சிங்கப்பூர் உணவகங்கள் – 1

நான் சாப்பாட்டுப் பிரியனல்ல ஆனால், சுவை நன்றாக இருந்தால் விருப்பமாகச் சாப்பிடுவேன்.  அடிக்கடி நான் செல்லும் உணவகங்கள் சிறு அறிமுகம்.  இதில் வருபவை பெரும்பாலும் நடுத்தர / பட்ஜெட் உணவகங்கள் மட்டுமே!

சகுந்தலா 151, Dunlop Street, Singapore 209466 (Little India)

Sakunthala Bala and Kalidass

பாலா – காளிதாஸ்

நான் சிறுவயதில் இருந்தே வீட்டில் சாப்பிட்டதைவிட உணவகங்களில் சாப்பிட்டதே அதிகம். இத்தனை வருட அனுபவங்களில் டன்லப் தெருவில் உள்ள சகுந்தலா உணவகம் போலக் கவனிப்பை வேகத்தை நான் எங்கும் கண்டதில்லை.

இவர்களின் உணவு சுவைக்காகச் சென்றதை விட இவர்களின் உபசரிப்புக்காகவே நான் சென்ற நாட்கள் அதிகம். இங்கே உள்ளவர்கள் அனைவருமே நன்கு கவனிப்பார்கள் என்றாலும் எனக்கு நெருக்கமானவர்கள் காளிதாஸ் மற்றும் பாலா.

அடிக்கடி வந்தால் சில உணவகத்தில் நட்பையும் தாண்டி ஒரு அலட்சியம் இருக்கும் ஆனால், இவர்களிடத்தில் சல்லடை போட்டுத் தேடினாலும் பார்க்க முடியாது.

இங்கே அனைத்துமே நன்றாக இருக்கும். கல் தோசை, இட்லி போன்றவை விருப்பமாகச் சாப்பிடுவேன். இவர்கள் தரும் சட்னி சுவை அதிகம். இட்லிக்கு சாம்பார், தக்காளி மற்றும் தேங்காய் சட்னி கொடுப்பார்கள். புளிக் குழம்பு கேட்டு வாங்குங்கள் செம சுவை.

இட்லில என்னயா புதுசா இருக்கப் போகுதுன்னு நீங்க நினைப்பது சரி.. இதை எதற்குக் கூறினேன் என்றால், சில உணகவகத்தில் இரண்டு இட்லி சாப்பிடுவதே கடுப்பா இருக்கும் (சோடா காரணமாக இருக்கலாம்) இங்கே எனக்கு அப்படித் தோன்றியதே இல்லை.

மசாலா சிக்கனுக்குச் சப்பாத்தி மற்றும் இட்லி பொருத்தமாக இருக்கும். நண்பர்கள் இறால் ரொம்ப நன்றாக இருந்தது என்றார்கள் ஆனால், எனக்கு இறால் பிடிக்காது அதனால் நான் முயற்சித்தது இல்லை. பிரியாணி / சாப்பாடு Unlimited 🙂 .

சாப்பிட்ட பிறகு மறக்காம காஃபி மற்றும் டீ குடித்துப் பாருங்க!

இவர்கள் தரும் சேவை / சுவைக்கு உணவுக் கட்டணம் இங்கே மிகக் குறைவு. என் நண்பர்கள் பலருக்கு அறிமுகம் செய்து அவர்கள் குடும்பத்துடன் வழக்கமாக வரும் உணவகமாக உள்ளது.

லிட்டில் இந்தியாவில் மூன்று சகுந்தலா கிளைகள் இருந்தாலும், எனக்குப் பிடித்தது நான் செல்வது டன்லப் தெரு சகுந்தலா மட்டுமே. மேற்கூறியவை இதை மனதில் வைத்தே.

Processed with Moldiv

Premas Kerala Restaurant – 209675, 6 Dalhousie Ln, 209675 (Little India)

என்ன தான் நம்ம ஊர் சாப்பாடு நமக்குப் பிரியம் என்றாலும் ஆந்திரா மீல்ஸ் க்கும் கேரளா உணவுக்கும் ரசிகர்கள் அதிகம். அது போல ஒரு மாற்றத்துக்காகச் சென்றது தான் ஆனால், சுவை நன்றாக இருந்ததால் தற்போது அடிக்கடி செல்கிறேன்.

இங்கே பிரியாணி, சாப்பாடு, அப்பம், முட்டை மசாலா, குழா புட்டு, கடலை கறி, பரோட்டா, பச்சை பயிறு போன்றவை சாப்பிட்டு இருக்கிறேன், நன்றாக இருந்தது. அப்பம் மற்றும் முட்டை மசாலா இணைந்து சாப்பிட பொருத்தமானது. சைவம் சாப்பிடுவர்களும் தாரளாமாகச் செல்லலாம்.

கேரளா என்றால் கறி மீன் பொளி(ழி)ச்சுப் பிரபலம்! எப்படித் தான் இதைச் செய்யுறாங்களோ.. ஒன்று வாங்கி இரண்டு பேர் சாப்பிடலாம். பல்க்கா சாப்பிடுபவராக இருந்தால், முழுதாகச் சாப்பிடலாம் 🙂 .

கடைசியா இஞ்சி டீ குடிச்சு முடிச்சுக்குங்க 🙂 .

கட்டணம் குறைவும் இல்லை அதிகமும் இல்லை ஆனால், தினமும் சென்று வரக்கூடிய அளவுக்கு கட்டணமல்ல. எனவே, வாரத்தில் ஒரு நாள் / இரு நாட்கள் செல்லலாம்.

Hans

இது நம்ம ஊரு உணவகம் இல்லை, இந்த ஊரு உணவகம்.

இந்த உணவகத்தின் கிளைகள் சிங்கப்பூர் முழுவதும் உள்ளது. எங்கள் அலுவலகத்தின் அருகிலேயே ஒன்று உள்ளது. காலையில் இங்கே வழக்கமாகச் சாப்பிடுவேன். என்னுடைய Blog ஃபேஸ்புக் / கூகுள்+ Page ல் தற்போது இருக்கும் காஃபி கப் படம் இந்தக் கடையினோடது தான்.

காலையில் மட்டும் இங்கே சாப்பிட்டு இருக்கிறேன். மதியம் சில உணவுகள் பார்க்க நன்றாக இருக்கிறது ஆனால், முயற்சித்தது இல்லை. கட்டணங்கள் அதிகம் எனவே, என்னைக்காவது செல்லலாம் அடிக்கடி செல்ல முடியாது.

காலையில் Cheese omelet , Onion Omelet , Mushroom Omelet இதனுடன் Bread toast இருக்கும். நான் பெரும்பாலும் Cheese Omelet + Bread Toast + Orange Juice சாப்பிடுவேன்.

Drink காஃபி / ஆரஞ்சு ஜூஸ் ஏதாவது வாங்கிக்கலாம் நம் விருப்பம். சிங்கப்பூரர்களுக்கு ஐஸ் மேல என்ன பிரியமோ குடிப்பதில் பாதிக் கப்புக்கும் அதிகமாக ஐஸ் தான் இருக்கும். எனவே மறந்து கூட ஐஸ் கலந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்துவிடாதீர்கள். கேவலமான சுவையாக இருக்கும்.

நான் நிறைய முறை Cheese Omelet + bread Toast + Orange Juice சாப்பிட்டு இருக்கிறேன். சலித்ததே இல்லை, கிட்டத்தட்ட இதற்கு நான் அடிமையானது போலத் தான் இருக்கிறது.

Good Combination 🙂 .

எனவே, Hans பக்கம் போனீங்க என்றால், இதை முயற்சித்துப் பாருங்க.

Tiffin Bhavan – 29 Campbell Ln, Singapore 209901 (Little India)

இது பழமையான முஸ்லிம் உணவு விடுதி.

ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு வகை உணவு. அசைவப் பிரியர்களுக்குப் பொருத்தமான உணவகம். நெய் சோறு, நெஞ்சு எலும்பு குழம்பு என்று ஏகப்பட்ட வகை இருக்கிறது. மதியம் தாமதமாகச் சென்றால் சாப்பாடு இருக்காது.

பொதுவா சில உணவகங்களில் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விட்டது போல இருக்கும் ஆனால், இங்கே அது போலத் தோன்றாது. ஒருமுறை சாப்பாடு கூடுதலாக வைத்து விட்டார்கள். வீண் செய்யப் போகிறோம் என்று நினைத்தேன் ஆனால், சாப்பாடு காலியானதே தெரியலை.

சுவை நன்றாக இருந்தால், கூடுதலாகச் சாப்பிடுகிறோம் என்பது உண்மை தான் ஆனால், இது போல வாய்ப்பு எனக்கு வெகு குறைவாகவே அமைந்து இருக்கிறது.

எந்தக் கிழமை என்று நினைவில்லை, ஒருநாள் முருங்கைக்காய் கூட்டு  (பொரியல்!) வைக்கிறார்கள் ரொம்ப நன்றாக இருக்கும். இதை மட்டும் தனியாக வாங்கிக் கொள்ளலாம்.

இங்கே தாராளமாக அசைவப் பிரியர்கள் சாப்பிட்டுப் பார்க்கலாம் குறிப்பாக மதிய உணவு.

மேலும் சில உணவகங்கள் உள்ளது அவற்றை அடுத்ததில் கூறுகிறேன்.

தொடர்புடைய இடுகை : சிங்கப்பூர் உணவகங்கள் – 2

{ 5 comments… add one }
 • Mohamed Yasin September 21, 2015, 11:40 AM

  சாப்பாட்டின் ருசி உங்கள் ஒவ்வொரு எழுத்தக்களிலும் சொட்டுகிறது. சும்மா இருக்குற எங்களோட நாக்குல சுவையா ஏத்தி விடுருங்கலே கிரி!!!

  சமையில் என்பது ஒரு கலைதான். சமையலில் சுவை எவ்வாறு கூடுகிறது?? அளவாக எல்லாவற்றையும் போட்டாலும் சுவை என்பது பக்குவத்தில் தான் இருக்கிறது. மனமும் அன்பும் சேர்ந்து சமைத்து கவனிக்கும் போது சுவை இன்னும் கூடி விடுகிறது.

  வாழ்வில் மறக்க முடியாத ருசியை எத்தனையோ தடவைகள் உணர்ந்திருக்கிறோம். எத்தனையோ உணவுகள் மறந்து விடும். சாப்பிட்ட இடமும் நினைவில் இருக்காது. ஒரு சில சுவைதான் மனதில் ‘நச்’ என்று பதிந்துபோய் இருக்கும். அவைதான் உன்னதமான “சுவைகள்”. பகிர்வுக்கு நன்றி கிரி.

 • வைகை September 21, 2015, 1:16 PM

  நீங்கள் சொன்ன சகுந்தலா மற்றும் டிபன்பவன் போயிருக்கேன், மாதத்தில் ஒருநாள் நெய் சோறு அல்லது பிரியாணி சாப்பிட டிபன் பவன்! கொத்து பரோட்டா மற்ற டிபன் ஐட்டம் சாப்பிட சகுந்தலா. அதுபோக சைவ உணவு சாப்பிட சென்னை ஆரியாஸ்! அதே கேம்பல் லேன் ரோட் டிபன் பவன் எதிரில், சைவ உணவுகள் அருமையா இருக்கும்! அசைவ உணவு சாப்பிட அரசு ரெஸ்டாரன்ட், காளியம்மன் கோவில் பின்புறம, எங்கள் செட்டி நாட்டு வீட்டு சமையல் ருசி அங்கு இருக்கும், அதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான்!

 • ssk September 21, 2015, 1:28 PM

  காந்தியை மறக்க வேண்டாம்…..

 • muna September 25, 2015, 3:18 AM

  Om murugan vilas foods r healthy beneficial.

 • கிரி September 27, 2015, 2:33 PM

  @யாசின் நீங்க சொன்ன மாதிரி கை பக்குவம் என்ற ஒன்று இருக்கிறது.. அது அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை.

  “வாழ்வில் மறக்க முடியாத ருசியை எத்தனையோ தடவைகள் உணர்ந்திருக்கிறோம். எத்தனையோ உணவுகள் மறந்து விடும். சாப்பிட்ட இடமும் நினைவில் இருக்காது. ஒரு சில சுவைதான் மனதில் ‘நச்’ என்று பதிந்துபோய் இருக்கும். அவைதான் உன்னதமான “சுவைகள்”. ”

  நச்சுனு சொன்னீங்க. எனக்கு மூன்று சுவை இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது.

  ஒன்று நானும் என் நண்பன் சதீஷும் பாரிஸ் கார்னர் சரவண பவனில் சாப்பிட்ட வெண்டைக்காய் தயிர் பச்சடி.

  இரண்டாவது என் சென்னை அறை நண்பர்கள் என் வீட்டிற்கு வந்து இருந்தார்கள். இங்கே இருந்து அனைவரும் டாப்ஸ்லிப் சென்றோம். அப்போது வீட்டில் என்னுடைய அக்காக்கள் இரவில் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு செய்து கொடுத்தார்கள், காலையில் நேரத்தில் கிளம்பும் போது கொண்டு செல்ல.

  நாங்க டாப்ஸ்லிப் கொஞ்சம் முன்னாடி வண்டியை நிறுத்தி இதை சாப்பிட்டோம்.. அசத்தல் சுவை. அந்தக் குளிருக்கும் இந்தக் காரத்திற்கும் அட்டகாசமாக இருந்தது.

  மூன்றாவது எங்கள் அலுவலக நண்பர்கள் இணைந்து டாப்ஸ்லிப் மற்றும் கேரளா எல்லையில் உள்ள ஒரு அணை சென்று இருந்தோம். அங்கே இருந்த கடையில் நாங்கள் கூறி கோழி கறி செய்து கொடுத்தார்கள். அங்கு இருந்த குளிருக்கும் அவர்களின் காரமான சுவைக்கும் அப்படி ஒரு பொருத்தம். இரவு உணவு.

  நான் வாழ்க்கையிலே அதிகமாக சாப்பிட்ட நாள் இதுவாகத் தான் இருக்கும் 🙂

  இந்த மூன்று சுவையை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. இது போல திரும்ப அமையவும் இல்லை..

  @வைகை உங்கள் அறிமுகத்திற்கு நன்றி 🙂 நான் செட்டிநாடு ரெஸ்டாரன்ட் சென்று இருக்கிறேன் ஆனால், அரசு போனதாக நினைவில்லை. முயற்சிக்கிறேன்.

  @ssk நான் இதுவரை சென்றதில்லை.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz