ஒரு நாளில் ஒரு லட்சம் – கதையல்ல நிஜம்!

நான் கூறப்போவது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியல்ல, என்னுடைய ரியல் லைஃப் நிகழ்ச்சி, கதையல்ல நிஜம்.

தலைப்பிற்கு போகும் முன்பு அதற்குண்டான காரணத்தை விளக்க வேண்டியது இருக்கிறது, இல்லை என்றால் உங்களால் அதற்கான முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாது.

எங்களுக்கு மிகப்பெரிய கடன் இருந்தது. இது எப்படி வந்தது? யார் காரணம்? ஏன் இவ்வளவு காலம் எடுத்தது?

என்று நான் விளக்கினால் மிகப் பெரியதாக வரும் என்பதாலும் அதோடு எங்களின் தனிப்பட்ட விஷயங்கள் பலவற்றை பொதுவில் பகிர வேண்டிய சூழ்நிலை வருவதாலும், நான் அதை எழுதாமல் விடுகிறேன்.

உண்மையில் இதை தொடராகத்தான் எழுத நினைத்தேன் ஆனால், பல்வேறு தனிப்பட்ட சம்பவங்களையும் கூற வேண்டியது வந்ததால், பாதி எழுதி பின் நிறுத்தி விட்டேன். எவ்வளவு கடன் இருந்தது என்பதை கூற விரும்பவில்லை, கூறினாலும் பலர் நம்ப மாட்டார்கள்.

இந்தக்கடன் சமயத்தில் எங்கள் ஒட்டு மொத்தக் குடும்பமும் மிகச் சிரமப்பட்டது குறிப்பாக என் அம்மா ரொம்ப சிரமப்பட்டு விட்டார்கள். சிரமப்பட்டு விட்டார்கள் என்று கூறுவதை விட, என் அப்பாவின் சிரமத்தில் உறுதுணையாக இருந்தார்கள் என்று கூறுவது தான் சரி.

நான் சென்னையில் இருந்த போது பணத்திற்காக ரொம்ப சிரமப்பட்டேன் ஆனால், என் கதை வேண்டாம். ஒரு முறை கடனைக் கட்டவில்லை என்று எங்கள் வீட்டுக்கு, வங்கியில் இருந்து வந்து சத்தம் போட்டுச் சென்று இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் என் அப்பா இல்லை, அம்மா மட்டுமே இருந்தார்கள். இதனால் பல நாள் என்னுடைய அம்மா கண்கலங்கி இருக்கிறார்கள்.

எங்கள் கடன் காரணமாக, எனக்கு பெண் கொடுக்கக் கூட உறவினர்கள் பலர் மறுத்து விட்டார்கள், நான் ஒரு நல்ல பணியில் / சம்பளத்தில் இருந்தும். பெண் கொடுக்க நினைத்தவர்களையும், ஏதாவது காரணம் கூறி கலைத்து விடுவார்கள்.

இதைக் கூறி பல நாள் என்னிடமே அழுது இருக்கிறார்கள். இதை கேட்கும் போது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பது அனுபவித்தவர்களுக்கே புரியும். பணமே இங்கு அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட தருணம்.

இப்பவும் ஊருக்குச் சென்றால் எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலான திருமணமான பொண்ணுகளைப் பார்த்தால் “இந்தப்பெண்ணை உனக்கு பார்த்தோம்” என்று அம்மா / அக்கா கூறுவார்கள்.

நான் கூட கிண்டலாக அம்மாவிடம், “எனக்கு பார்க்காத பொண்ணே இல்ல போல இருக்கு” என்று கூறுவேன். எனக்கு பெண் கொடுக்க நினைத்தவர்களுக்கு ஜாதகம் பொருந்தி வராது. பொருந்தி வரும் ஜாதகம் உள்ளவர்கள் கடனைக் காரணம் காட்டி பெண் கொடுக்க மாட்டார்கள்.

நேரடியாகக் கூறாமல், ஜாதகம் பொருந்தவில்லை என்று கூறி விடுவார்கள்.

அந்த சமயத்தில், இவர்கள் தான் என்னுடைய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தார்கள் என்பதைக் கூற வேண்டும்.

இவர்கள் இப்படிக் கூறியதாலையே, நாம் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஒரு வெறி வந்து விட்டது.

என்னுடைய பதிமூன்றாவது வயதில், நான் என்னுடைய அப்பா கிட்ட கேட்டேன் “அப்பா! கடன் எப்ப முடியும்?” என்று, இரண்டு வருடத்தில் முடிந்து விடும்!! என்றார்கள்.

13 வயதில் நான் எப்படி இதைக்கேட்டேன் என்று, தற்போது யோசித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

நான், என் அப்பாவிடம் கேட்டுக்கொண்டு இருந்த கேள்வியை, என்னுடைய அம்மா, நான் வேலைக்கு வந்து கொஞ்ச வருடங்கள் கழித்து, ஓரளவிற்கு சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் என்னிடம் கேட்டார்கள்.

“தம்பி! (இப்பவும் என்னை தம்பி என்று தான் அழைப்பார்கள், கொங்குப் பகுதியில் இது சகஜம்) நம்ம கடன் எப்ப முடியும்? இன்னும் எவ்வளவு வருடம் ஆகும்?”. என்னிடமும் உறுதியான பதில் இல்லை.

நான் சென்னையில் இருக்கும் போதே நன்றாக சம்பாதித்தேன் ஆனால், முழுவதும் கடன் கட்டவும் வட்டி கட்டவுமே சரியாகப் போய் விடும். நான், என்னுடைய 20 வயதிலேயே வேலையில் சேர்ந்து விட்டேன்.

எனக்கு ஏனோ சிறு வயதில் இருந்தே அம்மா என்றால் ரொம்பப் பிரியம். என்னுடைய அம்மா நன்றாக இருக்கும் போதே கடனில்லாத வாழ்க்கை வாழ்ந்த நிறைவை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நான் சென்னையில் இருந்தால், எங்களுக்கு இருந்த கடனிற்கு, வட்டிக்கு, இந்திய அரசாங்கம் விதிக்கும் 30 % வரிக்கு நான், 20 வருடம் ஆனாலும், கடனையும் கட்ட முடியாது, எந்த ஒரு புதுச் செலவையும் செய்ய முடியாது என்று தெரிந்தது.

வெளிநாடு சென்றால் தான் முடியும் என்று முடிவு செய்தேன், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிங்கப்பூர் வந்தேன்.

இன்னுமொரு முக்கியக்காரணம், காலம் முழுக்க கடனைக் கட்டிக்கொண்டு, பஞ்சப்பாட்டுப் பாடி, சராசரி வாழ்க்கை வாழ்ந்து, ஒரு சராசரி நபராக சாக எனக்கு விருப்பம் இல்லை.

குறைந்தபட்சம், எதுவும் சாதிக்கவில்லை என்றாலும், மொக்கையான ரொட்டீன் வாழ்க்கை வாழும் நபராக தொடர்ந்து இருக்க எனக்கு விருப்பமில்லை.

நான் இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தேன் என்றால், அதற்கு இது தான் காரணம். ஒன்றை அடைய பொறுமையாகக் காத்திருப்பேன் ஆனால், அதற்காக வாழ்க்கை முழுதும் அல்ல. அப்படி காத்திருக்க நான் முட்டாளும் அல்ல.

என்னுடைய திருமணத்திற்குப் பிறகு தான் சிங்கப்பூர் வந்தேன். இங்கே வந்தும் நான் எந்த செலவும் பெரிதாகச் செய்யவில்லை, செய்ய முடியவில்லை, காரணம் கடன்.

எப்படியாவது கடனை முடித்து விட வேண்டும் என்பது மட்டுமே என் ஒரே சிந்தனையாக இருந்தது [அர்ஜுனன் கிளியைப் பார்த்த மாதிரி 🙂 ].

நண்பர்கள் கூட, பலமுறை வெளிநாடு செல்ல அழைத்து இருக்கிறார்கள், புன்னகையோடு மறுத்துவிடுவேன். இன்னும் கூட பலருக்கு, எனக்கு இருந்த பிரச்சனைகள் தெரியாது, வெகு சிலர் தவிர்த்து.

நான் எழுதும் போதும் கூட, இது பற்றி எங்கேயும் புலம்பி இருக்க மாட்டேன் காரணம், மற்றவர்கள் பாவமாகப் பார்ப்பதையோ, அறிவுரை!! என்கிற பெயரில் போதனை செய்வதையோ என்றும் விரும்பியதில்லை.

என்னுடைய மனைவி, எனக்கு கொடுத்த ஒத்துழைப்பை மறக்கவே முடியாது… கூடாது. இந்த ஐந்து வருடத்தில் எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று என்னை எதுவும் கேட்டதில்லை.

ஒருவேளை எனக்கு நகை வேண்டும், அங்கே போக வேண்டும், இங்கே போக வேண்டும் என்று பிரச்சனை செய்து இருந்தால், என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை.

சுருக்கமா, நம்ம பணத்தை!! எதற்கு உங்க அப்பா கடனிற்கு கொடுக்கிறீர்கள்? என்று கேட்டு சண்டை போட்டு இருந்தால்… என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை.

நீங்கள், சொன்னால் நம்ப மாட்டீர்கள், என் மனைவி எப்படியும் நான்கு வருடம் சிங்கப்பூரில் இருந்து இருப்பார். நான் ஒரு முறை கூட வேறு நாடு அழைத்துச் சென்றதில்லை, மலேசியா கூட. ஒரு முறை திட்டமிட்ட போது கர்ப்பம் ஆனதால் அதுவும் கேன்சல் ஆகி விட்டது.

இனிமேலாவது ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

இதில் என்னுடைய இரண்டாவது அக்காவின் பங்கு ரொம்ப முக்கியம். நான் சென்னையில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட போது, என் அக்கா மாதாமாதம் கொடுத்த 500 ரூபாயே என்னை தொடர்ந்து சென்னையில் இருக்க வைத்தது.

இன்னும் சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், இந்த 500 ருபாய் இல்லை என்றால், என்னால் சமாளிக்க முடியாமல் சென்னையில் இருந்து ஊருக்கே திரும்பி வந்து இருப்பேன்.

இதைப் படிக்கும் உங்களுக்கு நம்ப சிரமமாகத்தான் இருக்கும் ஆனால், இது உண்மை தான். மகனாக நான் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும், ஒரு மகனாக இருந்து என் அக்காவே செய்தார். தனக்கு திருமணம் ஆகியும், அப்பாவிற்கு பண உதவி செய்தார் / செய்கிறார்.

இதை அனுமதிக்கும் என் அக்கா கணவரை நான் என்ன கூறுவது? இது ஒரு சங்கலித் தொடர் போல. நான் கூறாத எத்தனையோ கணக்கில் அடங்கா உதவிகள் செய்து இருக்கிறார்.

சுருக்கமாக, எங்களுக்கு பணக்கஷ்டம் இருந்தாலும், குடும்பத்தில் அனைவரது ஆதரவும் / ஒத்துழைப்பும் இருந்தது.

எனக்கு கடன் முழுமையையும் கட்டும் முன்பு கடுங்கோபம் இருந்தது.

என் அம்மா (குறிப்பாக) அப்பாவை அவமானப்படுத்தியவர்களின் முன்னால் நிரூபித்துக்காட்ட வேண்டும், இப்ப என்ன சொல்றீங்க? என்று கேட்க வேண்டும் என்ற ஆத்திரம் இருந்தது.

ஆனால், கடனெல்லாம் முடித்த பிறகு கிடைத்த அனுபவத்தில் கோபம் எல்லாம் மறைந்து, அமைதியாகி விட்டேன்.

செயலில் காட்டிய பிறகு பேச என்ன உள்ளது? அதோடு யாருமே தன்னுடைய பெண்ணை நல்ல வசதியான இடத்தில் / கடன் பிரச்சனை எல்லாம் இல்லாத இடத்தில் தான் கட்டி வைக்க நினைப்பார்கள். எனவே, இதில் தவறாக நினைக்க எதுவுமில்லை.

அப்போது ரொம்பக் கோபம் இருந்தாலும், தற்போது கிடைத்த அனுபவத்தில் இவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

இவை அல்லாமல் எங்களை தவறாக எடை போட்டு பேசியவர்களைப் பற்றி நான் எதுவும் கண்டுகொள்வதில்லை / கொள்ளப்போவதில்லை.

உண்மையாகக் கூறினால் நாங்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை. எங்கள் வளர்ச்சியே போதும். அதுவே அவர்கள் தவறை உணர வைத்து விடும்.

கிரி! நீங்கள் எப்படி மெச்சூர்டாக எழுதுகிறீர்கள்? என்று கேட்பவர்களுக்கு, இது தான் பதில்.

நான் கடந்த வருடங்களில் வாங்கிய அடியின் அனுபவங்களே  என்னுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.

உண்மையில் அனைவரும் கூறுவது போல, அனுபவம் தான் ஒருவரை பக்குவப்படுத்துகிறது / முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது.

ஒரு சிலர் தங்கள் தவறுகளில் கிடைத்த அனுபவங்களில் தங்கள் தவறை திருத்திக் கொள்கிறார்கள். ஒரு சிலர் அடுத்தவர் மீது பழியைப் போட்டு, தங்கள் தவறை நியாயப்படுத்தி எந்த வளர்ச்சியும் இல்லாமல், அதே நிலையில் காலம் முழுக்க புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.

இதில் நான் முதல் வகை. நீங்கள் எந்த வகை?

என்னுடைய முன்னேற்றத்திற்கு, முழுக்க முழுக்க என்னோட உழைப்பு, நேர்மை, திட்டமிடல் மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இவையும் ஒரு காரணம்.

என்னுடைய அப்பா என்று நினைக்கிறீர்களா? அதுவுமில்லை. என்னுடைய அப்பா எனக்கு அறிவுரை வழங்கி, எனக்கு வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைக் கற்றுக்கொடுத்தவர். இவர் எனக்கு சொல்லிக்கொடுத்த அனுபவங்கள் ஏராளம் / கணக்கிலடங்காதவை.

இந்த வகையில் நான் மாபெரும் அதிர்ஷ்டசாலி. அவர் எனக்கு சொல்லிக் கொடுத்ததைத் தான், நீங்கள் என்னுடைய எழுத்துக்களில் பார்க்கிறீர்கள். அவர் என்னை சென்னையில் விட்டதோடு சரி.

பின்னர், என்ன தாங்க விஷயம்?…

அது என்னுடைய நண்பர்கள். என்னுடைய முதல் வேலையை வாங்கிக் கொடுத்ததே ஒரு நண்பர் தான். அதன் பிறகு இருந்தது ஒரு நண்பரின் நிறுவனத்தில், அதன் பிறகு சேர்ந்த ஒரு MNC ல், என்னுடைய நண்பனின் பங்கு உள்ளது.

இங்கே நான் சேரவில்லை என்றால் என் வாழ்க்கை வேறு மாதிரி சென்று இருக்கலாம். இங்கே இருந்து சிங்கப்பூர் வந்ததும், ஒரு நண்பன் தனக்கு வந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தது.

நான் வேலையில் இருந்த போது, நண்பர்கள் செய்த உதவிகள் எத்தனை! இவர்கள் அனைவருமே என்னுடைய சென்னை அறை / அலுவலக நண்பர்கள்.

நண்பர்கள் இல்லை என்றால் நான் இல்லை. இவர்களைப் பற்றி நான் எழுதினால் ஒரு புத்தகம் போட்டால் கூட முடியாது, அத்தனை உதவிகள்.

17 வருடம் கழித்தும் அதே நட்பு தொடருகிறது. சமீபத்தில் கூட, நான் வீடு கட்டப்போகிறேன் என்று, நான் கேட்காமலே ஒரு நண்பன் ஐந்து லட்சம் கொடுத்தான்.

என்னால் வாழ்க்கையில் பணத்தை சேமிக்க முடியாமல் போய் இருக்கலாம் ஆனால், அதை விட மதிப்புள்ள பல நண்பர்களை சேர்த்து வைத்து இருக்கிறேன்.

இதை என் நண்பர்கள் படித்தால், “டேய் டேய்! போதுண்டா ரொம்ப வாசிக்காதே!” என்று அவர்கள் செய்த உதவியை ஒன்றுமில்லாததாகவே காட்டிக்கொள்வார்கள்.

நான் கடந்த 10 வருடத்தில் எவ்வளவோ லட்சங்கள் சம்பாதித்து விட்டேன் ஆனால், என்னால், என்னோட அம்மாவிற்கு சந்தோசமாக 50,000 கொடுக்க முடியவில்லை.

அம்மாவிற்கு கொடுப்பதை விடக் கடனை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் (இதில் வீடு கட்ட வாங்கிய இடப் பணமும் அடக்கம்).

பணம் கொடுத்து இருக்கிறேன், அதெல்லாம் வழக்கமான குடும்பச் செலவிற்கு. இதனால் அவருக்கு பணத்தை கொடுத்து, விருப்பம் போல ஒருமுறை கூட செலவு செய்ய வைக்க முடியவில்லையே என்ற குறை இருந்தது.

தற்போது தான் எங்கள் கடன் அனைத்தையும் முடித்தேன் / முடித்தோம். குடும்பத்தில் அனைவரின் நீண்ட காத்திருப்பு முடிவிற்கு வந்தது. கையில் சுத்தமாக சேமிப்பு இல்லை ஆனால், கடனில்லை எனும் நிம்மதி, தற்போது அதை விட பெரியது எங்களுக்கு.

கடன் கட்டியதில், என் அப்பா, அக்கா பங்கு அதிகம் இருக்கிறது. நான் பணத்தில் அதிக உதவி செய்தாலும், நெருக்கடியான நேரத்தில், என் அக்கா பணம் ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறார்கள், அதோடு ஒப்பிடும் போது நான் ஒன்றுமே இல்லை.

“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது”. [விளக்கம் : உற்ற காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகை விட மிகப் பெரிதாகும்.]

கடன் முடிந்து விட்டது என்று கூறினால், அம்மாவிற்கு நிச்சயம் ஒரு நிம்மதி இருக்கும் ஆனால், திருப்தி இருக்குமா! என்று கூற முடியாது.

ஏனென்றால், நேரடியாக இந்தக் கடன் எப்படிக் கட்டப்பட்டது, எப்படி படிப்படியாக குறைக்கப்பட்டது என்ற முழு விவரமும் தெரியாது.

அவரைப்பொறுத்தவரை அப்பா, அக்கா, நான் எதோ செய்து கொண்டு இருக்கிறோம், கடனைக் கட்டி விடுவார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே.

எதோ பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள், திட்டமிடுகிறார்கள் என்று தலையிடாமல் ஒதுங்கி விடுவார், சராசரி அம்மாவாக.

இப்படி உள்ளவருக்கு கடன் கட்டியாகி விட்டது என்பதைக் கூறியதோடு, அதை அதிரடியாக உணர வைத்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

கொஞ்ச வருடங்கள் முன்பு, ஒரு திடீர் யோசனை வந்தது. நம்ம கடனை கட்டிய பிறகு அம்மாவை ஒரு நாளில் ஒரு லட்சம் செலவு செய்ய வைத்தால் எப்படி இருக்கும்! என்று.

இது பற்றி நான் யாரிடமும் கூறவில்லை.

இந்த முறை ஊருக்கு சென்ற போது (கடன் முடிந்து விட்டது என்று முன்பே கூறி விட்டேன்).

ஒரு நாள் மாலை “அம்மா! நாளைக்கு உங்களை வெளியே அழைத்துச் செல்கிறேன், உங்க கையில் ஒரு லட்சம் கொடுத்து விடுவேன் நீங்கள் அதை முழுவதையும் ஒரே நாளில் செலவு செய்ய வேண்டும்” என்று கூறினேன்.

என்னுடைய அம்மா அதிர்ச்சியாகி விட்டார்கள், அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த அதிர்ச்சியை என்னால் ரசிக்க முடிந்தது. கார் ஏற்பாடு செய்து இருந்தேன், அவர்கள் எங்கே போகச் சொல்கிறார்களோ அங்கே செல்லும்.

இதில் ஒரு நிபந்தனை, எனக்கு 1,000 கண்டிப்பாகத் தர வேண்டும் என்பது. மீதி 99,000 எப்படி வேண்டும் என்றாலும் செலவு செய்யலாம். யாருக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம் ஆனால், சேமித்து வைக்கக் கூடாது, அனைத்தையும் செலவு செய்ய வேண்டும்.

மொத்தப் பணத்தையும் ஒருத்தருக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம், ஏதாவது பொருள் வேண்டும் என்றாலும் வாங்கலாம் ஆனால், என் அம்மாவே (பணத்தை சேமிப்பாக) வைத்துக்கொள்ளக்கூடாது. எனக்கே கொஞ்சம் த்ரில்லாக தான் இருந்தது.

அருணாச்சலம் படத்துல அப்பா, மகன் ரஜினியை ஒரு அறையில் விட்டு, ஒரு இரவு முழுக்க சுருட்டு பிடிக்க வைத்த மாதிரி, என் அம்மாவை நான் ஒரு நாள்ல ஒரு லட்சம் செலவு செய்ய வைத்து விட்டேன் 🙂 .

நான் உண்மையில் காலையில் கூறி அப்பவே அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

என்ன தான் இருந்தாலும் அவர் வயதானவர் [70], [வயதானவர் என்று கூறினால் என் அம்மா டென்ஷன் ஆகி விடுவார்கள் 🙂 ], கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்பதால் தான், முந்தின நாள் மாலை கூறினேன்.

ஒரு இரவில் யாருக்கு கொடுக்கலாம் / என்ன செய்யலாம் என்று யோசிக்க நேரம் இருக்கும். தூங்கினார்களா என்று தெரியவில்லை! நான் நன்றாகத் தூங்கி விட்டேன்.

இந்த ஒரு லட்சம் என்பது உங்களில் பலருக்கு வெறும் பணமாகத் தெரியலாம், தேவையற்ற செலவாகத் தோன்றலாம்.

எனக்கு இது, என்னுடைய அம்மாவின் 30 வருட காத்திருப்பின் முடிவு / திருப்தி, என்னுடைய 14 வருட காத்திருப்பின் வெளிப்பாடு, எங்கள் குடும்பத்தின் அனைவரின் அனுசரிப்பு, பல வருட இழப்புகள் என்று பல்வேறு விஷயங்கள் அடங்கி இருக்கிறது.

இந்த ஒரு லட்சத்தைக் கொடுக்க எனக்கு 14 வருடம் ஆகி இருக்கிறது. படிக்கக் கொஞ்சம் சென்ட்டியாக, பாலாஜி சக்திவேல் படம் போலத் தான் இருக்கும் [ஆனால், க்ளைமாக்ஸ் அப்படி இருக்காது 🙂 ] ஆனால், இவை உண்மை தான்.

உண்மையில் நான் கூற நினைத்த விஷயங்கள் அதிகம் ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக முழுவதையும் கூற முடியவில்லை. நான் கூறியது வெறும் 10 % மட்டுமே. முன்பே கூறியபடி, இதை நான் தொடராகத் தான் எழுத நினைத்து இருந்தேன்.

கடைசியாக [எப்போதும்] கூற விரும்புவது “நாம் இருக்கும் நிலைக்கு நாம் மட்டுமே காரணம், வேறு யாரும் அல்ல” [சில விதிவிலக்குகளுடன்].

அதெல்லாம் சரி கிரி! நீங்க சென்னையில் இருந்த போது எப்படி கஷ்டப்பட்டீங்க? என்று, ஒன்றுமே சொல்லவே இல்லையே! என்று கேட்கறீங்களா 🙂 .

நான் சொல்லலாம் என்று தாங்க இருந்தேன் ஆனால், நம்ம கவுண்டர், என் வாயை மூடிட்டு இருக்க சொல்லிட்டாரு… புரியலையா… அவர் என்ன சொல்றாருன்னு நீங்களே படிங்க. [நன்றி விகடன்]

“பதினாறு வயதினிலே’ படத்தில் கண்ணெல்லாம் சுருங்கிப்போய், கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு! அதாவது, வறுமை..?!”

(சட்டென்று இடைமறித்து) “அதெல்லாம் சும்மா! வறுமையாவது ஒண்ணாவது..! சினிமாவுக்கு முன்னாடிதான் நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே… வேளாவேளைக்குச் சோறு; அதிகம் இல்லாட்டியும் பொழுதைத் தள்றதுக்குக் காசு கிடைச்சுக்கிட்டுதான் இருந்தது!

வளர்ந்து பெரிய ஆளான பிறகு, ‘ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடிதான் பிடிச்சேன்’னு சொல்றது, இப்ப ஒரு ஃபாஷனாப் போச்சு! அதெல்லாம் நான் சொல்லமாட்டேன்!”

இதுக்கு அப்புறமும் நான் சொன்னேனு வைங்க… “ஏன்டா கோமுட்டித் தலையா! எத்தனை பேருடா இந்த மாதிரி கிளம்பி இருக்கீங்க. மக்களே! இந்த மாதிரி தான், ஊருக்கு நாலு பேரு சொல்லிட்டு திரியறானுக!

ஊர்ல இவனுகதான் கஷ்டப்பட்டானுகளா, மற்றவனுக எல்லாம் என்ன கஷ்டப்படாமையே வந்துட்டானுகளா? அடேய்! இனி எவனாவது இது மாதிரி சொல்லிட்டு திரியறதப் பார்த்தேன்… மவனே! சுடு பொட்டி வச்சு தேச்சு விட்டுடுவேன்… ஓடிப்போய்டு… படுவா!” னு திட்டிடுவாரு 🙂 🙂 .

கொசுறு 1

இது நாள் வரை பல விசயங்களில் என்னால் சுதந்திரமாக செயல்பட / முடிவெடுக்க முடியவில்லை. “கமிட்மென்ட்” என்ற ஒரு வார்த்தையில், என்னுடைய அனைத்துச் செயல்களும் என்னுடைய விருப்பமில்லாமல், என்னால் இதுவரை தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஒரு வார்த்தையால், எந்த முடிவும் தைரியமாக எடுக்க முடியாமல், யோசித்து யோசித்து மூளையே ஒரு மாதிரி ஆகி விட்டது.

எங்கே போவது என்றாலும், புதிய வேலை தேடுவது என்றாலும், எதைச் செய்வது / வாங்குவது என்றாலும், இந்த “கமிட்மென்ட்”, ஹட்ச் நாய்க்குட்டி மாதிரி கூடவே வந்து கொண்டு இருந்தது.

தற்போது இல்லை, பின்னாளில் வரலாம். இந்த அளவிற்கு மோசமாக இருக்காது!! (இருக்கக்கூடாது) என்று நினைக்கிறேன். எனவே, எனக்கு இது “கிரி அப்க்ரேடட் வெர்ஷன் 2.0” 🙂 . இதன் பிறகு நான் மோசமானவனாக மாறிவிடாமல் இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

கொசுறு 2

நமக்கு முன்னாடி ஆயிரம் பேர் ஓடிட்டு இருக்காங்க. நாம் கொஞ்சம் அசந்தாலும், நமக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் தான் கையில் இருக்கும். இந்தப்போட்டி மிகுந்த உலகத்தில் நம்மை நிலை நிறுத்திக்கொள்வது ரொம்ப அவசியமாகிறது.

எனவே, அதற்கான முயற்சிகளில் நேரம் செலவழிக்கவும் மற்றும் என் தனிப்பட்ட விருப்பங்களுக்காகவும் எழுதுவதை கொஞ்ச மாதங்களுக்குக் குறைக்கப்போகிறேன்.

எழுதுவதை நிறுத்த மாட்டேன், அது நானே நினைத்தாலும் முடியாது (என்னுடைய Blog ஃபேஸ்புக் பேஜ் மற்றும் கூகுள் + ல் ஏக்டிவா இருப்பேன்).

இதுவரை பொறுமையாகப் [நிஜமாகவே] படித்த!! உள்ளங்களுக்கு நன்றி DOT

{ 28 comments… add one }
 • Santhosh August 30, 2012, 10:00 AM

  என்ன சொல்றதுன்னு தெரியல கிரி. நீங்க எழுதுறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. உங்களோட செயல்கள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கு. அப்டி ஒன்னும் பெரிய பதிவா இல்ல. இல்லேன்னா சுவாரசியத்துல பெருசு தெரியலையா என்று தெரியல. Always your no 1 fan. Thanks!

 • முருகன் August 30, 2012, 10:37 AM

  மனதைத் தொடும் பதிவு. அழகான எழுத்து நடை. ஒவ்வொரு எழுத்திலும் உங்களது தன்னம்பிக்கை வெளிப்படுகிறது. நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். வலைப்பதிவுகளில் உருப்படியாக எழுதி வரும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர் என்றே கணிக்கிறேன். வாழ்க வளமுடன்.

  -முருகன்

 • Mythili August 30, 2012, 10:39 AM

  Romba kastapatuteenga. Iniyavadhu santhosama valkaia anubavuchu valungal. Valthukkal. Kastathula unga kuda irundhavangalukku en “NANDRIGAL”

 • வாழ்ந்து காட்டுதலை விட பழிவாங்குதல் வேறெதும் இல்லை என்பது எனக்கு எப்போதும் பிடித்த பழமொழி,

  மற்றொன்று தீதும் நன்றும் பிறர் தர வாரா,

  அப்புறம் கடன் என்பதும் ஒரு வகையில் நமது வாழ்க்கையில் ஊட்டச்சத்து தான். மாதம் ஆனால் இத்தனை பேருக்கு கடன் கட்டியே ஆக வேண்டும் என்னும் போது நமது உடலும் மனமும் சோம்பல் இல்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கும். கடன் இல்லாத போது கொஞ்சம் சோம்பேறித்தனமும் வந்து விடுவதை பல முறை உணர்ந்துள்ளேன்.

 • சரவணகுமரன் August 30, 2012, 11:33 AM

  சூப்பருங்க கிரி…. புல்லரிக்க வைச்சுட்டீங்க!!! 🙂

 • Rajan August 30, 2012, 11:57 AM

  எப்பவுமே நான் உங்க எழுத்துக்கு ரசிகன்தான் என்பதை இந்த பதிவும் உறுதி செய்து விட்டது. நீண்ட வருடங்களுக்கு பிறகு உங்களை நேரில் பார்த்த மகிழ்வைத் தந்தது உங்களின் நிழற்படம்..

 • arunprasangi August 30, 2012, 12:01 PM

  வணக்கம்..

  அனுபவ பூர்வமான எழுத்துக்களை படித்த நிறைவு

  கிரி கிரி தான்.. கிரியால எதையும் சமாளிக்க முடியும் என்று தான் கடவுள் இப்படி ஆடு புலி ஆட்டம் அமைச்சு இருந்தாரோ?

  G for Gr8′ alias Giri :))

 • Tamil August 30, 2012, 12:21 PM

  Good one Grii……..

 • ரவிச்சந்திரன் August 30, 2012, 1:04 PM

  சூப்பர்… தன்னம்பிக்கை பதிவு. வாழ்த்துகள் கிரி!!! வாழ்க வளமுடன் !!!

 • எப்பூடி.... August 30, 2012, 1:10 PM

  //கையில் சுத்தமாக சேமிப்பு இல்லை ஆனால், கடனில்லை எனும் நிம்மதி, தற்போது அதை விட பெரியது எங்களுக்கு.//

  இப்படி ஒருநாளைத்தான் நானும் 20 வருடமாக எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன்!!! வட்டி கட்டின பணத்தை மட்டும் நான் நினைவில் வைப்பதில்லை; இரத்தத்தை வட்டி உறிஞ்சுவதை பார்த்துக்கொண்டிருப்பது மிக கொடுமை!!! ஆனாலும் தாங்கள் சொன்னதுபோல இந்த நிலைக்கு நாம் தான் காரணம்!!!

  தாங்கள் கடனில் இருந்து மீண்டதை சொல்வதை கேட்க்கும்போது ஏனோ தெரியவில்லை, நானே மீண்டதுபோல ஒரு உணர்வு 🙂 வாழ்த்துக்கள், இனிமேல் கலக்குங்கள்!!! 🙂

 • ANaND August 30, 2012, 2:22 PM

  புதிய வாழ்க்கைக்கு எனது வாழ்துகள் அண்ணா

 • Priyamudanprabu August 30, 2012, 2:59 PM

  🙂

  Nothing to say..:)

 • ராஜ நடராஜன் August 30, 2012, 3:55 PM

  கிரி!நலமாக இருக்கிறீர்களா?

  உண்மையில் பொறுமையாக படித்தேன்.

 • Saran August 30, 2012, 4:25 PM

  நிரந்தர வேலையில் இருந்து கொண்டு எப்படி வேலை செய்தாலும் அல்லது மேலதிகாரிக்கு முதுகு சொறிஞ்சு விட்டாலும் போதும். (பெரும்பாலும் கவர்மெண்ட் வேலையில்தான் அப்படி) ஆயுசுக்கும் சம்பளம் வரும். ஓய்வு பெற்ற பிறகு கூட பென்ஷன் வரும். 90 சதவீதம் அப்படிப்பட்ட ஆட்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது. எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனார் கதைதான். அதே போல் கடன் என்பது வண்டியோட்டியின் கையில் இருக்கும் சாட்டையைப் போல. கடன் இருக்கிறது என்று புதைந்து போகும் நபர்கள் பல பேர். விதையாய் மண்ணைப்பிளந்து ஆலமரமாய் நிற்பது வெகு சிலருக்கே சாத்தியம். எனக்கும் ஒரு புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது இந்த பதிவு. வாழ்த்துக்கள் நண்பா.

 • Mohamed Yasin August 30, 2012, 5:16 PM

  நான் என் வாழ்கையில் ரொம்ப விரும்பி படித்த ஒரு புத்தகம் நடிகர் பிரகாஷ் ராஜ்ன் சொல்லாததும் உண்மையே புத்தகம்.. அதற்கு அடுத்து இந்த பதிவு. பொதுவாக மனிதர்களை பொறுத்த வரை அடுத்தவர்களின் அந்தரங்ககளை தெரிந்து கொள்வதில் ஒரு அலாதி இன்பம், என்னையும் சேர்த்து.. அது போல அவர்களின் சோகங்கள், சந்தோசங்கள், வெற்றிகள், தோல்விகள், அவமானங்கள் எல்லாமே.. மற்றவர்களுக்கு ஒரு பாடம் தான்…. நீங்கள் அன்று சுமந்த வலிகள் தான் என்று உங்களை பக்குவபட வைத்துள்ளது… யாரும் யாருக்கும் எதிரி இல்லை.. அன்று உங்களை அவமான படுத்தியவர்கள் தான் உங்களை இன்று வெற்றி பெற துண்டியவர்கள்.. உங்களின் முதல் நன்றி அவர்களுகே …மறப்போம் மன்னிப்போம் கிரி.. நேரம் இருப்பின் சொல்லாததும் உண்மையே புத்தகம் படிக்க முயற்சி செய்யலாமே….

 • ராமலக்ஷ்மி August 30, 2012, 7:26 PM

  உள்ள உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. நம்பிக்கையை, உத்வேகத்தை மற்றவருக்கு அளித்திருப்பதையும் காண முடிகிறது.

  /அனுபவம் தான் ஒருவரை பக்குவப்படுத்துகிறது / முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது/

  நிச்சயமாக. நிறைய சாதிக்க வாழ்த்துகள்!

 • உங்களின் தன்னம்பிக்கையுடன் இருந்த மன உறுதி தெரிகிறது… வாழ்த்துக்கள்… இனி எல்லாம் சுகமே…

  மிக்க நன்றி…

 • arun August 30, 2012, 11:13 PM

  என்ன தல ரொம்ப செண்டிமெண்ட் பதிவா போட்டுடீங்க.. ரொம்ப சந்தோசமா இருக்கு எந்த கடனும் இப்ப இல்லைன்னு சொன்னதும்…

  உங்க லைப் மாதிரியே தான் என் வாழ்கையும் தல…. ஒரே வித்தியாசம் நான் இன்னும் கடன முடிக்கல அவ்வளவு தான் :).. முடிச்சுட்ட அப்புறம் என்ன பண்ணலாம் அப்பா, அம்மா கு அப்படின்னு கொஞ்சும் ஐடியா கிடைக்குது இந்த பதிவுல…

  கௌண்டர் டயலாக் கரெக்டா சேர்த்து இருக்கீங்க… நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் இருப்பீங்க … பதிவு எழுதுறத குறைச்சுடாதீங்க என் கவலை எனக்கு :).. ஊருல இருந்து இங்க வந்து சம்பாதிக்க கஷ்ட படுற என்ன மாதிரி ஆளுக்கு உங்க பதிவு தான் வீட்டுல இருக்குற ஒரு எண்ணங்கள் கொடுக்குது அதனால ரொம்ப குறைச்சுடாதீங்க. நீங்க எவ்வளவு நல்லது செய்யுறீங்க அப்படின்னு வார்த்தை ல சொல்ல முடியாது தல

  ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.. ஓகே ஒகே மேட்டர் கு வருவோம் எந்த வெளிநாடு trip பிளான் பண்ணி இருக்கீங்க… இனிமேலும் ஏதாவது சொல்லி தப்ப முடியாது ராசா:)

  – அருண்

 • Srikanth August 31, 2012, 6:36 AM

  நண்பா கிரி
  நம் மனதில் உள்ள பாரத்தையெல்லாம் ஆண்டவன் முன் கொட்டி விடுவது நம் முன்னோர்களிடம் இருந்த ஒரு நல்ல பழக்கம்…..பின்பு மேற்கத்திய நாடுகளின் பிடியில் சிக்கிய நம் பாரத நாடு கலாசார சீரழிவிருக்கு உட்படுத்தப்பட்டது எல்லோரும் அறியாதது ……அப்படி இருந்த சூழ்நிலையில் பிளாக்கர் தோன்றி நம் மனதில் தோன்றிய எண்ணங்களையெல்லாம் எழுதும் சுதந்திரம் மீண்டும் கிடைக்கபெற்றது ஒரு வரப்ரசாதமே ! மனதில் ஏகப்பட்ட பாரங்களை சுமந்த போதே உங்கள் எழுது பலரை மகிழ செய்தது !!! இந்த சூழ்நிலையில் நீங்கள் எழுதுவதை குறைத்து கொள்வது என்பது சரியாக என் மனதில் படவில்லை நண்பரே ……..சிந்திக்கவும் …..செயல்படவும்……நாங்கள் உங்கள் பதிவை படிக்க தினமும் login செய்கிறோம் என்பதை ஞாபகத்தில் வைக்கவும்

 • Logan August 31, 2012, 10:59 PM

  வாழ்த்துக்கள் கிரி. அருமையான பதிவு

  //பணமே இங்கு அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட தருணம்// :))

 • r.v.saravanan September 1, 2012, 8:16 AM

  கிரி கண்டிப்பா நான் நினைக்கலை நீங்கள் இவ்வளவு கஷ்டத்தில் இருந்திருகிறீர்கள் என்பதை ஏனெனில் சிரிப்பான பேச்சும் எழுத்தில் ஹாஸ்யமும் அதை எப்போதுமே வெளி கொணர்ந்ததில்லை

  தன்னம்பிக்கையுடன் போராடி ஜெயிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள் கிர்

  நானும் என் குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவர படாத பாடு பட்டிருக்கிறேன் என் செய்வது வாழ்க்கையில் அதுவும் ஓர் அங்கம் தான் போலிருக்கு

 • Naga September 3, 2012, 9:16 AM

  கிரி
  நான் உங்கள் பதிவுகளை விரும்பி படித்தேன். தலைவர் பட வசனம் போல நல்லவர்களை கடவுள் சோதிப்பார், கை விட மாட்டார் என்பதற்கு உங்கள் வாழ்க்கை நல்ல உதாரணம். எனது மனம் கனிந்த வாழ்த்துக்களுடன், உங்கள் பதிவுகளை எதிர்பார்த்தும், என்றாவது ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்
  நாகா

 • Kamesh September 4, 2012, 5:46 PM

  நண்பர்கள் கூட, பலமுறை வெளிநாடு செல்ல அழைத்து இருக்கிறார்கள், புன்னகையோடு மறுத்துவிடுவேன். இன்னும் கூட பலருக்கு, எனக்கு இருந்த பிரச்சனைகள் தெரியாது, வெகு சிலர் தவிர்த்து. நான் எழுதும் போதும் கூட, இது பற்றி எங்கேயும் புலம்பி இருக்க மாட்டேன் காரணம், மற்றவர்கள் பாவமாகப் பார்ப்பதையோ, அறிவுரை!! என்கிற பெயரில் போதனை செய்வதையோ என்றும் விரும்பியதில்லை

  Same feeling giri… Not that I have gone through this.. thing is “its only advice that comes free of cost”.
  And as far as I am concerned I will preach what I follow …
  Glad Nanba that you are out off your tight corners.. I hope we will meet one day and there are lot of things to discuss.

  Kamesh

  Kamesh

 • Murugan September 4, 2012, 10:53 PM

  முதலில் வாழ்த்துக்கள் நண்பர் கிரி அவர்களுக்கு.
  மிகவும் நிகழ வைத்துவிட்டது.
  தலைவர் பட வசனம் போல நல்லவர்களை கடவுள் சோதிப்பார், கை விட மாட்டார் என்பதற்கு உங்கள் வாழ்க்கை நல்ல உதாரணம்.

 • Gowrishankar.P September 7, 2012, 6:40 PM

  //இவை அல்லாமல் எங்களை தவறாக எடை போட்டு பேசியவர்களைப் பற்றி நான் எதுவும் கண்டுகொள்வதில்லை / கொள்ளப்போவதில்லை. உண்மையாகக் கூறினால் நாங்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை//
  அனுபவம் கற்று கொடுக்கும் பாடம் இது.
  எனக்கும் கடன் அனுபவம் இருக்கு என்றாலும், உங்க அளவுக்கு இல்லன்னுதான் சொல்லணும். (நான் நினைக்குறேன் பெங்களூர், சென்னை, பாரின்ல இருக்குற நன்ப எல்லா பசங்கலுக்கும் கடன் பிரச்னை இருந்திருக்கும் / இருக்கும்னு). anyway congratulation for coming out of it.
  இதுல உங்க மனைவியதான் ரொம்ப பாராட்டனும்.

  அதெல்லாம் ஓகே, உங்க அம்மா எப்படி ஒரு லச்சத செலவு பன்னுனங்கேனு சொல்லவே இல்லையே 🙂

 • vanitha September 12, 2012, 12:09 AM

  அண்ணா நலமா

  நான் உங்களது blog ய் படித்து பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். எனது ஊரும் கோபி தான். நான் உங்களது blog ய் ஆனந்த விகடன் மூலம் அறிந்தேன்.

  நானும் உங்களை போல ஆனால் வேறு விதமாக எனது அம்மா அப்பா ய் மகிழ்விக்க யோசித்து உள்ளேன்….
  உங்களது blog படித்ததும் எனது யோசனை நியபகத்திட்கு வந்தது…

  நன்றி….

 • rajesh v September 19, 2012, 9:52 PM

  இந்த விஷயத்த ஒரு தொடராக எழுதுங்க கிரி. ரொம்ப நல்லா இருந்துச்சு. 🙂

 • kolanginathan January 3, 2013, 10:42 PM

  Ithai padikiravangaluku thannambikkai thannala varum……

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz