கடந்த சில நினைவுகள் [2013]

வ்வொரு வருடம் துவங்கும் போதும் பல எதிர்பார்ப்புகள், கடமைகள், பொறுப்புகள் என்று தான் துவங்குகிறது. இந்த வருடம் சிறப்பாகச் செல்ல வேண்டும் என்று நினைக்காத எவரும் இருக்க மாட்டார்கள்.

புது வருடத்தில் புதிய முடிவுகளை சிலர் எடுப்பார்கள், சிலர் எல்லா நாளும் ஒரே நாளே என்று வழக்கம் போல இருப்பார்கள் 🙂 .

இந்த வருடம் எனக்கு எப்படிப் போனது என்று பார்க்கிறேன்…!

2013 துவக்கத்தில் இரண்டு முடிவு எடுத்து இருந்தேன். ஒன்று காலையில் எழுந்தவுடன் தண்ணீர் ஒரு பாட்டில் குடிக்க வேண்டும். இரண்டாவது சாலையில் நடக்கும் போதும் நேரில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போதும் செல்போன் நோண்டிக் கொண்டு இருக்கக் கூடாது என்பது.

முதல் முடிவை 90% பின் பற்றி இருக்கிறேன். எனக்கு தண்ணீர் குடிப்பது என்றால் விஷம் குடிக்கிற மாதிரி இருக்கும் போல, குடிக்கவே தோன்றுவதில்லை ஆனால், தண்ணீர் சரியாகக் குடிக்கவில்லை என்றால் கற்கள் தோன்றி கடுமையான வயிற்று வலி வரும் என்று அனுபவப் பட்டவர்கள் கூறியதால், பயம் வந்து இதை ஒழுங்காகப் பின்பற்றி வருகிறேன்.

ஒரு மாதம் ஒழுங்கா குடிப்பேன் பின் விட்டுவிடுவேன் என்று நினைத்தேன். பரவாயில்லை.. வெற்றிகரமாக தொடர்ந்து விட்டேன் 🙂 .

சிகரெட் புகைப்பவர்கள் என்ன தான் “முகேஷ்” வந்து ஒவ்வொரு படத்திலும் கூறினாலும் யாரும் கேட்பதில்லை ஆனால், பாருங்க நான் நண்பர்கள் கூறி பயம் வந்து இதை ஒழுங்கா பின்பற்றுகிறேன் 🙂 . இந்த வருடம் 90% ல் இருந்து 150 % ஆக உயர்த்த முடிவு செய்து இருக்கிறேன்.

மொபைல் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது என்றாலும், அதை நடக்கும் போது மற்றவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நோண்டிக் கொண்டு இருப்பது மிகத் தவறான செயல்.

இதை நான் 75% குறைத்து இருப்பதாக நினைக்கிறேன் இனி இதை 100% கொண்டு வர வேண்டும். இது தவிர புதிய முடிவு எதுவும் எடுப்பதாக இல்லை / எடுக்கத் தோன்றவில்லை.

இந்த வருடம் “ஜெ” செய்த வேலையால் எனக்கு நஷ்டம் மற்றும் என்னுடைய திட்டங்கள் எல்லாம் மாறிக்கொண்டு இருக்கிறது.

நான் ஒரு இடத்தில் இடம் வாங்கி இருந்தேன் அதை விற்று அதில் வரும் பணத்தை வைத்துத் தான் கட்டிய வீட்டுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்தேன் ஆனால், “ஜெ” பத்திர பதிவு விலையை தாறுமாறாக உயர்த்தியதால், ரியல் எஸ்டேட் சரிவடைந்து விட்டது.

இதனால் இடத்தை திட்டமிட்ட படி இந்த ஆண்டு துவக்கத்தில் விற்க முடியாததால் வீட்டுக் கடன் கட்டுவதில் சிரமம் ஆகி விட்டது. அதோடு அனாவசியமாக வட்டி கட்ட வேண்டிய நிலை ஆகி விட்டது.

இதன் காரணமாக நான் 2014 இறுதியில் இந்தியாக்கே திரும்ப வந்து விட வேண்டும் என்ற என் முடிவு சில மாதங்கள் தள்ளிப் போக வேண்டியது இருக்கும் போல உள்ளது. ரொம்ப வெறுப்பாக உள்ளது. எப்படியாவது இது முடிந்து விட்டால் சீக்கிரம் சிங்கப்பூரில் இருந்து கிளம்பி விடுவேன்.

எனக்கு இந்த ரியல் எஸ்டேட் சரிவால் பாதிப்பு என்றாலும், இதுவும் நல்லதுக்கே என்று நினைக்கிறேன். அனைத்து விலையும் தாறுமாறாக எகிறிக்கொண்டு இருக்கிறது. ஒரு வரைமுறையே இல்லாமல் விலை வைக்கிறார்கள்.

இதன் மூலம் ரொம்ப ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தவர்கள் அடங்கி இருக்கிறார்கள். கூடுதல் விலையால் மக்களின் வாங்கும் திறனும் குறைந்து, கட்டப்பட்ட பல வீடுகள் வாங்க ஆள் இல்லாமல் காற்று வாங்கிக் கொண்டு இருக்கின்றன. இதில் பலர் இன்னும் பிடிவாதமாக விலையை குறைக்காமல் இருக்கிறார்கள்.

எனக்கு 2014 ல் இடம் விற்றுவிட்டால் எந்தப் பிரச்சனையுமில்லை… பார்ப்போம். அனைத்தும் நன்மைக்கே! குடும்பத்தினரின் & நண்பர்களின் ஆதரவு எனக்கு இருப்பதால், நான் எதற்குமே கவலைப்படுவதில்லை.

எப்படி இருந்தாலும் சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நிஜமாகவே இது எனக்கு ஒரு ஆச்சர்யம் தான் ஏனென்றால், பண நெருக்கடிக்காக நான் என்றுமே கவலைப்பட்டதே இல்லை.

எனக்கு எப்போது நெருக்கடியாகத் தேவைப்படுகிறதோ அப்போது எங்கிருந்தாவது எனக்கு உதவி வரும். இன்று வரை அதற்கான காரணம் புரியவில்லை. எனவே நானும் கவலைப்படுவதில்லை.

எங்களுக்கு வருட இறுதியில் பணம் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதோடு என்னுடைய பையன் யுவன் 16 மாதங்கள் ஆகியும் நடக்கவில்லை என்று என் அம்மா ரொம்பக் கவலையாக இருந்தார்கள்.

இது ஒரு பெரிய விசயமில்லை ஆனால், வருகிறவர்கள் அனைவரும் இது பற்றி கேட்கும் போது அது அவரை மனவருத்தம் ஏற்படச் செய்கிறது. மனிதனின் கவலைகளுக்கு முடிவே இல்லை போல.

மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்று கவலை, திருமணமாகி குழந்தை இல்லை என்று கவலை, குழந்தை வந்த பிறகு பேரன் நடக்கவில்லை பேசவில்லை என்று கவலை, இது சரியானதும் நன்றாகப் படிக்கவில்லை என்று கவலை.

இது சரியானதும் வேலை கிடைக்கவில்லை என்று கவலை. நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் ஆகவில்லை என்று கவலை. Never End 🙂 .

பிறகு ஒரு உறவினர் “சீரடி சாய்பாபா” சுயசரிதை ஒருவாரம் வியாழன் ஆரம்பித்து அடுத்த வியாழனுக்குள் மனதை ஒருமுகப்படுத்தி படித்தால் (கண்டிப்பாக முடித்து விட வேண்டும்) நல்லது நடக்கும் என்று கூறினார் என்று ரொம்ப தீவிரமாக இருந்தார்கள்.

அந்த வாரத்தில் எங்களுக்கு ஒரு இடத்தில் இருந்து பணம் வந்தது அதோடு இவனும் நடக்க ஆரம்பித்து விட்டான். இது எதேச்சையாக நடந்ததா இதனால் நடந்ததா என்று தெரியவில்லை ஆனால், என் அம்மா பிரார்த்தனையால் தான் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

நம்பிக்கை தானே வாழ்க்கை!

நண்பர்கள் சிலர் நான் பெரிதாக எழுதுவதாகக் குறிப்பிட்டனர். குறையாகக் கூறியது போல தோன்றவில்லை, இருந்தாலும் யோசிக்க வேண்டிய விசயமாக உள்ளது.

நான் அதிகம் எழுதுவதில்லை என்பதால், எழுதும் போது கூற நினைத்ததை கூறி விடுகிறேன் எனவே அதிகமாகி விடுகிறது. இன்னமும் மாதம் 10 இடுகைகளை (Post) தாண்டி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

2009 ல் இருந்து ஐந்து வருடமாக 95% இதை கடைப்பிடித்து இருக்கிறேன்.

முன்பு அதிகம் அரசியல், சமூகப் பதிவுகள் எழுதிக் கொண்டு இருந்தேன் ஆனால், தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் மன உளைச்சல் ஆகி எழுதுவதை ரொம்பக் குறைத்து விட்டேன். அரசியல் பற்றி எழுதி, படித்தால் எனக்கே நகைச்சுவையாக இருக்கிறது.

அரசியல் சாக்கடை மாதிரி இருக்கிறது, நல்லதாக எழுத விஷயத்தை தேட வேண்டியதாக இருக்கிறது. நண்பர் ஜோதிஜி அரசியல் சமூகம் பற்றி எழுதுங்கள் என்று அனைவரையும் கூறி வருகிறார்.

2014 ல் அவ்வப்போது இல்லையென்றாலும் எப்பவாவது எழுத வேண்டும் என்று இருக்கிறேன். அதுவும் அப்போதைய மன நிலையை பொறுத்தது.

அரசியல், சமூகம் பற்றி எழுதவில்லை என்றால், வெறும் சினிமா செய்திகளாகவே எழுத வேண்டி வந்துவிடுமோ என்று பயந்தேன் ஆனால், எழுத பல விஷயங்கள் இருக்கிறது என்று தற்போது புரிகிறது.

திரும்பிப் பார்த்தால் ரொம்ப மோசமாக இல்லாமல், குறிப்பிடத்தக்க அளவில் ஜனரஞ்சகமாக எழுதி உள்ளேன். இவை எல்லாவற்றையும் விட எட்டாவது வருடமாக இன்னும் நிலைத்து இருக்கிறேன் என்பதே எனக்குப் பெரிய விசயமாக உள்ளது.

இதே போல சீராக எழுதினால், இன்னும் தொடர முடியும் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் எழுதிய நல்ல பதிவிற்கு வரவேற்பு கிடைக்காமல் போகும் போது மனது சலிப்படையும் ஆனால், விரைவிலேயே உற்சாகம் ஆகி விடும்.

நான் முன்பு இருந்தே பொது வாசகர்களை மனதில் வைத்தே எழுதி வருகிறேன் அதாவது, வலைப்பதிவர்கள் அல்லாத பொதுவானவர்கள். ஜனரஞ்சங்கமான ஒரு தளமாக, எவர் படித்தாலும், எழுதும் கட்டுரை அவர்களுக்கு புரிய வேண்டும் என்ற ஒன்றை மட்டுமே நான் மனதில் நிறுத்தியுள்ளேன்.

சில நேரங்களில் அடல்ட் பட விமர்சனங்களும் செய்திகளும் எழுதியுள்ளேன். என்னுடைய லிமிட் எது என்று தெரியும் என்பதால், அது வரை எல்லாமே கலந்து தான் எழுதுவேன். ரொம்பக் கட்டுப்பெட்டியாக என்னால் எழுத முடியாது, எந்த வட்டத்திற்குள்ளும் சிக்க எனக்கு விருப்பமுமில்லை.

2014 ல் புத்தகங்கள் நிறையப் படிக்கலாம் என்று இருக்கிறேன் 🙂 . இதை நான் முடிவு செய்யக் காரணம் Chetan Bhagat புத்தகம் 2 STATES தான். இதில் இவரின் வர்ணனை படித்து அசந்து விட்டேன். இவர் எழுதியதைப் படித்தால் நாமே அங்கே இருப்பது போல இருக்கிறது.

எவ்வளவு அழகாக சூழ்நிலைகளை வர்ணிக்கிறார்! அழகாக வர்ணிக்கிறார் என்று மட்டும் சொல்வது தவறு அதில் சுவாரசியம் என்ற ஒன்றையும் சேர்த்தே ஆக வேண்டும். எழுத்து சம்பந்தமாக இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

இவரல்லாத மற்றவர்களின் புத்தகங்களை படிக்கும் போது இன்னும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் போல.

எனக்கு இருக்கும் ஒரே கவலை, இதை எல்லாம் படித்து எனக்கு என்று இருக்கும் எழுத்து நடை சொதப்பி விடக் கூடாது என்பது தான்.

2013 வருடம் எனக்கு அருமை என்றும் கூற முடியாது மோசம் என்றும் கூற முடியாது. நாம் நினைத்தபடியே அனைத்தும் நடந்தால், அப்புறம் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருந்து விடப் போகிறது.

2014 நிறைய கடுமையான சவால்கள் இருப்பதாக நினைக்கிறேன். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சவால்களும் தான் நம் வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன. எனவே சுவாரசியமான 2014 ஐ தான் எதிர்பார்க்கிறேன் 🙂 . Image Credit – brucelee.com

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2014 ம் வருடம் உங்கள் அனைவருக்கும் சிறப்பான வருடமாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

தொடரும் அனைவருக்கும் என் நன்றி!

{ 15 comments… add one }
 • Srinivasan December 30, 2013, 7:41 AM

  அன்புள்ள கிரி,

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் புண்ணியத்தில் மீண்டும் மகா நதி படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்…

  http://www.youtube.com/watch?v=JVlxbH6Qoas

 • வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…

 • SRIKANTH December 30, 2013, 9:18 AM

  நண்பா கிரி
  ம் ம் ம் ம் …..நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை….உங்கள் மனதில் தோன்றுவதை….மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதை நீங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள்……மற்றவர்களின் கருத்துகளுக்கு தயவு செய்து இடம் கொடுக்காதீர்…..
  மேலும் புத்தகங்கள் நிறைய படிப்பது என்பது உங்கள் பார்வையை விசலாபடுதுமே தவிர குழப்பி விடாது….

  உங்கள் பிள்ளைகளுக்கும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள் ….

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் …..

 • Siva December 30, 2013, 10:00 AM

  கிரி
  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  .

 • Gowrishankar.P December 30, 2013, 4:13 PM

  “எனக்கு இந்த ரியல் எஸ்டேட் சரிவால் பாதிப்பு என்றாலும், இதுவும் நல்லதுக்கே என்று நினைக்கிறேன். அனைத்து விலையும் தாறுமாறாக எகிறிக்கொண்டு இருக்கிறது. ஒரு வரைமுறையே இல்லாமல் விலை வைக்கிறார்கள். ”

  – மிகவும் தவறான நினைப்பு கிரி. ரியல் எஸ்டேட் பாதிப்புக்கும் விலைவுயர்வுக்கும் சம்பந்தமே இல்லை. விலை உயர்வுக்கு பல கரணங்கள் இருக்கு. ஆனால் ரியல் எஸ்டேட் உயர்வு, விலை உயர்வுக்கு காரணம் இல்ல. ரியல் எஸ்டேட் பாத்திததால் பண முடக்கம்தான் ஆகி உள்ளது, உயர்ந்த விலை அப்படியேதான் உள்ளது. infact ரியல் எஸ்டேட் முடங்கி உள்ளது, ஆனால் இரும்பு, மற்றும் கட்டட சாமான்கள் விலை (கூலி உட்பட) ஏற்றத்தில் உள்ளது.
  மிகவும் தவறான கொள்கை மாற்றத்தை, மிகவும் தவறான நேரத்தில் “ஜெ” கொண்டுவந்து, ரியல் எஸ்டேட், அதை சார்ந்த மைக்ரோ finance, அதை சார்ந்த small industries, அதை சார்ந்த மிடில் கிளாஸ் income குரூப் என அத்தனை community -யையும் முடக்கியுள்ளார். இதில் கரண்ட் கட் வேறு. நம் ஏரியாவை (கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை) இது சரியாக அடித்துவிட்டது. இது இன்னும் 6 மாதமோ, ஒரு வருடமோ நீடித்தால், மீழ முடியாத economic recession-னுக்கு கொண்டு சென்றுவிடும். அது நம் மாதிரி மிடில் income குரூப்புக்கு மட்டும்மிள்ளது எல்லாருக்கும் பிரச்னை.

  “எனக்கு எப்போது நெருக்கடியாகத் தேவைப்படுகிறதோ அப்போது எங்கிருந்தாவது எனக்கு உதவி வரும்.”

  – எனக்கும் அப்படித்தான். பணத்திற்காக நான் என்றுமே கவலை பட்டது இல்லை. நெருக்கடி நேரத்தில் பணம் எங்கிருந்தாவது வந்துவிடும் (நாம்ப அவ்ளோ நல்லவங்களா 🙂 ). முருகன் துணைதான் இதுக்கு காரணம் கிரி.

  புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரி.

 • Logan December 30, 2013, 9:18 PM

  புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரி. யுவன் பற்றிய செய்தி பகிர்விற்கு நன்றி. நல்லதே நடக்கும்.

 • Thiruppathy December 31, 2013, 9:58 AM

  புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரி.

 • SURESH December 31, 2013, 1:10 PM

  Happy New Year Giri

 • Murugesh December 31, 2013, 8:29 PM

  //இந்த வருடம் 90% ல் இருந்து 150 % ஆக உயர்த்த முடிவு செய்து இருக்கிறேன்.//
  புரிஞ்ச மாதிரி இருக்கு !! புரியாத மாதிரி இருக்கு ….

 • Arun December 31, 2013, 8:56 PM

  புத்தாண்டு வாழ்த்துக்கள் தல
  உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்ல படியா 2014 அமைய கடவுளை வேண்டிக்குறேன்

  நல்ல பகிர்வு 2013 ல உங்களுக்கு முக்கியமா நடந்த விஷயங்கள் ல கோர்வை யா எழுதின மாதிரி இருக்கு.

  எனக்கு ஒரு சந்தேகம் குசும்பா கேக்கல ஆர்வத்துல கேக்குறேன் அது எப்படி 150% வரும் – “இந்த வருடம் 90% ல் இருந்து 150 % ஆக உயர்த்த முடிவு செய்து இருக்கிறேன்.”

  என்ன பொறுத்த வரைக்கும் stress பண்ணி ஒரு விஷயம் சொல்ல நம்ம மக்கள் சொல்லுற விஷயத்துக்கு 100% கு மேல நு வார்த்தைய use பண்ணுறாங்க ஆனா நியாயமா 100% எப்பவும் போதுமானது.

  – அருண்

 • K Siva January 1, 2014, 6:59 PM

  உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரி !!

  Advanced இனிய பாரியூர் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  Missing பாரியூர் festivel !!

 • ananth January 2, 2014, 4:24 AM

  புத்தாண்டு வாழ்த்துக்கள் . வருங்காலம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன் . இந்த வருடம் மற்றும் வரும் வருடங்களில் Agro forrestry செய்யும் எண்ணம் உள்ளது. அதாவது விலை நிலங்களில் மரங்கள் நடுவது மற்றும் இடைப்பட்ட இடத்தில பொது விவசாயம் செய்வது. விவசாயம் தொடர்பான கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். உங்கள் ஊர் கோபி என்பதால் உங்களுக்கு அதை பற்றி நன்கு தெரியும் என்று நம்புகிறேன். நமது இளைஞர்கள் விவசாயத்தை தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் .

 • கிரி January 2, 2014, 7:17 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஸ்ரீநிவாசன் 🙂

  @ஸ்ரீகாந்த் நன்றி. பின்பற்ற முயற்சிக்கிறேன்.

  @கௌரிஷங்கர் ரைட்டு 🙂

  @முருகேஷ் & அருண் அட! இன்னொரு பாட்டில் தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்னு இருப்பதை..அப்படி சொன்னேன் 🙂 மொபைல் பயன்பாட்டிற்கு சரியா 100% தான் கூறி இருக்கிறேன் பாருங்க! ஓகே வா 🙂

  @K சிவா உங்களுக்கு இனிய பொங்கல் மற்றும் பாரியூர் திருவிழா வாழ்த்துகள். இந்நேரம் நம்ம ஊரு களை கட்டியிருக்கும் 🙂

  @ஆனந்த் ரொம்ப நல்ல முயற்சி. நானும் இது பற்றி என் அப்பாவிடம் பேசினேன். இதற்கு இடம் வாங்கலாம் என்றால்.. விலை ஏகப்பட்டது சொல்கிறார்கள். எனவே பின்னர் பார்ப்போம் என்று நினைத்துள்ளேன். நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள். என்னுடைய வாழ்த்துகள்.

  விவசாயம் பற்றிய கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். ஊரில் இருந்தால் எழுத நிறைய சந்தர்ப்பம் கிடைக்கும். இங்கே இருப்பதால் தகவல்கள் நேரடியாக காண முடிவதில்லை.

 • rajesh v January 7, 2014, 1:45 PM

  மனிதனின் கவலைகளுக்கு முடிவே இல்லை போல. மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்று கவலை, திருமணமாகி குழந்தை இல்லை என்று கவலை, குழந்தை வந்த பிறகு பேரன் நடக்கவில்லை பேசவில்லை என்று கவலை, இது சரியானதும் நன்றாகப் படிக்கவில்லை என்று கவலை. இது சரியானதும் வேலை கிடைக்கவில்லை என்று கவலை. நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் ஆகவில்லை என்று கவலை. Never எண்டு
  ————————–
  nice writing

 • Logan June 13, 2014, 10:47 PM

  முதலில் நன்றி.
  இந்த பதிவிற்கு தற்போதைய பின்னோட்டம் தாங்கள் அறிந்ததே.
  சாய்பாபாவின் சத்சரிதத்தை எனக்கு அறிய செய்ததிற்கும் மற்ற உதவிக்கும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல்வேறு லீலைகளை அழகாக தொகுத்து உள்ளார்கள். நம்பிக்கையுடன் படித்ததால் நல்லதே நடந்தது. சில பல இடர்பாடுகள் வந்தே போதும் சாய்பாபாவே துணை நின்று புத்தகத்தை படித்து முடிக்கவைத்தார்.
  மகளின் தளிர் நடையை பார்த்தபோது, மற்ற விஷயங்கள் அனைத்துமே சிறியதாக தெரிந்தது.

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz