பயணக் குறிப்புகள் [ஜூன் 2015]

ங்கள் இல்லத் திருமணத்திற்காக ஒரு வாரம் விடுமுறையில் சென்று இருந்தேன். அதனுடைய பயணக் குறிப்புகளே இவை.

Vinay Yuvan Giri

வினய் யுவன் கிரி

கடந்த முறையே இனி விழாக்களில் கலந்து கொள்ளும் போது வேட்டி அணிய வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். இந்த முறை அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி விட்டேன் 🙂 . வேட்டி அணிந்து இருப்பது நம் பண்பாட்டை வெளிப்படுத்தும்படி இருப்பது சிறப்பு.

ராம்ராஜ் நிறுவனம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வேட்டியை ரெடிமேட் முறையில் அறிமுகப்படுத்தி இருப்பதால், பலரும் தற்போது இதை விருப்பமாக உபயோகிக்கின்றனர் (பாக்கெட்டெல்லாம் இருக்கிறதாம்).

என்னுடைய பசங்க இருவருக்கும் என் அண்ணன் எடுத்துக்கொடுத்து இருந்தார்.

தமிழர்கள் பண்பாடு அழிந்து வரும் வேளையில் இது போல நவீன மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள்! என்று இதற்கும் யாராவது கிளம்பாமல் இருந்தால் சரி.

நான் சட்டை மட்டும் ராம்ராஜில் எடுத்து இருந்தேன். மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் என்று சிங்குச்சா வண்ணத்தில் இவனுகளும் நானும் இருந்தோம். மேலே இருக்கும் படத்தில் வினயை ஒரு இடத்தில் நிற்க வைத்து வேட்டியுடன் எடுக்க முடியவில்லை என்பதால் பாதி.

சிங்கப்பூர் என்ன சொல்லுது?

ஊருக்குச் சென்றால் இந்தக் கேள்விக்குப் பதில் கூறியே ஒரு வழி ஆகி விடுவேன் ஆனால், இந்த முறை எப்போ வந்தே! என்று கேட்டதோடு நிறுத்திக்கொண்டார்கள். அங்கே மழை பெய்யுதா!! என்ற வழக்கமான கேள்விகளும் குறைவு தான். பரவாயில்லை 🙂 .

உறவினர்கள் பலரை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. இது போன்ற சமயங்களே பலரை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பெரும்பாலானவர்கள் எப்போது நம்ம ஊருக்கே திரும்ப வரப்போகிறாய் என்று கேட்டார்கள்.

கோவை ஆறுவழிப் பாதை

கோவை ஆறுவழிப் பாதை கிட்டத்தட்ட 90% முடிந்து விட்டது. இன்னும் சுங்கச் சாவடியும் கொஞ்சம் கொசுறு வேலைகளும் மட்டுமே பாக்கி. வேகத்தடை அனைத்தையும் நீக்கி சிறப்பான சாலை அமைத்து இருக்கிறார்கள். பயணம் பட்டாசாக இருக்கிறது.

அவினாசி, கருமத்தம்பட்டி போன்ற அனைத்து இடங்களையும் புறவழிச்சாலை வழியாகக் கடப்பதால், எந்த இடத்திலும் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. எங்கள் ஊரிலிருந்து கோவைக்கு 1 மணி 45 நிமிடப் பயணத்தில் அரை மணி நேரப் பயணம் குறைந்து விட்டது.

அவினாசி போன்ற ஊர்களிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்து இருக்கும்.

இந்தத் திட்டம் வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது தொடங்கப்பட்ட “தங்க நாற்கரச் சாலை” திட்டத்தின் ஒரு பகுதியாகக் கூறினார்கள். வாஜ்பாய் ஆட்சியில் சிறப்பான திட்டமாக இது அமைந்து இன்னும் தொடர்வது மகிழ்ச்சி.

இங்கு மட்டுமல்ல பல இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைப் பயணம் குறித்துப் பலரும் புகழ்ந்து வருகிறார்கள் ஆனால், சுங்கச் சாவடியில் அடிக்கப்படும் கொள்ளை தான் கொடுமையாக இருக்கிறது.

வாகனம் வாங்கும் போதே இதற்கான கட்டணத்தை வசூலித்துச் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்துச் செய்யப்போவதாக மோடி அரசு கொஞ்ச மாதங்கள் முன்பு அறிவித்து இருந்தது. இது நடைமுறைக்கு வந்தால் சிறப்பான நடவடிக்கையாக இருக்கும்.

சுங்கச்சாவடி கட்டணம் பகல் கொள்ளை.

காக்கா முட்டையும் ரோமியோ ஜூலியட்டும்

நான் காக்கா முட்டை படத்திற்கு இவனுகளைக் கூட்டிக் கொண்டு செல்வதாகக் கூறி இருந்ததால், வினய் எப்போ போலாம் என்று கேட்டுக்கொண்டு இருந்தான்.

கோபியில் மொக்கை திரையரங்கில் வெளியிடப்பட்டு இருந்ததால் அங்கே சென்றால் ஒன்றுமே புரியாது என்று ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள “தேவி அபிராமி”க்குச் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

போன முறையே கோபியில் “ஆரம்பம்” படம் சென்று ஒன்றும் புரியாமல் கடுப்பாகி விட்டது என்று அனைவரும் இங்கே சென்றால் “காக்கா முட்டை” படத்தை எடுத்து விட்டு “இனிமே இப்படித்தான்” போட்டு விட்டார்கள். செம்ம கடுப்பாகி விட்டது.

இந்த எரிச்சலை விட இவனுக இரண்டு பேரும் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று ஏமாற்றமாகி விட்டது. நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் படத்தை ஏன் தூக்குகிறார்கள்? என்றே புரியவில்லை. விளம்பரத்தில் இன்னும் ஓடுவதாகக் காட்டுகிறது.

பின்னர் வேறு வழியில்லாமல் அருகே இருந்த “ராயல்” திரையரங்கில் “ரோமியோ ஜூலியட்” படம் பார்த்தோம்.

படத்தில் கதையெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை ஆனால், படம் வெற்றி. ஒரு வழியா ஜெயம் ரவிக்கு ஜெயம் கிடைத்து விட்டது.

TR பேசியதை நீக்கி விட்டதால் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. TR ரசிகராக ஜெயம் ரவியை வைத்து இன்னும் பல காட்சிகள் அமைத்து இருக்கலாம், நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள்.

100 கட்டணம் (பால்கனி 150) ஆனால், நாற்காலி சாய்வாக இருந்ததால் இடுப்பு கழண்டு விட்டது. பலகையின் மீது “லெதர் கவர்” போட்டு இருக்கிறார்கள். அபிராமி திரையரங்கும் இப்படித்தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.

அபிராமியில் “பாட்ஷா” (1995) மூன்று முறை பார்த்தது தான் கடைசி.

பயணம்

Sathy to Sirumugai road

கடந்த முறை சத்தியில் இருந்து பவானிசாகருக்கு காடு வழியாகச் சென்ற பயணம் சிறப்பாக இருந்தாலும் மாலை தாமதமாகி விட்டது அதனால் அடுத்த முறை நேரத்திலேயே செல்ல வேண்டும் என்று கூறி இருந்தேன்.

இந்த முறை நான், என்னுடைய அக்கா, இன்னொரு அக்கா பையன் மற்றும் வினய் நால்வரும் இரு வாகனத்தில் சென்றோம். அட்டகாசம்! அசத்தலான சாலை, காடு, குளிர்ச்சி, நெரிசல் இல்லை, புகையில்லை போன்ற காரணங்களால் சிறப்பான பயணமாக இருந்தது.

என்னுடைய அக்கா, இந்தக் குட்டிப் பயணம் மனதிற்குச் சந்தோசமாகவும் மன அழுத்தத்தைக் குறைத்ததாகவும் கூறினார்கள். வழியில் யானை வருகிறது என்று சிலர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அடுத்த முறை இதே சாலையில் இன்னும் நீண்ட தூரம் போகலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். போன முறை ஹெல்மெட் போடாமல் சென்று பூச்சிக் கடி வாங்கி அவதிப்பட்டதால், இந்த முறை எச்சரிக்கையாக ஹெல்மெட் அணிந்து சென்றேன்.

வினய் தூங்கிடுவானோ என்று நினைத்தேன் ஆனால், மாறாக ரொம்ப மகிழ்ச்சியாக அனுபவித்தான். இடையே நிறுத்தி நிழற் படங்களும் எடுத்தோம். என்னுடைய நண்பன் விவசாயத் துறையில் அதிகாரியாக இருப்பதால், அவன் அலுவலகம் சென்று பார்த்து வந்தோம்.

நண்பர்கள்

பள்ளி நண்பர்கள் பலரை தொடர்பு கொள்ள முடிந்தது, இருவரை சந்திக்க முடிந்தது. WhatsApp ல் இணையக் கூறி இருக்கிறேன். நான் பள்ளி முடித்த போது மொபைல், இணையம் போன்றவை பிரபலம் இல்லையென்பதால் பலரின் தொடர்பு போனது வருத்தமளிக்கிறது.

ஊருக்கு வந்த பிறகு மீண்டும் நண்பர்களைத் தேடிப் பயணம் துவங்க வேண்டும்.

எங்கள் கிராம வீட்டில் எனக்கு வந்த பழைய கடிதங்களை படித்தேன். சிரித்தே ஒரு வழியாகிட்டேன். என்னுடைய அக்கா மற்றும் நண்பர்கள் எழுதியதை அவர்களிடம் காட்டி செம்ம ஓட்டு ஓட்டி விட்டேன்.

ஒருத்தன் “Kill me or kiss me but dont forget me” என்று எழுதி இருக்கிறான் 🙂 🙂 (இந்த வசனம் விடுதி மாணவர்களிடையே அப்போது பிரபலம்). இதை விட ஏகப்பட்ட பாசமழை வசனங்கள்.

என்னுடைய அக்கா எழுத்துப் பிழையுடன் எழுதியதாக நான் கூறியதற்கு அவர் “அறிவு கெட்டவனே! ஒழுங்கா படி..நான் சரியா தான் எழுதி இருக்கிறேன். உன்னை கண் டாக்டரிடம் கூட்டிப் போகணும்” என்று எழுதி இருக்கிறார் 😀 .

ஒருத்தன் “டேய்! இதை யாரிடமும் காட்டி விடாதே!” என்று அழுது கொண்டு இருக்கிறான் ஹா ஹா ஹா. இவன் மனைவியிடமும் மற்ற நண்பர்களிடமும் இதை அடுத்த முறை வரும் போது காட்ட வேண்டும். செம்ம ரகளையாக இருக்கிறது.

தோட்டம்

Kugalur

எங்கள் தோட்டத்திற்குச் சென்று இருந்தேன். கன்று, எருது, தொட்டியில் மீன் என்று கலக்கலாகவே இருந்தது. இவனுக இரண்டு பேருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. இன்னும் கொஞ்ச நேரம் இருக்க நினைத்தேன் ஆனால், நேரமில்லை.

வழக்கம் போல இந்த முறையும் தலைவர் முருகனை என் விருப்பக் கோவில் “கருங்கரடு” குன்றில் சந்தித்து வந்தாகி விட்டது.

பூச்சி மருந்து கோக் பெப்சி

பல தளங்களில் பெப்சி கோக் அடித்தால் செடியில் உள்ள பூச்சி புழுக்கள் அழிந்து செடி நன்றாக வளருவதாகக் கூறியதால் இந்த முறை முயற்சிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். நான் பெப்சி கோக் க்கு கடும் எதிர்ப்பாளன்.

குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவர்கள் இருவருக்கும் கொடுக்க மாட்டேன் அதோடு இது பற்றி அவர்களுக்குப் புரியும்படி விளக்கியும் வருகிறேன்.

ரொம்பக் கட்டுப்பாடு விதித்தால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் எப்பவாவது இதைக் குடிக்க அனுமதிப்பேன்.

இந்த முறை வினயை அழைத்துச் சென்று அவனையே பெப்சி வாங்க வைத்து (கோக் எங்கள் பகுதியில் இல்லை) பாட்டிலில் ஊற்றி செடிக்கு அடிக்கக் கூறினேன். அதில் இருந்த கொஞ்சத்தைக் குடித்து விட்டு நன்றாக இருக்கிறது என்கிறான் !!

மதியம் இதைச் செடிக்கு அடித்தோம் ஆனால், கொஞ்ச நேரத்தில் மழை வந்து விட்டதால் அனைத்தும் கழுவிச் சென்று விட்டது. 400 ml பாட்டில் 25₹ !!! ஏம்பா! இவ்வளோ கொடுத்தா இந்தப் பூச்சி மருந்தைக் குடித்து உடலை கெடுத்துக்குறீங்க. சொந்த செலவில் சூனியம்.

பத்தாவது ஆண்டு

தளத்தைப் படிக்கும் நண்பர்கள் பலரும் “கிரி! நாம் பணம் வசூல் செய்து யாருக்காவது உதவலாம்” என்று கேட்டு வருகிறார்கள். எனக்குப் பணம் விசயம் என்றாலே பயம் அதோடு பல நடைமுறை சிக்கல்கள் வேறு உள்ளது.

எனவே, இதுவரை என் அலுவலக மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே வசூலித்துச் சமீப நேபாள் நிவாரண நிதி உட்படச் சிலவற்றுக்கு உதவி இருக்கிறேன்.

வரும் ஆகஸ்டில் நமது தளம் 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

எனவே, அனைவரின் பங்காகவும் இருக்கட்டும் என்று இந்த முறை தளத்தின் மூலமாகவும் வசூல் செய்து எங்கள் கிராமம் அருகே உள்ள ஆண்டிபாளையம் கிராமக் குழந்தைகளின் கல்விக்கு 10 வது ஆண்டை முன்னிட்டுக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

தொடர்ந்து பல வருடங்களாகப் படிப்பவர்கள் தளத்தோடு இணைய / பங்கெடுக்க என்னால் கொடுக்க முடிந்த வாய்ப்பு.

பின்வரும் கணக்குக்குப் (Account info removed) பணத்தை அனுப்பி எவ்வளவு தொகை என்பதை மின்னஞ்சல் (contact@giriblog.com) செய்யவும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொடுக்கப்போகிறேன்.

எனவே, விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 2015 இறுதிக்குள் அனுப்பி விடுங்கள்.

{ 8 comments… add one }
 • விஜய் June 25, 2015, 8:55 AM

  10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கிரி ப்ளாக்-க்கு வாழ்த்துக்கள் கில்லாடி..

  பயண குறிப்புகள் அருமை.

  முதல் பங்களிப்பு என்னுடையது என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

  உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

 • rajesh v June 25, 2015, 4:20 PM

  பசங்க நல்லா வளர்ந்துட்டாங்க 🙂

 • rajesh v June 25, 2015, 5:20 PM

  hi giri,
  i have sent a message to your fb inbox regarding contribution to the school

 • கரிகாலன் June 26, 2015, 3:27 AM

  பத்தாவது ஆண்டில் அடியெடுக்கும் உங்கள் தளத்துக்கு வாழ்த்துக்கள்.

  தளவடிவமைப்பு, பந்தி பிரிப்பு, எழுத்துரு மிகவும் அருமை. நான் உங்களை தொடர்ந்தாலும் கருத்து இடுவது இன்று தான் முதல்முறை.

  உங்கள் மற்றும் பிள்ளைகளின் வேட்டி சட்டை படங்கள் அருமை .வேட்டி அணிந்து நீண்டநாட்கள் ஆகினாலும் வேட்டி கட்ட ஆசை, வேட்டி கட்டியவர்களை பார்க்க ஆசை.

  பயணம் மிகவும் அருமை. உங்கள் தோட்ட படங்களும் அருமை. வேறு தமிழக படங்கள் இருந்தால் பதிவிடவும். படங்கள் மட்டும் அல்ல பதிவுகளும்.

  .நன்றி
  கரிகாலன்

 • Arun Govindan June 26, 2015, 11:08 PM

  தல
  பயண குறிப்பு நல்லா வந்து இருக்கு.. முதல் ல போட்டோ சூப்பர் அது என்ன நீங்க உக்காந்து இருக்குற chair கு matching கா சட்டை கலர்:).. பசங்க நல்லா வளந்துட்டாங்க சூப்பரா இருக்காங்க..

  சிங்கப்பூர் என்ன சொல்லுது? – 🙂

  கோவை ஆறுவழிப் பாதை – இது காங்கிரஸ் மன்மோகன் சிங்க் வந்து start பண்ணாத நினச்சுட்டு இருந்தேன்..

  காக்கா முட்டையும் ரோமியோ ஜூலியட்டும் – காக்க முட்டை சூப்பர்..ரோமியோ ஜூலியட் பாக்கல இன்னும்…

  பயணம் – பயண பிரியரே சூப்பர்

  நண்பர்கள் – 🙂 உங்க கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் நண்பர்கள் பேர்ல நீங்க வெச்சு இருக்குற மரியாதை

  தோட்டம் – செமையா இருக்கு

  பூச்சி மருந்து கோக் பெப்சி – “மதியம் இதைச் செடிக்கு அடித்தோம்” – மறுபடியும் அடிச்சு இருக்கலாமே??

  பத்தாவது ஆண்டு – வாழ்த்துக்கள் தல

  – அருண் கோவிந்தன்

 • Siva June 27, 2015, 7:59 AM

  Dear Giri, Congrats for the successful journey for the last 10 years. Wishing the same to continue for many more decades.

  Happy to hear that you have met my parents in the same wedding function and they are happy to know about you as well.

  Let’s catch up when you are free. (HP#97429790).

  Keep rocking. Continue your good work.

  Regards
  K Siva

 • Mohamed Yasin June 27, 2015, 9:47 AM

  சிறிது நாட்களுக்கு பின் கிரியை குழந்தைகளுடன் புகைப்படத்தில் காண்பது மகிழ்வாக இருக்கிறது.. பயணம் புகைப்படம், என்னுடைய கடந்த காலம் மற்றும் நீண்ட எதிர்கால பயண திட்டத்தை கண்ணுக்குள் காட்டி செல்கிறது.. சத்தி மற்றும் பவானியில் சுற்றி திரிந்த நாட்கள் மிக அழகானவை..

  கல்லூரி நண்பர்களை காண்பதை விட பள்ளி நண்பர்களை காண்பதில் எனக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகமே!!! சென்ற மாதம் விடுமுறையில் சில கல்லூரி நண்பர்களை 8 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தது மன நிறைவாக இருந்தது..

  குழந்தைகளின் கல்வி உதவிக்கான உங்கள் முயற்சி கண்டிப்பாக வரவேற்கதக்க ஓன்று.. இது சிறப்பாக வெற்றியடைய இறைவன் உங்களுக்கு அருள்புரிவனாக!!! உங்கள் பத்து ஆண்டு பயணத்தில், நானும் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இருப்பதை எண்ணும் போது சந்தோசமாக உள்ளது… பகிர்வுக்கு நன்றி கிரி…

 • கிரி July 3, 2015, 3:11 AM

  @விஜய் & ராஜேஷ் நன்றி 🙂

  @கரிகாலன் வாய்ப்புக் கிடைக்கும் போது எழுதுகிறேன்

  @அருண் 🙂 நன்றி 7 வருடங்களாகத் தொடர்வதற்கு

  @Siva விரைவில் அழைக்கிறேன் 🙂 உங்க அப்பா ரொம்ப நன்றாக பழகினார்கள்.

  @யாசின் நன்றி 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz