சிங்கப்பூர் செய்திகள்: Mobile Voip – சாப்பாடு – Insinc


Crabசிங்கப்பூர் மக்கள் போல சாப்பாட்டிற்கு வேறு யாரும் இவ்வளவு செலவு செய்வார்களா! என்று தெரியவில்லை.

எந்த ஹோட்டல் சென்றாலும் அங்கு ஒரு வரிசை இருக்கும். பெரும்பாலனவர்கள் வீட்டில் சமைப்பதே இல்லை, எப்போதும் ஹோட்டல் தான்.

எப்படித்தான் இவர்களுக்கு கட்டுபடியாகிறது என்று தெரியவில்லை!

இரவு உணவிற்கு செலவழிப்பதில் முதல் இடத்தை சிங்கப்பூரும், இரண்டாம் இடத்தை ஜப்பானும், மூன்றாம் இடத்தை சீனாவும் பெற்று இருக்கின்றன. Image Credit – www.feveravenue.com

இப்ப நம்ம சென்னையில கூட எந்த ஹோட்டல் சென்றாலும் செம கூட்டமாக உள்ளது. ஸ்டார் ஹோட்டலில் கூட நடுத்தர மக்களை காண முடிகிறது. அனைவரும் பணத்திற்கு சிரமம் என்கிறார்கள், இதெல்லாம் எப்படி கட்டுபடியாகிறது என்பது எனக்கு புரியாத புதிர்.

விலைவாசி எல்லாம் கண்டபடி ஏறிக்கொண்டு இருக்கும் போது இனி குடும்பத்துடன் ஹோட்டலுக்கு அவ்வப்போது செல்வது எல்லாம் சிரமமே! காய்கறி விலை ஏறி விட்டது [மழை, வறட்சி, ஸ்ட்ரைக், டீசல்] என்று கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.

ஆனால், காய்கறி விலை திரும்பக் குறையும் போது ஹோட்டல்காரர்கள் கட்டணத்தை குறைத்ததாக சரித்திரமே கிடையாது.

கஸ்ட் மாதத்தில் இருந்து சிங்கப்பூர் – சென்னை தடத்தில் ஜெட்ஏர்வேஸ் கூடுதலாக ஒரு விமானத்தை இயக்குகிறது. தகவல் நன்றி நண்பர் சூர்யா

Jetairways

நான் சிங்கப்பூர் வந்த போது இருந்து Calling Card வாங்குவது என்பது ஒரு தலைவலியாகவே இருந்து இருக்கிறது. இந்தப் பிரச்சனை எனக்கு மட்டுமல்ல, ஊருக்கு அழைக்க Calling Card வாங்கும் வெளிநாட்டில் உள்ள அனைவருக்குமே இதே பிரச்சனை தான்.

அவர்கள் சொல்வது போல நேரமும் இருக்காது, பேலன்ஸ் ம் விரைவில் குறையும். பெரும்பாலும் திருட்டு பயலுகளாகவே இருப்பார்கள். ஏகப்பட்ட அட்டை வாங்கியும் சோதனை முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கடைசியாக ரொம்ப நாட்களாக நான் “Access Card” என்ற Calling Card ஐ தான் பயன்படுத்தி வந்தேன். இவர்கள் ஏமாற்றாமல் 8 வெள்ளிக்கு 300 நிமிடங்கள் கொடுத்தார்கள் ஆனால், இதில் ஒவ்வொரு முறையும் தொலைபேசி எண்ணை அடிக்க வேண்டியது இருந்தது, ரொம்ப சிரமமாக இருந்தது.

இந்த நிலையில் தான் என்னுடைய நண்பன் Mobile VOIP என்ற Apps அறிமுகப்படுத்தினான்.

இதில் நம்முடைய 3G / LTE இணைய சேவையை பயன்படுத்தி Apps மூலம் பேச முடியும். இதில் கட்டணமாக Euro 10 / 25 / 50 / 100 வில் செலுத்த வேண்டும். நமது தேவைக்கு தகுந்த அளவில் நாம் வாங்கிக்கொள்ளலாம், Expiry கிடையாது.

எனவே, இத்தனை நாளுக்குள் பயன்படுத்தி ஆக வேண்டும் என்று Skype போல தொல்லை இல்லை. இது சிங்கப்பூர் என்றில்லை எந்த நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.

கட்டணமும் குறைவாக உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பேச இலவசம். இங்கு மட்டுமல்ல இது போல பல நாடுகளுக்கு இலவசம் [இந்தியாவிற்கு அல்ல :-)]. இதில் நாம் எண்களை தட்டச்சு செய்ய வேண்டியதில்லை.

வழக்கமாக நம்முடைய தொலைபேசியை [Address Book] பயன்படுத்துவதைப் போலவே பயன்படுத்தலாம். தரமான 3G / LTE / Wifi இணைய இணைப்பு இருந்தால் போதுமானது.

வந்து ஐந்து வருடம் கழித்து இது பற்றி தெரிய வந்தது கொஞ்சம் கடுப்பாக இருந்தது.

முன்பெல்லாம் எண்ணை ஒவ்வொரு முறையும் அடிக்க சோம்பேறித்தனப்பட்டே பலருக்கு அழைக்க மாட்டேன் ஆனால், இதில் அந்தத் தொல்லை இல்லை என்பதால் ரொம்ப எளிதாக இருக்கிறது.

இந்த Apps ஐ நம் விருப்பம் போல பயன்படுத்த பல [Calling] நிறுவனங்கள் உள்ளது. நான் பயன்படுத்துவது https://www.voipdiscount.com/ என்ற தளத்தை.

இங்கே சென்று Apps நிறுவி, உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு நிறுவிக்கொண்டு பணம் செலுத்தி விட்டீர்கள் என்றால் போதுமானது [Credit Card / Paypal / Bank Transfer].

நீங்கள் யாரிடம் எவ்வளவு நேரம் பேசினீர்கள், எந்த எண்ணை அழைத்தீர்கள் என்ற விவரங்களையும் [History] இந்தத் தளத்தில் காண முடியும்.

Turbulence @ SIA UK Flightநான் ஏற்கனவே ஒரு முறை, விமானத்தில் பயணம் செய்யும் போது ஏற்படும் Turbulence பற்றி கூறி இருக்கிறேன்.

இங்கிலாந்து சென்ற சிங்கப்பூர் விமானத்தில், இது போல ஒரு சம்பவம் நடைபெற்று, குலுங்கியதில் விழுந்து கிடக்கும் பொருட்கள் தான் இவை.

கற்பனை செய்துக்குங்க… ஆட்டம் எப்படி இருந்து இருக்கும் என்று! 🙂 எனக்கு வயிற்றை கலக்கி விட்டது. Image Credit: http://www.mypaper.sg/

சிங்கப்பூர் விமான நிலையம் ஒரு அற்புதமான விமான நிலையம். இவர்களின் சேவையும், இவர்கள் தரும் வசதிகளும் அசத்தலானவை.

இப்படி இருந்தே உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது, அப்படி என்றால் முதல் இடத்தில் இருக்கும் விமான நிலையம் எப்படி இருக்கும்! இதற்கு மேல் ஒருத்தர் சேவையை தர முடியாது என்கிற அளவில் இவர்களின் சேவை இருக்கும்.

பயணிகளுக்கு அவ்வளவு வசதிகள் செய்து கொடுத்து இருப்பார்கள். விமான நிலையத்தில் நாம் வேறு ஏதாவது யோசனையில் இருந்தால் கூட May I help you sir! என்று வந்து விடுவார்கள் 🙂 .

புதிதாக வருகிறவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து அறிவிப்புகளும் இருக்கும்.

தற்போது Terminal 3 வரை உள்ளது. சமீபத்தில் இங்கு உள்ள பட்ஜெட் டெர்மினலை இடித்து விட்டு, டெர்மினல் 4 கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் பணி 2017 ல் முடிவடையும் என்று கூறி இருக்கிறார்கள்.

டெர்மினல் 5 வரப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார்கள். எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுது!

சிங்கப்பூரில் Insinc என்ற ஒரு வசதி உள்ளது. இதில் பதிவு செய்து காலை 8.30 – 9.00 மணிக்குள் [Start Time] நீங்கள் MRT ல் பயணம் செய்தால், உங்களுக்கு பாயிண்ட் கொடுக்கப்பட்டு வார இறுதியில் குலுக்கல் முறையில் பரிசு கிடைக்கும்.

இது தெரியாமல் இவ்வளவு நாள் இருந்து விட்டேனே என்று செம்ம காண்டாகி விட்டது. இந்த வசதி எப்போது இருந்து இருக்கிறது என்று தெரியவில்லை.

இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய Ezlink Card எண்ணை https://insinc.sg/ என்ற தளத்தில் சென்று பதிய வேண்டும், அவ்வளோ தான் மேட்டர்.

இதன் பிறகு நீங்கள் உள்ளே நுழையும் நேரம் காலையில் 8.30 – 9.00 க்குள் இருந்தால், உங்களுக்கு பாய்ன்ட் கூடிக்கொண்டே செல்லும் [Platinum என்று வந்தால் நல்லது].

வார இறுதியில், நீங்கள் உங்கள் கணக்கில் சென்று விளையாடி பாய்ன்ட் பெறலாம் அல்லது இதெல்லாம் எனக்கு கஷ்டமப்பா! என்று நினைத்தால், அப்படியே விட்டு விடலாம். அதுவே, Auto Play செய்து கொடுத்து விடும்.

நான் இப்படியே விட்டு கடந்த மூன்று மாதத்தில் 20 வெள்ளி பெற்று விட்டேன். அடடா! இது தெரியாம இவ்வளவு வருஷம் இருந்து விட்டோமே! என்று கடுப்பாகி விட்டது. வடிவேல் சொல்ற மாதிரி இது தெரியாம பல வாட்டி டிக்கெட் எடுத்துட்டேனேப்பா!

இது எதற்கு என்றால் MRT யில் நெரிசல் நேரங்களில் கூட்டத்தை குறைக்க. நான் சாதாரணமாகவே அலுவலகம் செல்ல MRT யில் செல்லும் நேரம் 8.30 தான். எனவே இது நல்ல வசதியாகி விட்டது. கடந்த வாரம் 2 வெள்ளி கிடைத்தது 🙂 .

நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம் ஆனால், பணம் கிடைக்கும்…. பாருங்கய்யா! யாருயா இது மாதிரி கொடுக்கிறாங்க!

காலை 7.45 – 8.00 க்குள் பொது விடுமறை அல்லாத வார நாட்களில் (குறிப்பிட்ட நெரிசல் தடங்கள் மட்டும்)MRT யில் Ezlink Card ஐ பயன்படுத்தி வெளியே வந்தால், “இலவசப் பயணம்” என்பதை சமீப அறிவிப்புகளில் பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இது எனக்கு வேலைக்காகாது! இந்த இலவச சலுகை ஜூன் 24 2013 முதல் ஜூன் 23 2014 வரை மட்டுமே.

கொசுறு 1

அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து, சவூதி, தாய்லாந்து, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்கள் / செய்திகள் போன்றவற்றை அடிக்கடி பகிர்ந்து கொண்டால், தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு உதவியாக இருக்குமே!

அரசியல், சினிமா இந்த இரண்டு மட்டுமே தான் எங்கேயும் சுற்றிட்டு இருக்குது.

கொசுறு 2

சென்னை பன்னாட்டு புது விமான நிலையத்தை பயன்பாட்டிற்கு விட்டு இருக்கிறார்களாமே! நான் பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறேன் :-). எந்த ஊரில் இருந்தாலும் நம்ம ஊர் சூப்பர் என்று சொல்வது தானே நமக்கு உண்மையான சந்தோசம்.

டெல்லி போன்ற விமான நிலையத்தை தனியார் கிட்ட விட்டு, கட்டி பராமரிக்கிறார்கள் ஆனால், இதை மத்திய அரசாங்கமே [Airport Authority of India] எடுத்து நடத்தி கட்டியது.

உள்நாட்டு முனையத்தில் துவக்கத்திலேயே டைல்ஸ் / கண்ணாடி உடைந்தது, தண்ணீர் ஒழுகியது என்று படித்த போது வெறுப்பாக இருந்தது.

நான் சிங்கப்பூர் கிளம்பிய போது [2007] கட்ட ஆரம்பித்து 2013 ல் முடித்து இருக்கிறார்கள். நல்ல வேளை நான் மொத்தமாக வருவதற்குள் கட்டி முடித்தார்களே! என்னமோ போங்க!

கொசுறு 3

ஒரு சந்தேகம்.

“குக்” கிராமம் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் சிறிய கிராமம் / அதிகம் அறியப்படாத கிராமம் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். உண்மையில் “குக்” என்பதற்கு என்ன அர்த்தம்? சமையல் / சமையல்க்காரர் என்று கடி போட்டுடாதீங்க.

{ 24 comments… add one }
 • indumathy July 17, 2013, 1:55 PM

  எல்லாமே சூப்பர் 🙂

  actionvoip.com also a good voip service site

 • Mohamed Yasin July 17, 2013, 2:12 PM

  விலைவாசி ஏறினாலும் / இல்லை யென்றாலும் இந்த பழக்கத்தை விடுவது கடினம்… என்ன பாஸ் சமைக்கவில்லையா என்று நண்பர்களிடையே கேட்டால் நேரம் இல்லை என்று சொல்வார்கள்.. ஆனால் மணி கணக்கில் இணையத்தில் நேரம் செல்லும்… வீட்டு சாப்பாடு கிடைப்பது ஒரு வித வரபிரசாதம்… சமையல் என்பது ஒரு கலைதான். சமையலில் சுவை எவ்வாறு கூடுகிறது. அளவாக எல்லாவற்றையும் போட்டாலும் சுவை என்பது பக்குவத்தில் தான் இருக்கிறது. மனமும் அன்பும் சேர்ந்து சமைக்கும் போது சுவை கூடி விடுகிறது..

  அன்பாக அருமையான சமையலை சமைத்துத் தரும் மனைவி கிடைத்தவர்கள் உண்மையில் இவ்வுலகில் பாக்கியசாலிகள்தான்…அந்த வகையில் நானும் அதிஷ்டசாலி தான்..

  எங்க துபாய் அனுபவத்த எழுதலாம் தல ஆனால் உங்க பதிவோட பெரியதாய் இருக்கும் பரவயில்லையா??? இனி கொஞ்சம் கொஞ்சம் ட்ரை பண்றேன்..

  முதல் அனுபவம் என்னுடைய நண்பருடையது, அவரது பெயர் கணேஷ். வயது 35 இருக்கும். துபாய்க்கு புதுசா வேலைக்கு வந்த போது அவருக்கு ஹிந்தி தெரியாது. அவர் வேலை பார்த்த சைட்ல அதிகம் பாகிஸ்தானிகள் தான் (ஆள பார்த்தாவே ரொம்ப டேரரா இருப்பாங்க). சைட்ல வெயில்ல வேலை செஞ்சி ரொம்ப கலச்சி போன ஒரு பாகிஸ்தானி டிரைவர் கணேஷ்ட வந்து ” தோஸ்த், ஜாவ் தண்டா பாணி லேக்கியாவ்” சொன்னான். (நண்பா கொஞ்சம் கூல் வாட்டர் எடுத்துனுவானு அர்த்தம்) ஓகே னு சொல்லிட்டு போன கணேஷ் 20 நிமிஷம் ஆகியும் வரவில்லை. பாகிஸ்தானி செம காண்டாகி கணேஷ்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான். கணேஷ் வரும் போது கூட ஒரு டேக்னிஷன் கூப்பிட்டு கொண்டு வந்தார். (கூட வந்த தமிழ் டேக்னிஷன் பெயர் தண்டபாணி.

  என்ன மேட்டர்னு பார்த்திங்கன, பாகிஸ்தானி கேட்டது தண்டா பாணி (கூல் வாட்டர்), ஆனா கணேஷ் இந்த பாகிஸ்தானி டிரைவர் டேக்னிஷன் தண்டபாணிய தான் கூப்பிட சொல்றார்னு நெனச்சி 20 நிமிடம் கழிச்சி தண்டபாணிய கூப்பிட்டு வந்தார். கடைசியில் மேட்டர கேள்விபட்டு பாகிஸ்தானி டென்ஷன் ஆகிட்டான்… இந்த மேடடர் நம்ம காதுக்கு வந்த போது கணேஷ் கொத்து போரோட்ட போட்டுடோம்… இன்னைக்கு கணேஷ் அண்ணன் ஊருக்கு போகி செட்டில் ஆகி விட்டார்.. ஆனால் கூல் வாட்டர் குடிக்கும் போது அவரது நியாபகம் எப்போதும் வரும்…

 • salem deva July 17, 2013, 3:11 PM

  “குறும் கிராமம்” என்பது மருவி குக்கிராமம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

  • Leela Prasath July 23, 2013, 2:19 PM

   ஆம் இது தான் சரி. குறுமையான கிராமம் = குறும் கிராமம் = குறுகிய கிராமம் = குக்கிராமம்.

 • Arun.K July 17, 2013, 3:32 PM

  Voipdiscount, Nymgo நன்றாக உள்ளது, வெளிநாட்டு நண்பர்கள் அன்ரொஇட் போன் இல் SIPGO software install செய்யவும். viber is very Good.Buy a anroid Phone get Aicel 3G Rs.198 In india -Unlimited for a month. Then you can talk unlimited with your family in INDIA for free . I am using viber Call Quality very Good.. India 3G is good for Viber.

 • ராஜ்குமார் July 17, 2013, 3:39 PM

  வாய்ப்டிஸ்கவுண்ட் தான் மற்ற ஆப்ஸ்களைவிட காலிங் சார்ஜ் கம்மி. எனக்கே 2009 லேர்ந்து தான் தெரியும். உங்க அகவுன்ட் உள்ள போய் பாத்தீங்கன்னா யாராருக்கு கால் பண்ணினீங்க எவ்வளவு அப்படின்னு எல்லா பட்டியலும் இருக்கும்.

  ஒரு வருடத்திற்கு முன்பு ப்ளூடூத் வச்சி ட்ரை பண்ணினப்போ வேலை செய்யல நான் அது சம்பந்தமா ஒரு ஈமெயில் செஞ்சேன். இப்போ கடந்த மூணு மாசமா ப்ளுடூத் ஆப்ஷன் வேலை செய்யுது. (வேலை முடிஞ்சி வந்ததும் போனை தூக்கிட்டே அடுப்பங்கரைக்கு போய் சமைக்க வேணாம் பாருங்க)

  தனியா இருந்து சமைச்சி சாம்பார் கோழி ஆடு / சாம்பார் கோழி ஆடு / சாம்பார் கோழி ஆடுசாம்பார் ?? (Confusion) அப்படியே வாழ்க்கை ரிபிடேஷன் ஆகி அந்த வாசனையில் சாப்பிட பிடிக்காமல் ரொம்ப கொடுமை கிரி. இவளவு கஷ்டப்பட்டாலும் ஊர்ல பேசிக்கிறது… அவன் போயிட்டு வந்துட்டான் நிறைய சம்பாதிக்கிரன் நம்ம புள்ளைக்கு ஒரு வழி சொல்லமாட்டேன்கிறான் எல்லாம் பணத்திமிர் என்ற வசவு சொல்லைஎல்லாம் கேட்டு. முடியல….. நாம என்ன விசாவ வச்சிக்கிட்டு வஞ்சனையா பண்றோம் இங்க வராதீங்கடா அப்புறம் இந்தியாவுல உள்ள உங்க நிம்மதி போய்டும் அப்படின்னு சொன்னா எவன் கேட்குறான்.

  பத்தாத்துக்கு இப்போ ரம்ஜான் சவுதியில எல்லா கடையையும்மூடி சாஞாலம் தான் திறப்பாணுக முஸ்லீம் அல்லாத பெச்சுலர்களுக்கு சாபிடுவதர்க்கு ரொம்பவே கஷ்டம். நோன்பு முடிவதற்கு முன்னாள் அடுத்தவருக்கு எதிரில் சாப்பிட்டால் சவுக்கடி ஜெயில் தான் கிடைக்கும்.

  எர்லையன்சில் மைலேஜ் அப்படின்னு ஒன்னு இருக்கு தெரியுமா கிரி நீங்கள் எத்தனை தூரம் பறக்கிரீர்களோ அத்தனை பாயிண்ட்ஸ் கிடைக்கும் (இந்தியாவுக்கு உத்தேசமா ஒரு ற்றிப்புக்கு 3000 பாய்ன்ட்) உதாரணத்துக்கு 40000 பாய்ன்ட் கிடைச்சால் ஒரு ப்ரீ டிக்கெட் கிடைக்கும் இதுதான் பிளைட்டுலேயே டிக்கெட் எடுக்காம வர ஐடியா. அல்லது நீங்கள் விருப்பப்பட்ட பொருளை வாங்கி கொள்ளலாம். ஆனா அந்த குறிப்பிட்ட பிளைட் அல்லது அவர்களுடன் கொட்ஷேர் உள்ளவர்கள் கூடத்தான் பயணிக்கலாம் (அப்படித்தான் மேற்சொன்ன ப்ளூதூத் வாங்கினது). உங்கள் குடும்பத்தினர் பயணித்தாலும் சில சமையம் நண்பர்கள் பயணித்தாலும் அவர்கள் செக்கின் செய்யும் போது மைலேஜ் நம்பரை கொடுக்கவேண்டும். ஒவ்வொரு ஏற்லைன்சிர்க்கும் ஒரு மைலேஜ் அமைப்பு இருக்கும். இது மட்டுமன்றி நீங்கள் கிரடிட் கார்டு உபயோகித்தால் சில சமயம் அந்த பாய்ன்ட் மைலேஜுக்கு செல்லும். ஹோட்டல்களில் தங்குவதற்கு பாய்ன்ட் கார் ரெண்ட் எடுத்தால் பாய்ன்ட் அப்படின்னு நிறையவே இருக்கு- தமிழில் விளக்க கஷ்டமா இருக்கு. வேணுமினா தொடர்பு கொள்ளுங்கள் சொல்றேன்.

  எப்போது ஹாங்காங் கொரியா ரெண்டுபெருக்கும்தான் விமான நிலைய சேவையில் முதன்மை இடத்திற்கு போட்டி வரும். எத்தனையோ முறை சொல்லியிருந்தாலும். ஹாங்காங் ஏர்போர்ட் மாதிரி வசதி எங்குமே காண முடியாது. இங்கே வந்து வழி தெரியாமல் போய்விட்டது என்று சொல்பவர்களுக்கு சொத்தையே எழுதி தருவதாக சவால் கூட விடலாம். அப்படியே அப்போசிட் நம்ம சென்னை தொடைக்க ஒரு பேப்பர் கூட வச்சிருக்க மாட்டானுக.

 • vijay July 17, 2013, 4:03 PM

  கிரி,
  வேறு வெளிநாடு பற்றி செய்தி கேட்டதினால், இதை பகிர்கிறேன்.
  இந்த மேட்டர் U.K பற்றியது. திரைப்பட ரசிகர்களுக்கானது.
  எந்த ஒரு புதுப்படமும் வெளியாவதற்கு முன்னாள், ஒரு முன்னோட்ட காட்சி (preview show) ஒன்று போடுவார்கள். அது ஒரு இலவச காட்சி. அனைவருக்கும் இலவசம். பெரும்பாலும் சனி ஞாயிறு நாட்களில் திரையிடுவார்கள்.
  http://www.showfilmfirst.com/
  இந்த வலைத்தளத்தில், உங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், உங்களுக்கு எல்லா காட்சிகளுக்கும், இ மயிலில் அழைப்பு வரும். இது ஒரு சூப்பர் சர்வீஸ். நான் ப்ரீயா இருக்கும்போது, போய்டுவேன். படம் ரிலீஸ் ஆகிறதுக்கு முன்னாடியே பெரிய திரையில் பார்த்துடலாம்.

 • Gowrishankar.P July 17, 2013, 4:10 PM

  “அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து, சவூதி, தாய்லாந்து, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்கள் / செய்திகள் போன்றவற்றை அடிக்கடி பகிர்ந்து கொண்டால், தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு உதவியாக இருக்குமே”

  – கம்மேன்ட்லயா பகிர்ந்து கொள்வது? அல்லது, உங்களுக்கு எழுதி, அதை நீங்க உங்க “கொசுருல” போடுவீங்களா?

 • ஜோதிஜி July 17, 2013, 4:37 PM

  அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து, சவூதி, தாய்லாந்து, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்கள் / செய்திகள் போன்றவற்றை அடிக்கடி பகிர்ந்து கொண்டால், தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு உதவியாக இருக்குமே!

  அரசியல், சினிமா இந்த இரண்டு மட்டுமே தான் எங்கேயும் சுற்றிட்டு இருக்குது.

  கேள்விக்குரிய பதிலையும் நீங்களே கொடுத்துட்டீங்க. எனக்கும் உங்களைப் போலத்தான் ஆசை. கோவை ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்கள் கூட ஊர் மாறும் நிலைகளைப் பற்றி எழுதுவதில்லை.

 • kaja July 17, 2013, 8:02 PM

  வணக்கம், என் பெயர் காஜா. நானும் சிங்கப்பூர்லதான் வேலை செய்றேன். நேரம் கிடைக்கும்போது உங்க blog-ஐ வாசிக்கிறேன். ரொம்ப நல்லா எழுதுறீங்க.Pls keep ccontinue.

 • Logan July 17, 2013, 8:07 PM

  தவல்களுக்கு நன்றி கிரி

 • Logan July 17, 2013, 8:08 PM

  தகவல்களுக்கு நன்றி கிரி

 • மாயவரத்தான்.... July 17, 2013, 9:01 PM

  Voip குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே நான் இணையத்தில் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

  http://backsla.sh/betamax

  இது எல்லாமே ஒரே கம்பெனியுடையது தான். விலையைப் பார்த்து எது தோதுப்படுமோ அதை உபயோகிக்கலாம்.

  http://mayavarathaan.blogspot.in/2008/11/496.html

 • குறுமை+கிராமம் = குக்கிராமம்

  இப்படி சேர்த்து எழுதுவதற்கு ஏழோ, எட்டோ இலக்கண விதிகள் உள்ளது. பள்ளிப்பருவத்தில் படித்தது, மறந்துவிட்டது. 🙂

  • 1. ஈறு போதல் – வெண்மை + குடை = வெண்குடை

   2. இடை உகரம் இய்யாதல் – பெருமை + அன் = பெரியன்

   3. ஆதி நீடல் – பெருமை + ஊர் = பேரூர்

   4. அடியகரம் ஐ ஆதல் – பசுமை + பொழில்= பைம்பொழில்

   5. தன்னொற்று இரட்டல் – சிறுமை + ஊர் = சிற்றூர்

   6. முன்னின்ற மெய் திரிதல் – வெம்மை + நீர் = வெந்நீர்

   7. இனம் மிகல்

   ஹிஹிஹிஹி….

   நன்றி: கூகுள்

   சாரி, மூணு வரிக்கான விளக்கம் பெரியதாக ஆகிவிட்டது… 😀

 • RAVI July 18, 2013, 12:14 PM

  தவல்களுக்கு நன்றி கிரி

 • Vijay July 18, 2013, 5:16 PM

  கில்லாடி,
  தாய்லாந்த்லேயும் எப்போ பார்த்தாலும் சாப்டுகிட்டே இருப்பாங்க. அப்புறம் எல்லாரும் ஹோட்டல்ல தான் சாப்பாடு.

  Nymgo மென்பொருள் தான் நான் பயன்படுத்துகிறேன். இங்க எல்லாரும் அதுதான் பயன்படுத்துகிறார்கள்.

  -விஜய்

 • Srinivasan July 18, 2013, 8:20 PM

  சமீபத்தில் சிங்கப்பூர் சென்று வந்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன் கூறுகிறார்…

  சிங்கப்பூரில் நான்கு மொழிகள். அதில் தமிழும் ஒன்று. இந்தியர்களில் தமிழர்களும் அதற்கடுத்த நிலையில் மலையாளிகளும், அதையடுத்து பஞ்சாபிகளும் இருக்கிறார்கள். அண்மையில் வந்தவர்கள் இந்திக்காரர்கள். அவர்கள் இந்தியையும் அதிகாரப் பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும் என அவ்வப்போது வற்புறுத்துகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்.அவர்கள் செல்வந்தர்கள்; தொழிலதிபர்கள். அதனால் அரசு ஒரு பலவீனமான தருணத்தில் இணங்கிவிடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

 • Arun July 19, 2013, 1:24 AM

  தல,
  சிங்கப்பூர் தகவல் எல்லாமே சூப்பர்.. நல்லா வந்து இருக்கு பதிவு
  அப்துல் பாஸித் விளக்கம் அருமை

  – அருண்

 • CHITTIBABU July 19, 2013, 7:30 AM

  ‘VOIP CALLS’ எல்லாம் பழைய செய்தி கிரி. வளைகுடா நாடுகளில் 2008’லேயே அனைவரும் பாவிக்க ஆரம்பித்தனர்.
  நானும் சிங்கப்பூரை விட ஹாங்காங் ஏர்போர்ட் மற்றும் சிட்டி பெஸ்ட் என்பேன்.

 • மாயவரத்தான்.... July 19, 2013, 7:32 AM

  சிட்டிபாபு, அப்படிப் பார்த்தால் தாய்லாந்தில் எல்லாம் நாங்கள் 2002 / 2003-லேயே உபயோகிக்க ஆரம்பித்து விட்டோம்!

 • கிரி July 19, 2013, 8:55 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @இந்துமதி காணாததை கண்டவன் மாதிரி Access Card நல்லா இருந்ததால் மற்ற எதுவும் காதுலையே விழலை போல எனக்கு. நீங்க சொன்னதையும் என்கிட்டே சொன்னாங்க.. ஆனா நான் தான் அதை முயற்சி பண்ணல. எப்படியோ சிங்கப்பூர் விட்டு கிளம்புறதுக்கு முன்னாடியாவது தெரிந்ததே! 🙂

  @யாசின்

  உங்க மனைவி நன்றாக சமைப்பார்களா! நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். ஹி ஹி தண்டபாணி செம காமெடி 😀

  @தேவா வாய்ப்பு இருக்கு

  @அருண் வைபர் சிக்னல் தரம் ரொம்ப நன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

  @ராஜ்குமார் 🙂 வாங்க ரொம்ப நாளா ஆளைக் காணோம்

  வெளிநாட்டில் இருந்தால் நம்ம என்னமோ வேலைவாய்ப்பு துறை நடத்துற மாதிரி நினைத்துக்கறாங்க! இதைப் பற்றி பேசுனா நான் ஒரு மணிநேரம் என் நொந்த கதையை பேசுவேன்

  அடுத்தவருக்கு எதிரில் சாப்பிட்டாலே சவுக்கடியா! ஐயையோ

  மைலேஜ் நான் பயன்படுத்தி டிக்கெட் வாங்கி இருக்கிறேன். ரொம்ப பயனுள்ளது. நான் அடிக்கடி ஊருக்கு போவதில்லை என்பதால் அதிகம் மைலேஜ் கிடைக்காது.

  நீங்க சொன்னதுக்காவது ஹாங்காங் சென்று பார்க்க வேண்டும். ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கீங்க. கீழே கூட சிட்டிபாபு கூறி இருக்காரு.

  @விஜய் செம்ம வசதியா இருக்கே! இப்படி எல்லாம் சிங்கப்பூர் ல் இருந்தால் ஆஜர் ஆகிடுவேன் 🙂 என்ன மாதிரி ஆளுங்க இருக்கிறதால் தான் இப்படி கொடுக்கவில்லை போல 🙂

  @கௌரிஷங்கர் கமெண்ட் ல சொல்லலாம்.. Blog வைத்து இருக்கிறவங்க அவங்க தளத்துல சொல்லலாம்.

  @ஜோதிஜி ஆமாங்க! ஏன் யாருமே பகிர்ந்துக்க மாட்டேங்குறாங்க என்று எனக்கு புரியலை. ஈரோடு கோவை செய்திகள் எல்லாம் தெரிந்து கொள்ள ரொம்ப விருப்பம். செய்திகள் ல படிக்கலாம் என்றாலும் இது போல எழுதுவதை படிப்பதில் ஒரு தனி ஆர்வம் உள்ளது.

  @காஜா நன்றி

  @மாயவரத்தான் படித்தேன். பல வேலை செய்து இருக்கீங்க 🙂 நான் அதிகம் பேருக்கு அழைப்பேன் என்பதால் இது சிரமம். நம்ம வீட்டுக்கு மட்டும் என்றால் ஓகே தான்.

  @பாசித் நீங்க கூறியது படி இருக்க வாய்ப்பு இருக்கு. உறுதியான தகவலாக யாராவது கூறினால் நன்றாக இருக்கும். நானும் கூகுள் போட்டு பார்த்தேன் இது தான் வந்தது 🙂

  @விஜய் இந்த இரண்டு தான் நல்லா இருக்கு போல. எல்லோரும் இதைத் தான் சொல்றாங்க.

  @ஸ்ரீநிவாசன் அப்படி எல்லாம் மாற்றி விட முடியாது என்பது என் கருத்து. தமிழ் தேசிய மொழியாக இருக்க காரணம் தமிழர்கள் எண்ணிக்கை மட்டுமல்ல. சிங்கப்பூர் தோன்றும் முன்பு இருந்தே தமிழர்கள் பங்கு இங்கு உண்டு. சிங்கப்பூரின் வளர்ச்சியில் துவக்கத்தில் இருந்து பங்கெடுத்தவர்கள்.

  இந்த வடா தோசா காரனுக எல்லாம் சும்மா இப்ப கொஞ்ச வருசத்தில் வந்தவங்க. இதுக்காக எல்லாம் மொழியை மாற்றி விட முடியாது. அப்படி கொடுத்தால் கடும் எதிர்ப்பு கிளம்பும். தமிழர்கள் சிங்கப்பூர் உருவாகியதில் இருந்து இருப்பவர்கள், இவர்கள் வியாபாரத்துக்காக, வேலைக்காக வந்தவர்கள்.

  இது மட்டுமல்லாமல் சில இடங்களில் தற்போது ஆங்கிலமும் மாண்டரின் மட்டுமே அறிவிப்பு பலகையில் பயன்படுத்தப் படுகிறது. இதுக்கே பல புகார்கள் உண்டு. இன்னும் சிலர் மாண்டரின் க்கு பதிலா ஆங்கிலத்தையே தாய் மொழியாக மாற்றம் செய்து விடலாமா என்று கூறிக்கொண்டு இருகிறார்கள். இதற்கும் கடும் எதிர்ப்பு தற்போது.

  இது போல ஏற்கனவே பல பிரச்சனை ஓடிட்டு இருக்கிறது. இதுக்கு நடுவுல ஹிந்தியா! ஏற்கனவே ஒவ்வொரு அறிவிப்பையும் மக்களுக்கு நான்கு மொழியில் தர வேண்டி இருப்பதால் நடைமுறை சிக்கல் உள்ளது. ஐந்தாவது மொழி வர வாய்ப்பில்லை.. சீனர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  அதை விட முக்கியம் இப்படி கேட்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. US ல நம்ம ஆளுங்க அதிகம் ஆகிட்டாங்க. அதற்காக அங்கே ஹிந்தி வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்குமோ அது போலத் தான் இது. அந்தந்த நாட்டிற்கு என்று பாரம்பரியம் உள்ளது அதை புதிதாக வந்தவர்களுக்காக மாற்றுவது ஏற்புடையதல்ல. இது போல கேட்பதும் முறையல்ல.

  @சிட்டிபாபு எனக்கு புது செய்தி 🙂 ஹாங்காங் பார்த்துட வேண்டியது தான்.

  @மாயவரத்தான் உங்க பேரை இனி கில்லாடி மாயவரத்தான் என்று மாற்றிட வேண்டியது தான் 🙂

 • Gowrishankar.P July 19, 2013, 11:32 AM

  இங்கே பெங்களூர்-ல “The Ugly Indians” (http://theuglyindian.com/) என்ற ஔர் தன்னார்வ குரூப் உள்ளது. அவர்கள் சிட்டி சென்டரில் உள்ள வீதிகளை எல்லாம் கிளீன் செய்து, பெயிண்ட் அடித்து, dustbin வைப்பார்கள். வைப்பது மட்டுமல்லாமல், அதை maintain செய்வார்கள். இவர்கள் பணம் எல்லாம் நம்மிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களுக்காக நாம் போய் ஹெல்ப் செய்வதை மட்டுமே விரும்புவார்கள். எங்கள் ஆபீஸ் MG ரோட்டில் உள்ளது. we are seeing visible changes around here.

 • பனசை நடராஜன் July 19, 2013, 1:16 PM

  நிறையத் தகவல்களை, கலக்கலான எழுத்து நடையில் தந்துள்ளீர்கள். தொடரட்டும்….
  – பனசை நடராஜன்,சிங்கப்பூர் –

Leave a Comment