சிங்கப்பூர் சுற்றுலா – 1

ரில் இருந்து கோடை விடுமுறைக்கு குடும்பத்தினர் வந்து இருப்பதால், வார இறுதியில் சிங்கப்பூரில் சில இடங்களை சுற்றிக் காட்டிக்கொண்டு இருக்கிறேன்.

சுற்றிக் காட்டுவது பிரச்சனையில்லை இவனுக இரண்டு பேரை சமாளிப்பது தான் மிகப்பெரிய வேலையாக இருக்கிறது.

MRT மற்றும் பேருந்தில் இரண்டு பேரையும் உட்கார வைத்து அழைத்துச் செல்வது எனக்கு கார்கில் போரில் கலந்து கொண்டு வருவது போல இருக்கிறது. 10 நொடிகள் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்கள்.

சின்னவன் சும்மா இருந்தாலும் பெரியவன் வினய் ஏதாவது கிண்டி விட்டு விடுகிறான்.

“எத்தனை நிறுத்தம் இருக்கிறது?” என்று கேட்பான்.. 4 என்றால்.. அடுத்த நிறுத்தத்தில் மறுபடியும் “இன்னும் எத்தனை நிறுத்தம்?” அடுத்த நிறுத்தத்தில் “இங்கே இறங்கலாமா”…!! ஸ்ஸ்ஸ் முடியல்ல்ல்ல்ல.

யுவன் நெண்டிட்டெ இருப்பான்.. என் மனைவி தான் பாவம் ஒரு வழி ஆகிட்டார். இரண்டு பேரும் நகமும் சதையும் மாதிரி. அதுவும் யுவன் வினயை விட்டுட்டு இருக்கவே மாட்டேன்.

அண்ணா அண்ணா! என்று ஒரே பாசமலர் சிவாஜி மாதிரி பாச மழை பொழிந்துட்டு பின்னாடியே சுற்றிட்டு இருப்பான்.

இவனுக இரண்டு பேரும் தனித்தனியாக இருந்தால் யுவன் “புயலுக்குப் பின் அமைதி” மாதிரி இருப்பான் ஆனால், வினய் அப்பவும் சும்மா இருக்க மாட்டான்.

ஆத்தா வையும் சந்தைக்கு போகணும் காசு கொடுங்கற மாதிரி கேள்விகளாகக் கேட்டு என்னை தலை கிறுகிறுக்க வைத்துடுவான்.

இவனை நம்ம “மம்மம் சிங்” கிட்ட அனுப்பலாமா என்று யோசிக்கிறேன்.. இவன் கேட்குற கேள்விகளில் கடுப்பாகி கொஞ்சம் “வாயைத் திறப்பார்” என்று நினைக்கிறேன். இனி வாயைத் திறந்தா என்ன திறக்காட்டி என்னன்னு சொல்றீங்களா… ரைட்டு விடுங்க 🙂 .

நாங்கள் சென்ற இடங்களைப் பற்றி குட்டித்!! தகவல்களாகக் கூறுகிறேன்.

பறவைகள் பூங்கா

சிங்கப்பூர் வந்து 7 வருடங்கள் ஆகி விட்டாலும் நான் இது தான் முதல் முறையாகச் செல்வது. அதென்னமோ இங்கெல்லாம் செல்ல ஆர்வம் இருப்பதில்லை. சிங்கப்பூரில் தற்போது சுற்றுலா கட்டணங்கள் அதிகம் ஆகி விட்டது போல தோன்றுகிறது.

Zoo & Bird Park எல்லாம் குறைந்தது 25 டாலர் நுழைவுக் கட்டணம் வருகிறது [நம்ம பணத்தில் 1200 INR வருகிறது (01-05-2014)]. இணையத்தில் முன்பதிவு செய்தால் 20% தள்ளுபடி, இருப்பினும் இந்தக் கட்டணம் அதிகம் என்பது என்னுடைய கருத்து.

சிங்கப்பூரில் தனியார் அல்லது அரசாங்கம் எதுவாக இருந்தாலும் கட்டணம் அதிகமோ குறைவோ மிகச் சிறப்பாகப் பராமரிப்பார்கள். அதைவிட அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை மிக அருமையாக இருக்கும். மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.

எனக்கு பொது மக்களிடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டு இருந்தாலும், இது போன்ற இடங்களில், அரசு அலுவலகங்களில் இன்று வரை ஒரு குறையும் கண்டதில்லை.

என்ன கேட்டாலும் புன் சிரிப்புடன் பதில் அளிப்பார்கள் மற்றும் மிகவும் அன்பாக நடந்து கொள்வார்கள். எங்காவது ஒன்றிண்டு பேர் கொஞ்சம் கடுமையாக நடந்து இருந்து இருக்கலாம்.

இங்கே உள்ள பறவைகள் பூங்கா மிகச் சிறப்பாக இருந்தாலும், எனக்கு கடந்த முறை மலேசியா “லங்காவி” யில் சென்ற பறவைகள் பூங்காவுடன் ஒப்பிடும் போது இது மனநிறைவைத் தரவில்லை. லங்காவியில் மிக அருமையாக இருந்தது.

பல பறவைகள் கூண்டில் அடைக்கப்படவே இல்லை ஆனாலும் அவை எங்கும் பறந்து செல்லவில்லை. ரொம்ப சுந்ததிரமாக இருந்தது. இங்கே பறவைகளை கூண்டினுள் அடைத்து வைத்து அதை நாம் கும்பல் கும்பலாக பார்ப்பது சங்கடமாக இருக்கிறது.

அவற்றின் சுதந்திரத்தை இப்படி கூண்டிற்குள் அடைத்து விட்டார்களே என்று பார்க்கவே பாவமாக இருக்கிறது. “டேய்.. வெண்ணை வெட்டிகளா! எங்களை இப்படி உள்ளே வைத்து பூட்டி விட்டு.. இப்படி பார்த்துட்டே போறீங்களேடா…! என்று நினைக்குமோ 🙂 .

என்ன ஒன்று.. இங்கே கூண்டுகள் பறவைகளுக்கு அருமையாக மரங்கள் சூழ்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கும், அதோடு உணவுகளும் சரியாக கொடுக்கப்படும்.

இங்க ட்ராம் (ரயில் போல) உள்ளது. இதற்குத் தனிக் கட்டணம். விருப்பப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் குழந்தைகளைத் தள்ளி வரும் ட்ராலி தாராளமாக எங்கும் கொண்டு செல்லும் வசதி இங்கேயும் உள்ளதால், சக்கர நாற்காழியில் வருபவர்கள், குழந்தைகள் ட்ராலிகளை தள்ளி வருபவர்களுக்கு எளிது.

இங்கே ஒரு இடத்தில் சாப்பிட அமர்ந்து இருந்த போது தனியாக வந்த குட்டிக் கிளி யுவனை துரத்திக்கொண்டே இருந்தது ஆனால்,  கொஞ்சம் கூட பயப்படவில்லை. இளங்கிளி பயமறியாது போல 🙂 பின்னர் எங்கள் அனைவரையும் துரத்தியது.

விரலைக் காட்டினால் பயப்பட்டு ஒதுங்காமல் விரலைக் கடிக்கிறது. கடித்ததில் எனக்கு சிறு அளவில் ரத்தமே வந்து விட்டது. அங்கே அத்தனை பேர் இருந்தும் யுவன் கூடத் தான் விளையாடிக் கொண்டு இருந்தது.

யுவன் பயந்து ஓடுவதைப் பார்த்து வினய் “பயந்தாங்கொள்ளி” என்று கூறி கிளி கிட்டப் போக.. திரும்ப இவனைத் துரத்தியதும் “தைரியசாலி” மேசை மேலே ஏறி அடைக்கலமாகி விட்டான் 🙂 .

நான் நிழல்படம் எடுக்க முயற்சிக்கும் போது கொஞ்சமும் பயப்படாமல் “நிமிர்ந்து நில் திடம் கொண்டு போராடு” என்று வசனம் பேசுவது மாதிரி தில்லாக நின்று கொண்டு இருக்கிறது.

மேலே இருக்கும் படம் ஜூம் செய்து எடுத்தது என்று நினைக்க வேண்டாம். வெகு அருகிலேயே கேமரா வைத்து எடுத்தேன்.. பயக்காமல் போஸ் கொடுத்தது.

இது காலுக்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருந்ததால், எங்காவது காலில் மிதிபட்டு சட்னி ஆகி விட்டால் என்னாவது என்று கிளம்பி விட்டோம்.

எனக்கு கடைசி வரை இந்தக் கிளி தில்லாக நின்றதை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. “நான் தான் உங்கொப்பன்டா நல்ல முத்து பேரன்டா வாடா டேய்!” என்று பாட்டுப் பாடி விடுமோ என்று சந்தேகம் வந்து விட்டது 😀 .

Read: மலேசியா லங்காவி பயணம் – பறவைகள் பூங்கா

விலங்குகள் சரணாலயம்

இங்கே ஏற்கனவே நண்பர் முத்துவுடன் சென்று இருக்கிறேன் ஆனால், பல இடங்கள் நினைவே இல்லை. இங்கே பறவைகள் பூங்காவை விட கொஞ்சம் கட்டணம் அதிகம். இணையத்தில் முன்பதிவு செய்தால் 20% தள்ளுபடி. ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்.

நாம் முன்பதிவு செய்தால் நமக்கு PDF ல் கட்டணத் தகவல் மின்னஞ்சலுக்கு வந்து விடும்.

நாம் இதை பூங்காவினுள் செல்லும் போது நேரடியாகவே இதைக் காட்டினால் போதும் (Phone / Tablet) இதற்காக நாம் பிரிண்ட் எடுக்கத் தேவையில்லை இதைக் காட்டி திரும்ப கட்டணச் சீட்டு வாங்கவும் தேவையில்லை. ரொம்ப எளிது.

இங்கேயும் ட்ராம் உள்ளது. ஒரு முறை எடுத்தால் சுற்றிக்கொண்டே இருக்கலாம். பறவைகள் பூங்கா ட்ராம் விட விலங்குகள் சரணாலயம் ட்ராம் சுற்ற வசதியாக உள்ளது.

வெள்ளைப் புலி, சிங்கம், கொரில்லா, ஒட்டகச் சிவிங்கி, நீர் யானை, யானை, குரங்குகள் என்று வழக்கம் போல விலங்குகள் இருக்கின்றன.

வினயை அங்கேயே ஏதாவது ஒரு மரத்தில் குரங்கோடு சேர்த்து விட்டு விடலாமா என்று தீவிரமாக யோசித்தேன் ஆனால், குரங்குகள் பயந்து வேறு பக்கம் தப்பித்துச் சென்று விடும் என்பதால் முடிவை மாற்றிக்கொண்டேன் 🙂 .

“ஏன்டா! உன்னோட ஃப்ரண்ட்ஸோட போய் உட்கார்ந்துக்குறியா!” என்று கேட்டேன்.. “அப்படின்னா.. நீங்க தான் முதல் உட்காரனும்” என்றான்.. “சரி! அந்தப் பக்கம் குதிரை இருக்கிறது வா” என்று அழைத்துச் சென்று விட்டேன் 🙂 .

இங்கே விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் நேரம், பறவைகள் விளையாட்டு நேரம் என்று இருக்கும், அது போல சமயங்களில் நாம் நம் நேரத்தை திட்டமிட்டுக்கொண்டால் இவற்றைப் பார்க்க முடியும்.

நாங்கள் பறவைகள் விளையாட்டு மற்றும் வெள்ளைக்கரடி உணவு உண்ணும் நேரத்தில் சரியாக இருந்தோம். விலங்குகளை நன்றாக பராமரிக்கிறார்கள், வாடிக்கையாளர் சேவை நன்றாக இருக்கிறது என்பதைத் தவிர புதுமையாகக் கூற எதுவுமில்லை.

படகுச் சவாரி

இது சிங்கப்பூரில் பல இடங்களில் இருந்தாலும் நாங்கள் சென்றது Merlion Park என்ற இடத்தில். புரியும்படி கூறுவது என்றால் சிங்கப்பூர் என்றால், ஒரு சிங்கத்தின் வாயில் இருந்து தண்ணீர் வருவது போல ஒரு படத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அந்த இடம் தான் இது.

கொஞ்ச மாதங்கள் முன்பு பராமரிப்புப் பணி நடைபெற்றதால் மூடி வைத்து இருந்தார்கள் தற்போது சிங்கத்தின் வாயை திறந்து விட்டார்கள் 🙂 . இங்கே படகு ஏறினால் 45 நிமிடம் அருகே உள்ள இடங்களை சுற்றி விட்டு திரும்ப இங்கேயே வந்து விடும்.

இதில் செல்ல சரியான நேரம் மாலை 6.45. பகல் இரவு இரு நேரங்களிலும் இந்த 45 நிமிடத்தில் கழிக்கலாம். சிங்கப்பூரில் இரவு 7 – 7.15 மணி வரை வெளிச்சமாகத் தான் இருக்கும்.

படகு ஏறும் இடத்தின் எதிரே உள்ளே Marina Bay Sands என்ற கட்டிடத்தின் மீது இருந்து லேசர் ஒளி நிகழ்ச்சி நடைபெறும். இதைக் காண நீங்கள் இங்கே இரவு 8 மணிக்கு இருக்க வேண்டும். எனவே 6.45 க்கு கிளம்பினால் படகு 7.30 க்கு திரும்ப இதே இடம் வரும்.

அரை மணி நேரம் அங்கேயே சுற்றிவிட்டு 8 மணிக்குப் பார்க்க சரியாக இருக்கும்.

இவை அல்லாமல் சில இடங்கள் சென்றோம் அது பற்றி பின்னர் கூறுகிறேன்.

கொசுறு 1

லங்காவிப் பயணம் பற்றி இதில் சுட்டி கொடுக்க அந்தப் பதிவு படிக்கும் போது, அதில் நண்பர் Abarajithan கமா, முற்றுப்புள்ளி, ஸ்பேஸ் இதில் கவனமெடுங்கள் என்று சுட்டிக் காட்டி இருந்ததை திரும்ப கவனிக்க நேர்ந்தது.

இதே போல நண்பர் முத்துவும் சில காலம் முன்பு கூறி இருந்தார். தற்போது இந்தத் தவறை சரி செய்து இருப்பதாக நினைக்கிறேன். கூடுதலாக சந்திப் பிழைகளையும் முடிந்தவரை தவிர்த்து வருகிறேன்.

எனவே, நிறைகளை விட குறைகளைக் கூறினால் என்னை திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும். இருவருக்கும் நன்றி.

கொசுறு 2

வெள்ளி, சனிக்கிழமையானால் என் வீட்டு டிவியில் இருந்து ரத்தமே வழிந்து விடும். நான் அந்த அளவிற்கு ஹாரர், த்ரில்லர், சண்டைப் படங்களைப் பார்ப்பேன் ஆனால், இவனுக வந்த பிறகு கார்ட்டூன் நெட்வொர்க் மட்டுமே பார்த்துட்டு இருக்கிறேன்.

#எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் 🙂 .

கொசுறு 3

கார்ட்டூன் நெட்வொர்க் பற்றி சொன்னேன் அல்லவா! அதில் பழைய டாம் & ஜெர்ரி வந்தால் தொலைக்காட்சியின் திரை அளவு இரு புறமும் சுருங்கி விடுகிறது.

நான் இதைப் பார்த்து இவனுக தான் எதோ நோண்டி வைத்துட்டாணுக போல என்று.. பல செட்டிங்ஸ் மாற்றிப் பார்த்தும் சரியாகவில்லை.. சரி.. வேறு சேனல் மாற்றிப் பார்க்கலாம் என்று அதில் எப்படி இருக்கு என்று பார்த்தால், அதில் சரியாக இருக்கிறது.

பின்னர் தான் தெரிந்தது இந்த நிகழ்ச்சியில் மட்டும் அப்படித்தான் வரும் போல. இது தெரியாம பல செட்டிங்ஸ் மாற்றி மண்டை காய்ந்து விட்டது. Image Credit – myfunnyreaction.com

#என்ன கொடுமை சார்

கொசுறு 4

உழைப்பாளர் தின வாழ்த்துகள். தலக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் 🙂 .

{ 11 comments… add one }
  • ராமலக்ஷ்மி May 1, 2014, 8:31 AM

    இளங்கிளிகள் இரண்டு. அண்ணன் சாயல் தம்பிக்கும்:)! இரசிக்க வைத்தது பகிர்வு.

  • akila May 1, 2014, 4:40 PM

    எங்களுக்கும் சேர்த்து சிங்கப்பூர சுத்தி காட்டிடீங்க 🙂 . குட்டீஸ் ரெண்டும் ரொம்ப அமைதியா தானே இருக்காங்க..இவங்களயா வாலுன்னு சொல்றீங்க?!! 🙂

  • Mohamed Yasin May 1, 2014, 5:56 PM

    கிரி… குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என்றுமே மகிழ்வான ஒன்று.. சிங்க குட்டிங்க போட்டோவையும், நீங்க சொல்ற சம்பவத்தையும் வச்சி பார்த்த (இது உலகமகா நடிப்புடா சாமி!!!) இந்த வசனம் தான் நியாபகத்துக்கு வருது… பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

  • அரிகரன் May 2, 2014, 11:54 AM

    சூப்பர் கிரி.. இந்த கார்டூன் சேனல் மட்டும் இல்லைனா இன்னும் நெறைய கேள்விகளை நீங்க சந்திக்க வேண்டி வந்து இருக்கும். 🙂
    லங்காவி பறவைகள் பூங்கா வும் கொஞ்சம் காசு அதிகம் னு கேள்வி பட்டேன்.

  • sarath May 2, 2014, 4:15 PM

    அழகான பகிர்வுக்கு நன்றி கிரி.. மவுன சிங் பேச நினைத்தாலும் மம்மி அனுமதிப்பாரா என்று தெரியவில்லை . அப்புறம் அந்த கிளியை அருகில் வைத்து புகைப்படம் எடுத்த போது தான் உங்கள் கையை கடித்ததோ?

  • Gowrishankar.P May 2, 2014, 7:23 PM

    எனக்கென்னமோ வினய்ய விட யுவன்தான் சுட்டிய வருவான் போல தெரியுது 🙂
    எப்போவும் போல நல்ல பதிவு. (என்ன குறைய சுட்டிக்காடலாம்னு நிறைய தேடுனேன், கிடைக்கல கிரி)

  • மு.முத்துக்குமார் May 2, 2014, 10:57 PM

    நல்ல பதிவு.

    எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். கூகிள் மற்றும் இதர வெப்சைட் களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? நாம் பார்க்கும் ஒவ்வொரு வெப்சைட்கும் நமது ISP provider பணம் கட்டுவாங்களா? நாம் இன்டர்நெட் dataku ISPku கட்டும் பணம் யாருக்கு போகிறது? இன்டர்நெட்டில் படம் மற்றும் பாட்டு upload பண்றவங்களுக்கு என்ன லாபம்?

    நீங்கள் ப்ரீயான பிறகு இதை பற்றி ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்.

  • SRIKANTH May 5, 2014, 1:02 PM

    வாழ்த்துக்கள் JR கிரிகளுக்கு

  • கிரி May 6, 2014, 3:02 PM

    அனைவரின் வருகைக்கும் நன்றி

    @அகிலா @ யாசின் இவனுக இரண்டு பேரை எடுத்த நிழல் படங்களில் இது மட்டுமே ஒழுங்காக இருக்கிறது. இதை எடுக்க நான் பட்ட பாடு..

    @அரிகரன் லங்காவி பறவைகள் பூங்கா கட்டணம் அதிகம் தான்.. ஆனால், இங்கு விட அங்கு நன்றாக இருக்கிறது.

    @சரத் கடி வாங்கிய பிறகு எடுத்த படம் 🙂

    @கௌரிஷங்கர் பொதுவா இரண்டாவது குழந்தை சுட்டியாக இருக்கும்.. எனவே வாய்ப்புள்ளது.

    @முத்து உங்க அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் “விளம்பர வருமானம்” இந்த உலகில் இலவசம் சேவை என்று எதுவுமில்லை.. எதன் பின்னும் ஒரு காரணம் இருக்கும்.

  • Ravichandran May 8, 2014, 2:17 PM

    வணக்கம்,

    நல்ல பயனுள்ள தகவல். சிங்கபூர் செல்ல்வோர்க்கு நன்கு உபயோகமாக இருக்கும்.

    நன்றி,
    ரவிச்சந்திரன்
    சென்னை

  • janaki May 12, 2014, 1:44 PM

    துரு துரு னு இருந்தா மட்டும் தான் குழந்தைங்க நல்லா இருப்பாங்க …வினை யுவன் 2 பேரும் சூப்பர்.. நீங்க தான் அவங்கள சமாளிக்க கிளாஸ் போகணும் னு நினைக்றேன் அண்ணா…

Leave a Comment