Attacks of 26 / 11 மும்பைத் தாக்குதல்

attacks-of-26-11நான் தீவிர ராம்கோபால் வர்மா ரசிகன். இவருடைய படங்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

யார் கண் பட்டதோ சமீபமாக இவர் எடுத்த படங்கள்

அனைத்தும் மொக்கைப் படங்களாவே இருந்தது. “சர்க்கார் ராஜ்” படத்திற்குப் பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும் படி ஒரு படமும் வரவில்லை.

“ரத்த சரித்திரம்” ஓரளவு பேசப்பட்டது ஆனால், வெற்றிப்படமல்ல.

இவருடைய சத்யா, கம்பெனி, சர்க்கார், சர்க்கார் ராஜ் போன்ற படங்கள், எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் சலித்தது இல்லை. இவரைப் போல நிழல் உலகக் கதைகளை சிறப்பாகப் படம் எடுத்தது எவருமில்லை என்று நினைக்கிறேன்.

“சர்க்கார்” படம் எல்லாம் ஒரு “க்ளாஸ்” படம். ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு ரசித்துப் பார்த்து இருக்கிறேன். துவக்கத்தில் இருந்து இறுதி வரை சுவாரசியமான திரைக்கதை.

இதன் பிறகு வந்த படங்கள் எல்லாம் சூர மொக்கையாக இருந்தது, கடைசியாகப் பார்த்த படம் “ரத்த சரித்திரம்”.

இதில் சில படங்கள் எனக்கு பார்க்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ஆனால், Attacks of 26 /11 ட்ரைலர் பார்த்த உடனே முடிவு செய்து விட்டேன். படம் என்ன மொக்கையாக இருந்தாலும் பார்த்து விடுவது என்று.

திரையுலகிலே [அநேகமாக உலகிலேயே] முதல் முறையாக படத்தின் முதல் ஏழு நிமிடக் காட்சிகளை ட்ரைலராக வெளியிட்டு அசத்தி இருந்தார்.

இவர் படங்களில் எனக்கு ரொம்பப் பிடித்த விசயம் என்னவென்றால் படங்களில் செட்டிங்ஸ் அதிகம் இல்லாமல் நிஜமான இடங்களே இருக்கும். எனவே, படம் பார்க்கும் நமக்கும் இது செயற்கை என்ற உணர்வு இல்லாமல் படத்தோடு ஒன்ற முடியும்.

யாருக்கும் ஒப்பனை இருக்காது.. எந்த வீடும் இடமும் செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருக்கும்.

இந்தப்படத்தின் கதை நாம் அனைவரும் அறிந்தது [எனவே இதில் வரும் காட்சிகளை விவரித்து இருக்கிறேன் [Spoiler]. எனவே இதை நீங்கள் விரும்பவில்லை என்றால் தொடர வேண்டாம்] என்றாலும் இன்னொரு மாநிலத்தில் அதுவும் மிகத் தூரமாக நடந்ததால், வழக்கமான பரிதாபம் மட்டுமே இருந்ததே தவிர அதை சரியாக உணர முடியலை, முடியாது.

உதாரணமாக ஈழத்தில் நடந்த சண்டைகளை நாம் என்ன தான் படித்து இருந்தாலும், அதுவே சேனல் 4 வெளியிட்ட காணொளிகளைக் காணும் போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதே அங்கே இருந்தவர்கள் அனுபவித்தவர்கள் நிலையை நினைத்துப் பாருங்கள்.

எவ்வளவு கொடுமையானது.

இந்தப் படம் பார்க்கும் வரை எனக்கு ஒரு மன நிலையும், படம் பார்த்த பிறகு ஒரு மன நிலையும் இருந்தது என்றால் மிகையல்ல. பல இடங்களில் கண்கலங்கி விட்டேன்.

தீவிரவாதம் எவ்வளவு கொடுமையானது! எத்தனையோ தீவிரவாதப் படங்களைப் பார்த்து இருக்கிறேன் ஆனால், இது நம் நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் எனும் போது நம்மை அறியாமல் கண் கலங்குவது நிஜம்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் இதைப் பார்த்தால் அழாமல் இருக்கவே முடியாது. இதே ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைத்துப் பார்த்தேன். என்ன வாழ்க்கைடா! என்று இருந்தது.

எதுவுமே நமக்கு என்று வரும் போது தான் அதன் உண்மையான வலி நமக்குப் புரிகிறது. அது எந்த விசயமாக இருந்தாலும்….!

படம் துவக்கமே இணை கமிஷனராக உள்ள “நானா படேகர்” கதையை கூறுவது போல வருகிறது. தன் முன்னால் உள்ள அதிகாரிகளிடம் நடந்து முடிந்த சம்பவங்களை விளக்குவது போல ஆரம்பிக்கிறது.

உயர் வகை மீன் பிடிக்க கடலில் தூரமாக செல்கிறார்கள் சில மீனவர்கள். இவை மிக ஆழமான பகுதிகளில் மட்டுமே கிடைப்பவை. அங்கு வரும் தீவிரவாதிகள் இவர்களை மிரட்டி இவர்கள் படகு மூலமாக மும்பை செல்கிறார்கள்.

கூட்டாக வந்தாலும் தாக்குதலுக்கு போகும் போது குழுவாகப் பிரிந்து சென்று சரியாக இரவு 9.30 மணிக்கு அனைத்து இடங்களிலும் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்துகிறார்கள்

முதல் தாக்குதல் ஒரு பெரிய [Leopold Cafe] ஹோட்டல் மற்றும் பார். இங்கே வெளிநாட்டினர் உட்பட பலர் இருக்க, இங்கு வரும் இருவர் சரமாரியாக சுட்டு அனைவரையும் கொல்கிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இருவருமே பதட்டமடையவில்லை, அவசரமில்லை, நிதானமாக வெகு நிதானமாக ஒவ்வொருவராக சுட்டுக் கொல்கிறார்கள். சும்மா படுத்து இருந்தாலும் ஒரு முறை சுட்டு உறுதி செய்கிறார்கள்.

இரண்டாவது தாக்குதல் தாஜ் ஹோட்டல். ஒரு வெளிநாட்டு தம்பதியை பூ மாலை, குங்குமம் சகிதம் பாரம்பரியமாக வழக்கமாக வரவேற்கும் பெண்கள்.

இவர்கள் அதைத் தாண்டி உள்ளே சென்று ஒரு இந்தியக் குழந்தையின் சுட்டித் தனத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கும் போது தீவிரவாதிகள் உள்ளே நுழைகிறார்கள்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிதானமாக சுடுகிறார்கள், எந்தப் பதட்டமும் இல்லை. இவர்கள் சுடுவதைப் பார்த்து பயந்து ஆளுக்கு ஒரு திசையில் ஓடுகிறார்கள் ஆனால், சுடப்பட்டு வீழ்கிறார்கள்.

கொல்லப்பட்ட தனது அம்மாவின் அருகில் அமர்ந்து ஒரு குழந்தை கதறுகிறது. குழந்தையைக் காப்பாற்ற ஒரு ஹோட்டல் பணிப்பெண் முயற்சிக்க, எதிர்பார்த்தது போல சுடப்படுகிறார். குழந்தையைக் குறி வைக்கிறார்கள் ஆனால், கேமரா திரும்புகிறது.

துப்பாக்கி சத்தம் மட்டும் கேட்கும் குழந்தையின் அழுகை நிற்கும். இந்தக் காட்சிகள் எல்லாம் பார்க்கும் போது அழுது விட்டேன்.

அடுத்தது CST [Chhatrapati Shivaji Terminus] ரயில் நிலையம். இங்கே தான் கசாப் முறை. கசாப் மற்றும் இன்னொருவர். நம்ம சென்ட்ரல் ரயில் நிலையம் போலவே பரபரப்பாக உள்ளது.

மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டு, பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

உள்ளே நுழைபவர்கள் எல்லாம் தயார் செய்த பிறகு முதலில் செய்வது வெடிகுண்டை கூட்டத்தில் போடுவது தான்.

அதன் பிறகு கண்ணில் படும் அனைவரையும் சரமாரியாக சுடுகிறார்கள். எங்கே ஓடுவது எங்கே இருந்து சுடுகிறார்கள் என்றே தெரியாமல், இவர்கள் முன்னே வந்து சுடப்பட்டு விழுகிறார்கள்.

இது போல ஒரு திடீர் பிரச்னையை எதிர்பாராத காவலர்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கிறார்கள், இவர்களால் சுடப்பட்டு சாகிறார்கள்.

பலர் பயந்து ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் சென்று மறைந்து கொள்கிறார்கள்.

இதில் ஒரு காவல் துறை நபர் பதட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஓடித் தவிப்பதும், தீவிரவாதிகளை சுடத் தேடுவதும், தன்னுடைய மேலதிகாரி உட்பட தன் சக ஊழியர்கள் பிணமாகக் கிடைப்பதை பார்த்து என்ன செய்வது என்றே தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக் கதறும் போது நம் மனம் படும் பாடு சொல்லி மாளாது.

அடுத்ததாக இவர்கள் செல்வது ஒரு மருத்துவமனை [Cama Hospital – Women and Children’s Hospital]. இவர்கள் வருவதை தூரத்திலேயே பார்த்து உஷாரான ஒரு மருத்துவர் [இவருக்கு இதற்கு முன் நடந்த சம்பவங்கள் பற்றி ஒருவர் தொலைபேசியில் கூறிக்கொண்டு இருப்பார்] அனைவருக்கும் தகவல் கூறி அனைவரையும் ஒரு அறையில் சென்று ஒளிந்து கொள்ளக் கூறுகிறார்.

இவர்கள் நுழைந்து [Reception] அங்கு இதே போல வெறியாட்டம் ஆட [இதில் கசாப் இருப்பான்] உள்ளே ஒளிந்தவர்கள் தப்பித்து விடுவது போலத்தான் காட்டப்பட்டு இருக்கிறது.

ஆனால், ஒரு பெரியவரை காப்பாற்ற வரும் அந்த மருத்துவரும் அந்தப் பெரியவரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதில் அந்தப் பெரியவர் நடக்கக் கூட முடியாத அளவிற்கு இருப்பார்.

அனைவரும் ஒரு அறையில் சத்தம் போடாமல் பூட்டிக்கொண்டு பயத்தில் நடுங்கிக்கொண்டு இருக்க, இவர்கள் ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டு வருவார்கள். இதில் கசாப் வெற்று இடத்தில் சுட உடன் இருப்பவரால் ரவையை வீண் செய்யாதே என்று அறிவுறுத்தப்படுகிறார்.

இது போல ஒரு சூழ்நிலையில் அங்கே ஒளிந்து இருந்தவர்களின் மன நிலையை நினைத்துப் பார்த்தேன்…! யாருக்கும் இது போல ஒரு நிலை வரக்கூடாது.

கசாப் மற்றும் இன்னொருவர், காரில் அடுத்த துப்பாக்கி சூட்டை நடத்த செல்லும் போது அடிபட்ட ஒரு காவலர் தகவல் தர இவர்களை வழியில் தடுப்பு வைத்து காவல் துறை மடக்கி விடுக்கிறது.

இதில் நானா பாடகர் கூறிக்கொண்டு இருப்பார்… “எப்போதுமே எல்லாம் நடந்து முடிந்த பிறகு தான் செல்வோம் ஆனால், இது நடக்கும் போதே செல்லும்படி ஆனது. யாருக்கும் எந்த பயிற்சியும் இல்லை.

இது போல பிரச்சனை வந்தால் சமாளிக்கக் கூடிய எந்தத் திறமையும் இல்லாத சாதாரண காவலர்கள்” என்று நடைமுறை உண்மையைக் கூறுவார்.

கசாப் செல்லும் காரை சாலையில் மடக்கி சுட்டு விடுவார்கள். கார் கண்ணாடிகள் உடைந்து கார் சல்லடையாக சுடப்பட்டு இருக்கும். காரின் உள்ளே எந்த வித அசைவும் இல்லாமல் அமைதியாக இருக்கும். 15 / 20 காவலர்கள் மெதுவாக காரை நோக்கி நடப்பார்கள்.

அவர்கள் நடந்து வருவதைப் பார்க்க காமெடியாக இருப்பதைப் போல இருக்கும் ஆனால், நடைமுறை உண்மையைக் கூறுவதாகத் தான் இருக்கும் அதை சரியாகப் புரிந்து கொண்டால்.

எங்களுக்கு பின்னாடி இருந்த ஒரு “வடா தோசா” கும்பல் ஆரம்பத்தில் இருந்தே நக்கல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். எனக்கு செம்ம கடுப்பாக இருந்தது.

இந்தக்காட்சியில் இவர்கள் வருவதைப் பார்த்து ஹாலிவுட் படங்களில் வரும் US FBI உடன் ஒப்பிட்டுப் பார்த்தார்களோ என்னவோ.. Shit Man! Fuck Man!! என்று ஒரு பெண் கூறி சலித்துக்கொண்டு இருந்தார்.

எனக்கு செம்ம கோபம்.. திரும்பி செவுள்ளையே நாலு சாத்து சாத்தலாம் போல அவ்வளவு ஆத்திரம். அவர்கள் பயிற்சி அனுபவம் அவ்வளோ தான், இதில் கிண்டல் அடிக்க என்ன இருக்கிறது!

RGV நமது காவல் துறையை, படத்துக்காக FBI போல அதிரடியாகக் காட்டாமல், நம்மவர்கள் எப்படி நடந்து இருப்பார்களோ அதை அப்படியே எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டி இருந்தார். இந்த சனியன்களுக்கு அது இளக்காரமாக இருக்கிறது. அவர்கள் அவ்வளோ தான்.

இதில் கிண்டல் அடிக்க எதுவுமில்லை.

நானா படேகர் கூறும் போது எங்களுக்கு இது புதிது, அனுபவம் இல்லை.. பயிற்சி இல்லை.. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள். விசாரிப்புகள்.

இப்படி மொத்தமாக குவியும் போது நாங்கள் சமாளிக்க முடியாமல் திணறி விட்டோம் என்று கூறுவார். இது மிக மிக உண்மை.

உதாரணமாக, நான் எங்கள் சென்னை அலுவலகக் கிளையில் பணி புரிந்த போது, சாதரணமாகவே ஒரு நாளைக்கு குறைந்தது 150 தொலைபேசி அழைப்புகளை எதிர் கொள்வேன்.

நான் பார்த்துக்கொண்டு இருந்தது UNIX. ஒரு சமயம் UPS பிரச்சனையாகி [Power trip] அனைத்துமே டவுன் ஆகி விட்டது ஆனால், உடனே பவர் சரி ஆகி விட்டாலும், சர்வர் டவுன் ஆனது, ஆனது தான். அது மறுபடியும் உடனே எல்லாம் பூட் ஆகி விடாது.

ப்ராப்பர் ஷட்டவுன் இல்லை என்பதால் file system UP/Mount ஆகாது.

இதற்குள் அனைவரும் எப்போது தயார் ஆகும் என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு சர்வர் அல்ல.. 30 சர்வர் இருக்கும். எனக்கு பைத்தியம் பிடிக்காத குறையாக இருந்தது. அனைவருக்கும் பதிலும் கூற வேண்டும், அதே சமயம் பிரச்சனையையும் சரி செய்ய வேண்டும்.

IBM அழைக்க வேண்டும் எது எது அப் ஆகலை என்று பார்த்து சரி செய்ய வேண்டும். அதற்குள் ஐந்து நிமிடத்தில் குறைந்தது 30 முதல் 40 அழைப்புகள் வந்து விட்டது [மிகைப்படுத்தவில்லை]. பதட்டமானால் மூளையும் வேலை செய்யாது.

என்ன ஆச்சு! எப்ப சரியாகும்!! சரியாகி விட்டதா!!! அவசரமாக ஒரு வேலையை முடிக்க வேண்டும்.. சீக்கிரம் தயார் செய்யுங்கள்! என்று கேப் விடாமல் அடிப்பார்கள். என்னுடைய வாழ்க்கையின் கொடுமையான தருணங்களில் இதுவும் ஒன்று.

இதற்கே இப்படி என்றால் திடீர் என்று பலர் அனைவரையும் சுடுகிறார்கள், பலரின் உயிர் நம் கண் முன்னே போகிறது, நம்மையும் சுட வாய்ப்பு, போதுமான காவலர்களும் அந்த சமயத்தில் இல்லை.

எந்த முன் பயிற்சியும் இல்லை என்று இருக்கும் போது வரும் பதட்டம், சொன்னால் புரியாது, அனுபவித்தால் தான் தெரியும். இவர்களை Shit Man! Fuck Man!! என்று கிண்டல் அடிப்பதெல்லாம் அந்த நிலையில் நாம் இருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.

In this situation if you said “FUCK Man”, Yes… I’m Damn sure Terrorists will “FUCK You”. AC திரையரங்கில் உட்கார்ந்து, பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு இது போல நக்கலடிக்க மட்டுமே முடியும். அங்கே இருந்து பார்த்தால் தான் அது எவ்வளவு கொடுமையான நிலை என்பது தெரியும்.

காவல் துறை எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று தான் ஆனால், அதற்கு அரசாங்கம் அவர்களுக்குண்டான போதுமான வசதிகளை, பயிற்சிகளை நவீன ஆயுதங்களை காவலர்களுக்கு கொடுக்க வேண்டும்.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதற்கு என்று தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி சீரான கால இடைவெளியில் கொடுப்பார்கள். எந்தப் பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள சம்பந்தப்பட்டவர்களை தயார் படுத்தி வைத்து இருப்பார்கள்.

நம்ம ஊரில் அப்படியா! பிரச்சனை நடந்தால் மட்டுமே என்னவென்று பார்க்கக் கூறுவார்கள். என்ன தான் பயிற்சி பெற்றாலும் திடீர் என்று அதை எதிர்கொள்ளும் போது எவருக்கும் பதட்டம் வருவது இயற்கையே!

கசாப் மாட்டியவுடன் அனைவரிடம் இருந்தும் கசாப்பிற்கு தர்ம அடி விழும். கசாப் ஆக நடித்து இருந்தவர் நடிப்பு அருமை. ரொம்ப சூப்பர் என்று கூற முடியாவிட்டாலும், மோசமில்லை என்று தான் நடித்து இருந்தார்.

நானா படேகர் கசாப்பிடம் பேசும் முறை அசத்தலாக இருக்கும். கசாப் செய்யும் முட்டாள் தனத்தை அழகாக விவரிப்பார்.

இந்தப்படத்தில் தாஜ் ஹோட்டலில் NSG செய்த துப்பாக்கி சூட்டை காட்டவில்லை. இதை CNN காணொளியாக எடுத்து நம்மை நாறடித்து இருந்தது.

இதை விட மோசமாக TRP யை அதிகப்படுத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

என்ன நடக்கிறது என்பதை அங்கு இருந்த சில அதிகாரிகள் பேட்டி கொடுக்க, அதை ஹோட்டலில் இருந்த தீவிரவாதிகள் நேரலையாகப் பார்த்து உஷார் ஆனது கொடுமையான கதை.

ஊடகங்கள் செய்த அட்டகாசங்கள், பேட்டி கொடுத்து சொதப்பிய அதிகாரிகள், பயிற்சி இல்லாமல் சுடும் கமாண்டோக்கள், இதிலும் விளம்பரம் தேடிய அரசியல்வாதிகள் என்பது போன்ற சம்பவங்களை இந்தப் படத்தில் கூறவில்லை.

தொலைக்காட்சி ஊடகங்கள் செய்த அட்டகாசத்தையாவது குறிப்பிட்டு இருந்து இருக்கலாம். வட இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதை அந்த சமயத்தில் நாடே பார்த்தது.

Read: சாவு வீட்டில் கூட விளம்பரம் தேடுபவர்கள்! [December 2008]

இந்தப்படம் அனைத்து நிகழ்வுகளையும் உள்ளடக்கவில்லை [அடக்கவும் முடியாது] ஆனால், காண்பித்த வரை சிறப்பாகவே எடுத்து இருக்கிறார்கள். இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு கூற முடியுமோ அதைக் கூறி இருக்கிறார்கள்.

இந்தப்படத்தை ஏன் மொக்கைப் படம் என்று பலரும் விமர்சனம் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை! பல வட இந்திய ஊடகங்கள் இதற்கு 2 ஸ்டார் மட்டுமே கொடுத்து இருந்தன.

RGV இவர்களை படத்தில் நாறடித்து இருந்து இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தவற விட்டுவிட்டார்.

RGV is BACK with BANG! அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது.

Directed by Ram Gopal Varma
Produced by Parag Sanghvi
Written by Ram Gopal Varma, Rommel Rodrigues
Starring Nana Patekar, Sanjeev Jaiswa
Studio Alumbra Entertainment
Distributed by Eros International
Release date(s) February 2013 (Berlin), 1 March 2013
Running time 116 minutes
Country India
Language Hindi & Telugu

கொசுறு 1

Zero Dark Thirty

பின்லாடனை எப்படி 10 வருடமாக கண்காணித்து போட்டுத் தள்ளினார்கள் என்பது தான் படம். பின்லாடனை கொன்று விட்டார்கள் என்பது வரைக்கும் தான் நமக்குத் தெரியும் ஆனால், அதில் எத்தனை பேரின் எத்தனை வருட உழைப்பு உள்ளது என்று காணும் போது ஆச்சர்யமாக இருந்தது.

இது காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை அல்ல. பல பேரின் உழைப்பு, திட்டமிடல் என்று ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கி உள்ளது. இது எதோ ஒரு நாளில் நடந்த ஒன்றல்ல.

படம் பாதிக்கும் கொஞ்சம் அதிகம் வரை டாக்குமெண்டரி படம் போலவே உள்ளது. அதிரடியான சண்டைக் காட்சிகளை படம் நெடுக எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கும்.

இந்தப்படத்தில் 30 நிமிடத்தில் பின்லாடனை சுட்டு விட்டு அங்குள்ள தகவல்களை எடுத்து செல்வதாக வருகிறது ஆனால், உண்மையில் 9 நிமிடத்தில் இதை முடித்ததாக இதில் உண்மையில் பங்கு கொண்ட வீரர் பேட்டி கொடுத்து இருந்தார்.

படம் ஏறக்குறைய சரியாக எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருந்தார்.

படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நாமே அந்த இடத்தில் இருப்பது போல உள்ளது. பின்லாடன் இருந்த வீடு, அதை சுற்றியுள்ள இடம் என்று அனைத்துமே தத்ரூபமாக உள்ளது. அதிரடியாக படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு கடைசி 30 நிமிடம் மட்டும் திருப்தி அளிக்கும்.

பொறுமையாக ரசிப்பவர்களுக்கு இந்தப்படம் ஒரு அருமையான உணர்வை தரும் என்பதில் சந்தேகமில்லை.

கொசுறு 2

கூகுள் இன்று அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை அறிவித்து இருக்கிறது. ஜூலை 1 2013 முதல் கூகுள் ரீடரை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் வேறு ஒரு நிறுவனத்திற்கு உங்கள் தகவல்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்தச் செய்தி, புதிய போப் தேர்வான செய்தியை விட அதிகளவில் ட்விட்டர் ஃபேஸ்புக் கூகுள் + போன்றவற்றில் ட்ரென்ட் ஆகியுள்ளது. இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக் கூறி அனைவரும் கூகுளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கூகுள் ரீடர் போகாதே! போகாதே!! என்று பெட்டிசன் எல்லாம் போட ஆரம்பித்து விட்டார்கள் அதற்குள்! 🙂 . எனக்கும் இது அதிர்ச்சி தான். இதை ரீடரில் படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் தான் 🙂 . இன்னும் காலம் உள்ளது அதற்குள் ஏதாவது நடக்கும்… பார்ப்போம்!

{ 10 comments… add one }
 • Vinod V March 14, 2013, 9:33 AM

  ரீடற்கு பதில் ஒரு மாற்று தளத்தை நீங்களே சொல்லுங்களேன் 🙂

 • cricket live streaming March 14, 2013, 10:43 AM

  Good post. Thank you.
  cricket live streaming

 • tulsi March 14, 2013, 12:06 PM

  உஸ் பீட்லி,newsblur

 • tulsi March 14, 2013, 12:06 PM

  *feedly

 • Dinesh March 14, 2013, 1:04 PM

  உங்களோட விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது. கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்….

  நேற்று தான் Zero Dark Thirty படம் பார்த்தேன்… ஆனால் படத்தில் அவர்கள் ஒரு சந்தேகத்தோடு அந்த வீட்டை தாக்குவதாக காட்டி உள்ளனர். ஆனால் என் நண்பர் 100% முழுவதுமாக அறிந்த பிறகே அவர்கள் தாக்கியதாக கூறினார். ஏனென்றால் அனுமானத்தின் அடிப்படையில் எல்லை கடந்து ஒரு நாட்டின் உட்சென்று தாக்குவது என்பது முடியாத காரியம்.

  கூகுல் ரீடர் ரிடையர் ஆவது வருத்தமே… அதனால் CNET பரிந்துரையின் பேரில் http://www.feedly.com என்னும் சேவைக்கு மாறி விட்டேன். போக போக பழகி விடும் என்றே நினைக்கிறேன்….

 • Sethu March 14, 2013, 8:11 PM

  // எதுவுமே நமக்கு என்று வரும் போது தான் அதன் உண்மையான வலி நமக்குப் புரிகிறது. அது எந்த விசயமாக இருந்தாலும்….! //

  இதை நான் ஒப்புகொல்கிறேன்

 • arun March 14, 2013, 11:07 PM

  ரெண்டு படமும் எனக்கு புடிச்சது – ராம் கோபால், zero dark thirty

  zero dark thirty 2 time பாத்துட்டேன்

  “Shit Man! Fuck Man!! என்று ஒரு பெண் கூறி சலித்துக்கொண்டு இருந்தார். எனக்கு செம்ம கோபம்.. திரும்பி செவுள்ளையே நாலு சாத்து சாத்தலாம் போல அவ்வளவு ஆத்திரம்.”
  – அப்புறம் உங்க விமர்சனத்துல இந்த லைன் ந 10 டைம் படிச்சுட்டேன்
  கலக்கல் தல

  – அருண்

 • manohar March 15, 2013, 6:48 AM

  ரீடற்கு பதில் ஒரு மாற்று தளத்தை நீங்களே சொல்லுங்களேன்

 • Gowrishankar.P March 15, 2013, 3:49 PM

  26/11 விமர்சனத்திற்கு நன்றி.
  அப்பா! இப்போதான் எனக்கு பிடிச்ச ஒன்னு உங்களுக்கும் பிடிச்சிருக்கு, RGV படங்கள் 🙂 .

 • கிரி March 22, 2013, 6:55 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @வினோத் & மனோகர் Feedly.com

  @தினேஷ் நானும் அதற்கு தான் மாறி இருக்கிறேன்.

  @கௌரிஷங்கர் உங்களுக்கு பிடிக்காததையே எழுதிட்டு இருக்கேனா! 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz