கடனட்டை பற்றிய செய்தி என்றால் அது பெரும்பாலும் மோசடி, விரயம், ஆபத்து, ஏமாற்றல் என்று எதிர்மறையான செய்திகளே நம் கண்களுக்குத் தெரிகிறது, அது உண்மையும் கூட. எளிதாக கிடைக்கிறது என்றால் அதில் வில்லங்கம் இல்லாமலா இருக்கும். சும்மா கொடுக்க வங்கிகள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்லவே! கடனட்டையால் ஏற்படும் சிரமங்களைப் பற்றி, அதில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். நான் புதிதாகக் கூற எதுவுமில்லை.
இந்தக் கட்டுரையில், கடனட்டையால் என்னென்ன பயன் என்பதைப் பார்ப்போம், அதோடு நாம் எப்படி இதை வைத்து லாபம் அடையலாம் என்று கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, செலவுகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் / கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால், இந்தக் கடனட்டையால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, லாபம் மட்டுமே என்று உறுதியாகக் கூறுவேன்.
முதலில் எந்த வங்கியில் கடனட்டை வாங்குவது என்பதை, நம் நண்பர்களின் அனுபவத்தில் வைத்து அவர்களிடம் ஆலோசனைகள் கேட்கலாம். எந்த வங்கி பிரச்சனையில்லாமல் இருக்கிறது, எது சிறப்பான வாடிக்கையாளர் சேவை தருகிறது என்பதை விசாரிக்க வேண்டும்.
ஒருவருக்கு பிரச்சனையில்லாமல் இருக்கும் வங்கி, இன்னொருவருக்கு மோசமான அனுபவத்தை தந்து இருக்கலாம். எனவே, நீங்கள் தீர விசாரித்து, வங்கியைத் தேர்வு செய்யலாம். நான் HDFC வங்கியின் கடனட்டையை, கடந்த 8 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். இது வரை எனக்கு எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை.
ஒருமுறை சென்னை முகவரியில் இருந்து, எங்கள் ஊர் கோபி முகவரிக்கு மாற்றும் போது, கோபியில் கிளை இல்லை (தற்போது உள்ளது) அதனால், அங்கே மாற்ற முடியாது என்று கூறியதோடு, உடனடியாக முகவரி உறுதிச் சான்றிதலை கொடுக்கவில்லை என்றால், என் கடனட்டையை ரத்து செய்து விடுவதாகக் கூறினார்கள் (இந்த சமயத்தில் நான் சென்னையில் இல்லை, சிங்கப்பூர் வந்து விட்டேன்). செம்ம கடுப்பாகி விட்டேன்.
நான் இவர்களை நம்பி இல்லை, HDFC இல்லைனா இன்னொரு வங்கி. இவர்கள் தான் என்னைப் போன்றவர்களை நம்பி இருக்கிறார்கள் என்பதால், நான் அது வரை செய்த கடனட்டை பரிவர்த்தனைகளைக் கூறி, உங்கள் கடனட்டையின் மூலம் இவ்வளவு பரிவர்த்தனை செய்து இருக்கிறேன். இது வரை நான் எந்தப் பிரச்சனையும் செய்தது இல்லை. என்னை நீக்கினால் உங்களுக்கு தான் நஷ்டம், எனக்கு அல்ல. ஒரு நீண்ட நாள் வாடிக்கையாளரை இப்படித்தான் பொறுப்பில்லாமல் நடத்துவீர்களா! என்று போட்டு காய்ச்சியவுடன் வேறு வழியின் மூலம் யோசனை கூறி, அதன் படி நடந்தால் மாற்றித்தருவதாகக் கூறினார்கள்.
இது போல எந்த ஒரு வாய்ப்பும் வழங்காமல், நீங்கள் எப்படி எடுத்த உடனே, கணக்கை முடக்குவதாகக் கூறலாம்? நான் கடனட்டை மட்டுமல்ல, உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கும் வைத்துள்ளேன் என்று கூறியதும், பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தொடர அனுமதித்தார்கள். இது மட்டுமே எனக்கு நடந்த சிறு பிரச்சனை, மற்றபடி இது வரை சிறப்பான சேவையை வழங்கி வருகிறார்கள். நிஜமாகவே ஒரு பிரச்சனை கூட (எனக்கு) இல்லை.
கடனட்டை வாங்கும் போது, முதல் இரண்டு அல்லது மூன்று வருடம் வருடாந்திரக் கட்டணம் இல்லை என்று கூறுவார்கள். ஒரு சிலர் வாழ்நாள் முழுக்க கட்டணமில்லை என்று கூறுவார்கள். நாம் அவர்களிடம் டிமாண்ட் செய்யலாம், “நீங்கள் வாழ்நாள் முழுக்க கட்டணம் இல்லாமல் கொடுத்தால், பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறலாம். அதே போல அவர்கள் கொடுக்கும் போது ” * ” எங்கும் வைத்துள்ளார்களா / வேறு எதுவும் மறைமுகமாக கூறி உள்ளார்களா என்பதை நன்கு சோதித்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு இரண்டு வருடம் இலவசமாக கொடுத்து இருக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். நீங்கள், உங்கள் கடனட்டையை சிறப்பாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்கு பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்றால், இரண்டு வருடம் கழித்து அவர்கள் கட்டணம் போட்டால், நீங்கள் “இந்தக் கட்டணத்தை எடுத்தால் நான் தொடர்கிறேன், இல்லை என்றால் கடனட்டையை ரத்து செய்கிறேன்” என்று கூறினால், உங்களுக்கு பெரும்பாலும் 90 % கட்டணம் விதிக்காமல் தொடர அனுமதிப்பார்கள்.
என்னுடைய கடனட்டை / ATM அட்டை இரண்டின் கடவுச்சொல்லும் ஒன்றையே வைத்து இருந்தேன் (தற்போது மாற்றி விட்டேன்). சென்னையில் இருந்த போது ஒருமுறை, இரண்டிற்கும் ஒரே கடவுச்சொல் என்பதால் ATM ல், கடனட்டையை வைத்து, மறந்து பணம் எடுத்து விட்டேன். பின்னர் தான் தவறு உரைத்தது, உடனே பணத்தை அதில் டெபாசிட் செய்து விட்டேன் ஆனால், அடுத்த மாதம் அதற்கு வட்டி போட்டு விட்டார்கள். கடனட்டையில் எடுத்தால் கட்டணம் அதிகம், பின்னர் அவர்களுக்கு இது போல எதிர்பாராமல் எடுத்து விட்டேன், திரும்ப பணத்தை உடனே செலுத்தி விட்டேன். எனவே, வட்டியை திரும்ப டெபாசிட் செய்யுங்கள் என்று வாடிக்கையாளர் சேவைக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இரண்டு நாட்களில் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.
கடனட்டையின் மூலம் நீங்கள் 50 நாட்களுக்கு வட்டியில்லாமல் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, தற்போது உங்களுக்கு அவசரமாக தள்ளுபடியில் தொலைக்காட்சி வாங்க வேண்டும் ஆனால், பணம் அடுத்த மாதம் தான் வரும். இந்த சமயத்தில் மற்றவரிடத்தில் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் உங்கள் கடனட்டையை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம். அடுத்த மாதம் சம்பளம் வந்ததும் செலுத்தி விடலாம். பெரும்பாலான கடைகளில் கடனட்டை பயன்படுத்தி வாங்கினால், கூடுதல் பணம் வசூலிப்பார்கள். எனவே, தீர விசாரிக்க வேண்டும்.
இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, உங்களுடைய பில்லிங் சைக்கிள் எந்த தேதியில் இருந்து ஆரம்பித்து, எந்த தேதியில் முடிகிறது என்பதை சரியாக நினைவு வைத்து இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக உங்களுக்கு, மாதத்தின் 5 ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 4 ம் தேதி வரை பில்லிங் சைக்கிள் என்றால், நீங்கள் கட்டணம் கட்ட வேண்டியது 25 ம் (Due date) தேதி போல வரும். தற்போது நீங்கள் இந்த மாதம் 6 ம் தேதி பொருள் வாங்கினால், அடுத்த மாதம் 25 ம் தான் இதற்கு பணம் கட்ட வேண்டியது வரும். இது தான் அந்த 50 நாள்
. நீங்கள் 4 ம் தேதி வாங்கினால், இந்த மாத 25 ம் தேதியே கட்ட வேண்டி வரும், இதன் காரணமாக இருபது நாள் தான் உங்களுக்கு கிடைக்கும்.
எனக்கு விமானப் பயணச் சீட்டு மற்றும் பல்வேறு பொருட்கள், அவசரத்திற்கு கடனில்லாமல் வாங்க பெரும் துணை புரிந்து இருக்கிறது. இதன் மூலம் பணம் இல்லாமலே, கடன் வாங்காமலே பொருட்கள் / பயணச் சீட்டு வாங்கி இருக்கிறேன்.
கடனட்டையில் உங்களால் முழுவதும் ஒரே சமயத்தில் கட்ட முடியவில்லை என்றால், குறைந்த பட்சக் கட்டணம் செலுத்தி மீதியை அடுத்த மாதம் கட்டலாம் ஆனால், இதற்கு கட்டணம் அதிகம். இதில் தான் அனைவரும் மாட்டிக்கொள்கிறார்கள். வங்கிக்கும் இவை தான் நல்ல லாபம், பரிவர்த்தனையை விட. பெரும்பாலனவர்கள் வட்டி கட்டித்தான் கட்டுவார்கள். இது போல மட்டும் செய்யவே கூடாது. கூடுமானவரை சரியான Due date ல் கட்டி விட வேண்டும்.
நாம் திட்டமிட்டு இதில் செலவு செய்தால், இது போல கட்ட முடியாமல் போகும் சூழ்நிலையே வராது. நான் கடந்த 8 வருடத்தில் ஒரு முறை கூட வட்டி கட்டியதில்லை
ஆனால், ஏகப்பட்ட பரிவர்த்தனைகள் இதன் மூலம் தான் செய்து இருக்கிறேன், இன்னும் கூறப்போனால் எங்கெல்லாம் கடனட்டையை பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் கடனட்டை தான் பயன்படுத்துவேன்.
இணையம் வந்த பிறகு, அனைவரும் இணையத்தில் தான், பண பரிவர்த்தனை செய்கிறார்கள். இதனால் கடனட்டை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. எது செய்தாலும் கடனட்டை கேட்கிறார்கள், எனவே இன்னும் சில வருடங்கள் சென்றால், கடனட்டை இல்லை என்றால், நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை வரும்.
நாம் அதிகபட்சம் இவ்வளவு தான் செலவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கும். நீங்கள் அதிகம் கடனட்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுடைய லிமிட்டை அதிகரிக்க, வங்கியில் கேட்பார்கள். இந்த சமயங்களில் கூடுமானவரை அதிகப்படுத்திக் கொள்ளாமல் நமக்கு தேவையான அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பயனும் பாதுகாப்பும்
நீங்கள் கையில் அதிகம் பணம் வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை அதோடு, இது போல வாங்குவதால் உங்களுக்கு ரிவார்ட் பாய்ண்ட்ஸ் கிடைக்கும். இதை நீங்கள் பின்னர் பயன்படுத்தலாம். நம்ம பணத்தை செலவு செய்ய நமக்கு பரிசு கொடுக்கிறார்கள் / தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம்
. அவசரத் தேவைக்கு மிக மிக பயனுள்ளது.
கடனட்டையை வாங்குவது மட்டுமல்ல அதை பாதுகாப்பாகவும் வைத்து இருக்க வேண்டும். கடனட்டையின் பின்புறம் CVV (Card Verification Value) எண் இருக்கும். இதை யாரிடமும் கூறக்கூடாது அதோடு நண்பர்களுக்கும் கொடுக்கக் கூடாது (நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து). நான் சென்னையில் இருந்த போது இந்த எண்ணை, வேறு இடத்தில் சேமித்து விட்டு இதில் நீக்கி விடுவேன், யாரும் பார்க்க முடியாத படி. இதை வைத்து இணையத்தில் நாம் என்ன வேண்டும் என்றாலும் செய்ய முடியும். எனவே பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
தற்போது வங்கிகள் கூடுதல் பாதுகாப்பாக இணைய பரிவர்த்தனை செய்யும் போது (CVV இல்லாமல் கூடுதலாக) கடவுச்சொல் கேட்கிறது. எனவே இது தெரியாமல் வேறு ஒருவரால் பரிவர்த்தனை செய்ய முடியாது. ஒருவேளை யாராவது திருடி, இதில் தவறான கடவுச்சொல் பயன்படுத்தினால் லாக் ஆகி விடும். அதே போல வாடிக்கையாளர் சேவை பிரிவிற்கு எச்சரிக்கை சென்று விடும். அவர்கள் நம்முடைய தொலைபேசியில் அழைத்து, பரிவர்த்தனை செய்தது நாம் தானா இல்லை வேறு யாருமா என்று உறுதி செய்து கொள்வார்கள். இது வங்கிக்கு வங்கி வேறுபடும். HDFC யில் இது உள்ளது.
ஒருமுறை சிங்கப்பூரில் இருந்து பயன்படுத்தும் போது (வேறு நாடு என்பதால்) என்னை தொடர்பு கொண்டு, பரிவர்த்தனை செய்தது நான் தானா என்று உறுதி செய்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல கடனட்டையை பயன்படுத்தினால், உடனே எவ்வளவுக்கு செலவு செய்தோம் என்ற குறுந்தகவல் (SMS), நம் கை தொலைபேசிக்கு உடனே வந்து விடும்.
வேறு யாரும் பயன்படுத்தினால் / உங்க கடனட்டை திருடப்பட்டால், உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு, உங்கள் கணக்கை முடக்கி விடலாம்.
இலவசமாகத் தருகிறார்கள் என்று, கண்டபடி ஏகப்பட்ட கடனட்டை வாங்கி வைத்துக்கொள்ளக்கூடாது. இது சிக்கலில் விட்டு விடும், அதோடு நமக்கு ட்ராக் செய்யவும் சிரமமாக இருக்கும். ஒன்றே போதும், அதிக பட்சமாக இரண்டு வைத்துக்கொள்ளலாம் (for Backup).
பொதுவாக கடனட்டை என்பதால், நமக்கு செலவு வைக்கும் என்பது உண்மை தான். நான் இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், சில நேரங்களில் இதில் செலவு செய்ததை மறந்து விடுவேன். இந்த நேரத்தில் சிக்கலாக இருக்கும். இது எப்போதாவது தான் நடக்கும் என்பதால் விட்டு விடலாம், மற்றபடி ரொம்பப் பயனுள்ளது. இதில் Master, Visa என்று உள்ளது. இது பற்றி பின்னர் கூறுகிறேன்.
நம்முடைய மின்சாரம், தொலைபேசி மற்றும் பல்வேறு கட்டணங்களை இதன் மூலம் எளிதாக செலுத்தலாம். இதற்கு கட்டணம் எதுவும் வங்கி வசூலிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பெரும்பாலும் யாரும் வசூலிக்க மாட்டார்கள். அப்படி வசூலிப்பார்கள் என்றால் டாடா பை பை தான்
. நம்ம ஐந்து காசு தேவையில்லாம செலவு செய்து விடக்கூடாது. உஷார்!
இவங்க கிட்ட இருந்து எவ்வளவு வசதிகளைப் / சேவைகளைப் பயன்படுத்த முடியுமோ! அவ்வளவையும் பயன்படுத்தி விட்டுத்தான் மறு வேலை. என்னால் இவர்களுக்கு பரிவர்த்தனையால் மட்டுமே லாபம், மற்றபடி ஐந்து பைசா கூட விட மாட்டேன்.
மாதாமாதம் கண்கொத்தி பாம்பாக பில்லை கவனிக்க வேண்டும். ஏதாவது நமக்குத் தெரியாத பரிவர்த்தனை நடந்துள்ளதா என்று! வருடாந்திரக் கட்டணம் இல்லை என்று கூறி விட்டு, சத்தமில்லாமல் இதில் சேர்த்து விடுவார்கள். நாமும் பல செலவுகளில் இதை கவனிக்காமல் விட்டு விடுவோம். கவனித்துக் கேட்டால், “சாரி சார்! தெரியாமல் வந்து விட்டது, உங்களது பணத்தை திருப்பி விடுகிறோம்” என்று எஸ்கேப் ஆகி விடுவார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
கடனட்டை பயனற்றது என்பது பேத்தல். பயன்படுத்த தெரியவில்லை என்றால் எதுவும் வீண் தான்.
கொசுறு
என்னோட பையன் கோபியில் LKG படிக்கிறான். அவனுக்கு பக்கத்து வீட்டுல, அவன் சைஸ் ல, ஒரு பொண்ணு செட் ஆகி விட்டது. ஃபோன் பண்ணுனா, கண்டுக்கவே மட்டேங்குறான். டேய்! பேசிட்டு போடான்னா.. “நான் விளையாடிட்டு அப்புறம் வரேன்” என்று எஸ்கேப் ஆகிடுறான். பள்ளிக்கு போவதென்றால் காலையில், இதோட குஷியா கிளம்பிடுறானாம். இப்பவே இப்படி இருக்கிறானே!…. ம்ஹீம்.


{ 20 comments… read them below or add one }
நன்றி கிரி…
தற்போது தான் நானும் HDFC கடன் அட்டை வாங்க போகிறேன் …
இந்த செய்தி மிகவும் உபயோகமா இருந்க்கும்
நல்ல தகவல் நன்றி .. அதிக தகவல்லுக்கு
http://www.jagoinvestor.com/2012/05/myth-of-minimum-balance-in-credit-cards.html
என் நண்பனும் HDFC கடனட்டைகள் தான் பயன்படுத்துகிறான். இதுவரை எந்த தொந்தரவும் வந்ததில்லை.
பையன்
சுவிஸ் வங்கியில் கடனட்டை வாங்க முடியுமா கிரி?
என் சாய்ஸ் : SBI or HDFC
சின்னதாக ஒரு தகவல் : இது எல்லாருக்கும் தெரிந்தது தான்… தெரியாதவர்களுக்கு :
நீங்க பணம் எடுக்க ஏ.டி.எம் போறீங்க… அப்ப (ஒரு வேளை) திடீர்னு உள்ள நுழைஞ்ச ஒருத்தன் கத்தியை காட்டி மிரட்டி, பணம் எடுக்கச்சொல்லி மிரட்டறான்னு வச்சிகிங்க…. என்ன செய்யலாம் ? உங்க பின் (Pin) நம்பரை தலை கீழா மாத்தி அடிங்க… (அதாவது உங்க நம்பர் 1234 என்றால் 4321 ன்னு மாத்தி அடிங்க…)
பணம் வெளியில் வரும் போது சிக்கிக்கும்… அதே சமயம் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் செல்லும்… போலீஸ்கார் வந்தால், உங்கள் அதிர்ஷ்டம்…
எல்லா ATM-ல்லும் இந்த வசதி உண்டு என்கிறார்கள்…
அப்புறம் நீங்க ஒரு ATM தான் (Azhakiya Tamil Magan)…..!
தகவல் உதவி : முகநூல்
நன்றி.
உண்மைதான், உரிய விதத்தில் பயன்படுத்தினால் கடன் அட்டை ஒரு வரம்தான். நாஙக்ளும் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறோம். ஒருமுறைகூட அதிகத் தொகை கட்டியதில்லை.
அதெல்லாம் சரி நண்பரே. இந்த பிரண்ட்சுங்க தொல்லை தாங்க முடியல என்னோட கடன் அட்டையை (SABB – HDFC Partners) உயபோகப்படுத்தி விட்டு மாசா மாசம் அவனுக டியு கட்டுவானுகலாம் எனக்கு அவங்ககிட்ட போய் மாசாமாசம் தண்டல்காரன் போல் நின்னுகிட்டு வசூல் பண்றது எனக்கு வெட்கமா இருக்கு.
நீங்க டியு கட்டுறது சம்பந்தமா சொன்னீங்க. என்கிட்டே ரெண்டு வங்கியின் கார்டு உள்ளது ஒரு கார்டை வைத்து அடுத்த கார்டுக்கு பணம் செலுத்திவிட்டு இன்னும் ஒருமாதம் கழித்து அந்த கார்டுக்கு பணம் செலுத்தலாம் – இதைத்தான் எனக்கு ஒருவர் மீன் எண்ணையை வைத்து மீன் வறுவல் செய்வது எப்படின்னு உதாரணம் சொல்லி தந்தார்.
நீங்க சொல்றது போல சூப்பர் மார்கெட் போனால் அதிக தொகை செலுத்த தேவை இல்லை.
அது போல குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்கள் பெயரிலேயே sublimentary கார்டு கொடுத்து அதற்கும் ஒரு தொகை பிக்ஸ் செய்யும் வசதியும் உள்ளது. ஏனென்றால் தற்போதைய காலத்தில் ஆன்லைனில் பிளைட் டிக்கட் புக் செய்தால் கார்டுக்குரிய நபர் பயணம் செய்யனுமின்னு ஒரே தொந்தரவுதான் போங்க. (அதுக்காக எல்லாருக்கும் கார்டு தரணும்ன்னு சொல்லலை).
ரொம்பச் சரி>
பில்லிங் தேதியை மறக்காமல் மனசுலே வச்சுக்கிட்டால் நீங்க சொன்னதுபோல 5௦ நாள் கழிச்சு பணத்தைக் கட்டலாம்.
இப்படித்தான் நாங்க செய்யறோம். வேற வேற அட்டைகள் இருப்பதால் ஒன்னு இல்லேன்னா இன்னொன்னுண்ணு பயன்படுத்தமுடியுது. மறுபாதிக்கும் இதே கடனட்டைகளை வாங்கிக்கொடுத்துட்டதால் செலவு தங்க்ஸ்ம் பில்லு ரங்ஸுமா நடக்குது இங்கே:-)))))
அப்புறம் கடனட்டைகள் பில் வந்தவுடன் பாக்கி வைக்காம அந்தந்த மாசம் கட்டுவது ரொம்ப முக்கியம். மினிமம் கட்டுனோமுன்னா வட்டியால் தாளிச்சுருவாங்க,
எங்க பக்கங்களில் கடனட்டை பயன்படுத்திச் செலவு செஞ்சால் ஹாட் பாய்ண்ட்ஸ் என்று 100 டாலருக்கு 10 என்று பாய்ண்ட்ஸ் கிடைக்கும். அந்தப் பாய்ண்ட்ஸ்களை வச்சு நாம் பொருட்கள் வாங்கிக்கலாம். நான் வேணும் என்ற கடைக்கு கூப்பான்களா வாங்கி வச்சுக்கிட்டு அதை செலவு செஞ்சுக்குவேன்.
அதை கிஃப்ட் கொடுக்கவும் பயன்படுத்திக்கலாம்:-))))
// மாதாமாதம் கண்கொத்தி பாம்பாக பில்லை கவனிக்க வேண்டும்.//
என்னோட பிரச்சினையே இங்கேதான் ஆரம்பிக்குது கிரி:)
திண்டுக்கல் தனபாலன்!களவாணித்தனங்களில் இந்தியா சமர்த்தாக்கும்:)
இப்பதான் உங்க சைட்டுக்கு வரேன் சார்..பயனுள்ள தகவல்..மிக்க நன்றி.
நான் கடந்த 7 வருடங்களாக Citibank கடனட்டை உபயோகித்து வருகிறேன், இது வரைக்கும் என்ன பிரச்சனையும் வந்ததில்லை. பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் எப்போதும் மாதத்தின் 5 ஆம் தேதியிருக்கும். அதற்கு முன்பே முழு நிலுவையும் கட்டிவிடுவேன். சில சமயங்களில் பணம் கட்ட மறந்துவிட்டேன் என்றால் வட்டி போட்டுவிடுவார்கள். பிறகு வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்ப்புக்கொண்டு வட்டியை மட்டும் விலக்க சொல்வேன். நீண்ட நாள் வாடிக்கையாளர் என்பதால் வட்டியை மட்டும் ரத்து செய்வார்கள்.
திண்டுகல் தனபால் சொன்ன தகவலில் ஒரு சந்தேகம். ஒரு வேலை என் ATM pin 3553 என்று வைத்து கொள்ளுங்கள். இந்த எண்களை தலைகீழாக அடித்தால் மீண்டும் 3553 தான் வரும். இப்போ பணம் ATMயில் சிக்கிக்கொள்ளுமா? காவல் துறைக்கும் தகவல் செல்லும்மா?
ஹி ஹி … டீ வாங்கவே காசில்ல கிரி …. இதுல நம்மள நம்பி எந்த பேங்க்கு க்ரெடிட் கார்ட் கொடுக்கும்?
//என்னோட பையன் கோபியில் LKG படிக்கிறான். அவனுக்கு பக்கத்து வீட்டுல, அவன் சைஸ் ல, ஒரு ஃபிகர்!! செட் ஆகி விட்டது.//
கடுப்பேத்றார் மை லார்ட் … 20 வயசாவுது. நமக்கே இன்னும் ஒன்னும் மாட்டலியே? அவ்வ்வ்
சிங்கப்பூரில் வட்டியில்லாமல் இன்ஸ்டால்மென்டில் பொருள் வாங்கலாமே…? நான் எது வாங்கினாலும் ( டிவி, பிரிட்ஜ், கம்ப்யூட்டர், வாசிங் மெசின், கேமரா, ஏசி, பிளைட் டிக்கெட்) இன்ஸ்டால்மென்டிலே வாங்குவேன். மாத மாதம் சரியாக தவணை கட்டினால் போதும்.
நானும் ஒரு பிரபலமான, இதில் முன்னோடியான ஒரு வங்கியின் கடனட்டையை 15 வருடங்களாக வைத்து இருக்கிறேன். கிரி சொன்னபடி, அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் நமக்கு அதில் லாபம் தான். உதாரணத்திற்கு, redeem points. வட்டி செலுத்தும் காலத்திற்கு முன் பணம் செலுத்திவிட்டால் நமக்கு ரெடீம் பாயிண்ட்ஸ் லாபம் தான். முக்கியமாக கடனட்டையை அவசர செலவிற்கு தான் பயன் படுத்த வேண்டும்.
நான் இதை எப்படி பயன் படுத்துவேன் என்றால், என்னிடம் ரொக்கமாக பணம் இருந்தாலும், கடனட்டையை பயன் படுத்தி பணம் செலுத்திவிட்டு, பின் உடனே இந்த வங்கிக்கு ஆண் லைன் மூலம் பணம் செலுத்துவேன். இதனால் எனக்கு ரெடீம் பாயிண்ட்ஸ் சேரும். அதில் வேறு பொருள் வாங்கலாம். மேலும், அடுத்த மாதம் எனக்கு கண்டிப்பாக பணம் வரும் என்ற உறுதி இருந்தால் தான் இந்த மாதம் கடனட்டை பயன் படுத்துவேன். அதற்க்கு வட்டி போடுவதற்கு முன்பே பணம் செலுத்தி விட்டால் நமக்கு லாபம் தான்.
ஜூனியர குள்ளாம்பாளையம் பக்கம் அனுப்பிச்சிராதீங்க. வேண்டாத பாடங்கள கத்துக்குவார்.
உபயோகமான தகவல் . நன்றி
100 % சரி. நல்ல பகிர்வு
கடன் அட்டை பற்றி நிறைய விஷயங்கள் தெரியாததல் அதன் பக்கமே போவதில்லை. இது தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்ததற்கு நன்றி.
அனைவரின் வருகைக்கும் நன்றி
@வெயிலான் அதில் கடனட்டை எல்லாம் கிடையாது
@தனபாலன் நீங்கள் கூறியது, யாரோ சும்மா கிளப்பி விட்டது என்று நினைக்கிறேன்.
@ராஜ்குமார் நீங்கள் கொடுக்கக் கூடாது.
ஒரு கடனுக்கு இன்னொரு கடனை வைத்து கட்டுவது என்றுமே ஆபத்தானது.
நீங்க விமானத்தில் செல்லும் போது, கடனட்டையின் ஜெராக்சை கொடுத்து விடலாம்.
@துளசி கோபால். நீங்க கூறிய மாதிரி மாதாமாதம் சரியா கட்டுனா எந்த பிரச்சனையும் இல்லை. ரிவார்ட்ஸ் பாய்ன்ட் வைத்து, நான் பரிசுப் பொருட்கள் வாங்கலாம். ஒரு சில நண்பர்கள் பார்த்தீர்கள் என்றால், யாராவது ஏதாவது செலவு செய்யும் போது, அவர்களிடம் கடனட்டை இல்லை என்றால், இவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, கடனட்டையின் மூலம் கட்டுவார்கள். ரிவார்ட்ஸ் பாய்ண்ட்ஸ் க்காக.
@ராஜநடராஜன் ஒரு அட்டை வைத்து இருந்தால், பராமரிப்பது சிரமமே இல்லை.
@Barney நீங்க கூறியபடி நாம் கேட்டுக்கொண்டால் சில நேரங்களில் வட்டியை திருப்பித் தருவார்கள். இதில் இருந்து தப்ப, நீங்கள் Auto Pay தேர்வு செய்து இருந்தால், அதுவே தானியங்கியாக due date ம் போது பணம் எடுத்துக்கொள்ளும். நான் இப்படி தான் செய்து வருகிறேன்.
அப்புறம் நீங்கள் கேட்ட சந்தேகம் சரி. அது சும்மா, யாரோ கிளப்பி விட்டது.
@ஹாலிவுட் ரசிகன் நீங்க குட்டி பையன் போல
@ராவணன் நான் நம்ம ஊர் கடனட்டையைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்.
@பாமரன் 15 வருடங்களாக பயன்படுத்துகிறீர்களா.. எனக்கு ரொம்ப சீனியரா இருப்பீங்க போல.:-)
@Reader
நானும் ஒரு HDFC கார்டு வாங்கி உள்ளேன்.எனக்கு நல்ல சமயத்தில் நல்லதொரு ஆலோசனை கூறி உள்ளளீர்கள்.மனதார நன்றி.அப்படியே எங்கள் ஊர்க்காரர் திண்டுக்கல் தனபாலுக்கும் ஒரு நன்றி சொல்லி விடுங்கள்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்