ஹேக்கிங்கை அதிரடியாகக் குறைத்த கூகுள்!

February 26, 2013

கூகுள் தன்னுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளினால், தங்கள் பயனாளர்கள் கணக்கு ஹேக் செய்யப்படுவதை 99.7 % குறைத்து இருக்கிறது. இதை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கூகுள் எப்போதுமே தன்னுடைய செயல்களால் திருப்தி அடையாத நிறுவனம். மேலும் மேலும் புதிய வசதிகளை தனது பயனாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற அதன் ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது. எண்ணற்ற வசதிகளை கொடுத்தாலும் திருப்தி அடையாமல் சேவையை மெருகூட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

grey ஹேக்கிங்கை அதிரடியாகக் குறைத்த கூகுள்!

கூகுள் முதன் முதலாக தனது ஜிமெயில் கணக்கிற்கு பாதுகாப்பு வசதியைக் கூட்ட குறுந்தகவல் [SMS] முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் உங்கள் கணக்கில் நுழைய கடவுச்சொல் [Password] இருந்தால் மட்டும் போதாது. கடவுச்சொல்லை கொடுத்த பிறகு உங்கள் மொபைலுக்கு ஒரு குறுந்தகவல் வரும். அதில் உள்ள எண்ணை கொடுத்தால் மட்டுமே உங்கள் கணக்கில் நுழைய முடியும் [Two step verification]. இதன் மூலம் உங்கள் கடவுச்சொல்லை அறிந்தாலும் உங்கள் மொபைல் இல்லை என்றால் ஹேக்கர்களால் நுழைய முடியாது.

Read: ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

சிறப்பான ஸ்பாம் ஃபில்டர்

நம்முடைய கணக்கை நம்முடைய கடவுச்சொல்லை ஹேக் செய்தும் நுழையலாம், அடுத்ததாக இன்னொரு முறையான Phishing எனப்படும் நம்மிடம் இருந்து அவர்கள் ஏமாற்றி கடவுச்சொல்லை வாங்கலாம். எப்படி என்றால், நமக்கு கூகுள் அனுப்புவது போலவே ஒரு லிங்க் அனுப்புவார்கள் அதில் பார்க்க கூகுள் முகப்பு பக்கம் போலவே இருக்கும். நாமும் கூகுள் பக்கம் தானே! என்று நம்முடைய கடவுச்சொல்லை கொடுப்போம் ஆனால் லாகின் ஆகாது. சரி எதோ பிரச்சனை என்று மறந்து விடுவோம். உண்மையில் நாம் அவர்களிடம் நம் தகவல்களை கொடுத்து இருப்போம்.

இது போன்ற ஏமாற்று வேலை செய்யும் மின்னஞ்சல்களை கூகுள் இனம் கண்டு அதை ஸ்பாம் பகுதிக்கு அனுப்பி விடும். இதன் மூலம் விஷயம் தெரியாதவர்கள் இது போன்ற மின்னஞ்சல்களால் ஏமாறாமல் இருக்க அதிக வாய்ப்பு. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் ஜிமெயில் பயன்படுத்துவது அவர்களின் பாதுகாப்பிற்கு நல்லது.

Read: நீங்கள் ஏன் ஜிமெயிலுக்கு மாற வேண்டும்!

இந்த இரு முறைகளில் தான் அதிகளவில் நம்முடைய இணையக் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன. இவை இரண்டிற்கும் கூகுள் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டதால் ஹேக் செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது.

grey ஹேக்கிங்கை அதிரடியாகக் குறைத்த கூகுள்!

இவை அல்லாமல் ஒருவேளை நாம் வழக்கமாக பயன்படுத்தும் நாட்டில் இருந்து இல்லாமல் வேறு ஒரு நாட்டில் ஒருவர் இதை ஹேக் செய்ய முயற்சித்தால் நாடு மாறி உள்ளது என்று சரியான உரிமையாளர் தானா என்பதை உறுதிப்படுத்த நம்முடைய மொபைல் எண்ணை கேட்கும். இதன் மூலம் நம்முடைய பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. அப்ப இந்தியால இருந்து ஹேக் பண்ணுனா கேட்காதான்னு? நினைக்காதீங்க grey ஹேக்கிங்கை அதிரடியாகக் குறைத்த கூகுள்! அப்பவும் நுழைய முயன்றால் கேட்கும். பெரும்பாலும் வேறு நாடுகளில் இருந்து தான் இது போல ஹேக் செய்பவர்கள் அதிகம்.

grey ஹேக்கிங்கை அதிரடியாகக் குறைத்த கூகுள்!

இதோடு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் நம்முடைய கணக்கில் நடைபெறுகின்றன என்று கூகுள் அறிந்தால், நம்மை எச்சரிக்கைப்படுத்த மின்னஞ்சல் / குறுந்தகவல் மூலம் வசதி செய்துள்ளது. இதை நாம் விருப்பப்பட்டால் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். என்னுடைய பரிந்துரை, இதைக் கண்டிப்பாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய அனைத்து கணக்கிற்கும் [யாஹூ, கூகுள், ஃபேஸ்புக், அவுட்லுக் மெயில்] ஒரே கடவுச்சொல்லை கண்டிப்பாக வைக்கக்கூடாது. குறிப்பாக கூகுள் க்கு வைக்கக்கூடாது காரணம் இதில் பல்வேறு உள் கணக்குகள் [பிளாகர், பிகாசா, கூகுள் தேடல், கூகுள் டிரைவ் etc] உள்ளன இதனால் ஒரு கணக்கு மட்டுமல்ல பல கணக்குகள் ஸ்வாகா ஆகி விடும்.

Read: ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?

நீங்கள் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி [Two step verification] செய்து இருந்தால் கண்டிப்பாக இரண்டு மொபைல் எண்ணைக் கொடுத்து வையுங்கள். அந்த இன்னொரு எண் மிக மிக நம்பிக்கையானவருடையதாக இருக்க வேண்டும். காரணம், ஒருவேளை உங்கள் மொபைல் இல்லாமல் போனால் அடுத்த மொபைல் மூலம் குறுந்தகவலை பெற முடியும். அதோடு இன்னொரு முறையான உங்களுடைய பாதுகாப்பு Code யையும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒருவேளை இரண்டு மொபைலுமே இல்லை என்றாலும் இதன் மூலம் உங்கள் கணக்கில் நுழைய முடியும்.

இதை எதற்குக் கூறுகிறேன் என்றால், நான் என்னுடைய ஜிமெயில் கணக்கிற்கு இது போல செய்து இருந்தேன் ஆனால், என்னுடைய Blog டொமைன் கணக்கிற்கு ஒரு மொபைல் எண் மட்டுமே கொடுத்து இருந்தேன். பேக்கப் எண் கொடுக்கவில்லை. சமீபத்தில் எனக்கு அலுவலகத்தில் மொபைல் கொடுத்ததால் நான் என்னுடைய எண்ணை சரண்டர் செய்து விட்டேன்.

என்னுடைய ஜிமெயில் கணக்கில் உஷாராக மாற்றி [Update] விட்டேன் ஆனால், என்னுடைய டொமைன் கணக்கிற்கு வருடம் ஒருமுறை அல்லது இரு முறை சென்றாலே அதிகம் என்பதால் அது பற்றி நினைவில்லை. நானும் மறந்து என்னுடைய எண்ணை சரண்டர் செய்து விட்டேன். திடீர் என்று ஒருநாள் எதோ நினைவு வந்து யோசித்தால் எனக்கு தூக்கி வாரிப்போட்டு விட்டது. லாட்டரி சீட்டை, தண்ணியில செந்தில் போட்டுட்டார்னு தெரிந்ததும் குபீர்னு கவுண்டர் ஒரு ஆட்டம் கொடுப்பாரே! அது மாதிரி ஆகி விட்டது :-).

அதன் கடவுச்சொல்லை என்னால் மாற்ற முடிந்தாலும் அது என்னுடைய பழைய மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி அதை என்ட்டர் செய்யச் சொல்கிறது. பழைய மொபைல் எண்ணைத் தான் சரண்டர் செய்தாச்சே! எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கண் முன்னாடி அனைத்தும் இருக்கிறது ஆனால், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சரி! மொபைல் நிறுவனத்திடமே சென்று அந்த பழைய எண்ணையே திரும்ப அபராதம் கட்டி பெற முடியுமா? கொடுப்பார்களா! என்றெல்லாம் யோசித்துக்கொண்டு இருந்தேன்.

இந்தக் கணக்கு இல்லை என்றால், என்னால் என்னுடைய www.giriblog.com டொமைன் ஐ இழந்து விடுவேன். தற்போது டொமைன் ஆண்டுக் கட்டணம் தானியங்கியாக சென்று விடும் என்றாலும் நாளை ஏதாவது மாற்றம் செய்ய வேண்டி வந்தால், எதுவுமே செய்ய முடியாது. பிறகு டென்ஷன் குறைந்து கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பார்த்து, பிறகு code ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்து இருக்கிறேனா! என்று தேடிப் பார்த்ததில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தேன். இதைப் பார்த்த பிறகு தான் எனக்கு உயிரே வந்தது :-).

இதன் பிறகு முதல் வேலையாக இரு எண்களையும் பதிவு செய்து விட்டேன். இன்னொரு எண்ணை கொடுக்க விருப்பமில்லை என்றால் code ஐ ப்ரிண்ட் அவுட் எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைத்து விடுங்கள்.

இரட்டை அடுக்கு பாதுகாப்பு முறையை ஆக்டிவேட் செய்யாதவர்களுக்கு இது கொஞ்சம் படிக்க குழப்பமாகத் தான் இருக்கும். நீங்கள் இதை செய்தீர்கள் என்றால் எளிதாகப் புரிந்து கொள்வீர்கள்.

நான் கூறியதைப் பார்த்து ரொம்பக் குழப்பமான வேலை என்று நினைத்து பயந்து விடாதீர்கள். ரொம்ப எளிதானது தான். நம் கணக்கை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நிச்சயம் முயற்சி மேற்க்கொள்ள வேண்டும். நம்ம கணக்கை எவன் எடுத்து என்ன ஆகப்போகிறது என்கிற அலட்சியம் வேண்டாம். பலர் இது போலத் தான் இருக்கிறார்கள்.

உங்களுக்கு இது குறித்து என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேளுங்கள். முடிந்தவரை உங்களுக்கு நான் உதவுகிறேன் ஆனால், தயவு செய்து அலட்சியமாகவும் / ஏமாளியாகவும் மட்டும் இருக்காதீர்கள்.

Image and News Credit – Google

கொசுறு 1

ஆதி-பகவன் படம் பார்த்தேன். முதல் பாதி கதை ஒன்றுமே இல்லை. இரண்டாம் பாதியில் ஜெயம் ரவி திருநங்கை போல வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. இவருக்கு பெரிய மைனஸ் இவரது குரல் தான் ஆனால், அதற்கு இவர் எதுவும் செய்ய முடியாது. டான் கதாப்பாத்திரத்திற்கு இவர் சரியாகப் பொருந்தவில்லை. அடி வாங்கும் போதும் கொடுக்கும் போதும், டானாக இவரது நடிப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை ஆனால், அதற்காக இவரது சண்டை திறமையை குறைவாக மதிப்பிடவில்லை காரணம் “பேராண்மை” படத்தில் சிறப்பாக செய்து இருப்பார். ஜெயம் ரவி இனி “டான்” கதாப்பாத்திரங்களில் நடிக்காமல் இருப்பது அவருக்கு நல்லது.

ஒரு நல்ல நடிகரை இரண்டு வருடம் பாடாய்ப் படுத்தி ஒரு சுமாரான படத்தில் நடிக்க வைத்த அமீர் மீது கோபம் வருகிறது.  இந்தப் படம் எடுக்க, எதற்கு இரண்டு வருடம் ஆனது என்பது அந்த அமீருக்கே வெளிச்சம்.

கொசுறு 2

கிஷோர் மற்றும் சினேகா நடித்த “ஹரிதாஸ்” படம் பார்க்க வேண்டும் என்று ரொம்ப விருப்பப்பட்டேன் ஆனால், சிங்கப்பூரில் வெளியாகவில்லை. நல்ல படங்கள் என்று பலர் கூறும் படங்கள் இங்கே வெளியாவது இல்லை. ஆரண்யகாண்டம், பிட்சா, நடுவுல கொஞ்ச பக்கத்தைக் காணோம் என்று இதன் பட்டியல் நீளுகிறது.

கொசுறு 3

திருவனந்தபுரத்தில் ஒரு எலக்ட்ரீசியன், தான் ரிப்பேர் செய்ய சென்ற வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டரில் ரகசிய கேமராவை பொருத்தி பெண்கள் குளிப்பதை படம் எடுத்து இருக்கிறார். இதை எட்டு மாதங்களாகச் செய்து இருக்கிறார். இதன் பிறகு நடந்த விஷயங்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. நான் கூற வந்தது, இது போல ரிப்பேர் செய்ய வருபவர்களிடம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை. இது திருவனந்த புரத்தில் மட்டும் நடந்ததல்ல / நடப்பதல்ல, நம் இடத்திலும் நடக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

இது போல வருபவர்களை, உடன் இருந்து கண் காணிக்க வேண்டும். குறிப்பாக குளியலறை, படுக்கை அறையில் இது போன்று ரிப்பேர் செய்ய வேண்டி வந்தால், நிச்சயம் உடன் இருந்து அவர்கள் செல்லும் வரை கண் காணிக்க வேண்டும். இல்லை என்றால், நாளை இணையத்தில் உங்கள் நிர்வாணப் படங்களை / காணொளிகளை நீங்களே பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகலாம்.

{ 17 comments… read them below or add one }

திண்டுக்கல் தனபாலன் February 26, 2013 at 12:42 PM

இப்போது யார் ஒரு மொபைல் அல்லது ஒரு நம்பர் வைத்துள்ளார்கள்…? அதனால் நமது இன்னொரு நம்பர்—>இரண்டாவது மொபைலின் நம்பர் கொடுத்தால் நல்லது…

பாதுகாப்பு Code யையும் மறக்காமல் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்…

நன்றி… G+

Reply

திண்டுக்கல் தனபாலன் February 26, 2013 at 9:21 PM

மேலும் விவரங்களுக்கு : http://www.karpom.com/2011/11/how-to-use-google-2-step-verification.html

(இது G + நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க) நன்றி…

Reply

Gowrishankar.P February 26, 2013 at 1:44 PM

“கொசுறு 1″
அவ்ளோதான் “ஆதி-பகவன்” படம் விமர்சனமா? நான் தனியா பட விமர்சனத்தை எதிர்பாத்தேன்.

Reply

Vijay February 26, 2013 at 3:07 PM

இந்த “இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி [Two step verification] ” கொஞ்சம் விவகாரமனதுதான்.

உங்க மொபைல் நம்பர் இல்லைனா காலி, அது ஒரு தலை வலி. எப்போ பார்த்தாலும் ரெண்டு தடவை பாஸ்வோர்ட் குடுக்கணும், அது இன்னொரு தலை வலி.

அதுனால ரொம்ப முக்கியமான மெயிலுக்கு மட்டும் செய்றது நல்லது. நான் அந்த unlock code-ஐ காப்பி பண்ணி என்னோட Dropbox-ல வச்சுட்டேன்.

Reply

ANaND February 26, 2013 at 3:14 PM

நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு நன்றி …
அண்ணா .. நான் மொபைல்லதான் அதிகமா மெயில் யூஸ் பண்ணுறேன் இந்த 2 ஸ்டேப் verification ன மொபைல் ஜிமெயில் கு பண்ணலாமா ?

Reply

Gowrishankar.P February 26, 2013 at 3:19 PM

ஆனந்த், 2 ஸ்டேப் verification செட் பண்ணினா ஜிமெயில் மொபைல்-ல work ஆகாது. நான் ட்ரை பண்ணினேன், வொர்க் அகல.

Reply

கிரி February 26, 2013 at 5:14 PM

@கௌரிஷங்கர் விமர்சனம் எழுத நினைத்தேன்.. பின்னர் ஏனோ எழுதவில்லை.

@விஜய்

நீங்கள் எதற்கு இரண்டு முறை கொடுக்கிறீர்கள்? உங்கள் க்ரோம் உலவியில் cache auto clear கொடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்சனை வரும். இல்லை என்றால் உங்களுடைய கடவுச் சொல்லை கூட கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இதில் நீங்கள் Trusted this computer தேர்வு செய்தால் நீங்கள் ஒவ்வொரு முறையும் இது போல கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ரொம்ப எளிது. உங்கள் History மற்றும் cache clear செய்தால் மட்டுமே திரும்ப கடவுச் சொல் கொடுக்க வேண்டியது வரும்.

நீங்கள் மட்டும் பயன்படுத்தும் கணினி / Profile என்றால் இந்த முறையையே பின் பற்றலாம்.

@ஆனந்த் 2 Step verification enable செய்து விட்டால், நீங்கள் மொபைல் அல்ல எதில் லாகின் செய்தாலும் உங்களை உங்கள் கடவுச் சொல் மட்டும் அல்லாது SMS code ஐ என்ட்டர் செய்யக் கூறும்.[Application password என்ற முறை கூட உள்ளது]

@கௌரிஷங்கர் நீங்கள் கூறுவது தவறு. கண்டிப்பாக கேட்கும்.

Reply

மு.முத்துக்குமார் February 26, 2013 at 7:56 PM

அண்ணா, ரஜினி ரசிகனா இங்க வந்தேன். 4 வருஷமா உங்க ப்ளாக்க படிச்சுட்டு வரேன். உங்க போட்டோ ஒன்னு போடுங்க. நீங்க எப்படி இருப்பிங்கன்னு தெரிஞ்சுக்கணும்.

Reply

rajesh v February 26, 2013 at 9:49 PM

ssssshhhhhhaaaaaaaaaaabbbbbbbbbbbhhhhhhhhhhhhhhaaaaaaaaaaaaaaaaaaa

Reply

Ilavarasan February 27, 2013 at 12:14 AM

வணக்கம் கிரி அவர்களே

அனைத்தும் மிகமிக பயனுள்ள தகவல்கள்

Reply

Gnanasekaran February 27, 2013 at 6:28 AM

நல்ல பயனுள்ள அறிவிப்பு

Reply

கிரி February 27, 2013 at 7:35 AM

@முத்து நான்கு வருடமாக படிக்கிறீர்கள் என்றால் நிச்சயம் என் படம் பார்த்து இருக்க வேண்டும். இரு பதிவுகளில் (ஒரே படம்) என் படம் வெளியிட்டு இருக்கிறேன் :-). இங்கே சென்று பாருங்க http://www.giriblog.com/2012/05/langkawi-bird-park.html

@ராஜேஷ் எப்போதுமே நாம பிரச்சனையில் மாட்டாத வரை அடுத்தவங்க சொல்கிற எச்சரிக்கை / பாதுகாப்பு பற்றி விஷயங்கள் கிண்டலாகத்தான் தோன்றும். உங்களுக்கு பிரச்சனை என்றால் அண்ணே! என்று என்கிட்டே தான் வருவீங்க கடைசியில :-)

Reply

rajesh v February 27, 2013 at 7:45 AM

:D :D LOL

Reply

Mohamed Yasin February 27, 2013 at 4:39 PM

பகிர்வுக்கு நன்றி கிரி… எளிமையான தகவலாக இருந்தாலும் எனக்கு புதுமையான ஒன்று தான்… நன்றி.

Reply

கிரி February 28, 2013 at 8:28 AM

யாசின் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாக ஆளைக் காணோம்!

Reply

venicerajan March 1, 2013 at 11:09 AM

ரொம்ப நன்றி….. சில சமயங்களில் சந்தேகம் வருகிறது

Reply

Vijay March 5, 2013 at 8:36 AM

இந்த கூகுள் ரசிகர் தொல்லை தாங்க முடியலைப்பா :)
கில்லாடி, நன்றாக இருந்தது இந்த பதிவு.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed