“பரபரப்பு” பித்துப் பிடித்து அலையும் ஊடகங்கள்

Sarabjitடந்த வாரம் Jasleen Kaur என்ற பெண்ணுக்கு நடந்ததாகக் கூறப்படும் Eve teasing சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப் பட்டு இருக்கலாம். Image Credit – thelogicalindian.com

சாலையில் சிக்னலில் நிற்கும் போது ஒருவர் (Sarabjit) தன்னிடம் அநாகரீகமாகத் நடந்ததாகவும், முடிந்தால் பார்த்துக்க என்று கூறியதாகவும், அந்த சம்பவத்தில் தனக்கு யாருமே உதவிக்கு வரவில்லை என்று ஒரு பெண் (Jasleen Kaur) கூறினார்.

இவர் இதைச் சமூகத்தளங்களில் பகிர்ந்ததும் வழக்கம் போல என்ன ஏது என்று பார்க்காமல் கண்மூடித்தனமாக அனைவரும் பகிர்ந்தார்கள். உடனே இது ஊடகங்களிலும் பரவி ஆளாளுக்கு இதைப் பற்றி விவாதித்து அந்தப் பெண்ணிடம் நேர்காணல் எல்லாம் செய்தார்கள்.

அந்தப்பெண்ணும் “நான் எதற்கு என் முகத்தை மறைக்கணும் தப்பு செய்தவன் தான் முகத்தை மறைக்கணும் அதனால் நான் தைரியமாகக் கூறுவேன்” என்று கூறினார்.

இது மிகப்பெரிய பிரச்சனையாகி ஊடகங்களில் சமூகத்தளங்களில் அனைவரும் விவாதித்தார்கள். எந்த விசாரணையும் இல்லாமல் Sarabjit யைகண்டபடி திட்டினார்கள். TimesNow செய்தி நிறுவனம் ஒரு படி மேலே போய் இவரை மன்னிப்பு கேட்க வற்புறுத்தியது.

இதற்கு Sarabjit “அந்தப் பெண் பொய் கூறுகிறார் நான் தவறு செய்யவில்லை” என்று மன்னிப்புக் கேட்க மறுக்க, தொடர்ந்து பேட்டியை எடுத்த பெண் இவரை வற்புறுத்தினார்.

பேட்டியில் கேள்வி கேட்பவர் நடந்து கொள்ளும் முறையைப் பாருங்கள். இவரெல்லாம் ஊடகத்தில் இருக்கவே தகுதியற்றவர்.

Timesnow சேனலில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் அர்னாபுடன் ஏகப்பட்ட பேர் வழக்கம் போல விவாதித்தார்கள். Sarabjit யை எதுக்கு முகத்தை மூடி!! காவல்துறை அழைத்து வருகிறார்கள் என்று அர்னாப் கேட்டார். நீதிபதியே இவரிடம் தான் முடிவு கேட்கணும் போல.

Delhi Pervert Arrested” என்று கூறி தீவிரவாதி போல Sarabjit கைதாகி அழைத்து வருவதை தொடர்ந்து Timesnow ல் ஒளிபரப்பினார்கள். இந்தப் பெண்ணை “Brave Heart” என்று அழைத்தார்கள்!

பொதுவாகவே வட இந்திய ஊடகங்களுக்கு இது போல ஒரு விஷயம் கிடைத்து விட்டால் 24 மணி நேரமும் இதையே கூறிச் சாவடிப்பார்கள். ஒரு மைக்கை தூக்கிக்கொண்டு இவர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே..! புத்தராகவே இருந்தாலும் காண்டாகி விடுவார்.

திரும்பிய கதை 

தற்போது இன்னொருவர் வந்து Sarabjit மேல் எந்தத் தவறும் இல்லை என்று கூற அப்படியே உல்டாவாகி புகார் கூறிய Jasleen Kaur யை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!

Jasleen Kaur பொய் கூறி தங்களை முட்டாளாக்கியதாகக் கருதியவர்கள் தங்கள் கோபத்தைத் திருப்பிச் சமூகத்தளங்களில் இவர் மீது காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். Sarabjit யை திட்டிக்கொண்டு இருந்த ஊடகங்கள் தற்போது கையைப் பிசைந்து கொண்டு இருக்கின்றன.

Timesnow விவாதத்தில் பேசிய “தீபிகா” “ரித்விக்” இருவரும் மீண்டும் அர்னாபுடன் இது போல விவாதம் வைக்க வேண்டும், இப்போது அர்னாப் என்ன வசனம் பேசுவார் என்று பார்க்க வேண்டும்.

அர்னாப் போன்றவர்களுக்கு ஆண்டவன் மூளை என்ற ஒன்றை கொடுக்கவே இல்லையென்று நினைக்கிறேன். என்ன ஏது என்று எதையும் விசாரிக்காமலே, நீதிமன்றம் எந்தத் தீர்ப்பும் கூறாமலே இவர்களே நீதிபதிகள் ஆகி விமர்சிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு அவசரப்பட்டு எழுதி அதனால் கிடைத்த அனுபவங்கள் இனி இந்தத் தவறை செய்யக் கூடாது என்பதை எனக்கு உணர்த்தியது.

சில நாட்கள் பொறுமையாக இருந்தாலே இன்னொரு பக்க உண்மை எப்படியாவது வெளிவரும்.

Rohtak Sisters

கொஞ்ச மாதங்கள் முன்பு இரு சகோதரிகள் (Rohtak Sisters) செய்த வேலையை மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தற்போது நடந்தது போலவே அப்போதும் நடந்தது. இரு சகோதரிகளும் வீரப் பெண்மணிகளாக இந்தியாவின் முன் நிறுத்தப்பட்டனர்.

இந்தக் கேடு கெட்ட ஊடகங்கள் ஒருமுறை செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் திரும்ப அதே தவறை செய்கிறார்கள் என்றால், இவர்களுக்கு TRP தான் முக்கியம் யாரைப் பற்றியும் கவலையில்லை என்பது தெளிவாகப் புலனாகிறது.

இந்த இரு பெண்கள் செய்த செயலால் ஒரு மாணவனின் படிப்பே நாசமாகி விட்டது. இவரது தந்தை இனி கல்லூரிக்கு அனுப்பப் போவதில்லை என்று கூறி விட்டார்.

இந்தப் பிரச்சனையால் எங்கள் கிராமப் பெயரே கெட்டு விட்டது, இவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அன்று அத்தனை ஊடகங்களும் இவர்களை வரிந்து கட்டிக்கொண்டு திட்டின. தற்போது எங்கே போயினர் அந்த ஊடகங்கள்?” என்று ஒருவர் கேட்கிறார்.

மக்களே! ஆண்கள் அனைவருமே பொறுக்கிகள் கிடையாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது என்பது உண்மை தான். அதற்காக ஒட்டுமொத்த ஆண்களும் அப்படித்தான் என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விசாரிக்காமல் விமர்சிக்காதீர்கள்.

பாதிக்கப்பட்டது பெண் என்றால் போதும் கேள்வியே கிடையாது உடனே அனைவரும் பொங்கி விடுகிறார்கள் அதிலும் ஊடகங்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

போலி பாலியல் குற்றங்கள், வரதட்சணை புகார் எண்ணிக்கை அதிகம் என்று சர்வே கூறுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மெல்லுவதற்கு ஏதாவது வேண்டும் 

ஊடகங்களைப் பொருத்தவரை தங்களுக்கு ஒரு பரபரப்பு செய்தி வேண்டும் அவ்வளவு தான். சமூகத்தளங்களில் இருப்பவர்களுக்குப் பேச ஒரு செய்தி வேண்டும். எவருக்கு என்ன ஆனாலும் அதைப் பற்றிக் கவலையில்லை நான் எவரையும் திட்டுவேன் மனநிலை தான்.

நமது தமிழ் ஊடகங்கள் உட்பட அனைவரும் என்னமோ பெரிய சமூகச் சேவை செய்வது போல Sarabjit படத்தைப் போட்டு குற்றம் நிரூபிக்கப்படும் முன்பே இவர் தான் அநாகரீகமாக நடந்தார் என்று அனைவருக்கும் அறிவித்துக்கொண்டு இருந்தார்கள்.

இவர்கள் எல்லாம் தற்போது எங்கே முகத்தை வைத்துக்கொள்வார்கள்?!

தற்போதும் யார் மீது தவறு என்று தெரியவில்லை. விசாரணைக்குப் பிறகு தான் தெரியும். அதற்குள் ஏன் இந்த அவசரம்? வெறி? என்ன சாதிக்கப்போகிறார்கள்?

TRP என்ற மூன்றெழுத்து செய்யும் கோலம் 

ஒவ்வொரு செய்தி நிறுவனத்திற்கும் TRP / விற்பனை பிரச்சனை. எனவே, எதையாவது பரபரப்பாக்கி தங்களைப் பார்க்க / படிக்க வைக்க வேண்டும். அதனால் யார் பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றிக் கவலையில்லை.

தவறு என்று தெரியவந்தால் குட்டியாக மன்னிப்புக் கூறி விட்டு அல்லது அதையும் செய்யாமல் அடுத்தவரை காலி செய்யக் கிளம்பி விடுவார்கள்.

தற்போது ஒருவேளை Sarabjit தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், மற்ற பிரச்சனைகளுக்கும் இது வரை பொங்கியவர்கள் பொறுப்பேற்பார்களா?

இவரைப் பணியில் இருந்து நீக்கி விட்டதாகக் கூறுகிறார்கள் உண்மையா என்று தெரியவில்லை.

இந்த சர்ச்சையை ஒருத்தர் கிழித்து தொங்க விட்டு இருக்கிறார். அவசியம் பாருங்க.

தவறு செய்தவர் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், உணர்ச்சி வசப்படுவதால் தவறு செய்யாதவர் கூடப் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

இது போன்ற குற்றங்களுக்கு ஊடகங்கள் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சிறு தவறும் பொறுப்புத் தான்.

 

{ 4 comments… add one }
  • Mohamed Yasin August 31, 2015, 1:17 PM

    பைபிளில் ஒரு கதை உண்டு என்பார்கள். விபச்சாரம் செய்த ஒரு பெண்ணை ஊரார் கல்லால் அடித்துக் கொலை செய்ய முயல்வார்கள். ஏசு அவர்களிடம், உங்களில் தவறு செய்யாதவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் இவளை முதலில் அடிக்கட்டும் என்றாராம்.

    அடுத்த விநாடி அங்கு அத்தனை பேரும் அம்பேல்; ஈ காக்காய் கூட இல்லை என்று ஒரு கதை. அதுதான் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது.

    (தவறு செய்தவர் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், உணர்ச்சி வசப்படுவதால் தவறு செய்யாதவர் கூடப் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

    இது போன்ற குற்றங்களுக்கு ஊடகங்கள் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சிறு தவறும் பொறுப்புத் தான்) சக்தியமான வரிகள் கிரி.. பகிர்வுக்கு நன்றி.

  • பெண்களுக்கு உதவுவது என்றாலே அது ஒரு ஹீரோயிசம்தான், ஒரு பிரச்சினையில் பெண்ணும், ஆணும் சம்மந்தப்பட்டு இருந்தாலே அனைவருக்குள்ளும் இருக்கும் ஹீரோ வெளியே வந்து அந்த ஆணைப் புரட்டி எடுப்பது வழக்கம்தான், மேலும் ஊடகங்களை மட்டும் குறை கூற முடியாது, ஊடகம் என்பது மக்களின் எண்ணத்தை பிரதிபளிப்பதுதான் , மக்கள் எதை ரசிக்கின்றார்களே அதைக் கொடுத்தால்தான் அவர்கள் பிழைப்பு நடத்த முடியும், சரி, தவறு எல்லாம் பிறகுதான்.
    பல நல்ல விசயங்களைக் கொடுத்த ஊடகங்கள் மக்களால் ஆதரிக்கப்படாமல் மறைந்து விட்டன, தற்போது அரசு ஊடகமான பொதிகையை எத்தனைப் பேர் பார்க்கின்றோம். சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒருவர் மதுக்கடைகளை மூட வேண்டும் என செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்து இறந்தார் ,இது ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்பட்டது, இதன் பிறகு பலரும் அற்ப பிரச்சனைகளுக்காக செல்போன் கோபுரத்தில் ஏற ஆரம்பித்து விட்டார்கள், ஒரு மதுப்பிரியர் மூடியிருந்த மதுக்கடையைத் திறக்க வேண்டும் என செல்போன் கோபுரத்தில் ஏறி பிரச்சனை செய்துவிட்டார் .நல்ல விசயத்திற்காகச் செய்ய நினைத்தது மக்களால் இப்படிப் பயன்படுத்தப்படுகின்றது.
    டெல்லி மாணவி விசயத்திற்குப் பிறகு பெண்கள் சம்மந்தப்பட்ட விசயம் இன்னும் பரபரப்பாகி விட்டது.எனவே பரபரப்பு பித்துப் பிடித்திருப்பது ஊடகங்களுக்க, அல்லது மக்களுக்க எனச் சிந்திக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

  • Arun Govindan September 4, 2015, 12:43 AM

    தல,
    ரொம்ப தேவையான உணர்ச்சி வசப்படாத பதிவு… ரொம்ப ரசிச்ச வார்த்தைகள்

    “தவறு செய்தவர் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், உணர்ச்சி வசப்படுவதால் தவறு செய்யாதவர் கூடப் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.”

    “தற்போது ஒருவேளை Sarabjit தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், மற்ற பிரச்சனைகளுக்கும் இது வரை பொங்கியவர்கள் பொறுப்பேற்பார்களா?”

    இந்த வீடியோ பார்த்தீங்களா
    https://www.youtube.com/watch?v=1v6h1PiyHHA

    -அருண் கோவிந்தன்

  • கிரி September 6, 2015, 3:41 AM

    @யாசின் பைபிள் உதாரணம் எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. நம்மில் பெரும்பாலானாவர்கள் நம்மிடம் இல்ல குறையை மறைத்து அடுத்தவரை குறை கூறுவதையே வேலையாகக் கொண்டுள்ளோம்.

    @கார்த்திக் நீங்கள் கூறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். நியாயமாக நானே இதைக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    ஊடகங்கள் இது போல இருப்பதற்கு பொதுமக்கள் முக்கிய குற்றவாளிகள். மக்கள் புறக்கணித்தால் ஏன் அவர்கள் இது போல செய்யப் போகிறார்கள். நீங்கள் கூறுவது போல நல்ல செய்திகளை தாங்கி வருபவை நட்டத்தையே சந்திக்கின்றன.

    இதெல்லாம் சரி தான் என்றாலும் இதையும் மீறி ஊடகங்களுக்கு என்று ஊடக தர்மம் என்ற பொறுப்பு உள்ளது. நாட்டின் தூண்களில் ஒன்றாக ஊடகத்தை குறிப்பிடுகிறார்கள். எனவே, இவர்களும் இது போல செய்தால் இவர்களுக்கும் மக்களுக்கும் என்ன வித்யாசம்.

    மக்களுக்கு சரியான கருத்துகளை, உண்மையான செய்திகளை கொடுக்க வேண்டும். பொதுமக்கள் தவறு செய்தாலும் அவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பு இவர்களுக்குண்டு.

    இனி இதையெல்லாம் கற்பனையில் கூட எதிர்பார்க்க முடியாது என்பது கசப்பான உண்மை.

    @அருண் இந்தக் காணொளி பார்த்து விட்டேன். இதையும் குறிப்பிடலாம் என்று நினைத்தேன் ஆனால், ஏற்கனவே நிறைய காணொளிகள் கட்டுரையில் இருந்ததால் தவிர்த்து விட்டேன்.

Leave a Comment