சிங்கப்பூர் செய்திகள் – Lau Pa Sat – Little India – Gambling

So Singapore

சென்னை விமான நிலையம் கட்டியது போல மிக மிக மெதுவாக ராபின்சன் சாலையில் ஒரு கட்டிடம் (So Singapore) புதுப்பித்தார்கள் பழமை மாறாமல் அதே போல. கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கும் மேல் ஆகி சமீபத்தில் தான் திறந்தார்கள்.

தினமும் இதே வழியில் செல்வதால் எனக்கே சலிப்பாகி விட்டது!! பேசாம உள்ளே போய் “கடை எப்ப சார் திறப்பீங்க?!” என்று கேட்கலாம் என்று ஆகி விட்டது 🙂 . அங்கு வேலை செய்யுற தமிழ் பையன் கிட்ட கேட்டேன்.. “அடுத்த மாசம் திறப்பாங்க” என்று பிப்ரவரி ல சொன்னான்.

அப்படி இப்படி என்று கடந்த மாதம் திறந்து விட்டார்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருகிற மாதிரி சும்மா நச்சுனு இருக்கு. இது ஒரு ஹோட்டல்! உள்ளே சொர்க்கம் மாதிரி இருக்கு.

அழகு அழகா உள் வேலைப்பாடுகள், நாற்காலிகள், விளக்குகள் என்று கலக்கி இருக்கிறார்கள். கண்ணாடி என்பதால் நாம் நடந்து செல்லும் போதே இதைப் பார்க்க முடியும்.

ண்பர் ஒருவருடன் ஒரு வேலைக்காக ஜூரோங் என்ற இடத்திற்கு சென்று இருந்தேன். அங்கே Jurong Point காம்ப்ளெக்ஸ் ல் கீழ்த் தளத்தில் உள்ள Food Court ல் “Komals” என்ற நம்ம ஊர் உணவு விடுதி உள்ளது.

அங்கே பணியில் இருந்தவர் “சென்னா தோசை” என்று உள்ளே வெங்காயமும் தூவி இருக்கும் ஒரு தோசை பற்றிக் கூறினார். ரொம்ப நன்றாக இருந்தது. இங்கே சென்றால், முயற்சித்துப் பாருங்கள்.

Todayonlineற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளில் சண்டை நடந்து வருவதைப் பற்றி அறிவீர்கள்.

இதற்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள் ஆதரவு எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

சிங்கப்பூரில் ஒருவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து பாலஸ்தீனக் கொடியை பறக்க விட்டு இருந்தார்.

சிங்கப்பூர் சட்டப்படி சிங்கப்பூர் தேசியக் கொடியைத் தவிர வேறு எந்த நாட்டின் கொடியையும் பறக்க விடக் கூடாது.

இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் இவரிடம் விசாரணை நடத்தி கொடியை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இவர் சிங்கப்பூர் குடியிருமை பெற்றவர்.

இந்த விதி மீறலுக்கு 500$ அபராதம் அல்லது 6 மாதச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது. Image and News credit – Todayonline.com

லிட்டில் இந்தியா கலவரம் குறித்த விசாரணை கிட்டத்தட்ட முடிந்து விட்டது. “வசந்தம்” தொலைக்காட்சியில் இந்தச் செய்தி வரும் போது திரும்பத் திரும்ப இது பற்றிய வன்முறைக் காணொளியை ஒளிபரப்புகிறார்கள். பார்க்கவே தர்மசங்கடமாக இருக்கிறது.

செய்தி மட்டும் கூறினால் போதாதா! என்னமோ போங்க. லிட்டில் இந்தியாவில் மதுபானங்கள் குடிப்பதற்கு தற்போது அதிகம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பலர் இங்கே வருவதில்லை. இதனால் இதை நம்பி இருந்த கடைகளுக்கு கடுமையான வருமான இழப்பு.

60% விற்பனை பாதிக்கப்பட்டதாகக் கூறி இருக்கிறார்கள்.

இங்கே அனைத்துக் கடைகளும் ஒரு / இரு வருடங்கள் என்ற ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால், பாதியில் சென்றால், இதற்கு மீதம் உள்ள வாடகைப் பணத்தை கொடுத்தாக வேண்டும். எனவே, வேறு வழியில்லாமல் கடையை நடத்தி வருவதாகக் கூறுகிறார்கள்.

இது குறித்து செய்தியில் வந்தது. இந்த கலவரத்திற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக “குடி” என்று விசாரணையில் கூறப்பட்டுள்ளது. குடித்து விட்டு கிறுக்கனுக மாதிரி செய்த அரை மணி நேரப் பிரச்சனை, பலரின் வாழ்க்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் சீரழித்து விட்டது.

Lau Pa Satசிங்கப்பூரின் பழமை வாய்ந்த Food Court “Lau Pa Sat” என்பதாகும்.

சிங்கப்பூர் துவக்கக் காலத்தில் இது மீன் சந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் நகரின் வளர்ச்சியில் பிற்காலத்தில் இது ஒரு Food Court ஆக மாறி விட்டது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய Food Court இது தான் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் மிகப் பிரபலமான இடமான ராபின்சன் சாலையில் இது அமைந்துள்ளது. அரசாங்கம் சமீபமாக அனைத்து Food Court களையும் புதுப்பித்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக இதையும் புதுப்பிக்க திட்டமிட்டு இரண்டு மாதத்தில் திறப்பதாக கூறி இருந்தார்கள் ஆனால், என்ன நடந்ததோ அப்படி இப்படி என்று 10 மாதம் ஆக்கி விட்டார்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு நல்ல வருமானம் இருந்தது. கடந்த ஜூன் 30 திறந்தார்கள். திறப்பது பற்றி முன்னறிவிப்பு கூட இல்லை ஆனால், திறக்கப்பட்ட அன்று கூட்டத்தால் அந்த இடமே திணறி விட்டது.

நான் வழக்கமாக தாமதமாகத் தான் செல்வேன் அப்போதும் கூட்டம் குறையவில்லை. முன்பை விட நெரிசலாக இருக்கிறது, இன்னும் சில கடைகள் திறக்கவில்லை.

முன்பு முழுவதும் பழுப்பு வெள்ளை வண்ணத்தில் இருந்தது அதோடு தற்போது பச்சை வண்ணத்தையும் சேர்த்து அடித்து இருக்கிறார்கள்.

இதனால் கொஞ்சம் இருட்டாக இருக்கிறது.

இது திறக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்கு செம அடி. 50% வசூல் குறைந்து விட்டதாக கடை உரிமையாளர் கூறினார். அதோடு ரம்ஜான் துவங்கியதால் முஸ்லிம் வாடிக்கையாளர்கள் 10% குறைந்து விட்டதாகவும் கூறினார்.

அது போல கடைக்குச் சென்றால் கடை காத்தாடிக் கொண்டு இருக்கிறது. பாவமாகத் தான் இருந்தது ஆனால், என்ன செய்ய முடியும். இன்னும் கொஞ்ச நாள் சென்றால் புது சோக்கு குறைந்து திரும்ப இங்கே வருவார்கள் என்று நினைக்கிறேன்.

தற்போது La Pau sat ல் கடைகளில் உணவு வகை ஒரே மாதிரி இருப்பது போல தோன்றுகிறது. முன்பு போல இல்லை என்பது என் கருத்து.

நான் அலுவலகம் செல்லும் போது காலையில் ராபின்சன் சாலை சிக்னலில் நிற்கும் போது “ராக்” போல ஒருவரும் “மைக் டைசன்” போல ஒருவரும் பனியன் இல்லாமல் ட்ராயர் மட்டும் அணிந்து (ஜாக்கிங்) ஓடிக்கொண்டு இருப்பார்கள்.

நினைத்துப் பாருங்க பழனிப் படிக்கட்டு மாதிரி உடம்பில் இருவர் (கருப்பு / வெள்ளை) வியர்வை வழிய ஓடினால் எப்படி இருக்கும்!

அதிலும் கருப்பாக இருப்பவர் உடம்பைப் பார்த்தால்… யப்பா! தலை கிறுகிறுத்து விடும்.

WWF ல் வருபவர்கள் போல இருப்பார். அங்கே நிற்கிற பெண்கள் இவர்களைப் பார்க்கும் போது… ஹி ஹி நமக்கு இதைப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம் 😉 . Image Credit – ROFL GIFs

நான் சிங்கப்பூரில் நீண்ட வருடங்களாக இருந்தாலும் எவருடனும் இது வரை நீண்ட தூரம் காரில் பயணித்ததில்லை. மேலே ஜூரோங் சென்றேன் என்று கூறினேன் அல்லவா அங்கே செல்வதற்கும் திரும்ப வந்ததற்கும் அவருடைய காரில் GPS பயன்படுத்தி வந்தோம்.

அதுவே அனைத்து வழிகளையும் கூறி விடுகிறது வலது, இடது, சாலையின் பெயர் என்று அனைத்தும் வந்து விடுகிறது. வளர்ந்த நாடுகளில் இது சகஜம் என்றாலும் நான் முதல் முறையாகப் பார்க்கிறேன். தொழில்நுட்பம் எங்கேயோ போய் விட்டது.

சென்னையில் ஒரு முறை இதே போல ஒரு டாக்சியில் பார்த்தேன் ஆனால், அனைத்தும் சரி என்று கூற முடியவில்லை.

சிங்கப்பூரில் அரசுக் குடியிருப்பு மின் தூக்கிகளில் (Lift) கண்ணாடி பொருத்தும் திட்டத்தில் இருக்கிறார்கள். இங்கே மின் தூக்கிகளில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு.

எப்படி என்றால், கண்ணாடி இருந்தால் நம் பின்னால் இருப்பவர் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க முடியும். சந்தேகம் வரும் படி நடந்து கொண்டால் எச்சரிக்கையாகி விடலாம். எனக்கு இது நாள் வரை இப்படி ஒரு வசதி இருப்பதே தெரியாது! நானும் யோசிக்கவில்லை.

எங்கள் அலுவலக மின் தூக்கியில் கண்ணாடி இல்லை என்றாலும் அதில் உள்ள Steel, கண்ணாடி போல இருக்கும். நான் இவ்வளவு நாட்களாக இதை சைட் அடிக்க மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன் 🙂 .

லகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. சிங்கப்பூரில் அரை இறுதிப் போட்டிகளையும், இறுதிப் போட்டியையும் இலவசமாக ஒளிபரப்பினார்கள். சிங்கப்பூர் நேரத்தில் அதிகாலை 4 மணிக்குத் துவங்கும்.

எனக்கு கால்பந்துப் போட்டிகளில் ஆர்வம் இல்லை அதோடு நேரங்கெட்ட நேரத்தில் ஒளிபரப்படுவதால் பார்க்க விருப்பமில்லை. அர்ஜென்டினா – நெதர்லாந்து போட்டியை அலாரம் வைத்து 10 நிமிடம் பார்த்தேன். இறுதிப் போட்டியை கடைசி 35 நிமிடங்கள் பார்த்தேன்.

சிங்கப்பூரில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. எனவே பலரும் வரிசைகட்டி நின்று பணம் கட்டி விளையாடுவார்கள். என் வீட்டின் அருகே உள்ள தமிழ்க் குடும்பத்தில் இதில் இணைந்து சில நூறு வெள்ளிகளைப் பெற்றார்கள்.

1000$ மற்றும் அதற்கு மேலும் கட்டி விளையாடுபவர்கள் இருக்கிறார்கள். எங்கள் அலுவலக கால்பந்து ரசிகர்கள் ஆளுக்கு 2$ கொடுத்து கலந்துக்கக் கூறினார்கள். எங்கள் அலுவலகத்தில் ஐரோப்பாவை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் இயல்பாகவே நம்ம ஊர் கிரிக்கெட் போல கால்பந்திற்கு தீவிர ரசிகர்கள்.

2$ என்பதாலும் மிக வற்புறுத்தியதாலும் கலந்து கொண்டேன். எனக்கு அர்ஜென்டினா ஒதுக்கப்பட்டது. இந்த அணி வெற்றிப் பெற்று இருந்தால், கொஞ்சம் $$ எனக்குக் கிடைத்து இருந்து இருக்கும். வட போச்சே!

ஒரு நாட்டில் பிரபலமான விளையாட்டு வீரராக இருப்பது எவ்வளவு ஒரு துன்பியல் நிகழ்வு! எவ்வளவுக்கெவ்வளவு பிரபலம் என்ற அளவில் சந்தோசம் கிடைக்கிறதோ அதே அளவு நெருக்கடியும் இருக்கிறது.

நம்ம ஊர் சச்சின் போல மொத்த பாரத்தையும் தூக்கி அர்ஜென்டினா “மெஸ்ஸி” மீது வைத்து, பாவம் அவர் தலையை உருட்டுகிறார்கள்.

அவர் நிலையில் இருந்து பார்த்தால் தான் தெரியும் பிரபலம் என்பது எவ்வளவு பெரிய சுமை என்று. இவ்வளவு கேள்வி கேட்பவர்கள், திட்டுபவர்கள் இதே அர்ஜென்டினா வெற்றி பெற்று இருந்தால்…. இது தான்டா வாழ்க்கை 🙂 .

{ 8 comments… add one }
 • Mohamed Yasin July 16, 2014, 12:53 PM

  சிங்கப்பூர் குறித்து தகவல்களை பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.. என்னுடன் கல்லூரியில் படித்த சில நண்பர்கள் சிங்கப்பூரில் பணி புரிகிறார்கள் ஆனால் யாரும் தொடர்பில் இல்லை, எதிர்காலத்தில் ஒரு விசிட் அடிக்க எண்ணம் உள்ளது, அந்த நேரத்தில் நீங்கள் இதுவரை குறிப்பிட்ட இடங்களை பார்வையிட முயற்சிக்கிறேன்..

  கால்பந்து:- இதுவரை ஒரு போட்டி கூட பார்த்ததில்லை, கடைசியா நடந்த இறுதி போட்டிதான் முழுவதும் பார்த்தேன்.

  கிரிக்கெட்:- நமக்கு எப்பவும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் தான், இதில் உள்ள சுவாரசியம் எனக்கு வேறு எதிலும் ஏற்படுவதில்லை.. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் பழமையையும், அந்த கேளரிகளையும், பழைய புகைப்படங்களையும், ஒரு போட்டியை முழுவதும் காண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம்..

 • இந்த லா பா சாட்டை எவ்வளவு தடவை புதுப்பிப்பார்கள்??

 • janaki July 16, 2014, 4:37 PM

  //வளர்ந்த நாடுகளில் இது சகஜம் என்றாலும் நான் முதல் முறையாகப் பார்க்கிறேன். தொழில்நுட்பம் எங்கேயோ போய் விட்டது.

  we went goa last week end office trip..we roamed entire goa through GPS..we didnt even ask anyone lik how to go..it s awesome facility.it works good in 3g

 • kamalakkannan July 16, 2014, 4:57 PM

  சிங்கப்பூரை விட்டு எப்படி நீங்கா எப்படித்தான் வரப்போரிங்களோ , செகண்ட் ஹோம் பீலிங்

 • Rajkumar July 16, 2014, 7:31 PM

  ஹி ஹி ஹி எனக்கு சிங்கப்பூர பத்தி அதிக தெரியாது.. சிங்கப்பூரா அப்படிங்கிற ஷாங்காயில் உள்ள ஹோட்டலில் சாப்பிட மட்டும் தெரியும்.

  GPS சீனாவில் ஹாங்காங்கில் சவுதியில் பிரான்சில் எல்லாம் வேலை செய்யுது இந்தியாவில் மட்டும் வேலை செய்ய மாட்டேன்கிறது. அட்லீஸ்ட் எங்க போய்கிட்டு இருக்கோம் என்று தெரிந்துகொள்ளவாவது தேவைப்படும். (குறிப்பாக தமிழகத்தை விட்டு வெளியே சென்றால்) டெல்லி சென்றபோது ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்.

  • janaki July 18, 2014, 1:44 PM

   இந்தியாவிலும் வேலை செய்கின்றது Mr . ராஜ்குமார் 🙂

 • இளவரசன் July 17, 2014, 12:26 AM

  நல்ல பதிவு அண்ணா நன்றி …

 • கிரி July 24, 2014, 7:57 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் இந்தியா பக்காவா வெற்றி பெற்றுவிட்டது. 28 வருடங்களுக்குப் பிறகு 🙂

  @வடுவூர் குமார் கடந்த நான்கு வருடத்தில் புதுப்பிக்கவில்லை. இதற்கு முன்பு எப்போது புதுப்பித்தார்கள் என்று தெரியவில்லை..

  @ஜானகி பார்ரா.. கோவா செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம்..எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை.

  @கமலக்கண்ணன் 🙂

  @ராஜ்குமார் இந்தியாவில் வேலை செய்யுதாம்.. அனைத்து இடங்களிலும் தெளிவாக கூறுகிறதா என்று தெரியவில்லை.

Leave a Comment