ஹரிதாஸ் – குறிஞ்சிப் பூ

Haridas Movieசமீபமாக பார்த்த படங்கள் அனைத்துமே சலிப்பை தான் தந்தது. தமிழில் ஒரு நல்ல படம் பார்க்க மாட்டோமோ! என்று ஏக்கமே வந்து விட்டது.

பல படங்கள் பார்த்து விமர்சனம் எழுதக் கூட தோன்றவில்லை. பலரும் நன்றாக உள்ளது என்று கூறிய “ஹரிதாஸ்” சிங்கப்பூரில் வெளியாகவில்லை.

சரி “ஆரண்யகாண்டம்” ஆன மாதிரி இதையும் வெளியிடவில்லை என்று விட்டேன்.

கடந்த வாரம் நண்பன் ஒருவன் படம் வந்து இருப்பதாக கூறிய பிறகே தெரிந்தது. நண்பனுக்கு நன்றி 🙂 .

கிஷோர் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். தாயில்லாத தனது ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மகனை ஒற்றை ஆளாக எப்படி சமாளிக்கிறார், எப்படி அவனை உற்சாகப்படுத்தி வழிநடத்துகிறார் என்பது தான் கதை.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நான் சந்தித்ததில்லை. எனவே இவனுடைய நடிப்பு எப்படி என்று கூறத் தெரியவில்லை. இன்னும் பெட்டராக நடித்து / நடிக்க வைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.

கிஷோர், ஹரியின் தேவைகள் என்னவென்றே புரியாமல் திணறுவதும். “டேய்! உனக்கு புரியமாதிரி எனக்கு சொல்லத் தெரியலையேடா! உன்னை வைத்து எப்படிடா சமாளிக்கப் போறேன்..” என்று அழும் போது நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார்.

இதில் அவர் மகன் தரும் பிரச்சனைகளை அதிக அளவில் காட்டவில்லை. இதை கிஷோர் சமாளிப்பதை மேலோட்டமாக காட்டி இருக்கிறார்கள். குறிப்பாக அவன் சாப்பிட செய்யும் தகராறு மட்டுமே வருகிறது, இது சாதாரண குழந்தைகள் கூட செய்வது தான்.

இன்னும் எது போன்ற பிரச்சனைகளை இவர் எதிர்கொண்டார் என்பதை, விளக்கமாக இல்லை என்றாலும் ஓரளவு காட்டி இருக்கலாம். கிஷோர் தான் நல்ல நடிகன் என்று “பொல்லாதவன்” படத்திலேயே நிரூபித்து இருந்தார்.. இதிலும் அருமை.

16 வயதினிலே படத்தில் “மயில் எனக்கு உன்கிட்ட பிடிச்சது உன்னோட 16 வயசு தான்” என்று ஒரு மாதிரி வித்யாசமான வாய்ஸ் மாடுலேஷன்ல சொல்வாரே! அந்த டாக்டர் தான், கிஷோரின் உயர் அதிகாரியாக வருகிறார்.

படம் வந்து 35 வருடம் ஆகிறது. இவர் இன்னும் அதே மாதிரியே தான் பேசிட்டு இருக்காரு! 🙂 .

கிஷோர் மகனை பார்த்துக்கொள்ளும் பள்ளி ஆசிரியையாக வரும் கதாப்பாத்திரமாக “சினேகா”. எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் அசத்தலாக நடித்து இருக்கிறார். இதில் இவருக்கு ஒப்பனை இல்லை என்று கூறினார்கள்.

ஒப்பனை இல்லாமலே அழகாகத் தான் இருக்கிறார். ஹரி ஒரு கட்டத்தில் காணாமல் போய்விட அதனால், பதட்டத்தில் இவர் அழுவதும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தவிப்பதும் என்று இவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு.

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த விசயங்களுள் ஒன்று, நமக்கு ஏற்கனவே புரிந்த ஒரு காட்சியை விளக்கி நம்மை போர் அடிக்காமல் அடுத்த காட்சிக்கு செல்வது தான். உதாரணமாக கிஷோர் அம்மா இறந்ததாக தொலைபேசி அழைப்பு வரும்.

இவர் அதிர்ச்சியாவதைப் பார்த்து உடன் இருக்கும் நண்பர்கள் என்ன என்று விசாரிப்பார்கள். அடுத்தக் காட்சி நேரடியாக அவரது சொந்த ஊரில் இருக்கும். இது போல பல காட்சிகள்.

எத்தனை நல்ல படமாக எடுத்தாலும் அதை கெடுக்கவென்றே வரும் குத்துப் பாடல் இதிலும் வருவது வருத்தம் அளிக்கிறது. இந்த ஒரு பாடல் மூலம் தான், படம் பாதிப்படையாது என்று ஏன் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இவ்வளவு அழகான படத்தை இந்த ஒரு பாடல் தான் முழுமை அடையச் செய்கிறதா! இந்தப்பாடல் இல்லை என்றால் எந்த பாதிப்பும் இல்லை. இதை ஏன் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

இவ்வளவு ஒரு நல்ல படத்தை எடுக்க நினைத்தவர்களுக்கு இந்தப்பாடல் இல்லாமல் படத்தை வெளியிட துணிவில்லாமல் போவது ஏனோ!

பரோட்டா சூரி காமெடி ரசிக்க முடியவில்லை. சிரிப்பு வரலை, எரிச்சல் தான் வந்தது. இவர் காமெடி!! பகுதியை அதிகம் நீட்டிக்காமல் குறைந்த நேரமே எடுப்பது ஒரு ஆறுதல்.

பள்ளி என்றாலே குழந்தைகள் குறும்பு இல்லாமையா! பசங்க அடிக்கும் லூட்டிகள், அவர்களுடைய பேச்சு மொழி என்று பல ரசிக்க உள்ளது. அதிலும் வகுப்பில் ஆசிரியர் இல்லாத போது பேசுபவர்கள் பெயரை எழுதி வைக்க ஒருவரை நியமித்து இருப்பார்கள், இதிலும் உள்ளது.

குறும்பு செய்பவரை “சேர்” போட சினேகா கூறுவார். எனக்கு என்னுடைய பள்ளி நினைவுகள் வந்து சென்றது. இதில் வரும் அனைத்தும் நான் எதிர் கொண்டு இருக்கிறேன் 🙂 .

குறிப்பு: சேர் போட வேண்டும் என்றால் சேர் இருப்பது போல நினைத்து அப்படியே உட்கார வேண்டும் 🙂 .

ஹரியை மராத்தானில் கலந்து கொள்ள வைக்க பெயர் கொடுத்த பிறகு அவனை தேர்வு கமிட்டியினர் நிராகரித்து விடுகிறார்கள். அவர்களிடம் கிஷோர் பேசும் போது அவ்வளவு அசத்தலாக இருக்கும்.

“ஏன் சார் எங்களை புறக்கணிக்கறீங்க? மற்றவர்களுக்கு எல்லாம் எப்படியோ, எங்களுக்கு எல்லாம் எங்க குழந்தைகள் கலந்து கொண்டாலே வெற்றி தான்.

இது போல சூழ்நிலையில் எங்களைப் போன்றவர்களுக்குத் தான் சார் அந்த வலியும் வேதனையும் புரியும்” என்று கூறும் போது கண்கலங்கி விட்டேன்.

உண்மையில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை மற்றவர்கள் பைத்தியம் என்று கூறும் போது அக்குழந்தையின் பெற்றோர் படும் மன வேதனையை அந்தக் கடவுள் மட்டுமே உணர்வார். ஆட்டிசம் என்பது பைத்தியம் அல்ல.

இது தெரியாதவர்கள் இப்படி கூறும் போது அவர்களுக்கு ஏற்படும் மனவேதனை எல்லாம் நம்மால் முழுமையாக உணர முடியாது.

கிஷோர் இவனை நன்றாகப் பார்த்துக்கொண்டாலும் ஏன் துவக்கத்தில் தன் தாயிடம் (இவர் மனைவி, ஹரி பிறந்தவுடன் இறந்து விடுவார்) விட்டு விடுகிறார் என்பது தான் புரியவில்லை.

இவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொள்ள நினைப்பவர் இதை முன்பு இருந்தே செய்து இருக்கலாமே! இடையிடையே என்கவுன்டர் பற்றிய காட்சிகளும் வந்து செல்லும். இரண்டும் சரியான கலவையாகத் தான் உள்ளது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் அன்பாக இருங்கள், அவர்களை வெறுத்து ஒதுக்காதீர்கள். பல சாதனையாளர்கள் தங்கள் சிறுவயதில் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளாகி இருந்தவர்களே!

கிஷோர் சொல்வது போல எங்கள் குழந்தைகள் போட்டிகளில் கலந்து கொண்டாலே எங்களுக்கு வெற்றி என்பது போல, இது போன்ற படங்களை எடுக்க தமிழிலும் இயக்குனர்கள் இருக்கிறார்கள் எனும் போதே சந்தோசமாக உள்ளது.

“ஹரிதாஸ்” போன்ற படங்களைப் பார்த்து ஆதரியுங்கள். இது போன்ற படங்களின் வெற்றிகள் நம் தமிழ்ப் படங்களின் பெருமையை நிச்சயம் உயர்த்தும். நல்ல படம் வருவதில்லை என்று சொன்னால் மட்டும் போதாதுங்க…!

இது போன்ற படங்கள் வரும் போது திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்கவும் வேண்டும்.

Directed by G.N.R.Kumaravelan
Written by G.N.R.Kumaravelan, A.R.Venkatesan
Starring Kishore, Sneha, Prithviraj Das, Soori, Pradeep Rawat
Music by Vijay Antony
Cinematography R. Rathnavelu
Editing by Raja Mohammed
Studio DR V RAM Production Private Limited
Release date(s) February 22, 2013
Country India
Language Tamil

கொசுறு 1

ஆட்டிசம் பற்றி மூத்த பதிவர் / ஊடகவியாளர் பாலபாரதி அவர்கள் தொடராக மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் படி எழுதி இருக்கிறார். இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

பெற்றோர்கள் எது போன்ற நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும், மற்றவர்கள் முன்னால் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்று விரிவாக எழுதி இருக்கிறார்.

பொதுவாகவே ஏதேனும் ஒரு குறைபாடுள்ள குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் அதிகம் வெறுப்பது – பரிதாபப் பார்வைகளைத்தான். குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சமவாய்ப்பை உருவாக்கித் தருவது என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது.

ஆறுதலையும், பரிதாபத்தையும் அள்ளிச்சொரிவது அல்ல.

உண்மையில் இவர் கூறி இருப்பது போல இவர்களை போன்றவர்களுக்கு தேவை பரிதாப பார்வை அல்ல, உற்சாகமான வார்த்தைகளே. உங்களுக்கு அவசியம் இல்லை என்று கருதினாலும் தேவைப்படுகிறவர்களுக்கு இந்தத் தகவல்களை கொடுங்கள்.

நமக்கு நடக்காத வரை எதுவும் சாதாரண விஷயம் தான்.

Go here – உனக்கேன் இவ்வளவு அக்கறை..

கொசுறு 2

என்னைப் போன்றவர்களின் புலம்பல் விஜய் டிவி வரை கேட்டு விட்டது போல! 🙂 “ஆரண்ய காண்டம்” விரைவில் போடப்போவதாக விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இணையத்தில் இருந்தும், நல்ல பிரிண்ட் இல்லை என்பதால் கிடைத்தும் இந்தப்படத்தை பார்க்காமல் இருக்கிறேன். இந்தப்படம் போல நான் எந்தப் படத்திற்கும் இது வரை காத்திருந்தது இல்லை.

கொசுறு 3

விஜய் டிவி யில் “Office” என்ற தொடருக்கு போடும் விளம்பரங்கள் ரசிக்கும் படி உள்ளது.

ஒருவர் மேலாளரை திட்டுவதும், ஆறு மணிக்கு மேல கோடி ருபாய் கொடுத்தாலும் வேலை செய்ய மாட்டேன் என்று கவுண்டர் காமெடியை வைத்து காமெடி செய்வது, Expense Claim போடும் போது செய்யும் தில்லு முள்ளுகளும் செம ரகளையாக இருக்கிறது 🙂 .

தொடர் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. எனக்கு வழக்கம் போல பார்க்க பொறுமை இல்லை… நேரமும் [7.30 PM] சரியாக வராது.

{ 8 comments… add one }
 • Dhinesh March 11, 2013, 9:34 AM

  Taare zameen Par is about dyslexia. Dyslexia does not fall under autism spectrum.

 • கிரி March 11, 2013, 9:37 AM

  தகவலுக்கு நன்றி தினேஷ்

 • r.v.saravanan March 11, 2013, 11:23 AM

  இது போன்ற படங்களின் வெற்றிகள் நம் தமிழ்ப் படங்களின் பெருமையை நிச்சயம் உயர்த்தும். நல்ல படம் வருவதில்லை என்று சொன்னால் மட்டும் போதாதுங்க…! இது போன்ற படங்கள் வரும் போது திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்கவும் வேண்டும்.

  ஆம் கிரி இந்த படம் என்னை நெகிழ வைத்து விட்டது கண்டிப்பாக இந்த படம் பேசப்படும்
  வகையில் வெற்றி பெற வேண்டும்

  நானும் படம் பற்றிய பகிர்வை தந்திருக்கிறேன்

 • Gowrishankar.P March 11, 2013, 12:41 PM

  “ஆடிசம்” பற்றிய பாலபாரதின் லிங்கிற்கு மிகவும் நன்றி கிரி.

 • ஆட்டிசம் – மேலும் அறிய கீழே உள்ள இணைப்பில் சென்று, தரவிறக்கியும் படிக்கலாம்…

  https://docs.google.com/file/d/0BzfUmo1CVqraMEd2VENpMHBDUFU/edit

  இந்தக் கட்டுரை பலருக்கும் உதவும்… முக்கியமாக பெற்றோர்களுக்கு…

 • arun March 12, 2013, 5:43 AM

  உங்களோட பெஸ்ட் பதிவு ல ஒன்னு தல
  ரொம்ப நல்லா வந்து இருக்கு

  – அருண்

 • Ranganathan March 19, 2013, 2:03 PM

  ஹாய் கிரி ,
  மிக அருமையான பதிவு 🙂

 • கிரி March 22, 2013, 7:09 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

Leave a Comment