அரிமா நம்பி [2014]

யக்குனர் முருகதாஸிடம் “துப்பாக்கி”, “ஏழாம் அறிவு” உதவி இயக்குனராக இருந்த “ஆனந்த் ஷங்கர்” இயக்கி இருக்கும் படம். படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்.

இரண்டு நாள் பழக்கத்தில் விக்ரம் பிரபுவை, ப்ரியா ஆனந்த் தனது வீட்டிற்கு அழைக்கிறார். இவரும் அங்கு செல்ல, இருவர் ப்ரியா ஆனந்தை கடத்துகிறார்கள். ஏன் கடத்துகிறார்கள்? அதன் பிறகு என்ன ஆகிறது என்பதை பரபர திரைக்கதையில் கூறி இருக்கிறார்கள்.

பேர் கூடப் போடாமல் படம் துவங்கி விடுகிறது. விக்ரம் பிரபு ஒரு பாட்டைப் பாடியே ப்ரியா ஆனந்தை உஷார் செய்து விடுகிறார். இதைத் தமிழ்ப் பாடல் என்று கூறித் தான் பாடுகிறார் ஆனால், நான் துவக்கத்தில் ஆங்கிலப்பாடல் என்று நினைத்து இருந்தேன் 🙂 .

ப்ரியா ஆனந்த் செம்மையாக சரக்கு அடிக்கிறார். இதற்கு யாரும் போராட்டம் செய்வார்களா என்ற தெரியவில்லை. ப்ரியா ஆனந்தை பார்க்கும் போதெல்லாம் ஒன்று நினைவிற்கு வந்து விடுகிறது. சில நேரங்களில் சில விசயங்கள் மறந்து விடுகிறது சில விசயங்கள் மறப்பதே இல்லை.

சரி விடுங்க.. கதைக்கு வருகிறேன். படம் தொடங்கி 20 நிமிடத்தில் ப்ரியா ஆனந்தை கடத்தியவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு, படம் முடியும் போது தான் நிற்கிறது. நிஜமாகவே படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.

படத்தில் நிறைய லாஜிக் பிரச்சனைகள் இருக்கிறது. இருப்பினும் படம் விறுவிறுப்பாகச் செல்வதால், நாம் வழக்கம் போல அதையெல்லாம் புறக்கணிக்க வேண்டியதாக இருக்கிறது.

நடைமுறையில் ஒரு சாதாரண நபரால் சாத்தியமே இல்லாத ஒன்றை விக்ரம் பிரபு படம் முழுக்க செய்கிறார் உடன் மற்றவர்களும் ஆனாலும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு இருப்பதால், தெரிந்தும் படத்தோடு பயணிக்கிறோம்.

வில்லனாக சக்கரவர்த்தி. வயது குறைவாக இருப்பதால், இந்தக் கதாப்பாத்திரத்திற்கு இவருக்குப் பதிலாக வேறு ஒருவரை போட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அரசியல்வாதியாகவும் அடுத்த பிரதமராக வரக்கூடிய அளவிற்கு இருக்கும் நபராக இவரை காட்டும் போது நம்புகிற மாதிரி இல்லை ஆனால், விக்ரம் பிரபுவை துரத்தும் போது சக்கரவர்த்தி அவரைப் பிடிக்க லாஜிக்காக தனது மூளையைப் பயன்படுத்தும் சமயத்தில் பொருத்தமாக இருக்கிறார்.

படத்தில் தொழில்நுட்ப விஷயங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது குறித்த அறிவு இல்லாதவர்களுக்கு இதைப் பார்க்க கொஞ்சம் கடுப்பாகலாம். தற்போதைய இளவட்டங்களுக்கு இதைப் பார்க்க சுவாரசியமாகவே இருக்கும்.

இதில் 7 நிமிட அளவுள்ள ஒரு காணொளியை YouTube ல் தரவேற்றம் (Upload) செய்ய இவர்கள் எடுக்கும் நேரமெல்லாம் பார்க்க கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கிறது.

சித்தார்த் நடித்த “உதயம் NH 47” படத்தில் மொபைல் மூலம் ஒருவரை எப்படி எல்லாம் பின்தொடரலாம் என்று அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துக் கூறினார்கள்.

இந்தப் படம் பார்த்ததில் இருந்து இது சம்பந்தப்பட்ட காட்சி எது வந்தாலும் இந்தப் படத்தைத் தான் நினைக்கத் தோன்றுகிறது. அரிமா நம்பியிலும் இது தொடர்பான காட்சிகள் வருகிறது.

இது விமர்சனத்திற்கு சம்பந்தம் இல்லை என்றாலும், ஒன்றைக் கூற விரும்புகிறேன். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவுமே இல்லை.

நம்மை எவர் வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் கண்காணிக்க முடிகிறது, எங்கும் நமக்கும் பாதுகாப்பில்லை எனும் போது உண்மையாகவே எரிச்சலாக உள்ளது.

எப்படி வேண்டும் என்றாலும் தற்போது உள்ள தொழில் நுட்பத்தின் மூலம் ஒருத்தரை பின்தொடர்ந்து கொண்டே இருக்க முடிகிறது.  எதுவும் பாதுகாப்பில்லை. இந்தப் படம் பார்த்த பொழுது இது தான் தோன்றியது.

உண்மையில் நம் ஊரில் இது போல அனைத்துக் காட்சிகளும் சாத்தியமா என்பது தெரியவில்லை (தொழில்நுட்பக் கட்டமைப்பை வைத்துக் கூறுகிறேன்) ஆனால், வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை.

விண்டோஸ் மீடியா பிளேயரில் நம்ம கேப்டன் ரமணாவில் தட்டச்சு செய்தது, இன்னொரு படத்தில் ஹார்ட் டிஸ்க்கை வெடிகுண்டு என்று கூறி சிரிப்பாக்கிய நிலைகளில் இருந்து தற்போது தமிழ் படங்களில் தொழில்நுட்பக் காட்சிகள் முன்னேற்றம் அடைந்து இருப்பது பார்க்க சந்தோசமாகவே உள்ளது.

விக்ரம் பிரபு பல காட்சிகளில் யார் கண்ணிலும் படாமல்!! செல்வது கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லை. Yog Japee (சூது கவ்வும் படத்தில் காவல் அதிகாரியாக வருபவர்) இதில் காவல் ஆணையாளராக வருகிறார்.

இவருக்கு குறிப்பிடத்தக்க அளவில் நடிக்க வாய்ப்பு. சக்ரவர்த்தி நடிப்பு எந்த மாற்றமும் இல்லாமல் அப்போது இருந்து ஒரே மாதிரி இருக்கிறது. “சத்யா” இந்திப் படத்தில் அவரின் நடிப்பு அசத்தலாக இருக்கும்.

அதன் பிறகு அது போல ஒரு நடிப்பை இன்னும் ஒரு படத்தில் கூட காணவில்லை, இதிலும் சேர்த்து.

சண்டைக் காட்சிகளில் ராஜசேகர் கேமரா விளையாடி இருக்கிறது. மிகக் குறுகிய சந்துகளில் ஓடுவதையும், சண்டைப்போடுவதையும் பரபரப்பாகப் படமாக்கி இருக்கிறார். மிகச் சிரமப்பட்டுத் தான் எடுத்து இருப்பார்கள்.

படம் நெடுக முக்கியமான சாலைகள் நெரிசல் மிகுந்த இடங்கள் என்று பல இடங்களில் எடுத்து இருக்கிறார்கள். நன்றாக உள்ளது. சண்டைக் காட்சிகளில் வில்லன் சுடும் போது தமிழ்ப் படங்களில் கை வைத்து மறைத்து ஓடினால் குண்டு படாது.

இந்தக் காட்சிகளை எல்லாம் தமிழ்ப் படங்களில் எப்போது தவிர்ப்பார்கள்?! விக்ரம் பிரபு கையை வைத்து மறைத்தபடியே அனைத்துக் குண்டுகளையும் சமாளித்து! விடுகிறார்.

படம் நெடுக பலரை போட்டுத் தள்ளிக்கொண்டு இருக்கிறார், கேட்பார் யாருமே இல்லை. இசையில் பின்னணி இசை தவிர்த்து குறிப்பிடும்படி இல்லை. இசை நம்ம ட்ரம்ஸ் மணி.

ப்ரியா ஆனந்த் நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை ஆனாலும் மோசமில்லை.

இறுதியில் சக்கரவர்த்தியை மாட்டி விடும் காட்சியில் தொலைக்காட்சியைப் பார்க்கும் முக்கிய வட நாட்டு அரசியல்வாதி தமிழ் புரியாமல் இந்தியில் கேட்கும் போது சமீபத்தில் நடந்த இந்தி சர்ச்சையை மனதில் வைத்து படம் பார்ப்பவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.

என்னது நானா..! ஹி ஹி நானில்லாமையா 🙂 . நகைச்சுவை என்பது மிஞ்சிப் போனால் மூன்று காட்சிகளில் இருக்கலாம் ஆனால், இந்தப் படத்திற்கு நகைச்சுவை அவசியம் இல்லை.

படம் பார்க்கலாம், ஏமாற்றாது. குறிப்பாக இளவட்டங்களுக்கு ஏற்றப் படம். குழந்தைகளுடன் சென்றால் குழந்தைகளுக்கு சலிப்பாகலாம்.  மற்றபடி மற்றவர்கள் தாராளமாகச் சென்று பார்க்கலாம்.

படத்தில் இதெல்லாம் சாத்தியமா என்று யோசிக்காமல் பார்த்தால், துவக்கம் முதல் (20 நிமிடத்திற்குப் பிறகு) இறுதி வரை விறுவிறுப்பான படமே!

Directed by Anand Shankar
Produced by Kalaipuli S. Thanu
Written by Anand Shankar
Starring Vikram Prabhu, Priya Anand, J. D. Chakravarthy
Music by Sivamani
Cinematography R. D. Rajasekhar
Edited by Bhuvan Srinivasan
Production company Kalaipuli Films International
Release date(s) Worldwide release on July 4,2014
Country India
Language Tamil

{ 7 comments… add one }
 • Mohamed Yasin July 6, 2014, 12:40 PM

  அடுத்த வாரத்திலிருந்து இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் 2 மாதத்துக்கு வேறு எதையும் பார்பதாக இல்லை ..லாஜிக் பார்க்க ஆரம்பிச்சிடா எந்த படத்தையும் பார்க்க முடியாது, சொல்லப்போனால் நம்ம எவ்வளவோ பரவாயில்லை, பாலிவுட் படங்களை பார்க்கும் போது… பகிர்வுக்கு மகிழ்ச்சி கிரி..

 • ராஜ்குமார் July 7, 2014, 3:34 PM

  கமென்ட் பன்றத்துக்காக இந்த படத்தை நேத்து பார்த்தேன். நல்ல விமர்சனம்.. இந்த படத்தில் யூடியுப் அப்லோட் பண்ற காமெடியை பார்த்து தான் நான் ஆச்சர்யப்பட்டேன்.. இது மட்டுமன்றி பல்வேறு வலைத்தளங்கள் இருக்கும்போதிலும் இவர்கள் யூடியுப் பத்தி மட்டும் ஏன் போடணும்…? ட்ராப்பாக்ஸ் அப்படின்னா எதோ டிரங்க்பொட்டி அப்படின்னு நினைச்சுடுவாங்கன்னா ? ப்ளூடூத் மூலம் பரிமாற்றம் மெமரிகார்ட் காப்பிகள் என்றெல்லாம் அடிப்படை டெக்னாலஜி ஏகப்பட்டது இருக்கு. ஏ கிளாஸ் ஆடியன்சுக்கு தான் படம் எடுக்குறாங்கன்னு அவங்களுக்கே தெரியுது, அப்புறம் ஏனிந்த குழப்பம்.

  நம்மூருக்கு இருக்குற 3G டெக்னாலஜியில ஒரு கிரடிட் கார்டு ஸ்வைப் பண்ணியதும் உடனே டிராக் பண்றதும் நம்புறமாதிரி (எதோ பண்ணியிருக்காங்க) இல்லை. நல்ல வேலை ஆதார் கார்ட நிப்பாட்டியாச்சி… இல்லைன்னா ஹீரோ இந்த கைரேகையை வச்சி டிராக் பண்றமாதிரி காட்சிகள் இருந்திருக்கும்.

 • கிரி July 9, 2014, 2:12 PM

  @யாசின் இரண்டு மாசத்துக்கா போட்டிகள் நடக்குது. நாளை காலை அலாரம் வைத்து ஃபுட்பால் பார்க்கலாம் என்று இருக்கிறேன் 🙂

  @ராஜ்குமார் Dropbox பற்றி அனைவருக்கும் தெரியாது ஆனால், YouTube பற்றி பலருக்குத் தெரியும். எனவே இது சரி தான். இதை கொஞ்சம் நம்பகத் தன்மையுடன் எடுத்து இருந்து இருக்கலாம். அதோட அது YouTube தளமே இல்லை..! 🙂

 • tbr.joseph July 12, 2014, 9:00 AM

  இன்னும் படம் பார்க்கவில்லை. உங்களுடைய விமர்சனம் அதை பார்க்க தூண்டுகிறது. நன்றி.

 • Thamizhchelvan July 15, 2014, 7:14 PM

  //இதில் 7 நிமிட அளவுள்ள ஒரு காணொளியை YouTube ல் தரவேற்றம் (Upload) செய்ய இவர்கள் எடுக்கும் நேரமெல்லாம் பார்க்க கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கிறது.//

  It’s in India Giri 🙂

 • Srinivasan July 21, 2014, 8:36 PM

  நேற்று தான் இந்தப் படம் பார்க்க முடிந்தது. என் மனதில் என்ன தோன்றியதோ அதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும். ப்ரியா ஆனந்த் பற்றிய உங்கள் வர்ணனையில் குறும்பு சொட்டுகிறது 🙂

  நம்ம ட்ரம்ஸ் சிவமணி கொடுத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று தோன்றியது. தேவையே இல்லாத இடத்தில் ஸ்பீட் பிரேக்கர் மாதிரி ஒரு பாடல் வேறு.

  நீங்கள் கூறியிருப்பது போல் பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படம் விறுவிறுப்பாகச் சென்றது. வில்லன் சக்கரவர்த்தி பல இடங்களில் நமது கமல் ஹாசனை நினைவு படுத்தினார்.

  விக்ரம் பிரபு மூக்கு தான் முதலில் படுத்தினாலும் பிறகு பழகி விட்டது 🙂

 • Sam October 15, 2014, 1:44 PM

  Same blood… You too like Priya Anand… 🙂
  She is something different.. right ?

Leave a Comment