பொன்னியின் செல்வன்

Ponniyin selvan

ல வருடங்கள் முன்பே எண்ணற்றவர்கள் படித்து இருக்கும் அற்புத நாவலான “பொன்னியின் செல்வனை” தற்போது படிக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் கூறினேன். “என்னது இப்பத்தான் படிக்கறியா?! நிஜமாவா?!” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இது போல ஒரு நாவலை இவ்வளவு தாமதமாகப் படித்ததற்குக் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது.

அதனால் என்ன?! எப்போது படித்தாலும் அதன் சிறப்புக் குறைந்து விடப்போகிறதா என்ன! புத்தகம் எடுத்தால் வைக்கவே முடியாது என்று நண்பர்கள் கூறிய போது நம்பச் சிரமமாக இருந்தது, மிகைப்படுத்திப் பேசுகிறார்களோ! என்று நினைத்தேன்.

ஆனால், அது 100% உண்மை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. Image Credit– ponniyin-selvan-translation.blogspot.com

படிக்கத் தோன்றவில்லை

தம்பி ராஜ்குமார் சிங்கப்பூர் வந்த போது அண்ணே! உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது “பொன்னியின் செல்வன்” புத்தகம் வாங்கி வரும் படி கூறினேன். சரி என்று அவரும் வாங்கி வந்து விட்டார். அவர் கொண்டு வந்த பையில் ஐந்து புத்தகங்கள் இருந்தன.

உங்க கிட்ட ஒரு புத்தகம் தானே வாங்கி வரக் கூறினேன் எதற்கு இத்தனை வாங்கி வந்து இருக்கிறீர்கள். இவ்வளவை நான் என்ன செய்வது என்று கேட்டேன்.

அண்ணே! இது ஐந்து பாகங்கள் என்று கூறிய போது எனக்குத் தலை சுற்றி விட்டது. இவ்வளவை நான் எப்போது படித்து முடிப்பது என்று மலைப்பாகி விட்டது. இதன் பிறகு அப்படியே ஐந்து மாதமாக வைத்து விட்டேன்.

அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் இவ்வளவு தடி தடியா இருக்கே! அதுவும் ஐந்தாவது பாகம் தலையணை போல இருக்கிறதே என்று பயந்து பிரிக்கக் கூட இல்லை.

நண்பர்களின் ஊக்கம் 

ஐந்து மாதமாக அப்படியே இருந்தது. சமீபத்தில் திரும்ப நண்பர்கள் கிரி! நீங்க புத்தகம் படிங்க என்று கூறியதால், சரி! ஏற்கனவே வாங்கி வைத்த இதையே புரட்டுவோம் என்று ஆரம்பித்தேன். நான் கூறினால் நீங்க நம்புவதற்குச் சிரமமாக இருக்கும்.

ஒரு வாரத்தில் ஐந்து பாகங்களையும் படித்து முடித்தேன். சனி ஆரம்பித்துக் கடந்த சனிக் கிழமை முடித்தேன்.

சிறு வயதில் காமிக்ஸ் நிறையப் படிப்பேன். பின்னர், ஹாஸ்டலில் சேர்ந்த பிறகு படிப்பது குறைந்து விட்டது ஆனால், படிக்கும் வேகம் அப்படியே தான் இருந்தது. பொன்னியின் செல்வனில் வரும் சூறாவளி போலப் படித்து முடித்து விட்டேன்.

இதில் வழக்கத்திற்கு மாறாக நடந்த சில சம்பவங்கள். நான் சிங்கப்பூர் வந்த எட்டு வருடத்தில் இந்த ஒரு வாரம் தொலைக்காட்சி பார்க்கவில்லை.

ரயில், பேருந்து, இவற்றுக்குக் காத்திருக்கும் நேரம், ஹோட்டல் சென்றால் காத்திருக்கும் நேரம், வீடு வந்த பிறகு இரவு 12 மணி வரை படிப்பு என்று கிடைக்கும் நேரத்தில் எல்லாம் படித்துக் கொண்டே இருந்தேன்.

இணையம் அதிகம் போகவில்லை. இவையல்லாமல் யாருடன் பேசினாலும் இந்தப் புத்தகம் பற்றிய பேச்சாகவே இருந்தது 🙂 .

விசாரிப்பும் பெருமையும்

ஹோட்டல்களில், சலூன் கடையில், மற்ற கடைகளில் என்று பார்க்கிறவர்கள் எல்லோரும் இந்தப் புத்தகத்தை விசாரித்தது ரொம்பச் சந்தோசமாக இருந்தது.

ஆஹா! இது இவ்வளவு பேரை கவர்ந்து இருக்கிறதே! இவ்வளவு பேர் படித்து இருக்கிறார்களே!! என்று இதன் மீதான மதிப்பை நினைத்து சந்தோசமாகவும் இதைக் கையில் வைத்து இருக்கும் போது பெருமையாகவும் இருந்தது.

நான் ஃபேஸ்புக்கில் பொன்னியின் செல்வன் படிப்பதாகக் கூறியதும் நண்பர்கள் பலரும் எனக்கு உற்சாகம் கொடுத்தார்கள். பல புதிய தகவல்களை அறியக் கொடுத்தார்கள். பொன்னியின் செல்வன் தொடர்பான காணொளி, குறிப்புகள் என்று திணற அடித்து விட்டார்கள்.

இவ்வளவு பேர் புத்தகங்கள் மீது, பொன்னியின் செல்வன் புத்தகம் மீது ஆர்வமாக இருக்கிறார்களே! என்று ஆச்சர்யமாக இருந்தது.

எப்போதோ படித்து முடித்தவர்கள் பலர் 

பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே படித்து இருந்தார்கள். பலர் மூன்று முறை கூடப் படித்தவர்கள் இருந்தார்கள். என்னுடைய அக்காவிடம் பேசும் போது கூறினேன், அவர் “நான் படித்துப் பல வருசம் ஆகி விட்டது” என்றார்.

இன்னொரு அக்கா “நான் பத்தாவது படிக்கும் போதே படித்து விட்டேன்” என்றார். நான் ஒருவன் தான் பாக்கி என்பது போலத்தான் இருந்தது.

எதற்கு இவ்வ்வ்ளோ பெரிய முன்னுரை!

கிரி! புத்தகத்தைப் பற்றிக் கூறாமல் உங்க புராணத்தைக் கூறிட்டு இருக்கீங்களே! என்று கடுப்பாவது புரிகிறது 🙂 . உண்மையில் இதை எதற்குக் கூறினேன் என்றால், என்னைப் போலப் படிக்காமல் இருப்பவர்கள், இதன் அருமை உணராதவர்கள் ஏராளம் இருப்பார்கள்.

அவர்களுக்கு வெறும் புத்தக விமர்சனமாக எழுதினால், அப்படியா! என்று படித்து முடித்த பிறகு மறந்து விடுவார்கள்.

ஆனால், படிக்காதவர்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியாதவர்களுக்கு ஓரளவாவது நாவலின் சுவாரசியத்தை உணர வைக்கவேண்டும் என்ற ஆசையில் கூறியதே மேற்கூறியது.

எனவே மன்னித்தருள்க.

பொன்னியின் செல்வன் நாவலைப் போல இந்த இடுகையும் நீளமானது. முடிந்தவரை சலிப்பாக்காமல் எழுத முயற்சிக்கிறேன். கடந்த பத்து வருடத்தில் நான் எழுதிய மிகப்பெரிய கட்டுரையும் இது தான்.

பொன்னியின் செல்வன் புத்தக விமர்சனம் என்றால் என்னுடைய விமர்சனமும்  நினைவிற்கு வரணும் என்ற ஆசையும் உண்டு 🙂 . எனவே, உங்களுக்கு நேரம் இருக்கும் போது பொறுமையாகப் படியுங்கள்.

இனி பொன்னியின் செல்வன்

Ponniyin selvan

கல்கி வார இதழ்

பொன்னியின் செல்வன் கல்கி வார இதழில் 1950 – 1955 ஆண்டு வரை தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இதன் வெளியான ஆண்டும் அதனுடைய இன்றைய மதிப்பையும் உணர்ந்தால் இது எவ்வளவு சிறப்பான புத்தகம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். Image Credit – www.moviecrow.com

கிட்டத்தட்ட 60 [*2015] வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம் தற்போது படிக்கும் போதும் நம்மை மிரள வைக்கிறது என்றால், கல்கி அவர்களின் எழுத்துத் திறமையை என்னவென்று கூறுவது?

அப்போது இந்தப் புத்தகத்திற்கு அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருப்பார்களாம். இதன் பிறகும் தொடராக வந்த போதும் பெரும் வரவேற்பு இருந்தததாகவும் புத்தகம் வந்தவுடன் குடும்பத்தில் யார் முதலில் படிப்பது என்று பெரிய அடிதடியே நடந்ததாகவும் கேள்விப்பட்டேன்.

நிச்சயம் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

மணியன் ஓவியங்கள்

மணியன் அவர்கள் ஓவியங்கள் சிறப்பாக இருந்ததாகவும் அதைச் சேகரித்துப் புத்தகமாகச் செய்து வைத்து இருந்ததாகவும் காலப்போக்கில் அது எங்கோ தொலைந்து விட்டது என்றும் என்னுடைய அம்மா வருத்தப்பட்டுக் கூறினார்கள்.

நிஜமும் புனைவும்

இந்த நாவல் நிஜமும் புனைவும் கலந்து எழுதப்பட்டது ஆனால், புனைவைவிட உண்மை சம்பவங்கள் அதிகம் உள்ளது. இதைப் படித்த பிறகு நம்முடைய தமிழகத்தின் மீது நமக்கு மிகுந்த பற்று வரும்.

இதுவரை இது குறித்த ஆர்வம் இல்லாதவர்களுக்கு இதைப் படித்த பிறகு வரலாற்றின் மீது, அவர்கள் வாழ்ந்த இடங்களின் மீது, அவர்களின் திறமைகள் மீது நமக்கு அளவுகடந்த மதிப்பு வரும்.

சோழப் பேரரசு

கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. மிகக் குறைவான (ஒரு வருடத்திற்கும் குறைவான) நாட்களில் நடந்த சம்பவங்களே இவ்வளவு பெரிய புத்தகம் என்பதை நம்பச் சிரமமாக இருக்கிறது.

சிறிய காலத்தையே இவ்வளவு சுவாரசியமாக எழுதி இருக்கிறாரே! பல காலங்களை உள்ளடக்கி இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருந்தால், நமக்குப் பொக்கிஷம் போல அல்லவா இருந்து இருக்கும். இந்தப் புத்தகமே நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்.

ஒரு புத்தகம் எழுதினால் துவக்கத்தில் தட்டுத்தடுமாறி ஆரம்பித்துப் பின் சுதாரித்துப் பின் சீராகச் செல்வதாகத் தான் புத்தகங்கள் இருக்கும்.

ஆனால், பொன்னியின் செல்வன் ஆரம்பத்தில் இருந்து 95% சதவீதம் வரை பட்டையைக் கிளப்பிக்கொண்டு இந்த நாவலில் வரும் குதிரை போலப் பறக்கிறது.

மீதி ஐந்து சதவீதம் பற்றிப் பின்னர் கூறுகிறேன்.

ஐந்து பாகங்கள்

ஆரம்பத்தில் இருந்து ஐந்து பாகங்கள் எந்தத் தடையும் சோர்வும் சலிப்பும் இல்லாமல் பறக்கிறது என்றால் இதை எழுதி இருப்பவர் எவ்வளவு அசாத்திய திறமையானவராக இருக்க வேண்டும்!! உண்மையாகவே இவரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

இந்நாவல் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாகச் சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300 க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

கதையின் துவக்கத்தில் கதாநாயகன் வந்தியத்தேவனில் ஆரம்பித்து இறுதியில் வந்தியத்தேவனில் முடிகிறது.

இந்தப் புத்தகத்தை நாம் படிக்கும் போது நாம் சோழ நாட்டில் இருப்பது போல உணர்வோம் என்று கூறினால் நிச்சயம் அது மிகைப்படுத்தும் வார்த்தையல்ல.

கால இயந்திரம்

நண்பர் அருணாச்சலம் கூறியது போல இதைப் படித்தால் நாம் கால இயந்திரத்தில் சென்று சோழ நாட்டில் இருப்பது போலவே இருக்கும். கல்கி அவர்கள் இடங்களை வர்ணிக்கும் போது நான் சோழ நாட்டிலேயே பயணப்பட்டுக்கொண்டு இருந்தேன்.

இது போன்ற அனுபவத்தைத் திரையில் பார்த்தால் தான் உணர முடியும் என்று எவரும் கூறினால், அவர்களை மூடர்கள் என்று தான் கூற வேண்டும்.

எத்தனை கோடி செலவு செய்து இதைத் திரைப்படமாக எடுத்தாலும், படிப்பதில் கிடைக்கும் ஒரு அற்புத உணர்வு நமக்குக் கிடைக்காது என்பது நிச்சயம்.

இதைத் திரைப்படமாக எடுக்க ஒரு முறை இயக்குநர் மணிரத்னம் முயற்சித்ததாகப் படித்தேன். தயவு கூர்ந்து இதைத் திரைப்படமாக எடுத்து இந்த நாவலை அசிங்கப்படுத்தி விடாதீர்கள். என்னால் கற்பனையில் கூட அதை ஜீரணிக்க முடியவில்லை. இது யாராலுமே சாத்தியமில்லாத செயல்.

வர்ணனை

ஒரு காட்சியில் வந்தியத்தேவன் கப்பலில் இருக்கும் போது சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழையினால் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதையும் அப்போது வரும் இடி மின்னல்களையும் கல்கி வர்ணிக்கும் போது நாம் அந்த சூறாவளியில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பது போல இருக்கும்.

எழுத்தின் மூலம் இது போன்ற ஒரு அனுபவத்தைக் கொண்டு வந்த இவரின் திறமையை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது.

வந்தியத்தேவன்

கதாநாயகன் வந்தியத்தேவன் நாவல் முழுக்கத் தன்னுடைய துடுக்குத்தனம், நகைச்சுவை, வார்த்தை ஜாலம், வீரம், காதல், குறும்பு, சுறுசுறுப்பு, ஆர்வம், கோபம், நேர்மை, பொய், உண்மை என்று நம்மைக் கவர்ந்து இருப்பார்.

இந்த நாவலைப் படித்தவர்கள் இந்தக் கதாப்பாத்திரத்தை ரசிக்காமல் இருக்கவே முடியாது.

இளைய ராணியாக வரும் நந்தினியிடமும் சக்ரவர்த்தியின் மகளான குந்தவையிடமும் இவர் பேசுவதைப் படிக்கும் போது அவ்வளவு அற்புதமான உரையாடலாக இருக்கும். கல்கியின் வார்த்தை விளையாட்டுகளை நினைத்து பிரம்மிப்பாக இருக்கும்.

கல்கியின் திறமை

கல்கி அவர்கள் முதலாவது பாகத்தில் ஒரு அத்தியாத்தில் கூறிய சிறு சம்பவத்தை நான்காவது பாகத்தில் ஒரு அத்தியாத்தில் தொடர்பு படுத்துவார் ஆனால், நம்மால் அதை எளிதாக இணைத்துப் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு ஆச்சர்யமான விசயம் தானே!

இந்தச் சிறு விசயம் கூட நம் நினைவை விட்டு அகன்று விடாமல் நம்மை நினைவில் வைத்துக் கொள்ளும்படி அவர் எழுதியிருப்பதை எப்படிப் பாராட்டுவது!!

முன் யோசனை 

அதை விட இவ்வளவு தடி தடியான புத்தகம் எழுதும் போது முதல் பாகத்தில் எழுதியதை மூன்றாம் பாகத்திலோ நான்காம் பாகத்திலோ கொண்டு வந்து இணைக்க வேண்டும் என்றால் எவ்வளவு பரந்து விரிந்த அறிவு வேண்டும்! எத்தனை முன் யோசனை இருந்தால் இதைச் செய்ய முடியும்!!

இந்த நாவலை எப்படித் திட்டமிட்டு எழுதி இருப்பார் என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. ஏனென்றால் முன்னரே ஐந்து பாகங்கள் என்று திட்டமிட்டு விட்டாரா அல்லது போகப் போக நீண்டதா! என்று அறிய விருப்பம்.

இதில் உள்ள கதாப்பாத்திரங்கள் திட்டமிடலும், அவர்களை இணைப்பதையும், ஒரு அத்தியாத்தை பாதியில் விட்டு மீண்டும் அதைச் சரியாக இன்னொரு அத்தியாத்தில் இணைக்கும் போது இவர் தெய்வம் தான் என்று தோன்றுகிறது.

நான் சொல்வது புரிகிறதா?!! ஒரு புத்தகம் என்றால் எளிதாகச் செய்து விடலாம். இது முதன் முதலில் கல்கி இதழில் தொடராக வெளி வந்தது.

எனவே, முன்னரே எழுதி இருந்தாலாவது முடிக்கும் தருவாயில் சில மாற்றங்களைச் செய்து புத்தகமாக வெளியிட முடியும் ஆனால், இது கல்கியில் தொடராக வந்ததால், அப்படியெல்லாம் செய்ய முடியாது.

எனவே, மிக மிகத் திறமையாக யோசித்துப் பின்வரும் சம்பவங்கள் குறித்துப் புரிதல் ஆராய்ச்சி இல்லாமல் இதை எழுதி இருக்கவே முடியாது.

உண்மையில் இதையெல்லாம் யோசித்தால் தலை கிறுகிறுக்கிறது. இவர் எப்படி இதை எழுதினார் என்று என்னால் கற்பனை கூடப் பண்ண முடியவில்லை!

இணைப்பு

ஐந்தாவது பாகத்தில் வரும் ஒரு விசயத்திற்கு இணைப்பு முதல் பாகத்தில் இருக்கும் என்றால் அதைக் கொண்டு செல்ல எவ்வளவு ஒரு திறமை வேண்டும்!!

இதை நினைத்து நினைத்துப் பரவசமாக இருந்தது. எப்படி இது போல எழுதினார்.. இவர் மனுசன் தானா! என்று பிரம்மிக்கும்படி இருந்தது.

இதை விட நாம் நினைக்கும் கேள்விகளுக்கு எல்லாம் அதே நேரத்தில் பதில் வரும் என்பது, இவை அனைத்தையும் விட ஆச்சர்யம். கல்கி ஒரு பகுதியை விளக்கும் போது ஒரு அத்தியாயத்தில் அப்படிக் கூறினாரே! என்று யோசிப்போம், பார்த்தால்.. சிறிது நேரத்திலேயே அதற்கான விடை இருக்கும்.

உடல் வலிமை Vs எழுத்து வலிமை 

அருள்மொழி வர்மன் ஆதித்த கரிகாலன் போன்றோர் வீரத்தில் சிறந்தவர்கள் என்றால் கல்கி எழுத்து என்ற திறமையில் அவர்களுக்கு நிரகரானவர் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

இதை முதன் முதலில் தொடராக ஐந்து வருடங்கள் எழுதி இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு வாழ்க்கையில் சந்தோசமான / துக்கமான சம்பவங்கள் நடந்து இருக்கலாம் ஆனால், எந்த வித்யாசத்தையும் நாவலில் உணர முடியாது.

உதாரணத்திற்கு, ஏதாவது பிரச்சனை காரணமாக எனக்கு மனது சரியில்லை என்றால் என்னால் எழுத முடியாது. அப்படி எழுதினால் சரியாக வராது. எனவே, நான் எழுதவே மாட்டேன்.

கல்கியோ எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் சீராகக் கதாப்பாத்திரங்களின் இயல்பு மாறாமல் தொடர்ச்சியாக எழுதி இருக்கிறார் என்றால் அவரின் திறமையோடு அவருக்கு உற்சாகமும் ஆதரவும் அளித்த அவரைச் சார்ந்தவர்களையும் பாராட்ட வேண்டும்.

குந்தவை & நந்தினி

குந்தவை நந்தினி அழகை வர்ணிக்கும் போது ஆஹா! இப்படியும் பெண்கள் அழகாக இருப்பார்களா! நாம் இவர்களைப் பார்க்க வேண்டுமே என்று நினைக்கும் அளவிற்கு அற்புதமாக வர்ணிக்கிறார்.

பெண்கள் இதைப் படித்தால் நிச்சயம் பொறாமை எட்டிப் பார்க்கும் அளவிற்கு வர்ணனைகளில் அசத்தி இருக்கிறார் 🙂 . அதில் பின்வரும் வர்ணனையைப் படியுங்கள். நான் கூறுவதன் அர்த்தம் புரியும்.

சோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டோடியது. நந்தினி பொன் வர்ண மேனியாள்; குந்தவை செந்தாமரை நிரத்தினள்.

நந்தினியின் பொன்முகம் பூரணச் சந்திரனைப் போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வட்டமாயிருந்தது.

நந்தினியின் செவ்வரியோடிய கருநீல வர்ணக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன. குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப் போலக் காதளவு நீண்டு பொலிந்தன.

நந்தினியின் மூக்குத் தட்டையாக வழுவழு தந்தத்தினால் செய்தது போலத் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப் போல் இருந்தது.

நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது.

நந்தினி தன் கூந்தலை கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப் போல அமைந்து இருந்தது.

பெண்கள் எவ்வளவு உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு இருந்தாலும் அழகு என்ற ஒரு இடத்தில் வேறாக மாறி விடுகிறார்கள். இருவரும் அழகிகள் எனும் போது அவர்களிடையே ஏற்படும் போட்டி பொறாமைகள் ரொம்ப அழகாகக் காட்டப்பட்டு இருக்கும்.

இதில் நந்தினியோ குந்தவையோ அழகில்லாமல் சுமாரான அழகுடையவர்களாக இருந்து இருந்தால் இவ்வளவு சண்டைகளும் போட்டிகளும் இருந்து இருக்காது என்பது திண்ணம்.

குந்தவை நல்லவராக இருந்தாலும் நந்தினியின் அழகு மீதான பொறாமை நன்கு தெரியும், அதே நந்தினிக்கும். அதிலும் வந்தியத்தேவன் இவர்கள் இருவரிடையே பேசுவதும் சமாளிப்பதும் அற்புதமான உரையாடல், பேச்சுத் திறமை. நான் ரொம்ப ரசித்துப் படித்தேன்.

ஒரு ஆணாக இருந்து பெண்களின் மனங்களை வெளிப்படுத்துவது போல எழுதி கல்கி நம்மை வரிக்குவரி ரசிக்க வைத்து இருப்பார்.

அருள்மொழிவர்மன் தன்னுடைய சகோதரி குந்தவை பிராட்டியார் மீது அளவுகடந்த அன்பு வைத்து இருப்பார். பெற்றோரை விடத் தனது சகோதரியின் மீது அதிக அன்பு வைத்து இருப்பார். குந்தவை சொல்வதே அவருக்கு வேத வாக்காக இருக்கும்.

எனக்கு அக்காக்கள் இருப்பதால், என்னால் எளிதாக இதை என்னோடு தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. அக்கா தம்பியின் அன்பு பாசம் இவற்றை என்னால் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

சைவம் & வைணவம்

அந்தக் காலத்தில் சைவம் வைணவ பக்தர்கள் இந்தக்கால “ரஜினி கமல் அஜித் விஜய்” ரசிகர்கள் போலச் சண்டைப் போட்டுக்கொண்டு இருந்து இருக்கிறார்கள் 🙂 .

நான் இதுவரை சைவம் வைணவம் பற்றி அதிகம் படித்தது இல்லை அதாவது இவர்கள் இருவரும் இப்படி அடித்துக் கொள்வார்கள் என்று அறிந்து இருக்கவில்லை.

இதில் இவர்கள் இருதரப்பு சண்டைகளை கல்கி அழகாக வர்ணித்து இருக்கிறார். சுவாரசியம் என்றால் அப்படி ஒரு சுவாரசியம். இதை விட ஒரு சண்டையை ரசிக்கும் படி எழுத முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் நேரம் சண்டை போட மாட்டார்களா! என்று நினைக்க வைக்கிறது.

சைவம் வைணவத்தைச் சார்ந்தவர்கள் சந்தித்தாலே அங்கே சண்டை தான். உடனே வாக்குவாதம், போட்டி, சொற்போர் துவங்கி விடும். செம ரகளையாக இருக்கிறது. யார் பெரியவன் என்ற விவாதம் துவங்கி விடும்.

எனக்குப் படிக்கப் படிக்க இதையெல்லாம் காண நாம் இல்லையே என்ற வருத்தமே மேலிட்டது என்றால், இது பொய் என்று நீங்கள் கருதக் கூடாது.

இதில் சொற்போரில் தோற்றவர் பந்தயம் கட்டியதை கொடுத்தாக வேண்டும். இது போலச் சொற்போரில் பங்கு பெறுபவர்கள் பேசுவதைக் கேட்டால், இவர்கள் எல்லாம் வழக்காடும் வேலைக்குச் செல்லலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

எப்படிப் பந்து போட்டாலும் அடிக்கிறார்கள். எப்படித் தடுத்தாலும் கோல் போடுகிறார்கள் 🙂 .

இந்தப் பெருமை அனைத்தும் கல்கியையே சார்கிறது.

இவரின் எழுத்திலேயே நாம் இவற்றை நாம் ரசிக்க முடிந்தது. கல்கிக்கு சைவம் வைணவம் பற்றி புரிதல் இருப்பதாலே இந்த விவாதக் காட்சியை கொண்டு வர முடிகிறது. ஏனென்றால் இரு தரப்பிலும் தங்கள் தரப்பு வாதங்களை அடுக்குவார்கள்.

ஆழ்வார்க்கடியான் நம்பி

இதில் நமக்கு வீர வைஷ்ணவராக அறிமுகமாகிறார் ஆழ்வார்க்கடியான் நம்பி. இந்தப் புத்தகத்திலேயே எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த கதாப்பாத்திரம் இவர் தான். செம சுவாரசியம்! சைவர்களைப் பார்த்தாலே கோபம் அடைந்து விடுவார்.

இவருடைய கதாப்பாத்திரம் பிடித்ததே தவிர எனக்குச் சைவம் வைணவம் பற்றி ஒன்றுமே தெரியாது. அதில் எனக்கு ஆர்வமுமில்லை.

யாரிடம் பேசினாலும் எப்படியாவது பேச்சில் விஷ்ணுவை இழுத்து வந்து விடுவார். எதிரில் இருப்பவர் எவராக இருந்தாலும் சரி. நாவலின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை இவர் வருவது ரொம்ப சுவாரசியம்.

இவர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று கூறினார்கள். சத்தியமாக அப்படி நினைக்கவே முடியாத அளவிற்கு மிக மிகச் சிறப்பாக இவரது கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஜோடிப் பொருத்தம்

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சந்திப்பதே சைவமா வைணவமா என்று ஆழ்வார்க்கடியான் ஒரு சைவருடன் சண்டையிடும் இடத்தில் தான். திரும்ப ஒரு முறை இந்தப் புத்தகத்தைப் படித்தால் இவரை இன்னும் கூடுதலாக ரசிக்க முடியும்.

ஆழ்வார்க்கடியான் ஒற்றனாக வருகிறார். எனவே, அனைத்து இடங்களிலும் இருக்கிறார் அதோடு மிக மிகப் புத்திசாலி, பொறுமைசாலி, அவரசப்படாதவர், முன் யோசனை அதிகம். எதையும் உடனே உணர்ந்து கொள்பவர்.

அதோடு பல இடங்களில் நகைச்சுவைக்கு உத்திரவாதம் கொடுப்பவர். அதுவும் வந்தியத்தேவனும் இவரும் செய்யும் கூத்திற்கு அளவே இல்லை. கவுண்டமணி செந்தில் போல அவ்வளவு பொருத்தமான இணை 🙂 .

எனக்கு ஏன் ஆழ்வார்கடியான் பிடிக்கும்?!

வந்தியத்தேவன் ஒரு அற்புதமான கதாப்பாத்திரம் இவரை ரசிக்காதவர் இருக்க முடியாது. நான் ஃபேஸ்புக்கில் நண்பர்களிடையே இந்த நாவலில் உங்களுக்குப் பிடித்தவர் யார் என்று கேட்ட போது பெரும்பான்மையாவர்கள் வந்தியத்தேவனையே குறிப்பிட்டதே இதற்குச் சான்று.

எனவே இவரை ஒதுக்கவே முடியாது இருந்தும் நான் ஏன் ஆழ்வார்க்கடியானை குறிப்பிட்டேன் என்றால், வந்தியத்தேவன் மிகத் திறமையானவன், எதிலும் தப்பித்து விடுவான் என்றாலும், வந்தியத்தேவனுக்குப் பெரும்பாலும் உதவுவது அவனுடைய அதிர்ஷ்டமாக இருக்கும்.

அதிர்ஷ்டம் இல்லாமல் இருந்தால் வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் இவ்வளவு நீண்டு இருக்கவே முடியாது. ஆழ்வார்க்கடியான் பல இடங்களில் புத்திசாதுர்யத்தால் தப்பித்து விடுவார். இவருக்கும் அதிர்ஷ்டம் துணை புரியும் என்றாலும் ஒப்பீட்டளவில் குறைவே.

ஒரு இடத்தில் ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் “என்னை நீ மாட்ட வைத்து விட்டு தப்பித்து இருக்க வேண்டியது தானே!” என்று கேட்டதற்கு வந்தியத்தேவன் கூறும் பதிலையும் அதற்கு ஆழ்வார்க்கடியான் கூறும் பதிலையும் ரசிக்காமல் இருக்கவே முடியாது.

நான் சிரித்து விட்டேன் 🙂 . நல்ல ஜோடிப் பொருத்தம்.

இதை விட இவர்கள் இலங்கை சென்று யானை துரத்தி… அடடா! செம கலாட்டாவாக இருக்கும். இவர்கள் பகுதி வந்தாலே கூடுதல் சந்தோசமடைந்து விடுவேன். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் ரசிகனாகி விட்டேன்.

சோதிடமும் பகுத்தறிவும்

இதில் குடந்தை சோதிடரைப் பற்றிய பகுதியும் வரும்.  சோதிட நம்பிக்கையையும் அதே சமயம் அதை நம்பக்கூடாது என்ற பகுத்தறிவையும் நமது மனமே அறியாமல் கூறிச் செல்வார்.

இந்நாவலை படிப்பவர்கள் பகுத்தறிவாளர்களாக இருந்தாலும் அவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி சில கதாப்பாத்திரங்களின் வசனங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இதன் மூலம் இரு தரப்பையும் அசத்தலாக சமன் படுத்தியிருப்பார். அதாவது சோதிடத்தை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால், அதையே முழுமையாக நம்பி இருக்கக் கூடாது என்பதை இலைமறைவு காயாக உணர்த்துவார். அற்புதம்!

பழவேட்டரையர்

சக்ரவர்த்தி சுந்தர சோழர் இருக்கும் தஞ்சை அரண்மனையில் மிகவும் பலம் வாய்ந்த பதவியான தனாதிகாரியாக இருக்கும் பழவேட்டரையர் ஒரு அருமையான கதாப்பாத்திரம். இவரைக் கல்கி வர்ணிக்கும் அழகே அழகு.

ரசிக்க வைக்கும் உடல்மொழி

இவர் கதாபாத்திரம் நல்லவரும் இல்லாமல் கெட்டவரும் இல்லாமல் நடுவே இருக்கும் கதாப்பாத்திரம் ஆனால், இவரை ரசிக்கக் கல்கி வர்ணனைகளே போதும். அதிலும் இவருடைய சுபாவமான தொண்டையைக் கனைத்து விட்டுப் பேசுவது ரொம்ப நன்றாக இருக்கும்.

இதை எழுதும் போது கூட எனக்குச் சிரிப்பு வருகிறது 🙂 .

இவர் 60 வயதிற்கும் மேற்பட்டவராக இருந்தாலும், இவருடைய இளைய வயதில் போரில் பலரை கதி கலங்க வைத்தவர். இரும்பைப் போல உடல் உறுதி கொண்டவர்.

இவர் சிரிக்கும் போது இடி இடிக்கும், கட்டிடங்கள் அதிரும், திரைச்சீலைகள் பெருங்காற்று வந்தது போலப் படபடக்கும், விலங்குகள் பயந்து ஓடும் என்று கல்கி வர்ணிக்கும் போது நமக்கே சத்தம் கேட்டு காதைப் பொத்திக் கொள்ளத் தோன்றும்.

ஒரு காட்சியில் பழவேட்டரையர் வந்தியத்தேவனை முறைத்ததையும், கழுத்தை ஒரு பிடி இறுக்கிப் பிடித்ததையும் அவன் ஏகப்பட்ட இடங்களில், “பழவேட்டரையர் பிடித்த இடம் வலிக்கிறது பேச முடியவில்லை” என்று கூறிக்கொண்டு இருப்பது, ரசிக்கும் படி இருக்கும்.

பழவேட்டரையர் வந்தாலே அந்த இடத்தில் சிங்கம் போலக் கர்ஜிப்பார், முதலில் கனைப்பார் ஹா ஹா ஹா 😀 .

வீட்டுல எலி வெளியில புலி

இவரைக் கண்டால் சக்ரவர்த்தி கூடப் பேசப் பயப்படுவார், அந்த அளவிற்கு மிரட்டலாக இருப்பார். இப்படிப்பட்ட பழவேட்டரையர் நந்தினியிடம் பூனை போலப் பதுங்குவது படிக்கவே சிரிப்பாக இருக்கும்.

நந்தினியை மிரட்ட வேண்டும் என்று கடுங்கோபத்துடன் சென்று அவரின் கடைக்கண் பார்வையும் கொஞ்சும் மொழிகளையும் கேட்டு இவர் அப்படியே பனி போல உருகுவது, மிக மிக ரசிக்கும் படி இருக்கும்.

இவர் வீட்டுல எலி வெளியில புலி மாதிரி 🙂 ஆனால், இறுதியில் புலியாகவே சீறுவது அசத்தலோ அசத்தல். அதிலும் ஒரு இடத்தில் தப்பித்து ஒட்டுக்கேட்டு இருவரை சமாளிக்கும் இடங்கள் எல்லாம் பரபர என்று இருக்கும்.

இவர் மனுசனா அரக்கனா என்று நினைக்கும் அளவிற்கு இவரின் உடல்வலிமை விவரிக்கப்பட்டு இருக்கும். இறுதியில் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டு விடுவார்.

உடல் வலிமை

ஆதித்த கரிகாலனும் பல்லவன் பார்த்திபேந்திரனும் பேசிக்கொண்டு இருக்கும் போது உடல்வலிமை குறித்த பேச்சு வரும்.

அதில், அந்தக் காலங்களில் எல்லாம் உடல் பலம் வாய்ந்தவர்களாகவும் கிழப் பருவத்திலும் உடல் வலிமை கொண்டவர்களாகவும் இருந்தார்கள், நம்முடைய அந்த வயதில் நாமெல்லாம் அவ்வாறு இருக்க மாட்டோம் என்று கூறுவதாக வரும்.

இந்தக் கதை நடக்கும் காலமே 1000 வருடங்களுக்கு முன்பு ஆனால், அப்பவும் இதையே கூறி இருந்து இருக்கிறார்கள். இப்பவும் நாம் அந்தக் காலத்தைக் குறிப்பிட்டுப் பேசுகிறோம்.

இதன்படி பார்க்கும் போது மக்கள் உடல் வலிமை குறைந்து வருவது உணர முடிகிறது. எனவே “அந்தக்காலத்தில் எல்லாம்….” என்று ஆரம்பித்து இது குறித்துப் புலம்ப வேண்டியதில்லை. காரணம், இது தலைமுறை தலைமுறையாக இயல்பாக நடந்து வருவது.

இதில் வரும் பல்வேறு அரசர்களின் பெயர்களை / இடங்களை நினைவு வைப்பது எனக்கு துவக்கத்தில் குழப்பமாக இருந்தது ஆனால், பின்னர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அத்தியாயம் வரும் போது புரிந்து கொள்ள எளிதாகிறது.

அருள்மொழிவர்மன்

அருள்மொழிவர்மன் கிட்டத்தட்ட 19 வயதிலேயே ஈழப் போருக்கு தலைமையேற்றுப் போகிறார் என்பது ஆச்சர்யம் அளிக்கும் செய்தி. அந்த வயதிலேயே பலர் வீர மிக்கவர்களாகவும் போரை வழி நடத்திச் செல்பவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் எனும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.

யானை ஏற்றத்தில் சிறந்தவராகவும் யானைகளுடன் பேசும் திறமையை அருள்மொழிவர்மன் பெற்று இருந்தார் என்பதும் அதைக் கல்கி நம் கண் முன்னே கொண்டு வரும் போது பிரம்மிப்பாக இருக்கிறது.

இலங்கையில் இருக்கும் போது படகோட்டிப் பெண் பூங்குழலியை யானையில் அமர்த்திக்கொண்டு புயல் வேகத்தில் யானையை விரட்டும் போது, மரங்கள் செடிகொடிகள் அனைத்தையும் யானை அடித்துத் துவம்சம் செய்துகொண்டு காட்டுத்தனமாக ஓடுவதைப் படிக்கும் போது நமக்கு மூச்சு வாங்கும்.

பூங்குழலி

பூங்குழலி புரிந்து கொள்ள முடியாத கதாப்பாத்திரம். எந்த நேரத்தில் என்ன செய்வார் என்ன முடிவெடுப்பார் என்றது எதுவும் அறிய முடியாது. மனிதர்களை விட இயற்கையை அதிகம் நேசிப்பார் குறிப்பாகக் கடலை.

வந்தியத்தேவனுக்குத் தண்ணீர் என்றால் பயம். படகில் பூங்குழலியுடன் வரும் போது சண்டை போட்டு (வாய்ச் சண்டை தான்) ரகளை செய்வது அடப்பாவிகளா! இவங்க சண்டை போட்டுப் படகை கவிழ்த்து விடுவார்கள் போல என்று நினைக்கத் தோன்றும்.

பூங்குழலியின் தைரியம் அசாத்தியமானது. எதற்கும் அசர மாட்டார் ஆனால், சில நேரங்களில் கிறுக்குத்தனமாக நடந்து கொள்வார்.

இவருக்கும் அருள்மொழி வர்மன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் வானதிக்கும் நடைபெறும் சிறு சண்டைகள் சுவாரசியமாக இருக்கும். சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு! என்று சொல்வது போல அடித்துக் கொள்வார்கள்.

வானதி

பயந்த சுபாவமான வானதியை குந்தவை பிராட்டியார் பல திட்டங்கள் மூலம் அவருக்குத் தைரியம் ஏற்படுத்துவது எதார்த்தமாகவும், வானதியும் சீராக மாறி வருவது ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்கும்.

ஆதித்த கரிகாலன்

அருள்மொழிவர்மன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கடம்பூர் அரண்மனையில் பழவேட்டரையரை இவர்கள் செய்த சதிக் கூட்டத்தை அறிந்து தன்னுடைய கிண்டல் பேச்சுகளால் அவரைத் தாக்கும் போது பழவேட்டரையர் கண்கள் அனலைக் கக்கும். அநியாயத்திற்கு இவரை ஓட்டித் தள்ளி விடுவார்.

வயது முதிர்ந்தவர் என்றாலும் பேசுவது இளவரசர் என்பதாலும் பழவேட்டரையர் மீதும் தவறு இருப்பதாலும் மேற்கொண்டு எதுவும் பேசமுடியாத இக்கட்டான சூழ்நிலையாக இருக்கும்.

இருந்தாலும் ஒரு சின்னப் பையன் நம்மை அவமானப்படுத்தி விட்டானே! என்று கருவிக்கொண்டு இருப்பார்.

இந்தச் சமயங்களில் எல்லாம் பழவேட்டரையரின் முகப் பாவனைகளையும் அவர் உள்ளக் குமுறல்களையும் மிகச் சிறப்பாகக் கல்கி வர்ணித்து இருப்பார்.

கந்தமாறன் & பார்த்திபேந்திரன்

ஆதித்த கரிகாலன் அவருடைய நண்பர்கள் கந்தமாறனையும் பார்த்திபேந்திரனையும் நந்தினியை வைத்து மானத்தை வாங்கி விடுவார் 🙂 . இவர்கள் இருவரும் நந்தினியின் அழகில் சொக்கிப் போய் நந்தினி என்ன கூறினாலும் செய்வதற்குத் தயார் என்ற நிலைக்கு மாறி இருப்பார்கள்.

எனவே, இதை வைத்து அவர்கள் இருவரையும் நக்கல் அடித்துக்கொண்டு இருப்பார்.

அனைவரையும் அழைத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பலாம் என்று முடிவு செய்த பிறகு கந்தமாறன் தங்கை மணிமேகலையையும் அழைத்துச் செல்லலாம் என்று கூறுவார் ஆதித்த கரிகாலன்.

“மழை வரும் போல உள்ளது அதோடு பெண்களை அழைத்துச் சென்றால் இவர்களைப் பார்க்கவே நேரம் இருக்காது” என்று கந்தமாறன் மறுப்பான்.

அதற்கு ஆதித்த கரிகாலனும் “ஆமாம்! நீ கூறுவது சரி தான். உன் தங்கை மான் போலத் துள்ளிக்குதித்து ஓடுகிறாள். வேட்டையாடுபவர்கள் உன் தங்கையை மான் என்று நினைத்து அம்பெய்து விடுவார்கள்” என்று கூறி இடி இடி என்று சிரிப்பது ரொம்ப நன்றாக இருக்கும்.

நந்தினி கதாப்பாத்திரம் தன் அழகால் அனைவரையும் தன் வசப்படுத்தும் கதாப்பாத்திரம். பெண்களை வெறுப்பதொடு எவரையும் கண்டு கலங்காமல் இருக்கும் மன உறுதி கொண்ட ஆதித்த கரிகாலனே இவரிடம் பேச பயப்படுவான்.

எப்படிப்பட்டவராக இருந்தாலும் நந்தினியின் அழகில் அவருடைய கவர்ந்திழுக்கும் பேச்சில் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல மயங்கி விடுவார்கள்.

பார்த்திபேந்திரன் பெண்கள் என்றாலே எச்சரிக்கையாக இருப்பான் ஆனால், அவனே கவிழ்ந்து விடுவான். என்ன நினைத்து நந்தினியிடம் வந்தாலும், இறுதியில் இவர் கூறுவதைக் கேட்கும்படியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு மாய மோகினியாக வருகிறார்.

வாதத்திறமை

நந்தினி வந்தியத்தேவன் இடையே சுவாரசியமான பல உரையாடல்கள் இருக்கிறது என்றாலும், பின்வருவது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்த உரையாடல்.

‘ஐயா! நீர் முகஸ்துதி செய்வதில் சமர்த்தராயிருக்கிறீர். அது எனக்கு பிடிப்பதேயில்லை.’

‘அம்மணி! முகஸ்துதி என்றால் என்னவோ?’

‘முகத்துக்கு நேரே ஒருவரைப் புகழ்வது தான்.’

‘அப்படியானால் சற்றே நீங்கள் திரும்பி முதுகைக் காட்டிக்கொண்டு உட்காருங்கள்.’

‘எதற்காக?’

‘முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்துக்கொண்டு புகழ்ச்சி கூறுவதற்காகத்தான். அதில் ஒன்றும் தவறு இல்லையல்லவா?’

‘நீர் பேச்சில் மிக கெட்டிக்காரராயிருக்கிறீர்’

‘இப்போது தாங்கள் அல்லவா முகஸ்துதி செய்கிறீர்கள்?’

‘நீரும் உமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, முதுகை காட்டுவது தானே?’

‘மகாராணி! போர்க்களத்திலாகட்டும், பெண்மணிகளிடம் ஆகட்டும், நான் முதுகு காட்டுவது எப்போதும் கிடையாது. தாங்கள் தாராளமாய் என்னை முகஸ்துதி செய்யலாம்.’

இதைக் கேட்டு விட்டு நந்தினி ‘கலீர்’ என்று சிரித்தாள்.

இதில் பெண்கள் “கலீர்” “கலகல” என்று சிரித்தார்கள் என்று வரும் போதும் ஆண்கள் “இடி இடி” என சிரித்தார்கள் என்று வரும் போதும் நமக்கு படிக்க அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

அருமை என்றால் அரிது

கல்கி “அருமை” என்றால் அரிது / குறைவு என்ற அர்த்தத்தில் எழுதி இருக்கிறார். நான் இவ்வளவு வருடங்களாக “அருமை” என்றால் சிறப்பு என்ற அர்த்தத்தில் நினைத்து இருந்தேன்.

உதாரணத்திற்கு, அருமையாகப் பேசினார் என்றால் நான் சிறப்பாகப் பேசினார் என்று இருப்பதாக நினைத்தேன் ஆனால், அரிதாகப் / குறைவாகப் பேசினார் என்ற அர்த்தத்தில் வருகிறது. இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆ…! என்ன… என்ன!!

நாவலில் அதிர்ச்சிகளாக / ஆச்சர்யங்களாகக் கூறும் “ஆ” என்பதும் “என்ன… என்ன” என்று கேட்பதும் எனக்கு பழைய கருப்பு வெள்ளைப் படங்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

பேச்சில் சிறந்தவர்கள்

இதில் எத்தனை கதாப்பாத்திரங்கள்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள். ஒவ்வொரு குணாதியசம் கொண்டவர்களையும் இறுதிவரை அவர்கள் குணாதிசயத்தை எந்த விதத்திலும் சிதைக்காமல் கொண்டு செல்ல எவ்வளவு திறமை வேண்டும்!

அதுவும் வாயடிக்கும் ஆழ்வார்க்கடியான், நந்தினி, வந்தியத்தேவன், பூங்குழலி, அமைச்சர் அநிருத்தப் பிரம்மராயர் போன்றோர் பேச்சுக்கு தீனி போடுவது என்றால் சாதாரண விசயமா! இதில் ஒருத்தர் சரியாகப் பேசவில்லை என்றாலும் அந்தக் கதாப்பாத்திரமே சப்பென்று ஆகி விடுமே!

நீட்டிக்கப்பட்ட இறுதிப் பகுதி 

பிரம்மாண்டமாகப் போகும் கதை இறுதியில் கொஞ்சம் நீட்டிக்கப்பட்டு இருக்கும். எனவே, காட்டாற்று வெள்ளமாகக் கொண்டு சென்று நம்மை அமைதியாக்கியது போல இருக்கும்.

நாவலை இன்னும் கொஞ்சம் முன்னாடியே முடித்து இருக்கலாம் என்று தோன்றியது. அப்படி முடித்து இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

குறிப்பாக, அருள்மொழிவர்மன் மாறுவேடத்தில் வரும் இடம் தஞ்சை அரண்மனையை முற்றுகை இடப்பட்ட நேரங்கள் என்று உச்சகட்ட பரபரப்பாக இருக்கும். என்ன ஆகுமோ! என்று நமக்குப் பீதியாக இருக்கும்.

பட்டமளிப்பு நேரத்திற்குப் பிறகு விரைந்து முடித்து இருந்தால் இன்னும் கூடுதல் திருப்தியாக இருந்து இருக்கும்.

தொலைக்காட்சி நாடகங்கள் முடியப்போகிறது என்றால், திடீர் என்று சிலர் நல்லவர்களாகி விடுவார்கள் சிலர் கெட்டவர்களாகி விடுவார்கள் என்பது போல இதிலும் இறுதியில் சில பாத்திரங்கள் உடனே மாறும்படி இருப்பது நெருடலாக இருக்கும்.

ஏன் இவர்கள் இது போலத் திடீர் என்று மாறுகிறார்கள் என்பதற்குக் கல்கி அவர்கள் விளக்கம் கொடுத்து இருக்கிறார் என்றாலும் நம்மால் சமாதானம் ஆக முடியாத ஒன்றாகத் தான் இருக்கிறது.

ஊகம்

இது அனைத்துமே ஐந்தாம் பாகத்தில் பாதிக்கு மேல் நடைபெறும் சம்பவங்கள் எனவே, அது வரை எந்தக் குறையும் சொல்ல முடியாது. சில கதாப்பாத்திரங்களின் நிலை ரகசியமாகவே இருக்கிறது. வாசகர்களே ஊகித்துக் கொள்ள வேண்டும் என்ற அளவில் இருக்கிறது.

அதோடு சில விஷயங்கள் வரலாற்று ரீதியாக ஆதாரங்கள் இல்லையென்பதால் அவற்றைப் பற்றிக் கூறுவது சரியாக இருக்காது என்பதும் காரணமாக இருக்கலாம். குறை என்று கூறினால் இவற்றை மட்டுமே கூறத் தோன்றுகிறது.

சோழப்பேரரசு சந்ததிகள்

க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும் – Image Credit – ponniyinselvan.in

Ponniyin-Selvan-Family-Tree-English

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் 1000 வருடங்கள் கடந்தும் சோழப் பேரரசையும் நம் தமிழகத்தின் பெருமையையும் உணர்த்திக்கொண்டு இருக்க இலங்கையும் ஒரு காரணம்.

ஈழப் போரின் போது அருள்மொழிவர்மன் அங்கிருந்த மிகப்பிரம்மாண்டமான புத்தர் சிலைகளைப் பார்த்துப் பிரம்மித்துப் போய் இது போல நாமும் 1000 ஆண்டுகள் கழித்தும் சோழப் பேரரசின் பெயர் கூறும் கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்துக் கட்டியதே இந்தத் தஞ்சை பெரிய கோவில்.

நம்முடைய நல்ல நேரம் இன்னமும் நம் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டும் பாதுகாப்பாகவும் இருக்கும் கோவிலும் இது ஒன்று தான். மற்றவை எல்லாம் அழிந்து விட்டன அல்லது பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து விட்டன.

இந்த அருள்மொழிவர்மனே பிற்காலத்தில் இராஜ ராஜ சோழனாகப் பட்டம் பெற்றார்.

விருதகிரிஸ்வரர் @ விருதாச்சலம்

விருதாச்சலம் நகரில் ஒரு பிரம்மாண்ட “விருதகிரிஸ்வரர்” சிவன் கோவில் உள்ளது. உங்களில் சிலர் பார்த்து இருக்கலாம். இதைக் கட்ட எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்… ஒன்றும் பிடிபடவில்லை.

20 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

பிரம்மாண்டம்

மூன்று பிரகாரம் இருக்கிறது. சிவன் கோவில் என்பதாலோ என்னவோ எங்குப் பார்த்தாலும் லிங்கமாக இருக்கிறது. மற்ற கோவில்களை விட இந்தக் கோவில் நன்றாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது.

எனக்கென்னவோ தமிழ் நாட்டில் இருக்கும் மொத்தக் கற்களும் கோவில்களில் தான் இருக்கின்றன என்று தோன்றுகின்றன 🙂 . எப்படி இதை அமைத்து இருப்பார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது! தற்போது போல வசதி இல்லாத காலத்திலேயே கற்கள் அழகாக அறுக்கப்பட்டு அருமையாகக் கட்டப்பட்டுள்ளன.

கேள்விக்குறியாக இருக்கும் பராமரிப்பு

இந்தக் கோவில் சென்றால் நிச்சயம் இதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியக்காமல் இருக்கவே முடியாது. இதனுள் சென்று பார்த்த போது, இங்கே மேள தாளத்தோடு ராஜா வந்து சென்றால் எப்படி இருக்கும் என்று மனத் திரையில் ஓடியது. நினைப்பே சிலிர்ப்பாக இருந்தது.

அந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்து இருப்பார்கள்…! எப்படி இந்தக் கோவிலை கொண்டாடி இருப்பார்கள்…! ஆனால், தற்போது…! இவ்வளவு கஷ்டப்பட்டுக் கட்டிய பல கோவில்களைப் பராமரிக்காமல் அப்படியே போட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

தஞ்சை பெரிய கோவில் போலப் பராமரிப்பு இல்லை. இந்தக் கோவிலை இதுவரை பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள்.

இது போன்ற கட்டிடக் கலையில் சிறந்து விளங்கிய இடங்களை அதன் அருமை பெருமை புரியாமல் நாம் / அரசு சீரழித்துக்கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது அடையும் துக்கம் கொஞ்ச நஞ்சமில்லை.

தமிழர்களின் சிறப்பை தமிழர்களைப் போலக் கெடுத்தது / கெடுத்துக் கொண்டு இருப்பது எவரும் இல்லை என்பது என்னுடைய உறுதியான கருத்து.

தந்தி தொலைக்காட்சியின் “யாத்ரிகன்” தொடர் 

நண்பன் சோம்ஸ் “தந்தி டிவி” யாத்ரிகன் என்ற தொடர் மூலமாக “பொன்னியின் செல்வன்” நாவலில் வரும் இடங்களைப் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி பற்றி அறிமுகப்படுத்தி இருந்தார். பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்கள் அதில் வரும் இடங்களைப் பார்க்கணும் என்று நினைப்பது இயல்பு.

இதை நினைக்காமல் இருந்தால், அவருக்கு எதோ பிரச்சனை என்று தான் கருத வேண்டியிருக்கிறது. நான் திரும்பத் தஞ்சை பெரிய கோவிலையும் மற்றும் வீராணம் ஏரியையும் அதன் அருகே கட்டப்பட்ட பெருமாள் கோவிலையும் பார்க்க நினைத்துள்ளேன்.

மீதி உள்ள இடங்களை ஏன் கூறவில்லை என்றால், இந்த நாவல் படித்த போது ஏற்பட்ட அழகான நினைவுகளையும் வர்ணனைகளையும் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

சலசலத்து சென்ற ஆறும், வெளிச்சமே தெரியாமல் வானுயர்ந்த மரங்களைக் கொண்டு இருந்த காடுகளைப் பற்றிப் படித்துத் தற்போது கொடுமையான நிலையில் இருப்பவற்றைப் பார்க்க எனக்கு மனதில் தைரியமில்லை.

இந்த யாத்ரிகன் தொடரில் வரும் பழைய இடங்களைப் பார்த்தாலே கண்ணீர் வந்து விடும். நம் தமிழர்கள் பெருமையைப் பிரம்மாண்டமாகக் கூறும் ஒரே கட்டிடம் தஞ்சை பெரிய கோவில் மட்டுமே!

“மதுரை மீனாட்சி” கோவில் போல சில கோவில்கள் இருந்தாலும், நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது தஞ்சைக் கோவில் தான்.

இலங்கை

இதில் இலங்கையும் வருகிறது. பார்த்து அசந்து விட்டேன். எவ்வளவு அழகாகச் சிறப்பாகப் பராமரித்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே மிகப் பொறாமை அடைந்து விட்டேன். இங்கே அது போல இல்லையே என்ற ஏக்கமும் வந்து விட்டது.

போர்களால் அவை பாதிக்கப்படாமல் இன்னும் அழகு குன்றாமல் இருப்பதைப் பார்த்த போது ஏக்க பெருமூச்சுத் தான் வந்தது. நம் பகுதியில் உள்ளவற்றை நினைத்துப் பார்த்தேன்! தஞ்சை கோவிலைத் தவிர எது ஒழுங்காகப் பராமரிக்கப்படுகிறது?!

அனைத்து அடையாளங்களையும் அதனுடைய அருமை தெரியாமல் / தெரிந்தும் கண்டுகொள்ளாமல் அழித்து விட்டார்கள்.

இயற்கை அழகு

இலங்கையில் வரும் காட்சிகளைப் பார்த்து வாயடைத்துப் போய் விட்டேன். நீங்கள் ஒருமுறை இந்தக் காணொளியைப் பார்த்தால் நான் கூறுவது எவ்வளவு உண்மை என்று உணர்ந்து கொள்ளலாம்.

அங்கே உள்ள காடுகளையும் மலைகளையும் புத்தர் சிலைகளையும், சிற்பங்களையும், ஏரிகளையும் பார்த்து முதலில் நான் கூட இது பல காலத்திற்கு முன்பு எடுத்த காணொளியோ என்று நினைத்து குழம்பி விட்டேன் ஆனால், இல்லை 2014 ல் தான் எடுத்து இருக்கிறார்கள்.

இலங்கை அழகு என்று தெரியும் ஆனால், இவ்வளவு அழகு என்று எனக்குத் தெரியாது. இங்கே நிச்சயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இவ்வளவு அழகாகச் சிறப்பாகப் பராமரிக்கும் இவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

பொன்னியின் செல்வனில் கல்கி அவர்கள் இலங்கையையும் அதனைச் சுற்றி உள்ள குட்டித்தீவுகளையும், வானுயர்ந்த மரங்களையும், வெளிச்சமே புக முடியாத அளவிற்கு இருக்கும் காடுகளையும், பிரம்மாண்ட புத்தர் சிலைகளையும், பழமைவாய்ந்த கட்டிடங்களையும், ஓவியங்களையும் அழகாக வர்ணித்து இருப்பார்.

தற்போது இதே போல எதிர்பார்க்க முடியாது என்றாலும், மோசமில்லாத அளவிற்குத் தற்போதும் சில இடங்கள் உள்ளது பார்க்கவே சந்தோசமாக உள்ளது.

இலங்கையும் முழுக்கத் தமிழர்கள் நாடாகவே இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று தோன்றியது அதோடு அப்படி இருந்தால் அவற்றையும் நம்மைப் போல அழித்து இருப்பார்களோ! என்ற எண்ணமும் வந்து செல்லாமல் இல்லை.

உண்மையிலேயே இலங்கை வளம் கொழிக்கும் நாடாக இருக்கிறது. இயற்கையை அழிக்காமல் (தற்போது அழிப்பதாகக் கூறுகிறார்கள்) அதன் அழகை குலைக்காமல் வைத்து இருக்கிறார்கள். இந்தக் காணொளி பார்த்த பிறகு இலங்கை குறித்த என்னுடைய எண்ணத்தில் நிறைய மாற்றங்கள்.

என்னதான் காணொளியில் பார்த்தாலும் நேரடியாகச் சென்று பார்க்கும் போது என்னுடைய ஆசை முழுமையடையும் என்று கருதுகிறேன்.

தந்தி தொலைக்காட்சியின் “யாத்ரிகன்” காணொளி. சில இடங்களில் ஒலி இல்லை.

இணையத்தில் படிக்க  http://ponniyinselvan.in/book/kalki/ponniyin-selvan

ஒலி வடிவில் கேட்க  Tamilebooksdownloads

பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்க முடியாதவர்களுக்கு இணையத்தில் ஒலி வடிவில் கேட்பதற்கும் வசதி இருக்கிறது. இதில் பொறுமை அவசியம் மற்றவர்களின் தொல்லை, சத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.

எனவே அமைதியான சூழ்நிலையில் இதைக் கேட்டால் தான் சிறப்பாக இருக்கும்.

இந்நாவல் ஆங்கிலத்திலும் இருப்பதாக அறிந்தேன் ஆனால், ஆங்கிலத்தில் படித்தால் எந்த சுவையும் இருக்காது. தமிழுக்கே உண்டான அற்புத சொற்களில் படித்தால் மட்டுமே இதை முழுமையாக ரசிக்க முடியும் என்பது திண்ணம்.

வரலாற்றை அறிய உதவும் அற்புத நாவல்

இதுவரை வரலாற்றைப் பற்றியோ, தமிழர்களின் சிறப்புகள் பற்றியோ, பண்டைய மன்னர்களின் வீரம் கொடை புத்திசாலித்தனம் தொலைநோக்குப் பார்வை பற்றியோ உங்களுக்கு எந்தப் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் இருந்தால், இந்தப் புத்தகம் படித்தால் உங்கள் மனநிலை நிச்சயம் மாறி விடும்.

தொடர்ந்து இருப்பது அவரவர் ஆர்வத்தைப் பொறுத்தது ஆனால், சில நாட்களாவது இதன் தாக்கம் அனைவருக்கும் இருக்கும் என்பது உறுதி. என்னுடைய அக்கா கூறியது போல நம் முன்னோர்கள் மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த பற்று ஏற்படும்.

பெரிய கட்டுரை

நான் இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களை மட்டுமே குறிப்பிட்டு இருந்தேன். இதுவே மிகப்பெரிய இடுகையாக வந்து விட்டது.

நிச்சயம் உங்களுக்குப் பிடித்த சில கதாப்பாத்திரங்களைக் குறிப்பிடாமல் இருந்து இருக்கலாம் ஆனால்,இக்கட்டுரை கடல் போன்ற இடத்தில் ஒரு துளி எடுத்துக் கொடுத்தது போலத் தான்.

இதையே எத்தனை பேர் முழுதாகப் படித்து இருப்பார்கள் என்பது சந்தேகம்.

முடிந்தவரை சலிப்படையச் செய்யாமல் எழுதி இருப்பதாகவே நினைக்கிறேன். கல்கி அவர்களை நினைத்தேன்!! அவ்வளவு பெரிய புத்தகங்களை விறுவிறுப்பாக ஒவ்வொரு பக்கமும் நகர்த்திய அவரின் திறமையை நினைத்துப் பார்த்தேன்.. கற்பனை கொண்டும் அளக்க முடியவில்லை.

அடுத்ததாகச் சிவகாமியின் சபதம், கடல் புறா, யவன ராணி மற்றும் நண்பர்கள் பரிந்துரைத்த மற்ற புத்தகங்களையும் படிக்க நினைத்துள்ளேன்.

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்கள் உங்களுக்கு எந்தக் கதாப்பாத்திரம் பிடித்தது என்பதையும் ஏன் என்ற காரணத்தையும் கூறுங்கள். அதோடு நாவல் குறித்த செய்திகள் தகவல்கள் போன்றவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தெரிந்து கொள்ள விருப்பமாக இருக்கிறேன்.

உற்சாகம் அளித்த நண்பர்களுக்கு நன்றி 

ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு பாகமும் முடித்த போது அது குறித்துக் கூறி உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும், பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்க பரிந்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் இதை எனக்கு வாங்கிக்கொடுத்த அன்புத் தம்பி ராஜ்குமாருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

இதுவரை பொறுமையாகப் (முழுதாகப்) படித்தவர்களுக்கும் நன்றி 🙂 .

பிற்சேர்க்கைபார்த்திபன் கனவு    சிவகாமியின் சபதம்

{ 33 comments… add one }
 • venkat February 3, 2015, 3:02 PM

  அன்பு நண்பர் கிரிக்கு,

  பொன்னியின் செல்வன் அற்புதமான நாவல். கல்கியின் நாவல்களில் மிகச் சிறந்த நாவல் இதுதான். 1981-ல் பதினைந்து நாளில் நான் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் படித்து முடித்தேன். உறவினர் வீட்டிற்கு கல்லூரி விடுப்பில் போயிருந்தபோது, ‘புத்தகம் இரவல் தரமுடியாது, வேண்டுமானால், படித்து விட்டுப்போ’ என்று சொன்னதால், ஹைதராபாத் சுற்றிப்பார்க்கும் ஆசையை விட்டுவிட்டு, இரவு பகலாக படித்து முடித்தேன். முடிவில் குந்தவைக்கும், சிவகாமிக்கும் வித்யாசம் தெரியாத அளவுக்கு குழப்பம். பத்து வால்யூம்கள்.

  பிறகு, 87-88ல் கல்கியில் தொடராக வந்தபோது, மீண்டும் ஒருமுறை. பிறகு, பைண்டு பண்ணி திரும்பவும்.. கடைசியாக, இணையத்தில், கணினித்திரையிலேயே சில வருடங்களுக்குமுன் படித்தேன். என் பெண்ணிற்கு, சரளமாக தமிழ் (அதுவும் சங்ககால தமிழ்) படிக்க வராததால், முதல் பாகம் ஆங்கில மொழிபெயர்ப்பு வாங்கிக் கொடுத்தேன். தமிழின் துள்ளல் இல்லையென்றாலும், நல்ல மொழிபெயர்ப்புதான்.

  பொன்னியின் செல்வன் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணிப்பது அலாதியான சுகம். பழையாறை (இப்போதய நாதன்கோவில்), கும்பகோணம், பூந்தோட்டம், வேதாரண்யம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நான் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால், வந்தியத்தேவனும், குந்தவையும் ஊர்ப்பக்கம் போகும்போது நினைவில் வருவதில் ஆச்சர்யமில்லை. முன்பு ஒருமுறை, எழுத்தாளர் பாலகுமாரனுடன் கல்கியின் விசிறிகள் (ஃபேன்), பொன்னியின் செல்வன் கதை நிகழ்ந்த இடங்களுக்கு சுற்றுலா சென்றுவந்தார்கள். நானும் அதுபோன்ற ஒரு வாய்ப்பிற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன். மணியன் செல்வனின் தத்ரூபமான சித்திரத்தில், கல்கியின் கதைமாந்தர்கள் சிரஞ்சீவிகள். இந்த நாவல் பற்றி நிறைய எழுதலாம், பேசலாம். உங்கள் பதிவு நீளமானதாகத் தோன்றவில்லை.

  உங்கள் பதிவு, என் எண்ணங்களைத் தூண்டிவிட்டதில், வெகு நாட்களுக்குப்பின் தமிழில் தட்டச்சிக்கிறேன்.(சரியான வார்த்தைப்பிரயோகம் தானே, தவறானால், தமிழறிஞர்கள் மன்னிப்பார்களாக)

  அன்புடன்
  தமிழ் நேசன் (வெங்கட்)

 • தமிழ்செல்வன் February 3, 2015, 4:09 PM

  நல்லதொரு இடுகை கிரி. எனக்கு பிடித்தவர் குந்தவைதான் – அழகு, அறிவு மற்றும் ஆளுமையும் நிறைந்தவர்.

  நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது 15 நாட்களில் இதை படித்து முடித்தேன். என்னுடைய விவசாய ஆசிரியர்தான் நூலகப் பொறுப்பாளராய் இருந்தார், திரும்ப திரும்ப சிறுவர் மலர் இதர சிறுவர் இதழ்களை கேட்கவும், கடுப்பாகி பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை கொடுத்தார், நான்கு நாட்களில் படித்துவிட்டு அடுத்த பாகத்தை கேட்டேன் . அவர் நம்பிக்கை இல்லாமல், முதல்பாகத்தில் வரும் கதாபாத்திரங்களை பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்…

 • M Arunachalam February 3, 2015, 4:32 PM

  Giri – Fantastic post on Ponniyin Selvan. I enjoyed reading your reading experience and also the way you enjoyed Kalki’s writing. Kudos to you for bringing to light this feat of Kalki which will be useful for present generation people who may not have heard or may not have had the time to read this novel.

  I beg to differ with you on one point. That is regarding making Ponniyin Selvan into a movie. I feel you might not have agreed to it because of Maniratnam being the director. So far, it has been attempted at least three times. First was when MGR himself finalised it by purchasing the right to produce the novel as a movie from the book publisher in the late 1950s. Actors were also finalised and I read about it in the Ponniyin Selvan Exhibition in Music Academy when we went to watch its stage play in June, 2014. But it didn’t materialise due to various reasons.

  Second time was when Mani Ratnam and Kamalhassan were supposed to collaborate to produce it in the late 1980s but that didn’t happen. Mani ratnam again tried very recently in 2013 after Ponniyin Selvan was freed from copyright by Govt of TN. Fortunately that too failed to materialise as otherwise it would have faced the ignominy of casting Vijay as Vandhiyathevan.

  But in spite of all the above failed attempts, I still feel a truly visionary director can do justice to the novel. Kalki has written it almost like a screenplay only and whoever wants to make a movie out of it will only need to make few changes/tweeks here and there and the screenplay can be made ready. Like director S. S. Rajamouli is now making Bahubali in two parts, PS can also be made in 2 or even 3 parts (Parts 1 & 2 together; parts 2 & 3 together & Part 5).

  I read Shankar expressing his desire to make PS in an interview with AV. May be he can do justice to it by using the latest movie making technology (but not make up like in “I”) and even using Performance Capturing Technology like in Avatar (so that he can bring back some yester-year actors, if required, on celluloid like Nagesh in Kocha).

  Anyway, thanks once again for the excellent write-up about Ponniyin Selvan.

  Arun

 • Peraveen Kumar February 3, 2015, 8:31 PM

  Sema novel… solradha vida adha padichi paathavangalukku thaan theriyum adhoda arumai… 🙂

 • Senthil February 4, 2015, 9:39 AM

  சங்கதாரா நாவலை படிக்கவும். பொன்னியின் செல்வனக்கு வேறொரு பரிமானத்தை கொடுக்கும் நாவல்.

 • RevathyShanmugam February 4, 2015, 10:05 AM

  தமிழ் ல best novel னா அது பொன்னியின் செல்வன் தான்…… நீங்க இவ்ளோ நாளா படிக்கலேனா ஆச்சர்யமா இருக்கு எப்படி மிஸ் பண்ணீங்க…… நான் 25 தடவைக்கு மேல படிச்சிருப்பேன் ஆனா , முதல் தடவை படிச்சப்ப இருந்த பிரம்மிப்பு இன்னும் குறையல….. நான் 7த் படிக்கும் போது படிச்சேன் கிட்டத்தட்ட 10 நாளா படிச்ச ஞாபகம்….. கல்கி வார இதழ் ல இருந்து சேகரிச்சு என் அம்மா பைன்ட் பண்ணி வச்சிருந்தாங்க….. இன்னும் அந்த புக் என் கிட்ட இருக்கு …….. maximum எல்லா சரித்திர நாவல் collections என்கிட்ட இருக்கு …… சென்னை ல ஒரு புக் fair நான் மிஸ் பண்ண தில்ல ….(nearly 13 years aa…. )… இதுக்கெல்லாம் ஒரே காரணம் பொன்னியின் செல்வன் படிச்சது தான்…. தமிழ் ல ஆர்வம் வந்ததுக்கும் காரணம்……! உங்களோட பதிவு இன்னொரு முறை படிக்கத் தூண்டிடுச்சு …… படிக்க போறேன்…. 🙂

 • நான் கார்த்திகேயன் February 4, 2015, 12:54 PM

  சூப்பர் பதிவு அண்ணா . ஒரு வழியா பதிவு முழுவதும் படித்துவிட்டேன். பொன்னியின் செல்வனை படிப்பது போன்ற சுகத்தை இந்த பதிவும் கொடுத்தது. நான் 3 வருடங்களுக்கு முன் திருப்பூரில் வேலை செய்யும் போது படித்தேன்.

  சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது திருவான்மியூரில் இருக்கும் ஒரு புக் ஸ்டோரில் பொன்னியின் செல்வன் புத்தகம் ஒரு சில பாகம் மட்டும் விற்பனைக்கு இருந்தது . அனைத்து பாகங்களும் கிடைப்பது கடினமாக இருந்தது . நக்கீரன் பப்ளிகேசன் அனைத்து பாகங்களையும் ஒரே புத்தகமாக வெளிட்டு இருப்பதை அறிந்து நேராக ராயபேட்டை நக்கீரன் அலுவலகத்திற்கே சென்று வாங்கினேன் . ஆனால அப்போது எனக்கு படிக்க நேரம் கிடைக்க வில்லை.

  பிறகு திருப்பூருக்கு வேலைக்கு வந்ததும் ஷிப்ட் முடிந்ததும் படிக்க உட்கார்ந்து விடுவேன். நாவல் படிக்க படிக்க வேலை செய்த களைப்பு ,அலுப்பு , டேமேஜர் மேல இருந்த கடுப்பு எல்லாம் காணாமல் போய் நான் ஒரு புது உலகத்தில் சோழ சமஸ்தானத்தில் இருப்பது போல உணர்வேன்.

  அனைத்து பாகங்களையும் படிக்க எனக்கு 2 மாதங்கள் ஆனது .எனக்கு இந்த நாவலில் அதிகம் பிடித்தது வந்தியத்தேவன் . வந்தியத்தேவன் குதிரையின் மீது அமர்ந்து சோழ நாட்டின் இயற்கையை ரசிக்கும் காட்சி கல்கி பிரம்மாண்டமாக சொல்லி இருப்பார் .அது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

  வந்தியத்தேவன் பாத்திரத்தில் அப்போது நடிகர் விஜயை வைத்து படித்தேன் (அச்சமயம் நான் தீவிர விஜய் ரசிகன் –இப்போது நல்லா நடிக்கும் அணைத்து நடிகர்களுக்கும் நான் ரசிகன் )

  பெண் கதாபாத்திரத்தில் எனக்கு நந்தினி தான் என் டார்லிங். அந்த கதாபாத்திரத்தை நான் காதலித்தேன். இன்று வரை நந்தினி எனும் பெயர் கொண்ட பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளேன்.(இதை என் அப்பாவிடமும் சொல்லிவிட்டேன்)

  நான் நாவலை படித்தாலும் எனக்கு அதன் பின்புலம் பற்றி எதுவும் தெரியாது . ஐந்து வருடமாக தொடராக வந்து இருப்பதை படிக்கும் போது உடல் சிலிர்க்கிறது . மறுபடியும் பொன்னியின் செல்வனை பார்க்க வேண்டும் என்று இந்த பதிவு ஒரு வெறியை உருவாக்கிவிட்டது.

  இப்பொழுது காந்தியின் “சத்திய சோதனை” படித்து கொண்டு இருக்கிறேன் . அடுத்து தாங்கள் ஒரு முறை கூறிய “வட்டியும் முதலும் “ இப்பொது தான் எனக்கு கிடைத்தது அதையும் படித்துவிட்டு தான் பொன்னியின் செல்வனை படிக்க வேண்டும் என்று உள்ளேன்.

  இந்த தளத்தில் கல்கி இன் நாவல்கள் மின் நூலாக இலவசமாக வழங்குகிறார்கள் அண்ணா

  http://www.tamilpdffree.com

 • akila February 4, 2015, 2:42 PM

  தமிழர்களோட பொக்கிஷம் இந்த நாவல்.படிக்க ஆரம்பிச்சதில இருந்து கீழே வைக்கவே தோணாது..அப்படி ஒரு எழுத்து நடை.கல்கி அவர்களால மட்டும் தான் முடியும் இது.நான் 10 படிக்கும் போது ஒரு வாரத்துல படிச்சு முடிச்சேன்..அப்படியே மெய்மறந்து சோழ நாட்டுக்கு பயணப்படுவோம் இந்நாவல் படிக்கிற அனைவரும்..உங்க பதிவு மறுபடியும் நாவல படிக்கத் தூண்டுது.

 • விஜய் February 4, 2015, 5:27 PM

  நல்ல பதிவு கில்லாடி. ஒரு வழியாக படித்துவிட்டேன் 🙂

  நான் இன்னும் இந்த நாவல் படிக்கவில்லை. கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டு உள்ளது. PDF என்னிடம் இருக்கிறது ஆனால் அதில் படிக்க இஷ்டம் இல்லை அதனால் புத்தகம் வங்கி தான் படிக்க வேண்டும்….

 • appu mohan February 4, 2015, 11:26 PM

  மிக நல்ல பதிவு பிரதர். எனக்கு 25 வயது. உங்க கிட்ட நான் ஒரு விசயம் சொல்லணும், நான் என் கல்லூரி காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் “பொன்னியின் செல்வன்” புத்தகம் இதுவரைக்கும் 5 பாகங்களையும் 7 முறை படிச்சுட்டேன். எனக்கு பொன்னியின் செல்வன் பற்றியும் அதுல வருகிற கதாப்பாத்திரங்கள் பற்றியும் யார் பேசினாலும், எழுதினாலும் பிடிக்கும். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல பதிவு படிச்ச சந்தோசம் கிடைச்சுச்சு.

 • Prakash February 5, 2015, 8:56 AM

  பொன்னியின் செல்வனில் வரும் ஊர்களுக்கு எல்லாம் சென்று அன்றைய தினத்தில் எப்படி இருந்தது இன்று எப்படி உள்ளது. அது எந்த இடம் என்றும் தந்தி டிவியில் ஒளிபரப்பாகியது. அவை YouTube ல் கிடைக்கிறது. பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

  • Prakash February 5, 2015, 9:01 AM

   தொடரின் பெயரை கூற மறந்து விட்டேன் தொடரின் பெயர் ‘யாத்ரீகன்’

 • Sris February 5, 2015, 3:24 PM

  “Fortunately Rajinikanth was not considered as otherwise it would have faced the ignominy of casting Rajinikanth as Vandhiyathevan.”
  என்றும் கூட சொல்லலாமே. ரஜினி விஜய் மட்டுமல்லாது எல்லோரும் தங்களுக்கு பிடிக்காத நடிகனின் பெயரை குறிப்பிட்டு வெறுப்பை அள்ளி கொட்டலாம். அதனால் தனிமனித தாக்குதல்களை கமெண்ட்ஸ் பகுதியில் பிரசுரிப்பதை நீங்கள் தவிர்க்கலாமே. மகாத்மா காந்தியை கொல்லவும் ஒரு கோட்சே இருந்தான். எந்த ஒரு மனிதனும் தன்னை சுற்றி வாழும் அனைத்து மக்களையும் திருப்தி படுத்தி வாழ முடியாது.விமர்சிப்பதற்கும் தாக்குவதற்கும் என்றே ஒரு குரூப் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட கமெண்ட்ஸ் பிரசுரம் ஆகாமல் உங்களால் தடுக்க முடியும். தடுப்பது தான் மனிதாபிமானம் என்பது என் கருத்து.
  நீங்கள் சொல்வது போல மணிரத்தினம் மட்டும் அல்ல தமிழர்களால் பொன்னியின் செல்வனை திரைப்படம் ஆக்க முடியாதுதான். அந்த திறமை ஹாலிவுட் க்கு மட்டுமே சொந்தமானது. காரணம் அங்கே M Arunachalam போன்றவர்கள் இல்லை.

 • janaki February 5, 2015, 5:39 PM

  Nice review anna ..even i feel shame that i started only before 2 days..i downloaded app in my i pad..its really nice..
  https://itunes.apple.com/in/app/ponniyin-selvan-book/id491636607?mt=8

 • Prakash February 5, 2015, 7:38 PM

  கல்கியின் எழுத்துக்கள் அனைத்துமே பொக்கிஷங்கள். தியாக பூமி படித்து பாருங்கள். கண்களில் நீர் வராமல் இருக்காது.

 • கிரி February 5, 2015, 8:08 PM

  @வெங்கட் “புத்தகம் இரவல் தரமுடியாது, வேண்டுமானால், படித்து விட்டுப்போ” என்று சொன்னதால், ஹைதராபாத் சுற்றிப்பார்க்கும் ஆசையை விட்டுவிட்டு, இரவு பகலாக படித்து முடித்தேன்.

  🙂 🙂 அட்டகாசம்.

  நீங்கள் தஞ்சை மாவட்டம் என்பதால் எங்களை விட நீங்கள் அதிகம் இந்த நாவலுடன் ஒன்றிப் படித்து இருப்பீர்கள். நீங்கள் எப்படி ரசித்துப் படித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.. சுவாரசியமாக இருந்தது. விவரங்கள் நன்கு தெரிந்து பிறகு படித்த போது இன்னும் கூடுதலாக ரசித்துப் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  நாம் இருக்கும் ஊரில் இதெல்லாம் நடந்து இருந்து இருக்கிறது.. அவர்கள் வாழ்ந்த இடத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமையாக இருந்து இருக்கும்.. எனக்கு கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது.

  தட்டச்சு சரியான வார்த்தை தான்.

  @அருண் நன்றி 🙂

  நீங்க படம் எடுப்பதைப் பற்றி கூறியதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், படமாவது எப்படியாவது ஓரளவு எடுத்து விடலாம் என்றாலும் கதாப்பாத்திரம் எப்படி நிறைவு செய்ய முடியும்? வந்தியத்தேவன், பழவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், நந்தினி கதாப்பாத்திரங்களை நியாயப்படுத்தி நடிக்கும் நடிகர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்? கல்கியின் வர்ணனையுடன் படித்து ரசித்து விட்டு இதில் வேறு எவர் நடித்தாலும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் தெரியுமே! யாராலுமே இவர்கள் இடத்தை நிரப்ப முடியாது. படம் வெளியானால் பொன்னியின் செல்வன் ரசிகர்களின் சாபத்தைத்தான் இவர்கள் வாங்குவார்கள் 🙂

  @பிரவின் & செந்தில் நன்றி

 • கிரி February 5, 2015, 8:22 PM

  @ரேவதி சண்முகம் உங்களுக்கு பொன்னியின் செல்வன் பாணியிலேயே பதில் கூறுகிறேன்..

  ஆ..! என்ன… என்ன.. 25 முறை படித்து இருக்கிறீர்களா? என்னால் நம்பவே முடியவில்லையே! 😀

  நீங்கள் கூறிய தமிழ் ஆர்வம் என்னுடைய விசயத்தில் முற்றிலும் உண்மை. இது நாள் வரை எனக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது இல்லை. இதைப் படித்த பிறகு நிறைய வரலாற்று நாவல் புத்தகங்களை படிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். இனி இது போல புத்தக விமர்சனம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

  @கார்த்தி உன்னோட அனுபவம் ரொம்ப நன்றாக இருந்தது. உண்மையிலேயே நீ கூறியது போல என்ன பிரச்சனை இருந்தாலும், இதைப் படிக்க ஆரம்பித்தால் அனைத்தும் மறந்து இதில் மூழ்கி விடுவோம்.

  கார்த்தி பொண்ணு கிடைக்கிறதே பெரிய விசயமா இருக்கு.. இதுல நீ வேற நந்தினி என்ற பெயரும் இருக்க வேண்டும் என்று கூறினால், நீ பழவேட்டரையர் ஆன பிறகு தான் பொண்ணு கிடைக்கும் 🙂 🙂

  தயவு செய்து உன்னோட நிபந்தனையை தளர்த்திக் கொள். அண்ணன் சொல்றேன் கேட்டுக்கோ.

  சுட்டிக்கு நன்றி.

  @அகிலா எல்லோருமே 15 வயதிற்குள் படித்து விட்டீங்க போல.. நான் தான் ரொம்ப தாமதம் போல 🙂

  @விஜய் புத்தகமா படிங்க… அதில் கிடைக்குற அனுபவம் அற்புதம்.

  @அப்பு மோகன் பொன்னியின் செல்வன் படித்தவங்க எவருமே குறைந்தது இரண்டு முறை படித்து இருக்காங்க போல. நீங்க திரும்ப ஒரு முறை அந்த நினைவுகளில் மூழ்க நானும் ஒரு காரணம் எனும் போது எனக்கும் நிறைவு.

  @பிரகாஷ் நீங்க கட்டுரை படிக்காமலே பின்னூட்டம் போட்டுட்டீங்க போல. ரைட்டு விடுங்க.

  • Prakash April 1, 2015, 8:56 PM

   யார் பொன்னியின் செல்வனை பற்றி பேசினாலும் முதலில் யாத்ரீகன் பாருங்கள் என்று கூறி விடுவேன். அதான்……..

 • கிரி February 5, 2015, 8:38 PM

  @Sris

  இந்தக் கட்டுரை எழுத எனக்கு எவ்வளவு நேரம் ஆனது தெரியுமா? எத்தனை முறை பிழை திருத்தினேன் தெரியுமா? இந்தக் கட்டுரையில் ரசிக்க எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா? இந்நாவலைப் பற்றி கூற இது போல 100 கட்டுரைகள் எழுதும் அளவிற்கு விஷயம் இருப்பது தெரியுமா? ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் பற்றி எழுதினாலே சிறு புத்தகம் போடலாம் என்பது தெரியுமா?

  இதில் பின்னூட்டம் இட்டவர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறிய போது அதை கேட்க எவ்வளவு இன்பமாக இருந்தது தெரியுமா?

  ரசிக்க, தெரிந்து கொள்ள கண் முன்னே இவ்வளவு விஷயம் இருக்க.. தேடிப்போய் ஒரு வார்த்தையைப் படித்து விட்டு இது போல பேசும் உங்களை நான் என்ன செய்வது?!

  இங்கே ஒருத்தன் கஷ்டப்பட்டு இவ்வளவு எழுதி இருக்கிறேன் ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு ஒன்றுமில்லாத விசயத்திற்கு புகார் கூறிட்டு இருக்கீங்களே!

  அது அவருடைய கருத்து அதற்கு நான் என்ன செய்ய முடியும். நீங்கள் நினைப்பது போலவே ஒருவர் பின்னூட்டம் இட வேண்டும் கட்டுரை எழுத வேண்டும் என்றால் நீங்க மட்டுமே எழுதி நீங்களே பின்னூட்டம் போட்டுக்கொள்ள வேண்டியது தான். இதை அப்படியே விட்டு இருந்தால், ஒருவரும் கவனித்து இருக்க மாட்டார்கள். தேவையில்லாமல் நடுநிலை பேசுவதாகக் கூறி ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிது படுத்தி எழுதி இருக்கிறீர்கள், பகிர எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது.

  நீங்கள் கேட்ட கேள்விக்கு நீங்கள் கூறிய பதிலையே தருகிறேன்

  “எந்த ஒரு மனிதனும் தன்னை சுற்றி வாழும் அனைத்து மக்களையும் திருப்தி படுத்தி வாழ முடியாது.”

  இந்தக் கட்டுரையில் நான் இந்தப் புத்தகம் பற்றி தெரிந்து கொள்ள, படித்தவர்களின் அனுபவங்களைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். இதில் வந்து நியாயம் பேசுகிறேன் என்று திரை ரசிகர்கள் சண்டையை கொண்டு வந்து இந்தக் கட்டுரையை தயவு செய்து அசிங்கப்படுத்தி விடாதீர்கள்.

  வேறு ஏதாவது சரியான திரை தொடர்பான கட்டுரையில் உங்கள் விமர்சனத்தை வையுங்கள். நிச்சயம் விவாதம் செய்யலாம். இது இதற்கு பொருத்தமான இடம் அல்ல. பொன்னியின் செல்வன் பற்றி மட்டும் இங்கே பேசுங்கள்.

  புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

 • கிரி February 5, 2015, 8:41 PM

  @ஜானகி படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள். நிச்சயம் நாவல் உங்களை ஏமாற்றாது. என்ன தான் இதில் படித்தாலும் புத்தகத்தில் படிப்பது ஒரு தனி சுகம் தான்.

  @பிரகாஷ் பரிந்துரைக்கு நன்றி.

 • vasuhi February 6, 2015, 10:51 PM

  giri,
  நான் ஒரு தடவை தான் பொன்னியின் செல்வன் படித்துள்ளேன்.மீண்டும் படிக்க வேண்டும். அதற்குப் பின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு படித்தேன். மற்ற இரு நாவலும் பொன்னியின் செல்வன் அளவிற்கு இல்லை.

  இரு தடவை தான் இந்தியா போய் இருக்கிறேன். ஆனால் இரு தடவையும் தஞ்சை பெரிய கோயில் போனேன்.

  நீங்கள் சொல்வது சரி தான். இலங்கை அரசாங்கம் இலங்கையின் பௌத்த புராதன சின்னங்களை சிறப்பாக பராமரிக்கிறது.

 • vasuhi February 6, 2015, 10:51 PM

  giri,
  நான் ஒரு தடவை தான் பொன்னியின் செல்வன் படித்துள்ளேன்.மீண்டும் படிக்க வேண்டும். அதற்குப் பின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு படித்தேன். மற்ற இரு நாவலும் பொன்னியின் செல்வன் அளவிற்கு இல்லை.

  இரு தடவை தான் இந்தியா போய் இருக்கிறேன். ஆனால் இரு தடவையும் தஞ்சை பெரிய கோயில் போனேன்.

  நீங்கள் சொல்வது சரி தான். இலங்கை அரசாங்கம் இலங்கையின் பௌத்த புராதன சின்னங்களை சிறப்பாக பராமரிக்கிறது.

 • Mohamed Yasin February 7, 2015, 8:35 PM

  பொன்னியின் செல்வன் இதுவரை படிக்கவில்லை.. நிறைய புத்தகங்கள், கவிதை தொகுப்புகள், இந்திய வரலாறு, உலக வரலாறு, என இன்னும் பல ஆயிரம் புத்தகங்கள் வாசிக்க வேண்டி உள்ளது…

  தற்போதைய பணி சூழலில் இவைகள் எல்லாம் காணல் நீராக உள்ளது.. இந்த பதிவில் நிறைய நண்பர்கள் பின்னூட்டம் இட்டதை பார்க்கும் போது மகிழ்வை தருகிறது… பகிர்வுக்கு நன்றி கிரி..

  நேரம் இருப்பின் வைரமுத்துவின் தண்ணிர் தேசம் புத்தகத்தை வாசிக்க முயற்சி செய்யவும்..

 • Sivasailam.V February 10, 2015, 7:26 AM

  Giri…i have been trying to read this book for some time but technology taken precedence…let me fix some time for this…i am sure my father would have read this book multiple time….

 • 'நெல்லைத் தமிழன் February 10, 2015, 1:42 PM

  கல்கி அவர்கள் எழுதிய மூன்று வரலாற்று நாவல்களும் மிக அருமையானது. ஆனால், வாசகர் எண்ணத்தில் ‘பொன்னியின் செல்வன்’ மிகுந்த வரவேற்புப் பெற்றது. மற்ற இரு நாவல்களும் (பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்) துன்பியல் வகையைச் சேர்ந்தது. வெறும் டெக்ஸ்ட் ஆகப் படிப்பதைவிட யாராகிலும் படங்களுடன் உள்ள நாவலைத் தரவேற்றினால் நல்லது. விகடன் பிரசுரம் அழகானது ஆனால் 1000 ரூபாய் (ஒர்த் என்றபோதும்).

  நீங்கள் காலச்சக்கரம் நரசிம்மாவின் சங்கதாரா நாவலையும் படிக்கலாம். அது பொன்னியின் செல்வன் கதையை வேறு கோணத்தில் சொல்கிறது.

  ஆனாலும், கல்கியின் நடை, எல்லோரும் படிக்கக்கூடிய நடை (அதாவது இனக்கவர்ச்சியில்லாது, எல்லா வயதினரும் படிக்கும்படி மிகவும் பொறுப்பாக எழுதியுள்ளார்). அதனால்தான் அவர் நாவல் காலத்தை மீறி வாழ்கிறது, வாழும்.

  நீங்கள் ரசனையுடன் பகிர்ந்துகொண்டதுக்கு நன்றி.

 • கிரி February 12, 2015, 8:33 AM

  @வாசுகி தற்போது நான் “அசுரன்” என்ற இராவணனைப் பற்றிய புத்தகம் படித்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற புத்தகங்களை விரைவில் படிக்க வேண்டும்.

  @யாசின் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது நீங்கள் “பொன்னியின் செல்வன்” படிக்கவில்லை என்பது. ஏனென்றால் பல புத்தகங்களில் இருந்து நீங்கள் எனக்கு மேற்கோள் காட்டுவீர்கள். அதனால், நிச்சயம் படித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன். அவசியம் படியுங்கள். தண்ணீர் தேசம் ஊருக்கு வந்த பிறகு தான் படிக்க வேண்டும்.

  @சிவா டேய்! வாடா.. எப்படி இருக்கே! கண்டிப்பாக படி.

  நேரமில்லை என்று சொல்கிறவர்களுக்கு ஒரு யோசனை. இந்தப் புத்தகம் வாங்கி மூன்று அத்தியாயம் எப்படியாவது படித்து விடுங்கள். அதன் பிறகு தானாக நீங்களே நேரத்தை உருவாக்கிக் கொள்வீர்கள் 🙂 🙂

  @நெல்லைத் தமிழன் ஓவியங்களோடு படிக்க வேண்டும் என்ற ஆசையுள்ளது. அடுத்த முறை படிக்கும் போது ஓவியங்களோடு உள்ள புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

  நீங்கள் கூறிய புத்தகங்களை வாய்ப்புக் கிடைக்கும் போது படிக்க முயற்சிக்கிறேன். நன்றி

  “அதாவது இனக்கவர்ச்சியில்லாது, எல்லா வயதினரும் படிக்கும்படி மிகவும் பொறுப்பாக எழுதியுள்ளார்”

  உண்மை. அதோடு யாரையும் தாக்காமல் அனைவரையும் அவர்கள் கோணத்தில் நியாயமாகக் காட்டி சிறப்பாக எழுதி இருக்கிறார். உண்மையில் இது அற்புதமான புத்தகம் தான். சந்தேகமேயில்லை.

 • Ranga March 18, 2015, 9:34 PM

  மிக அருமையான பதிவு …. உண்மைதான் இந்த நாவல் படிக்கும் பொழது ஏற்படும் உணர்வு வாய் விடு சொலுவது எளிது அல்ல ..

  இந்த நாவல் படித்தால் மிக விரைவில் முடிந்து விடும் என்று இன்று வரை 5-ம் பாகத்தை தொடவில்லை அவ்ளோ ஆர்வம் 🙁 🙁

  ஒலி பதிவு இணைப்பு மிக அருமை

 • A.Ganesh May 26, 2015, 6:50 PM

  பொன்னியின் செல்வன் பற்றி திரு. வைகோ அவர்களுடைய பேச்சு you tube -ல் உள்ளது.அதில் அவர் கதாபத்திரங்களை மிக அருமையாக விவரித்திருபார்.இனி படிக்க ஆசை படுபவர்களுக்கு மிக உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்.

 • jeya saravanan May 27, 2015, 8:19 AM

  Giri,

  பொன்னியின் செல்வன் தொடர்ச்சியாக பாலகுமாறன் அவர்கள் எழுதிய உடையார் (6 பாகங்கள்) மற்றும் அதன் தொடர்ச்சியாக கங்கை கொண்ட சோழன் (4 பாகங்கள்) படியுங்கள் , இணையத்தளத்தில் கிடைக்கும்

 • kumar May 28, 2015, 4:32 PM

  இப்படி சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த ஒரு சமூகத்தின் இன்றைய நிலையை ஒப்பீடு செய்தால் கண்களில் இரத்தம் தான் வருகிறது. தமிழனின் சொத்தான வீரத்தையும், விவேகத்தையும் இழந்துவிட்டு நிற்கிறோம்.

 • govindarajan June 8, 2015, 11:13 AM

  பார்த்திபன் கனவு தான் first

 • பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்கத் தூண்டிய உங்களுக்கு நன்றி கிரி. அருமையான நாவல், இந்நாவலைப் படிப்பதற்கு முன்பு HBO சேனலில் தொடராக வந்த Game of Throne- சீரியலைப் பார்த்துக் கொண்டிடுந்தேன், அந்தத் தொடர் ஏற்படுத்திய அதே பரபரப்பும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்நாவல் உண்டாக்கியது. முதலில் இந்நாவலின் நீளம் சற்று மிரள வைத்தது பிறகு படிக்கப், படிக்க இன்னும் கொஞ்சம் கதை நீண்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது .
  பொன்னியின் செல்வன் நாவலின் முடிவிற்குப் பிறகு அதைக் தொடர்ந்து நடக்கும் கதையாக விக்கிரமன் அவர்களின் நந்திபுரத்து நாயகி எனும் நாவல் உள்ளது, பொன்னியின் செல்வன் நாவலுடன் ஒப்பிட முடியாது என்றாலும் அதே கத பாத்திரங்களைக் காண முடிவது மகிழ்ச்சி. கிரி தாங்கள் நத்திபுரத்து நாயகி நாவலைப் படித்திருக்காவிட்டால் கண்டிப்பாகப் படிக்கவும்.

 • gunasekaran October 20, 2015, 6:21 AM

  நான் குறைந்தது 10 முறையாவது படித்திருப்பேன் . எனது வேலை காரணமாக நெடு நாள் பயணத்தில் இது தான் பொழுது போக்கு . pdf கிடைத்தது மிகவும் வசதி . நந்தினி எனக்கு பிடித்த பாத்திரம். புரிந்து கொள்ள முடியாத ஒரு வித மான வில்லி. ஒரு பெண் அளவுக்கு அதிகமாக பாதிக்க பட்டு பழி வாங்க நினத்தால் இப்படிதான் இருப்பாள்.

  என் முதல் பெண் குழந்தைக்கு அதனால் தான் நந்தினி என்று பெயர் வைத்தேன் . நான் பல முறை பெயர் காரணம் கேட்டு , நான் சொல்லியும் புரிய வைத்தேன் . அவள் கேட்பாள்..ஆனல் ..படிக்க மாட்டேன் என்கிறாள். படிக்க வில்லை என்றால் அவள் ஒரு கால போகிசத்தை மிஸ் பண்ணுறாள். என்றாவது படிப்பாள் என்ற நம்பிக்கையுடன் புத்தகம் வீட்டில் உள்ளது.

  தற்போது நம்பிக்கையும், புத்தகமும் என்னிடம்..

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz