சிங்கம் II [2013]

Singam 2முதல் பாகமான சிங்கம் பிறகு வந்துள்ள சிங்கம் II அதே போல மாஸ் படமாக வெளிவந்து பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

முதல் பாகத்தில் லோக்கல் ரவுடியான பிரகாஷ்ராஜ் என்றால் இதில் லோக்கல் + இன்டர்நேஷனல்.

முதல் பாகத்தில் ஆள் கடத்தல் என்றால் இதில் போதை மருந்து.

தூத்துக்குடியில் போதை மருந்து கும்பலை கண்டறிய NCC ஆசிரியர் என்ற பெயரில் இருக்கும் சூர்யா எப்படி அவர்களை பிடித்து அடித்து துவம்சம் செய்கிறார் என்பது தான் இந்த இரண்டாம் பாகம்.

கேப்டனுக்குப் பிறகு சூர்யா தான் காவல் துறையை கையில் எடுத்துக்கொண்டார் போல. மனுஷன் காவல் அதிகாரி மாதிரியே இருக்கிறார். படம் முழுக்க விரைப்பாவே இருக்கிறார்.

படம் பார்க்கும் காவல் அதிகாரிகள் நேரே காவல் நிலையம் சென்றால் அங்கே இருப்பவர்களை அடித்து துவைத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன் 🙂 . அந்த அளவிற்கு படம் பார்க்கும் அனைவரையும் முறுக்கேற்றி இருக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யா கொஞ்சம் உடம்பு போட்டது போல இருக்கிறது.

சூர்யா பல்லைக் கடித்துக்கொண்டு பேசுவதைப் பார்த்தால் நான் அவர் வாய்க்குள் அரைபடுவது போலவே ஒரு ஃபீலிங் 🙂 . கடிச்சு துப்பிடுவார் போல.. இந்த அளவிற்கு கோபத்தை, கத்தி முகபாவனைகளில் காட்டணுமா! நல்லவேளை படம் வெற்றி பெற்று விட்டது.

படம் சங்காகி இருந்தால் சூர்யா கத்திப் பேசுவதை வைத்தே அவரை கலாயித்து இருப்பார்கள். கடவுள் எல்லோருக்கும் அளந்து வைப்பார் என்று கூறுவார்கள். சூர்யாக்கு உயரத்தை குறைத்து வைத்துட்டார் போல.

இவர் மட்டும் உயரமாக இருந்தால் தாறுமாறாக இருப்பார்.. பாருங்க! அனுஷ்கா கூட நடிக்கும் போதெல்லாம் எவ்வளவு சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. சூர்யா வந்த புதிதில் நடனம் ஆடியதிற்கும் தற்போதைய நிலைக்கும் மடுவிற்கும் மலைக்கும் உள்ள வித்யாசம்.

கலக்குங்க சூர்யா!

Singam 2எங்க டார்லிங் அனுஷ்காவிற்கு இந்தப் படத்தில் மொத்தமே ஒரு வாரம் தான் கால்ஷீட் இருந்து இருக்குமோ என்று சந்தேகமா இருக்கிறது.

ரொம்பக் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார் அதிலும் பெரும்பாலும் வந்து பாடலுக்கு ஆடி செல்வதோடு சரி!

சந்தானம் படத்துல சொல்ற மாதிரி அனுஷ்கா ஒரு அரேபிய குதிரை தான்.

குடும்பப்பாங்கு என்றாலும் கவர்ச்சி என்றாலும் கலக்குவது அனுஷ்கா தான். இவருக்கு மட்டும் எப்படி இரண்டுமே பொருந்துகிறது!!

ஹன்ஷிகா +2 மாணவியாக வந்து கொஞ்ச நேரம் கலகலத்து விட்டுப் போய் விடுகிறார்.

தமிழ் ரசிகர்கள் எத்தனையோ விசயங்களை தாங்கி இருக்கிறார்கள் என்பதால், இவர் +2 படித்துக்கொண்டு இருப்பதாகக் காட்டப்பட்டு இருப்பதையும் மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் 🙂 .

அஞ்சலி ஒரு பாட்டுக்கு அரைகுறையாக ஆடி பயமுறுத்தி இருக்கிறார். சமீப பிரச்சனையால் சோகமாகி இளைத்து இருப்பார் என்று பார்த்தால், இரண்டு மடங்காக இருக்கிறார். ஒருவேளை முன்னாடியே இந்தப்பாட்டை எடுத்து விட்டார்களோ!

தமிழக மக்கள் சார்பாக தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரு வேண்டுகோள். உடனடியாக இயக்குனர் ஹரியை இயக்குனர் வேலையில் இருந்து இழுத்து, காவல் துறையில் வேலையைக் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙂 .

படம் முழுக்க பட்டையக் கிளப்புறார். சிங்கம் முதல் பாகத்திலேயே அவருடைய புத்திசாலித் தனமான காட்சியமைப்புகள் ரசிக்க வைத்தன. இதில் அதை விட பல அபாரமான யோசனைகள்.

படத்தில் முதல் பாகம் போலவே இதிலும் காட்சிகள் வேகமாக போவது போல இருப்பதும் படத்தின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது. இது ரொம்ப அதிகமாகப் போய் படத்தில் வரும் விமானம் கூட ஜெட் போல பறப்பதாக காட்டி இருப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது 🙂 .

கார் போவதை வேகமாக போவது போல காட்டுவது ஓகே அதற்காக விமானத்தையும் கூடவா!! ஹரி சார் உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லையா! வேகமாக போவது போல காட்சியமைப்புகளை வைக்கவில்லை என்றால் படம் மூன்று மணி நேரத்திற்கு மேல் வரும் போல 🙂 .

ஆனால், படம் போனதே தெரியலை என்பது தான் உண்மை.

Danny with Suryaஇதில் லோக்கல் வில்லனாக வரும் ரகுமான் ஓகே. ஆமா! இவருக்கு வயசே ஆகாதா! அப்ப இருந்து அதே மாதிரியே இருக்கிறார்.

என்ன.. கொஞ்சம் உடம்பு போட்டு இருக்கிறார் அவ்வளவு தான். இன்டர்நேஷனல் வில்லனாக வருபவர் இந்திய காவல்துறையை நன்றாக திட்டுகிறார்.

இதற்கு பதிலடியாக!! சூர்யா ஆப்ரிகன் அனிமல் என்று கூறி இருக்கிறார். முதல் பாகம் அளவிற்கு இதில் ஒன்ற முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வில்லன்கள் என்று கருதுகிறேன்.

ஆப்ரிக்கா வில்லன் செம பொருத்தம். தன்னை கைது செய்து விட்டார்கள் என்ற கோபத்தில் அவரின் நடவடிக்கைகள் அசத்தல். Image Credit : https://www.facebook.com/pages/Surya/64953969119

நம்ம ஆளுங்களுக்கு நாட்டுப் பற்றைக் காட்ட வேண்டும் என்றால், உடனே தேசிய கீதம் நினைவிற்கு வந்துவிடும்.

நாட்டுப் பற்றைக் காட்ட தேசிய கீதம் போடப்படும் போது ஒருவர் கலாட்டா செய்கிறார், முழுவதும் பாடி முடித்த பிறகு சூர்யா அவனை புரட்டி எடுத்து அறிவுரை சொல்கிறார்.

யப்பா! இயக்குனர்களே தயவு செய்து நாட்டுப்பற்றை காட்டறேன் பேர்வழி என்று இப்படி படம் பார்த்துக்கொண்டு இருப்பவர்களை சங்கடத்தில் தள்ளாதீர்கள். தேசிய கீதம் பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும். திரையரங்கில் படம் ஓடும் போது எழுந்து நிற்க முடியுமா!

இதில் சில நாதாரிகள் விசில் வேறு அடிக்கிறார்கள். ஹரி சார்! உண்மையில் படத்தில் அவர்கள் தேசிய கீதத்தை அவமதித்ததை விட நீங்கள் தான் அதிகம் அவமதித்து இருக்கிறீர்கள்.

காமெடிக்கு விவேக்குடன் சந்தானத்தையும் இறக்கி இருக்கிறார்கள். விவேக் இதில் முதல் பாகம் போல இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் பேசாதது ஆறுதல். சந்தானம் காமெடிக்கு திரையரங்கில் பலத்த சிரிப்பலை.

அனுஷ்கா கூட கொஞ்ச நேரம் டூயட் பாடுற வாய்ப்பு வேற! சந்தானம் நடத்துங்க. மன்சூர் ஒரு நேர்மையான முரட்டு அதிகாரியாக வந்து போகிறார், மற்ற கதாப்பாத்திரங்கள் முதல் பாகத்தில் வந்தவர்களே! பாடல்கள் முதல் பாகம் போல அவ்வளவாக ஈர்க்கவில்லை.

DSP முதல் பாகத்தில் இருந்தே டியூன் எடுத்துக்கலாம் என்று இருந்துட்டார் போல.

முதல் முறையாக ஒரு தமிழ் படத்தின் இரண்டு பாகங்களுமே வெற்றி பெற்றி இருக்கின்றன. முனி, காஞ்சனா என்று இருந்தாலும் இதில் முதல் பாகம் சரியாகப் போகவில்லை. இரண்டுமே தாறுமாறான வெற்றி என்றால் அது சிங்கம் தான்.

படத்தில் கடைசியில் சில காட்சிகள் முழுமையடையவில்லை எனவே அடுத்த பாகத்தையும் எதிர்பார்க்கலாம். தமிழில் இதுவரை இரண்டு பாகங்கள் மட்டுமே வந்துள்ளன என்று நினைக்கிறேன். சிங்கம் மூன்றாவது பாகம் வந்தால் அது சாதனையாக இருக்கும்.

“காஞ்சனா” கூட அடுத்த பாகம் வரப்போவதாகக் கேள்விப்பட்டேன். சிங்கம் படத்தை ஹிந்தியில் அஜய் தேவ்கனை வைத்து எடுத்து 100 கோடி வசூல் செய்தார்கள். தற்போது அஜய் தேவ்கன் சந்தோசமாக இருப்பார் என்று நினைக்கிறேன்… அடுத்த பாகம் அவருக்கு தயார் ஆகி விட்டதே! 🙂 .

“ஏழாம் அறிவு” வசூல் செய்தாலும் சுமார் படமே! “மாற்றான்” தோல்விப்படம். சிங்கம் II அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் படி அதிரடி மாஸ் மசாலா படம். குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழலாம் என்று பரிந்துரைக்கிறேன். உங்களை நிச்சயம் ஏமாற்றாது.

Directed by Hari
Produced by S. Lakshman Kumar
Written by Hari
Starring Suriya, Anushka Shetty, Hansika Motwani, Vivek, Santhanam
Music by Devi Sri Prasad
Cinematography Priyan
Editing by V. T. Vijayan
Studio Prince Pictures
Distributed by Prince Pictures (Tamil Nadu) Studio Green (Telugu version)
Release date(s) 5 July 2013

கொசுறு

சிங்கப்பூரில் படத்திற்கு செம கூட்டம். பலர் டிக்கெட் கிடைக்காமல் தவித்துக்கொண்டு இருந்தார்கள். வழக்கமாக வெளியாகும் கோல்டன் டிஜிடல், ரெக்ஸ் தவிர்த்து Cathay என்ற திரையரங்கிலும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதிலும் ஃபுல் தான். படம் 2.45 மணி நேர படம் என்பதால் முந்தைய காட்சி முடிந்து கதவு திறக்க தாமதம் ஆகியது உடனே பலர் விசிலடித்து நம்முடைய பண்பாட்டை காப்பாற்றிக்கொண்டு இருந்தார்கள். குடும்பமாக நிறைய பேர் வந்து இருந்தார்கள்.

{ 15 comments… add one }
  • Srinivas July 7, 2013, 3:55 AM

    மாற்றான் தோல்விப்படம் இல்லை.. அதே சமய வெற்றி பெறவில்லை …ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 🙂 🙂

  • Vijay July 7, 2013, 9:09 AM

    தமிழக மக்கள் சார்பாக தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரு வேண்டுகோள். உடனடியாக இயக்குனர் ஹரியை இயக்குனர் வேலையில் இருந்து இழுத்து, காவல் துறையில் வேலையைக் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙂

  • Mohamed Yasin July 7, 2013, 11:36 AM

    தல விமர்சனத்துக்கு நன்றி… (படம் 2.45 மணி நேர படம் என்பதால் முந்தைய காட்சி முடிந்து கதவு திறக்க தாமதம் ஆகியது உடனே பலர் விசிலடித்து நம்முடைய பண்பாட்டை காப்பாற்றிக்கொண்டு இருந்தார்கள்) எந்த ஊர இருந்தாலும் நாம கலக்கணும் கிரி…

  • rajesh v July 7, 2013, 11:40 AM

    2.45 hours ah 3.15 hours nu mathi namma darling ku oru half an hour allot panni irukkalam….. 🙁 🙁

  • ஜோதிஜி July 7, 2013, 1:50 PM

    சிங்கப்பூரில் திரையரங்க வசதிகள் எப்படின்னு தெரியல. ஆனா இங்கே காது கிழியும் அப்படிங்ற ஒரு வார்த்தையையும் சேர்த்து எழுதிடுங்க. இன்னும் தலைவலி போகல.

  • kayalvizhi July 7, 2013, 6:53 PM

    சூர்யா பல்லைக் கடித்துக்கொண்டு பேசுவதைப் பார்த்தால் நான் அவர் வாய்க்குள் அரைபடுவது போலவே ஒரு ஃபீலிங் . கடிச்சு துப்பிடுவார் போல.. இந்த அளவிற்கு கோபத்தை, கத்தி முகபாவனைகளில் காட்டணுமா! நல்லவேளை படம் வெற்றி பெற்று விட்டது. படம் சங்காகி இருந்தால் சூர்யா கத்திப் பேசுவதை வைத்தே அவரை கலாயித்து இருப்பார்கள். கடவுள் எல்லோருக்கும் அளந்து வைப்பார் என்று கூறுவார்கள். சூர்யாக்கு உயரத்தை குறைத்து வைத்துட்டார் போல
    உண்மை .உண்மை.
    ஆனால் இவர் என்னவோ உலக மகா அழகன் என்று அலட்டுகிறது தாங்கவில்லை.

  • R.Gopi July 8, 2013, 8:57 AM

    கடைசி 30 நிமிடங்கள் செம கடி…. க்ளைமாக்ஸ் சொதப்பல்…. ஆப்பிரிக்க வில்லன் வேஸ்ட்…. பாடல்கள் ஐயோ ரகம்…..

    சூர்யா நடிப்பு சூப்பர்….. சந்தானம் நிறைய டபுள் மீனிங் டயலாக்ஸ் பேசறார்…. குறைத்து கொள்வது நமக்கு நலம்…..

    இந்த பாகமும் சரியாக முடிவடையாதது போல் காட்டியதால், சிங்கம்-3 வரும் வாய்ப்பு இருக்கு (அதுலயும் அனுஷ்காவாஆஆ????? யப்பாஆஆஆ தாங்காதுடா சாமி…..)… அமீரகத்தில் 20 தியேட்டர்களில் ரிலீஸ்….. ஒரு தமிழ்ப் படம் அதிக பட்ச தியேட்டர் ரிலீஸ் ஆனது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்…..

    மற்றபடி சமீபத்தில் வெளிவந்த பெரிய பட்ஜெட் படங்களில் இது தான் பெரிய வெற்றி பெரும் என்று நினைக்கிறேன்……..

  • indumathy July 8, 2013, 12:38 PM

    // கடவுள் எல்லோருக்கும் அளந்து வைப்பார் என்று கூறுவார்கள். //

    முதலில் உங்களுக்கும் & ரஜினிக்கும் என்ன அளந்து வச்சார் என்று சொல்லுங்க

    சூர்யாவுக்கு உயரம் கம்மி. உங்களுக்கு எது கம்மி? 🙂

  • Gowrishankar.P July 8, 2013, 12:51 PM

    ” சமீப பிரச்சனையால் சோகமாகி இளைத்து இருப்பார் என்று பார்த்தால், இரண்டு மடங்காக இருக்கிறார். ”

    – சிலபேருக்கு சோகத்துல உடம்பு ரொம்ப ஊதிடுமாம் கிரி 🙂

  • Arun July 9, 2013, 1:46 AM

    தல,
    படம் ஒரு டைம் பாக்கலாம் ரகம்
    அஞ்சலி காக ஒரு பாட்டு நல்லா இருக்கு

    – அருண்

  • indumathy July 9, 2013, 1:18 PM

    @ கௌரி ஷங்கர் – தெரியுது. நீங்க தொப்பை / தலை வலி ரசிகர் என்று 🙂

    @ கிரி – ரஜினி ரசிகன் விமர்சனம் எந்த காலத்தில் நடுநிலையாக இருந்து இருக்கு? 🙂

    • Gowrishankar.P July 9, 2013, 3:49 PM

      “தொப்பை / தலை வலி”
      – 101ஆம் வட்டம் அஞ்சலி ரசிகர் மன்றம் சார்பாக, இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் my lord.

  • கிரி July 10, 2013, 8:24 AM

    அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஸ்ரீநிவாஸ் ரைட்டு 🙂

    @ராஜேஷ் இது நெம்ப ஓவரா இருக்கே! 🙂

    @ஜோதிஜி 🙂

    @கயல்விழி சூர்யா அப்படி எதுவும் அலட்டுவது போல இல்லையே!

    @கோபி நலமா! 🙂 20 திரையரங்கா!! பெரிய விஷயம் தான்.

    @இந்துமதி என்னை கேட்டீங்க… சரி! ஒரு நியாயம் இருக்கு. சம்பந்தம் இல்லாம ரஜினி கைய பிடித்து எதுக்கு இழுக்கறீங்க இதுல.

    எனக்கு வெயிட் தாங்க கம்மி.. ஒரே ஃபீலிங்கா இருக்கு 🙁

    @கௌரிஷங்கர் 🙂

    @அருண் உங்களுக்கு படம் பிடிக்கலையா! எனக்கு ரொம்ப பிடித்தது. இன்னொரு முறை பார்ப்பேன்.

    @இந்துமதி யாருயா அது…! என்னோட விமர்சனத்தை படித்தே ஆகணும் என்று இந்துமதிய வற்புறுத்தியது! 🙂

  • indumathy July 15, 2013, 1:54 PM

    உங்க ப்ளாக் எப்படி வேண்டும் என்றாலும் எழுதுவேன் என்று நினைப்பா?
    எப்படி வேண்டும் என்றாலும் எழுதுவேன் என்று புலம்பி விட்டு, அடுத்தவனோட உடல் அமைப்பை குறை சொல்ல உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தது?
    கடவுள் சூர்யாவுக்கு அளந்து வச்சு இருக்கான் என்று புலம்பும் உங்கள் குடும்பம் & சுற்றம் எல்லோரும் அமிதாப் பச்சன் மாதிரி ஆறடிக்கு மேல உயரமா?
    அஞ்சடி அமீர் கான், சார்லி சாப்ளின், சூர்யா எல்லோரும் அஞ்சடி தான். ஆனா உயரமா இருக்கிற உங்களை விட நல்ல நிலைமைல தான் அவங்களை ஆண்டவன் வச்சு இருக்கான்.
    இதே மாதிரி கார்க்கி என்ற தலை நெறைய முடி உள்ள அறிவு ஜீவி, சூர்யாவை அசிங்கபடுத்துவதாக நினைத்து, அவரோட ப்ளாக் -ல “சூர்யாவோட பொண்டாட்டி ஜோதிகா மேல எனக்கு ரொம்ப ஆசை. அதானல எனக்கு சூர்யா பிடிக்கும். சூர்யா பொண்டாட்டி சூப்பர்” இப்படி எழுதுறார். அவரோட வீட்டுல இருக்கிறவங்களை அப்படி எழுத அவருக்கு தைரியம் இருக்கா? நடிகன் என்றால் எப்படி வேண்டும் என்றாலும் அசிங்கபடுத்தாலாம் என்று கேடுகெட்ட நினைப்பு. அவர் விஜய் ரசிகராம்.
    விஜய் அஜித் ரஜினி – இந்த மூன்று பேரோட பாஸ்ட் லைப் -வை விட சூர்யா எவளவோ பெட்டர். காதலிச்ச பொண்னை தான் கல்யாணம் பண்ணி இருக்கிறார். மேற்சொன்ன மூன்று பேரு மாதிரி திருமணத்திற்கு முன்பு கண்டவ கூட சுத்தல

  • கிரி July 15, 2013, 3:04 PM

    இந்துமதி இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் அப்படி என்ன தவறா சொல்லிட்டேன். சூர்யா உயரமா இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் என்று தானே கூறி இருக்கிறேன். இதுல அப்படி என்ன தவறை கண்டு பிடித்தீங்க.. தைய்யா தக்கான்னு குதிச்சிட்டு இருக்கீங்க. மற்றவங்க ஏதாவது சொன்னால் அதை அவங்க தளத்துல போய் கேளுங்க / சொல்லுங்க! சம்பந்தமில்லாம யார் மீதோ இருக்கிற கோபத்தை இங்க வந்து காட்டாதீங்க.

    முதல்ல உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை / எழுத்தை படிப்பதை தவிருங்க. யாரோ சொன்னாங்க என்று அதை ஊரெல்லாம் பரப்பிட்டு இருக்கிற நீங்க சூர்யாவை அவமானப்படுத்தறீங்களா.. இல்ல நானா! இப்ப என்னோட தளத்துல இதை போட்டு இதை படிக்க வரவங்களுக்கும் தேவையில்லாம இப்படி ஜோதிகா வை பற்றி எழுதி இருக்காங்க என்று சொல்லிட்டு இருக்கீங்க. உங்களைப் பற்றி எழுதி இருந்தால் இப்படி தான் ஒவ்வொரு தளமா சென்று இதை பரப்பிட்டு இருப்பீங்களா!

    சூர்யா மீது உங்களை விட எனக்கு மதிப்பு அதிகம். தயவு செய்து உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தி விட்டு, இதில் நேரத்தை வீணடிக்காமல் வேற உருப்படியான வேலை இருந்தா பாருங்க.

Leave a Comment