சுப்ரபா Mess – மெரினா – ஜோக்கர் – சரவணபவன்

Marina-Beach-Trees

மெரினா

சென்னை மெரினா கடற்கரையில், வளர்ந்த மரங்களை நட்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் பெய்த மழையில் அனைத்து மரங்களும் உயிர் பிடித்து விட்டன. இன்னும் ஒரு வருடம் கழித்து மெரினாவைப் பார்த்தால், வளர்ந்த கிளைகளுடன், தழைகளுடனும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

குப்பைகளைப் போட குப்பைத்தொட்டிகள் இல்லாததால், மரத்தை சுற்றிக் கட்டப்பட்டுள்ள இடமே தற்காலிக குப்பை தொட்டியாக மாறி இருக்கிறது.

ட்விட்டர்

ட்விட்டருக்கு வரவேற்ப்பு குறைவானதால் தனது நிறுவனத்தை விற்க ட்விட்டர் முயன்று வருகிறது.

ஆப்பிள், கூகுள், டிஸ்னி போன்ற பெரிய நிறுவனங்கள் போட்டியில் இருந்ததாகக் கூறப்பட்டது ஆனால், தற்போது யாருமே ஆர்வம் காட்டவில்லை என்பதால் எப்படி விற்பது என்று ட்விட்டர் மண்டை காய்ந்து இருக்கிறது.

ட்விட்டர் தனது நிறுவனத்தை மூடும் என்று தோன்றவில்லை அப்படி ஒருவேளை நடந்தால், ட்விட்டரில் (மட்டும்) பிரபலமானவர்கள் நிலையை நினைத்துப் பார்த்தேன் 🙂 . எல்லோரும் ஃபேஸ்புக் வந்து விடுவார்களோ!

சரவண பவன்

சரவணபவனுக்கு முன்பு போலக் கூட்டமில்லை என்று நண்பர் கூறினார்.

Tiffin விலை எனக்குக் கட்டுப்படியாகாததால் செல்லவேண்டி இருந்தால், சாப்பாடுக்குத் தான் செல்வேன். சமீபமாக நான் செல்லும் நேரம் அப்படி இருக்கிறதா இல்லை உண்மையாகவே அப்படியா என்று தெரியவில்லை, கூட்டம் குறைவாக உள்ளது.

முன்பெல்லாம் உட்கார இடமே கிடைக்காது, இடம் பிடிப்பதே பெரிய பிரச்சனையாக இருக்கும் ஆனால், தற்போது அது போல இல்லை. நான் செல்லும் நேரம் தான் காரணமாக இருக்கும் என்று தற்போதும் நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Surgical Strikes

இந்திய இராணுவம் Surgical Strikes நடத்தியது அனைவருக்கும் தெரியும். இதற்குப் பழிவாங்க பாகிஸ்தான் “ஹேக்கர்கள்” இந்திய நிறுவனங்கள், இணையத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் அனைவரும் பாதுகாப்பாக இருந்துகொள்ளும் படி நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கையை இணைய நிறுவனங்கள் அனுப்பி வருகின்றன. DDoS attacks, Patches, Antivirus போன்றவற்றைச் சரிபார்க்கக் கூறியிருக்கிறார்கள்.

Chennai MTC Bus

சென்னை மாநகரத் தீப்பெட்டிப் பேருந்து

சென்னை மாநகரப் புதிய பேருந்துகளைத் தீப்பெட்டி போல வடிவமைத்து கடுப்பேத்தி வருகிறார்கள். நடத்துநர் கூட்டமான பேருந்தில் நடுவே நடந்து வர இடமே இல்லை. இரண்டு பேர் நின்றாலே நெருக்கிட்டுத் தான் நிற்க வேண்டியதாக இருக்கிறது.

இருக்கையும் சிறியது என்பதால் காலை வசதியாக வைக்க முடியவில்லை, அதோடு இருவர் உட்காரப் போதுமான இடமும் இல்லாததால் செம்ம கடுப்பாக இருக்கிறது. இப்பெல்லாம் பழைய பேருந்து வந்தாலே மகிழ்ச்சியாக உள்ளது.

கனடாவின் தமிழ் மரபுத் திங்கள்

2017ம் ஆண்டு முதல் கனடாவில் ஜனவரி மாதம் ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் அக்டோபர் 5ம் தேதி அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் மூலம் நிறைவேறியுள்ளது.

தமிழர்களுக்கு நிச்சயம் பெருமையளிக்கும் செய்தி. இது எப்படிச் சாத்தியமானது! என்று எனக்கு இப்பவும் வியப்பாக உள்ளது. இதை முன்னெடுத்த மற்றும் ஏற்றுக்கொண்ட அனைத்துக் கட்சியினருக்கும் மிக்க நன்றி.

தமிழர்கள் திருவிழாவான “பொங்கல் திருவிழா” வரும் ஜனவரி மாதத்தைத் தமிழ் மரபுடைமை (Heritage) மாதமாகக் கொண்டாட முடிவு செய்து இருப்பது பொருத்தமான அறிவிப்பு.

சுப்ரபா Mess

சென்னை ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதைக்குப் பிறகு, பச்சையப்பா கல்லூரிக்குப் பின்புறம் “சுப்ரபா” என்ற ஒரு Mess உள்ளது. ₹75 மதிய உணவுக் கட்டணம்.

ஒரே நேரத்தில் சாப்பாடை இலையில் வைத்து விடுவார்கள். சுவை தரம் நன்றாக உள்ளது. இந்தப்பகுதியில் உள்ளவர்களுக்கு இது பற்றித் தெரிந்து இருக்கும். தெரியாதவர்கள் சென்று வாருங்கள். நிச்சயம் உங்களை ஏமாற்றாது.

Joker Tamil Movie

ஜோக்கர்

கடந்த வாரம் தான் ஜோக்கர் படம் பார்த்தேன். படம் மோசமில்லாமல் ஓரளவுக்கு ஓடியது என்று செய்திகளில் படித்தேன். இப்படம், எப்படி ஓடும் என்று நினைத்து எடுத்தார்கள்!! உண்மையிலேயே வியப்பு தான், பாராட்ட வேண்டிய செயல்.

இதில் வந்துள்ள எதுவுமே பொய்யில்லை, அனைத்துமே தற்போது சமூகத்தில், அரசியல்வாதிகள் இடையே நடந்து கொண்டு இருப்பவையே.

“இணையத்தில் பார்ப்பவர்கள் இக்கணக்கில் பணத்தை செலுத்தி விடுங்கள்” என்று ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத் தகவல் உங்களுக்குத் தெரியுமா?

நான் பணம் கட்டிப் பார்க்கும் தளத்தில் தான் இப்படத்தைப் பார்த்தேன். இருப்பினும் இதற்குக் கொடுக்க விரும்புகிறேன். ஜோக்கர் என்ற தலைப்பால் வரிவிலக்கு கிடைத்து இருக்காது. தமிழில் பெயர் வைத்து இருந்து இருக்கலாம்.

{ 11 comments… add one }
 • Mohamed Yasin October 13, 2016, 6:31 AM

  மெரீனாவை இது வரை பார்த்தது கிடையாது.. பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. டுவிட்டர் சில நாட்களுக்கு ஏதேனும் பெரிய நிறுவனமே வாங்கும் என நினைக்கிறன். FACEBOOK வாங்கினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

  சரவணபவன் இது வரை எங்கும் சாப்பிட்டதில்லை.. UAE லும் நிறைய கிளைகள் உண்டு.. விலை கொஞ்சம் அதிகம் என்று கேள்விப்பட்டதுண்டு. கனடா நாட்டை பற்றி சில குறிப்புகளை எழுத்தாளர் முத்துலிங்கம் அவ்வப்போது குறிப்பிடுவதுண்டு.. தற்போதைய நிகழ்வு மகிழ்ச்சியை தருகிறது.

  ஜோக்கர் படம் பார்க்கவில்லை. இணையத்தில் விமர்ச்சனம் மட்டும் படித்தேன். கோமாளி என்று கூட வைத்து இருக்கலாம் என எண்ணுகிறேன்.. கோமாளியை விட ஜோக்கர் பயன்பாட்டில் அதிகம் உள்ளது போல் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி கிரி.

 • நான் கார்த்திகேயன் October 13, 2016, 5:26 PM

  டுவிட்டரை நம்ம தல கூகுள் வாங்கினால் நன்றாக இருக்கும் . இது என்னுடைய விருப்பம்.
  சரவணபவன் பக்கமே நான் எட்டிப்பார்ப்பது இல்லை. ஒரு காலத்தில் ஆசைப்பட்டதுண்டு சென்னையில் இருக்கும் போது. ஆனால் கையேந்தி பவன் என்னை இன்று வரை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது.

  மெரீனாவில் எவ்ளோ தான் அழகு படுத்தினாலும் சென்னைவாசிகள் தங்களுடைய மெரினாவை பொறுப்பாக பார்த்துக் கொள்ள மாட்டார்கள். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சாத்தனூர் அணையில் நான் இது வரை எந்த குப்பையும் போட்டது இல்லை. எப்போது சென்றாலும் குப்பையை பாலித்தின் கவரில் எடுத்து வந்து விடுவேன். இந்த பழக்கம் இங்கு மட்டும் தான்.

  • நான் கார்த்திகேயன் October 13, 2016, 5:34 PM

   குப்பையை திரும்ப எடுத்து வருவதில் ஒரு சுயநலமும் உள்ளது அண்ணா. அணையில் வேலை செய்வோரில் 90 சதவிகிதம் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள். குப்பையை போடுவதை பார்த்துவிட்டால் அந்த இடத்திலேயே கண்டபடி திட்டுவார்கள். சிறுவயதில் நிறைய வாங்கி இருக்கிறேன் . அந்த பயம் இன்னும் போகவில்லை.

   ஜோக்கர் படத்தை குரு சொமசுந்தரத்துக்காகவும் ராஜு முருகன் அவர்கள் இருவருக்காகவும் தான் பார்த்தேன். நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நான் முருகன் அவர்களிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன். முக்கியமாக படத்தில் வரும் போராட்ட காட்சிகள் அவர்களை கலாய்ப்பதாகவே எனக்கு தோன்றியது. ஒரே ஒரு நல்ல விஷயம் நிறைய போராட்ட முறைகளை தெரிந்து கொண்டேன் .

 • விகடன் முதல் மற்ற அனைத்து பத்திரிக்கைகளும் இப்படித்தான் துண்டு துண்டாக சிறிய செய்திகளாக கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நானும் மாறிவிட்டேன். நீங்களும் மாறீட்டீங்க.

 • Tamilmani October 14, 2016, 2:17 PM

  ஆர்வமாக இருக்கிறது. சென்னைக்கு வேலை மாறுதல் கிடைத்திருக்கிறது. பொறுமையாக ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்க்க உள்ளேன். பெசன்ட் நகர் கடற்கரையைப் பார்க்க விரும்புகிறேன்.

  ஜோக்கர் படம் பார்க்க ஆவலாக இருந்ந போது புனே’வில் ஒரு வாரம் கழித்து தான் வெளியானது. நல்ல வேளை, இணையத்தில் தரவிறக்கம் செய்த பின்னும் பார்க்காமல் இருந்தேன்.

 • Sathyanarayanan Srinivasan October 16, 2016, 1:18 AM

  Reason for less rush Saravana Bhavan might be due to more branches, and also time you went might be a factor

 • கிரி October 18, 2016, 9:29 AM

  @யாசின் நீங்கள் சென்னை அதிகம் வந்தது இல்லையா… அல்லது வந்ததே இல்லையா..

  கோமாளி என்று வைத்து இருக்கலாம்.. இது போல படம் தைரியமாக எடுத்து விட்டு பெயர் மட்டும் ஏன் ஆங்கிலம் என்று தெரியவில்லை.

  @கார்த்தி அடிக்கடி கையேந்தி பவனில் சாப்பிட வேண்டாம். உடலுக்கு நல்லதல்ல.

  மெரினா குப்பையாகத் தான் இருக்கும்.. பழகி விட்டது.

  குப்பை எங்கும் போடாமல் இருப்பது நல்லது. இதை அப்படியே அனைத்து இடங்களுக்கும் பின்பற்று கார்த்தி.

  எனக்கு எதிர்பார்ப்பு இல்லாததால், ஜோக்கர் படம் சாதாரணமாகவே சென்றது.

  @ஜோதிஜி நான் 2011 ல் இருந்து இது போல எழுதி வருகிறேன். http://www.giriblog.com/2011/11/kosuru-news-17-11-2011.html

  @தமிழ்மணி

  வாங்க வாங்க! சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙂

  @சத்யநாராயணன்

  கிளைகள் அதிகம் என்பது காரணமாக எனக்கு தோன்றவில்லை. நேரமிருக்க வாய்ப்புண்டு.

  நண்பர் கூறினார் இக்கால இளைஞர்களை கவரவில்லை. இது நியாயமான காரணமாகத் தோன்றியது. ஏனென்றால், நான் காண்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதுக்காரர்களாகவே உள்ளார்கள்.

 • Mohamed Yasin October 19, 2016, 12:16 PM

  கிரி, சென்னைக்கு அடிக்கடி சென்றது கிடையாது. ஆனால் ஏழாம் வகுப்பு வரை என் தந்தை உயர்நீதி மன்றத்தில் பணிபுரிந்த போது (இறக்கும் வரை-1992) தாம்பரத்தில் தான் குடும்பம் இருந்தது. ஆனால் நான் மட்டும் 3 வயது முதல் கிராமத்தில் தாத்தா/பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்தேன்.

  வேலைதேடி அலைந்த நாட்களில் ஒரு சில நேர்காணலுக்காக சென்னைக்கு சென்றதுண்டு. தற்போது, விமானப் பயண தேவைக்கு மட்டும் சென்னை வருவதுண்டு. எங்கும் சுற்றி பார்த்தது இல்லை. 200/300 படங்களுக்கு மேல் கோவையில் சக்தியுடன் பார்த்து இருக்கிறேன் ஆனால் ஒன்று கூட இதுவரை சென்னையில் பார்க்கவில்லை.

 • கிரி October 20, 2016, 5:46 AM

  கோவையை வளைச்சு வளைச்சு சுத்தி இருக்கீங்க போல… 🙂 தற்போது கோவையில் நிறைய Multiplex வந்து விட்டது.. இருப்பினும் நீங்கள் பார்த்த KG Archana Ganga போன்ற திரையரங்கங்களும் உள்ளன.

  ஊருக்கு வரீங்க.. சக்தியை சந்திக்கிறோம் 🙂

 • மாதவன் October 28, 2016, 3:44 AM

  சென்னைக்கு நான் அதிகம் வந்ததில்லை. அந்த ஊரை பற்றி கோவையில் நாங்கள் பேசுவதெல்லாம் சென்னையில் யாரும் முகம் கொடுத்து பேச மாட்டார்கள்., எரிந்து விழுவார்கள். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதற்க்குள் டிராபிக்கில் மாட்டி சின்னாபின்ன மாகிவிடுவோம். என்பது போன்ற விஷயங்கள் தான் நிறைய கேட்கிறேன் பேசுகிறேன். ஆனால் உங்கள் கட்டுரையை பார்த்த பிறகு சென்னையை ஒரு முறையாவது சுற்றி பார்க்க வர வேண்டும் என்று தோன்றுகிறது. அப்புறம் நீங்க கோவையில் நிறைய மல்டிப்ளக்ஸ் வந்து விட்டது என்று சொன்னீர்கள். புரூக்ஃபீல்ட்ஸ் தவிர வேறு எந்த தியேட்டரும் மாலும் தரமானது அல்ல. அந்த விஷயத்தில் சென்னை சூப்பர். ஒரு முறை சென்னை வரும் போது ஐநாக்ஸ் தியேட்டரில் துப்பாக்கி படம் பார்த்தேன். செமையா இருந்தது தியேட்டர் மாலும் சிற்றி பார்க்க நன்றாக இருந்தது. சென்னையில் புரூக்ஃபீல்ட்ஸ் போன்று அதை விட நல்ல குவாலிட்டியான நிறைய மால்கள் தியேட்டர்கள் இருக்கிறது என்று கேள்வி பட்டு இருக்கிறேன். 10 நாள் சென்னைக்கு வந்து அனைத்தையும் பார்க்க வேண்டும். இதுக்காக தான் எல்லாருமே சென்னை சென்னை என்று போகிறார்களா.? ஆனால் என்னை போருத்த வரை கோவை தான் சுவர்க்கம். நம்ம கோவை👍👍👍💟

 • மாதவன் October 28, 2016, 3:46 AM

  நீங்கள் எழுதியதை பார்க்கும் போது எனக்கும் சென்னையை சுற்றி பார்க்க வர வேண்டும் என்று தோன்றுகிறது.

Leave a Comment