Bajrangi Bhaijaan [இந்தி 2015]

Bajrangi Bhaijaan

லரும் கூறியதால் சல்மான் Bajrangi Bhaijaan பார்க்க வேண்டும் என்று நினைத்து, எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கடந்த வாரம் தான் பார்த்தேன்.

சத்தியமாகச் சல்மான் படம் இப்படி என்னைக் கண்கலங்க வைக்கும் என்று நான் நினைத்ததே இல்லை. சல்மான் படம் என்றாலே வெளிநாடு, பாடல், ஆட்டம் பாட்டம், பணக்காரக் குடும்பம் என்று வழக்கமான பாலிவுட் படம் என்பதால் பார்க்கணும் என்று எனக்குத் தோன்றியதே இல்லை.

கடைசியாகப் பார்த்த சல்மான் படம் எது என்று கூட நினைவில்லை. இப்படத்தில் சேர்த்து வைத்துத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

வாய் பேசாத 6 வயது பெண் குழந்தை தவறுதலாக இந்தியாவில் பிரிந்து விட, குழந்தையை எப்படிச் சல்மான் பாகிஸ்தானில் அவரது தாயாரிடம் கொண்டு சேர்க்கிறார் என்பதே கதை.

சல்மான் தீவிர ஆஞ்சநேய பக்தர், சைவம், பொய் கூற மாட்டார் இத்தனை நெருக்கடிகளை! வைத்துக்கொண்டு பாகிஸ்தான் சென்று எப்படி ஒப்படைக்கிறார் என்பதை நம்மைக் கலங்க வைத்து கூறியிருக்கிறார்கள்.

படத்துவக்கத்தில் எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல் Salman Khan பெயர் வந்த போதே ஆச்சர்யமாக இருந்தது. இந்த ஆச்சர்யம் படத்தின் இறுதிக் காட்சி வரை இருந்தது பெரிய ஆச்சர்யம் 🙂 .

சமீப வருடங்களில் நான் பார்த்து அழுத படம் என்றால் இப்படம் தான். மனதில் இரக்கம், அன்பு, பாசம் உள்ள எவரும் இப்படத்தைப் பார்த்துக் கண்கலங்காமல் இருக்கவே முடியாது. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

இந்த அழுகை சோகத்தால் வரும் அழுகை அல்ல அதோடு இது சோகமான படமுமல்ல. படத்தைப் பார்த்தாலே நான் கூற வருவது புரியும். அடக்கி வாசித்த சல்மானுக்குப் பாராட்டுகள்.

பாகுபலி படம் எடுத்து இந்தியாவையே மிரட்டிய ராஜமௌலி தந்தையின் கதையே இப்படம்.

இந்து முஸ்லிம் பிரச்சனை உலகம் அறிந்தது ஆனால், இப்படம் பார்த்து முடிக்கும் போது எந்த ஒரு இந்து முஸ்லிமுக்கும் மனதில் இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது.

இப்படம் குறித்து வேறு எதுவும் கூறும் எண்ணமில்லை. தவறவிடாமல் அவசியம் பாருங்க. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

Directed by Kabir Khan
Produced by Salman Khan, Rockline Venkatesh
Written by Kabir Khan (Dialogue) Kausar Munir (Additional Dialogue)
Screenplay by K. V. Vijayendra Prasad, Kabir Khan, Parveez Shaikh
Story by K. V. Vijayendra Prasad
Starring Salman Khan, Kareena Kapoor, Nawazuddin Siddiqui, Harshaali Malhotra
Music by Songs: Pritam Background score: Julius Packiam
Cinematography Aseem Mishra
Edited by Rameshwar S. Bhagat
Production company Salman Khan Films, Kabir Khan Films
Distributed by Eros International
Release dates 17 July 2015
Running time 159 minutes
Country India
Language Hindi

கொசுறு 1

இப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் “லிங்கா” படம் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ். இப்படம் போட்ட முதலை விட ஐந்து மடங்கு அதிகம் சம்பாதித்து இருக்கிறது.

கொசுறு 2

இப்படத்தின் கதை ரஜினிக்கும் கூறப்பட்டதாகக் கூறப்பட்டது. தலைவர் நடித்து இருந்தால் தமிழ் படமாக எடுத்து இருக்க முடியாது. இதன் காரணமாகத் தலைவர் நடிக்காமல் இருந்து இருக்கலாம். அதோடு தலைவரை விடச் சல்மானே இக்கதாப்பாத்திரத்துக்குப் பொருத்தமானவர்.

இக்கதை இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை மோதலை மையமாக வைத்து இருப்பதால், இதில் வட மாநில நடிகர்கள் நடிப்பதே பொருத்தமானது. சல்மான் சரியான தேர்வு. தன் தேர்வை ஸ்டார் அந்தஸ்தை விட்டுச் சாதாரணக் கதாபாத்திரமாகவே நடித்து நியாயப்படுத்தி இருக்கிறார்.

ஆக மொத்தத்தில் அனைத்துமே நன்றாக அமைந்த அழகான படம்.

{ 3 comments… add one }
 • Mohamed Yasin October 15, 2015, 7:38 AM

  Bajrangi Bhaijaan இந்த படத்தை இன்னும் பார்க்க வில்லை கிரி. பார்த்த நண்பர்கள் அனைவரும் படம் ரொம்ப நன்றாக இருப்பதாக சொன்னார்கள். WANTED படத்திற்கு பின் சல்மான் கானுக்கு ஏறுமுகம் தான். Bajrangi Bhaijaan இந்த படத்தில் முதலில் ஆமீர்கான் நடிப்பதாக இருந்தது.என்ன காரணம் என்று தெரியவில்லை அவர் நடிக்கவில்லை. சில வருடங்களுக்கு முன் அதிக அளவில் ஹிந்தி படங்களை பார்த்தேன். ஆனால் தற்போது அதிகம் பார்ப்பதில்லை. பகிர்வுக்கு நன்றி கிரி.

 • Arun Govindan October 16, 2015, 2:15 PM

  தல,
  செம படம் இது, விமர்சனத்துக்கு நன்றி

  “சமீப வருடங்களில் நான் பார்த்து அழுத படம் என்றால் இப்படம் தான்” – மீ 2 தல

  – அருண் கோவிந்தன்

 • கிரி October 28, 2015, 1:49 AM

  @யாசின் அவசியம் இந்தப் படம் பாருங்க.. அசத்தல் படம்.

  @அருண் 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz