விண்வெளி – சன் – கலாம் – எஸ்கேப் – நாய் கடி

விண்வெளி என்ற ஆச்சர்யம்

Pluto

விண்வெளி என்பது பல பல ஆச்சர்யங்கள் அதிசயங்கள் நிறைந்தது. நாசா ஆய்வு மையம் மூலம் ப்ளுட்டோ கிரகத்தை ஆய்வு செய்ய 2006 ம் ஆண்டு ஏவப்பட்ட நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் 9 1/2 வருடங்கள் பயணம் செய்து ப்ளூட்டோ கிரகத்தை 2015 ம் ஆண்டு அடைந்து நிழற்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

விண்கலம் பல பில்லியன் கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது ஆனால், பக்காவாகப் படம் எடுத்து அனுப்புகிறது. இவ்வளோ தூரத்தில் இருந்து எப்படி வருகிறது? இது பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம் விளக்க முடியுமா? Image Credit – www.nasa.gov

Readமங்கள்யானும் விண்வெளி ஆச்சர்யங்களும்

சன் தொலைக்காட்சி என்ற டகால்ட்டி

ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் அது கொடூரமான விசயமாக இருந்தாலும் அதற்கும் ஆதரவு எதிர்ப்பு இருக்கும். அது போல ஊருல இருக்குற போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் புரட்டிப் போட்டு, குடைச்சல் கொடுத்து, படுத்தி எடுத்த சன் தொலைகாட்சிக்கும் ஆதரவு குரல்கள்.

இதில் இரண்டு விசயம் செம்ம கடுப்பாச்சு. ஒன்று விவசாயிகள் என்று சிலர் இதற்குக் கொடுத்த எதிர்ப்பு!! இரண்டாவது வைகோ கொடுத்த எதிர்ப்பு.

விவசாயிகளுக்கும் சன் தொலைக்காட்சிக்கும் என்னய்யா சம்பந்தம்? என்னமோ இவங்க வயலும் வாழ்வும் நிகழ்ச்சி நடத்திய மாதிரியும் அதை நிறுத்த போறாங்க என்பது போலவும் போராட்டமாம்..! கொடுமை.

வைகோ கொஞ்ச வருடங்கள் முன்னாடி சன் தொலைக்காட்சிக்கு எதிராகப் போராடினார். சன் தொலைக்காட்சியால் அரசியல் ரீதியாகப் புறக்கணிப்பு அவர் மீது கட்சி மீது நடத்தப்பட்டது.

இப்ப என்னடான்னா சன் தொலைகாட்சி மீது அடக்குமுறை பழி வாங்கும் நடவடிக்கை என்று சொல்றாரு. ஒருவேளை சன் திருந்தி இருந்தாலாவது ஒரு கணக்கில் வைக்கலாம். நாம் மதிப்பு வைத்து இருக்கும் ஒருவர் இது போல செய்யும் போது அளவுகடந்த வருத்தம் ஏற்படுகிறது.

ஜி டிவி, விஜய் செய்தி, ராஜ் கேபிள், ஜெயா+ துவக்கம், ஹாத்வே முடக்கம் என்று எத்தனை பேரை அழித்து இருப்பாங்க..! அப்போ இது போல யாராவது பொங்குனாங்களா?

சன் மொள்ளமாரித்தனம் செய்தாங்க இப்ப மாட்டிட்டு முழிக்கறாங்க.. அதுக்கு ஏன் சன் தொலைக்காட்சிய எதோ இந்திய சுதந்திரத்திற்குப் போராடிய தியாகிய காப்பாத்துற மாதிரி கலங்கிட்டு இருக்காங்கன்னு புரியலை.

பாலக்காட்டு மாதவன்

விவேக் படம் எளிமையாக ரசிக்கும் படி இருந்தது. சிறிய படம் தான். குடும்பமாகப் பார்க்கும் படத்திலும் ஐட்டம் பாடல், டாஸ்மாக் என்று வைப்பதன் அர்த்தம் புரியவே இல்லை. இந்தப் படத்திற்கு வருபவர்கள் இவற்றை விரும்ப மாட்டார்கள். பின் யாரைத் திருப்திப்படுத்த இவை?

விவேக் எந்தப் பில்டப்பும் இல்லாமல் இயல்பாக நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான படம்.

கலாம்

கலாம் காலமாகி விட்டார். அனைவருக்கும் முன்னுதாரணமாக, வழிகாட்டியாக இருந்து தனக்குப் பிடித்த செயலை செய்து கொண்டு இருக்கும் போதே இறந்து இருக்கிறார். அருமையான சாவு. எவருக்கு இது போல அமையும்!!

2007 ல் கலாம் ஒரு விழாவில் கீழே விழுந்த போது எடுக்கப்பட்ட நிழற்படத்தைத் தற்போது சமூக ஊடகங்களில் பரவ விட்டு இருக்கிறார்கள். இதில் என்ன சந்தோசம் என்று புரியவில்லை! நேபாள் பூகம்பத்தின் போதும் இதே போல ஜப்பானில் நடந்த ஒரு சம்பவத்தைப் பரவவிட்டார்கள்.

இதை உண்மை என்று நம்பி ஆதங்கத்தில் அவர் மீதுள்ள அன்பில் இதைப் பகிரும் சாதாரணமானவர்களைக் குறை கூற முடியாது ஆனால், ஊடகங்கள் கூடக் கண்மூடித்தனமாக இதைப் பகிர்ந்த போது மிக மிகக் கவலையாக இருக்கிறது.

கலாம் அவர்கள் பல சாதனைகளைச் செய்து பலருக்கு முன்னுதாரணமாக இருந்து, நம் நாட்டை வெளிநாட்டினரிடையே பெருமைப்படுத்தி நிறைவான இறப்பை எதிர்கொண்டு இருக்கிறார். இதற்காகக் கலங்காமல் அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.

தமிழர்களுக்கெல்லாம் கூடுதல் பெருமையைச் சேர்த்த உலகத் தலைவருக்கு தலை வணங்குவோம்.

உண்மையில் சமூகத்தளங்களில் கலாமுக்கு குவிந்த அஞ்சலிகள் திகைக்க வைத்தது. எத்தனை பேர் இவர் மீது அன்பாக இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. தலைவர் இறந்தால் கிடைக்கும் விடுமுறைக்குச் சந்தோசப்படாத விடுமுறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Vinay Yuvanநேற்று (28-07-2015) பள்ளி விடுமுறை என்பதால் என் பையன் வினயிடம் பேசினேன். கலாம் தெரியுமா? என்று கேட்டேன் (இரண்டாவது படிக்கிறான்).

“தெரியல.. யாரோ தாத்தா இறந்துட்டாங்களாம் அதனால நானும் யுவனும் விளையாடிட்டு இருக்கோம்” என்றான்.

இவனிடம் வேறு எதிர்பார்க்க முடியாது என்பதால், மனைவியிடம் கூறி இருவரையும் கலாம் படத்தைப் பூஜை அறையில் வைத்து வணங்கக் கூறி இருந்தேன்.

இவர்களுக்குக் கலாம் பற்றிப் புரியவில்லை என்றாலும் இவ்வாறு வணங்குவதன் மூலம், எதோ முக்கியமான நபர் என்ற அளவில் மனதில் பதிந்து இருக்கும். அடுத்த நாள் பள்ளியில் கூறினால், அரைகுறையாகப் புரிந்து கொள்வான்.

கலாம் அவர்களின் முக்கியத்துவம் அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக என் அப்பாவையும் அருகில் இருக்கக் கூறினேன். வயது வந்து தெரிந்து கொள்ளும் போது அப்போது தான் வணங்கியதற்காகப் பெருமைப்படுவான்.

கலாம் இந்தியாவின் / தமிழகத்தின் பெருமை.

Read அக்னிச் சிறகுகள்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு

Prision Escape

கடும் பாதுகாப்பையும் மீறி “Shawshank redemption” படத்தில் வருவது போல அமெரிக்காவில் இரு கைதிகள் தப்பியதை நீங்கள் படித்திருக்கக் கூடும். அதில் ஒருவனைச் சுட்டு விட்டார்கள், இன்னொருவனைத் திரும்பக் கைது செய்து விட்டார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் தப்பிப்பது கூட எப்படியோ செய்து விடலாம் போல ஆனால், தொடர்ந்து தலைமறைவாக இருப்பது என்பது கடினமான ஒன்று. எப்படிக் கடினமான சிறையாக இருந்தாலும் திறமையாகத் தப்பித்து விடுகிறார்கள்.

இவங்க தப்பித்ததோடு நக்கலாகக் குறிப்பும் எழுதி வைத்துட்டுப் போய் இருக்காங்க பாருங்க. ரணகளத்திலும் கிளுகிளுப்பு 🙂 . Escape from Alcatraz என்ற படம் கூடச் சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பது பற்றித் தான். ரொம்ப நன்றாக இருக்கும்.

தெருநாய்

தெருநாய்களைக் கொல்லக் கேரளா அரசு திட்டமிட்டு இருப்பதற்குப் பல தரப்பு மக்களிடையே குறிப்பாகத் திரைப்பட மக்களிடையே கடும் எதிர்ப்பு. அது என்னமோ பணக்காரங்களுக்குத் தான் தெரு நாய்கள் மீது பாசம் அதிகம் இருக்கிறது.

ட்விட்டரில் இவர்களைப் போட்டு வறுத்து எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கும் நாய் மீது அளவுகடந்த பாசம் உண்டு ஆனால், கடிக்கும் தெரு நாய் மீது அல்ல. தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் பெரும்பாலும் காரில் செல்பவர்கள்.

Readநாய் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது!

இவர்களுக்குத் தெருவில் நடந்து போகிறவர்கள் பிரச்சனை என்ன தெரியும்? இவர்கள் தெருவில் நடந்து போய்த் தெரு நாயிடம் கடி வாங்கி இருந்தால் அல்லது கடி வாங்கி விடுவோமோ என்று பயந்து இருந்தால் இந்த நடிப்பை வெளிப்படுத்த மாட்டார்கள்.

எத்தனை குழந்தைகளைக் குதறி இருக்கிறது? எத்தனை பேர் நாய்க்கு பயந்து வேறு தெரு சுற்றி செல்கிறார்கள்! சொகுசாகச் செல்லும் இவர்களுக்குச் சாதாரண மக்களின் பிரச்சனை என்ன புரியும்? விஷாலும் த்ரிஷாவும் (தெரு) நாய் கடி வாங்கினால் தான் நான் திருப்தி ஆவேன் 🙂 🙂 .

{ 10 comments… add one }
 • Mohamed Yasin July 29, 2015, 5:25 AM

  சிறு வயதில் இயற்பியலிலும், வரலாற்றிலும் அதிக ஆர்வம் இருந்தது, ஆனால் காலப்போக்கில் கணக்குபதிவியலில் திரும்பி அதுவே இன்று பணியாகி விட்டது.. இன்றும் அறிவியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக தான் இருக்கிறேன்.. (உங்கள் கேள்விக்கு தெளிவாக விடை தெரியவில்லை)..

  சன் தொலைக்காட்சி – கடந்த 3/4 வருடமாக எந்த தொலைகாட்சியையும் பார்பதில்லை.

  மதிப்பிற்குரிய கலாம் : என்னுடைய தகப்பன் மறைந்த போது விடாத கண்ணீரை உங்களின் மறைவு வரவைத்து விட்டது… எதோ ஒரு சிறு கிராமத்தில் பிறந்து சிகரத்தை அடைந்த நீங்கள் மறையவில்லை..

  கிரி, உங்கள் குழந்தைகளுக்கு இறப்பு செய்தி தெரிவித்து, அஞ்சலி செய்தது சிறப்பான செயல். இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் தானாகவே இந்த மாமேதையை பற்றி அவர்கள் தெரிந்து கொள்வார்கள்

  “Shawshank redemption” : என் வாழ்கையில் நான் அதிகம் தடவை விரும்பி பார்த்த படம்… நீங்கள் குறிப்பிட்ட படத்தை இதுவரை பார்த்ததில்லை. பின்பு பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 • Arun Govindan July 29, 2015, 5:56 PM

  தல,
  “விஷாலும் த்ரிஷாவும் (தெரு) நாய் கடி வாங்கினால் தான் நான் திருப்தி ஆவேன் ”
  – மீ டூ 🙂

  கலாம்
  – வீட்டுல பூஜை அறைல வெச்சு நீ கலக்கிட தல

  பாலக்காட்டு மாதவன்
  – பாக்கல இன்னும்

  சன் தொலைக்காட்சி
  – வைகோ இதுக்கு ஏன் இவ்வளவு feel பண்ணாருன்னு புரியல, விவசாய்கள் வேறயா?

  விண்வெளி question
  இந்த லிங்க் help பண்ணலாம்
  http://space.stackexchange.com/questions/9916/how-are-new-horizons-images-sent-back-to-earth

  – அருண் கோவிந்தன்

 • tamizh July 30, 2015, 9:19 AM

  கலாம் அய்யா இறந்தது ரொம்ப வருத்தமே.

  உங்க பசங்க செஞ்சது ரொம்ப சரி.

  சாறு இல்லை சாரு என்ற ஒரு கேடுகெட்ட ஜென்மம் அப்துல் கலாம் அய்யாவை பற்றி மிக மோசமாக எழுதி இருக்கான். இதற்கும் ஆதரவு தெரிவித்து கருத்துக்கள் வேறு.

  அந்த கேடு கேட்ட ஜென்மத்தின் வெப்சைட்-ஐ HACK செய்ய முடியாதா?

  எதவாது வழி இருந்தால் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. தொழில் நுட்ப அறிவு எனக்கு அவ்வளவு இல்லை.

  அந்த சாரு என்ன பண்ணினான்? இவன் எல்லாம் கலாம் அய்யாவை திட்டுவது கடுப்பாக இருக்கு.

  do something giri.. Plz

 • எனக்குத் தெரிந்த சில தகவல்கள், விண்கலத்திலிருந்து நாம் தகவல்களை பெறுவது என்பது நம் டீவியில் படம் பார்ப்பதைப் போலத்தான், அதவது தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து ஒரு நிகழ்ச்சி சிக்னல்களாக மாற்றப்பட்டு அவை செயற்கைக்கோளிற்கு அனுப்பப்படுகின்றது.

  பிறகு அவை செயற்கைக்கோளிலிருந்து அந்த சிக்னல்கள் நமது டிஸ் மூலம் பெறப்பட்டு அவை மீண்டும் மற்றப்பட்டு நமது டீவியில் தோன்றுகின்றது.

  அது பேலத்தான் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவிலிருந்து எடுத்த தகவல்களை சிக்னல்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியுள்ளது .இந்த சிக்னல்கள் நேர்கோட்டில் தான் செல்லும், அதாவது ஹொரைசன்ஸ் அனுப்பும் சிக்னளை பெற பூமியும், புளூட்டோவும் நேர்கோட்டில் இருக்க வேண்டியது அவசியம் .

  இதனால் தான் நாம் சில டீவி சேனல்களை பெற நம் வீட்டு டிஸ்சை ஒரு குறிப்பிட்ட திசையில் திருப்பி வைக்கின்றோம். மேலும் பூளூட்டோவும்,பூமியும்,சூரியனால் மறைக்கப்படும் போது நியூ ஹொரைசனிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் சூரியனால் தடுக்கப்பட்டுச் சிதறடிக்கப்படும்.

  இது போன்ற பிரச்சினையை நமது மங்கள்யான் சந்தித்து 15 நாள் வரை சிக்னல்களை பெற முடியமல் போனது.

  இந்த சிக்னல்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது, இருந்தாலும் தூரம் அதிகமாக இருக்கும் போது சிக்னலை பெற தாமதம் ஆகும்,ஹொரைசன்ஸ் விண்கலம் திரட்டிய அனைத்து தகவல்களையும் பெற 15 மாதங்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகின்றது.

  ஐயா திரு ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மறைவு நமது இந்திய நாட்டிற்கு ஈடு இணையற்ற இழப்பாகும், ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

 • guest July 31, 2015, 4:18 AM

  கலாமின் படத்தை( எந்த ஒரு சிறப்பான மனிதனாக இருந்தாலும்) சக மனிதனின் படத்தை பூஜை அறையில் கடவுளுக்கு சமமாக வைத்து வணங்குவது தவறு. காந்தி காமராஜ் எம் ஜி ஆர் யாராக இருந்தாலும் சரி. There is difference between worshiping and honoring . Worship என்பது கடவுளுக்கு மட்டுமே உரியது. In this world , no one is righteous . குழந்தைகளின் பிஞ்சு மனதில் Human worship என்ற தவறை வளர்த்த கூடாது என்பது என்னுடைய humble opinion . நம்மை படைத்த கடவுளுக்கும் படைக்கப்பட்ட அற்ப மனிதர்களாகிய நமக்கும் உள்ள வித்தியாசம் குழந்தையிலே புரிந்திருக்க வேண்டும். Show honour and respect for one another . Worship God .

 • கிரி August 5, 2015, 4:16 AM

  @யாசின் & அருண் நன்றி

  @தமிழ் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அவர் ஒருவர் கூறுவதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை. புறக்கணிப்பே சிறந்தது.

  இவருடைய தளத்தை கொஞ்ச வாரங்கள் முன்பு யாரோ ஹேக் செய்து விட்டார்கள் 🙂

  @கார்த்திக் விளக்கத்திற்கு நன்றி.

  “இது போன்ற பிரச்சினையை நமது மங்கள்யான் சந்தித்து 15 நாள் வரை சிக்னல்களை பெற முடியமல் போனது.”

  இதை நானும் படித்தேன். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

  @Guest சுவாரசியமான பதிலை கொடுக்கக் கூடிய விமர்சனம் 🙂

  Human worship என்பது பலவகையாக புரிந்து கொள்ளப்படுவது.

  இது வயதானவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் என்னுடைய அகராதியில் பொருந்தாது.

  என்னைப் பொறுத்தவரை என் மனதிற்கு நெருக்கமானவர்கள் காலமானால் அவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்.

  எனக்கு பெரியவர்கள் மீது எப்போதுமே அன்பும் பாசமும் அதிகம்.

  என்னுடைய பையன்களையும் அது போலவே வளர்த்து வருகிறேன். பெரியவர்களிடம் ஆசி பெறுவது “என்னைப் பொறுத்தவரை” கடவுளிடம் பெறும் ஆசியை விட உயர்ந்தது. இவர்கள் இருவரும் தங்கள் பிறந்த நாள் / பண்டிகை நாள் அன்று பெரியவர்களிடம் ஆசி பெறுவதை ஊக்குவித்து வருகிறேன்.

  இந்த பூஜை அறையில் கூட நன்றாக கவனித்தீர்கள் என்றால் என்னுடைய பாட்டி / தாத்தா படங்கள் இருக்கும். எங்கள் குடும்பமே இறந்தவர்களை கடவுளாகத் தான் கருதுகிறார்கள்.

  அதற்காக அடுத்தவரை கெடுக்க நினைத்து தனது கடைசி காலம் வரை முயற்சித்தவர்களை எல்லாம் இந்த கணக்கில் சேர்க்க முடியாது.

  என்னிடம் ஒரு கடவுள் படத்தையும் என்னுடைய பாட்டி படத்தையும் கொடுத்து இரண்டில் ஒன்றை தான் பூஜை அறையில் வைக்க வேண்டும் என்றால், யோசிக்காமல் என்னுடைய பாட்டி படத்தைத் தான் வைப்பேன்.

  என்னைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு முன்னுதராணமாக திகழ்ந்தவர்கள் அவர்களின் மறைவிற்குப் பின் கடவுளுக்கு ஒப்பானவர்கள். கலாமும் அப்படித் தான்.

  இது குறித்து முன்பே எழுதி இருக்கிறேன். நேரமிருந்தால் இதை படித்துப் பாருங்கள்

  http://www.giriblog.com/2013/05/about-grand-parent.html

 • Irzath August 5, 2015, 4:28 AM

  கிரி அவர்களே . இதுவரைக்கும் தாங்கள் பாகுபலி படத்தை பற்றி ஒரு விமர்சனம் எழுத உங்களுக்கு தோணவில்லையா . நீங்கள் முக்கியமாக எழுதி இருக்க வேண்டும் . இல்லை இதுவரைக்கும் பார்க்கவில்லையா . உங்களிடம் இருந்து விமர்சனம் எதிர்பார்கிறேன் .

 • கிரி August 5, 2015, 4:46 AM

  @Irzath ஏற்கனவே அருண் யாசின் போன்றவர்கள் கேட்டு இருந்தார்கள் http://www.giriblog.com/2015/07/uppuveli-book-review.html இங்கே பதில் கூறி இருக்கிறேன்.

  அதோடு தற்போது நான் விமர்சனம் எழுதுவதை குறைத்து விட்டேன். இந்த ஆண்டு நான் எழுதியதே மொத்தம் ஐந்து தான்.

  கேட்டதற்கு நன்றி 🙂 .

 • Mohamed Yasin August 5, 2015, 5:55 AM

  கிரி, பெரிவர்களின் மீதும், முதாதையர்களின் மீதும் நீங்கள் வைத்து இருக்கும் மரியாதையை பார்க்கும் போது, அ.முத்துலிங்கம் அவர்கள் (இவர் நிறைய நாடுகளின் பணிபுரிந்தவர், குறிப்பாக ஆப்பிரிக்காவில் ரொம்ப வருடங்கள் பணிபுரிந்தவர்) கூறிய விஷியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
  ========================================================
  எனக்கு ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சியானது சொல்லி மாளாது. மேற்கு நாடுகளில் அதிர்ச்சி அவ்வளவு சொல்லும்படியாக இருந்திருக்காது. புத்தகங்கள் வாயிலாகவும், சினிமா மூலமும் நாம் நிறைய அறிந்துவைக்க முடிந்திருந்தது. ஆனால் ஆப்பிரிக்கா அப்படியல்ல. நான் நேரில் பார்த்து அதிசயித்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். இது நடந்தது மேற்கு ஆப்பிரிக்காவில்.

  ஒரு கடையில் வேலைபார்த்த இந்தியர் இறந்துவிட்டார். இங்கு இறந்தவர்களை சில நாட்கள் வைத்துவிட்டு பிறகுதான் புதைப்பார்கள். இந்தியரின் பிணத்தை இறந்த அன்றே மயானத்தில் அவசர அவசரமாக விறகு வாங்கி அடுக்கி எரித்துவிட்டார்கள்.

  இதைப் பார்த்து ஆப்பிரிக்கர்கள் மிரண்டு போனார்கள். எட்டத்தில் நின்று பார்த்தார்கள். அவர்கள் கண்கள் குத்திக்கொண்டு நின்றன.ஒரு ஆப்பிரிக்கர் பிறகு என்னிடம் பேசினார். இந்த இந்தியர்கள் மிகவும் கொடுமைக்காரர்கள். ஈவு இரக்கம் இல்லாதவர்கள். விறகு கட்டை எரிப்பதுபோல எரித்து தள்ளிவிட்டார்கள். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான பழக்கம் என்று என்னிடம் சொன்னார்.

  இறந்தவர்களை எங்கள் கிராமத்தில் மூன்று, நாலு நாட்களாவது வைத்து மரியாதை செய்வோம். பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் இருதயத்தையோ, ஈரலையோ ஒரு சிறு பகுதி எடுத்து உட்கொள்வோம்.

  அப்போது அவர்கள் என்றென்றும் எங்களுடன் ஐக்கியமாகி விடுவார்கள் அல்லவா. இந்த சிறு மரியாதை கூடவா மரணித்தவருக்கு செய்ய முடியாதா என்றார்?
  =========================================
  கிரி, இந்த சம்பவத்தை பார்க்கும் போது இது சரியா? தவறா? என்று கூற தெரியவில்லை.. ஆனால் ஆப்ரிக்கர்களின் மனதளவில் குழந்தைகள் என்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது…

 • கிரி August 5, 2015, 6:15 AM

  யாசின் எப்போதுமே ஒரு வழக்கத்தை தொடர்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு அவர்கள் செய்வது சரியென்றும் மற்றவர்கள் செய்வது தவறு என்பது போலவும் தோன்றுவது இயல்பு.

  எனக்கு அவர்கள் நான்கு நாட்கள் வைத்து இருந்தது தவறாகத் தோன்றவில்லை ஆனால், அவர்கள் சாப்பிடுவது காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது.

  இவர்களுக்கோ நாம் (இந்துக்கள்) உடனே எரிப்பது காட்டுமிராண்டித்தனமாக தெரிகிறது.

  ஒவ்வொருவரும் அவரவர் நியாயம், கருத்து, எண்ணங்கள் வைத்து இருக்கிறார்கள். அவரவர்க்கு தான் செய்வது நியாயம் என்பது போல தோன்றுகிறது.

  ஒருத்தர் செய்வது மற்றவரை பாதிக்காதவரை, துன்புறுத்தாதவரை, கட்டாயப்படுத்ததாதவரை எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

  இதை இன்னொரு கலாச்சாரமாகத் தான் பார்க்கத் தோன்றுகிறது. இவர்கள் எப்படி இதை செய்கிறார்கள் என்று ஆச்சர்யமாகவும் இருக்கிறது. கால மாற்றத்தில் இவை இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

  இந்துக்களில் உடன்கட்டை ஏறுதல் இருந்தது தற்போது கால மாற்றத்தில் அப்பழக்கம் முற்றிலும் இல்லாமல் போனது போல.

Leave a Comment