நிறுவனங்களுக்குத் தலைவலியாகும் Whatsapp & Viber

ணையம் வந்த பிறகு மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்துள்ளது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கும் போது ஒரு வகையில் பலருக்கு பயனைக் கொடுத்தாலும் இன்னும் சிலருக்கு இது வினையாக முடிந்து இருக்கிறது.

இவ்வளவு நாள் சில விசயங்களில் கொள்ளை அடித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்த கைத்தொலைபேசி நிறுவனங்களுக்கு தலைவலியாகி வருகிறது Whatsapp, Viber போன்ற கைத் தொலைபேசி செயலிகள் (Apps). இது பற்றி பார்ப்போம். Image Credit – www.gamerheadlines.com

முன்பு Whatsapp நிறுவனம், வளர்ந்த நாடுகளில் பிரபலமாக இருந்தது பின் இந்தியாவிலும் பிரபலமாகத் தொடங்கியது. பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனம் 16+3 பில்லியனுக்கு Whatsapp ஐ விலைக்கு வாங்கியதும் இதன் பயன்பாடு உச்சத்தை அடைந்து விட்டது.

தற்போது Whatsapp என்ற பெயரை அடிக்கடி நீங்கள் கேட்க நேர்வதே இதன் பிரபலத்திற்கு சாட்சி. வளர்ந்த நாடுகளில் பிரபலமான போதே Whatsapp பயன்பாட்டால் இங்கிலாந்து கைப்பேசி நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் நட்டம் ஆனதாகக் கூறப்பட்டது.

தற்போது எவ்வளோ நட்டம் ஆகிறது என்பதை யோசிக்க மறந்து இதில் இனி லாபம் கிடைக்குமா! என்று நினைக்கத் துவங்கி இருப்பார்கள்.

நான் கடந்த ஒரு இடுகையில் இனி நம்ம ஊரிலும் (தங்கள் கைத் தொலைபேசி நிறுவனத்தின்) குறுந்தகவல் அனுப்புவர்கள் குறைந்து விடுவார்கள், அனைவரும் Whatsapp போன்ற செயலிகளையே பயன்படுத்துவார்கள் என்று கூறி இருந்தேன்.

ஆனால், இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

தற்போது TRAI தலையிட வேண்டிய அளவிற்கு வந்து விட்டது. எனக்கு மாதம் 900 குறுந்தகவல்கள் இலவசமாக அனுப்ப முடியும் ஆனால், நான் அதிகபட்சமாக 10 தான் பயன்படுத்துகிறேன். மீதி முழுவதும் Whatsapp தான்.

இனி நம் ஊரிலும் Whatsapp அல்லது இது போன்ற செயலிகளே ஆட்சி செய்யப் போகிறது.

இரண்டு வருடம் முன்பு பலபயன் தொலைபேசி (ஸ்மார்ட் ஃபோன்) இந்த அளவிற்கு அனைவரும் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தோமா! வசதி உள்ளவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தி வந்தார்கள் தற்போது நிலைமை தலைகீழாகி விட்டது.

இப்ப யாரைப் பார்த்தாலும் தொலைபேசியில் டொக் டொக்குன்னு தட்டிட்டு இருக்காங்க! எனவே பலர் இவற்றைப் பயன்படுத்துவதால் இது தொடர்புடைய செயலிகளின் பயன்பாடும் அதிகரித்து விட்டது. இதுவே Whatsapp போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் அதிகரிக்கக் காரணம்.

ஒரு காலத்தில் Whatsapp என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன். “Whatsapp இல்லையா!” என்று இரண்டு வருடம் முன்பு என்னிடம் ஆச்சர்யமாகக் கேட்ட சக ஊழியரின் நினைவு வருகிறது. Whatsapp துவங்கப்பட்ட ஆண்டு 2009 நம்மிடையே பிரலமான ஆண்டு 2014.

தற்போது பண்டிகைக் காலங்களில் குறுந்தகவல் அனுப்பினால் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இதனால் நம்ம ஆளுங்க முந்தைய நாளே வாழ்த்து!! செய்தி அனுப்பினார்கள் இதனால், நிறுவனங்களும் பண்டிகை நாளும் அதற்கு முந்தைய நாளும் இரட்டிப்புக் கட்டணம் என்று வசூலித்தார்கள்.

பண்டிகைக் காலங்களில் எதற்கு இவர்கள் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்க வேண்டும்? இது திருட்டுத்தனம் தானே! இனியெல்லாம் பண்டிகை நாட்களில் இலவசமாக கொடுத்தால் கூட யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.

எல்லோரும் இனி Whatsapp போன்ற செயலிகள் தான். தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது பார்த்தீர்களா?!

இதனால் கைப்பேசி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இதே பரவாயில்லை எனும் நிலை தான் இனி வரப் போகிறது.

ஏனென்றால் இன்னும் 2 வருடங்களில் அதிகபட்சம் நான்கு வருடங்களில் (இதே அதிகம்) பெரும்பாலனவர்கள் அழைப்பதற்கும் இணையத்தையே பயன்படுத்தப் போகிறார்கள்.

தற்போது எப்படி உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் குறுந்தகவல்கள் பயன்படுத்த அவசியமில்லாமல் இருக்கிறதோ அது போல 100 – 200 நிமிட இலவச அழைப்புகள் கூட குறுந்தகவல் போல பயன்படுத்த அவசியமில்லாமல் இருக்கும்.

இதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

தற்போது குறுந்தகவலுக்கு Whatsapp போல, அழைப்புகளுக்கு பலர் Viber பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கும் இணையம் இருந்தால் போதும், உலகம் முழுக்க எவருடனும் இலவசமாகப் பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் நீங்கள் கைப்பேசிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வது குறைக்கப்படும்.

உதாரணத்திற்கு நான் சமீபமாக என் வீட்டில் உள்ளவர்களுடன் பேச Viber பயன்படுத்துகிறேன். முன்பு (சிங்கப்பூரில் இருந்து பேச) மாதம் 2000 ருபாய் செலவாகிறது என்றால் தற்போது 500 தான் ஆகிறது.

ஊரில் உள்ள வீட்டு கைப்பேசிக்கு 200 ரூபாய்க்கு இணைய வசதி கொடுத்தால் 1 GB கொடுப்பார்கள், இது போதுமானது. எனக்கு ஏற்கனவே 3 GB கொடுக்கிறார்கள்.

இதற்கு கைத்தொலைபேசி இணையம் தான் வேண்டும் என்பதில்லை, உங்கள் வீட்டில் இணையம் இருந்து அதில் Wifi வசதி இருந்தால் கூட போதும். தற்போது Viber வசதி இல்லாதவர்களுடன் பேச மட்டுமே எனக்கு செலவாகிறது.

தற்போது கைப்பேசி இணையம் நம் ஊரில் அந்த அளவிற்கு வேகம் இல்லை ஆனால், மோசமில்லை. இன்னும் சில வருடங்களில் நிச்சயம் வேகம் அதிகரிக்கும், அதிகரித்தே ஆக வேண்டும்.

அப்போது யாரும் பணம் கொடுத்து அழைக்காமல், Viber போன்ற வசதிகளையே பயன்படுத்துவார்கள். Whatsapp இந்த ஆண்டு இறுதியில் குறுந்தகவல் வசதியோடு Viber போல அழைக்கும் வசதியையும் கொண்டு வரப்போவதாகக் கூறி இருக்கிறது. இதன் பிறகு கடும் போட்டியாகி விடும்.

இந்தப் பிரச்சனை நம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதை TRAI உணர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் நட்டத்தைத் தவிர்க்க Whatsapp, Viber, Skype போன்ற நிறுவனங்களுக்கு வேறு வகையில் கட்டணம் விதிப்பார்கள் அல்லது பயன்பாட்டில் விதிமுறைகளைப் புகுத்துவார்கள்.

இதன் மூலம் தற்போது போல செயலிகளை எளிமையாகப் பயன்படுத்தி விட முடியாத நிலை வரும். இணையக் கட்டணம் அதிகரிக்கலாம். வேறு வகையில் மறைமுகக் கட்டணங்களை விதிக்கலாம் ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கவே முடியாது.

எவ்வளவு தடை போட்டாலும் வேறு வகையில் ஏதாவது ஒரு வசதி வந்து கொண்டே இருக்கும் என்பது தான் உண்மை.

தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள் அதன் வசதிகளைப் பாதுகாப்புடன் பயன்படுத்துங்கள். உலகில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. எந்த ஒரு இலவசத்தின் பின்பும் ஏதாவது ஒரு மறைமுகக் காரணம் / லாபங்கள் இருக்கும்.

எனவே இலவசம் என்பதற்காக கண்மூடித்தனமாகப் பயன்படுத்தாமல், எதைப் பயன்படுத்தினால் பாதுகாப்பு என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

Android WhatsappiOS WhatsappAndroid Viber – iOS Viber

கொசுறு 1

நன்மை இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்குமா! தற்போது Whatsapp பிரபலம் அடைந்து வருவதால் பலரும் புது குழுக்களை உருவாக்கி மற்ற நண்பர்களை இணைத்து வருகிறார்கள். இது பெரும் தொல்லையாக உருவாகி வருகிறது.

பலருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கிறது ஆனால், இதை தடுக்கவும் வழி இருக்கிறது. தற்போது Whatsapp ல் எத்தனை குறுந்தகவல் அனுப்பினாலும் கட்டணம் இல்லை என்பதால், சிலர் ஒரே குறுந்தகவலில் அனுப்பக்கூடிய செய்தியைக் கூட 4 குறுந்தகவல்களாக அனுப்புவார்கள்.

Alert நிறுத்தி வைக்கவில்லை என்றால் “டின் டின்” என்று குறுந்தகவல்கள் சத்தமாகக் கேட்டு கடுப்பேத்தும்.

சுருக்கமாக, சரியாகப் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம், தெரியாதவர்களுக்கு இவை தொல்லை. தொழில்நுட்பம் எப்போதுமே பல வசதிகளைக் கொடுத்து தொல்லைகளை தவிர்க்கவும் உதவுகிறது.

எனவே, இவற்றை முறையாகப் பயன்படுத்தினால் நமக்கு லாபமே!

கொசுறு 2

டெல்லி காவல் துறையினர், லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரிகளைப் பற்றி புகார் கொடுக்க Whatsapp முறையைக் கொண்டு வந்துள்ளனர்.

இதன் மூலம் லஞ்சம் கேட்பதைக் காணொளி எடுத்து இவர்கள் கொடுத்துள்ள கைத்தொலைபேசி எண்ணிற்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

நாம் புகார் கொடுக்க நேரடியாக யாரையும் அணுகத் தேவையில்லை எனும் போது இது எளிதாகி விடுகிறது. எவரும் லஞ்சம் வாங்குபவரை காணொளி எடுத்து அனுப்ப முடியும். ஒலிப் பதிவையும் அனுப்பலாம்.

இதில் கூறப்பட்டுள்ளது உண்மையா என்று உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சமூகத்தளங்கள் வந்ததில் இருந்து பலருக்கு குடைச்சல் ஆகி விட்டது. சென்னையில் ஒருவரிடம் குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறாரா என்ற சோதனையில் அநாகரீகமாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரியை காணொளி எடுத்து, அதை பாதிக்கப்பட்டவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார்.

இது காட்டுத் தீயாகப் பரவி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும் இந்த Whatsapp முறையைக் கொண்டு வரலாம், நன்கு வரவேற்பு இருக்கும்.

{ 15 comments… add one }
 • Priyamudanprabu August 13, 2014, 9:53 AM

  I use whatsapp voice mesg ..

 • சேக்காளி August 13, 2014, 12:27 PM

  //உலகில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. எந்த ஒரு இலவசத்தின் பின்பும் ஏதாவது ஒரு மறைமுகக் காரணம் / லாபங்கள் இருக்கும்/

  அடுத்தவன் சம்பாதிப்பதில் நமக்கென்ன கோபம்.ஆனால் ஏமாற்றி சம்பாதிப்பதையும்,கொள்ளை லாபம் அடிப்பதையும் தானே மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இப்படி கிடைக்கும் போது அவை தானாகவே மறையும் அல்லது குறையும் தானே.

 • Mohamed Yasin August 13, 2014, 1:08 PM

  கிரி.. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்று. 1998/1999 வருடங்களில் BPL கைபேசியை வைத்து கொண்டு நண்பன் ஒருவன் ஊரில் STD பூத் வைத்து இருந்தான். Incoming / Outgoing ரெண்டுதுக்குமே கட்டணம் வசூலிப்பான். அந்த நேரங்களில் எங்கள் ஊரில் லோக்கல் கால் வசதி கிடையாது. அதுக்கு கூட STD கட்டணம் தான் செலுத்த வேண்டும்..தற்போது நிலைமை தலைகீழ்…

  தொழில்நுட்ப வளர்ச்சியினை கண்டு பிரமிக்கும் கோடோடி மக்களில் நானும் ஒருவன்.. ஆனால் ஒரு விஷியம் மட்டும் எப்போதும் ஆச்சரியம் தர கூடிய ஒன்றாக இருக்கிறது.. எவ்வகையான புதிய கண்டுபிடிப்புகளாக இருந்தாலும் கடந்த நூற்றாண்டுகளிலும், தற்போதும் கூட அது மேலை நாடுகளால் தான் முடிகிறது..எந்த காரணத்தினால் நம்மால் சாதிக்க முடியாமல் போகிறது..???

  Face Book, Whatsapp இவைகளின் அடிப்படை formula என்பது எளிமையான ஒன்றாக தோன்றும் (இவைகளை கண்டுபிடித்த பின்).. ஆனால் இவைகளை கண்டுபிடித்து, சரியான முறையில் மக்களை சென்றடைய செய்வது நிச்சயம் கடினமான ஒன்றே!!!
  பல்வேறான நிறுவனங்கள் முன்னணியில் இந்த துறையில் இருந்தாலும், முதலில் யாருக்கும் தோன்றாத புதிய முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் இவர்களின் சாதனை…

  குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் உலக அளவில் நமது பங்களிப்பு அதிக அளவில் உள்ளது என்பதை மறுக்க முடியாது…இருப்பினும் நமது புதிய முயற்சிகளுக்கான வரவேற்பு எப்படி என தெரியவில்லை / எதனால் இது போன்ற கண்டுபிடிப்புகள் நமது நாட்டில் நிகழவில்லை???? (பின் குறிப்பு : எனக்கு தொழில்நுட்ப அறிவு மிக குறைவு)..

  நீங்கள் அந்த துறையில் இருப்பதால் உங்களுக்கு அதிக விவரம் தெரியும்.. நேரம் இருப்பின் விளக்கம் தரவும் கிரி.. பகிர்தமைக்கு மகிழ்ச்சி..

 • Alan August 13, 2014, 3:21 PM

  சுஜாதா ஒருமுறை சொல்லியிருந்தார் “எதிர்காலத்தில் தொலைபேசி அழைப்புகளை இலவசமாய் கட்டணமின்றி மேற்கொள்ளலாம் என்று” அதன் ஆரம்பம்தான் மேற்சொன்ன WhatsAppஉம் Viberஉம்!!!!

 • Lalitha August 13, 2014, 4:16 PM

  இது உண்மையா ?

  http://www.ultgate.com/2364/viber-made-in-israel

 • விஜய் August 13, 2014, 4:28 PM

  கிரி இது பத்தாது நம்ம ஊருக்கு.

  இன்னும் எவ்வளவோ வரணும்; வளரனும்.

  உதாரணத்துக்கு “FaceTime/Video Call”

  இன்னும் நம்ம ஊர்ல இது அந்த அளவுக்கு பிரபலமாகலை. இப்போ எல்லார்கிட்டேயும் பலபயன் பேசி இருக்கு. ஆனா 3G/4G இல்லை; நான் சொல்றது கிராமங்களில்.

  நம்ம ஊர்ல 3G/4G எல்லா ஊர்லயும் (குறிப்பா கிராமங்களில்) வந்துடுச்சுன்னு வச்சுக்கங்க, மக்களின் பயணம் பெருவாரியாகக் குறையும். சிறுதொழில் செய்யறவங்க எல்லாம் இப்போ வாராவாரம்/மாதாமாதம் செய்யுற பயணங்கள் குறையும்.

  இது பல பேருக்கு நன்மையையும், சில பேருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். ஆனா, இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

  இந்த மாதிரி எவ்வளவோ வர வேண்டி இருக்கு.

 • seelan August 13, 2014, 5:18 PM

  ” இது பல பேருக்கு நன்மையையும், சில பேருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். ஆனா, இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.”

  சதாரன மக்களை இது பாதிக்காது.கோடிகளில் உழைப்பவர்களை இது பாதிக்கும்.

  • சேக்காளி August 14, 2014, 11:11 AM

   //கோடிகளில் உழைப்பவர்களை இது பாதிக்கும்//
   உழைப்பவர்களை அல்ல.புரள்பவர்களை அல்லது சம்பாதிப்பவர்களை.

 • Vijay August 13, 2014, 5:47 PM

  @Seelan பலபேர் = பொதுமக்கள் ; சிலபேர் = தொழிலதிபர்கள் 🙂

 • விரிவான, சுவையான தொழில் நுட்பத் தகவல்கள். நன்றி!

  சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

 • தமிழ்நெஞ்சம் August 15, 2014, 8:59 AM

  தலைவரே! வணக்கம். பகிர்வுக்கு நன்றி. electronic waste பற்றி உங்கள் பதிவொன்று எதிர்பார்க்கிறேன்.

 • கிரி August 15, 2014, 11:32 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் உங்களுக்கு இருக்கும் அதே சந்தேகம் எனக்கும் இருக்கிறது. Google facebook Twitter Microsoft Yahoo இப்படி எல்லாமே அவங்க உருவாக்கியது தான். நம்மவர்கள் இனி வரும் காலங்களில் இது போல வர வாய்ப்பு இருக்கிறது.

  நாம் பெருமை பட்டுக்கொள்ள ஈமெயில் மட்டுமே இருக்கு.

  @லலிதா இவர்களுக்கு வேற வேலை இல்ல.. சும்மா இப்படி தான் ஏதாவது கிளப்பி விட்டுட்டு இருப்பாங்க.

  @விஜய் எங்க ஊர் கோபி ல இணையம் செம வேகமா இருக்கு..விரைவில் கிராமங்களிலும் இந்த வேகத்தை எதிர்பார்க்கலாம். இணையக் கணக்கின் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள்.

  @நிஜாமுத்தீன் உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

  @தமிழ் நெஞ்சம் எப்படி இருக்கீங்க? நீண்ட மாதங்களுக்குப் பிறகு. E Waste நல்ல ஒரு தலைப்பு.. விரைவில் எழுதுகிறேன்.

 • Arun Govindan August 16, 2014, 6:43 AM

  மனமார்ந்த வாழ்த்துக்கள் கிரி
  அட்டகாசமா 9வது வருசத்துல அடி எடுத்து வைக்குறீங்க
  உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நல்லதே நடக்க வாழ்த்துக்கள்

  – அருண்

 • rajesh August 31, 2014, 9:39 AM

  உலகில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. எந்த ஒரு இலவசத்தின் பின்பும் ஏதாவது ஒரு மறைமுகக் காரணம் / லாபங்கள் இருக்கும்.

  nice lines and true too

 • Kan September 10, 2014, 10:06 AM

  பயனுள்ள தொழில் நுட்பத் தகவல்கள். நன்றி!

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz