உங்கள் க்ரோம் உலவி “Hijack” செய்யப்பட்டால்…!

Chrome Browser

ஹேக்கிங் பிரச்சனை தற்போது இணையம் முழுக்க பரவிக் கிடக்கிறது. வாரத்திற்கு ஒரு பிரபல தளம் ஹேக் செய்யப்படுகிறது என்று தொழில்நுட்பத் தளங்கள் கூறுகின்றன.

பெரிய தளங்கள் எல்லாம் சிறப்பான பாதுகாப்பு வழிமுறைகளை வைத்து இருப்பார்கள். அப்படி இருப்பவர்களையே ஆட்டையைப் போட்டு விடுகிறார்கள். நாமெல்லாம் சுண்டைக்காய் 🙂 .

தற்போது இணையத்தில் பாதுகாப்பான மற்றும் வேகமான உலவி என்று “க்ரோம்” பெயரெடுத்து இருக்கிறது. பல புதிய வசதிகளை தொடர்ந்து கொடுத்து வரும் “க்ரோம்” தற்போது இன்னொரு வசதியை கூட்டி இருக்கிறது.

அது பற்றி பார்ப்போம்.

இலவசம் என்றால் பினாயிலையும் குடிக்க நம்மில் பலர் தயாராக இருப்பது தான் ஹேக்கர்களுக்கு வரப் பிரசாதம். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் இலவசம் என்று எதுவுமே கிடையாது.

எந்த ஒரு இலவசத்திலும் ஏதாவது ஒரு உள்நோக்கம் இருக்கும். உதாரணத்திற்கு இலவசமாக தரும் க்ரோம் உலவி கூட நம் மூலமாக பில்லியன் கணக்கில் சம்பாதித்து வருகிறது.

இலவசமாக கொடுக்கிறவர்கள் அதில் வைரஸ் மால்வேர் என்று எதையாவது நிறுவி விடுவார்கள். நாம எங்காவது இலவசம் என்று பார்த்தால் போதும் உடனே “மவனே! போடுடா தரவிறக்கத்த” என்று தரவிறக்கம் செய்து விடுவோம்.

அந்த மென்பொருளை பயன்படுத்துகிறோமோ இல்லையோ அது வேற விசயம். நம்மை பொறுத்தவரை அது இலவசம் அதனால் தரவிறக்கம். இது போல மங்குனிகள் தான் ஹேக் செய்பவர்களின் முதல் குறி.

“வெட்டியா பணம் கொடுத்து மென்பொருள் வாங்கிட்டு இருக்காங்க. நமக்குத் தான் டொரண்ட் இருக்கே! அதில் போனால் எத்தனை வேண்டும் என்றாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாமே!

இது தெரியாம பணத்தை வீண் செய்து ஒரிஜினல் வாங்கிட்டு இருக்காங்க!” என்று அதி புத்திசாலியாக நினைத்துக்கொண்டு இருப்போம்.

சும்மா நமக்கு கொடுக்க அவன் என்ன இளிச்சவாயனா!! அதில் மால்வேர் உள்ளே நுழைத்துக் கொடுத்து விடுவான். அப்புறம் சாவகாசமாக அவனுக்கு தேவையான தகவல்களை எடுத்துக்கிட்டு இருப்பான். இது தெரியாம நாம பெருமை பீத்திட்டு இருப்போம்.

இது போல செய்பவர்கள் நம்முடைய உலவியில் உள்ள அமைப்புகளையும் நமக்குத் தெரியாமல் மாற்றி விடுவார்கள். நமக்கு கண்ணுக்கு முன்னாடி இருப்பதே தெரியல.. இதுல எங்க பின்னாடி இருக்கிறது தெரியும்.

Reset menu

இதற்குத் தான் கூகுள் க்ரோம் தரும் இந்த “Reset” வசதி. இது போல உலவி அமைப்புகள் மாறி இருக்கிறது என்று கூகுள் சந்தேகப்பட்டால், நமக்குத் தெரிவித்து அதை reset செய்யக் கூறும்.

நாமும் Manual ஆக செய்யலாம். இதை செய்வதன் மூலம் Chrome original settings வந்து விடும்.

இவ்வாறு செய்யும் போது கூகுள் நம்முடைய நீட்சிகளை (Extension) Disable செய்து விடும். பின்னர் நாம் Manual ஆக சென்று இதை Enable செய்ய வேண்டும் காரணம், சில நேரங்களில் நமக்குத் தெரியாமல் கூட நீட்சிகளை நிறுவி விடுவார்கள். Image Credit – Google.com

நீட்சி (Extension) என்றால் என்ன?

Addon என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா! அதன் இன்னொரு பெயர் Extension. இந்தப் பெயர் க்ரோம் க்கு பயன்படுத்தப்படுகிறது, அவ்வளோ தான். குழம்பிக்க வேண்டாம்.

இது போல தொல்லைகள் எல்லாம் வேண்டாம் என்றால், முதலில் கண்மூடித்தனமாக இலவச மென்பொருட்களை நம் கணினியில் நிறுவுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு நிறுவப்படும் மென்பொருட்கள் தருவது ஹேக் பிரச்சனை மட்டுமல்ல, உங்கள் கணினியின் வேகத்தையும் பெருமளவில் குறைத்து விடும்.

எனவே இலவசமாக கிடைக்கிறது என்று அனைத்தையும் நிறுவிக்கொண்டு இருக்காதீர்கள். நிறுவி இருந்தால், உடனடியாக அனைத்தையும் நீக்கி விடுங்கள்.

நான் முன்பு இருந்தே கூறுவது ஒன்று தான் “உங்கள் கணக்கு / கணினி ஹேக் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. உங்களை யாரும் இன்னும் குறி வைக்கவில்லை என்று அர்த்தம்”.

ஹேக்கர்கள் மிகவும் புத்திசாலிகள் எனவே, அவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். நாம் முடிந்த வரை நம் இணையக் கணக்கை / கணினியை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கொசுறு 1

பாலு மகேந்திரா இறந்த பிறகு அவரைப் புகழ்ந்து எங்கு பார்த்தாலும் கட்டுரைகளாக இருக்கின்றன. அவருடைய பழைய பேட்டி ஒன்றை படிக்க நேர்ந்தது. அதில் ஷோபா, அகிலா, மௌனிகா பற்றி இலக்கியத்தரமாக வர்ணித்து பல விசயங்களை கூறி இருந்தார்.

தான் நேர்மையானவனாக நடந்து கொள்ளவில்லை என்றும் கூறி இருந்தார். இப்படி வெளிப்படையாகக் கூறி விட்டாலே அவரை உத்தமராக்கி விடுகிறோம்.

மூன்று பெண்களின் வாழ்க்கையை காலி செய்து இருக்கிறார். இதில் இருவரின் இளமைக் காலங்கள் வீணாகி விட்டது.

ஷோபா, மௌனிகா போன்றவர்கள் தங்களின் சூழ்நிலை காரணமாக தவறான முடிவு எடுத்து இருந்தாலும் வயதில் மூத்த இவர் சரியான அறிவுரை கூறி தவிர்த்து இருக்க வேண்டும்.

இவர் திரைத்துறையில் திறமையானவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

அனைத்து பிரபலங்களுக்கும் இருக்கும் பிரச்சனை போல இவருடைய திரைப்படங்கள் கடைசி காலத்தில் பிரகாசிக்க விட்டாலும் இவருடைய பழைய படங்கள், ஒளிப்பதிவுகளை என்றும் மறக்க முடியாது குறிப்பாக “மூன்றாம் பிறை”.

இவர் மீது கலைஞனாக எனக்கு பெரும் மதிப்பு இருக்கிறது ஆனால், இவரை சிலாகித்து கூறும் அளவிற்கு இவர் தகுதியானவராக எனக்குத் தோன்றவில்லை.

இவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி (மௌனிகாவே இது பற்றி வருத்தப்படாத போது) மேலும் பேசுவது அநாகரிகம் என்பதால் இதோட முடித்துக்கிறேன்.

பாலு மகேந்திரா உடலை மௌனிகா பார்க்கக் கூடாது என்று இயக்குனர் “பாலா” பரதநாட்டியம் ஆடியதாக செய்திகளில் வந்தது. இது உண்மை என்றால், சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிக மோசமான செயல்.

பாலா போன்றவர்களை நிறைய பார்த்து இருக்கிறேன் அதாவது, தாங்களாகவே உரிமை எடுத்துக் கொள்பவர்கள். ஒரு சில வீட்டில் பணி புரிபவர்கள் நீண்ட காலம் இருந்தால், அவர்களே வீட்டின் முதலாளி போல நடந்து கொள்வார்கள், அது போல.

என்னதான் நாம் ஒருவர் மீது அன்பு வைத்து இருந்தாலும், அவர்களின் குடும்பத்தினருக்கு பிறகு தான் நாம். சரியோ தவறோ மௌனிகா, பாலு மகேந்திரா மனைவி என்பது உண்மை. தனது கணவரின் முகத்தைக் காண அவருக்கு முழு உரிமை உள்ளது.

எப்படியோ! பார்க்க முடியாத பரிதாப நிலை ஏற்படாமல் அதற்கு உதவி செய்தவர்களுக்கு ஒரு நன்றி.

கொசுறு 2

தமிழக பட்ஜெட்டில் 48,000 கோடி இலவசத்திற்காக ஒதுக்கி உள்ளார்கள். தமிழ்நாடு விளங்குமா?!

கொசுறு 3

வங்கியில் “NEFT” [National Electronic Fund Transfer] இணைய பணப் பரிமாற்றத்திற்கு கீழ்கண்டவாறு இனி வங்கிகள் கட்டணம் வசூலிக்கும். இதில் 10,000 வரை உள்ள பணப் பரிமாற்றத்திற்கு மட்டும் மாற்றம் மற்ற தொகைகளுக்கு முன்பு இருந்த கட்டணமே இருக்கும்.

Up to 10,000 – INR 2.50

Up to 10,001 to 1 lakh – INR 05

Above 1 lakh to 2 lakh – INR 15

Above 2 lakh – INR 25

கொசுறு 4

க்ரோம் உலவி புதிய பதிப்பில் நீங்கள் ஏதாவது ஒரு Tab ல் பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் அல்லது காணொளி பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வேறு ஒரு Tab ல் மற்ற தளத்தை Browse செய்து கொண்டு இருக்கும் போது நிறைய Tab இருப்பதால் எதில் சத்தம் வருகிறது என்ற குழப்பம் வரும். ஒவ்வொரு Tab ஆக பார்க்க வேண்டும்.

புதிய பதிப்பில் எந்த Tab ல் சத்தம் வருகிறதோ அதில் ஒலிப்பெருக்கி ஐகான் இருக்கும். இதன் மூலம் எந்த Tab ல் இருந்து சத்தம் வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம். சந்தேகம் என்றால் சோதனை செய்து பாருங்களேன் 🙂 .

{ 9 comments… add one }
 • payapulla February 18, 2014, 9:47 AM

  அருமையான விசயங்கள் கிரி. பகிர்ந்தமைக்கு நன்றி. – பயபுள்ள.

 • Mohamed Yasin February 18, 2014, 1:15 PM

  இணையம் பற்றிய புதிய செய்திகளை பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.. இலவசம், கவர்ச்சியான விளம்பரங்கள் அனைத்தையும் பார்த்து விட்டு எளிதில் அதில் என்ன உள்ளது என்று ஆராயாமல் தரவிறக்கம் செய்வது நம்மில் பலரது எண்ணம்.. (என்னையும் சேர்த்து தான்…)
  ==================================================================
  நதி மூலம், ரிஷி மூலம் பார்க்க கூடாது என்று கூறுவார்கள்… பாலு மகேந்திரா (மட்டும் அல்ல அடுத்தவர்களது ) விஷியத்திலும் என் கருத்து இது தான்… ஒரு ரசிகனாக அவரது படைப்புகளை நான் நேசிக்கிறேன்.. ஒரு மனிதனாக அவரின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை ஆராய விரும்பவில்லை..நீங்களும் உங்கள் எல்லையுடன் இருந்தது மகிழ்வே…
  ==================================================================

 • sarath February 18, 2014, 9:36 PM

  பயனுள்ள தகவல்கள் கிரி.. கடவுச்சொல்லை மால்வேர் மூலம் திருட முடியாது எனவும் guessing மூலமாகவே திருடப்படுகிறது என சிலர் கூறுகின்றனர். இதை பற்றி உங்கள் கருத்தை கூற இயலுமா?

 • Rajkumar February 19, 2014, 1:06 PM

  வணக்கம் கிரி… அப்ப்பப்ப காணாம போயிட்டாலும் அடிக்கடி தளத்துக்கு வந்துகிட்டு தான் இருக்கேன்…
  ////இதன் மூலம் எந்த Tab ல் இருந்து சத்தம் வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம். சந்தேகம் என்றால் சோதனை செய்து பாருங்களேன் ////
  நேத்துதான் கண்டுபுடிச்சேன். (பதிவ படிக்கிரத்துக்கு முன்னாடி)

  பேங்க் சார்ஜஸ் – புதுசு புதுசா ரூல்ஸ் போடுறாங்களாம்.
  – ஏடிஎம் பணம் எடுத்தா அதுக்கு சார்ஜ்
  – இனிமே பத்தாயிரத்துக்கும் மேல பணம் கொண்டுபோனா ஏற்போட்டுல பத்திரம் எழுதி கொடுக்கணுமாம்…
  – டிவி எடுத்துட்டு போனா 36 % பணம் கட்டணுமாம் (போனவருஷ நியுஸ்)…
  கவர்மென்ட் ரொம்பவே கஷ்டப்படுதுன்னு தெரியுது

 • Balamurugan February 19, 2014, 4:44 PM

  அருமையான தகவல் .,

 • கார்த்திகேயன் February 19, 2014, 11:15 PM

  ஆடியோ ஐகான் நெருப்பு நரியிலும் வருகிறது அண்ணா

  நான் அதிகம் மொசில்லா வை தான் பயன்படுத்துகிறேன் … அதனால் நான் நிம்மதியாக இருக்கலாமா ,, நெருப்பு நரிக்கும் இது போல் ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தால் சொல்லவும்

  பாலா செய்தது தவறு தான் பட் அவர் எதனால் இந்த மாதிரி செய்தார் என்று அவர் பக்கம் இருக்கும் கருத்தை இதுவரை எந்த ஊடகமும் வெளிக்கொண்டு வரவில்லை . பாலா பாலுமகேந்திரா சாருக்கு வளர்ப்பு மகனாகவே கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது

  தமிழக அரசு என்ன தான் இலவசம் கொடுத்தாலும் எதுவும் எனக்கு வர போவது இல்லை என்பதை ஏக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்

 • rajesh.v February 21, 2014, 1:58 AM

  தமிழக பட்ஜெட்டில் 48,000 கோடி இலவசத்திற்காக ஒதுக்கி உள்ளார்கள். தமிழ்நாடு விளங்குமா?!
  ===============
  கண்டிப்பா விளங்காது

 • கிரி February 23, 2014, 7:25 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @பயபுள்ள எப்படி இருக்கீங்க?

  @யாசின் அப்ப நீங்களும் தரவிறக்கத்த போட்டுத் தாக்கி இருக்கீங்க! 🙂

  @சரத் மால்வேர் என்பது பல வகைகளில் உள்ளது. இதில் ஒன்று Keylogger என்ற மென்பொருள். இது நமக்கு தெரியாமல் நிறுவப்படும். டாஸ்க் பாரிலும் Uninstall பகுதியிலும் கூட இருக்காது. இதனுடைய வேலை என்னவென்றால் நீங்கள் என்ன தட்டச்சு (Type) செய்தாலும் சேமித்துக்கொண்டே இருக்கும். இதை திறந்து பார்த்தால் நீங்கள் என்னென்ன தட்டச்சு செய்து இருக்கிறீர்கள் என்பதை அறிய முடியும். இதில் இருந்து உங்கள் கடவுச்சொல்லை திருட முடியும்.

  இதன் உண்மையான நோக்கம் என்ன்னவென்றால் Client உடன் நிறுவனங்கள் coordinate செய்யும் போது தங்கள் நடவடிக்கைகளை பதிவு செய்ய உதவுகிறது. இதன் மூலம் நாளை ஏதாவது பிரச்சனை என்றால் இந்த சேமிப்பை வைத்து பேச முடியும் ஆனால் இது நம் தனிப்பட்ட கணினியில் நிறுவப்பட்டால் நம் ஜாதகமே ஒருவர் கைக்கு சென்று விடும். எடுத்துக்காட்டாக நீங்க சென்ற வலை தளங்கள், மற்றவருடன் நீங்க சாட் செய்தால் அதில் நீங்கள் தட்டச்சு செய்த விவரங்கள் என்று மிக ரிஸ்க்கான விஷயம்.

  ஹேக்கர்கள் புத்திசாலிகள் எனவே உங்கள் கற்பனைக்கும் எட்டாத வழியில் எல்லாம் அவர்கள் முயற்சிப்பார்கள்.

  @ராஜ்குமார் மாய மனிதன் மாதிரி திடீர்னு வந்து போறீங்க? அப்பப்ப வாங்க பாஸு

  இனி வங்கில பணம் வைத்து இருந்தாலே மாசாமாசம் பணம் கேட்பாங்க போல 🙂

  @கார்த்திகேயன் முதல்ல நெருப்பு நரி என்று நீங்கள் கூறுவது தவறு. இதற்கான விளக்கம் இங்கே உள்ளது. http://www.giriblog.com/2012/04/funny-tamil-translation.html

  Firefox ம் பாதுகாப்பான உதவியே. தாராளமாக பயன்படுத்தலாம்.

  கார்த்திக்கு ஒரு கிரைண்டர் பார்சேசேசேல் 🙂

 • kaarthikeyan February 26, 2014, 9:35 AM

  கிரைண்டர் கொடுத்த அண்ணனுக்கு ரொம்ப நன்றி

  நன்றி அண்ணா இனி இந்த மாதிரி தவறுகளை தமிழில் செய்வதை தடுக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் சொல்லிகொள்கிறேன்
  இனி மொசில்லா பயர் பாக்ஸ் என்றே அழைப்பேன் அதுமட்டும் இல்லாமல் தமிழை இனி சரியாக உபயோகபடுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் நீங்கள் என்னுள் விதைத்து விட்டீர்கள்

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz