கோபிநாத் & Chetan Bhagat “2 STATES”

புத்தகங்கள் நான் படிப்பது மிகக் குறைவு [சரி..! படிப்பதே இல்லை 🙂 ]. என்னுடைய நண்பன் பாபு, கோபிநாத் எழுதிய “ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!” மற்றும் Chetan Bhagat எழுதிய 2 STATES கொடுத்தான். Image credit – ta.wikipedia.org

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!

கோபி உண்மையைத் தான் சொல்லி இருக்காரு 🙂 . தமிழ் ஊடகங்கள், பதிவர்கள் சிலர் பரபரப்பான தலைப்பை வைத்து ஹிட்ஸ் பெறுவார்கள்.

ஒரு சிலர் தலைப்பில் உள்ளதிற்கு ஓரளவு நியாயம் கூறும் அளவில் எழுதி இருப்பார்கள். ஒரு சிலர் தலைப்பைத் தவிர சுவாரசியமாக எதுவுமே உள்ளே எழுதாமல் இருப்பார்கள்.

இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, “தயவு செய்து இந்தப் பதிவை படிக்காதீங்க!” என்று தலைப்பு வைத்து உள்ளே இழுப்பாங்க. அதற்கு சற்றும் குறைவில்லாத ஒரு தலைப்புத் தான் கோபி புத்தகம்.

வழக்கமான ஒரு சுய முன்னேற்றப் புத்தகமே இது! எந்த ஒரு புதிய சிறப்பும் இல்லை. கோபி போன்ற பிரபலமானவர்களே இது போல தலைப்பு வைத்து இழுத்து ஏமாற்றினால் மற்றவர்களை என்ன கூறுவது? இது கோபிக்கு நிச்சயம் அழகல்ல.

இது குறித்து அவர் விளக்கம் கூறி இருந்தாலும், அதை எத்தனை பேர் கேட்டு இருக்கப் போகிறார்கள்! அப்படியே கேட்டு இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு இருக்கத் தானே செய்யும். பூட்டி இருப்பதைத் தான் திறந்து பார்க்கத் தோன்றும்.

ஒரு சில நல்ல புத்தகங்கள், பதிவுகள் தலைப்பு சரியில்லாததால் பலரின் கவனத்தை பெறாமல் சென்று விடும். படிப்பவர்கள் பெரும்பாலும் தலைப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதே இதற்குக் காரணம்.

இதற்கு, எழுதுபவர்களும் ஓரளவு நியாயமான முறையில் கவர்ந்து இழுக்கும் தலைப்புகள் வைக்க முயற்சிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களின் உழைப்பு, திறமை கவனிக்கபடாமலே போய் விடும். வறட்சியான தலைப்புகள் அவர்களின் உழைப்பையே வீணடித்து விடும்.

இதில் ஒரு பாவமான பிரிவினர் இருக்கிறார்கள். ரொம்ப நல்ல பதிவாக இருக்கும் ஆனால், யாரும் கண்டுக்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் வெறுப்பாகி சர்ச்சையான தலைப்பை வைத்து, “இப்படி தலைப்பு வைத்தால் தான் வருவீங்க அதனால் வைத்தேன்” என்று கூறி இருப்பார்கள்.

ஒருவர் பிரபலமான நபர் என்றால் அவர் என்ன தலைப்பு வைத்தாலும் சென்று படிக்க தயாராக இருப்பார்கள் ஆனால், அதிகம் அறிமுகம் இல்லாதவர் எழுதும் புத்தகம், பதிவு என்றால் தலைப்பு ரொம்ப முக்கியம்.

சொல்லப்போனால் பிரபலமானவர்கள் எழுதியதை விட சிறப்பாக ஒரு சாதாரணமானவர் எழுதி இருக்கலாம் ஆனால், கவனிக்கப்பட மாட்டாது. காரணம், உலகம் பிரபலமானவர்களுக்கே முக்கியத்துவம் தரும்.

“சண்டியர்” என்று கமல் தனது படத்திற்கு பெயர் வைத்த போது கடும் எதிர்ப்பு எழுந்தது அதனால், வேறு வழியில்லாமல் “விருமாண்டி” என்று மாற்றினார். தற்போது அதே “சண்டியர்” என்று ஒரு படம் வருகிறது. ஒரு சத்தமும் இல்லை.

சண்டியர் பெயரை எதிர்த்தவர்கள் இப்ப எங்கே போனார்கள்?

இதை கண்ணதாசன் வாழ்க்கை சம்பவத்தில் இருந்தே கூறலாம். ஒருமுறை கண்ணதாசன், தான் எழுதிய கவிதையை ஒரு மாணவனை விட்டு படிக்கக் கூறினார். அங்கே இருந்தவர்கள் எந்த பாராட்டும் தெரிவிக்கவில்லை.

பின்னர் அந்த மாணவன் எழுதிய கவிதையை தான் எழுதியதாக வாசித்தார். இவர் வாசித்தவுடன் அரங்கில் பலத்த கைதட்டல். பின்னர் இதைக் குறிப்பிட்டு, “உலகம் யார் கூறுகிறது என்பதைத் தான் பார்க்கிறதே தவிர அவர் என்ன கூறுகிறார் என்பதை கவனிப்பதில்லை” என்று கூறி இருந்தார்.

இந்தப் புத்தகம் இவ்வளோ விற்பனையானதிற்கு (2,50,000 பிரதிகளை தாண்டி விட்டதாகக் கூறுகிறார்கள்) காரணம் இதில் உள்ள விஷயம் அல்ல. முழுக் காரணமும் இதை எழுதியவர் கோபிநாத் என்பதும் மற்றும் இந்தப் புத்தகத்தின் தலைப்பிற்க்காக மட்டுமே!

அதற்காக இந்தப் புத்தகம் மோசம் என்று கூறவில்லை. இதில் நல்ல விஷயங்கள் / அனுபவங்கள் உள்ளது ஆனால், ஏற்கனவே இது போல பலர் எழுதி விட்டார்கள் மற்றும் இதை விட சிறப்பாக எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

பிரபல எழுத்தாளர் சாரு, கோபி புத்தக விற்பனை பற்றி புலம்பியது நியாயம் என்றே தோன்றுகிறது. அவருடைய நாவல் 5000 புத்தகம் கூட விற்பதில்லை என்று அடிக்கடி விரக்தியாகப் பேசுவார்.

இவருடைய நாவல்களில் பலருக்கு பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால், இவர் கூறுவது போல புத்தகக் கண்காட்சியில் சுய முன்னேற்ற நூல்கள், சமையல் செய்வது எப்படி?, ஆன்மீகப் புத்தகங்கள், அந்தரங்க பிரச்சனைகள் கேள்வி பதில் போன்ற டெம்ப்ளேட் வகை புத்தகங்களை வாங்குவதில் தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது உண்மை தான்.

நாவல்கள், அறிவியல் ரீதியான புத்தகங்களும் அதிகம் விற்பனையாகிறது ஆனால், புத்தகக் கண்காட்சியையே வாழ வைப்பது இது போன்ற புத்தகங்கள் தான்.

இந்த நிலைக்குக் காரணம் மக்களின் ரசனையின்மையா! அல்லது மக்களுக்கு பிடிக்கும் படி எழுத்தாளர்களுக்கு எழுதத் தெரியவில்லையா! அல்லது நம்முடைய வார இதழ்கள் மக்களை சினிமா செய்திகளை கொடுத்தே மூளையை மழுங்கடித்துள்ளனவா! அல்லது சுஜாதா போன்று எளிமையாக எழுதத் தெரியவில்லையா! அல்லது தமிழக மக்கள் ரசனை அவ்வளவு தானா! அல்லது எழுத்தாளர்கள் தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்கள் என்று நினைத்துக் கொள்வதாலா!

எனக்கு இலக்கியம் என்றால் வேப்பங்காயாக கசக்கும். எனவே இது போன்ற விஷயங்கள் என்றால் மட்டும் தெறித்து ஓடி விடுவேன்.

தமிழில் நீங்கள் படித்த (எளிமையான நடையைக் கொண்ட) சிறப்பான நாவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நான் படிக்க முயற்சிக்கிறேன்.

 2 STATES

நான் தமிழ் வழியில் படித்து வந்தவன் என்பதால், ஆங்கில புத்தங்கள் படிப்பதில் எனக்கு சிரமம் உண்டு.

தமிழ் புத்தகங்களே படிக்காமல் இருக்கும் நான், ஆங்கிலப் புத்தகம் எங்கே படிக்கப் போகிறேன்! சிறு வயதில் புத்தங்கள் அதிகம் படித்துக்கொண்டு இருந்தேன், திடீர் என்று புத்தகங்கள் படிப்பது நின்று விட்டது.

இணையம் என்னை ஆக்கிரமித்து விட்டது. English Vinglish படம் வெளியாகி இருந்த போது அதைப் பார்த்து ரொம்ப ரசித்து விமர்சனம் எழுதி இருந்தேன்.

அதில் நான் ஆங்கிலத்தால் அடைந்த சிரமங்களையும் குறிப்பிட்டு இருந்தேன். Image Credit : www.bookganga.com

Read: “என்னுடைய” Engliஷ் Vingliஷ்

அதில் பின்னூட்டத்தில் நண்பர் அருண் (அருணாச்சலம்) “நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிங்க கிரி! அதனை பின்பற்றினால், உங்களுக்கு நிறைய ஆங்கில எழுத்துக்களும், அவற்றை பயன்படுத்தும் சூழ்நிலையும் புரிய வரும்” என்று அறிவுறுத்தி இருந்தார்.

நான் சரி என்று கேட்டுக் கொண்டாலும், என்ன புத்தகம் படிப்பது என்று குழப்பமாக இருந்தது. ஏனென்றால், பெரும்பாலான ஆங்கிலப் புத்தகங்கள் கடினமான வார்த்தைகளைத் தான் பயன்படுத்தி இருப்பார்கள் அல்லது நமக்கு பிடித்த கருவாக இருக்காது.

இதனால் படிக்க ஆர்வமிருக்காது. ஆசைக்கு கொஞ்சம் படித்து விட்டு அட போங்கப்பா! தூக்கம் வருது என்று புறக்கணித்து விடுவோம்.

இந்த சமயத்தில் நண்பன், இந்தியாவின் பிரபல எழுத்தாளராகவும், உலகளவில் சிறந்த 100 எழுத்தாளர்களில் ஒருவராகவும் உள்ள Chetan Bhagat புத்தகமான 2 STATES கொடுத்தான். இவர் பற்றி ஏற்கனவே எனக்கு அறிமுகம் உண்டு ஆனால், நாவல் படித்ததில்லை.

இவருடைய நாவலைத் தான் அமீர் கான் “3 இடியட்ஸ்” ஆக எடுத்து இருந்தார் (இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி), தமிழில் “நண்பன்” என்று விஜய் நடித்து வெளி வந்தது. இந்த 2 STATES கதையும் 2014 ல் திரைப்படமாக வெளிவரப்போகிறது.

இந்தப் புத்தகம் பஞ்சாபி ஆணுக்கும் தமிழ் (பிராமின்) பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலையும், அதற்கு அவர்கள் பெற்றோரின் எதிர்ப்புகளையும் விவரிக்கும் கதை.

நான் 23 பாகம் தான் படித்து இருக்கிறேன் இன்னும் முடிக்கவில்லை ஆனால், படித்த வரை நன்றாக உள்ளது. இது அவருடைய சொந்த வாழ்க்கைக் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் காட்சிகளை விவரிப்பது ரொம்ப ரொம்ப அருமை. செம நகைச்சுவையாக இருக்கிறது, இவை எல்லாவற்றையும் விட படிக்க ரொம்ப எளிமையாக இருக்கிறது. நானெல்லாம் ஆங்கிலப் புத்தகம் படித்து இப்படி சிரித்துட்டு இருப்பேன் என்று நினைத்ததே இல்லை.

இதில் காதலிக்கப்படும் பெண் தமிழ் என்ற விசயமும், சில தமிழ் வசனங்களும், நடைபெறும் சம்பவங்களும் நமக்கு பரிச்சியமானவை என்பதால் இதில் ஒன்ற முடிகிறது.

என்னோட தளத்தை நீங்கள் தொடர்ந்து படிப்பவர் என்றால், ஒன்றை கவனித்து இருக்கலாம். அது, எனக்கு வட இந்தியர்களை பிடிக்காது என்பது. இது பற்றி நான் எழுதுவதாகக் கூறி அது நீண்ட வருடமாக தவணையில் இருக்கிறது.

இந்தப் புத்தகத்தின் சென்னைப் பகுதியில் சென்னையையும், தமிழர்களையும், அவர்கள் பழக்கங்களையும் டோட்டல் டேமேஜ் செய்து விட்டார். நம்ம ஆளு எவனாவது சென்னையை நக்கலடித்தாலே எனக்கு சுர்ர்ர்னு கோபம் வந்து விடும்.

இதில் வட இந்தியன் கிண்டலடிப்பதை, நான் வரி வரியாகப் படிக்க வேண்டிய நிலை ஆகி விட்டது. இந்த பாபு என்னை வெறுப்பேத்தவே எனக்கு இதைக் கொடுத்து இருப்பான் போல 🙂 .

இந்தக் கதையில் வரும் இவருடைய காதலி தமிழ் பிராமின். பொதுவாகவே இவர்கள் வீட்டில் ஆச்சாரம், ஹிந்து செய்தித் தாள், அமைதி, கட்டுப்பாடு, படிப்பு, படிப்பு மறுபடியும் படிப்பு என்று இருப்பார்கள் [இந்தப் பெண் வெளியே பீர், சிக்கன், செக்ஸ் என்று இருக்கிறார் 😀 .

இவர் தான் Chetan Bhagat மனைவி என்று நினைக்கிறேன், இன்னும் நான் படித்து முடிக்கவில்லை]. இது அவருக்கு வசதியாக போச்சு! செம்ம ஓட்டு ஓட்டுறாரு.

இவர் கூறுவதைப் படிக்கும் தமிழர் அல்லாதவர்கள் தமிழ்க் குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று முடிவே செய்து இருப்பார்கள். இத்தனை கடுப்பையும் மீறி என்னை படிக்க வைத்துக்கொண்டு இருப்பது இவருடைய நகைச்சுவை தான்.

இது விரைவில் படமாக வரப்போகிறது. வந்தால், எப்படி எடுத்து இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சர்ச்சை இருக்கும். எனக்கு இப்பவே டென்ஷன் ஆகுது.

இவருடைய மற்ற புத்தகங்களை வாங்குவதாக (விலைக்குத் தாங்க, ஓசி அல்ல) முடிவு செய்துள்ளேன்.

இந்தப் புத்தகத்தில் சென்னைப் பகுதியை படிக்கும் முன்பு வரை, நான் இந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கனும் என்று இருந்தேன் ஆனால், நம்மை ரொம்ப ஓட்டியதால், வாங்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டேன். இது இவருக்கு ஃபைன் 🙂 .

இந்தப் புத்தகம் படித்து முடித்த பிறகு விமர்சனம் எழுதுகிறேன். இவர் புத்தகத்தை அறிமுகப்படுத்திய / படிக்கக் கொடுத்த நண்பன் பாபுக்கு (கிர்ர்ர்ர்) மிக்க நன்றி 🙂  .

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

கொசுறு 1

என்னுடைய அடுத்த பதிவு “மகாநதி” திரைவிமர்சனம் மற்றும் முன்னரே கூறியபடி கமல் படங்களுக்கு நான் எழுதும் கடைசி திரைவிமர்சனம்.

கொசுறு 2

என்னுடைய நண்பரும், பதிவரும், ரஜினி ரசிகருமான சரவணன் தான் எழுதிய “இளமை எழுதும் கவிதை நீ…” தொடரை புத்தகமாக 5 ஜனவரி 2014 வெளியிடப்போகிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவருடைய இந்தத் தொடர் முழுமையும் படித்து இருந்தாலும், புத்தகமாகப் பார்க்க ஆவலாகத் தான் உள்ளது. ஒரு முரட்டு வாலிபனுக்கும், ஒரு புத்திசாலியான பெண்ணுக்கும் இடையே கல்லூரியில் நடைபெறும் மோதல் காதலை கதையாக எழுதி இருக்கிறார்.

சரவணன் தளத்தின் முகவரி http://kudanthaiyur.blogspot.in

புத்தகம் சிறப்பாக விற்பனை ஆகி சரவணன் இன்னும் பல புத்தகங்கள் எழுதி பெரும் புகழ் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். நமக்கு தெரிந்தவங்க பிரபலம் ஆனால், நமக்குப் பெருமை தானே! 🙂 .

{ 13 comments… add one }
  • Thamizhchelvan December 24, 2013, 8:06 AM

    //எனக்கு இலக்கியம் என்றால் வேப்பங்காயாக கசக்கும். எனவே இது போன்ற விஷயங்கள் என்றால் மட்டும் தெறித்து ஓடி விடுவேன்.//

    Same blood 🙂

  • சரியோ தவறோ கோபியின் இந்த புத்தகம் லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. விளம்பர சந்தையே இன்று அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

    உங்கள் நண்பருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

  • rajagopal December 24, 2013, 11:52 AM

    //தமிழில் நீங்கள் படித்த (எளிமையான நடையைக் கொண்ட) சிறப்பான நாவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நான் படிக்க முயற்சிக்கிறேன்.//

    கிரி இது நாவல் அல்ல பாலாவின் மறு பக்கம் நன்றாக இருக்கும் படித்த்து பாருங்கள்

    http://www.scribd.com/doc/42755254/Tamil-Evan-Thaan-Bala

  • Gowrishankar.P December 24, 2013, 12:01 PM

    “என்னுடைய அடுத்த பதிவு “மகாநதி” திரைவிமர்சனம் மற்றும் முன்னரே கூறியபடி கமல் படங்களுக்கு நான் எழுதும் கடைசி திரைவிமர்சனம்.”

    – கமல் படத்துக்கு நான் இனிமேல் விமர்சனம் எழுத மாட்டேன், ‘கதம் கதம்’-னு சொல்லிட்டு, இப்போ ‘மகாநதி’-க்கு விமர்சனம் எழுதறேன்னு சொல்றீங்களே? அப்படி, அதுவும் அவ்ளோ பழசான படத்துக்கு, நீங்க என்ன விமர்சனம் எழுதிறீங்கன்னு பாக்கறேன்.

  • Mohamed Yasin December 24, 2013, 2:28 PM

    புத்தகம் படிப்பது என்பது என்றுமே மகிழ்வான ஒன்று. இணையத்தில் படிப்பதை முற்றிலும் வெறுக்கிறேன்.. சில நேரங்களில் வழியில்லாமல் வாசிக்கிறேன். பயண நேரங்களில் நான் புத்தகம் படிப்பதை அதிகம் விரும்புபவன். .நீங்கள் கூறியது போல், கண்ணதாசன் அவருடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில்தான் புகழ்படாத நேரத்தில் எழுதிய பல சிறந்த பாடல்கள் தகுதி குறைவாகவே பார்க்க பட்டதாக குறிபிட்டுள்ளார்.. இது என்னை பொறுத்தவரை உண்மைதான். எந்த ஒரு மனிதனுக்கும் இதே நிலை தான்.

    உண்மையில் புத்தகங்களை நான் காதலிக்கிறேன். உங்களுக்கு நேரம் இருப்பின் வைரமுத்துவின் தண்ணீர் தேசம், டைரக்டர் சேரனின் டூரிங் டாக்கீஸ், நடிகர் பிரகாஷ்ராஜ்ன் சொல்லாததும் உண்மையே, ரே. கார்த்திகேசு வின் காதலினால் அல்ல.. புத்தகத்தை படிக்க முயற்சி செய்யவும்.

    உங்கள் நண்பன் சரவணனின் புத்தகத்தை வாங்கி வாசிக்க முயற்சிக்கிறேன். (நமக்கு தெரிந்தவங்க பிரபலம் ஆனால், நமக்குப் பெருமை தானே!) உண்மை தான் கிரி.

  • keerthivasan December 24, 2013, 7:50 PM

    கிரி நீங்கள் எதற்கு சார் கமல் மாதிரி ஒரு useless பற்றி அல்லது அவரது திரைப்படங்கள் பற்றி விமர்சனம் எழுதி உங்கள் மரியாதையை கெடுத்து kollathiral அவர் ரசிகர்கள் கமல் பற்றி நீங்கள் புகழ்ந்து எழுதினால் மட்டுமே ஒப்பு கொள்வார்கள் இல்லையென்றால் உங்களை பற்றி கேவலமாக பேசுவார்கள். ரஜினி படம் அல்லது புதுமுகம் அல்லது ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் படங்களை விமர்சனம் செய்து நிறை அல்லது குறைகளை எழுதுங்கள் போதும்.

  • keerthivasan December 24, 2013, 7:52 PM

    கமல் படங்கள் விமர்சனம் எழுத வேண்டாம். ரஜினி அல்லது புது முகங்கள் படங்கள் விமர்சனம் எழுதினால் போதும். கமல் அவர் ரசிகர்கள் விமர்சனம் செய்தால் ஒப்ப மாட்டார்கள்.

  • Arun December 24, 2013, 10:09 PM

    வாழ்த்துக்கள் சரவணன்

    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    கோபி புத்தகம் மாதிரி நெறைய படிச்சு பல்பு வாங்கி இருக்கேன். சுய முன்னேற்ற புத்தகங்கள் எனக்கு உடன் பாடு இல்லை ஒவ்வொரு மனுஷனும் unique behaviours உண்டு நு நான் நம்புறவன்

    2 states கேள்வி பட்டு இருக்கேன் படிச்சது இல்லை இந்த author ர பத்தி தான் actor சூர்யா செம யா எழுதுவார் 2 states எல்லாம் படிச்சு கிட்டே இருப்பேன் நு சொன்னார்

    மிஸ்டரி நாவல் புடிக்கும் ந தமிழ் ல – இந்திரா சௌந்தரராஜன் னோட நாவல்கள் படிங்க. அவரோட நாவல்கள் ல சில தான் – விடாது கருப்பு, மர்ம தேசம் எல்லாமே

    – அருண்

  • akila December 25, 2013, 8:37 PM

    ஹிஸ்டரிக் மற்றும் thrillerku
    கண்ணதாசனின் சேரமான் காதலி,
    நா. பார்த்தசாரதியோட மணிபல்லவம் படிங்க.
    ரெண்டுமே கொஞ்சம் பெரிய நாவல் தான். ஆனால் ரொம்ப interestinga இருக்கும்.

  • கிரி December 25, 2013, 8:59 PM

    @தமிழ் செல்வன் பலர் ரத்தம் பார்த்து இருப்பாங்க போல இருக்கே.. என்ன மாதிரி 🙂

    @ஜோஜிதி உண்மை தான் ஆனால் இதில் எனக்கு உடன்பாடில்லை.

    @ராஜகோபால் ஏற்கனவே யாரு பரிந்துரைத்து இருந்தார்கள் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன். நான் பாலாவின் ரசிகன் கூட.

    @கௌரிஷங்கர் நீங்க என்னோட பதிவுகளை எல்லாம் தொடர்ந்து படிக்கறீங்க என்று தெரியும் ஆனால் சரியாகப் படிக்கறீங்களா என்று சந்தேகமாக இருக்கிறது. திரும்ப ஒருமுறை அந்தப் பதிவை படிங்க. நான் என்ன கூறி இருக்கிறேன் என்று.

    @யாசின் நீங்க ஏற்கனவே பிரகாஷ்ராஜ் புத்தகம் சொல்லாததும் உண்மையே பற்றி கூறி இருக்கீங்க. நான் .மறக்கவில்லை.. கண்டிப்பாக இதை வாங்கிப் படிப்பேன். நீங்கள் குறிப்பிட்ட மற்ற புத்தகங்களையும் படிக்க முயற்சிக்கிறேன்.

    உங்கள் புத்தக ஆர்வம் ரொம்ப சந்தோசம்.

    @அருண் சுய முன்னேற்ற கருத்துக்கள் பற்றி நீங்கள் கூறியது சரி தான்.

    சூர்யா எங்க எழுதி இருக்காரு! நான் படிக்கலையே..!

    மர்மதேசம் சன் தொலைக்காட்சியில பார்த்து இருக்கிறேன்.. படித்தது இல்லை. படிக்கிறேன்.

    @கீர்த்திவாசன் இந்தப் படம் விமர்சனம் எழுதுவது என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். திட்டுபவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. உங்கள் அன்பிற்கு நன்றி

    @அகிலா நன்றி

  • பனசை நடராஜன் December 26, 2013, 8:22 AM

    உங்களைப் போலவேதான் நானும். ஆங்கிலம்னாலே வேப்பங்காய்.. கற்றுக் கொள்ளவாவது இந்த 2 STATES புத்தகத்தை படிக்க முயற்சிக்கிறேன். வழக்கம் போலவே உங்கள் எழுத்து அருமை..

  • r.v.saravanan December 26, 2013, 8:23 AM

    தங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரி

  • Arun December 26, 2013, 10:33 PM

    “சூர்யா எங்க எழுதி இருக்காரு! நான் படிக்கலையே..!”

    சூர்யா எழுதலை சேடன் பகத் தோட book promotion சென்னை ல நடந்தது அந்த promotion கு chief guest சூர்யா அதுல பேசும் போது 2 ஸ்டேட்ஸ் அவ்வளவு கலக்கல் லா இருக்கும் படிச்சுகிட்டே இருப்பேன் நு சொன்னார்

    – அருண்

Leave a Comment