மைக்ரோமேக்ஸ் – பசுமை – கடத்தல் – ரா ரா & ஓ ஆ

Micromaxந்தியாவில் ஆப்பிள், சாம்சங் மொபைல்கள் மார்க்கெட் பிடிக்க கடுமையாக முயற்சித்துக்கொண்டு இருக்க, உள்நாட்டு தயாரிப்பான மைக்ரோ மேக்ஸ், கார்பன் நிறுவன மொபைல்கள் விற்பனை அதிகம் நடந்து கொண்டுள்ளதாம்.

கொஞ்ச மாதங்கள் முன்பு எனக்கு நெருங்கிய ஒருவருக்கு சாம்சங் Grand வாங்கிக்கொடுத்தேன் ஆனால், அனைவரும் மைக்ரோ மேக்ஸ் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள்.

பேசாமல் அதே வாங்கி இருக்கலாமோ என்று தோன்றியது. விலையும் குறைவு, சாம்சங்கில் [Grand] உள்ள வசதிகள் அனைத்தும் மைக்ரோ மேக்ஸ் ல் இருப்பதாகக் கூறினார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Kid-napperகோயம்பேடு பகுதியில் ஒரு வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த ஒரு சிறுவனை சாக்கு பையில் போட்டு ஒருவர் கடத்திய போது, பையன் கத்தியதால் அருகில் உள்ளவர்களிடம் பிடிபட்டு செம்ம மாத்து வாங்கி இருக்கிறார்.

விசாரித்த போது இது போல கடத்தி மிரட்டி பிச்சை எடுக்க வைப்பாராம். பணியாதவர்களை சூடு போட்டு பணிய வைப்பாராம்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க! ஒருவேளை இவன் கடத்தப்பட்டு இருந்தால் அவனது பெற்றோரின் நிலை? 6 படத்தில் ஷாம் கூறுவது தான் நினைவிற்கு வருது. Image and News Credit maalaimalar.com

இது போல இருப்பவர்கள் பிடிபட்டால் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால், யாருமே இது பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

பெற்றோர்கள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறேன். என்னதான் கவனமாக இருந்தாலும் அது அனைத்து நேரங்களிலும் முடியுமா! என்பதே நடைமுறை பிரச்சனை.

மத்திய அரசாங்கம் கிரிமினல்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அவசர சட்டம் நிறைவேற்ற கடுமையாக பாடுபடுகிறது ஆனால், பெண்களுக்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். நினைத்துப் பார்த்தாலே….! சரி விடுங்க பேசி என்ன ஆகப்போகுது.

Pasumai Puratchiகோவை அரசூரில் இயங்கி வரும் “உலக பசுமைப் புரட்சி’ அமைப்பிலுள்ள இளைஞர்கள், மற்ற கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு முன் மாதிரியாக, தங்களது கிராமத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்

கோவையை அடுத்துள்ள அரசூர், மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இந்தக் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 66 தொழிற்சாலைகள், மத்திய அரசால் அமைக்கப்பட்ட “பவுண்டரி கிளஸ்டர்’ ஆகியவை அமைந்துள்ளன.

மிகவும் வறட்சிக்குரிய இப்பகுதியில் நீர் ஆதாரம், மழைப்பொழிவு எல்லாமே குறைவு என்பதோடு, சரளை மண் நிறைந்த பகுதி என்பதால், மரங்களும், பசுமையும் மிகமிகக்குறைவு.

இப்படிப்பட்ட கிராமத்தில், “உலக பசுமைப்புரட்சி’ என்ற அமைப்பை துவக்கியுள்ள இந்த கிராமத்தின் இளைஞர்கள், ஊரையே பசுமையாக்கும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர்.

தங்களது கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் 400 மரக்கன்றுகளை நட்டு, அதைப் பராமரித்து, சிறப்பாக வளர்த்துள்ள இவர்கள், கிராம ஊராட்சி சார்பில் அரசூரில் 11 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலையை வளர்த்தெடுப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

நகரங்களில் மரம் வளர்க்க இடமில்லாததால், கிராமப்புறங்களில் காலியிடங்களைத் தேர்வு செய்து, அதில் பெருமளவில் மரங்களை வளர்த்து, சோலைகளை உருவாக்கும் “பசுமை பஞ்சாயத்து’ திட்டத்தின் முதல் களமே, இந்த சோலையாகும்.

அரசாங்கத்தை எல்லாம் நம்பி பயனில்லை. இனி பொது மக்களே இது போல ஆர்வமாக செயல்பட்டால் மட்டுமே நம் ஊர் வறட்சியின் பிடியில் இருந்து தப்பிக்கும். சுற்று சூழலும் நன்றாக இருந்து வெப்பத்தை குறைக்கும். Image and News credit dinamalar.com

Kovai Policeகோவையில், பலமுறை கேட்டும், பெற்றோர் நாய் குட்டி வாங்கித் தரமாட்டேன்னு கூறியதால் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு இரு சிறுவர்கள் ஓடி விட்டார்கள்.

பெற்றோர் இதைப் படித்து அலறியடித்துட்டு காவல் நிலையம் செல்ல..

பின் காவலர்களால் கண்டு பிடிக்கப்பட்ட இவர்களுக்கு 2000 மதிப்புள்ள இரு நாய்க் குட்டிகளை பரிசாக கொடுத்து இனி இது போல செய்யக்கூடாதுன்னு சிறுவர்களுக்கு அறிவுரை கூறி காவல் அதிகாரிகள் அனுப்பி வைத்து இருக்கிறார்கள் 🙂 .

காவல்துறை பற்றி மோசமான செய்திகளே கேட்டு அலுத்து போய் இருக்கும் இந்த சமயத்தில் இது போல சம்பவங்கள் சந்தோசத்தை ஏற்படுத்துகிறது. இந்த காவலர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

என் பையன் வினய்யும், நாய் வேண்டும் என்று கேட்டுட்டு இருக்கான்.. ஏன் தற்போது வாங்க முடியாது என்று அவனுக்கு விளக்கி இருப்பதால் அரைகுறையாக சமாதானம் ஆகி இருக்கிறான் 🙂 . Image and News credit dinamalar.com

ராஜா ராணி” படம் பார்த்தேன். பக்காவான கமர்சியல் படம். பொழுது போக்கிற்கு உத்திரவாதம். நயன்தாரா ஜெய்க்கு அக்கா போலவும், ஆர்யா நஸ்ரியாவிற்கு அண்ணன் போலவும் இருக்கிறார்கள். நயன்தாரா ஆர்யா ஜோடி அருமை.

ஜெய் பண்ணுற காமெடி செம்ம செம்ம. இதில் என்னை கடுப்பேத்திய விஷயம், சரக்கு அடிப்பதை ஊக்குவித்து இருப்பது தான். ஏன் தான் தற்போது படம் எடுப்பவர்கள் அனைவரும் சரக்கையே முன்னிறுத்தி எடுக்கிறார்களோ!

செத்தா சரக்கு, காதல் தோல்வியா… சரக்கு + பாட்டு, சந்தோசமா.. சரக்கு!! அரசாங்கமும் திரைப்படங்களும் பொது மக்களை குடிகாரர்களாக மாற்றியே தீருவோம் என்று உறுதி எடுத்து செயல்படுவது போலவே இருக்கிறது.

நாயும் ஆட்டுக்குட்டியும்” படம் விமர்சகர்களிடையே பலத்த பாராட்டைப் பெற்று இருக்கிறது. பொதுமக்களுக்கு எப்படி பிடித்து இருக்கிறது என்பது வசூல் விவரங்கள் வந்தால் தான் தெரியும். எனக்கு படம் ரொம்பப் பிடித்தது.

ஏற்கனவே படத்தைப் பற்றி பலர் புகழ்ந்து எழுதி இருப்பதை படித்து இருப்பீர்கள் என்பதால், இதில் உள்ள சில குறைகளை மட்டும் கூறுகிறேன்.

படத்தில் வரும் அறுவை சிகிச்சையை இவ்வளவு வெளிப்படையாக காட்டி இருக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் சங்கடத்தில் நெளிந்தார்கள்.

வில்லன் அருகே இரண்டு பேர் சிலை மாதிரி உட்கார்ந்து இருப்பது மிஸ்கின் ஸ்டைல் என்றாலும் செயற்கையாக இருக்கிறது, உடன் அந்த இறுதி கத்தி சண்டைக் காட்சியும். படத்தின் சில காட்சிகளை இன்னும் சுருக்கி இருக்கலாம்.

உதாரணம் கல்லறைக் காட்சி. பாடல்களே இல்லை எனும் போது அதற்கு தகுந்த மாதிரி க்ரிஸ்ப் ஆக்கி இருந்தால் த்ரில்லர் படங்கள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.

பின்னணி இசை இளையராஜா பற்றி அனைவரும் புகழ்ந்து இருந்தார்கள் ஆனால், எனக்கு ஒரு சில காட்சிகள் இசை தவிர்த்து எதுவுமே மனதில் நிற்கவில்லை.

ஒரு சில படங்களின் இசை முதல் முறை கேட்கும் போது ஈர்த்ததில்லை ஆனால், அதே சில நாட்களில் பிடித்த இசையாக மாறியிருக்கிறது. மிஸ்கின் பின்னணி இசையை இலவசமாக வெளியிட்டு இருக்கிறார் எனவே அதை திரும்பக் கேட்க வேண்டும்.

பின்னணி இசையை நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பினால் இங்கே செல்லுங்கள். இது போல வித்யாசமான படங்களை, “நல்ல படம்… போய் பாருங்க!” என்று சொல்லவே பயமாக இருக்கிறது. இப்படி சொன்னாலே யாரும் போக மாட்டேன் என்கிறார்கள்.

இந்தப்படத்திற்கு கிடைத்து இருக்கும் வரவேற்பினால் கூடுதல் திரையரங்கங்கள் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளனவாம் அதோடு வசூலும் அதிகரித்து வருகிறது என்று Behindwoods ல் போட்டு இருக்கிறார்கள்.

குறைவான அளவில் காட்சிகள் இருந்தாலும் மூன்று நாளில் இரண்டு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

சமீபமாக நிறைய திரை விமர்சனங்கள் / திரை சம்பந்தமாக எழுதிய போல ஒரு உணர்வு அதனால் தான் இதற்கு விமர்சனங்கள் எழுதவில்லை. இது போல குட்டியாக எழுதி விட்டேன். இனி வரும் வாரமும் நிறைய படங்கள் வருகிறது. ஒரே பிஸ் பிஸ் தான் 🙂

Treeநான் வீடு கட்டும் போதே செடியும் வைத்து விட்டேன்.

சில செடிகள் வறண்டு விட்டன, சில இடைஞ்சலாக உள்ளது என்று எடுக்கப்பட்டு விட்டது ஆனால், கேட் அருகே வைத்த செடி மட்டும் நன்றாக வளர்ந்து அனைத்து கட்டிடம் கட்டும் இடைஞ்சலையும், மணல் சூட்டையும் தாண்டி [இதனை சுற்றி மணல் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது] அருமையாக வளர்ந்து விட்டது.

வந்தவர்கள் அனைவரும் இந்த மரம் பற்றி கேட்டார்கள். இனி வரும் மழைக்காலத்தில் இன்னும் சிறப்பாக வளரும் என்று நினைக்கிறேன்.

தீபாவளிக்கு சென்றால் வீட்டின் மற்ற பக்கங்களில் செடி வைக்கப்போகிறேன், கொய்யா, வாழை உட்பட [நான் போகும் முன்பே வைத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்].

சாலை ஓரத்திலும் செடி வைக்கப் போகிறேன். கோபியில், தங்கள் தெருவில் வீட்டின் முன்பு பெரும்பாலானவர்கள் பூ செடி அல்லது ஏதாவது ஒரு செடி வளர்த்துவார்கள். எனவே நானும் என்னுடைய கடமையை ஆற்றப்போகிறேன் 🙂 .

இந்தப் படம் நான் கேட்டதால் தற்போது எடுத்து அனுப்பி வைத்து இருந்தார்கள். இதில் குண்டு பூ வெள்ளையாக மலர்ந்து அழகாக இருப்பதாக அம்மா கூறினார்கள். இது என்ன மரம் என்று கேட்காதீர்கள், எனக்குத் தெரியாது.

நர்சரியில் இருந்து ஒரு குத்து மதிப்பாக வாங்கி வந்து வைத்தேன் 🙂 . ஒரே மரமாக வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், இரண்டாக பிரிந்து வருகிறது. எப்படியோ வ(ளர்)ந்தால் சரி!

{ 13 comments… add one }
 • Arun October 2, 2013, 11:24 AM

  “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படம் பிடிச்சு இருக்கு தல

  ராஜா ராணி அவ்வளவா பிடிக்கல

  நாய் குட்டி மேட்டர் சூப்பர் இப்படி கூட easy யா நாய்குட்டி வாங்கி இருக்கலாம் போல சின்ன வயசுல

  செடி – வாழை மட்டும் நான் இங்க 2 வருஷமா வளக்குறேன்.. லெமன், tomato செடி வைக்கணும் நு ஆசை

  – அருண்

 • Vijay October 2, 2013, 12:32 PM

  கில்லாடி,
  நானும் micromax தான் வாங்கி குடுத்துருக்கேன் என் மனைவிக்கு. போன் சூப்பராக உள்ளது. பத்தாயிரம் கம்மி samsung போன் கூட ஒப்பிடும்போது.

  நீங்கள் இன்னும் நிறைய மரம் வளர்ப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

 • Mohamed Yasin October 2, 2013, 3:03 PM

  கிரி…(“நல்ல படம்… போய் பாருங்க!” என்று சொல்லவே பயமாக இருக்கிறது. இப்படி சொன்னாலே யாரும் போக மாட்டேன் என்கிறார்கள்.) உண்மைதான். கோவையில் வேலை பார்த்த போது சில (ஒரு படம் விடுவது இல்ல-அது ஒரு வசந்த காலம்.) அலுவலக நண்பர்களிடம் “தவமாய் தவமிருந்து” படம் பக்காவா இருக்கு போய் பாருங்க என்று சொன்னேன். படத்தை பார்த்த 5 பேர்ல 4 பேர்க்கு படம் பிடிக்கவில்லை.. என்ன காரணம் எனக்கு தெரியவில்லை. அப்போ தான் நெனச்சேன்.. மசாலா படம் பார்பவர்களிடம் போய் இது போல ஒரு குடும்ப படத்தை பார்க்க சொன்னது என் தப்பு என்று நினைத்து,எந்த படத்தையும் யாரையும் பாருங்க என்று சொல்வது கிடையாது..மனைவி உட்பட.. (ஆனால் என் நண்பன் சக்தியை தவிர்த்து) ஒவொருவர்கும் ஒரு ரசனை. மரம் வளர்ப்பு உண்மையில் ஒரு நல்ல விஷியம். வாழ்த்துகள் கிரி.. பகிர்வுக்கு நன்றி..

 • Barney October 2, 2013, 10:37 PM

  கிரி,

  Micromax மொபைல்கள் நன்றாக தான் உள்ளது ஆனால் அவர்களது after sales service மிக மோசமாக உள்ளதுனு கேள்விப்பட்டேன். அப்படி பார்த்தால் நீங்கள் Samsung வாங்கி தந்தது உத்தமம்.

  குடி குடியை கெடுக்கும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் குடி நாட்டைக் கெடுக்கும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏன்னா TASMACயின் 2011-2012 fiscal revenue 18000 கோடி. அரசாங்கத்தின் ஐந்து வருட திட்டத்தில் 55% நிதி TASMAC வருமானத்தை நம்பி தான் உள்ளது என்று எங்கயோ படித்த ஞாபகம் – உண்மையோ இல்லையோ தெரியவில்லை. ஆக நாட்டு வளர்ச்சிகாவது குடிமகன்கள் குடிக்க வேண்டிய நிலை.

  கிரி, ஏன் இப்போதெல்லாம் horror படங்கள் பற்றி எழுதுவதில்லை? horror படங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டீர்களா?

 • மென்பொருள் பிரபு October 3, 2013, 9:04 AM

  அவன் என்ன விள‌ம்பரம் பண்ணாலும் சரி. மேக்ரோமினி வாங்கவேகூடாதுன்னு முடிவு செய்திருக்கேன்.

 • Gowrishankar.P October 3, 2013, 11:52 AM

  micromax அப்படி ஒன்னும் நல்ல மொபைல் இல்ல. வெல கம்மின quality-யும் அப்படித்தான் இருக்கும். நான் micromax ninja 3 ஒரு வருசமா வெச்சிருந்தேன். one of the worst-னு சொல்லுவேன். call சவுண்ட் செரியா கேக்காது, கடைசி அக ஆக wi-fi work ஆகுல, சிக்னல் சரியா எடுக்காது. இப்படி பல பிரச்சன இருக்கு. ஒரு சிம் போட்டு இருந்த வரைக்கும் நல்லாத்தான் இருந்தது. எப்போ நான் ரெண்டாவது சிம் போட்டேன்னோ, அப்போ இருந்து பல problem. micromax-ல பெரிய problem-மே ரெண்டு சிம் போட்டா, கால் கட் ஆகுரதுதான். பெரிய பிரச்சனை. பேசிட்டு இருக்கும்போது கால் கட் ஆகிரும். அவன் samsung-க்கு போட்டிய features கொடுத்தாலும், hardware அந்தளவுக்கு இருக்காது. RAM கம்மிய இருக்கும், இல்ல இன்டெர்னல் மெமரி கம்மியா இருக்கும், இல்லன processor architecture low level-ல இருக்கும். better go for sony or samsung.

 • சிங்கக்குட்டி October 3, 2013, 1:18 PM

  வீடு கட்டினேன், மரம் வச்சேன்னு சொல்லி சும்மா படத்த காட்டி ஏமாத்த கூடாது கிரி.

  பார்ட்டி எங்கே, எப்போது எப்படின்னும் சொல்லணும் 🙂

  தலைவர் சொன்ன மாதிரி, மாடு, மனை, மனைவி எல்லாம் தானாக அமையனும், அது ஒருத்தனுக்கு சரியா அமைஞ்சுட்டா இந்த வாழ்கையே சொர்கம்தான்.

  என் வாழ்த்துக்கள்.

 • r.v.saravanan October 3, 2013, 4:01 PM

  சாம்சங்கில் [Grand] உள்ள வசதிகள் அனைத்தும் மைக்ரோ மேக்ஸ் ல் இருப்பதாகக் கூறினார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  காசு பணம் துட்டு மணி மணி இதை பற்றி தான் நினைத்து கொண்டிருக்கிறேன்
  கிரி ஹா ஹா

  • Gowrishankar.P October 4, 2013, 9:25 AM

   “சாம்சங்கில் [Grand] உள்ள வசதிகள் அனைத்தும் மைக்ரோ மேக்ஸ் ல் இருப்பதாகக் கூறினார்கள்”
   – சரவணன் சாம்சங் Grand-இல் உள்ள அனைத்து வசதிகளும் micromax-இல் இருக்கலாம். ஆனால் நான் மேற்கூரிய Hardware, சன்சங்கில் உள்ளது போல் micromax-இல் இருக்காது. மேலும், serice problem micromax-இல் உள்ளது.

 • Ilavarasan October 5, 2013, 1:07 AM

  கிரி அண்ணா ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பின்னணி இசையில் கடவுள் கலக்கியிருக்கிறார் என்பது என் எண்ணம்

 • Manoj kumar Rajagopal October 7, 2013, 10:44 PM

  Hi giri,

  I saw comments from other readers. I also heard such complaints like after sales service is not good in the case of low range phones. As you know my budget is around 20k, I was searching good phone in that range. I felt Micromax Canvas 4 A210 is far better than galaxy grand after all the researches (as much i can). I am using canvas 4 for past one month, I felt no problem with that.. everything going good with that. My friend is havinge galaxy grand. we compared both with display, resolution etc., micromax canvas 4 beat galaxy grand in 90 % features. We felt that grand camera in night mode is much clearer compared to canvas 4.

  This is my experience..

  Manoj

 • கிரி October 21, 2013, 3:05 PM

  அனைவரின் வருகைக்கும் நன்றி. மைக்ரோமேக்ஸ் தகவலுக்கு நன்றி

  @அருண் பார்ரா! இதெல்லாம் வீட்டுல வளர்க்கறீங்களா.. சூப்பர் 🙂 இன்னும் நிறைய செடி வளர்க்க வாழ்த்துக்கள். நீங்க US ல தானே இருக்கறீங்க?

  @யாசின் உங்க நண்பர் சக்தி பற்றி நீங்க அடிக்கடி கூறுவது. அவர் மீதான ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது :-). வாய்ப்பு கிடைத்தால் மூவரும் சிந்திப்போம்.

  @Barney சமீபமாக எதுவும் படம் பார்க்கவில்லை.. அல்லது எழுதக் கூடிய அளவில் எதுவும் என்னை கவரவில்லை. உங்களுக்காக பின்னர் ஒரு படம் எழுதுகிறேன் 🙂 [இதை சாக்கா வைத்து :-)]

  @சிங்கக்குட்டி 🙂

  @இளவரசன் நான் திரும்ப ஒரு முறை படம் பார்ப்பேன். இந்த முறை இன்னும் கவனித்து கேட்டுப் பார்க்கிறேன்.

 • Arun October 21, 2013, 8:56 PM

  நீங்க US ல தானே இருக்கறீங்க?

  – ஆமாம் இப்போதைக்கு இங்க இருக்கேன் தல
  ஆனா வீட்டுல இந்தியா, இல்லேனா இந்தியா கு பக்கதுல உள்ள நாடுகள் ல வர சொல்லுறாங்க. அடிக்கடி பாக்கணும் நா முடியல நு வருத்தம் எங்க அப்பா, அம்மா கு

  – அருண்

Leave a Comment