சிங்கப்பூர் கலவரம் – தமிழக ஊடகங்களும் அரசியலும்

சிங்கப்பூரில் நடந்த கலவரம் பலருக்கு நிச்சயம் அதிர்ச்சி அளித்து இருக்கும். என்ன நடந்தது என்று தெரியாமல் அவசரத்தில் தவறான தகவல்களை கொடுத்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையே, இவ்வளவு நாள் எழுதாமல் இருந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்.

கட்டுரை பெரியது எனவே, உங்களுக்கு நேரம் இருக்கும் போது படிக்கவும். Image Credit – www.businesstimes.com.sg

கலவரம் நடந்தது தொடர்பாக செய்திகளையும், காணொளிகளையும் ஏற்கனவே நீங்கள் படித்து / பார்த்து இருப்பீர்கள். திரும்ப அதையே கூறி உங்களை சலிப்படைய வைக்க விருப்பமில்லை.

அதோடு அந்த விபத்து எப்படி நடந்தது என்று இன்று வரை உறுதியாக தெரியவில்லை, இதற்கு என அமைக்கப்பட்டுள்ள குழு ஆராய்ந்து கூறிய பிறகே இது பற்றி விரிவாகத் தெரிய வரும்.

இது பற்றி தெரியாதவர்களுக்கு சுருக்கமாக, ஒரு தொழிலாளி பேருந்தில் அடிபட்டு இறந்ததால், அங்குள்ளவர்கள் வன்முறையில் இறங்கினர், பின் அது கலவரமாகி விட்டது.

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் அதிகம், கடுமையான விதிமுறைகள் உண்டு என்பது எவருக்கும் தெரியும். இது பற்றி நன்கு தெரிந்த, இங்கேயே உள்ள தொழிலாளர்கள் எப்படி இது போல வன்முறையில் இறங்கினார்கள் என்பது தான், பலரின் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக உள்ளது.

எனக்கு தெரிந்த சில காரணங்கள்

முதல் காரணம் குடி. மதுபானம் அருந்தி இருந்தாலே மூளை வழக்கமான முறையில் சிந்திக்காமல் ஆக்ரோசத்தைக் காட்டும் அல்லது இயல்பாக சிந்திக்க விடாது.

“நானெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்” என்று கூறுபவர்கள் கூட 100% வழக்கமான நேரத்தில் இருப்பதை விட இந்த நேரத்தில் குழப்பமாகவும் சாதாரண மன நிலையில் இருந்து விலகியும் இருப்பார்கள்.

குறிப்பாக விவாதம் என்று வந்தால் இதில் உள்ள வித்யாசத்தை அறிய முடியும்.

இந்த நிலையில் அந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இருக்கும் போது, போதையின் வீரியமும் சேர்ந்து கூடுதல் (குருட்டு) தைரியத்தை கொடுத்து இருக்கும். தனியாக இருக்கும் போது வராத தைரியம், கூட்டமாக இருக்கும் போது அதுவும் போதையில் இருக்கும் போது வரும்.

இதை செய்யும் போது இதனால் அவர்களுக்கு ஏற்படப்போகும் பின்விளைவுகள் பற்றி எதுவும் புரியும் நிலையில் அவர்கள் மூளை செயல்படாது.

ஆனால், எல்லாம் முடிந்து தெளிந்து நாம் காவல்துறை வசம் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்த பிறகு, அவர்களின் பயம் வாழ்க்கையில் இது வரை எப்போதும் அனுபவித்து இராத அளவிற்கு இருந்து இருக்கும்.

இதை என்னால் 100% உறுதியாகக் கூற முடியும். ஏனென்றால் சிங்கப்பூரில் தண்டனை முறைகள் அப்படி!

யாருக்காகவும் இந்த விசயத்தில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இவையெல்லாம் இல்லாமல் இருந்தால், நிச்சயம் நாட்டை இவ்வளவு சிறப்பாக வைத்து இருந்து இருக்க முடியாது. இதற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் பிரம்படிகளும் கிடைக்கும்.

எல்லாம் தெளிந்த பிறகு இந்த விசயங்களும், தங்களின் குடும்ப நிலையும் மனக் கண்ணில் வந்து இருக்கும். அப்போது தான் நினைத்து இருப்பார்கள்… தாம் எவ்வளவு பெரிய மிக மோசமான தவறை செய்து இருக்கிறோம் என்பது. காலம் கடந்த சிந்தனை.

உங்களுக்கு, பிரம்படி கொடுப்பது எப்படி இருக்கும் என்று தெரியுமா? நான் ஒருமுறை மலேசியாவில் கொடுத்த பிரம்படியை காணொளியில் பார்த்தேன்.

தண்டனை பெறப் போகிறவருக்கு முன் பக்கம் மட்டும் மறைத்து பின் பக்கம் திறந்து இருக்கும் படி, உடை அணிந்து இருந்தார்கள் [உள்ளாடை கிடையாது].

அசையாமல் இருக்க, முன்பக்கம் அவர் கையை ஒரு கம்பத்துடன் கட்டி விட்டார்கள். பின்னர் ஒருவர் பிரம்பை எடுத்து புட்டத்தில் ஒரு விளாசு! அடுத்த நொடி அந்த இடம் தோல் பிஞ்சு உள்ளே இருந்த வெள்ளைத் தோலே தெரிகிறது. அவர் உடல் நடுங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த ஒரு அடிக்கே இந்த நிலை.. இது தொடர்ந்தால் அவரின் நிலை என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்தத் தழும்பு ஆயுளுக்கும் மறையாது.

சிங்கப்பூரிலும் கிட்டத்தட்ட இதுபோலத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த விஷயங்கள் அனைத்தும் கைது ஆனவர்கள், காவல்துறையிடம் மாட்டி தெளிந்த பிறகு அவர்களது மனத் திரையில் ஓடி இருக்கும். கைது ஆனவர்கள் அனைவரும் இதை எதிர்கொள்ளப் போகிறார்கள்.

இரண்டாவது காரணம் இங்குள்ள பல தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது வெகு குறைவு. இதில் இவர்கள் ஏதாவது தவறு செய்யும் போது அபராதம் விதிக்கப்பட்டால், சில நேரங்களில் அவர்களது மாத சம்பளமே கொடுக்க வேண்டிய அளவிற்கு வரும்.

ஒரு சிலர் மாதமே 500 – 800 வெள்ளி சம்பாதிக்கிறார்கள். இது போன்ற சிறிய கோபங்கள் இந்த இடத்தில் பிரதிபலித்து இருக்கலாம்.

ஏனென்றால், காவலர்கள் மீது இவர்கள் அனைத்தையும் தூக்கி எறிந்த போது அவர்கள் ஒதுங்கி ஓடியதால், தங்களில் ஒருவன் இறந்து இருக்கிறான் என்ற சோகத்தையும் மீறி சிரித்துக்கொண்டு விசிலடித்துக்கொண்டு இருந்தார்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது?!

மூன்றாவது மன அழுத்தம். கடுமையான வேலை, ஓய்வு என்பது குறைவு, நமது மனதை வேறு வழியில் திருப்ப முடியாமை.

வீட்டில் இருந்து பண நெருக்கடி, திருமணம், குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது, வேலை செய்யும் இடத்தில் நெருக்கடி போன்ற காரணங்கள் மேலும் தூண்டி இருக்கலாம்.

ஆனால், இவை எந்தக் காரணமும் இந்தக் கலவரத்தை நியாயப்படுத்தி விட முடியாது. வேறு எந்த நாடும், சிங்கப்பூர் போல தொழிலாளர்களுக்கு இவ்வளவு சுதந்திரத்துடன் / சலுகைகளுடன் இருக்குமா? என்று எனக்குத் தெரியவில்லை.

அவர்கள் வேலை செய்யும் இடத்தில் அங்குள்ளவர்கள் மோசமாக நடந்து கொண்டு இருக்கலாம் ஆனால், அரசாங்கம் இன்று வரை அது போல நடந்து கொண்டதில்லை. எங்காவது சில தவறுகள் நடக்கலாம் அது இயல்பு.

ஏன் சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்?

சிங்கப்பூரில் புதிய கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதற்கு உள்ளூர் மக்கள் போதாது. அதோடு சுத்தம் செய்வது, சாலை அமைப்பது போன்ற கீழ்மட்ட வேலைகளை செய்ய ஆட்கள் போதவில்லை அல்லது இங்குள்ளவர்கள் இவற்றை செய்ய தயாராக இல்லை.

உள்ளூர் மக்கள் இது போன்ற பணியில் ஈடுபட்டால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம், Benefits அதிகம். இது ஒரு நிறுவனத்திற்கு அதிக செலவை கொடுக்கிறது எனவே, வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்துகின்றனர்.

புரியும்படி கூறுவதென்றால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் வந்து தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கின்றன? இதை புரிந்து கொண்டால் இதற்கு விடை கிடைக்கும்.

அதிகளவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கே இருப்பதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை இதற்கு நியாயமான காரணங்கள் உண்டு ஆனால், மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு வெளிநாட்டு ஆட்கள் தேவை.

எனவே இது ஒரு இக்கட்டான சூழ்நிலை. தற்போது சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்களை / மற்ற பிரிவினரை எடுப்பதையும் குறைத்துக்கொண்டு வருகிறது. இது பற்றி ஒரு பத்தியில் கூற முடியாது.

இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதி என்பது இந்தியர்கள் வசிக்கும் பகுதி என்று கூறக் கூடாது. இந்தியர்கள் பெரும்பான்மையோர் வர்த்தகம் செய்யும் இடம் என்பது தான் சரி. காரணம் சிங்கப்பூரில் பல இனத்தவரும் வசிக்கிறார்கள்.

எனவே குறிப்பிட்ட ஒரு இனத்தவரை மட்டும் குறிப்பிட்ட பகுதியில் சேர அனுமதிக்காது காரணம், குழு சேர்ந்தாலே அங்கு பிரச்சனை வரும்.

எனவே ஒரு அரசாங்க குடியிருப்பு கட்டிடத்தில் ஒரு இனத்தவர் இவ்வளவு அளவில் தான் இருக்க முடியும் என்று கட்டுப்பாடுகள் இருக்கிறது. இருந்தும் லிட்டில் இந்தியாவில் மற்ற இடங்களை ஒப்பிடும் போது இந்தியர்கள் கூடுதலாக வசிப்பதாக நினைக்கிறேன்.

இங்கே ஒரு பிரச்சனை உள்ளது. பெயர் தான் லிட்டில் இந்தியாவே தவிர இங்கு அனைத்து தெற்கு ஆசியா மக்களும் இருப்பார்கள். நம்மைப் போல பங்களாதேஷ் நாட்டினரும் அதிகளவில் இருக்கிறார்கள்.

பார்க்க இவர்களும் நம்மைப் போலவே இருப்பதால், இவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் அது நம்ம கணக்கிலேயே வைக்கப்படும்.

யார் என்ன செய்தாலும் பெயர் லிட்டில் இந்தியா என்பதால் அது இந்தியர்கள் செய்தது என்று தான் அறியப்படும். நல்லது நடக்க வாய்ப்பில்லை எனவே, இது நமக்கு ஒரு பின்னடைவு.

சிங்கப்பூர் அரசாங்கம் இந்த இடங்களில் ரொம்பக் கட்டுப்பாடு செய்யாமல் மக்களை சுதந்திரமாகவே விட்டு இருக்கிறது. வார இறுதியில் (ஞாயிறு மாலை) தொழிலாளர்கள் தங்கள் நண்பர்களை, உறவினர்களை காண, சாப்பிட, பொருட்கள் வாங்க என்று குழுமுவது வழக்கம்.

இந்த சமயத்தில் மதுவும் நிச்சயம் இருக்கும். எங்கே வேண்டும் என்றாலும் குடிக்க அனுமதி உண்டு. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு இதனால் சிரமங்கள் ஏற்பட்டது.

இவர்கள் குடித்து விட்டு வாந்தி எடுப்பது, சத்தம் போடுவது, கிண்டலடிப்பது என்று புகார்கள் வந்ததால், இரண்டு வாரம் முன்பு தான் இது குறித்து பரிசீலித்து திறந்த வெளிப் பகுதியில் குடிப்பதை தடை செய்ய முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படப் போவதாகக் கூறினார்கள்.

நம்முடைய கெட்ட நேரம் இந்த சம்பவம் அதற்குள் நடந்து விட்டது 🙁 . ஒருவேளை அது செயல்படுத்தப்பட்டு இருந்தால், இந்த சம்பவம் நடக்காமல் இருந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்தக் கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் அந்த பேருந்தில் ஒரு பெண்ணும் இருந்தார், இவர்கள் கலாட்டா செய்ததால் பெண் நடத்துனரும், ஓட்டுனரும் பேருந்து கதைவை உள் புறமாக தாளிட்டுக் கொண்டார்கள்.

ஒருவேளை இதை செய்யாமல் இருந்து, குடி போதையில் இந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து இருந்தால், ஐயோ! நினைத்தாலே பயமாக இருக்கிறது.

இந்தியாவின் மொத்தப் பேரும் நாறி இருக்கும். ஏற்கனவே பாலியல் வன்முறையில் நம் பெயர் கெட்டு கிடக்கிறது. குடித்து இருந்ததால் யாரும் சுய புத்தியில் இருந்து இருக்க மாட்டார்கள். நல்லவேளை இது போன்ற சம்பவம் நடக்கவில்லை.

ஒரே ஒரு மணி நேர மதியிழப்பு ஒருவரை தீரா துன்பத்தில் ஆழ்த்தி விட்டது, யோசிக்காமல் நடந்து கொண்டதால் எவ்வளவு பெரிய இழப்பு! 7 வருடம் சிறை, பிரம்படி.

இனி இவர்களின் குடும்பம் எதிர்நோக்கும் அவமானங்கள், பிரச்சனைகள் எத்தனை? பாதிக்கப்பட்டவர்களின் இளமை இனி திரும்ப வருமா!

கைதானவர்கள் பெரும்பாலும் தோராயமாக 26 – 32 வயதில் இருக்கிறார்கள். இவர்களின் இந்த நிலைக்குக் காரணம் கோபம், உணர்ச்சி வசப்படுதல் அதோடு குடி.

இந்த சம்பவத்தால் சிங்கப்பூரில் மற்ற இனத்தவர் இந்தியர்களை கேவலமாக இணையத்தில் திட்டிக்கொண்டுள்ளார்கள். இதில் குறை காண முடியவில்லை.

இவர்கள் நிலையில் நான் இருந்தாலும் இதையே செய்து இருப்பேன் ஆனால், தொழிலாளர்களுக்கு ஆதரவாக எண்ணற்ற சிங்கப்பூரர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக facebook ல் பக்கம் துவங்கி தொழிலாளர்கள் பற்றிய நல்ல செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

ஒரு சிலர் செய்த தவறுக்காக அனைவரையும் தவறாக பேசக் கூடாது என்று அனைவருக்கும் எடுத்துக் கூறி வருகிறார்கள்.

ஒரு தொழிலாளர் கூறும் போது (ஒலி பண்பலை செய்தி) “நான் மாதத்திற்கு ஒரு முறை தான் லிட்டில் இந்தியா பகுதி வருகிறேன் (ஊருக்கு பணம் அனுப்ப). இந்த சமயத்தில் நண்பர்களை பார்த்து பேச முடிகிறது. ஒரு சிலர் செய்த தவறால் எங்கள் அனைவருக்குமே கெட்ட பெயர் ஆகி விட்டது. இது நடந்து இருக்கக் கூடாது” என்று வருத்தப்பட்டார்.

இது உண்மையும் கூட. யாரோ சிலர் செய்த தவறு அனைவரையுமே தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் படி ஆகி விட்டது. இவரைப் போல, பிரச்சனை செய்யாமல் தங்களை வருத்தி குடும்பத்திற்காக உழைக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

தற்போது “லிட்டில் இந்தியா” பகுதி பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு, வார இறுதியில் மது விற்பனை இந்தப் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதை மீறுபவர்கள் S$5000 (Approx INR 245000) அபராதமாக கட்ட வேண்டும், அதோடு தண்டனையும் உண்டு. பொது இடங்களில் யாராவது மது அருந்தினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தில் சிங்கப்பூர் காவல் துறையினர் துப்பாக்கியை பயன்படுத்தாமல் சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். ஒருவேளை துப்பாக்கி பயன்படுத்தி ஒரு சிலர் இறந்து இருந்தால், மிகப்பெரிய பிரச்சனையாகி இருக்கும்.

40 வருடத்தில் இது போல ஒரு சம்பவம் நடந்தது இல்லையென்பதால், அவர்கள் அனைவருக்குமே இது புதிய அனுபவம். இருந்தும் மூன்று மணி நேரத்தில் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.

இரவே அந்தப் பகுதியை சுத்தம் செய்து, காலையில் பயன்பாட்டிற்கு விட்டு விட்டார்கள். அடுத்த நாள் எரிந்த சாலைப் பகுதியை செப்பனிட்டு அங்கு ஒரு கலவரம் நடந்த அடையாளத்தையே நீக்கி, மக்களை சகஜமாக்கி விட்டார்கள்.

இந்த சமயத்தில் தமிழக ஊடகங்கள் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட விதம் மிக மிக மோசம். இந்த சம்பவத்தில் ஒன்று தெளிவாகப் புரிந்தது. வெகு சில ஊடகங்கள் தவிர எவருக்கும் பொறுப்பில்லை என்பது.

எந்த வித குறைந்த பட்ச விசாரணை கூட இல்லாமல் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிடுகிறார்கள். இங்கே இருந்ததால், இவர்கள் செய்திகளை படித்து இவ்வளவு கேவலமாகவா விசாரிக்காமல் செய்திகள் கொடுப்பார்கள்! என்று ஆச்சர்யமாக இருந்தது.

சன் தொலைக்காட்சி எவ்வளவு பெரிய ஊடகம்!! கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் மக்கள் பயந்து வீட்டில் இருக்கிறார்கள், தமிழருக்கும் சீனருக்கும் சண்டை என்று கூசாமல் கூறி இருக்கிறார்கள். இது எதுவுமே நடக்கவில்லை.

அந்த இரண்டு மணி நேரம் கலவரம் மட்டும் தான் பிரச்சனை, அதன் பிறகு எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. வழக்கம் போல திங்கள் அனைவரும் பணிக்கு சென்றார்கள். எங்களுக்கு தான் மற்ற இனத்தவரை முகம் கொண்டு பார்க்க கூச்சமாக இருந்தது.

facebook, forum போன்ற சமூகத் தளங்களில் நம்மை திட்டிக் கொண்டு இருந்தது மட்டுமே நடந்தது மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் யாருக்கும் இல்லை.

அதே போல உள்ளூர் சிங்கப்பூர் தமிழர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது முழுக்க முழுக்க இந்திய தொழிலாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது.

சிங்கப்பூர் அரசாங்கம், பொய்யான தகவலை பரப்பியதால் சன் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு சரியான தகவலை வெளியிட்டு சன் தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

சிங்கப்பூர் அரசாங்கமும் அதோடு முடித்துக்கொண்டது. தடை விதிக்கிறேன் என்றெல்லாம் கூறவில்லை.

நான் ஒரு முறை Lafoff பற்றி எழுதி இருந்தேன். அப்போது தமிழக செய்தியில், அமெரிக்கா பற்றி வந்த ஒரு விஷயத்தை அதுவும் இரண்டு வரி தான் குறிப்பிட்டு இருந்தேன்.

அதற்கு அமெரிக்காவில் வசிக்கும் பாஸ்டன் ஸ்ரீராம் இது தவறான செய்தி, இந்திய ஊடகங்கள் அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே எழுதிக்கொண்டு இருக்கின்றன என்று சிறிய அளவில் பொங்கி விட்டார்.

வடிவேல் ஒரு படத்தில் சொல்வாரே.. “இரண்டு ருபாய் தாண்டா கேட்டேன்.. என்ன கோபத்தில் இருந்தானோ என்னை போட்டு பின்னிட்டான்” என்று அது மாதிரி நான் அமெரிக்கா பற்றி இரண்டு வரி தான் எழுதினேன், அவர் அதுக்கு கோபம் ஆகி விட்டார்.

நான் அதை தவறாக நினைக்கவில்லை, அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டேன். இனிமேல் எழுதும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று.

எனக்கு தற்போது சிங்கப்பூர் விசயத்தில் தமிழக ஊடகங்கள் தவறாக எழுதிய போது, இவர் கூறியது தான் நினைவிற்கு வந்தது. எந்த ஒரு விசாரணையும் இல்லாமல், தங்களின் பொறுப்பை உணராமல் தவறான செய்திகளை மக்களுக்கு கொடுத்து பிரச்னையை பெரிது ஆக்குகிறார்கள்.

ராமதாஸ், சீமான் போன்றவர்களின் அறிக்கையைப் படித்தால், கடுமையான மன உளைச்சலாக இருக்கிறது. “தமிழ் தமிழ்” என்று கூறி தமிழர்கள் என்றாலே மூளை இல்லாதவர்கள் என்று நினைக்கும்படி செய்து விடுவார்கள் போல இருக்கிறது.

என்ன நடந்தது என்று தெரியாமலே பாதிக்கப்பட்டது தமிழன் என்பதால் கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆதரித்து பேசுகிறார்கள் என்பதை விட தவறான தகவலை / நடக்காத ஒன்றை அறிக்கையாக சமர்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மிகவும் அசிங்கமாக இருக்கிறது.

ஏனென்றால், என்ன நடந்தது / நடக்கிறது என்று இங்குள்ளவர்களுக்குத் தெரியும். அப்படி இருக்க, நமக்கு நன்கு தெரிந்த ஒன்றை, நடக்காத ஒன்றை நடந்ததாக கூறக் கேட்கும் போது எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்.

இதை சிங்கப்பூர் குடிமக்கள் அறிய நேரிட்டால் தமிழர்களைப் / இந்தியர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள். கலைஞர் பொறுப்பாக அறிக்கை விட்டு இருக்கிறார்.

இந்தப் பிரச்சனையின் மூலம் தெரிந்து கொண்டது, சில தமிழக ஊடகங்களும், அரசியல்வாதிகளும் எந்த வித குறைந்த பட்ச விசாரணையும் இல்லாமல் தங்கள் மனம் போன போக்கில் பேசி வருகிறார்கள் என்பது.

சிங்கப்பூர் அரசாங்கம் தொழிலாளர்கள் தங்கி உள்ள இடங்களில் விசாரணை செய்கிறது என்பது உண்மை தான் ஆனால், இவர்கள் நினைப்பது போல அடக்குமுறை அது இது என்றெல்லாம் இல்லை. வழக்கமான விசாரணை தான்.

இதை அந்த தொழிலாளர்கள் படித்தாலே “இவரே நம்ம பிழைப்பை கெடுத்து விடுவார் போல உள்ளதே” என்று தான் நினைப்பார்கள்.

சிங்கப்பூரில் கலவரம் நடந்தது உண்மை தான். இரவு 12 மணியோடு அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. அதன் பிறகு யாரும் யாரையும் மிரட்டவில்லை, அடக்குமுறையும் இல்லை, யாரும் பயந்து ஒளியவில்லை, தமிழர்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை.

எனவே, யாரும் இவர்கள் தரும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள். தற்போது விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. அதோடு காவல் துறையும் மிகவும் வெளிப்படையாக தங்கள் நடவடிக்கைகளை மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

நீங்களே கூட அவர்களுடைய facebook தளம் சென்றால் காண முடியும். https://www.facebook.com/singaporepoliceforce

கலவரத்தில் 400 பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் குற்றத்தில் ஈடுபடாதவர்களை விடுவித்தது போக கைதாகியது 24 பேர் (தற்போது 5 பேர்). மீதி உள்ளவர்களை விசாரிக்காமல் எப்படி கண்டு பிடிக்க முடியும்?

அடுத்த நாளே இவர்கள் தங்கியுள்ள இடங்களில் சென்று விசாரணை நடத்தினார்கள். CCTV ல் உள்ள காட்சிகளை வைத்து தங்களுடைய தகவல்களுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். அனைவரையும் பிடிப்பது என்பது சாத்தியம் இல்லை என்றாலும்.. சிலர் நிச்சயம் மாட்டுவார்கள்.

சிங்கப்பூர் சட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் K சண்முகம் அவர்கள் [இவர் ஒரு தமிழர்] தொழிலாளர்கள் அதிகளவில் இருக்கும் டார்மிட்டரி பகுதிகளுக்கு சென்று அவர்களின் அச்சத்தை போக்கி வருகிறார்.

தவறு செய்யாதவர்கள் எவரும் எதற்கும் பயப்பட தேவையில்லை, எந்தப் பிரச்சனை என்றாலும் அரசாங்கத்தை அணுகலாம் என்று கூறி இருக்கிறார்.

இவர் இது போல அவர்களுடன் உரையாடுவது நிச்சயம் அவர்கள் மனதில் இருக்கும் இயல்பான பயத்தைக் குறைத்து நிம்மதியைக் கொடுக்கும்.

இது போல தொழிலாளர்களுடன் பேசும் போது பேச்சில் அதிகாரம் இருக்காது, இயல்பான உரையாடலே இருக்கும். உண்மையில் இதெல்லாம் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்.

நான் சிங்கப்பூரில் இருப்பதால் கூறவில்லை, உண்மையாகவே சிங்கப்பூர் அரசாங்கம் நமக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. சுதந்திரம் கொடுத்து இருக்கிறது. இது போல ஒரு வசதியை / சுதந்திரத்தை வேறு எந்த நாட்டிலும் எதிர்பார்க்க முடியுமா! என்று தெரியவில்லை.

சில நேரங்களில் நானே, “இவ்வளவு தூரம் நமக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமா?” என்று நினைத்து இருக்கிறேன். அந்த அளவிற்கு நம் மீது நம்பிக்கை வைத்த சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு, மிகப்பெரிய கெட்ட பெயரை உலகளவில் ஏற்படுத்தி விட்டோம். குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.

சிங்கப்பூரில் இருப்பது தமிழ்நாட்டில் இருப்பது போல இருக்கிறது என்று கூறுவார்கள். எனவே, சிங்கப்பூரையும் தம் சொந்த ஊராக நினைத்தவர்கள், உடன் கலவரத்தையும் செய்து விடுவார்கள் என்று நான் கற்பனையிலும் நினைத்தது இல்லை.

கிடைத்த சுதந்திரத்தை, வசதியை கெடுத்து தாங்களே தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டார்கள். இதோடு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் தமிழக ஊடகங்களும், அரசியல்வாதிகளும். தமிழனுக்கு தமிழனே எதிரி.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!

{ 33 comments… add one }
 • விரிவான விளக்கமான தெளிவான கட்டுரைக்கு என் பதில்.

  நூறு சதவிகிதம் உண்மையை எழுதியிருக்கீங்க.

  வாழ்த்துகள்.

 • VIKNESHRAN ADAKKALAM December 13, 2013, 10:44 AM

  அருமையாக எழுதி இருக்கிறீர்கள் நண்பா. பிரம்படியை பற்றி எழுதிய இடத்தில் முன் பக்கம் மட்டும் மூடப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட வேண்டும். சரி செய்துவிடுங்கள். பிரம்படி மோசமானது. வாழ்நாள் முழுக்க அந்த அடையாளம் போகாது. புட்டத்தின் தோலுக்கு மட்டும் பாதிப்பில்லை நரம்புககுக்கும் தான். இரண்டடிகளுக்கு மேல் வாங்குபவர்களுக்கு ஆண்மை பறி போகும். எனது வேலையில் பெரும்பாலான கேஸ்களுக்கு பிரம்படி உண்டு.

 • பனசை நடராஜன் December 13, 2013, 12:07 PM

  உண்மையை கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். மற்ற இனத்தவரைப் பார்க்கும் போது சங்கடமாகதான் இருக்கிறது .

 • சதீஷ் முருகன் December 13, 2013, 12:45 PM

  உள்ளதை உள்ளபடியே எழுதியமைக்கு நன்றி… சிறு கோபம் அதன் விளைவுகள்…. 🙁 இனி நொந்து என்ன பயன்…

 • Aarumugam ayyasamy December 13, 2013, 1:26 PM

  Thank u for writing the post. Most of the Leaders in tamilnadu, does not have the sense or urge to understand the problem.

 • Sadha December 13, 2013, 2:09 PM

  கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது மன அதிருப்தியை (வெளி நாட்டில் இருக்கும் போது நிறைய இருக்கும்) காட்ட இது ஒரு சம்பவமாக அமைந்து விட்டது. காரணத்தை நீங்களே விரிவாக கூறிவிடீர்கள்.

  இதே அந்த நாட்டு குடிமகனுக்கு நேர்ந்து இருந்தால், அவர்களும் அவ்வாறு செய்ய வாய்ப்பு உண்டு.

  ஆனால் நம் நாட்டு மக்கள் அவ்வாறு செய்வது இயல்பு என நமது சுழல்களும், திரை படங்களும், ஊடகங்களும் பயிற்று வித்தது தான் பிரச்சனை.

  தனி மனித ஒழுக்கம் நம்மிடம் குறைவு என்பதை நாமே திரும்ப திரும்ப உலகக்கு உரைத்து கொண்டிருகிறோம்

 • மு.முத்துக்குமார் December 13, 2013, 5:32 PM

  இந்த கட்டுரையை உங்களிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருந்தேன். தகவல்களுக்கு நன்றி னா.

 • siva December 13, 2013, 6:22 PM

  இந்த கட்டுரையை தான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருந்தேன்…நன்றி

 • ananth December 13, 2013, 8:06 PM

  உணர்ச்சி வசபடுதல் என்பது இந்தியனுக்கு இயல்பானது. அதிலும் தமிழனுக்கு மிக அதிகம். ரோஷம் பொத்துகொண்டு வந்துடும். ஜனங்க இப்படின்னா, journalists இதை பயன்படுத்தி தூண்டிவிட்டு sensationalise செய்து விடுகிறார்கள். ஞாயம் என்பதை காற்றில் விற்று விடுகிறார்கள். diplomacy என்பது பெரும் பாலோருக்கு தெரியாது .
  தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று , தமிழனின் உணர்ச்சியை தூண்டி விட்டு அவன் முன்னேற்றத்திற்கு தடை போட்டிருக்கிறார்கள் தமிழக அரசியல் கட்சிகள் . மீறி முன்னேறுவது தனி திறமையை பொறுத்த தாகி விட்டது .

 • ththeepan December 13, 2013, 8:44 PM

  விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி..இதில் நிறைய தவறுகள் உண்டு.முக்கியமாக வெளிநாட்டு க்கு தொழிலாளர்களை அனுப்பும் போது அந்நாட்டு பழக்க வழக்கம் ,பண்பாடு,சட்ட ,தண்டனை விபரங்களை அறிவுறுத்தி அனுப்ப வேண்டும் .இலங்கையில் சட்டரீதியான முகவுரூடாக செல்பவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இலவசமாக இது பற்றிய வகுப்புகள் எடுத்த பின்னரே அனுப்ப படுகின்றனர் .

 • Srinivasan Manickavasagam December 13, 2013, 9:17 PM

  நல்ல பதிவு நண்பரே …
  இங்கே என்ன நடக்கிறது என்பது தெரியாமலே தமிழ்நாட்டிலும், பல வெளிநாட்டிலும் இருப்பவர்களும் பேசியதற்கு விளக்கம் கொடுத்து கொடுத்து கை வசித்து விட்டது …

  சிங்கப்பூரில் பிரம்படி என்பது தற்போது இயந்திரத்தை வைத்து செய்யப்படுவதாக நண்பர் ஒருவர் சொன்னார் … குனிந்த நிலையில் strap செய்யப்பட்டவரின் பின்னால் நிறுத்தப்பட்டிருக்கும் இயந்திரம், பிரம்மை தலைகீழ் U வாக வளைத்து release செய்துவிடும் …
  அதிகபட்சம் ஒரு அடி தான் ஒரு முறைக்கு … மருத்துவர் சான்றிதழ் கொடுத்த பின்னரே அடுத்த அடி…

 • நந்தவனத்தான் December 13, 2013, 10:39 PM

  சில நூற்றாண்டு முன்பு வரை தமிழராக இருந்த மலையாளிகளால் உலகெங்கும் ஒரு பிரச்சனையும் இன்றி வியாபித்து இருக்கும் போது எப்படி நம்மால் சென்றவிடமெல்லாம் ‘சிறப்பு’ சேர்க்க முடிகிறது என்பதே ஆராய்ச்சிக்குரிய விடயம்!

  வெளிநாட்டு செல்லும் நபர்கள் புரிந்து கொள்ளவேண்டிய விடயம் என்னவெனில் இந்தியா குறிப்பாக தமிழர் பற்றியெல்லாம் ஒருத்தனுக்கும் ஒரு மரியாதையும் இல்லை. யாரவது தவறி மரியாதை இருந்தாலும், நம்மாளுகிட்ட 5 நிமிசம் பேசினால் போதும், திட்டியே இருக்கற மரியாதையையும் நம்மவர்களே டேமேஜ் பண்ணீருவானுக. மேலும் நம்ம அரசு இயந்திரம் – பிரச்சனை என்றால் செத்த பின்புதான் இந்திய எம்பஸி ஆளனுப்பும். ஆகவே ஐரோப்பா, அமெரிக்கா எங்கானாலும் சிக்கினால் உடனே கடுமையாக தண்டனை வழங்கி பிறருக்கு பூச்சாண்டி காட்ட நம்மள யூஸ் பண்ணிக்குவானுக. நேத்து அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய கவுண்சிலேட் அதிகாரி ஒரு உதாரணம். அமெரிக்காவில் மெக்ஸிகோ தொழிலாளிகளை sweat shop போன்ற இடங்களில் சுரண்டுவது என்பது ஊரறிய நடக்கும் சமாச்சாரம். விசா இல்லாமல் வரும் தொழிலாளிகளை கைது செய்வார்களே ஒழிய, ஒரு போதும் இவர்களை வேலைக்கு வைக்கும் அமெரிக்க முதலாளிகளை கண்டுக்க மாட்டார்கள்(பார்க்க food,inc documentary). ஆனா நம்மூர் அம்மணி மாட்டியதும் சும்மா ஊடு கட்டுறானுக. ஆகவே வெளிநாட்டுக்குப் போவோர் போகும் இடத்தில் இதை கவனத்தில் வைத்து மூடிகிட்டு இருக்கவேண்டும்!

  இன்னொரு விடயம் சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடு காட்டுமிராண்டு நாடுகளைப் போல இன்னமும் பிரம்படி தண்டனை வழங்கிக் கொண்டிருப்பது. உலகில் இன்னமும் பிரம்படி வழங்குபவைளும் பெரும்பான்மை முசுலிம் நாடுகள்தான். அவனுகதான் இன்னமும் 8-ம் நூற்றாண்டு சட்டத்தை பிடித்து தொங்குகிறார்கள் என்றால் சிங்கப்பூருமா? இன்னமும் அதிர்ச்சி குழந்தைகளை அடிக்க கடைகளில் பிரம்பு விற்பதாக விக்கியும் படம் போட்டிருக்கிறார்கள். மேலும் பள்ளியில் வேறு பிரம்படி உண்டாமே? டெக்னாலஜியில் வளர்ந்தாலும் இன்னமும் 18-ம் நூற்றாண்டு மனோநிலையில்தான் ஆசியா முழுமையும் இருக்கிறது !

  • வேகநரி December 14, 2013, 7:14 PM

   //சில நூற்றாண்டு முன்பு வரை தமிழராக இருந்த மலையாளிகளால் உலகெங்கும் ஒரு பிரச்சனையும் இன்றி வியாபித்து இருக்கும் போது எப்படி நம்மால் சென்றவிடமெல்லாம் ‘சிறப்பு’ சேர்க்க முடிகிறது என்பதே ஆராய்ச்சிக்குரிய விடயம்!//

   சகோ நந்தவனத்தான்,
   சரியா சொன்னீங்க. நம்ம உறவு , நம்ம தொப்பிள் கொடி ஆங்கிலேயர்களிடம் எவ்வளவு பவ்வியமா அடக்க ஒடுக்கமா நடந்து நல்ல பிள்ளை பேரெடுத்து எவ்வளவு வசதியாக வாழ்கிறாங்க, நம்ம ஆட்கள்கள் மட்டும் ஒருவன் உசுப்பேற்றிவிட்டால் தனது சொந்த வீட்டுக்கும், சொந்த நாட்டிற்கும் நாசம் பண்ணகூடியவங்களா இளிச்சவாயர்களா இருங்காங்களே 🙁

 • தி தமிழ் இளங்கோ December 14, 2013, 6:31 AM

  உண்மை நிலவரத்தை உரத்துச் சொன்னீர்கள். கலவரத்தை முன்னிட்டு கைதானவர்கள் எதிர் கொள்ளவிருக்கும் பிரச்சினைகளையும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் விதம் படம் பிடித்துக் காட்டினீர்கள். திண்ணையில் இருந்து கொண்டு அடுத்தவன் வீட்டு பிள்ளைகளை உசுப்பிவிடும் இனக்குழு அரசியல்வாதிகள் தமிழ்நாட்டின் சாபக்கேடு.

 • avargal unmaigal December 14, 2013, 9:36 AM

  ஊடகம் சொல்லாத உண்மைகளை வலைதளம்தான் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறது .பகிர்வுக்கு நன்றி

 • sathiyamurhty veeraiyan December 14, 2013, 4:50 PM

  தமிழனுக்கு எதிரி தமிழ் தலைவர்கள் தான் என்று தமிழ் நாட்டுத் தலைவர்கள் மீண்டும் நிரூபித்து விடுகிறார்கள். உண்மை நிலையை விளக்கி புரிய வைத்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி. சிங்கபூர் மக்களாகிய எங்களுக்கு தெரியும் உலகின் எந்த நாட்டிலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது போன்ற சுதந்திரமும் உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. அதனால் தான் சிங்கப்பூரில் பணியாற்ற உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் கல்வியாளர்களும், அறிஞர்களும் தொழிலாளர்களும் தேடி வருகிறார்கள் இந்த சம்பவம் சிங்கபூர் வாழ் தமிழர்களுக்கு ஒரு தலை குனிவு தான். இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

 • Dinesh December 15, 2013, 9:15 AM

  சம்பவத்தைப் பற்றிய விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி கிரி…

 • Karthikeyan December 15, 2013, 10:51 AM

  மிகக்கேவலமான தொனியில் எழுதப்பட்ட கட்டுரை. அங்கு நடந்தது சில தொழிலார்கள் அரசுக்கு எதிராக செய்த வன்முறை. இதில் தேவை இல்லாமல் தான் தமிழனாக அவமானமாக உள்ளது மற்ற வெங்காயம் ஏன் சேர்க்கவேண்டும். சீமான் சொல்லி சிங்கப்பூரில் கேட்குதாக்கும். சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு நீங்க காண்பிக்கிற சின்செயாரிட்டி பாராட்டுறேன் இருந்தாலும் உங்க ஓவர் சின்செரிட்டி குறையுங்கப்பா. தாங்க முடியலை.

 • குறும்பன் December 17, 2013, 4:42 AM

  //இந்தப் பிரச்சனையின் மூலம் தெரிந்து கொண்டது, சில தமிழக ஊடகங்களும், அரசியல்வாதிகளும் எந்த வித குறைந்த பட்ச விசாரணையும் இல்லாமல் தங்கள் மனம் போன போக்கில் பேசி வருகிறார்கள் என்பது.// இது இப்போது தான் தெரியுமா? அய்யோ அய்யோ 🙂

  சிங்கப்பூர் முன்னேறிய நாடு என்றாலும் அதன் சில தண்டனைகள் முன்னேறிய நாட்டுக்கானது அல்ல, காட்டுமிராண்டித்தனம் ஆகும்.

  கலவரம் கண்டிக்கப்பட வேண்டியது. அதிக அளவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் (குறிப்பாக குறைந்த ஊதியம் பெறுபவர்கள்) கூடும் இடத்தில் நிறைய காவல் இருக்கனுமே சிங்கப்பூர் இதில் தவறிவிட்டதோ?

 • கிரி December 17, 2013, 10:27 AM

  அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  @விக்னேஸ்வரன் மாற்றி அமைத்து விட்டேன். நன்றி

  @தீபன் சிங்கப்பூரிலும் இது பற்றி இவர்களுக்கு கூறப்படும்.

  @ஸ்ரீநிவாசன் மாணிக்கவாசகம் தகவலுக்கு நன்றி

  @நந்தவனத்தான் & குறும்பன் அமெரிக்கா பற்றிய செய்திகள் எனக்கு தெரியாது எனவே கருத்து கூற விரும்பவில்லை.

  பள்ளியில் பிரம்படி என்பது தவறான தகவல். குழந்தைகளுக்கு அது போல இங்கே நடந்தால், மிகப் பெரிய சர்ச்சையாகி விடும். கொஞ்ச மாதம் முன்பு ஒரு குழந்தையை ஒரு ஆசிரியர் அடித்தது CCTV யில் பதிவாகி மிகப்பெரிய பிரச்சனையாகி விசாரணை குழு அமைக்கும் அளவிற்கு சென்று விட்டது.

  அரபு நாடுகளின் தண்டனை உடன்பாடில்லை ஆனால் சிங்கப்பூர் தண்டனை எனக்கு ஒப்பானதே. இது போல சட்டங்கள் இருப்பதால் தான் குற்றங்கள் இங்கு குறைவாக இருக்கிறது. குறைந்த பட்சம், பாதிக்கப்பட்டவர் இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மூலம் சிறு ஆறுதல் பெற முடியும். BTW நான் மரண தண்டனைக்கு ஆதரவானவன்.

  இது குறித்து நான் முன்பு எழுதியது. http://www.giriblog.com/2010/09/expression-of-a-stone-man.html

  @கார்த்திகேயன் அமைதியான நாட்டில் அரசுக்கு எதிராக தமிழர்கள் வன்முறை செய்தால் உங்களைப் போன்றவர்கள் பெருமை கொள்வார்கள் என்பது இதுவரை எனக்குத் தெரியாது.

  அடுத்த முறை வெங்காயம் சேர்க்காமல் தக்காளி சேர்க்க முயற்சிக்கிறேன்.

  சீமான் கூறி சிங்கப்பூர் கேட்காது.. ஆனால் சீமான் கூறுவது சிங்கப்பூருக்கு கேட்கும். இங்குள்ளவர்கள் இந்தக் கலவரம் பற்றி, தொடர்புடைய அனைத்தையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இறந்த நபரின் குடும்ப நிலை முதற்கொண்டு அறிந்து வைத்து இருக்கிறார்கள்.

 • Arun December 17, 2013, 9:02 PM

  நேர்மையான விமர்சனங்கள் உள்ள நல்ல பதிவு தல

  பல விஷயங்கள் உள்ளது உள்ளபடி சொன்னா ஒரு சைடு சப்போர்ட் பண்ணுற மாதிரி தான் தெரியும் அதான் கார்த்திகேயன் அவர்கள் சொல்லுறது ல எனக்கு தெரியுது, நீங்க அடிக்கடி சொல்லுறது தான் எல்லாருக்கும் நல்லவனா இருக்கவே முடியாது

  – அருண்

 • நந்தவனத்தான் December 18, 2013, 11:20 PM

  மரணதண்டனைக்கு நானும்தான் ஆதரவாளர், ஆனால் பிரம்படி தண்டனைக்கு அல்ல. அதுவும் காரில் ஸ்பிரே பெயிண்ட் அடித்தவனுக்கெல்லாம் பிரம்படி, தழும்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பது ரொம்ப ஓவராக தோன்றுகிறது.

  பள்ளிகளில் பிரம்படி குறித்து விக்கியில் படித்ததை நம்பிதான் எழுதினேன்.
  http://en.wikipedia.org/wiki/Caning_in_Singapore#School_caning

  பொய் எனில் நல்லது!

 • Abarajithan December 20, 2013, 4:06 PM

  உங்களது நடுநிலையான கட்டுரைகளில் இது ஒன்று. மிகச் சரியாக, தைரியமாக எழுதி இருக்கிறீர்கள். ஒரு சின்ன இணைப்பாக ஒன்று கூடிக்கொள்ள விரும்புகிறேன். (நான் பிளாக் எழுதாததால் இதை விரிவாக எழுத முடியவில்லை.)

  டிஸ்கி: நான் போரைப் பற்றியோ, அதன் சரி-பிழை நியாயங்களைப் பற்றியோ சொல்லவில்லை. நியாயங்கள் பக்கச்சார்பானவை. அடுத்து இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. அரசாங்கமும், நாட்டு மக்களும் வேறுவேறானவர்கள்.

  நான் இலங்கையில், சிங்கள பெரும்பான்மை நகரத்தில் வசிக்கின்றேன். கடந்த பத்து வருடங்களாக, எந்தவிதமான இனக் காழ்ப்புணர்ச்சியும் சிங்களவர்களுக்கு தமிழர்மேல் வந்ததில்லை. தமிழ் பொதுமக்களை ஒதுக்குவதோ, நியாயமான (day to day) உரிமைகளை மறுப்பதோ இங்கு நடப்பதில்லை. இப்போது கொஞ்சக் காலமாக முஸ்லிம்கள் மீதான இனவெறுப்பு அதிகமாகி வருவது கவலைக்குரியது. ஆனால், தமிழர்களுக்கு எதிரான இனவெறுப்பை நான் இதுவரையில் சந்திக்கவில்லை. போர் நடந்த காலத்திலும், இராணுவத்துக்கான ஆதரவும் புலிகள் மீதான எதிர்ப்பும் சிங்களவர்களிடையே காணப்பட்டாலும் தமிழர்களை அவர்கள் வெறுக்கவில்லை. தமிழர்களை புலிகளிடமிருந்து காக்கும் வேலையையே இராணுவம் செய்வதாக (தவறாக) நம்பி வந்தனர். பல துறைகளிலும் தமிழர்கள், தமிழ் மாணவர்கள் மற்றவர்களைவிட முன்னின்றாலும், பொறாமை இல்லாமல், தன்நாட்டவன் என்றே பெருமையோடு தோளில் கைபோடும் மனநிலையிலேயே சிங்களவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். இருந்தும் தமிழர்களுக்கு மீடியா போடும் பொடியில், சிங்களவர் மீதான ஒரு காழ்ப்புணர்ச்சி தொடர்ந்து இருந்து வருகிறது.

  இலங்கையில் அரசாங்கம்கூட தமிழ் மக்களை மட்டும் குறிவைத்து கொடுமைகளை நிகழ்த்தவில்லை. இந்த சுயநல அரசாங்கம் பொதுவாக நடத்தும் சுரண்டல்களில், ஊழல்களில் தமிழர்”களும்” மாட்டிக்கொள்கிறார்கள். அரசு இங்கே சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் நிற்பதில்லை. எங்கெங்கு முடியுமோ அங்கங்கெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், இலங்கையில் பிரச்சனை என்பது அரசுக்கும் மக்களுக்கும் இடையே மட்டும்தான். இனங்களுக்கு இடையே, குறிப்பாக சிங்கள-தமிழர்களுக்கிடையே எந்தக் காழ்ப்பும் இல்லை.

  மீடியா மற்றும் தமிழினத் தலைவர்கள் பற்றிய உங்கள் கருத்து 200% உண்மையானது. இந்நிலையில் தமிழக மீடியாக்களும், சீமான் போன்றவர்களும் ஏதோ இங்கே மாபெரும் இன வெறுப்பு, இன ஒழிப்பு நடக்கிறது, யூதப்படுகொலைக்கு நிகரான நிலை நிலவுகிறது என்ற ரீதியில் கூச்சல் போடுகிறார்கள். இலங்கையின் இன்றைய நிலையை நாஜி ஜெர்மனியுடன் தொடர்புபடுத்துபவர்கள் யூதர்களை, அவர்கள் பட்ட கஷ்டங்களை இழிவுபடுத்துகிறார்கள். அவர்களுக்கு ஒன்று, ஜெர்மன் வரலாறு தெரியவில்லை, அல்லது ஈழத்தின் நிலை தெரியவில்லை. உலகத் தமிழர்கள் அவரவரது புரட்சிச் சிந்தனைகளுக்கு வடிகாலாக இணையத்தில் மட்டும் காச்சு மூச்சென்று கத்திவிட்டு போய்விடுகிறார்கள். அவ்வளவே..

 • கிரி December 23, 2013, 1:56 PM

  @அருண் 100% உண்மை. அனைவருக்கும் நல்லவனா இருக்க முடியாது. இருக்க முயற்சித்தால் அதை விட முட்டாள் தனம் எதுவுமில்லை.

  @நந்தவனத்தான் முந்தைய காலங்களில் இருந்து இருக்கலாமோ என்னவோ! ஆனால் தற்போது 100 % இல்லை.

  @Abarajithan நீங்க நம்பறீங்களோ இல்லையோ! நான் இந்தப்பதிவிலேயே இதைக் குறிப்பிட நினைத்தேன் ஆனால், பதிவு திசை மாறி சென்று விடும் என்பதால் அதை குறிப்பிடாமல் விட்டேன்.

  இதை ஒன்றுமே செய்ய முடியாது.

 • வேகநரி December 24, 2013, 7:54 PM

  Abarajithan said
  பல துறைகளிலும் தமிழர்கள் தமிழ் மாணவர்கள் மற்றவர்களைவிட முன்னின்றாலும் பொறாமை இல்லாமல் தன்நாட்டவன் என்றே பெருமையோடு தோளில் கைபோடும் மனநிலையிலேயே சிங்களவர்கள் இருந்தார்கள் இருக்கிறார்கள்.

  இலங்கையை பற்றி உண்மையயிலேயே சரியான அறிவு கொண்டவங்க எவர்களுமே இது பற்றி வியப்படைய மாட்டாங்க.
  சிங்களவங்கள், இலங்கை தமிழர்கள் தான் உண்மையிலேயே தொப்புள்கொடி உறவுகள்.
  தமிழகத்தில் நடைபெறுவது ஒரு அரசியல் விளையாட்டு. தமிழக அத்தியாவசியமான பிரச்சனைகளை சுலபமா இலங்கையை சொல்லியே தாண்டிவிட முடிகிறது.
  மீடியாவை பெறுத்தவரை இனவாதத்தை பயன்படுத்தி விற்பனைக்கு கவர்சியாக எழுத கிடைத்த ஒரு சந்தர்பம்.
  நன்றி கிரி ,அபராஜிதன்

 • Karthikeyan December 25, 2013, 11:35 AM

  @கார்த்திகேயன் அமைதியான நாட்டில் அரசுக்கு எதிராக தமிழர்கள் வன்முறை செய்தால் உங்களைப் போன்றவர்கள் பெருமை கொள்வார்கள் என்பது இதுவரை எனக்குத் தெரியாது.

  #பெருமை கொள்வதர்க்கும் தேவை இல்லாமல் அவமானபடுவதர்க்கும் கூட வித்தியாசம் தெரியலையா ?

  அடுத்த முறை வெங்காயம் சேர்க்காமல் தக்காளி சேர்க்க முயற்சிக்கிறேன்.

  #கூடவே மசாலா சேர்க்கவும். மண்டையில் மசாலா இல்லாதவர்கள் படிப்பதற்காகவே எழுதப்பட்டதல்லவா.

  @BTW நான் மரண தண்டனைக்கு ஆதரவானவன்.
  இத வேற தனியா சொல்லனுமா. உங்க பெரம்படி பற்றிய வர்ணனை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது.

  உங்க ஓவர் ரியாக்சன் கொஞ்சம் குறைங்கப்பா

 • கிரி December 25, 2013, 8:23 PM

  @எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்… சாரி கார்த்திகேயன்.

  உங்களுக்கு BP அதிகம் இருக்கிறதா? உடம்பை கவனிச்சுக்குங்க.

  வாழ்க வளமுடன்.

 • Karthikeyan December 26, 2013, 6:30 AM

  உங்களுக்கு BP அதிகம் இருக்கிறதா? உடம்பை கவனிச்சுக்குங்க
  #புதுசா எதாவது ட்ரை பண்ணுங்க பாஸ் 🙂

 • anbeysivam December 26, 2013, 7:06 AM

  🙂

 • Veyilaan December 26, 2013, 8:15 PM

  எப்படா எழுதுவீங்கனு எதிர்பார்த்திட்டிருந்தேன். நல்ல பதிவு கிரி!

 • Arjun Sridhar UR December 29, 2013, 8:22 AM

  இந்த பதிவில் இன்னும் நிறையா எதிர் பார்த்தேன். தூக்கு மற்றும் பிரம்படியில் எனக்கு உடன் பாடு இல்லை. ஆயுல் தண்டனை தான் சிறந்தது. தூக்கு தண்டனை கைதிக்கு. மக்கள் தோடர்பு இல்லாத இருட்டறையில் ஆறு மாதமும் வேளியில் ஆறு மாதமும் இப்படி ஆயுல் தண்டனை வழங்கி வருடம் ஒரு முறை நேர்கானல் சேய்தால் அவன் எந்த அளவிர்க்கு மனதால் பாதிக்கபட்டிருப்பான் என்பது புரியும். வாழ்க்கையில் ஒருபோதும் தவறு செய்ய மாட்டான்.

  சிங்கபூர் சம்பவம்: இரண்டு பக்கமும் நியாயம் இருக்கிறது. பேருத்து கதவுகள் மூடப்பட்டவுடன் இதை திறக்க முடியாது அப்படி இருக்கும் போது ஏன் பேருந்தை பின்னுக்கோ மூன்னுக்கோ எடுக்கவேண்டும். இது பேருந்து உரிமம் பேரும் போது நிச்சயம் தேரிந்திருக்கும். பேருந்து ஓட்டுனார் எந்த அளவுக்கு அனுபவம் மிக்கவர் என்பது சந்தேகம். குறைந்த சம்பளத்திற்க்காக சீனாவில் இருந்து இறக்கு மதியாகும் அனுபவம் இல்லாத பேருந்து ஓட்டுனார் நீறையாபேர் உள்ளனர். இப்படி உள்ளவர்களில் இவரும் ஒன்ரா. கண் முன்னே ஒருவர் இறக்கும் போது போங்கி எழுவது மனித இயல்பு. ஆனால் சிங்கப்பூர் தமிழர் ஒருவன் 97% ஒருவன் இறந்தாலும் உதவிக்கு வர மாட்டார்கள். நமக்கு ஏன் இந்த வம்பு என்று ஒதுங்குவார்கள். அது அவர்களை சொல்லி குற்றமில்லை அவர்கள் அந்த நாட்டில் வாழ்கை வாழ்க்கை முறை. மும்பையிலும் டோக்கியோவிலும் வாசித்தவர்கள் உலகில் எங்கு வேண்டும் என்றாலும் வசிக்களாம். (சிங்கப்பூரில் வசித்தவன் என்ற முறையிலும் சிங்கப்பூர் தமிழர், சிங்கப்பூர் இடம் பேயர் தமிழர், சீனர்கள், மலாய்மக்கள் என்று நூத்துக்கனக்கானவர்களிடம் பழகி மக்கள் மனங்களி படித்திருந்ததால் இதை சொல்கிறேன் )
  கொசுறு: வருடக்கனக்கில் ஜாப்பனிய மொழி(knows 1500 kanji) கற்றவன் மற்றும் சீன மான்ரின் மொழி கற்றும். வேற்று மொழியில் பேசியும் அவர்கள் மொழியில் பேசியும் அவர்கள் உணர்வுகள் என்னலவில் சரியான முறையில் கணித்ததை சொல்லி இருக்கிறேன்.

  இந்த சம்பவம் ஒரு பாடம்:அப்போழுதுதான் தமிழ் மக்கள் இன்னும் சுதாரிப்புடன் இருப்பார்கள்.

  தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மற்றும் ஊடகங்கள்: மக்களை குழப்பி அதில் மீன்பிடிக்க அலை மோதும் ஒரு கூட்டம்.

 • k.rahman January 13, 2014, 3:30 PM

  //சிங்கப்பூர் முன்னேறிய நாடு என்றாலும் அதன் சில தண்டனைகள் முன்னேறிய நாட்டுக்கானது அல்ல, காட்டுமிராண்டித்தனம் ஆகும்.// அதே தான் என் கருத்தும்.

 • Shajahan August 17, 2014, 2:54 PM

  அண்ணா ஏதோ எட்டாம் நூற்றாண்டு சட்டம் அப்படி இப்படின்னு பினாத்திகிட்டு இருக்கீங்க. உதாரணத்துக்கு உங்க வீட்டு பெண்ணை ஒருத்தன் பாலியல் கொடுமை செய்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். அவனுக்கு அரசாங்கம் மரண தண்டனை கொடுக்குது. நீங்க பெரிய மனசு பண்ணி அவனை சின்ன பிரம்படி மட்டும் கொடுத்து விடுவிக்க சொல்வீங்களாண்னே?

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz