தமிழ்

Tamil Languageமக்குப் பிடித்ததை விருப்பமாகச் செய்யும் போது அதில் மேலும் மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, அது நாம் பணி புரியும் அலுவலக வேலையாக இருந்தாலும், இது போல எழுதுவதாக இருந்தாலும்.

ஒரு ஆர்வக் கோளாறில் எழுத வந்து இருந்தாலும், தொடர்ந்து அதையே விருப்பமாக எழுதும் போது தாறுமாறான அனுபவம் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எழுதிக்கொண்டு இருக்கும் ஒவ்வொருவரும் அனுபவப்பூர்வமாக இதை உணர்ந்து இருக்க முடியும். Image Credit – covry.com

தமிழார்வம்

துவக்கத்தில் (2006) எழுத ஆரம்பித்த போது எதையாவது எழுதணும், பகிர வேண்டும் என்று தோன்றியதே தவிர, இது போல தொடர்ச்சியாக பல ஆண்டுகள் எழுதுவேன் என்று நிச்சயம் நினைத்தது இல்லை.

நான் தமிழ் வழியில் படித்ததால் இயல்பாகவே தமிழ் மீது இருந்த ஆர்வம் ஒரு காரணமாக இருக்கலாம். 2006 ல் இருந்து தற்போது வரை எவ்வளவு மாற்றங்கள் என்னிடையே நடந்து இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ ஒவ்வொரு இடுகை (Post) எழுதும் போதும், ஒவ்வொரு பின்னூட்டம் (comment) வரும் போதும் நான் புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

இதை செய்யக் கூடாது, இதை திருத்திக் கொள்ளனும், இதை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.

நான் முதன் முதலில் எழுதத் துவங்கிய போது செய்திகள் உட்பட அனைத்தையும் ஒரு இடுகையாக எழுதிக்கொண்டு இருந்தேன். பின்னர் செய்திகள் எழுத ஊடகங்கள் இருக்கின்றன, நாம் நம்முடைய கருத்தைத் தான் எழுத வேண்டும் என்று தோன்றியது.

விமர்சனங்கள் & சுதந்திரம்

பின்னர் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை அதாவது, இவன் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மன நிலை, பின் இது மாறியது. எழுத வேண்டிய கட்டுரைகளில், சும்மா அனைத்தையும் கருத்து கந்தசாமி மாதிரி எழுதிக்கொண்டு இருக்கக் கூடாது என்று தோன்றியது.

இது ஒரு வகையில் நமக்கு நெருக்கடியைத் தருகிறது. நாம் நடுநிலையாக!!! இருக்கிறோம் என்பதை நிரூபிக்க அனைத்தையும் எழுதி பலரை சுத்தலில் விட வேண்டியதாக இருக்கிறது.

இதன் காரணமாக படிப்பவர்கள் “நீங்கள் அதை எழுதினீர்கள்.. இது பற்றி எழுதவில்லையே!” என்று கேள்வி கேட்டு நமக்கு ஒரு நெருக்கடியைத் தந்து விடுகிறார்கள். இதன் காரணமாக சுதந்திரம் போய் விடுகிறது.

இதில் இருந்து விடுபட எனக்குச் சிரமமாக இருந்தது ஆனால், அதில் இருந்து வெளியே வந்து விட்டேன். தற்போது மனதிற்கு தோன்றுவதை எந்த நெருக்கடியும் இல்லாமல் எழுத முடிகிறது.

இன்னமும் சிலர் எதிர்பார்க்கிறார்கள் ஆனால், வெளிப்படையாக நெருக்கடி தருவதில்லை. நடுநிலை என்ற ஒன்றே கிடையாது எனும் போது நடுநிலையாக எழுதுவதாக நினைத்து அனைத்தையும் எழுதி மேலும் சிக்கலையே ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

நெருக்கடி

மாதத்தில் 30 இடுகைகள் எழுதிக்கொண்டு இருந்த நான், மாதம் பத்து இடுகைகளுக்கு மேல் எழுதக் கூடாது என்று முடிவு செய்த பிறகு எழுதுவதில் எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது.

ஏனென்றால், சில நேரங்களில் எழுதியே ஆக வேண்டுமே என்ற நெருக்கடி காரணமாக திருப்தி இல்லாமல் அன்று எழுதி இருக்கிறேன் ஆனால், தற்போது எழுதும் ஒவ்வொரு இடுகையும் என் விருப்பம் என்பதால் திருப்தியாக உணருகிறேன்.

கடமைக்கு எழுத வேண்டிய அவசியமில்லை / கட்டாயமில்லை.

பிழை திருத்தம்

இதையெல்லாம் முடித்த பிறகு என்னவென்று யோசித்தால், எழுத்துப் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்பது. முன்பு, எழுதியவுடன் அப்படியே வெளியிட்டு விடுவேன். பின் பலமுறை படித்து திருத்தங்கள் செய்த பிறகு வெளியிட ஆரம்பித்தேன்.

இதைச் செய்யும் போது எதிர்பாராத இன்னொரு அனுபவம் கிடைத்தது.

ஒவ்வொரு முறை பிழைத் திருத்தம் செய்யும் போதும் நான் எழுதிய கருத்திலும் எனக்கு மாற்றம் தெரிந்தது. இன்று எழுதியதை அடுத்த நாள் படித்தால், எழுதியதில் சில வார்த்தைகள், சில வரிகளே தேவையில்லை என்று தோன்றியது.

சில நேரங்களில் ஒரு முழுப் பாராவையே நீக்கி இருக்கிறேன். திரும்பத் திரும்ப எழுதியதைப் படித்துத் திருத்தும் போது அது இன்னும் சிறப்பாக வருவதாகத் தோன்றியது.

இந்த சமயத்தில் நண்பர் ஸ்ரீநிவாசன் பாலஹனுமன் தளத்தில் சுஜாதா எழுதிய கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில் சுஜாதா அவர்கள், நாம் எழுதியதை பலமுறை படிப்பதன் மூலம் நாம் எழுதுவதை இன்னும் சிறப்பாகக் கொடுக்கலாம்.

திரும்பத் திரும்பப் படிக்கும் போது அதில் பல திருத்தங்கள் தோன்றும், அது நம் எழுத்தை இன்னும் மேம்படுத்தும் என்று கூறி இருந்தார்.

இது அப்படியே என் மனதில் பதிந்து விட்டது. இவர் கூறியதை நான் தெரியாமலே முன்பே பின்பற்றி வந்து இருந்தாலும், அனுபவம் பெற்ற சுஜாதா அவர்களே கூறி இருப்பதால், இது இன்னும் முக்கியத்துவம் பெற்றது.

எழுதுவதில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அறிவுரையாக இதை நினைக்கிறேன்.

சிறப்புக் குறியீடுகள்

அதன் பிறகு ஒரு கட்டுரையில் நண்பர் முத்து, கிரி! நீங்க குறிப்பிடும் “!” “,” “.” போன்றவை சரியான இடத்தில் இல்லை. பல இடங்களில் “,” (கமா) வே இல்லை, நீண்ட வாக்கியமாக இருப்பதை சரி செய்யுங்கள் என்று கூறி இருந்தார்.

இதை முடிந்தவரை தற்போது சரி செய்து இருக்கிறேன் ஆனாலும், சில இடங்களில் தவறு நேர்கிறது. இது குறித்த சரியான புரிதல் இல்லாததே காரணம். இது பற்றி எங்காவது படித்து இதை முழுவதுமாக சரி செய்ய வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

ஆங்கிலக் கலப்பு

அடுத்தது ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றியது. இது எனக்கு ரொம்பச் சிரமமாக இருக்கவில்லை. விரைவிலேயே இந்தத் தவறை சரி செய்து விட்டேன்.

ஒரு சில ஆங்கில வார்த்தைகள் முழுவதும் நம்மில் கலந்து விட்டதால், ஆங்கிலத்தைத் தவிர்க்க முடியாது. காரணம், அதை தமிழில் கூறும் போது அதன் முழு உணர்வு கிடைப்பதில்லை.

சுருக்கமாக “செம்ம காமெடி மச்சி” என்பதற்கும் “செம்ம நகைச்சுவை மச்சி” என்று சொல்வதற்கும் உள்ள வித்யாசம் ஆனால், என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து வருகிறேன்.

இது சிரமமாகவே இல்லை ஆனால், பலரும் ஆங்கிலச் சொற்களையே அதிகம்  பயன்படுத்தி வருவது வருத்தம் அளிக்கிறது. இந்தக் கட்டுரையில் உதாரணமாக கூறப்பட்ட வார்த்தையைத் தவிர எந்த ஆங்கிலக் கலப்பும் இல்லை.

கஜினி முகமது போல பலமுறை முயற்சித்தாலும், என்னால் ஆங்கிலக்கலப்பு இல்லாமல் பேச முடியவில்லை. என்னுடைய கட்டுப்பாடு நான்கு நாட்கள் கூட தாக்குப் பிடிப்பதில்லை.

இவ்வளவுக்கும் நான் சுத்தத்தமிழ் அல்லாமல் பேச்சுத் தமிழ் தான் முயற்சிக்கிறேன் ஆனால், அதிலேயே தொடர்ந்து தோல்வியே கிடைக்கிறது.

எழுதுவதில் முயற்சி செய்து வெற்றி பெற முடிந்த என்னால், பேசுவதில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருவது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கிறது 🙁 .

சந்திப் பிழை

எழுத்துப் பிழை, சிறப்புக் குறியீடு போன்றவற்றை ஓரளவு சரி செய்த பிறகு அடுத்தது என்ன? என்று மனம் நினைத்தது. அடுத்து வந்தது தான் “சந்திப் பிழை”. அதாவது “க் ப் ச் த்” போன்றவை. இதற்குத் தான் நான் அதிகம் திணறி விட்டேன்.

இது பற்றியே சுத்தமாக அக்கறை இல்லாமல் இது வரை இருந்ததால், துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதாக இருந்தது. எழுதும் போது ரொம்ப ரொம்ப சிரமமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அடப்போங்கய்யா! சந்திப்பிழை இருந்தால், இருந்துட்டு போகட்டும் என்று நினைத்தேன் ஆனாலும், இன்னொரு மனம் அதை விடுவதாக இல்லை.

பின் விடா முயற்சியாக, பிடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இதை செய்து கொண்டு இருந்தேன். பின் சமீபமாக எளிதாகி விட்டது 🙂 .

தற்போது சந்திப்பிழைகளோடு இருப்பதைப் படிக்கவே கடுப்பாக இருக்கிறது என்ற அளவிற்கு என் மனநிலை மாறி விட்டது என்று கூறினால், நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும்.

தற்போதெல்லாம் எழுதும் போதே சந்திப் பிழை இல்லாமல் எழுதப் பழகிக் கொண்டேன். அதன் பிறகு பிழைத் திருத்தம் செய்யும் போது இன்னும் உள்ள சில தவறுகளைச் சரி செய்து கொள்கிறேன்.

100% சரியாக எழுத முடியவில்லை என்றாலும் நிச்சயம் 90% சரியாக எழுதுவதாகத் தான் நினைக்கிறேன்.

நண்பர்கள் சிலர் எழுத்துப் பிழை இருந்தால், தனி மின்னஞ்சலில் கூறுவார்கள். இதை நான், அட! ஒரு தவறைக் கூட இப்படி மின்னஞ்சல் அனுப்பிக் கூறுகிறார்களே! என்று முதலில் நினைத்தேன்.

ஆனால், பின்னர் அந்த ஒரு தவறையும் என்னுடைய தளத்தில் பார்க்க விரும்பாத நல்ல எண்ணத்தில் தான் இதைக் கூறுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

புதிய படங்களின் திரை விமர்சனங்கள் எழுதும் போது மட்டும் எழுத்துப் பிழைகளை சரி பார்க்க நேரம் இருக்காது. ஏனென்றால், உடனடியாக வெளியிட வேண்டும் என்ற நெருக்கடி காரணமாக.

தற்போது என்னுடைய அடுத்த திட்டம் என்னவென்றால், இது நாள் வரை இடுகைகளில் பார்த்துப் பார்த்து எழுதினாலும், பின்னூட்டம் எழுதும் போது இந்தத் தவறுகளை அதிகம் கவனத்தில் கொண்டதில்லை.

இனி பின்னூட்டத்திலும் மேற்கூறியவற்றை பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

மேற்கூறியவை என்னுடைய சுய புராணத்தைக் கூற எழுதப்பட்டதில்லை. என்னுடைய தளத்தைத் தொடர்ந்து படிப்பவராக இருந்தால், அது போல நான் எழுதுவதில்லை என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.

தமிழ் என்ற அழகான மொழி

தமிழ் ஒரு அழகான மொழி. அதை நாம் சரியாகப் பயன்படுத்தினால் அதன் அழகு மேலும் கூடும் அதோடு, இது தான் நாம் தமிழுக்குச் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும்.

முக்கியமாக நம் தளத்தைப் படிப்பவர்கள் எதை எழுதினாலும் படிப்பார்கள் என்று எண்ணத்தில் எழுதாமல், படிப்பவர்களுக்கும் ஒரு நல்ல தமிழ் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே இந்தக் கட்டுரையை எழுதினேன்.

பிழைத் திருத்தம் 

இதையெல்லாம் செய்ய கொஞ்ச முயற்சி மட்டுமே தேவை. இது ஒன்றும் சிரமமான விசயம் இல்லை என்பதை, இதை நீங்கள் படித்த பிறகு உணர்ந்து இருப்பீர்கள்.

எனவே, எழுதியதை பல முறை படித்துத் திருத்தம் செய்த பிறகு வெளியிடுங்கள், இது ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களுக்கும் பொருந்தும்.

துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போக இது போல செய்யாமல் உங்களால் வெளியிடவே முடியாது என்ற நிலைக்கு உங்கள் மனம் வந்து விடும். இது நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்த உண்மை.

தமிழ் என்ற தலைப்பு

நீங்கள் ஒன்றை கவனித்து இருக்கலாம், இந்தக் கட்டுரைக்கு ஏற்ற முழுமையான தலைப்பாக இல்லையே! இந்தத் தவறுகளை சுட்டிக் காட்டுவது போல தலைப்பு வைத்தால் இன்னும் பலரைக் கவர்ந்து இருக்குமே! என்று.

உண்மை தான்! நான் கவர்ச்சியான தலைப்பு வைத்து இருந்தால், இன்னும் பலரைச் சென்று அடைந்து இருக்கும். தற்போது என்ன எழுதினாலும் தலைப்புத் தான் முக்கியத்துவம் பெறுகிறது.

என்ன தான் சிறப்பாக எழுதி இருந்தாலும், தலைப்பு கவர்ந்து இழுக்கும்படி இல்லையென்றால், பலரைச் சென்றடையாது. எனவே தலைப்பு மிக முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பின்னர் ஏன் நான் தமிழ் என்று வைத்து இருக்கிறேன் என்றால், நண்பர் அப்துல் பசித் ஒருமுறை இணையத்தில் தமிழ் பற்றித் தேடினால் ஆபாசங்கள் தான் முன்னணியில் இருக்கிறது.

இதை மாற்ற தமிழ் என்று துவங்கும் படி தலைப்பு வைத்து எழுதி, கூகுள் தேடலில் நல்ல செய்திகள் தமிழ் பற்றி வர உதவுங்கள் என்று கூறி இருந்தார்.

தமிழ் என்று துவங்கும்படி தலைப்பு வைத்தேன் ஆனால், அது அவ்வளவாக பயன் தரவில்லை. எனவே தான் இந்த “தமிழ்” மட்டுமே முயற்சி. இந்தக் கட்டுரை கூகுள் தேடலில் முகப்பில் வருமா?! என்று தெரியவில்லை ஆனால், என்னுடைய திருப்திக்காக இதை செய்து விட்டேன்.

தலைப்பை விட தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்கள் இதை இன்னும் பலருக்கு கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பிற்சேர்க்கை

எழுத்து மற்றும் சந்திப்பிழைகளை சரி செய்ய இந்த சுட்டிக்கு செல்லுங்கள். சிறப்பாக பிழை திருத்திக் கொடுக்கிறது. தகவல் நன்றி ஜோதிஜி. http://dev.neechalkaran.com/p/naavi.html

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகள்

தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

எழுத்தாளர் “சுஜாதா” தரும் எழுத்து ஆலோசனைகள்

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

{ 9 comments… add one }
 • Vijay January 20, 2015, 9:43 AM

  வணக்கம் கில்லாடி, உங்களிடம் தான் தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது…. மற்றவர்களிடம் வாய்ப்பு உருவாக்கிகொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன் 🙂
  தொடரட்டும் உங்களது எழுத்துப்பணி.

 • சதீஷ் முருகன் January 20, 2015, 12:03 PM

  அருமையான கட்டுரை. தமிழில் நாம் தேட முயற்சிக்கும் போதே ஆபாசம் தான் முன் வந்து நிற்கிறது. நானும் நினைக்கிறேன் இதை நாம் எப்படி மாற்றுவது என்று. கூகுள் ஒரு தானியங்கியாக இருந்தாலும் நிரலில் சில தமிழ் வார்த்தைகளை Index இல் (தமிழில் தெரியலப்பா 🙁 ) தவிர்க்குமாறு அவர்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று நினைக்கிறேன். என்னென்ன வார்த்தைகள் என்பதை கோர்க்க வேண்டும் – பார்க்கலாம்.

  விஜய், நாம தமிழிலேயே பேசலாமே… 😀

 • Mohamed Yasin January 20, 2015, 2:05 PM

  கிரி…தமிழில் இலக்கணங்கள் பற்றி எனக்கு மிக குறைவாக தான் தெரியும்… அகநானூறு, புறநானூறு இவைகளை அதிகம் படிக்கவில்லை… ஆனால் என் தாய் மொழியை போல இனிமையான மொழி உலகில் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை…

  தமிழ் வழியில் படித்ததால் தமிழ் மீது இயல்பான காதல் எப்போதும் உண்டு… உங்கள் உரைநடை நன்றாக பிழையில்லாமல் அழகாக இருக்கிறது …

  இவ்வளவு அழகாக திருமண பெண்ணை வேறு மொழியில் வர்ணிக்க முடியுமானு சாத்தியமா தெரியவில்லை கிரி…
  ====================================l
  அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
  அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
  ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி…
  அன்னமிவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி……

 • Prakash January 20, 2015, 10:20 PM

  நம்ம மொழி செம்மொழி.
  #அம்மா மூன்றெழுத்து
  #அப்பா மூன்றெழுத்து
  #தம்பி மூன்றெழுத்து
  #அக்கா மூன்றெழுத்து
  #தங்கை மூன்றெழுத்து
  #மகன் மூன்றெழுத்து
  #மகள் மூன்றெழுத்து
  #காதலி மூன்றெழுத்து
  #மனைவி மூன்றெழுத்து
  #தாத்தா மூன்றெழுத்து
  #பாட்டி மூன்றெழுத்து
  இவையனைத்தும் அடங்கிய
  #உறவு மூன்றெழுத்து
  உறவில் மேம்படும்
  # பாசம் மூன்றெழுத்து
  பாசத்தில் விளையும்
  #அன்பு மூன்றெழுத்து
  அன்பில் வழியும்
  #காதல் மூன்றெழுத்து
  காதலில் வரும்
  #வெற்றி மூன்றெழுத்து
  #தோல்வி யும் மூன்றெழுத்து
  காதல் தரும் வலியால்வரும்
  #வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும்
  #சாதல் மூன்றெழுத்து
  சாதலில் பறிபோகும்
  #உயிர் மூன்றெழுத்து..
  இது நான் எழுதிய
  #கவிதை என்றால் மூன்றெழுத்து..
  இது
  #அருமை என்றால் அதுவும்
  மூன்றெழுத்து
  #மொக்கை என்றால் அதுவும்
  மூன்றெழுத்தே..
  #நட்பு என்ற மூன்றெழுத்தால்
  இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என்
  #நன்றி ..
  #நன்றி யும் மூன்றெழுத்தே …!
  #மூன்று ம்
  மூன்றெழுத்தே……..!!!
  #இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து…!!

 • Arun Govindan January 21, 2015, 6:40 AM

  தலைப்பு செம ஐடியா தல…
  பதிவு உங்கள மாதிரியே அழகா இருக்கு

  சுஜாதா அவர்களின் advice கலக்கல் ரகம்

  பாலஹனுமன் சார் தளத்தின் link கு நன்றி

  Prakash அட்டகாசம் சார் உங்க பதில்

  – அருண் கோவிந்தன்

 • ஜோதிஜி January 21, 2015, 7:14 AM

  முகமது யாசின் மிக்க நன்றி. இது போல பல பாடல்களை படித்து பலமுறை நானும் வியந்து போயுள்ளேன். தமிழ் மொழி குறித்து அதன் வளர்ச்சி, வீழ்ச்சி, எதார்த்தம் போன்றவற்றை கடந்த நாலைந்து வருடங்களாக எழுத முயற்சித்து பல வற்றை பழைய புத்தகங்களை வாசித்த போது எனக்குள் தோன்றியது ஒன்றே ஒன்று தான். எத்தனை இழப்புகளைத்தாண்டி இன்னமும் இந்த மொழி இங்கே உயிர்ப்புடன் இருப்பதே ஆச்சரியம். நவீன தொழில் நுட்பத்தில் காசுக்காக இன்று கணினி மொழியாக மாறாமல் இருக்கும் பட்சத்தில் இப்போதைய தமிழ்நாட்டுச் சூழலில் நிச்சயம் குற்றுயிரும் கொலையிருமாக போயிருக்கக்கூடும்.

  கிரி அதிகாலை வேலையில் தமிழ் என்ற வார்த்தையைப் பார்த்தவுடன் ஏதோ வித்தியாசமான ஒன்றைப் பற்றி எழுதியிருப்பீங்கன்னு நினைத்து இன்று மின் அஞ்சல் வாயிலாக உங்கள் தளத்தில் உள்ளே வந்தேன்.

  சிலவிசயங்கள்

  நீங்க இணைப்பு கொடுத்துள்ள இணைப்பு அனைத்தும் அந்த தளத்தை அறிமுகம் செய்து வைக்கின்றது. குறிப்பாக நீங்க எதைச் சுட்டிக்காட்டியிருக்கீங்களோ அதை படிக்க நினைத்து எனக்கு ஏமாற்றமே?

  அப்புறம் நீங்க அவசியம் உங்க புத்தக வாசிப்பை (காரணம் ஏதும் சொல்லாமல்) அதிகப்படுத்துங்க. இணைய தள பயன்பாட்டை குறைத்துக் கொண்டாவது.

  அல்லது இணைய தளங்களில் உள்ள சிறப்பான கட்டுரைகளை நேரம் ஒதுக்கி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்க. வாசிக்கும் போது தான் எழுத்துப் பயிற்சியின் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். சுஜாதா வாசிப்புப் பற்றி அவர் பயணத்தின் போது வாசிப்பது பற்றி எழுதியுள்ளதை இப்போது என்னால் நினைத்துப் பார்க்க முடிகின்றது. அந்த அளவுக்கு அவர் வாசித்த காரணத்தால் மட்டுமே மனுசன் புகுந்து விளையாட முடிந்துள்ளது.

  பிழையை சரி செய்ய உதவும் சுட்டி – http://dev.neechalkaran.com/p/naavi.html

  • Mohamed Yasin January 21, 2015, 2:50 PM

   ஜோதிஜி.. உங்கள் ஆதங்கம் முற்றிலும் உண்மையே… நீங்க கொடுத்த சுட்டி நன்றாக வேலை செய்கிறது.. எங்கள் பிழைகளைத் தெரிந்து சரி செய்து கொள்ள நிச்சயம் பயனளிக்கும்.. நன்றி..

 • Senthil January 21, 2015, 12:26 PM

  அருமையான பதிவு கிரி சார்..
  நானும் தமிழ்-ல எழுத முயற்ச்சி பண்ணப் போறேன் …
  உங்க தலைப்பின் ஐடியா செம..

 • கிரி February 3, 2015, 7:29 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி.

  @ஜோதிஜி நீங்கள் கொடுத்த சுட்டி சிறப்பு. இதை அனைவரும் பயன்படுத்தினாலே பிழையில்லாமல் கட்டுரைகளைக் கொடுக்கலாம்.

  தற்போது தான் பொன்னியின் செல்வன் படித்து முடித்தேன்.

  சுஜாதா பற்றிய சுட்டியைத் தான் நான் கீழே கொடுத்து இருந்தேனே ஜோதிஜி. அவருடைய தளத்தில் பல காலம் முன்பு பார்த்தது எனவே எந்தக் கட்டுரை என்ற நினைவில்லை.

  http://www.giriblog.com/2012/12/writer-sujatha-suggestion.html

Leave a Comment