மசினகுடி பயணம் [2013]

ருடாவருடம் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதில் இந்த முறை, மசினகுடி தேர்வானது. இதற்கு இந்த இடம் எங்கள் வீட்டில் இருந்து அருகில் இருப்பதும், இயற்கை சூழ்ந்த இடமாக இருந்ததாலும் முடிவாகியது.

அனைவருமே வேலை, குடும்பஸ்தன் என்று இருப்பதால், அனைவரையும் ஒன்று சேர்ப்பது என்பது ஒவ்வொரு வருடமும் சிரமமாக இருக்கிறது. யாரையும் குற்றம் கூற முடியாது, அவரவர் குடும்பம், பணி, சூழ்நிலை தான் காரணம்.

இந்த முறை இரண்டு நண்பர்கள் வர முடியவில்லை. எனக்கு ரொம்ப வருத்தம். மற்றவர்கள் அனைவரும் உள்ளூரில் இருப்பதால் சந்திக்க வாய்ப்புகள் அதிகம். என்னைப் போன்று வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு, இது போன்ற சந்திப்புகள் மட்டுமே!

மூன்று நாள் திட்டமிட்டோம் ஆனால், வேன் வாடகையே ரொம்ப அதிகம் வந்ததால், பின் இரண்டு நாட்களாக மாற்றப்பட்டது. நான் ஊருக்கு வந்தால், தற்போது பயப்படுவது ஹோட்டலுக்கு செல்வதற்குத் தான்.

ஒரு தோசை Rs 60, 70 என்று பயமுறுத்துகிறார்கள். மூன்று பேர் சாப்பிட சென்றாலே 400 ருபாய் சர்வ சாதாரணமாக வருகிறது.

ஊரிலேயே இருப்பவர்கள் இந்த விலைக்கு பழகி இருப்பார்கள் ஆனால், என்னைப் போன்று எப்போதாவது விடுமுறையில் வருகிறவர்களுக்கு இந்த விலை ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.

இதனால் நாங்கள் அதிகாலையில் புறப்பட திட்டமிட்டதால், எங்கள் வீட்டிலேயே அனைவருக்கும் காலை உணவு தயார் செய்து கொண்டோம். நாங்கள் 8 பேர், பயன்படுத்திய வண்டி இனோவா.

காலையில் ஓட்டுனர் வர தாமதம் செய்ததால், காலை 5 மணிக்கு புறப்பட வேண்டியது 6 மணி ஆகி விட்டது. கோபியில் இருந்து 6 மணிக்கு கிளம்பினோம். ஊட்டி வழிப் பாதை சரியில்லை என்பதால் பண்ணாரி, கர்நாடகா வழியாக மசினகுடி போவதாக முடிவானது.

6.40 க்கு பண்ணாரி வந்து விட்டோம். காலையில் கோபியில் கடுமையான குளிராக இருந்ததால், நான் மற்றும் இரு நண்பர்கள் தவிர்த்து மற்றவர்கள் குளிக்கவில்லை. அங்கே அணையில் சென்று குளிப்பதாகக் கூறி விட்டார்கள்.

இதனால் நாங்கள் மூவர் மட்டும் கோவிலுக்கு செல்ல மற்றவர்கள் காஃபி குடிக்க சென்றார்கள். பண்ணாரி கோவில் இருக்கும் இடம் ஒரு அருமையான இயற்கை சூழ்ந்த இடம். எத்தனை முறை சென்றாலும் அலுக்காது.

அங்கே இருந்து 7.15 க்கு கிளம்பினோம். பண்ணாரி தாண்டியவுடனே மலைப்பகுதி ஆரம்பித்து விடும். 27 கொண்டை ஊசி வளைவுகள். நான் தற்போது தான் முதல் முறையாக இனோவாவில் செல்கிறேன்.

என்ன வண்டிங்க! பட்டாசு.. சும்மா சர் சர்ன்னு அசால்ட்டா வழுக்கிட்டுப் போகுது. எனக்கு எந்த ஒரு களைப்புமே தெரியவில்லை. இதில் பயணித்த பிறகு இனோவா ரசிகன் ஆகி விட்டேன் 🙂 .

கொண்டை ஊசி வளைவுகள் முடிந்தவுடன் அளவான ஏற்ற இறக்கத்துடன் சாலை பயணிக்கிறது. இங்கேயே பனி ஆரம்பித்து, சாலையே மங்கலாகத் தான் தெரிகிறது. வெயிலும் பனியும் மாறி மாறி வந்து செல்வது, பயணத்திற்கு உற்சாகமாக இருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள ஒரு பகுதியில் காலை உணவை முடித்துக்கொண்டோம். அங்கே சாப்பிட்டு கொண்டு இருந்த போது மூன்று நாய்கள் [ஒரு தாய் நாய், இரு குட்டி நாய்கள்] எனக்கு நண்பர்கள் ஆகி விட்டது. அவற்றிக்கும் சப்பாத்தி கொடுத்து விட்டு கிளம்பினோம் 🙂 .

நாய்களுக்கு பொதுவாக நான் சப்பாத்தியோ தோசையோ வீச மாட்டேன். கடிக்காது என்று தோன்றினால், கையை நீட்டிக் கொடுத்து விடுவேன். இது வரை எங்கும் கடி வாங்கினதில்லை 🙂 .

அங்கு சாப்பிட வருபவர்கள் அதிகம் நாயை அடிப்பார்கள் போல… கையை நீட்டினாலே பயப்படுகிறது… பாவம்.

கர்நாடகா, தமிழ்நாடு சோதனைச் சாவடி தாண்டிச் செல்ல வேண்டும் [நம் சோதனைச் சாவடியில், பசங்களாக இருந்தால் கெடுபிடி அதிகம்]. பந்திப்பூர் சோதனைச் சாவடிப் பகுதியில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதி இல்லை [Reserved Forest].

விலங்குகள் வாகனங்களால் அடிபட மற்றும் சத்தங்களால் பயப்பட வாய்ப்புள்ளதால் இந்தக் கட்டுப்பாடு. ஆனால், நீங்கள் இரவு 8.55 க்கு சென்றால் அடுத்த சோதனைச் சாவடியில் 9 க்கு மேல் ஆனாலும் கடக்க அனுமதி உண்டு.

நுழைவதற்கு மட்டுமே கட்டுப்பாடு. நாங்கள் காலையில் சென்றதால் ஒன்றும் பிரச்சனையில்லை. வழியில் மான்கள், யானைகள், காட்டெருமைகள், மயில்கள் மற்றும் நம் அனைவரின் விருப்பமான குரங்குகளையும் காண முடியும்.

இந்தப் [Reserved Forest] பயணத்தில் தான் அதிகம் விலங்குகளைக் காண முடியும்.

மசினகுடி நாங்கள் 11 மணிக்கு சென்று அடைந்து விட்டோம். மதியம் அங்கே இருந்த சிறிய அணையில் சென்று அனைவரும் குளித்தார்கள். தண்ணீர் ஐஸ் போல உள்ளது.

துவக்கத்தில் உள்ள இடங்களில் ஆழம் அதிகம் இல்லை ஆனால், எப்போது வேண்டும் என்றாலும் வெள்ளம் திடீர் என்று வரும் என்று கூறியதால், அனைவரும் கொஞ்சம் கவனமாகவே இருந்தார்கள்.

ஆண்கள் குளிப்பது எளிது பெண்களுக்கு சிரமம். குறிப்பாக மற்ற ஆண்கள் குழுவினர் இருந்தால், தவிர்த்து விடுவது நல்லது.

நாங்கள் மசினகுடியில் இருந்து தள்ளி “மயிலகம்” என்ற அரசு டார்மிட்டரியில் [Peacock Dormitory] தங்கி இருந்தோம். இங்கு ஒரு அறையில் 10 படுக்கை மற்றும் படுக்கை ஒன்றிக்கு, ஒரு நாளைக்கு 170 ருபாய் என்று நினைக்கிறேன்.

அரசு டார்மிட்டரி என்பதால் சுமாராக இருந்தது ஆனால், மோசமில்லை. இந்த வாடகை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று தான். குளிர் ரொம்ப அதிகமாக இருந்தது.

அங்கேயே கம்பளி கொடுக்கிறார்கள் இருந்தாலும், நாமும் சால்வை / போர்வை எடுத்துச் செல்வது நல்லது. கட்டில், படுக்கை, தண்ணீர், சுவர், தரை என்று அனைத்துமே ஜில்லென்று உள்ளது.

பொது குளியலறை மற்றும் கழிவறை ரொம்ப மோசமில்லாமல் இருந்தது, குறை காண ஒன்றுமில்லை. நாங்கள் தங்கி இருந்தது 10 பேர் தங்கும் அறை. இது போல 20 பேர், 15 பேர் தங்கும் அறைகளும் உள்ளது.

நாங்கள் சென்ற போது மற்ற அறைகளில் எவரும் இல்லை என்பதால், கொஞ்சம் கூடுதல் சுதந்திரமாக இருந்தோம். வெளியே பேச அருமையான திறந்தவெளி இடம் உள்ளது. எனவே நாங்கள் குழுவாக அமர்ந்து மாலை, இரவு, காலை என்று பேசிக்கொண்டு இருந்தோம்.

மதுபானம் அருந்துபவர்கள் மசினகுடியில் வாங்க முடியும். எங்கள் நண்பர்கள் வாங்கி இருந்தார்கள். இதில் நடந்த கலாட்டாக்கள் வழக்கம்போல தணிக்கை செய்யப்பட்டு விட்டது 🙂 .

மசினகுடி தமிழகப் பகுதியில் இருந்தாலும், கடை வைத்து இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மலையாளிகளாகத் தான் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் இவர்களே!

நமக்கு கேரளாவில் இருக்கிறோமா தமிழ்நாட்டில் இருக்கிறோமா! என்று சந்தேகமே வந்து விடும். நாங்கள் தங்கி இருந்த டார்மிட்டரியில் அங்குள்ளவர்களே உணவு தயார் செய்து தந்தார்கள், இதற்காக மசினகுடி செல்லவேண்டிய அவசியமில்லை.

9 பேர் (ஓட்டுனருடன்) மூன்று வேளைக்கு [இரவு காலை மதியம்] மொத்தம் 3500 ருபாய் ஆனது. மூன்று வேளையுமே அசைவ உணவே பரிமாறப்பட்டது, இது நம் விருப்பம் தான்.

நாங்கள் சென்ற சமயத்தில் தலைமை சமையல்காரர் இல்லை. அவருடைய உதவியாளர்களான சின்ன பசங்க தான் இருந்தார்கள். “நல்லா சமைப்பீர்களா?” என்று கேட்டோம்.. தலையாட்டினார்கள்.

வேறு வழியில்லாததால் அரை குறை மனதோடு சரி என்று கூறினோம். பின்னர் பார்த்தால், செமையாக சமைத்து இருந்தார்கள். சுவை என்றால் சுவை.. அப்படி ஒரு சுவை.

அடுத்த நாள் காலை மற்றும் மதியம் தலைமை சமையல்காரர் சமைத்தார் ஆனால், அந்த பசங்க செய்த அளவிற்கு சுவை இல்லை 🙂 ஆனால், நன்றாக இருந்தது. இவர் ஒரு மலையாளி.

இரவில் சத்தம் எழுப்பக்கூடாது என்று கூறினார்கள் அதோடு இரவில் தனியாக வெளியே செல்ல வேண்டாம், விலங்குகள் தாக்க வாய்ப்புள்ளது என்று பீதியை கிளப்பினார்கள். இதனால் இரவில் சிறுநீர் கழிக்கக் கூட எழுந்து செல்ல பயந்து கொண்டு இருந்தார்கள்.

ஏனென்றால் கழிவறை, அறையை விட்டுத் தனியாக வெளியே உள்ளது. எங்கள் அறை வரை காட்டுப்பன்றி, யானை சர்வசாதரணமாக வரும் என்று யானைக் கால் தடத்தை காட்டியதும், பலருக்கு உதறல் ஆகி விட்டது.

நாங்கள் தங்கி இருந்த பகுதியை சுற்றியும் அடர்ந்த காடுகள், வேறு எதுவும் இல்லை.

எனவே குளிரோடு பூச்சி சத்தம் மட்டுமே இரவில் கேட்டுக்கொண்டு இருந்தது. மயான அமைதியாக இருக்கிறது. ஓய்வு எடுக்க வேண்டும் என்று செல்பவர்களுக்கு அருமையான இடம்.

அடுத்த நாள் காலையில் தாமதமாக சென்றதால், யானை சவாரி செல்ல முடியவில்லை. இதனால் வாகன சவாரி (Vehicle Safari) செல்லலாம் என்று முடிவானது. இதற்கு கட்டணம் ஒருவருக்கு 150 ருபாய், பயண நேரம் ஒரு மணி நேரம்.

இவர்களே ஒரு டப்பா வண்டியில் அழைத்துச் செல்கிறார்கள். தண்டமாக பணம் வீணானது தான் மிச்சம். மானையும், மயிலையும் மட்டும் தான் பார்த்தோம்.

இது கூட ஓகே ஆனால், ஒரு மொக்கை வண்டிக்கு இந்தப் பணம் ரொம்ப அதிகம், அதோடு அங்கு இருந்த மரங்கள் அடர்த்தியான காடுகள் அல்ல.

அதிகமாக தேக்கு மரங்கள் தான் இருந்தன, இவைகளும் தானாக வளர்ந்தவை போல இல்லை. எனக்கு அடர்ந்த காட்டின் உள்ளே செல்வதைப் போல எந்த உணர்வும் இல்லை. இதற்கு நாங்கள் வந்த சாலையே ரொம்ப நன்றாக இருந்தது. தயவு செய்து இதில் யாரும் சென்று விடாதீர்கள்.

பணம் வீண்.

பின்பு அங்கேயே சுற்றி விட்டு, கிளம்பி அறைக்கு வரும் வழியில் காட்டு யானைகளை மிக மிக நெருக்கத்தில் பார்த்தோம். அமைதியாக மேய்ந்து கொண்டு இருந்தன.

அறைக்கு அருகில் உள்ள பகுதியில் நடக்கலாம் என்று நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த ரேஞ்சர் இங்கே நடக்கக் கூடாது என்று கூறியதால், அறைக்கே திரும்பி விட்டோம்.

குளிர் இருப்பதால் எங்கும் நடக்க அருமையாக உள்ளது. வழக்கம்போல நமது பொறுப்புள்ள குடிமக்கள் குடித்து விட்டு பொறுப்பற்ற முறையில் போட்டுச் சென்ற பீர் பாட்டில்களையும் காண முடிந்து.

இவை யானைகளின் காலில் மிதிபட்டால்… அந்த யானையின் கதி….! கடுப்பாவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இது போல செய்பவர்களை யானைக் காலில் மிதிக்க வைத்தால் என்ன! என்று தோன்றியது.

தற்போது என்னுடைய நண்பர்கள், நான் Blog எழுதுவதை அறிந்து வைத்து இருக்கிறார்கள் [பொதுவாக நான் எழுதுவதைப் பற்றி யாரிடமும் கூறுவதில்லை]. இதனால் இது பற்றியும் பேச்சு வந்தது.

இதில் சுதாகர் என்ற நண்பன் கமல் ரசிகன். இவன் நான் எழுதிய விஸ்வரூபம் விமர்சனத்திற்கு வாக்குவாதம் செய்தான் 🙂 🙂 .

அதோடு யார் யாரையோ பற்றி எழுதுகிறாய் இந்த முறை என்னோட பெயரை குறிப்பிட வேண்டும், படத்தையும் போட வேண்டும் என்று மிரட்டல் விடுத்தான் [ஆமா.. இதில் வந்தால் டைம்ஸ் ஆஃப் இந்தியால வந்த மாதிரி பாருங்க…].

இதோடு இன்னொரு நண்பன் தனவேலும் தன் படத்தை என்னுடைய தளத்தில் போட்டே ஆக வேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கிறான். நான் பொதுவா ப்ரைவசி கருதி யாருடைய நிழல் படத்தையும் என்னுடைய தளத்தில் பகிர மாட்டேன். இவனுக மிரட்டியதால் இங்கே 🙂 .

இவங்க பின்னணியில் தெரிவது மான் தான்.. நீங்க புலின்னு நினைத்துக்காதீங்க! அங்க எலியக் கூட நாங்க பார்க்கல 🙂 .

மச்சி! நீ கேட்ட மாதிரியே போட்டுட்டேன் போதுமா! 🙂 இதில் கிளை மாதிரி இருப்பவன் சுதாகர். மரம் மாதிரி இருப்பவன் தனவேல் 😀 😀 .

இதுல சுதாகர் ரொம்ப அடக்கம். அடக்கம் என்றால் அடக்கம் அப்படி ஒரு அடக்கம். நம்மை, போலிஸ் வந்து செவுள்ள நாலு விட்டு ஏன்டா வெண்ணைகளா! ஒழுங்கா போக மாட்டீங்களா! என்று அன்பாக கேட்டு செல்லும் அளவிற்கு அமைதியாக நடந்து கொள்வான்.. ஹி ஹி 🙂 .

இதுக்கு தான் மச்சி இதை எல்லாம் எழுதறதில்லை.. பாரு.. இப்ப பல மேட்டர் வெளியே வருது. BTW சுதாகருக்கு இரண்டு வாரம் முன்பு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் மச்சி.

பின்வரும் பதிவில் ஒரு காட்சியில் சுதாகர் இருக்கிறான். முடிந்தால் கண்டு பிடித்துக்கொள்ளுங்கள் 🙂 .

Read: போலீஸ் அடின்னா இது தானா !

மதியம் சாப்பிட்டு விட்டு 2 மணிக்கு கிளம்பினோம். வழியில் கர்நாடகா பகுதியில் சாலையில் தர்பூசணி விற்றுக்கொண்டு இருந்தார்கள். சிறிய பழம் ஆனால், சுவையோ அருமையாக இருந்தது. நான் இரண்டு பழம் எங்கள் வீட்டிற்கு வாங்கிக் கொண்டேன்.

இனோவா பட்டையை கிளப்பிக்கொண்டு செல்வதால் 6 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம்… விர்ர்ர்ர்ர்ரும் 🙂 .

எங்கள் கோபி பகுதியை சுற்றி அனைத்து இடங்களும் சாலைகள் அருமையாக இருக்கும். எனவே எந்த ஒரு சிரமும் இல்லாமல் வந்து விடலாம். இதன் பிறகு நண்பர்கள் அனைவரும் தயாராகி இரவு ரயிலில் சென்னை கிளம்பி விட்டார்கள்.

மசினகுடி, இயற்கையை அனுபவிப்பவர்களுக்கும், அமைதியாக இருக்க விரும்புவர்களுக்கும் ஏற்றது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், விலங்குகளையும் அதிகளவில் காண முடியும். தங்க, தனியார் இடங்களும் உள்ளது.

எனவே உங்கள் வசதி, பட்ஜெட்டிற்கு ஏற்ற அளவில் அறைகள் உள்ளன. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும், எனவே அறையை முன்பதிவு செய்வது அவசியம். நாங்கள் திங்கள், செவ்வாய் சென்றதால் அதிகம் கூட்டமில்லை.

எங்கள் பயணத்தைப் போல கூடுமானவரை உங்களுக்கு அலுப்பு தெரியாமல், எழுதி இருப்பதாக நினைக்கிறேன். அடுத்த பயணத்தில் சந்திப்போம்.

தொடர்புடைய பதிவுஅலப்பி படகு வீடு – ஒரு பார்வை November 2011

{ 15 comments… add one }
 • srikanth November 28, 2013, 12:00 PM

  கிரி நண்பா
  வழக்கம் போல் சுவையாகவும் செய்திகளுடனும் இருந்தது இந்த பதிவு…..
  மசினகுடி போயே ஆகவேண்டிய இடமாக இந்த பதிவு ஒரு என்ணத்தை ஏற்படுத்திவிட்டது …..

 • Gowrishankar.P November 28, 2013, 12:14 PM

  சூப்பர் கிரி. பதிவு அருமை. பசங்களோட மசினகுடி ட்ரிப் போட்டர்லாம் போல 🙂

 • Vijay November 28, 2013, 12:21 PM

  அருமை கில்லாடி. நல்ல என்ஜாய் பண்ணிருக்கிங்க. இதை படிக்கும் போது எனக்கு மேட்டூர் சுற்றுலா போன யாபகம் வருது ஆனா நீங்க அந்த சுற்றுலாவுக்கு வரவில்லை 🙂

 • rupan November 28, 2013, 12:34 PM

  வணக்கம்

  சென்றுவந்த அனுபவ பகிர்வு அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 • akila November 28, 2013, 3:01 PM

  மசின குடி பதிவு நானே சுற்றுலா சென்று வந்த அனுபவத்தை கொடுத்தது கிரி..
  நண்பர்களோட செமயா enjoy பண்ணி இருக்கீங்க போல…
  புகைப்படங்கள் எல்லாம் சூப்பர்..குறிப்பா ரெண்டு பெரிய யானை,நடுவுல குட்டி யானை..
  போலீஸ் கிட்ட அடி எல்லாம் கூட வாங்கி இருக்கீங்களா?? நம்பவே முடியல.. 🙂

 • Thamizhchelvan November 28, 2013, 5:32 PM

  Superb boss…

  // நான் தற்போது தான் முதல் முறையாக இனோவாவில் செல்கிறேன். என்ன வண்டிங்க! பட்டாசு.. சும்மா சர் சர்ன்னு அசால்ட்டா வழுக்கிட்டுப் போகுது. எனக்கு எந்த ஒரு களைப்புமே தெரியவில்லை. இதில் பயணித்த பிறகு இனோவா ரசிகன் ஆகி விட்டேன்//

  ஹி ஹி … இதேதான் நாஞ்சில் சம்பத்தும் சொல்றாரு………

 • Mohamed Yasin November 28, 2013, 8:25 PM

  கிரி.. பயணம் என்பதே இனிமையான ஒன்று; அதுவும் பிடித்த நண்பர்கள் உடன் என்றால் கூடுதல் மகிழ்ச்சி தர கூடிய ஒன்று..
  (எங்கள் பயணத்தைப் போல கூடுமானவரை உங்களுக்கு அலுப்பு தெரியாமல், எழுதி இருப்பதாக நினைக்கிறேன்) கிரி .. உங்களுடன் பயணித்த மாதிரியே உள்ளது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 • Sankar Venkat November 29, 2013, 8:07 AM

  கூர்க் சென்றால் யானை,
  வால்பாறை சென்றால் சிங்கவால் குரங்கு,
  மூணார் சென்றால் யானை, காட்டெருமை, சிங்கவால் குரங்கு,
  தேக்கடி சென்றால் காட்டுப்பன்றி, நீர் நாய், யானை,

  என ஒருசில மிருகம் மட்டும் பார்த்த எனக்கு முதுமலை கண்டது
  யானை,
  காட்டெருமை,
  சிங்கவால் குரங்கு,
  காட்டுப்பன்றி,
  மான் மற்றும்
  மயில்

  ஒரு முறை, நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு அருகே மரத்தில் சிறுத்தை பாதி தின்று மீதி விட்ட நரியை கண்டோம்.
  நரி படம் பார்க்க http://sankarphoto.blogspot.in/2013/01/mudumalai-masinagudi.html

  ஊட்டி வழியாக செல்வதை விட, கர்நாடகா வழி சென்றால் நிறைய மிருகங்கள் பார்க்கமுடியும், நீங்கள் சென்றதை போல.

  முதுமலை மற்றும் மசினகுடி

 • Arun December 1, 2013, 11:07 AM

  நல்ல பதிவு தல

  சுதாகர் – 2 வாரத்துக்கு முன்னாடி குழந்தை பிறந்தும் உங்க கூட டூர் வரார் நா அவர் நட்ப எந்த அளவு மதிப்பார் நு தெரியுது. அவருக்கு என் சார்பில் வாழ்த்துக்கள்

  நல்ல நண்பர்கள் அமைவது பெரிய gift அது உங்களுக்கு கிடச்சுருக்கு நு நம்புறேன்
  அதுக்கு நாம நடந்துகுற முறையும் ஒரு காரணம்

  – அருண்

 • கிரி December 2, 2013, 1:47 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @அகிலா இந்த யானைப் படம் நான் எடுக்கலை. இதையும் முதல் படத்தையும் எடுத்தது தனவேல், மீதி நான்.

  @தமிழ்செல்வன் 🙂

  @சங்கர் நாங்க காட்டு அணிலை பார்த்தோம் படமும் எடுத்தோம். இதை நான் இங்கு பகிரவில்லை.

  @அருண் சுதாகருக்கு குழந்தை பிறந்தது நாங்க சுற்றுலா சென்று வந்து ஒரு வாரம் கழித்து. இந்தப் பதிவு நான் தாமதமாக எழுதினேன்.

 • Veyilaan December 11, 2013, 5:28 PM

  மயிலகம், கார்குடியில் தானே இருக்கு? தங்குமிடம் ரொம்பவே சுமாராக இருக்கும்.

 • Arun December 17, 2013, 9:17 PM

  “@அருண் சுதாகருக்கு குழந்தை பிறந்தது நாங்க சுற்றுலா சென்று வந்து ஒரு வாரம் கழித்து. ”

  – அய்யயோ அப்படினா இன்னும் ஒரு படி மேல போயிட்டார் என் கணக்கு படி

  இன்னும் ஒரு வாரத்துல செம டென்ஷன் நா அவருக்கு இருக்கும் போது உங்க நட்புகாக வந்தாரே எவ்வளவு பெரிய விஷயம். நீங்க லக்கி தல

  – அருண்

 • Elango December 23, 2013, 11:55 PM

  சார்
  என் சொந்த ஊர் ஓதிமலை தான் இருந்தாலும் நீங்கள் அறிந்து இருக்கும் அளவு எனக்கு தெரியவெல்லை.நன்றாக உள்ளது உங்கள் பதிவு .

 • Elango December 23, 2013, 11:58 PM

  மிகவும் அருகில் இருப்பதால் அதன் அருமை தெரியவெஇல்ல் என நேனைகேறேன்

 • rupan May 26, 2014, 6:47 PM

  வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
  சென்று பார்வையிட இதோ முகவரி

  http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_1703.html?showComment=1401109674868#c9081758398151123041

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz