பொறுப்பற்ற சென்னை மாநகராட்சி

சென்னையில் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் நான்கு. கோயம்பேடு, சென்ட்ரல், பிராட்வே மற்றும் விமான நிலையம்.

இதில் விமான நிலையம் குறித்து ஏற்கனவே விரிவாக எழுதி விட்டேன் அதோடு இதைப் பராமரிப்பது AIA (Airport India Authority) அமைப்பாகும்.

Readசென்னை விமான நிலையம்

சென்னை மாநகராட்சி பாராமரிக்கும் மீதி உள்ள மூன்று இடங்களைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன் சிறு பொதுவான எதிர்பார்ப்பு.

மக்கள் கூடும் இடங்களைச் சுத்தமாக அதுவும் பல மாநில / நாட்டு மக்கள் வரும் சென்னை பெருநகரத்தை கூடுதல் பொறுப்போடு கவனிக்க வேண்டியது அரசின் கடமையாகும் ஆனால், அது குறித்த எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.

தற்போதும் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன என்றாலும் இவையெல்லாம் ஒன்றுமே இல்லையென்பதே நிதர்சனம்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்

Koyambedu Bus Terminus

தற்போது இந்தப் பகுதியில் நான் தற்காலிகமாக உள்ளதால், தினமும் இப்பகுதி வழியாகவே செல்வேன். எனவே, தினமும் கண் முன்னாடி இப்படி நமது பேருந்து நிலையம் குப்பை மேடாக இருக்கிறதே என்று நினைக்காத நாளில்லை.

ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையைக் கொண்ட இப்பேருந்து நிலையம் மோசமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. Image Credit – Shunya.net

கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் குப்பை கூளங்களாக உள்ளது. பேருந்து நிலையம் அருகேயே டாஸ்மாக் உள்ளதால், வெளியூர் செல்லும் பயணிகள் இங்கே குடித்து விட்டு பேருந்து நிலையம் வந்து வாந்தி எடுப்பது வழக்கமாக உள்ளது.

இதோடு மொடாக் குடியர்கள் தன்னிலை மறந்து கீழே விழுந்து கிடப்பதும் ஆடை களைந்து அலங்கோலமான முறையில் பேருந்து நிலையத்தினுள் கிடப்பதும் பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கிறது. இரவில் குறைந்தது ஐந்து பேராவது இப்படிக் கிடப்பதைக் காணலாம்.

பயணிகளும் எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாமல் குப்பையைப் போடுவதும் எச்சில் துப்புவதும் என்று படு கேவலமாக நடக்கிறார்கள். சுத்தம் செய்பவர்களும் மனிதர்கள் தானே! எத்தனை தான் அவர்களும் சுத்தம் செய்ய முடியும்?!

பொறுப்பற்ற பயணிகள்

உள்ளேயே கழிவறை வசதி உள்ளது அதோடு ஓரளவு நன்றாகவும் பராமரிக்கப்படுகிறது இருப்பினும், இதைப் பயன்படுத்தாமல் சுவரின் மீது சிறுநீர் கழிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார்கள்.

பெண்கள் பொது இடங்களில் இது போல நடந்து கொள்ள முடியாது என்பதால், அவர்களுக்கு எங்கே வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கேயே தங்கள் தேவையை முடித்துக் கொள்கிறார்கள்.

எங்க வேண்டும் என்றாலும் நாய் போலக் காலைத் தூக்கலாம் என்ற ஆண் திமிர் தானே நம் இடத்தை நாறடிக்கிறது. ஒவ்வொருத்தனையும் பிடித்துச் செவுள்ளையே நாலு சாத்தி அபராதம் விதித்தால் பின் ஒழுங்காகக் கழிவறையைப் பயன்படுத்துவார்கள்.

பார்த்த இடத்தில் எல்லாம் எந்த பொறுப்பும் கவலையுமில்லாமல் புளிச் புளிச்ன்னு துப்புறவங்க வாயிலேயே ஒண்ணு போட்டு ரத்தம் வர வைக்கணும் என்று பார்க்கும் போது ஆத்திரமாக வரும்.

கூடுதல் நபர்களைப் பணிக்கு அமர்த்திக் குப்பைகளை எடுக்காமல் இருப்பவர்களை வைத்து வேலை வாங்கிக்கொண்டுள்ளார்கள். அவர்களும் எவ்வளவு தான் சுத்தம் செய்வார்கள்?

மக்களை அறிவுறுத்தியும் அவ்வாறு செய்பவர்களுக்கு அபராதம் விதித்தும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால், எதோ ஓடிக்கொண்டு இருக்கிறது. மாநகராட்சி நினைத்தால் மிக மிகச் சிறப்பாக இந்த இடத்தைப் பராமரிக்க முடியும்.

எவனோ / எதுவோ எப்படியோ போகட்டும் என்ற பொறுப்பில் உள்ளவர்கள் / பயணிகள் உட்பட ஒவ்வொருவரின் அலட்சிய மனப்பான்மையே கோயம்பேடு பேருந்து நிலையம் இப்படி இருக்கக் காரணம்.

உள்ளே ஒரு மருந்துக்கடை உள்ளது. ஒருமுறை இங்கே நீலகிரி தைலம் வாங்கி ரெசிப்ட் கேட்டால் “சார்! பிரிண்டர் வேலை செய்யவில்லை” என்கிறார். எனக்கு இங்கே ரெசிப்ட் கொடுப்பது போன்றே தோன்றவில்லை.

“காளியம்மன் கோவில் தெரு” (வெளியூர் பேருந்துகள் வெளியே வரும் சாலை) நாறிக் கிடக்கிறது. ஜெ பிறந்த நாள் அன்று திடீர் என்று சுத்தம் செய்தார்கள். ரொம்பச் சுத்தமாக இருந்தது விரைவில் திரும்பப் பழைய நிலைக்கே வந்து விட்டது.

அந்த இடம் அவ்வளவு பெரியதாக இருந்தும் ஆக்கிரமிப்புகளால் நெருக்கடியாக இருக்கிறது. இதனால் தினமும் காலை / இரவில் போக்குவரத்து நெரிசல்.

இவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தையும் / இடத்தையும் வைத்துக் கொண்டு அதைக் குப்பை மேடாக்க சென்னை மாநகராட்சியால் மட்டுமே முடியும்.

இதோடு “ஜெ” ஈகோ பிரச்சனையால் திமுக காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட “மதுர வயல்” மேம்பாலப் பணி பாதியில் நிற்கிறது. பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தூண்கள் அரசியல் / திரைப்பட / ஊடக சுவரொட்டி ஓட்ட மட்டுமே பயன்பட்டு வருகிறது.

இவை செயல்பாட்டுக்கு வந்தால் பெருமளவில் கோயம்பேடு போக்குவரத்து நெரிசல் குறையும் ஆனால், சொத்தைக் காரணங்களைக் கூறி கிடப்பில் போட்டு விட்டார்கள்.

சென்ட்ரல்

Chennai_Central_Station

சென்ட்ரல் பல வெளிநாட்டுப் பயணிகள், வெளி மாநிலப் பயணிகள், நம் மாநிலப் பயணிகள் என்று பல லட்சம் மக்கள் வந்து செல்லும் இடம் ஆனால், பேருந்துகள் வந்து நிற்கும் பகுதியும் அதன் வெளிப்புறப் பகுதியும் குப்பையாகவே இருக்கும். பார்க்கவே எரிச்சலாக உள்ளது.

ரயில் நிலையப் பகுதி உள்ளே ரயில்வே கட்டுப்பாடு என்றாலும் வெளிப்பகுதி மாநகராட்சி தான் பராமரிக்க வேண்டும். ராஜீவ் காந்தி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் உட்காரவே யோசிக்க வேண்டும். அந்த அளவுக்கு மோசம்.

எத்தனையோ தண்டச் செலவு செய்கிறார்கள், ஏன் இவ்வளவு முக்கிய இடத்தைக் கேவலமாக வைத்து இருக்கிறார்கள்?! இதையெல்லாம் சரி செய்ய என்ன செலவாகி விடப்போகிறது?

ஒரு ஊரில் இருந்து நம் சென்னைக்கு வந்தால் முதல் பார்வையே கேவலமாக இருந்தால் நமக்குத் தானே அசிங்கம். நம் இடத்தை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் வேறு யார் வைப்பர்?!

சென்னை சென்ட்ரல் போலப் பழமையான அழகான முகப்பை கொண்ட ரயில் நிலையத்தை இப்படி நாசக்கேடு செய்கிறார்களே என்று இதைக் கடக்கும் போதெல்லாம் நினைக்காத நாளில்லை.

சுரேஷ் குமார் ரயில்வே அமைச்சரான பிறகு தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதில் ஒன்றாகச் சென்ட்ரல் உள்ளே நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. முன்பு போல மோசமில்லை.

முக்கியமாக இந்தத் தொழிற் சங்கங்கள் ஒட்டும் சுவரொட்டிகள் இல்லை. இவர்களே நிலையத்தை நாறடித்து வைத்து இருப்பார்கள். தற்போது கழிவறை பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை சென்ற போது பார்த்தேன்.

Central

உணவகக் கடையில் முட்டை பிரியாணி 49₹ கோழி பிரியாணி 71₹. இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா?

1 ருபாய் மீதம் தருவதே இல்லை. சொல்வதே 50 ருபாய் என்று கூறுகிறார்கள் கேட்டால் மிட்டாய் எடுத்துத் தருகிறார்கள். 71 ருபாய் நிலை இன்னும் மோசம். இதற்கு முட்டை பிரியாணியை 50 என்றும் கோழி பிரியாணியை 70 என்றும் மாற்றினால் என்ன?

இது சென்னை மாநகராட்சி பிரச்சனையில்லை, ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு.

சென்ட்ரல் பகுதி மத்திய சதுக்கம் / சென்ட்ரல் ஸ்கொயர் என்று பெயர் மாற்றம் பெற்று மெட்ரோ சேவை வருவதால் (இது குறித்துப் பின்னர் தனி இடுகையாக எழுதுகிறேன்) அந்த இடத்தையே தோண்டிப் போட்டுள்ளார்கள்.

அதோடு சென்னை மாநகராட்சியும் பொறுப்பற்று இருப்பதால், அந்த இடமே குப்பை மேடாக உள்ளது. குறைந்த பட்சம் சென்ட்ரல் முகப்பையாவது சுத்தமாகப் பராமரித்தால் நல்லது. சிறு நீர் நாற்றம் மகாக் கொடுமையாக உள்ளது. இதுவே நம்மைச் சென்ட்ரலில் வரவேற்கிறது.

பிராட்வே பேருந்து நிலையம் 

கோயம்பேடு பேருந்து நிலையம் வரும் முன்பு வெளியூர் பேருந்துகள் அனைத்தும் இங்கே தான் வந்து நிற்கும் / கிளம்பும். தற்போது அனைத்தும் கோயம்பேடு சென்று விட்டதால் இங்கே மாநகரப் பேருந்துகள் தான் நிற்கின்றன.

பாழடைந்த பங்களா அல்லது பேய் பங்களா மாதிரி உள்ளது இந்த இடம். குண்டும் குழியுமாகச் சாலை உள்ளது. பல பேருந்துகள் இதில் ஏறி இறங்கியே பராமரிப்பு செலவுகளை அதிகரித்து இருக்கும்.

கர்ப்பமாக இருப்பவர்கள் இங்கே பேருந்தில் வந்தால் இலவசமாகப் பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதுவும் மிகப் பெரிய இடம் ஆனால், பாரமரிப்பு கிலோ என்ன விலை தான்! இங்கே உள்ள சாலையைப் பலரும் புகார் செய்து இருப்பார்கள் போல அதனால் பேருந்து வரும் பகுதியில் மட்டும் தற்காலிகமான சாலை அமைத்து இருக்கிறார்கள்.

அதாவது மிகப்பெரிய சாலையில் சைக்கிள் போவதற்காக மட்டும் சிறு அளவில் சரி செய்தால் எப்படி இருக்குமோ அந்த லட்சணத்தில் இருக்கிறது.

எப்படித்தான் மனசு வந்து இது போல நடந்து கொள்கிறார்களோ?!

இதெல்லாம் சிறப்பான நிர்வாகத் திறமை உள்ளவர்களிடம் இருந்தால் “பிராட்வே” இருக்கும் லெவலே வேற.. உண்மையாகவே! வயித்தெரிச்சலாக இருக்கிறது.

ஊடகங்கள் இது போல மக்கள் பிரச்சனைகளை முக்கியத்துவம் கொடுத்து எழுதாமல் ஒன்றுக்கும் உதவாத “பீப்” பிரச்னையை மாதக் கணக்காக எழுதி விவாதிக்கிறார்கள். அப்புறம் எங்கே விளங்கும்?

தேவை சிறப்பான நிர்வாகம் 

இந்த மூன்று இடங்களையும் சரியாகப் பராமரித்து மேம்படுத்திப் பல மாநில மக்களும் வியக்கும் இடமாக மாற்றக் கூடிய அத்தனை வாய்ப்புகளும் இருந்தும் அனைவரும் முகம் சுழிக்கும் படியான நிலையில் உள்ளது.

இந்த இடங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு நாம் மற்ற மாநில நண்பர்களிடம் “யோவ்! பாருங்கய்யா எங்க ஊரை.. எப்படி வைத்து இருக்கோம்” என்று பெருமையாகக் கூறலாம். நிலைமை அப்படியா இருக்கிறது?! 🙁

மேற்கூறிய மோசமான நிர்வாகத் திறமையைப் பார்க்கும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது.

தமிழ் மொழியின் சிறப்புத் தெரியாத தமிழ் மக்களிடம் தமிழ் சிக்கி சின்னபின்னமாவது போலச் சென்னையின் சிறப்புப் புரியாத நிர்வாகத்திடம் சிக்கி சென்னை அழிந்து கொண்டு இருக்கிறது.

எனக்குப் பிடித்த, எனக்கு மற்றும் பலருக்கும் வாழ்க்கை கொடுத்த இனி கொடுக்கப் போகும் சென்னையை அதன் சிறப்புத் தெரியாமல் மோசமான நிர்வாகத் திறமையால் சீரழிக்கிறார்களே! என்று எண்ணி எண்ணி மனது கண்ணீர் வடிக்கிறது.

சென்னை மாநகராட்சி இந்த மூன்று இடங்களையும் சிறப்பாகப் பராமரித்து நம் சென்னைக்கு அழகு மற்றும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.

மாநகராட்சி தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதோடு நம் ஒவ்வொருவருக்கும் நம் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். மாநகராட்சியை மட்டுமே குறை கூறுவது சரியல்ல.

{ 4 comments… add one }
 • iK way April 5, 2016, 2:49 AM

  கிரி,
  ?!.
  நோ நோ….வன்முறை கூடாது!
  நாம மிகப்பெரிய ஜனநாயக குடியரசு.

  40 கிட்ட வறீங்க….ஹெல்த்த பாத்துக்கறது முக்கியம். கோபப் பட்டா பி.பி லாம் வருமாம்!!!

  இதுவரை விளங்காத ஒரு விஷயம், இங்கை விட அதிக குடி இருந்த / இருக்கும் மாநிலங்களில் இல்லாத ஒரு பொது இட குடிகார நியூசென்ஸ் அலப்பறை நம் ஊரில் அதிகம். ஏன் என புரிந்துகொள்ள முடியாது.

  குப்பை போடுவது……. ஏறக்குறைய நமது தேசிய குண நலன்?! / வியாதி.

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

 • Ashok April 5, 2016, 1:53 PM

  You have clearly mentioned whatever we, people of Chennai had in our mind. Hope to see a better administration soon,

 • Mohamed Yasin April 14, 2016, 7:01 AM

  சிறந்த சமூக பொறுப்பு கொண்ட பதிவாக எண்ணுகிறேன்… இதெற்கெல்லாம் தீர்வு என்னவென்றே தெரியவில்லை கிரி. தேர்தல் நேரமாக இருப்பதால் இதை பற்றி யோசிப்பது, செய்திகளை படிப்பது, இன்னும் மண்டை சூட்டை அதிகரிக்க செய்கிறது… தினம் தினம் நிறைய விஷியங்களை யோசித்து, யோசித்து கடைசியா நான் ஏன் தேர்தலில் நிற்க கூடாது???? என்ற கேள்வியோடு நிற்கிறேன்!!!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

 • கிரி April 19, 2016, 4:53 AM

  @ IK Way கோபத்தை எல்லாம் நிறுத்தி பல காலம் ஆகிறது 🙂 எழுதும் போது மட்டும் வரும் சமூகக் கோபம் இது.

  இது என்னிடம் எப்போதும் இருக்கும்.

  @அசோக் நன்றி

  @யாசின் படித்து முடித்ததும் அதை மறந்து விடுகிறேன் அதனால் தற்போது மனது கனப்பதில்லை.

  தேர்தல் 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz