தேர்தல் கடுப்புகள் – எச்சரிக்கைகள் – சாமி குத்தம்

தேர்தல் நேரம் என்பதால் பணம் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஒரு வகையில் இது சரி என்றாலும் பலர் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள், குறிப்பாக வியாபாரிகள். 50000 கொண்டு சென்றால் கூட 500000 எடுத்துட்டுப் போவது போல குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்டு படுத்தி எடுக்கிறார்களாம்.

நாங்கள் எடுத்து இருந்த கடனை கொடுக்கக் கூட பணம் எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் பல பரிவர்த்தனைகள் முடங்கிக் கிடக்கின்றன. Image Credit – eci.nic.in

இதில் ஒருவர் கூறியதைக் கேட்டதும் செம்ம கடுப்பாகி விட்டது. இது போல பணம் எடுத்துச் செல்பவர்களிடம் பணத்தை வாங்கி வைத்து அவர்களை மிரட்டி பின் கொடுக்கிறார்களாம்.

கொடுத்தததே போதும் என்று அலறி அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தால் தான் தெரிகிறது அதில் இருந்து 2000, 4000 ரூபாயை ஆட்டையைப் போட்டு இருப்பது.

கொடுக்கும் போது பொதுவாக ஒரு பரபரப்பான மன நிலையில் இருப்பார்கள் எனவே கிடைத்ததே போதும் என்று எண்ணிப் பார்க்காமல் எடுத்து வந்து விடுகிறார்கள். வந்து எண்ணிய பிறகு தான் இந்த விசயமே தெரிகிறதாம்.

அதனால் மக்களே! இப்படியெல்லாம் கூட நூதன திருட்டு நடைபெறுகிறது. உஷாராக இருக்கவும்.

புது டெல்லியில் ஒரு பெண் தன்னுடைய சலவை இயந்திரம் பழுது பார்க்க ஒரு நிறுவனத்தை அணுகினார். அங்கே இருந்து வந்த பணியாளர் ஜஸ்விந்தர் சிங் அதை பழுது பார்த்துக்கொண்டு இருந்த போது அந்தப் பெண் தன்னுடைய தோழியுடன் உறவு கொள்ளுமாறு கூறி அதற்கு பணம் தருவதாகவும் கூறி இருக்கிறார்.

இதைக் கேட்டு அவர் சில்பான்சாகாமல் அதிர்ச்சி அடைந்து இதற்கு மறுப்பு தெரிவிக்க, உள்ளே இருந்த வந்த இரண்டு ஆண்கள் இவரை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள்.

ATM சென்று பணம் எடுத்து வருவதாகக்!!! கூறி, ஓடிச் சென்று காவல்துறையிடம் புகார் கொடுத்து விட்டாராம். அவர்கள் வந்து அனைவரையும் கைது செய்து இருக்கிறார்கள். என்ன கொடுமை சார்!

ஏன்யா! இப்படியெல்லாமா மிரட்டுறீங்க! நல்லவேளை இவர் குஜாலா இருந்து இருந்தால் அடுத்த நாள் இவர் நடித்த!! காணொளி இணையத்தில் வந்து திரும்ப ஒருமுறை இவர் டவுசர் கழட்டப்பட்டு இருக்கும்.

சிங்குக்கு சங்கு தான். ஒரு காலத்தில் நானும் பல வீடுகளுக்கு கணினி பழுது சரி செய்யப் போய் இருக்கிறேன். நல்லவேளை எனக்கு இப்படி எதுவும் நடக்கவில்லை 😀 . செய்தி நன்றி http://dinamalar.com

சென்னை புறநகர்ப் பகுதிகளில் பகலில் வயதானவர்களாக மட்டும் இருக்கும் வீடுகளுக்கு பெண்கள் இரண்டு பேராக வந்து “மின்சார வாரியத்திலேர்ந்து வரோம்.

உங்க மீட்டரை செக் பண்ணி ஸ்டிக்கர் ஒட்டணும்” என்று கூறி மீட்டரை சோதனை செய்வது போல சிறிது நேரம் பார்த்து விட்டு, ஒரு சிறிய ஸ்டிக்கரையும் ஒட்டி விட்டு, “ஸ்டிக்கர் சார்ஜ் இருபது ரூபாய்” என்று பணத்தையும் வாங்கிச் சென்று விடுகிறார்களாம்.

சென்னை நகரில் இந்த பித்தலாட்டம் பல இடங்களில் நடக்கிறது. சில இடங்களில் ஆள்களுக்குத் தகுந்தாற் போல் நூறு ரூபாய் வரை கூட வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியம் அப்படி மீட்டர் எதையும் பரிசோதனை செய்யவில்லை. அப்படியே செய்தாலும் அது குறித்து முன்கூட்டியே அறிவித்து விட்டு தான் செய்வார்கள். அப்படி செய்யும் போது அதற்காக நுகர்வோர் எதுவும் பணம் கொடுக்கத் தேவையில்லை. செய்தி நன்றி http://www.seythigal.com

ங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு கண் தெரியாது என்று மூன்றாவது நாள் தெரியவந்தால் எப்படி இருக்கும்?!

உடனே பிரபல மருத்துவரிடம் எடுத்துச் செல்கிறீர்கள் அவர்கள் சோதித்து விட்டு கண் பிரச்சனை உள்ளது ஆனால், தற்போது சரி செய்ய முடியாது. எனவே ஆறு மாதம் கழித்து வரக் கூறுகிறார்கள்.

மனது உடைந்த பெற்றோர் “Second opinion” கேட்க இன்னொரு மருத்துவரை அணுகுகிறார்கள். அவர் “இதெல்லாம் தற்போது ஒரு பெரிய விசயமே இல்லை. நீங்கள் சரியான நேரத்திற்கு கொண்டு வந்து இருக்கிறீர்கள். சரி செய்து விடலாம்!” என்று கூறுகிறார்.

இந்த நிலையில் பெற்றோரின் மன நிலை எப்படி இருக்கும்?! இதைப் படித்துப் பாருங்கள். நான் கண் கலங்கி விட்டேன். எந்தப் பிரச்சனை என்றாலும் தாமதிக்காமல் அசட்டையாக இருக்காமல் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதை இது அறிவுறுத்துகிறது.

துவும் ஒரு மிக மிக அதிர்ச்சி செய்தி. இதைப் படித்ததும் திக்கென்று ஆகி விட்டது. உலகம் எங்கே போகுது என்றே தெரியலையே! ரொம்ப பாதுகாப்பாக இருங்க. இரவு நேரங்களில் ஆள் அரவமற்ற சாலைகளில் செல்லாதீர்கள்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 22 வயது மாணவி இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது ஆண் நண்பருடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர்களின் கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் வாகனத்தை வழி மறித்தது.

அந்த கும்பல் அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றது. அங்கு வைத்து அந்த மாணவியை அவரது நண்பருடன் உறவு கொள்ளுமாறு அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

அவர்கள் மறுக்கவே அந்த கும்பல் அந்த 2 பேரையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளது. இதையடுத்து அந்த மாணவியும், அவரது நண்பரும் உறவு கொண்டனர். அதை அந்த கும்பல் வீடியோ எடுத்தது.

மேலும் ரூ.25 லட்சம் தரவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன் கல்லூரி முதல்வர் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப் போவதாக அந்த கும்பல் தெரிவித்தது.

அந்த 2 பேரும் ரூ.3 லட்சம் தர சம்மதித்தனர். அதற்குள் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தவிர வீடியோவும் பறிமுதல் செய்யப்பட்டது. செய்தி நன்றி http://tamil.oneindia.in

நான் முன்பு எழுதிய கர்ம வினையும் இந்து மதமும் என்ற கட்டுரை என் குடும்பத்தினரிடமும் என் சில உறவினர்களிடமும் வரவேற்பை பெற்று இருக்கிறது. என்னுடைய அம்மா “தம்பி! நல்லா எளிதாகப் புரிய மாதிரி எழுதி இருக்கிறே” என்று கூறினார்கள். கொஞ்சம் ஜிவ்வுன்னு இருந்தது 🙂 .

என்னுடைய பெரிய அக்காவும் அப்பாவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். இது போல கிடைக்கும் எதிர்பாராத பாராட்டுகள் பூஸ்ட் குடித்தது போல இருக்கிறது.

தற்போது இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான ஒரு காணொளி இணைத்து இருக்கிறேன். கட்டுரையைப் படித்து விட்டு காணொளியைப் பார்த்தால் எளிதாக நான் கூற வருவதை புரிந்து கொள்ள முடியும். இந்தக் காணொளியைப் பார்த்தால் கண் கலங்கி விடுவீர்கள்.

ன்னுடைய அலுவலக நண்பர் நீண்ட வருடங்களுக்கு முன் பெங்களூரில் வசித்த போது அங்கே ஒரு இடம் வாங்கிப் போட்டு இருந்தார். பின் UK சென்று தற்போது குறைந்த காலப் மாற்றலில் சிங்கப்பூர் கிளையில் பணி புரிகிறார்.

இடம் வாங்கிப் போட்டால் வரும் பிரச்சனை இவருக்கும் வந்தது. இவருடைய பக்கத்து வீட்டினரே இங்கே ஒரு சாமியை வைத்து பூஜை செய்து நகர மாட்டேன் என்கிறார்கள்.

வேண்டும் என்றால் சாமியை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று மிரட்டுகிறார்களாம். இவர்கள் வீட்டில் சாமியை எடுத்தால் பிரச்சனை வருமோ என்று பயப்படுகிறார்கள்.

இவரும் இவரின் குடும்பமும் தற்போது பெங்களூருவில் இல்லையென்பதால் விலை குறைத்து இன்னொருவருக்கு விற்க முடிவு செய்து இருக்கிறார்.

இவர் வாங்கிய விலைக்கும் தற்போதைய விலைக்கும் பெரிய வித்யாசம் என்றாலும் சில லட்சங்கள் குறைத்துத் தான் கொடுக்க வேண்டி உள்ளது என்று கூறினார்.

வயித்தெரிச்சலாக இருந்தது. எப்படியெல்லாம் மொள்ளமாரித்தனம் செய்கிறார்கள் பாருங்கள். இடம் வாங்குவதை விட அதை இது போல திருட்டுப் பயல்களிடம் இருந்து காப்பாற்றுவது தான் பெரிய விசயமாக இருக்கிறது.

ஒரு திடீர் கோவிலை வைத்து எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கிறார்கள். அரசியல் ஆதரவு இருந்தால் மட்டுமே இதை எல்லாம் எதிர்த்துப் போராட முடியும், இருந்தும் அவர்களுக்கும் தரகு கொடுக்க வேண்டும் என்பது வேறு பிரச்சனை.

இப்படி திருடித் திங்கும் இவங்க எல்லாம் நல்லா இருப்பாங்க என்று நினைக்கறீங்களா! வாய்ப்பே இல்லை. கஷ்டப்பட்டுத் தான் சாவாங்க.

அடுத்தவரின் பொருளுக்கு என்னைக்கு ஆசைப் படுகிறோமோ அப்பவே நமக்கும் அழிவு காலம் வந்து விடும். இதை சம்பந்தப்பட்டவரின் அனுமதியோடு தான் இங்கே எழுதி இருக்கிறேன்.

Vinay and Yuvanகோடை விடுமுறைக்கு ஊரில் இருந்து மனைவியும் பசங்களும் வந்து இருக்கிறார்கள்.

கார்ட்டூன் நெட்வொர்க் தான் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் வரும் டாம் & ஜெர்ரி எப்போது பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கத் தவறுவதில்லை 🙂 .

அப்போது வெளிவந்த டாம் & ஜெர்ரியே இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் டாம் கொடுக்கும் முகபாவனைகள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவில்லை.

இவர்களை அழைத்து வர காத்திருக்கும் போது ஒரு தமிழ் சிறுமி (15-16 வயது இருக்கலாம்) லக்கேஜ் எடுத்து வராமலே வெளியே வந்து விட்டார்.

அவருடைய அம்மாவோ யாரோ “ஏய்! ஏய்! லக்கேஜ் எடுத்துட்டு வாடி!” என்று கூறக் கூற இவர் வெளியே வந்து விட்டார். திரும்ப உள்ளே செல்ல ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை.

விமான நிலையம் சென்றால் இது போல காட்சிகளுக்கு பஞ்சமில்லை. அதுவும் நம்ம ஆளுங்க ஏதாவது ஒரு பிரச்சனையோடு நிற்பார்கள்.

வினய் வந்தவுடன் கேட்டான்.. “அப்பா! நீங்க டிக்கெட் புக் பண்ணிய ப்ளைட் ல வீடியோ கேமே இல்லை. வீடியோ கேம் இருக்கிற ப்ளைட் புக் பண்ண வேண்டியது தானே!” என்று. கோவையில் இருந்து சிங்கப்பூர் வருவதே ஒரு விமானம்.. இதுல வீடியோ கேம் விமானம் வேண்டுமாம்.

கோபி டவுன் பஸ்ல சுற்றிட்டு இருக்கிறவனுக்கு பேச்சைப் பாரு! Silkair ல பிரித்து சேர்க்கும் ஒரு பொம்மை கொடுத்து இருந்தார்கள். அது வீட்டைக் குப்பை ஆக்கினது தான் மிச்சம். நல்லா கொடுக்கறாங்க பொம்மை!

ஒரு மாதம் போல இருப்பார்கள் என்பதால், எழுத நேரம் இருக்காது அதோடு நானும் அவர்களுடன் நேரம் செலவழிக்கவே விரும்புகிறேன். எனவே இன்னும் ஒரு மாதத்திற்கு மிகக் குறைவான பதிவுகளே என்னுடைய தளத்தில் வரும் என்பதை குறிப்பிட்டு விடுகிறேன்.

{ 18 comments… add one }
 • Logan April 10, 2014, 8:35 AM

  என்ஜாய் கிரி

 • Srikanth April 10, 2014, 9:08 AM

  விடுமுறை பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

 • janaki April 10, 2014, 12:04 PM

  …recent reader of ur blog..its lovely …Happy holidays 🙂

 • sarath April 10, 2014, 5:19 PM

  விடுமுறை நாள்கள் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் கிரி..

 • ரீகன் ஜோன்ஸ் April 10, 2014, 9:41 PM

  நாட்டுல என்னென்னமோ நடக்குது. கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கவேண்டும்.

  தங்களது விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

 • r.v.saravanan April 11, 2014, 3:18 PM

  கோடை விடுமுறையை சிறப்பாக கொண்டாடுங்கள் கிரி

 • Ilavarasan April 11, 2014, 11:51 PM

  சூப்பர்

 • Mohamed Yasin April 12, 2014, 1:20 PM

  கலவையான தகவல்களை பகிர்தமைக்கு நன்றி கிரி..

  நாளை மறு நாள் (ஏப்ரல் 14) என்னுடைய பையனுக்கு பையனின் முதல் பிறந்த நாள். இந்த ஒரு வருடத்தில், கடந்த 4 மாதமாக தான் அவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு கிடைக்கும் ஒரு துளி ஓய்வு நேரத்தை கூட அவனுடன் செலவு செய்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது..

  அவன் சாப்பிடும் போது யாரும் பேசகூடாது, சிரிக்க கூடாது. (ஆனால் நான் சாப்பிடும் போது வாக்கர்ல வந்து என் சாப்பாடு தட்ட எட்டி உதைத்துவிட்டு சிரிக்கிறான்) கோபமா யாரும் அவன திட்ட கூடாது….இன்னும் நிறைய சேட்டைகள்… செய்கிறான்..

  இது ஒரு புது விதமாக அனுபவமாக இருப்பதால் மிகவும் மகிழ்வாக இருக்கிறது.(இறைவனுக்கு நன்றி). இந்த தருணத்தில் என்னுடைய தாயையும் / பாட்டியையும்/தாத்தாவையும் நினைத்து மிகவும் வறுத்தபட்டேன் (நான் என்னுடைய சிறு வயதில் அவர்களுக்கு கொடுத்த சிரமங்களை நினைத்து)…

 • Karan Singh April 13, 2014, 4:00 PM

  Thanks for sharing such a wonderful article with us, it is really helpful for me, and others.

 • Rajkumar April 13, 2014, 8:27 PM

  விடுமுறை இனிமையானதாக அமையட்டும்.

  கத்தார் எர்லயன்சில் சிறுவர்களுக்காக வழங்கப்படும் இலவச பேக்கேஜ் வொர்த் உள்ளது. அதிலும் கைகுழந்தை என்றால் அதற்கென பிரத்யேகமான தொட்டில் – பால் பாட்டில் சோப்பு லோஷன் டயப்பர் போர்வை என அனைத்தும் இலவசம். உங்கள் மகன் கேட்ட விளையாட்டு வசதியும் உள்ளது… என்ன ஒன்னு நீங்க பொள்ளாச்சி போயிட்டு மறுபடி புளியம்பட்டிக்கு வரணும்.

  நான் 7 வருடம் வக்கீலிடம் பணி புரிந்திருக்கிறேன்… பொதுவாக ஒரு நிலத்தை சிம்பிளா ஆட்டையை போட சொல்லும் விஷயம் … போய் குடிசை போட்டுடுங்க முடிஞ்சா யாரையாவது கொஞ்ச நாள் தங்க சொல்லுங்க.. உரிமையாளர் போலீசுக்கு போனா (காசு வாங்கிய போலீசு) இது சிவில் கேசுங்க கோர்ட்டுல போய் பார்த்துகோங்க அப்படின்னு சொல்லிடுவாங்க. புதுச்சேரியில் சிவில் கேஸ் சீக்கிரமா 6 மாசத்துலையும் (வக்கீல் பீஸை பொறுத்து) அதிகபட்சமா 6 வருஷத்துலையும் முடியும்.
  தமிழ் நாட்டில் சீக்கிரமா 6 வருஷத்துலையும் அதிகபட்சமா நில உரிமையாளர் மண்டையை போடும் வரையிலும் (அதற்க்கப்புரமும்) இழுக்கும்.
  அதிலும் உடல் வலுவற்ற பெற்றோர்கள் இருந்து மகன் வெளிநாட்டில் இருந்து சொத்து அகபரிக்கப்பட்டால் முடிஞ்சது கதை…. நிலத்தை காணோமின்னு புகார் கொடுக்கணும்.

 • கிரி April 14, 2014, 9:53 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

  @யாசின் உங்க பையனுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். உங்க பையன் பேர் என்னெவென்று சொல்லலையே! உங்களுக்கு ஒரே பையனா? அப்படின்னா இரண்டாவதை சீக்கிரம் தயார் செய்யுங்க 🙂

  @ராஜ்குமார் நல்ல கிளப்புறீங்க பீதிய..! என்னமோ போங்க. வடிவேல் கிணற்றை காணோமின்னு சொல்லுவாரே.. அது மாதிரி ஆகிடும் போல இருக்கே.

 • Mohamed Yasin April 14, 2014, 12:43 PM

  கிரி.. என் பையனின் பெயர் MOHAMED ATHIF (Meaning : The Kind One). ஒரு பையன் தான் இதுவரை. இறைவன் நாடினால், இன்னோர் குழந்தை எதிர்காலத்தில் பிறக்கலாம்.. எனது விருப்பம் பெண் குழந்தை.. மனைவியின் விருப்பம் ஆண் குழந்தை… உங்களுக்கும், குடும்ப சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் கிரி..

 • janaki April 14, 2014, 4:00 PM

  புத்தாண்டு வாழ்த்துகள் . மான் கரதே விமர்சனம் எப்போ அண்ணா ?:)

 • கிரி April 16, 2014, 8:17 AM

  @யாசின் “முகம்மது” என்ற பெயர் தான் உலகில் அதிகம் பேர் வைத்து இருக்கிறார்கள் என்று செய்தியில் படித்தேன் 🙂 பெண்ணோ பையனோ இரண்டு வேண்டும், உங்களின் பொருளாதார சூழ்நிலை ஏற்றுக்கொண்டால் அவ்வளோ தான்.

  @ஜானகி நான் எங்கங்க மான் கராத்தே விமர்சனம் எழுதுவது..எங்க வீட்டுல இவனுக கூட “மான் கராத்தே” போடவே நேரம் சரியா இருக்கு 🙂 இனி கோச்சடையான் விமர்சனம் தான் எழுதுவேன் என்று நினைக்கிறேன்.. அதிலும் சிக்கல்..படம் வெளியாகும் அன்று ஊருக்குப் போகிறேன்.

 • அரிகரன் April 16, 2014, 12:17 PM

  பசங்களோட ஜாலி யா என்ஜாய் பண்ண வாழ்த்துக்கள் கிரி 🙂

 • Thamizhchelvan April 17, 2014, 9:25 PM

  Ha ha… I liked this “எங்க வீட்டுல இவனுக கூட “மான் கராத்தே” போடவே நேரம் சரியா இருக்கு”

 • Nikandu April 24, 2014, 5:23 AM

  வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  http://www.Nikandu.com
  நிகண்டு.காம்

 • rajesh v April 28, 2014, 11:07 PM

  நான் முன்பு எழுதிய கர்ம வினையும் இந்து மதமும் என்ற கட்டுரை என் குடும்பத்தினரிடமும் என் சில உறவினர்களிடமும் வரவேற்பை பெற்று இருக்கிறது. என்னுடைய அம்மா “தம்பி! நல்லா எளிதாகப் புரிய மாதிரி எழுதி இருக்கிறே” என்று கூறினார்கள். கொஞ்சம் ஜிவ்வுன்னு இருந்தது. என்னுடைய பெரிய அக்காவும் அப்பாவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். இது போல கிடைக்கும் எதிர்பாராத பாராட்டுகள் பூஸ்ட் குடித்தது போல இருக்கிறது. தற்போது இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான ஒரு காணொளி இணைத்து இருக்கிறேன். கட்டுரையைப் படித்து விட்டு காணொளியைப் பார்த்தால் எளிதாக நான் கூற வருவதை புரிந்து கொள்ள முடியும். இந்தக் காணொளியைப் பார்த்தால் கண் கலங்கி விடுவீர்கள்.

  ——————————-
  🙂 🙂

Leave a Comment