மாளவிகா – விஜய் டிவி – ஃபேஸ்புக் – IQ – இயற்கை

Malavika Actorன்னை ரஜினி ரசிகனாக பலருக்குத் தெரியும் ஆனால், நான் ஒரு தீவிர மாளவிகா ரசிகன் என்பது என்னுடைய தளத்தை நீண்ட வருடங்களாகப் படித்து வருபவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தற்போது மாளவிகா நடிப்பது இல்லையென்பதால் இவர் பற்றி எழுத சந்தர்ப்பம் அமையவில்லை.

பலரும் மாளவிகாவை கிண்டலடித்தாலும், நான் இன்று வரை அப்படியே ரசிகனாகத் தான் இருக்கேன்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் மாளவிகா ட்விட்டரில் இருப்பதாகக் கூறினார்.

அடப்பாவிகளா! இவ்வளோ நாளா ஒரு பய கூட சொல்லவில்லையே என்று கடுப்பாகி விட்டது.

நண்பருக்கு பெரிய நன்றி. Image Credit – www.southdreamz.com

இதுல என்ன பிரச்சனை என்றால் எனக்கு ட்விட்டர் கணக்கு இருந்தாலும், அதை நான் பயன்படுத்துவதே இல்லை. எனக்கு ஃபேஸ்புக் பிடித்த அளவிற்கு ட்விட்டர் பிடிப்பதில்லை.

அதனால் அந்தப்பக்கமே போவதில்லை. தற்போது நான் பின்தொடருவது இரண்டே பேர் தான். ஒன்று தலைவர் இன்னொன்று தலைவி மாளவிகா 🙂 . இதுல பலரும், கேட்ட கேள்வியையே கேட்டுட்டு இருக்காங்க.. அவரும் சளைக்காமல் பதில் கூறிக் கொண்டு இருக்கிறார்.

மாளவிகாவிற்கு கன்னடம். ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு பேசத் தெரியும். ஆங்கிலம் இந்தி எழுதத் தெரியும். கன்னடம் தாய்மொழி. அஜித் பிடித்த நடிகர்.

இதில் ஒரு கேள்விக்கு “”உன்னைத் தேடி” படத்தில் எனக்கு ஆடவே தெரியாததால் அஜித் சத்தம் போட்டார்” என்று கூறி இருக்கிறார். கிர்ர்ர் தல இது நியாயமா!

தலைவி அப்ப எப்படியோ அவர் இறுதியாக நடித்த படங்களில் (நடித்ததே கொஞ்சம் தான்) இவர் ஆட்டத்தைப் பார்த்து தலை கிறுகிறுத்து போய் இருக்கேன். பின்னர் இவர் பற்றி தனியாக ஒரு இடுகை எழுதுகிறேன்.

“மச்சக்காரன்” பாடல் நல்ல தரமான காணொளி தேடிட்டு இருக்கிறேன். YouTube ல ரொம்ப சுமாராக இருக்கிறது… ! தல இந்த ஆட்டத்தைப் பார்த்தால் தலை சுற்றி விழுந்துடுவாரு 🙂 .

மாளவிகா ரசிகர்களே! https://twitter.com/actormalavika சென்று அவரைப் பின்தொடர்ந்து உங்கள் பெருவாரியான ஆதரவைக் கொடுங்கள்.

மாளவிகாவே என்னடாது இவ்வளோ பேர் வராங்களே என்று குழம்பிடனும் 🙂 🙂 . என்னது.. யாருமே எட்டி கூடப் பார்க்க மாட்டீங்களா..! அப்படியெல்லாம் சொல்லப்படாது 🙂 .

மோடி ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் / ஒரு வருடம் கழித்து விமர்சிக்கலாம் என்றால், அதற்குள் ஏகப்பட்ட சர்ச்சைகள். வந்த வேகத்தில் எதையெல்லாம் செய்ய மாட்டோம் என்றார்களோ அதையெல்லாம் “மம்மம் சிங்”கை விட மிக வேகமாக செய்து வருகிறார்கள்.

தனியார் முதலீடு, மரபணு மாற்று விதை இதை இரண்டையும் அநியாயத்திற்கு வேகமாக அனுமதித்து இருக்கிறார்கள். இது இரண்டுமே மிக முக்கியமானது.  இது பற்றி பின்னர் எழுதுகிறேன்.

ற்போது தான் AAI (Airport Authority of India) தூக்கத்தில் இருந்து எழுந்து இருக்கிறது போல. இரண்டு வாரத்தில்!! சென்னை விமான நிலையப் பிரச்சனைகளை சரி செய்யப் போகிறார்களாம்.

2000+ கோடியை செலவு செய்து, 7 வருடம் கூடிக் கட்டி முழுப் பயன்பாட்டிற்கு வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் இந்த நிலைமை.

யோவ்! சத்தியமா சொல்றேன்.. மக்கள் பணத்தைத் கொள்ளை அடித்து உளுத்துப் போன கட்டிடத்தை கட்டியவர்கள் நல்லாவே இருக்க மாட்டீங்க. எத்தனை கொள்ளை அடித்து இப்படி சம்பாதித்தாலும் நாசமாத்தான் போவீங்க.

பேஸ்புக்ல நாம அப்புறமா, நேரம் இருக்கும் போது படிக்க வசதியா “Save” வசதி கொண்டு வந்து இருக்கிறார்கள்.

நாம் கைத்தொலைபேசியில் ஃபேஸ்புக் பார்த்துட்டு இருப்போம், அப்புறம் படிக்கலாம் என்று நினைப்போம் ஆனால், ஏகப்பட்டது இது போல வருவதால் கடலில் கரைத்த பெருங்காயம் போல கலந்து விடும்.

இதன் மூலம் சேமித்து வைத்து விட்டால், நமக்கு நேரம் கிடைக்கும் போது தவறவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இந்த வசதியை நீண்ட காலமாக எதிர்பார்த்துட்டு இருக்கிறேன், தற்போது தான் வந்து இருக்கிறது ஆனால், இந்த வசதி அனைத்து நிலைத்தகவலுக்கும் (Status) தெரிவதில்லை, சுட்டிகளுக்கு (லிங்க்) மட்டுமே வருகிறது.

என்னன்னு புரியலை.

ரு கட்டுரை எழுதி வெளியிட்ட பிறகு அதில் சில திருத்தங்கள் சில நேரங்களில் தோன்றும். இங்கே மாற்றி விட்டாலும், மின்னஞ்சலில் அப்படியே தான் இருக்கும் ஆனால், ரீடரில் SYNC செய்தால் புதுப்பித்து விடும்.

எனவே மின்னனஞ்சல் வெளியாகும் நேரத்தை தள்ளி வைத்தேன். இருப்பினும் சில நேரங்களில் நேரமின்மையால் அடுத்த நாள் கூட கவனிக்க வேண்டியது இருக்கும். அந்த சமயங்களில் மின்னஞ்சலில் சென்றது சென்றது தான்.

இது போல கடந்த வாரம் எழுதிய இந்தித் திணிப்பும் மொழி அழிப்பும் கட்டுரையில் நண்பர் யாசின் சுட்டிக்காட்டிய பிறகு சில வார்த்தைகளில் திருத்தம் செய்தேன் ஆனால், மின்னஞ்சலில் ஒன்றும் செய்ய முடியாது.

இதில் இந்தக் கட்டுரை அங்கே இங்கே சென்று இறுதியில் எனக்கே என் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார்.

எனவே Full Feed கொடுப்பதை நிறுத்தலாம் என்று இருக்கிறேன். இதன் அர்த்தம் என்னவென்றால் மின்னஞ்சல், ரீடரில் படிப்பவர்களுக்கு முழுக் கட்டுரையும் வராது. படிக்க என்னுடைய தளத்திற்குத் தான் வர வேண்டும்.

படிப்பவர்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று தான் என்னுடைய தளத்தை வடிவமைத்து இருக்கிறேன்.

அதே போல சிலர் நேரடியாக ஒவ்வொரு முறையும் இங்கே வந்து படிக்க முடியாது, சிலருக்கு அலுவலகத்தில் தடை இருக்கும். இதன் காரணமாக இதைச் செய்யாமல் இருந்தேன் ஆனால், சில சங்கடங்களை தவிர்க்க இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

எப்போது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியை செம்மையா எல்லோரும் கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க. கடந்த முறையும் இது போல விமர்சனங்கள் இருந்தாலும், இந்த முறை போல ரொம்ப மோசமாக இல்லை.

இவர்களுக்கு ஒரு விஷயத்தை எப்படி கொடுக்கணும் என்ற வித்தை தெரிந்து இருப்பதால், சுமாரான நிகழ்ச்சிகளைக் கூட அனைவரையும் ஆர்வமாகப் பார்க்க வைத்து விடுகிறார்கள். எது எப்படியோ நான் இந்த தொலைக்காட்சிகளைப் பார்ப்பது இல்லை.

எனவே, ஃபேஸ்புக்கில் மற்றவர்கள் பேசுவதை வைத்து தெரிந்து கொள்வது தான். இல்லையென்றால் நண்பர்கள் யாராவது YouTube சுட்டிகளைக் கொடுப்பார்கள், அதன் மூலம் பார்ப்பேன்.

ஒல்லி பெல்லி நிகழ்ச்சியில் ஒரு பெண் 48 கிலோ எடையைக் குறைத்து முதல் இடம் பெற்றார். 47 கிலோ எடை குறைத்து இரண்டாவது இடம் பெற்றவர் கண்கள் கலங்கி விட்டது. ஒரு கிலோ எடையில் முதல் இடம் போச்சே என்று. கொஞ்சம் யோசித்துப் பாருங்க..

இதற்கு முன்பு 100+ கிலோ இருந்தார், தற்போது கிட்டத்தட்ட பாதி குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு பக்காவாகி விட்டார். இதுவே மிகப் பெரிய சாதனை தான் ஆனாலும், மனம் இண்டாவது இடம் பெற்றதை நினைத்து அந்த பெரிய சந்தோசத்தை மறந்து இந்த சின்னக் கவலைக்கு முழு மனதையும் கொடுத்து விடுகிறது.

மனித மனம் விசித்திரமானது. நிதர்சனம் என்னவென்றால் இவரைப் போலத் தான் நாம் எல்லோருமே!

Nature

நீங்கள் இயற்கையில் ஆர்வம் கொண்டவரா? ஆசை இருந்தும் மரம் / செடி வளர்க்க இடமில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? ஒருவர் வீட்டுத் தோட்டம் பற்றி எழுதி வருகிறார். ரொம்ப நன்றாக இருக்கிறது.

இதில் அவர் வெளியிடும் படங்களும் ரொம்பத் தெளிவாக இருக்கிறது. அந்தப் படங்களையும் அவர் செடிகளைப் பராமரிக்கும் ஒழுங்கையும் பார்த்தாலே நமக்குப் பொறாமையாக இருக்கும். எனக்கு இயற்கையின் மீது ரொம்ப ஆர்வம்.

எங்கள் வீட்டில் நான் வைத்த செடி இன்று மரமாகி அட்டகாசமாக வளர்ந்து இருக்கிறது. வீட்டுக்கு வருபவர்கள் அனைவரும் இந்த மரத்தைப் பற்றிக் கேட்காமல் செல்வதில்லை. என் அம்மா இது பற்றிக் கூறும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கும்.

என்னோட பையனும் மரம் வளர்ப்பதில் என்னைப் போல ஆர்வமாக இருப்பது அறிந்து ரொம்ப மகிழ்ச்சி. Image Credit – malenaadu.wordpress.com

எனக்கு இந்த ஐடி வேலையில் ஆர்வமே இல்லை. இது போன்ற இயற்கை சம்பந்தப்பட்ட பணிகளில் தான் ஆர்வம். என்ன செய்வது நம்ம ஆசையை விட நிதர்சனம் வேறாக இருக்கிறதே! என்னது இது… நான் எதோ சொல்ல வந்து இது வேற எங்கேயோ போய் விட்டது.

ஆமாங்க இவர் “வீட்டுத் தோட்டம்” ரொம்ப நன்றாகச் செய்து வருகிறார். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் நிச்சயம் இந்தத் தளத்தைச் சென்று படியுங்கள். http://thooddam.blogspot.in

குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறனுடன் (IQ) வயதானவர்கள் போட்டி போட முடிவதில்லை. நாம் ஒரு தொழில்நுட்ப விசயத்தை குழந்தைகளிடம் கூறினால், அவர்கள் உடனே அல்லது இரண்டு முறையில் புரிந்து கொள்கிறார்கள்.

அதையே வயதானவர்களிடம் கூறினால், அவர்களுக்கு புரிவதே இல்லை. எங்கள் வீட்டில் ஏர்டெல் DTH போட்டோம். அதில் என் அம்மா, “எப்படி பயன்படுத்துவதே என்றே தெரியலை… ரிமோட்டில் எதை அமுக்குவதே என்று தெரியலை” என்று புலம்புவார்கள்.

என் பையன் வினய் தான் என் அம்மாவிற்கு போட்டுக் கொடுப்பான். அம்மா, “தம்பி! இவன் கிட்ட கேட்டா.. என்னங்க ஆயா! உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை என்று கிண்டல் பண்ணுறான்.. இவனுக்கு பயந்துட்டே நான் பழைய கேபிள் டிவியில் பார்க்கிறேன்” என்று கூறுவார்கள்.

அம்மா! அதுல ஒண்ணுமே இல்லைங்கம்மா.. ரொம்ப எளிது என்றாலும், “அது என்னமோ எனக்கு புரியவே மாட்டேங்குது. இவனைக் கேட்டால், என்னை ஓட்டுறான் அதனால நான் அதைப் போடுறதே இல்லை. இவன் (வினய்) தான் பார்த்துட்டு இருக்கிறான்” என்று கூறுவார்கள்.

எப்படிப் பெரியவர்கள் இவற்றை புரிந்து கொள்ள சிரமப் படுகிறார்கள், குழந்தைகள் உடனே புரிந்து கொள்கிறார்கள் என்று எனக்கு குழப்பமாக இருக்கும்.

வினய் கிட்ட அவனுக்கு புரியாதுன்னு நினைத்து இரண்டாவது முறை கூற முயற்சித்தால், அதெல்லாம் எனக்குத் தெரியும் என்று கொஞ்சம் தடவினாலும் செய்து விடுவான்.

ஏன் வயதானவர்களுக்கு இது பிடிபடுவதில்லை?! இதை நீங்களும் உங்கள் வீட்டிலும் எதிர்கொண்டு இருக்கலாம்.

வினய்க்கு என்னைப் போல நகைச்சுவை உணர்வும், கிண்டல் பண்ணுற வேலையும் அதிகம். என் அம்மா கிட்ட வந்து வேண்டும் என்றே “How are you? What you are doing?” என்று கேட்பான். என் அம்மா “தம்பி இவன் என்னமோ கேட்கிறான்.. ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.

கிண்டல் பண்ணிட்டே இருக்கிறான்” என்று கூறுவார்கள். செம்ம சிரிப்பாக இருக்கும். “அம்மா.. அவன் சும்மா இரண்டை தெரிந்து வைத்துட்டு உங்களை கலாயிக்கிறான்” என்றால், “ஆமா! இவன் வேண்டும் என்றே என்கிட்டே இங்க்லீஷ்ல!!! பேசுறான்” என்பார்கள் 🙂 .

எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இவனுக்கு விளையாட தாத்தா / பாட்டி இருக்கிறார்கள் ஆனால், எனக்கு இது போல வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம். நாம் சொல்லும் போது அம்மா அப்பா / தாத்தா பாட்டி என்று சொல்றோம்.

எப்படி இந்த வரிசை அமைந்தது? எப்படி முதலில் அம்மாவும் தாத்தாவும் வந்தார்கள்?!

{ 7 comments… add one }
 • janaki July 28, 2014, 2:40 PM

  //மாளவிகா ரசிகர்களே! https://twitter.com/actormalavika சென்று அவரைப் பின்தொடர்ந்து உங்கள் பெருவாரியான ஆதரவைக் கொடுங்கள். மாளவிகாவே என்னடாது இவ்வளோ பேர் வராங்களே என்று குழம்பிடனும்
  //பின்னர் இவர் பற்றி தனியாக ஒரு இடுகை எழுதுகிறேன்.

  தனியாக ஒரு இடுகையா…Oh my Goodness

  Is this really giri anna or someone else has stolen his admin ryts???

 • Srinivasan July 28, 2014, 8:36 PM

  அன்புள்ள கிரி,

  நீங்கள் மாளவிகாவின் பரம ரசிகர் என்று உங்களைப் பல வருடங்களாகப் பின் தொடருவதால் நன்றாகத் தெரியும். நீங்கள் இன்னமும் மாறாமல் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் தனி இடுகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்…

 • அரிகரன் July 29, 2014, 1:41 PM

  மாளவிகா பதிவுக்கு வெயிட்டிங் 🙂 அப்ப இனி மெயில்ல படிக்க முடியாதா 🙁

 • கிரி July 30, 2014, 8:55 AM

  @ஜானகி நீங்கள் சமீபமாக படிக்கிறீர்கள் என்பதால் உங்களுக்குத் தெரியவில்லை. இங்கே அனைத்துமே பகிரப்படும் எல்லை தாண்டாமல். நான் நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை 🙂

  @ஸ்ரீநிவாசன் & அரிகரன் நான் மச்சக்காரன் படத்தில் வரும் நெல்லையில மண்ணெடுத்து பாடல் நல்ல தரமான காணொளிக்காக காத்திருக்கிறேன். பழைய படம் என்பதால், VCD தரத்தில் தான் இருக்கிறது. எனவே வாங்கியும் பயனில்லாமல் போய் விட்டது. தேடிட்டு இருக்கிறேன் 🙂 இது வந்தவுடன் தான் எழுதணும்.

  மெயிலில் இனி படிக்க முடியாது.. இன்னும் சில வாரங்களில் இதை செயல்படுத்தி விடுவேன்.

 • Mohamed Yasin July 30, 2014, 6:06 PM

  கிரி.. சிறு வயதிலிருந்தே விவசாய குடும்பத்திலிருந்து வந்ததால் இயற்கையின் மீது என்றும் காதல் கொண்டவன் நான்..(http://thooddam.blogspot.in/) அறிமுகத்திற்கு நன்றி.. இதுபோன்ற தளங்களை என்றும் விரும்புபவன்..

  குழந்தைகளின் குறும்புகள் என்றும் அழகானவையே!!! அதுவும் அண்ணன், தம்பிகள் என்றால் சொல்லவே தேவையில்லை…தாத்தா/பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வது மிக பெரிய பாக்கியம் கிரி… அந்த வகையில் நானும் அதிஷ்டகாரனே!!!

 • surya August 11, 2014, 7:30 AM

  மாளவிகா பதிவுக்கு வெயிட்டிங்—தங்க தலைவி வாழ்க வாழ்க repeatu

 • iK way August 23, 2014, 1:48 PM

Leave a Comment