திகிலாக்கும் டிசிஎஸ் ஆட்குறைப்பு

motivation-never giveup

டி சி எஸ் ஆட்குறைப்புத் தான் தற்போது தொழில்நுட்பத் துறையினரிடையே விவாதத்துக்குரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நண்பர்கள் சந்தித்தால், இது பற்றிய பேச்சே அதிகம் பேசப்படுகிறது. நம் நிலை என்ன ஆகும்?

மற்ற நிறுவனங்களிலும் இது போல செய்யப்போகிறார்களாமே! நமக்கு இது போல நிலை என்றால் அடுத்தது என்ன செய்வது? இது போன்ற பல கேள்விகள் அனைவரிடையே சுற்றிக்கொண்டு இருக்கிறது. Image Credit – steamboatfriday.com

தற்போது ஆட்குறைப்பு பிரச்சனை முக்கியத்துவம் பெற பல முக்கியக் காரணங்கள் உள்ளது.

டி சி எஸ், அரசு நிறுவனம் போலத் தான் பலரால் பார்க்கப்பட்டது அதாவது இங்கே வேலைக்குச் சேர்ந்தால் கடைசி வரை இங்கே இருக்க முடியும், வேலையை விட்டு தூக்க மாட்டார்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

அது உண்மையும் கூட ஆனால், அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் மற்ற நிறுவனங்கள் எல்லாம் அதிகபட்சம் 5000 வரையே ஆட்குறைப்பு செய்து இருக்க, இவர்களோ ஆரம்பமே 25000+ பேரை ஆட்குறைப்பு செய்கிறார்கள் (ஒரே சமயத்தில் அல்ல).

இதில் ஆட்குறைப்பு செய்தது கூட தற்போது முக்கியப் பிரச்சனை இல்லை ஆனால், தூக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 35+ வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது தான் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது.

ஆட்குறைப்பு என்பது 2001 ல் இருந்து நடந்து வருகிறது 2009 ல் திரும்ப பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இதெல்லாம் அனைத்துப் பிரிவிலும் நடந்தது அதுவும் வெளிநாடுகளில் மட்டுமே அதிகம் நடந்தது, இந்தியாவில் பெரியளவில் பாதிப்பில்லை.

இந்தியாவில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அளவு ஆட்குறைப்பு என்றால் கடந்த வருடம் ஐ பி எம் செய்த 5000 ஊழியர்கள் ஆட்குறைப்பு.

இது வரை நடந்த ஆட்குறைப்பு அனைத்துமே அனைத்துப் பணியாளர்களையும் உள்ளடக்கியது ஆனால், தற்போது டி சி எஸ் கை வைத்து இருப்பது 35+ வயதிற்கு மேற்பட்டவர்கள் மீது என்பது தான் பலரின் எதிர்காலத்தை திகிலாக்கி இருக்கிறது.

வயது ஆகும் போது அனுபவம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் பொதுவானது அதோடு சிறு வயதில் இருக்கும் துடிப்பு, வேகம், புதிய சிந்தனை, தைரியமான முயற்சிகள் போன்றவை குறைந்து விடும் என்பதும் நடைமுறை உண்மை.

அனுபவம் கூடும் போது ஒரு பணியை எப்படி எப்படி செய்யலாம், சமாளிக்கலாம், ஏமாற்றலாம் என்பதும் அத்துப்படி ஆகி விடும். மற்றவர்கள் கேள்வி கேட்கும் போது மூத்தவர் என்ற அடிப்படையில் குரல் உயர்ந்து இருக்கும்.

எனவே, மற்றவர்கள் கூறுவது சரியாகவே இருந்தாலும் இவர்களிடம் எடுபடாது, பேசியும் ஜெயிக்க முடியாது. இந்த வயதில் ஒரு பொறுப்பான பதவிக்கு வந்து அமர்ந்து விட வேண்டும் என்று தாறுமாறான “அரசியல்” செய்யத் துவங்கி விடுவார்கள்.

அதிலும் இந்தியர்கள் அலுவலக அரசியலில் மிக மோசம். சிறு வயதிலேயே சக்கைப் போடு போடுவார்கள், அனுபவம் பெறும் போது அரசியல் உச்சத்தில் இருக்கும்.

வயது அதிகமாகும் போது இவர்களுக்கான சம்பளமும் அதிகரிக்கிறது அதோடு இவர்களை மிரட்டிப் பேசுவதும், ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்துவதும் கை மீறிப் போய் விடுகிறது. எனவே சீனியர் என்ற மரியாதைக்காக பலர் இவர்கள் செய்வதை பொறுத்துக் கொள்கிறார்கள்.

இது அனைவருக்கும் பொருந்தாது என்றாலும் பெரும்பாலும் இது தான் நடக்கிறது.

ஒரு சிலர், நிறுவனமே தன்னுடையது தான் என்பது போல நடப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

சம்பளத்தையும் அதிகம் கொடுத்து, வேலையும் சிறு வயதினர் போல வேகம் துடிப்பு இல்லாததால், இவர்கள் எல்லாம் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, லாபத்திற்கு தடைக் கற்களாக தெரிகிறார்கள்.

இது தான் தற்போதைய ஆட்குறைப்பிற்கு முக்கியக் காரணம். மூத்த ஊழியர் ஒருவருக்கு கொடுக்கும் ஊதியத்தில் இரண்டு / மூன்று பேரை எடுக்க முடியும், வேலையும் இன்னும் சுறுசுறுப்பாக நடக்கும் என்பது தான் நிறுவனங்களின் எண்ணம்.

சமீபத்தில் மாலை மலரில் இது குறித்த கட்டுரைக்கு இருவர் எழுதியிருந்த பின்னூட்டங்கள் சிந்திக்க வைத்தது.

பின்னூட்டம் 1

இது IT கம்பனிகளுக்கு மட்டும் பொருத்தம் அல்ல. சுமார் 20 வருடங்களுக்கு முன்னாலேயே இந்த மாதிரி செயல் பாடுகள் வரத்தொடங்கி விட்டன. (நானே எனது 40 வயதில் பலி ஆனேன்) இவை எல்லாம் H R management என்னும் ஒரு புது கோட்பாடு.

உதாரணமாக உங்கள் வீட்டில் ஒரு மாது வெகு காலமாக வீட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறார்.

அவருக்கு வயது ஆகி முதுமையால் அவருடைய efficiency குறைந்து கொண்டு வருகிறது. ஆனாலும் நீங்கள் போனால் போகட்டும் என்று அவருடைய பணிகளின் தரத்தின் குறைகளை கண்டு கொள்ளாமல் இருக்குறீர்கள்.

காரணம் நமது வீட்டில் இவ்வளவு காலம் வேலை செய்து கொண்டு இருக்கிறார் மற்றும் அவருக்கு வயது ஆகிவிட்டதால் இவ்வாறு இருக்கிறார். அவர் வேலைக்கு சேர்ந்த பொழுது எவ்வளவு சுறுசுறுப்போடு இருந்தார் என்று நினைவில் கொண்டு அவருக்கு மாத சம்பளம் வழங்குகிறேர்கள்.

அவரே தாம் வேலையை விட்டு நிற்கிறேன் என்று சொல்லும் வரையில் நீங்கள் காத்து இருக்கீறீர்கள். ஆனால் இப்போது அதைப்போல எண்ணம் இல்லை. ஆளை வேலைக்கு வை. நிறைய சம்பளம் கொடு. கரும்பு சக்கை போல பிழி.

பிறகு என்ன குப்பைத்தொட்டியில் போடு. அதாவது ஒரு ஊழியர் சுமார் அவரது 40 வயதை எட்டும் பொது அவருடைய திறன் குறைகிறது. ஆனால் அவர் சர்வீஸ் காரணமாக சம்பளம் மிக அதிகம்.

இதை லாப நட்ட கணக்கு பார்த்து பைசல் பண்ணி விடுகிறார்கள். இது இன்றைய நடை முறை. இதே முறையை அரசுடமையாக்கப் பட்ட வங்கிகள் செய்ய ஆரம்பித்தால் சுமார் 60% வேலை அம்போ.

நாளுக்கு நாள் மாற்றங்கள் வரும் போது இவையெல்லாம் சகஜம். அனாவசியமாக செலவு செய்யாமல் ஓரளவு சேமித்து இருந்தால் தப்பிக்கலாம். இதில் யாரையும் குறை கூற முடியாது.

(பின் குறிப்பு : நான் எவ்வளவு கரடியாக கத்தினாலும் என் மகன் சேமிப்பதாக இல்லை. என்னிக்கு என்ன நடக்கபோகுதோ என்று தினமும் நடுங்கிக்கொண்டு இருக்கிறேன்)

பின்னூட்டம் 2

IT யில் வேலை என்பது ஒரு குமாஸ்தா , ஓட்டுனர் நடத்துனர் வேலைக்குச் சமம். ஒரே வேலை பார்க்கும் நடத்துனர், ரிடையர் ஆகும்போது வாங்கும் சம்பளம், அதே வேலையில் சேர்ந்த புதிய இளைஞரை விட மிக அதிகம்.

லாப நோக்கில் செயல்படுவோமானால், 10 வருடம் வேலை செய்தவரை அனுப்பிவிட்டு இளைஞரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். இந்த விதத்தில்தான் IT கமபனிகள் செயல் படுகின்றன. மேலும், 5/7 வருடத்தில் தொழில் நுட்பம் மாறுகிறது.

அதற்கு இளைஞர்களை உபயோகப்படுத்தி 10 வருடக் காரரை வெளியேற்றுகிறது. இந்தத் தொழிலுக்கு அனுபவம் முக்கியமல்ல. அதனால் 35,000 புதியவர்களை எடுத்துக் கொண்டு, 35000 பழையவர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

1991ல் IT ஆரம்பித்தபோதே இதை எதிர்பார்த்ததுதான். மக்களும் குறிப்பாகப் பெற்றோர்களும், மாணவர்களும் இதைப் புரிந்து கொண்டால் சரி.

மேலே இருக்கும் பின்னூட்டங்கள் நடைமுறை எதார்த்தத்தை ஓரளவிற்கு எளிமையாக புரிந்து கொள்ளும் படி விளக்குகிறது என்று கருதுகிறேன்.

பன்னாட்டு (MNC) நிறுவனங்களைப் பொருத்தவரை முதல் பின்னூட்டத்தில் இருப்பது போலத் தான் நடந்து கொள்கிறார்கள். நமக்குத் தான் இதை ஏற்றுக் கொள்ள சிரமமாக இருக்கிறது.

நான் இத்தனை வருடமாக என்னுடைய இளமை முழுவதும் இந்த நிறுவனத்திற்கு வழங்கினேன் ஆனால், இவர்கள் என்னை கரும்புச் சக்கையாக தூக்கி எறிந்து விட்டார்களே! என்ற எண்ணம் வலுப்பெற்று மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அவர்கள் கூறியது போல “உன்னுடைய பணியைக் காதலி, உன் நிறுவனத்தை அல்ல” என்பதை பின்பற்றினால் நமக்கு அதிக ஏமாற்றம் இருக்காது.

ஆனால், என்னதான் இப்படியெல்லாம் நினைத்தாலும் நம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் போது வரும் கோபமும் வருத்தமும் தவிர்க்க முடியாதது.

வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து 35 வயது வரை சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கி விடுகிறார்கள். இரவு பகல் பாராது கடுமையாக உழைத்ததில் 35 வயதில் ஒரு சலிப்பு வரும் நேரத்தில் வேலையையும் பிடுங்கி விட்டால், அதிர்ச்சியாவது இயல்பு தான்.

அதோடு புதிய வேலைக்கு தயார் ஆகி முதலில் இருந்து திரும்ப ஆரம்பிப்பது என்பது சவாலான ஒன்று.  பலவற்றை மறந்து இருப்பார்கள், மனதளவில் உற்சாகத்தை இழந்து இருப்பார்கள் காரணம், இதுவரை நடந்த போராட்டங்கள்.

இது ஒரு சாராருக்கு மட்டும் தான். இன்னும் சிலர் வேலையே செய்யாமல் காலத்தை ஓட்டுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். இவர்கள் நிலை இன்னும் மோசம்.

வேறு நிறுவனத்திற்குப் போக வேண்டி வந்தால், திறமைக் குறைவு / போட்டி காரணமாக கடும் நெருக்கடியை சந்திப்பார்கள்.

ஒரே நிறுவனத்திலேயே குப்பை கொட்டி அப்படியே காலத்தை ஓட்டலாம் என்று இருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி. இவர்களைப் போல வேலை செய்யாதவர்களை நீக்குவது தவறில்லை என்றாலும், நன்கு பணி புரிபவர்களும் பாதிக்கப்படுவது கவலையை ஏற்படுத்துகிறது.

26 வயதிற்குள் என்றால், “நீ என்ன என்னை வேலை விட்டு தூக்குறது.. நான் போறேன்..! நீ இல்லைனா எனக்கு ஆயிரம் நிறுவனங்கள்” என்று சவால் விடலாம்.

ஆனால், திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டால், அவர்களின் பள்ளி இருக்கும் இடம், வீடு மாற்றும் சூழல், கடன்கள், தவணைகள் என்ற ஏகப்பட்ட நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கிறது.

இவை தான் குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஒருவரை அமைதி ஆக்குகிறது, தைரியம் இழக்கச் செய்கிறது.

செலவுகள்

தற்போது தொழில்நுட்பத் துறையில் இருக்கும் 80% மேற்பட்டோர் குறைந்த பட்சம் மாதம் 20,000 – 25,000 EMI கட்டிக்கொண்டு இருப்பார்கள். அது வீட்டுக்கடன் தொடங்கி கார், சொந்தக் கடன் என்று ஏராளமாக இருக்கும்.

இந்தத் தலைமுறைக்கு நெருக்கடிகள் அதிகம் இருக்காது ஆனால், 35+ வயதை தாண்டியவர்களின் சிறு வயது வாழ்க்கை சிரமம் மிகுந்ததாகவே இருக்கும் (இது பற்றி தனியாக எழுத நினைத்துள்ளேன், தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது).

இவர்களின் தாத்தா, தந்தை ஏற்படுத்தி வைத்த கடன், அக்கா தங்கச்சி திருமணம், வீடு கட்டுவது என்று மிகப்பெரிய பொறுப்பில் இருப்பார்கள். எனவே, இது போல மாதத்தவணை கட்டுவது பெரும்பாலனவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.

இந்த நிலையில் இந்தப் பணி நீக்கம் என்பது நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகத் தான் இருக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டால் வரும் முதல் கவலை, மாதத் தவணை எப்படி கட்டுவது? குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் எப்படி செலுத்துவது?

என்பது தான் முக்கிய யோசனையாக இருக்கும்.

ஏனென்றால் இவர்களுக்கு பெரியளவில் கையில் சேமிப்பு இருக்காது. பெரும்பாலும், வரும் சம்பளத்தை அப்படியே தவணை கட்டவும், பள்ளி, வீட்டு வாடகை மற்றும் அடிப்படைச் செலவுகளுக்கு பயன்படுத்தி விடுவார்கள்.

எனவே சேமிப்பு என்பது சாத்தியமில்லாததாகவே இருக்கும். ஒரு மாதம் சம்பளம் இல்லை என்றாலும் நெருக்கடியாகும் சூழ்நிலை தான் பலரின் நிலை.

அது எவ்வளவு பெரிய சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் எதிலாவது முதலீடு செய்து அதற்குப் பணம் கட்டிக்கொண்டு இருப்பார்கள். கூடுதல் வீடாக இருக்கலாம் அல்லது நிலமாக இருக்கலாம்.

எனவே நீங்கள் எவரிடம் சென்று கேட்டாலும் கையில் பணம் இல்லை என்ற பதிலாகத் தான் இருக்கும். என்னப்பா.. இவ்வளோ சம்பாதிக்குற உன்னால் சமாளிக்க முடியாதா?! என்று கேட்டால் பலரின் பதில் “அமைதி” யாகத் தான் இருக்கும்.

என்னையே எடுத்துக்கொண்டாலும் வீட்டுக்கடன் போன்றவற்றுக்கு தவணை கட்டிக்கொண்டு இருக்கிறேன். எனக்கும் பல சிரமங்கள் இருக்கிறது ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது தெரியாது, சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

இவர்களை தவறாக நினைக்கவும் முடியாது ஏனென்றால், எவராக இருந்தாலும் லாஜிக்காக யோசித்தால் இப்படி தான் நினைக்க முடியும். எனவே, பலரின் பொதுவான நிலை இது தான்.

இவை எல்லாவற்றையும் விட பலரிடம் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை அனைவரும் செய்யும் கண்மூடித்தனமான செலவுகள்.

என் நண்பர் விஜயிடம் அடிக்கடி கேட்பேன்.. “எப்படிங்க எல்லோரும் இது போல செலவு செய்யறாங்க.. எங்க இருந்து பணம் வருகிறது?” அதற்கு “கடனட்டை (Credit card) மூலமாக பலர் கட்டுப்பாடில்லாமல் செலவு செய்து வருகிறார்கள். என்றாவது மாட்டுவார்கள்” என்று கூறினார்.

நீங்க நம்புறீங்களோ இல்லையோ நான் கடைகளில் காஃபி, ஜீஸ் குடிப்பதைக் கூட நிறுத்தி விட்டேன். அவர்களின் கொஞ்சமும் நியாயமே இல்லாத விலையால். ஒவ்வொரு செலவும் செய்யவே பயமாக இருக்கிறது.

அனைத்துமே விலை கண்டபடி உயர்ந்து விட்டது ஆனால், பாருங்க…! எங்க பார்த்தாலும் கூட்டமாக இருக்கிறது.

எதையாவது வாங்கிட்டே இருக்காங்க..! புரியாத புதிர். KFC போன்ற நிறுவனங்களில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை என்று தெரிந்தும் அங்கே சென்று சாப்பிட்டால், அது “கவுரவம்” என்று நினைக்கப் பழகி விட்டார்கள்.

பணம் வர வர வசதிகளை அதிகரித்துக்கொண்டே சென்று, குறைந்த சம்பளம் வாங்கிய போது என்ன பண நெருக்கடியில் இருந்தார்களோ அதே அளவு அல்லது அதை விட அதிக நெருக்கடியில் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகும் இருக்கிறார்கள்.

தற்போது இவ்வாறு செலவு செய்து பழகியவர்கள் இது போல வேலை நீக்கம் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பார்கள்? இத்தனை பேருக்கும் உடனே வேலை கிடைப்பது என்பது சாத்தியமில்லை.

ஏனென்றால், கீழ் மட்ட வேலைகளுக்கு தேவைகள் அதிகம் இருக்கும் ஆனால், மேலதிகாரி / மூத்த பணியாளர் பணிக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். டி சி எஸ் கூட, இவர்களை நீக்கி விட்டு கூடுதலாக புதியவர்கள் / இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் திரும்ப எடுக்கிறது.

இதில் இருந்தே இவர்கள் என்ன செய்கிறார்கள், நினைக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

பல வீடுகளில் சமைப்பதே இல்லை, பெரும்பாலும் ஹோட்டல் தான் என்று கூறுகிறார்கள். சனி ஞாயிறு எங்கே சென்றாலும் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள். இடம் பிடிப்பதே பெரிய பிரச்சனை என்கிறார்கள்.

தவணை முறையில் நிறையக் கிடைப்பதால், பயன் இருக்கிறதோ இல்லையோ வாங்கிக் குவித்து வருகிறார்கள்.

குழந்தைகளுக்கு செலவு செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இல்லை. பணக் கஷ்டமே தெரியாமல் வளரும் குழந்தைகள் ஒரு நெருக்கடி குடும்பத்திற்கு வரும் போது அதை ஏற்றுக்கொள்ள முடியாத மன உளைச்சல் ஏற்பட நேருகிறது.

நான் செலவு செய்வது என்பதை தொழில்நுட்பத் துறையினரை மட்டும் மனதில் வைத்துக் கூறவில்லை, அனைத்துத் துறையினரையும் தான்.

இந்த ஆட்குறைப்பு மேலும் பல நிறுவனங்களிலும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. எனவே, தற்போது 28 வயதிற்குள் இருப்பவர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணி தான். இன்று ஒருவருக்கு நடைபெறுவது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்.

எனவே, அனைத்திற்கும் தயாராக இருந்து கொள்வது நல்லது. மேலும் மேலும் நம்மை பண நெருக்கடிக்கு ஆட்படுத்திக் கொள்ளாமல், இது போதும் என்ற மனநிலைக்கு வருவது நல்லது. மிக முக்கியமாக சேமிப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆட்குறைப்பால் வேலை இழந்தவர்கள் எவருக்கும் மேற்கூறிய பயம் இருக்கும், இது இயல்பு ஆனால், இதற்கு அதிகளவில் மனச்சோர்வு அடைய வேண்டியதில்லை.

முதலில் செய்ய வேண்டியது செலவை எவ்வளவு குறைக்கலாம், மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யலாம் என்பது தான். முந்தைய ஆட்குறைப்பில் இது போல பலருக்கு நேர்ந்து இருக்கிறது அவர்கள் எல்லாம் என்ன.. தற்போது இல்லாமல் போய் விட்டார்களா…!

அனைவரும் வேறு பணியில் சேர்ந்து தற்போது நலமாகத் தான் இருக்கிறார்கள். இது போல நீக்கப்பட்டவர்கள் முந்தைய நிறுவனத்தில் இருந்ததை விட சிறப்பாக இருப்பதை நேரடியாகப் பார்த்து இருக்கிறேன். எனவே அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

என்னால் எங்கள் நிறுவனத்தில் இருந்தே உதாரணமாகக் கூற முடியும். இது போல பாதிக்கப்பட்டவர்கள் பலர் மிகச் சிறப்பாக இருக்கிறார்கள். எனவே, இதனால் மனம் தளர வேண்டாம்.

துவக்கத்தில் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் அது தவிர்க்க முடியாது ஆனால், நிச்சயம் பிரச்சனைகள் சரியாகி வேறு ஒரு வழி / வேலை கிடைக்கும். இது போல பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவை மன உறுதி, குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவையே. இதுவும் கடந்து போகும் அவ்வளவு தான்.

மற்ற துறையினருக்கு ஏற்படும் பாதிப்புகள்

இது எதோ ஐ டி துறையினருக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை நமக்கு எதுவுமில்லை என்று மற்ற துறையினர் நினைக்க ஒன்றுமில்லை காரணம், ஐ டி துறை என்பது சங்கலித் தொடர் போலத்தான். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் பேர் பயனடைந்து வருகிறார்கள்.

நாளை இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பால் செலவுகளைக் குறைக்க வேண்டி வந்தால், அது மற்ற துறையினருக்கும் நிச்சயம் நெருக்கடியைக் கொடுக்கும்.

ஒவ்வொரு தொழிலும் ஒன்றையொன்றை சார்ந்து இருக்கின்றன. எங்கோ மழை பெய்தால் / பெய்யவில்லை என்றால் இங்கே காய்கறி விலை ஏறுவதில்லையா..! அது போலத் தான்.

பலரும் டி சி எஸ் செய்தியைப் படித்து விட்டு பேசாம விவசாயமே பார்க்கப் போய்டலாம்!! என்று கூறுவதைக் கேட்க முடிகிறது.

இதை அவர்கள் கிண்டலாகக் கூறுகிறார்களா, நிஜமாகவே கூறுகிறார்களா அல்லது விவசாயம் அவ்வளவு எளிது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா..! என்று ஒன்றுமே புரியவில்லை.

விவசாயம் பலர் நினைப்பது போல எளிது கிடையாது ஆள் பிரச்சனை, மின்சாரம், தண்ணீர், மழை பெய்து கெடுப்பது, பெய்யாமல் கெடுப்பது, பூச்சி, காற்று, வெள்ளம், தரகர்களின் அட்டூழியம், இயற்கை என்று பல்வேறு பிரச்சனைகளால் விவசாயிகள் படும் சிரமம் சொல்லி மாளாது.

விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்கிற முறையிலும், என் உறவினர்கள் பெரும்பாலும் விவசாயிகள் என்பதாலும் இதைக் கூறுகிறேன்.

இதில் பல வருட அனுபவம் உள்ளவர்களே தினம் தினம் ஏதாவது அடிப்பட்டு கற்றுக்கொண்டு இருக்கும் போது ஐ டியில் வேலை போய் விட்டது அதனால், இதில் இறங்கி விடலாம் என்று எளிதாக நினைத்துவிடக் கூடிய அளவிற்கு விவசாயம் சுலபமில்லை என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

விவசாயத்திற்கு வர நினைப்பது நல்ல விசயம் தான் ஆனால், அதற்கு மிக மிகக் கடுமையான உழைப்பு, சரியான நபர்களின் வழிகாட்டுதல் அவசியம்.

எந்தப் பிரச்சனையும் இன்றி மாதச் சம்பளம் வாங்கிப் பழகிய நமக்கு விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டால் அதை ஜீரணிக்கவே முதலில் திராணி இருக்காது.  இதற்கே நமக்கெல்லாம் பயிற்சி, அனுபவம் வேண்டும்.

இதுபோல ஆட்குறைப்பு பரபரப்புகள் பலவற்றை பார்த்தாகி விட்டது. இந்தப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட அனைவரின் வாழ்க்கையும் முடிந்து விடவில்லை, வேறு வழியில், நிறுவனத்தில் வழக்கம் போல தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

டி சி எஸ் ஆட்குறைப்பை நினைத்து ரொம்பப் பயப்படத் தேவையில்லை ஆனால், இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இனி நம் திட்டங்களை அமைத்துக் கொள்வது, நம் திறமையை மேம்படுத்திக் கொள்வது, செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது என்பது தான் இந்தச் சம்பவம் தொழில்நுட்பப் ஊழியர்களுக்கு அறிவுறுத்துகிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

“Layoff” (ஆட்குறைப்பு) – என் பார்வையில் + என் அனுபவம் (பாகம் 1)2008

“Layoff” (ஆட்குறைப்பு) – என் பார்வையில் + என் அனுபவம் (பாகம் 2)2008

“Layoff” Encounters2009

துவங்கிவிட்டது “Layoff”2011

{ 13 comments… add one }
 • srikanth January 8, 2015, 11:17 AM

  Hi Giri

  You have correctly analysed this issued like you did early for many……

  We are not depending on any company for running our life…..

  As for as the Confident level of ours is high…….nothing is impossible……

  so no issue ……carry on friends….

 • Sathish Murugan January 8, 2015, 12:10 PM

  நடைமுறை உண்மை. விவசாயத்தையும் அழித்து தரகர்களையும் வளரவிட்டபின் விவசாயத்தை தேடி ஓடும் போக்கை என்னவென்று சொல்ல?

 • கமலக்கண்ணன் January 8, 2015, 4:15 PM

  35+ வயது உடையவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்று கொள்ள முடியாது என்று சொல்வது முட்டாள்தனம் , இன்று கணினி துறையில் பயன்படுத்தும் பெரும்பான்மையான மென்பொருட்கள் 35+ வயதானவர்களின் கண்டுபிடிப்பு .

  இருபதுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் நேரம் பார்க்காமல் உழைக்ககூடிய இளைஞர்கள் .முப்பதுகளில் உள்ளவர்கள் குடும்ப பொறுப்பு அதிகமுள்ளவர்கள், எட்டு மணி நேரத்திற்கு மேல் அலுவலகத்தில் பணி செய்ய இயலாதவர்கள் இவர்கள் இந்திய தரகு நிறுவனத்திற்கு தேவைபடதவர்கள். எந்த இந்திய நிறுவனம் எட்டு மணி நேரம் மட்டும் வேலை வாங்குகிறார்கள் ? , வெளிநாடுகளில் எம்பது வயதுடையவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லையா ?

  லாப வெறிக்கு உழியர்களை பலி எடுக்கும் இறக்கம் இல்லாத கொடிய பண பிசாசுகள் இந்த இந்திய தரகு நிறுவனங்கள்.

 • Mohamed Yasin January 8, 2015, 6:12 PM

  உண்மையில் மிகவும் தெளிவாக அலசி விவரித்து எழுதி உள்ளீர்கள் கிரி… ஒவ்வொரு வரியை படிக்கும் போது முன் எச்சரிக்கை அலாரம் உள் மனத்தில் அடிக்கிறது..

  விவசாயத்தை பற்றி சரியா சொல்லி இருக்கிங்க.. எங்கள் பகுதியில் வயல், ஏர், தண்ணீர் எல்லா வசதியும் உண்டு.. ஆனால் விவசாயம் செய்ய யாரும் முன்வருவதில்லை…

  அரசியல்: அதிலும் இந்தியர்கள் அலுவலக அரசியலில் மிக மோசம். சிறு வயதிலேயே சக்கைப் போடு போடுவார்கள், அனுபவம் பெறும் போது அரசியல் உச்சத்தில் இருக்கும்…(மறுக்க முடியாத உண்மை…)

  தன்னம்பிக்கை விதையை எங்கள் நெஞ்சில் ஆழமாக ஊன்றியமைக்கு நன்றி கிரி….இதுவும் கடந்து போகட்டுமே!!!!

 • காத்தவராயன் January 8, 2015, 9:21 PM

  // பலரும் டி சி எஸ் செய்தியைப் படித்து விட்டு பேசாம விவசாயமே பார்க்கப் போய்டலாம்!! என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. //

  🙂

  நகரம் நகரம் என்று எல்லோரும் நகரத்துக்கு போயி நகரத்த பாழாக்கி அங்க எல்லாத்தையும் ஏத்தி வச்சது மாதிரி; விவசாயத்துக்கு வந்து விவசாயத்த பாழாக்காம இருந்தா சரி.

 • naga January 9, 2015, 2:37 AM

  A good analysis. this is not a problem unique to us, in fact it’s a world level social problem, is complicated and different factors are at play. people at developed and some developing countries are used to this phenomenon. it is difficult to find people with 20 or 30 years experience in one company or organization or Institution. there will be very few exceptions, may be in Universities. they have adopted their lifestyle to this, but you can find the impact of this phenomenon at society, viz., focus on individual career with frequent changes, misunderstandings in family (i would not say that our society do not have misunderstandings in family) leading to importance of oneself (ego) rather than the good for the family, etc.

  this could happen to us too, all the examples that you have quoted are demonstrating that our society is changing at faster pace. the impact of which we can see in the next generation. but by that time we would have lost many good things, gained some other useful things that can develop into good things. if v have not learnt any good lessons, there will be many social unrest. v have lost our right to judge things since we have changed from that of our parents and grandparents into a consumerist society. change is the only constant thing. we can not avoid it, but with proper thinking, analysis, guidance and leadership we can evolve to develop a responsible society.

  congrats giri, i am sure that you have succeeded in making many of us to think on this important issue. i only wish that this help us to plan, lead and organize our family, which in greater scale can lead to a better society.

 • அருண் கோவிந்தன் January 9, 2015, 2:58 AM

  செம பதிவு தல ரொம்ப யதார்த்தமா அலசி இருக்கீங்க

  “விவசாயமே பார்க்கப் போய்டலாம்”
  – நானே நெறைய முறை இப்படி சொல்லி இருக்கேன்.. உங்களோட வேற ஒரு பதிவு படிச்சுட்டு அந்த எண்ணத்த மாத்திகிட்டேன்

  – அருண்

 • Srinivasan January 9, 2015, 7:08 AM

  நல்ல பதிவு கிரி. மிகவும் அருமையாக பல்வேறு கோணங்களில் இந்தப் பிரச்னையை அலசியிருக்கிறீர்கள்.

 • கிச்சா January 10, 2015, 7:52 PM

  மிகவும் சரியாக அலசி இருக்கிறீர்கள், சேமிப்பு பழக்கம் குறைந்ததும் பிரச்சனைகளுக்கு ஒரு பெரிய காரணம். நல்ல பதிவு

 • கிச்சா January 10, 2015, 8:25 PM

  மிகவும் சரியாக அலசி இருக்கிறீர்கள், சேமிப்பு பழக்கம் குறைந்ததும் பிரச்சனைகளுக்கு ஒரு பெரிய காரணம். நல்ல பதிவு.

 • கிரி January 12, 2015, 9:14 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஸ்ரீகாந்த் உண்மை தான். தனி ஒருவரை நம்பி நிறுவனமும் இல்லை, எந்த நிறுவனத்தையும் நம்பி தனி ஒருவரும் இல்லை.

  @சதீஷ் தரகர்கள் தான் விவசாயிகளின் உழைப்பை பணமாக்கி சம்பாதித்துக்கொண்டு இருப்பவர்கள்.

  @கமலக்கண்ணன் நீங்கள் சாதனை செய்த சிலரை உதாரணமாக கூறுகிறீர்கள். நான் மீதி இருக்கும் பெரும்பான்மையான சாதாரணமானவர்களை கூறி இருக்கிறேன்.

  குடும்பம் என்று வந்தாலே பொறுப்புகள் கூடுவதால், பலரை கழட்டி விட்டு விடுகிறார்கள்.

  @யாசின் உங்க ஏரியா ல தண்ணீர் இருக்கிறதா? பரவாயில்லை.. ம்ம் பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

  அலுவலக அரசியல் படு மோசம். உலகத்திலேயே அலுவலக அரசியலில் படு கேவலமாக இருப்பது இந்தியர்கள் தான்.

  @காத்தவராயன் அப்படித் தான் ஆகும் போல

  @Naga Thanks for your detailed comment 🙂

  @அருண் பல திட்டம் வைத்து இருக்கீங்க போல 🙂 BTW விவசாயம் செய்யவே முடியாது என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.. தற்போது பலர் இணைந்து விவசாயம் செய்கிறார்கள். அது போல முயற்சிக்கலாம். எதிர்காலத்தில் பலர் விவசாயத்திற்கு வருவார்கள் என்று நம்பலாம்.

  @ஸ்ரீனிவாசன் & கிச்சா நன்றி 🙂

 • Srinivasan January 13, 2015, 8:41 PM
 • Senthil January 19, 2015, 10:17 AM

  Arumaiyana Pathivu…
  Enna romba yosikka vachitteenga..!! 🙂

Leave a Comment