கபாலி [2016]

Kabali-Movie

டம் வெளிவரும் முன்பே கபாலி சிறப்புக் காட்சியில் எடுக்கப்பட்ட காணொளி மூலம் துவக்கக் காட்சி வெளியாகி பரபரப்பாகி தற்போது முழுப்படமும் வெளியானாலும் திரையரங்குகளில் அடிதடியாக உள்ளது.

25 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வெளி வரும் கபாலி தன்னை இந்த நிலைக்கு ஆகியவர்களைப் பழிவாங்கினாரா, வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட கபாலி குடும்பம் இணைந்ததா? என்பது தான் கதை.

எப்போதுமே ரஜினி படங்களுக்கு ரஜினியின் துவக்கத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்பது அனைவரும் அறிந்தது. இது ரஞ்சித் படம் என்பதாலும் அப்படி எதுவும் பில்டப் எல்லாம் இல்லை என்று கூறி விட்டதாலும் எப்படி எடுத்து இருப்பார் என்ற ஆவல் இருந்தது.

நான் இணையத்தில் வெளியான காணொளியைப் பார்க்கவில்லை.

மாஸ் ஆக இருக்காது என்று நினைத்து இருந்தால், அதாவது மிகைப்படுத்தப்பட்ட காட்சியாக இல்லாமலும் அதே சமயம் மாஸ் குறையாமலும் எடுத்து இருக்கிறார். செம.

இதன் பிறகு அடுத்து வரும் 30 நிமிடங்களும் அதிரடியாக இருக்கிறது. அதிகம் பேசாமல் சண்டைக்காட்சி மிரட்டலாக எடுக்கப்பட்டு இருக்கிறது. மைம் கோபியிடம் பேசும் காட்சிகளும் அதன் பிறகு வரும் “பதிலும்” அசத்தலாக இருக்கிறது.

இதன் பிறகு வரும் காட்சிகள் ரஞ்சித் மலேசியாவின் சூழ்நிலைகளையும் அதில் படத்தின் தற்போதைய சூழ்நிலையையும் விளக்க வேண்டிய கட்டாயத்தைச் சுருக்கமாகக் கூறாமல் நிறுத்தி நிறுத்திக் கூறுவதால், படம் பார்ப்பவர்களுக்கு இக்காட்சிகள் சலிப்பை தரும்.

முதல் பாதி மெதுவாக உள்ளது என்று பலர் கூறுவது என்பது என்னுடைய பார்வையில் சரியே அதற்குக் காரணம் பலரின் நிலையை விளக்கும் போது அது குறித்த ஆர்வம் நமக்கு வராமல் இருப்பதே! அதை இயக்குநர் சரியாகக் கொடுத்து இருக்க வேண்டும். இது இயக்குநரின் தவறே.

தன்னுடைய மகள் யார் என்பது தெரியும் போது ரஜினியின் நடிப்பு அசத்தல். அதன் பிறகு வரும் காட்சிகள் கவிதை போலவும் ஒரு தந்தையின் பாசத்தை, நீண்ட நாள் கழித்துக் கிடைத்த ஒரு உறவை எப்படி எதிர்கொள்வது என்று பரிதவிப்பதும்… தலைவா தூள்.

படத்துக்கு வில்லன் மிக முக்கியம். வில்லன் சக்திவாய்ந்தவனாக இருந்தாலே நாயகனின் பலம் கூடும், படம் பார்ப்பவர்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். இதிலும் கிஷோர், தைவான் வில்லன் போன்றோர் இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போல உணர்வு.

ரசிகர்கள் கத்தலில் சில முக்கிய BGM சரியாக ரசித்துக் கேட்க முடியவில்லை. எனவே அது பற்றிக் கூறமுடியவில்லை. ஒளிப்பதிவு உறுத்தல் இல்லாமல், மிகைப்படுத்தல் இல்லாமல் எளிமையாக இருந்தது. வாழ்த்துகள்.

ரஞ்சித் என்ன சொன்னாரே அதை அப்படியே ரஜினி செய்து இருக்கிறார் என்பது படம் முழுக்கத் தெரிகிறது. எனவே, வழக்கமான ரஜினியின் சிறு சிறு நடிப்பு வெளிப்படும் போது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அதை எப்படி எதிர்பார்க்கிறது என்பதைப் படம் பார்க்கும் போது உணர்த்துகிறது.

தலைவர் இது போல அடக்கமாக, தனது வழக்கமான ஸ்டைல், உடல் மொழி போன்றவற்றைத் தவிர்த்து நடித்துப் பின் வெகு சில இடங்களில் இக்காட்சிகள் வரும் போது இது போல இன்னும் காட்சிகள் வரவேண்டும் என்று மனது எதிர்பார்ப்பது உண்மை.

இது போலப் படங்களுக்கு நேட்டிவிட்டி ரொம்ப முக்கியம். நம்ம ஆளுங்க மலேசியா என்றால், “லா” போட்டால் முடிந்தது என்ற கொள்கையில் இருப்பதால், இதில் ரஞ்சித் எப்படிக் கையாண்டு இருப்பார் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. நானே எதிர்பார்க்காத அளவுக்கு அசத்தலாக நேட்டிவிட்டியை கொடுத்து இருக்கிறார்.

இதை மலேசிய மக்கள் மட்டுமே உணர்வுப்பூர்வமாக உணர முடியும் என்பதால், இது ஒரு வகையில் பலம் என்பதோடு நம்ம மக்களை எடுத்துக் கொண்டால் அது பலவீனம்.

ஏனென்றால், சில வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தமே புரியாது. காட்சியை வைத்து இதுவாக இருக்கலாம் என்று ஊகிக்க முடியும். இது எந்த அளவுக்கு நம்ம ஊர் மக்களைக் கவரும் என்பது சந்தேகமே!

அதோடு குறிப்பிடத்தக்க அளவில் வேற்று மொழி காரணமாகச் சப்டைட்டில் வருது சிலருக்கு எரிச்சலைக் கொடுக்கலாம்.

இதை ஏன் முக்கியமாகக் கூறுகிறேன் என்றால் ரஜினி சென்னை வருவது போலக் காட்சி உள்ளது. அந்தச் சமயத்தில் நாமே வெளிநாட்டில் இருந்து நம்ம ஊருக்கு வந்தது போல மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதிலும் சென்னை தமிழில் ஒருவர் திட்டும் போது கூட “இது சென்னை டா!” என்று இனம் புரியாத மகிழ்ச்சி வருகிறது.

தைவான் நடிகர் மிரட்டலாக நடித்து இருந்தாலும், அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.

குறிப்பிட வேண்டிய ஒரு நபர் ராதிகா ஆப்தே. ரஜினியும் ராதிகாவும் சந்திக்கும் காட்சிகள் படத்துக்கு ஜீவன். எவரும் கலங்கி விடுவார்கள். நான் கண் கலங்கிய காட்சி. எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் அதிகமாக அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் எடுக்கப்பட்ட காட்சி.

இந்தச் சமயத்தில் வரும் “மாய நதி” பாடல் மிகப்பொருத்தமான பாடல். ராதிகா ரஜினிக்கு அறிவுரை கூறும் இடங்கள் எல்லாம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.

ரஞ்சித் “மெட்ராஸ்” திரைப்படத்தில் ஏதோ குறியீடு வைத்து இருக்கிறார் என்று இணையத்தில் அவரைப் பிரித்து மேய்ந்தார்கள். நான் பல முறை பார்த்தும் என்னவென்றே புரியவில்லை. படத்தை மட்டுமே ரசித்தேன், ஏனென்றால் படத்தோட கலந்து தனித்துத் தெரிவது போல இல்லை.

கபாலியில் சில காட்சிகள் வசனங்கள் ரஞ்சித் திணித்தது போல இருந்ததை மறுக்க முடியாது. நான் யாருக்கும் எதிரியோ நண்பனோ அல்ல ஆனால், இயல்பான படத்தை ரசிக்கும் ரசிகன்.

எனவே, எனக்குத் தன்னுடைய கருத்தைக் கூற ரஜினியை ரஞ்சித் பயன்படுத்தியது தவறாகத் தோன்றவில்லை ஆனால், ரசிகனுக்கு அது திணிக்கப்பட்ட உணர்வை தரக்கூடாது என்பது முக்கியம். இந்த விசயத்தில் எனக்கு உடன்பாடில்லை.

“மெட்ராஸ்” போலச் சாதாரணத் திரை ரசிகன் உணர முடியாத அளவுக்கு இருக்க வேண்டும்.

ரஞ்சித் “மெட்ராஸ்” போலத் தொடர்ந்து தன்னுடைய கருத்தை உறுத்தாத முறையில் கூறாமல், திணித்தால் அது பலருக்கு வெறுப்பையே தரும். அது அவருக்கு முத்திரை குத்தப்பட்டு அவரைத் தனித்து விடப்படும் படியாகி விடும்.

மிகப்பெரிய நடிகரை கையில் வைத்துக் கொண்டு அவரை எப்படி எப்படியோ காட்டி அசத்தி இருக்க வேண்டிய நிலையில் அவரை மிகச் சாதாரணமாகி காட்டி இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதாவது ரஜினியை திரும்ப “Larger than life” போலக் காட்ட எதிர்பார்க்கவில்லை அதற்காக இது போல மிகவும் குறைவாகவும் எதிர்பார்க்கவில்லை. ரஜினியை ரஞ்சித் முழுமையாகப் பயன்படுத்தவில்லை, வாய்ப்புகள் இருந்தும்.

படம் வசூலில் சாதனைகள் புரியும்  என்றாலும், அவை இதை ஈடு செய்யாது. ரஜினியை யார் தான் முழுமையாக பயன்படுத்துவார்கள் என்று எனக்கு ஏக்கமே வந்து விட்டது!

இறுதியாக, படம் சிறப்பான படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால், மேற்கூறிய குறைகளோட படத்தின் திரைக்கதை வேகம் கூடுதலாக இருந்து இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

கொசுறு

கபாலி இணையத்தில் வெளியாகி பலரும் பார்த்து விட்டார்கள். இதை ரசிகர்கள் பார்த்துக் கோபப்பட்டுத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்ப உலகத்தில் இதையெல்லாம் தவிர்க்கவே முடியாது என்பது தான் நிதர்சனம்.

எனவே, இதற்காக வருத்தப்படுவது வீண். சொல்லணும்னு தோணுச்சு அப்புறம் உங்க விருப்பம்.

{ 14 comments… add one }
 • Vijay July 22, 2016, 10:44 AM

  உள்ளதை உள்ளபடி சொன்ன கில்லாடிய வாழ்த்த வார்த்தை இல்லை.
  ரஜினி அடுத்த படி எடுத்து வச்சுருக்காருன்னு தான் சொல்லணும்.

  அடுத்த show எப்போ கில்லாடி 🙂

 • Prakash July 22, 2016, 12:46 PM

  என்ன தான் நீங்கள் தீவிர ரஜினி ரசிகராக இருந்தாலும் உண்மையான விமர்சனத்தை செய்துள்ளீர்கள். படம் பார்த்த பலரும் ரஞ்சித் படத்தை ரஜினி படமாக எடுக்க வில்லை என்றே பெரிய குறையாக கூறினர். பல ரஜினி ரசிகர்களே கூட ஷங்கரின் 2.0 விற்காக காத்து இருக்கிறோம் ஏனெனில் அவர்தான் அவரின் இரண்டு படங்களில் ரஜினியை ரசிகர்களுக்கு திருப்தி வரும் படி எடுத்து இருக்கிறார் என்று கூறியுள்ளார்கள். உங்களின் ஏக்கத்திற்கும் அந்த படம் தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அடுத்த வாரம் தான் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளேன். மொத்ததுல ரஞ்சித்து கபாலி டா வசனத்தை ஒன்றை மட்டுமே வைத்து ஏமாற்றி விட்டார் என்று அது போன்று பல வசனங்களை எதிர்ப்பாத்து போன ரசிகர்களின் சிறு மன குமுறலாக உள்ளது….😥

 • Mohamed Yasin July 23, 2016, 7:16 AM

  கபாலி படம் இன்னும் பார்க்கவில்லை.. இந்த வாரம் இறுதியில் பார்ப்பேன். நேற்று நிறைய நண்பர்கள் படத்தை பார்த்துவிட்டு அவரவர் கருத்துக்களை கூறினார்கள். ஆனால் எதையும் காதில் வாங்காமல் (உங்கள் விமர்சனத்தை கூட படிக்காமல்) படத்தை பார்க்க முடிவு செய்துள்ளேன்… பகிர்வுக்கு நன்றி கிரி.

 • Arun Govindan July 23, 2016, 4:09 PM

  “ரஜினியை யார் தான் முழுமையாக பயன்படுத்துவார்கள் என்று எனக்கு ஏக்கமே வந்து விட்டது!

  – அப்படியே வழிமொழிகிறேன் தல
  படம் ரொம்பவே மெதுவா போது ஆனா சூப்பர் ஸ்டார் பின்னிட்டார் நடிப்புல
  விமரிசனம் நேர்மையா செஞ்சதுக்கு special நன்றி உங்களுக்கு

  – அருண் கோவிந்தன்

 • காத்தவராயன் July 23, 2016, 5:25 PM

  நாயகன் படத்தோட ரீமேக்கில் நடிப்பதற்கு ரஜினி எதற்கு?

  பழைய கதை, இலக்கில்லாமல் எங்கெங்கோ அலையும் திரைக்கதை, வலுவான வில்லன் இல்லாதது போன்றவை கண்டிப்பாக கபாலியை பலவீனப்படுத்தும் அம்சம்.

  படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரே அம்சம். தான் ஒரு நடிப்பு ராட்ஷசன் என்று ரஜினி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருப்பது. Yes, he once again proved that he is an artist of Directors

  ஆடியோ ரிலீஸ் ஆன பின்னர் இது ஒரு ரஜினி படம் என்ற எண்ணமே இல்லை அதுதான் உன்மை. பழைய மாதிரி எதிர்பார்த்து ரசிகர்கள் போயிருந்தா பல ஸ்க்ரீன்கள் கிழிக்கப்பட்டு இருக்கும், அந்த செகண்ட் கிளைமாக்ஸ்க்காக ,

  ரஜினி தரப்பில் இருந்தும் தயாரிப்பு தரப்பில் இருந்தும் எவ்வளவு சுதந்திரம் எவ்வளவு சுதந்திரம், இயக்குனரை சொல்லி குற்றமில்லை; சௌந்தர்யா பேச்சை எல்லாம் கேட்டு கதையை ஓகே செய்த ரஜினி மீதுதான் கோபம்.

 • காத்தவராயன் July 23, 2016, 5:41 PM

  படத்தோட இசையைப் பற்றி கொஞ்சம் சொல்லனும் கிரி;

  பாட்டு கேட்கும் ரகமில்லை; சரி காட்சியோடு நல்லாயிருக்கும் என்று எதிர்பார்த்தால்; ம்ஹூம் ஒரே குஷ்ட்டமப்பா…… எதுக்குடா பாட்ட ரெக்கார்டு பண்ணுனீங்க;

  பிஜிஎம் பற்றி ஒரு உதாரணம் சொல்லுறேன்.
  படத்தின் மிக முக்கியமான சீன் அந்த டின்னர் சீன், அதுக்கு அப்புறம்தான் கதை ஆரம்பிக்கும். அந்த இடத்தில் மியூஸிக் எப்படி வந்திருக்கனும், ம்ஹூம்;

  டின்னர்ல டைனிங் டேபிளில் இருந்து மார்த்தாண்டனை பாதியில் அசிங்கப்படுத்தி அனுப்பிய பின்னர், ரஜினி பேச ஆரம்பிப்பார் அங்க ஆரம்பிக்கும் பிஜிஎம் ரஜினி பேசி முடிச்சி அந்த சீன் முடிஞ்சி, அடுத்த சீனில் மார்த்தாண்டன் வீட்டு வாசலில் கார் வெடிக்கும் வரை அதே பிஜிஎம் தொடரும் [சவ சவன்னு]. பிஜிஎம்க்கு அர்த்தம் இசையமைப்பாளருக்கும் தெரியல இயக்குனருக்கும் புரியல. நெருப்புடா தீம் மியூஸிக் மட்டுமே போதும்ன்னு இருந்துட்டாங்க போல, சந்தோஷ் நாரயணன் எல்லாம் ஒரு மியூஸிக் டைரக்டரா?

  இந்த கதைக்கு ரகுமான் அல்லது யுவன் சரியான சாய்ஸ் ஆக இருந்திருப்பார்கள்.

 • ThalaivarFan July 25, 2016, 6:05 AM

  This is the life time best movie of Thalaivar.

  http://www.kualalumpurpost.net/read-this-before-watching-kabali-especially-non-malaysians/

  Do your “vimarsanam” once again after reading the contents in above link. Im sure after reading it, ur perspective about the film will change completely, and ur disappointment also will not be there.

 • Siva July 25, 2016, 9:54 AM

  கிரி இரண்டாவது முறை பாருங்க.. எனக்கும் இப்படி தான் இருந்துச்சு . அதன் பிறகு சில மலேசியா தகவல்கள் படித்து பின் பார்த்த பிறகு அந்த கேங் சண்டை எல்லாம் ஏன் என்று புரிந்தது .

  இந்த வாரத்துல இன்னொரு முறை போகப் போகிறேன். நல்ல திரையரகா பார்த்து

 • Sathiya July 25, 2016, 2:50 PM

  கிரி ரெண்டாவது தடவை பாருங்க கண்டிப்பாக மிகவும் பிடிக்கும்.

 • dippu July 26, 2016, 1:39 PM

  தமிழ்நாட்டில் ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்ளும் குலக் கொழுந்துகள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி

  ha.ha….

  Read more: http://www.truetamilan.com/2016/07/blog-post_22.html#ixzz4FWPRISDZ

 • கார்த்திக் July 28, 2016, 2:08 PM

  // ரஜினியை யார் தான் முழுமையாக பயன்படுத்துவார்கள் என்று எனக்கு ஏக்கமே வந்து விட்டது!//

  இதே ஏக்கம் எனக்கும் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டது, இதையே யோசிக்க யோசிக்க அது பயமாக மாறுகிறது.

  யார் தான் இன்றைய சூழலில் ரஜினியை இயக்க முடியும்?
  ஷங்கர்?
  சிவாஜிக்கும் எந்திரனுக்கும் சுஜாதா இருந்தார். சுஜாதா இல்லாத நண்பனும், ஐயும் சுமார் ரகமே!
  எந்திரன்2 படம் பற்றிய பயம் இப்போதே பீதியை கிளப்புது.[ எமி எல்லாம் தலைவருக்கு ஹீரோயினா? ஏம்பா தீபிகா கால்ஷீட் கிடைக்கலையா? மனசுக்குள் மைண்ட் வாய்ஸ் ஓடிக்கிட்டே இருக்கு]

  ஹரி?
  ஹரி உடன் ஒரு படம் முயற்சித்து பார்க்கலாம். அவ்வளவு ஏன் லிங்காவுக்கு பிறகு ஹரிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஹரியும் இந்த காலகட்டத்தில் சிங்கம்3 ஸ்கிர்ப்ட் வேலையில்தான் இருந்தார்.

  ராஜமௌலி?
  ஹரி மாதிரி மினிமம் கேரண்டி உண்டு அவரது திரைக்கதைக்கு, ஆனால் நீண்ட நாட்கள் ஆகும் அவரது கதை திரைவடிவம் பெற……………..

  பார்ப்போம் அடுத்து என்ன நடக்குதுன்னு

 • காத்தவராயன் July 29, 2016, 12:11 AM

  ரஜினியை யார்தான் முழுமையாக பயன்படுத்துவார்கள் என்ற அதே உணர்வு படம் பார்த்த போது எனக்கும் ஏற்பட்டது.

  ஷங்கர்? ஹரி? ராஜமௌலி?

  சுஜாதா இல்லாத ஷங்கர் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு

  ஹரிக்கு ஒரு வாய்ப்பு வழங்கி பார்க்கலாம். லிங்காவுக்கு அப்புறம் ரஞ்சித்துக்கு பதில் ஹரியுடனே படம் செய்திருக்கலாம்.

  ராஜமௌலி மினிமம் கேரண்டி உண்டு, ஆனா நேட்டிவிட்டி கொஞ்சம் உதைக்கும். இவர் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

  பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கிறது என்று.

 • Sb July 30, 2016, 9:34 AM

  True. When I watched for second time, liked the movie beyond 100%

 • கிரி August 1, 2016, 7:57 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் பார்த்துட்டீங்களா? 🙂

  @காத்தவராயன் நீங்க சொல்லும் அளவுக்கு படம் மோசமில்லை. திரைக்கதையில் தொய்வு இருந்ததே தவிர, சிறப்பான படமே!

  இன்றைய வெற்றி சவுந்தர்யாவால் சாத்தியப்பட்டது என்று கூறலாமா? 🙂 முதல் மூன்று நாட்கள் விமர்சனங்களும் தற்போது இருக்கும் விமர்சனங்களும் முற்றிலும் வேறு.

  வசூலிலும் இமாலய சாதனை படைத்த்ஹு விட்டது. C சென்டரில் திரையரங்குகளில் சரியாக ஓடாமல் இருந்து இருக்கலாம் ஆனால், ஒட்டுமொத்தமாக எதிர்பாரா பெரிய வெற்றி.

  பாடல் ஏன் உங்களுக்கு பிடிக்காமல் போனது என்று ஆச்சர்யமாக உள்ளது. பாடல்களை ரொம்ப ரசித்துக் கேட்டேன்.

  BGM நல்ல திரையரங்கில் கேட்ட பிறகு (இரண்டாம் முறை வூட்லண்ட்ஸ், அங்கேயும் FDFS போல ரணகளம்) என் கருத்தைக் கூறுகிறேன்.

  @தலைவர் ரசிகர், சிவா, சத்யா, திப்பு, SB

  நீங்கள் அனைவரும் கூறியது சரியே! இரண்டாம் முறை பார்க்கும் போது மிக நன்றாக இருந்தது. இந்த வாரம் சத்யம் ல் பார்க்கப் போகிறேன். இதில் சிறப்பாக இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  நேற்று வூட்லண்ட்ஸ் ல் FDFS விட சத்தம், கலாட்டா என்பதால் BGM ஒன்றுமே கேட்கலை.

  @காத்தவராயன் நீங்க பயப்படும் படி எதுவும் நடக்காது. ஷங்கர் அசத்தலான படத்தை நிச்சயம் கொடுப்பார்.

  அவர் ஐ படத்தில் வாங்கிய திட்டுகள், விமர்சனங்கள் அவர் நினைவில் இருக்கும். எனவே, இதில் மிக கவனமாக இருப்பார்.

  இறுதியாக கபாலி பிளாக்பஸ்டர் ஹிட். நான் கூறவில்லை Trade Analyst கூறி இருக்கிறார்கள் அதோடு நேற்று வரை கூட்டமே! குடும்ப பார்வையாளர்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்.

  எனக்கு தலைவரை இன்னும் கூடுதலாக பயன்படுத்தி, வில்லனை இன்னும் மிரட்டலாக காட்டியிருக்கலாம் என்ற கருத்தில் மாற்றமில்லை.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz