

  @கனகராஜ் பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது.

  சிங்கப்பூரில் இருந்த போது ஒரு படம் விடாம பார்த்துட்டு இருந்தேன்.. இப்ப ஒரு படம் கூட பார்க்க முடியலை 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz