சென்னை சென்ட்ரலும் விமான நிலையமும்

by கிரி on December 15, 2011

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் விமான நிலையமும் எவ்வளவு முக்கியமானவை இவற்றை பல லட்சம் மக்கள் தினமும் பயன்படுத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது ஆனால் அவர்கள் செய்து தரும் வசதி எந்த அளவிற்கு கேவலமாக இருக்கிறது என்பதை என்னுடைய அனுபவத்தோடு கூறுகிறேன்.

Chennai Central சென்னை சென்ட்ரலும் விமான நிலையமும் நான் எங்கள் ஊரில் (கோபி) இருந்து சென்னை வர எப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதோ அன்றில் இருந்து சென்னை செல்ல ரயிலையே பயன்படுத்துகிறேன் காரணம் நான் இருந்த இடத்தில் இருந்து தொலைவு, குறைந்த கட்டணம் அதோடு பாதுகாப்பும் மிக்கதாக இருந்தால் அதன் பிறகு பேருந்தில் செல்வதையே தவிர்த்து விட்டேன். தற்போது ஊருக்கு சென்று இருந்த போது சென்னை வர வழக்கம் போல ரயிலிலேயே வந்தேன் வரும் போதே மழை வந்தால் எப்படி டாக்ஸி பிடித்துப் போவது என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.

தற்போது சென்னையில் பெட்ரோல் விலையைக் காரணம் காட்டி ஆட்டோக்கள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி விட்டன இதனால் தூரமாக ஆட்டோவில் செல்வதை விட டாக்சியே எளிதாக இருக்கிறது. அதுவுமில்லாமல் நான் சென்னையில் இருந்த போதே எனக்கும் ஆட்டோவிற்கும் ஒத்துவரவில்லை எப்போது போனாலும் ஏதாவது ஒரு விதத்தில் சண்டை வந்து விடுகிறது. ஆட்டோ ஓட்டுனர் ஏறும் போது ஒன்று சொல்வார் இறங்கும் போது புதியதாக வேறு ஏதாவது கூறுவார் இதனால் பெரும்பாலும் மன உளைச்சலே ஏற்படும் இதனாலும் நான் இவங்க சங்காத்தமே வேண்டாம் என்று ஆட்டோவை பயன்படுத்துவதில்லை நடந்தாவது செல்வேன் அல்லது அவசரமாக செல்ல வேண்டி இருந்தால் முன்பே கிளம்பி சென்று விடுவேன் ஆட்டோ பயன்படுத்த மாட்டேன்.

தற்போது சிங்கப்பூரில்  இருப்பதால் ஊரில் இருந்து வரும் போது பெரிய பெட்டி இருக்கும் என்பதால் ஆட்டோ நிச்சயம் பயன்படுத்த முடியாது காரணம் நான், என் மனைவி, பையன், இரண்டு பெட்டிகள் அதனால் எப்போதும் டாக்சி தான்.

பிரச்சனை இங்கு தான்….

சென்னை சென்ட்ரலில் உள்ள முன் கட்டண (Pre paid) டாக்சி நிறுத்தும் இடத்தில் மழை பெய்தால் ஒதுங்க சிறு இடம் கூட கிடையாது. பயணச்சீட்டு கொடுக்கப்படும் இடத்தில் அதையொட்டி உள்ள சிறு இடம் மட்டுமே உள்ளது அதில் மிஞ்சிப்போனால் 15 பேர் நிற்கலாம் அதிலும் சாரலில் நனைந்து விடுவோம். நான் சென்ட்ரல் வந்தவுடன் மழை நின்று இருந்தது அப்பாடா! தப்பித்தோம் என்று நினைத்து பயணச்சீட்டு வாங்கிய பிறகு மழை பிடித்துக்கொண்டது இதனால் தாமதமாகப் போனால் அதற்கு வேறு பிரச்சனை செய்வார்கள் என்பதால் காத்திருந்தோம். காலை 4 மணி என் அப்பாவும் வழியனுப்ப வந்து இருந்தார் உடன் சென்னையில் ஒரு வேலைக்காகவும்.

இருந்த கொஞ்ச இடத்தில் சிலர் நின்று கொண்டார்கள். அங்குள்ளவர்களிடம் கெஞ்சி அவர்களை கொஞ்சம் நகரக் கூறி என் மனைவியையும் மகனையும் (3 வயது) நிற்க வைத்தேன் சிறிது நேரத்தில் மழை பலமாக பிடித்துக்கொண்டது இதனால் அந்த இடத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் முதலில் டாக்சி பிடித்து செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் நெரிசல் ஆகி விட்டது. அதில் எண் வரிசைப்படி இருந்தாலும் ஆளாளுக்கு முதலில் செல்ல முயற்சித்ததால் அந்த மழையில் சண்டை. எனக்கு இதை தவறாகவும் நினைக்க முடியவில்லை யாரும் மழையில் (குளிர் வேறு) நனைய விரும்ப மாட்டார்கள் இதனால் இதைப்போல தள்ளுமுள்ளுகள் தவிர்க்க முடியாது.

எனக்கு என் அப்பா வேறு நனைகிறாரே என்று சங்கடம் அவருக்கு 70 வயது மேல் ஆகிறது ஒதுங்கி நிற்கக் கூற இடமுமில்லை. எனக்கு கடுமையான ஆத்திரம் இப்படி ஒதுங்க கொஞ்சம் கூட இடம் அமைக்காமல் இருக்கிறார்களே என்று! நாங்கள் இருவரும் முழுவதும் நனைந்து விட்டோம் ஓரமாக நின்று இருந்தாலும் என் மனைவியும் குழந்தையும் ஒரு பகுதி நனைந்து விட்டார்கள். பெரியவர்கள் குளிர் தாங்குவார்கள்.. குழந்தைகள்?

எங்களுக்கு வரிசையில் வந்த வண்டி இண்டிகா அதில் இரு பெட்டிகளை வைக்க முடியாது அதனால் அடுத்த ஆம்னி வண்டியில் ஏறிக் கொள்கிறோம் எங்களுக்கு அடுத்தவரை அனுமதியுங்கள் என்றால் கேட்கவில்லை… பெய்கிற மழையில் ஒரு பெட்டியை வைத்த பிறகு இன்னொரு பெட்டியை வைக்க முடியவில்லை (எப்படி வைக்க முடியும்) முன் புறம் வைக்க டிரைவர் ஒத்துக்கொள்ளவில்லை சீட் அழுக்காகி விடும் என்று! நியாயமான வாதம் தான். இதற்குள் அனைவரும் அவசரப்படுத்துகிறார்கள்.. பெட்டி வேறு அதிக எடை வெளிநாடு செல்லும் பெட்டி என்றால் அதில் எத்தனை சாமான்கள் இருக்கும் என்று நீங்கள் அறியாததல்ல. எனக்கு இரண்டு முறை உடனுக்குடன் ஏற்றி இறக்கி இடுப்பே கழண்டு விட்டது.. கொலைவெறி ஆகி விட்டேன். என் அப்பாவும் வயதானவர் எடுத்து வைக்க முடியாது அவர் முயன்றாலும் நான் அனுமதிக்க மாட்டேன் அங்கே உள்ள டிரைவரும் உதவவில்லை.

பின் அடுத்த வண்டியில் திரும்ப ஏற்றி எங்கள் அக்கா வீடு சென்றோம். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. ஊருல இருக்கிற அனைத்து கெட்ட வார்த்தையிலும் இதற்கு இடம் அமைக்காத அதிகாரிகளை மனதினுள் திட்டி விட்டேன். இதன் பிறகும் சிங்கப்பூர் வந்து ஒரு வாரம் செம வலி. இந்த அரை மணி நேரத்தில் நான் பட்ட பாடு யப்பா! மறக்கவே முடியாதபடி ஆகி விட்டது.

இந்த கொடுமையான அனுபவம் எனக்கு மட்டுமல்ல என்னைப்போல பலருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். இதைப்போல அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத ரயில்வே நிர்வாகத்தை என்ன சொல்வது? இந்த லட்சணத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உலகத்தரத்தில் கொண்டு வரப்போவதாக பல காலமாக கூறி வருகிறார்கள்.. விளங்கிடும். ஐயா! அதிகாரிகளே அரசியல்வாதிகளே உலகத் தரத்தில் எங்களுக்கு வேண்டாம் உள்ளூர் தரத்தில் இருந்தால் கூட போதுமானது அதற்கு ஒரு வழி காட்டுங்கள்.

விமான நிலையம்

Chennai Airport 300x163 சென்னை சென்ட்ரலும் விமான நிலையமும் சென்னை விமான நிலையம் பற்றிக் கூறவே வேண்டியதில்லை.. கட்டுறானுக கட்டுறானுக கட்டிட்டே இருக்கானுக. நான் சிங்கப்பூர் சென்றே நான்கு வருடம் ஆகிறது அதுக்கு முன்னாடி இருந்து கட்டிட்டு இருக்காங்க. உலகத்திலேயே நான்கு வருடம் ஆகியும் மறுசீரமைப்பு செய்யும் ஒரே விமான நிலையம் சென்னை விமான நிலையமாகத்தான் இருக்க முடியும். நம்மை விட கீழ் நிலையில் உள்ள நாடுகள் கூட இவ்வளவு காலம் எடுக்க மாட்டார்கள். எறும்பை விட்டால் கூட வேகமாக தன்னோட வீட்டைக் கட்டி விடும்.

எனக்கு புரியவே புரியாத விஷயம்… இதே விமான நிலையத்தை எத்தனை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள் ஒருத்தருக்கூடவா இதை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. இது தனித்துறை என்றாலும் இவர்கள் அழுத்தம் கொடுக்க முடியாதா! அமைச்சர்கள் தான் முடியாது முதல்வர்கள் கூடவா இதை செய்ய முடியாது!

எத்தனை வெளிநாட்டினர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்! அவர்கள் ஊரில் இருந்து இறங்கியவுடன் இப்படி ஒரு கேவலமான கட்டமைப்பைப் பார்த்தால் அவர்கள் முதல் எண்ணம் என்னவாக இருக்கும்? விமான நிலையத்தை நீங்கள் இதுவரை பயன்படுத்தாமல் இருந்து இருந்தால் உள்ளே சூப்பராக இருக்கும் என்று கற்பனை செய்து இருந்தால் அதை அப்படியே துடைத்து எடுத்து விடுங்கள். கழிவறையைக் கூட ஒழுங்காக சுத்தம் செய்ய மாட்டார்கள். சிறுநீர் நாற்றம் தூரத்திலேயே அடிக்கும் நமக்குப் பழகி விட்டது வெளிநாட்டினர் வந்தால் நம் ஊரைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள்! நான் சிங்கப்பூரில் இருப்பதால் பந்தா விடுறேன் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள் விமான நிலையத்தை பயன்படுத்தும் யாரை வேண்டும் என்றாலும் கேட்டுப்பாருங்கள் நான் கூறுவது உண்மையா இல்லையா என்று தெரியும்.

அங்கே உள்ளவர்கள் பெங்களூர் விமான நிலையம் சூப்பராக இருக்கிறது சென்னை விமான நிலையம் ரொம்ப மோசம்.. அடிப்படை வசதி கூட இல்லை தெளிவான தகவல்கள் இல்லை என்று கூறும் போது வரும் வருத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. ஊருல வேற இடத்தை இப்படி சொன்னால் கூட கண்டுகொள்ளாமல் போய் விடலாம் இதைப்போல விமான நிலையத்தைக் கூறினால் என்ன பதில் கூறுவது? ஹி ஹி ஹி னு அசட்டு சிரிப்பு சிரித்து சமாளிப்பதை விட.

நான் விமான நிலையம் வரும் போதே கடவுளை வேண்டிக்கொண்டே வந்தேன் காரணம் மழை வந்தால் பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே போவதற்குள் நனைந்து விடுவோம் ஏற்கனவே காலையில் பலத்த அனுபவம் வேறு. மழை பெய்தால் வண்டியில் இறங்கும் இடத்தில் இருந்து நீங்கள் நனையாமல் செல்லவே முடியாது. தற்போது மிகப்பெரிய வளாகம் அமைத்து வருகிறார்கள் இது திறக்கப்பட்டால் இந்தப் பிரச்சனை இருக்காது அதற்காக ஒரு தற்காலிக இடம் கூட அமைக்காமல் இருந்தால் எப்படி! இவர்கள் என்ன ஒரு வாரத்திலா முடிக்கிறார்கள் நான்கு வருடம் மேல் ஆகிறது இன்னும் என்ன நிலைமை என்று தெரியாத நிலை.

நனைந்தால்… வீடு என்றால் உடை மாற்றலாம் இங்கே என்ன செய்வது? ஈர உடையுடன் அந்த AC குளிரில் நடுங்கிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

விமான நிலையத்தினுள் யார் என்றே தெரியாதவர்கள் எல்லாம் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் அதாவது ஊழியர்கள் என்கிற பெயரில். பெட்டி வரும் இடத்தில் சோதனை செய்யும் இடத்தில் என்று ஒரு ஒழுங்கே இல்லாமல் யார் யாரோ இருப்பார்கள் அங்கே என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியாது.

வெளிநாட்டில் இருந்து வரும் போது பெட்டி எடுக்கும் போது கஸ்டம்ஸ் தாமதத்தால் தாமதமாக நேர்ந்தால் நம் பெட்டி இருக்குமா அல்லது எவனாவது தூக்கிட்டு போய் இருப்பானா என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருமுறை பெட்டி எடுக்க கஸ்டமஸ் ல் நீண்ட வரிசை காரணமாக தாமதமாக வந்ததால் ஒருவர் பெட்டி அருகே நின்று கொண்டு “சார்! ஏதாவது கவனிங்க” என்கிறார். ங்கொய்யாலே! என் பெட்டிப் பக்கத்துல நீ நின்னா நான் எதுக்குயா பணம் தரனும் என்று சண்டைக்கு போயிட்டேன். அருகில் இருந்தவங்க சார் நீங்க போங்க! என்று அனுப்பி வைத்து விட்டார்கள். இதெல்லாம் சும்மா சாம்பிள் தான்.. அங்கே நடக்கும் அடாவடிகளை எல்லாம் பார்த்தால் பொறுமையாக இருப்பவன் கூட கொலைகாரனாக மாறி விடுவான்.

இதைவிடக் கொடுமை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது வீடு செல்ல அங்கே டாக்சி பிடிக்க வேண்டும் என்றால் பட்ஜெட் டாக்சி வெளியே இருக்கும் அதற்கு ஒரு தகவலும் இருக்காது ஆனால் தனியார் டாக்சி முன்பே இருக்கும். உள்ளே இருந்து வருகிறவர்கள் இது மட்டுமே உள்ளது என்று நினைப்பார்கள். இதில் கட்டணம் இரட்டை மடங்கு டாக்சியும் அப்படி ஒன்னும் சூப்பர் எல்லாம் கிடையாது. நான் முதலில் வந்த போது இதில் கட்டணம் செலுத்தி வெளியே வந்த பிறகு பார்த்தால் அங்கே பட்ஜெட் டாக்சி உள்ளது. செம கடுப்பாகி விட்டது. அதை விட மானம் போகும் விஷயம் அங்கே பட்ஜெட் டாக்சி பயணச்சீட்டைக் கொடுப்பவரைப் பார்த்தால் எதோ மொய் பணம் வாங்குபவரைப் போல உட்கார்ந்து இருப்பார் அறை போல ஒரு வெங்காயமும் கிடையாது.

இதைவிட ஆத்திரம் கிளப்பிய இன்னொரு விஷயம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த போது நான் பெட்டியை தள்ளிக்கொண்டு வெளியே வரும் போது ஒருவர் வந்து… “சார்! கொடுங்க” என்று என்னுடைய பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு பெட்டியை தள்ளிக்கொண்டே சென்றார் நானும் சரி டாக்சி டிரைவர் போல பரவாயில்லை பணத்தை வாங்கினாலும் இதையாவது செய்கிறார்களே! என்று நினைத்துப் போய்க்கொண்டு இருந்தேன். வெளியே வந்து என்னுடைய பெட்டியை கார் கிட்ட நிறுத்தி விட்டு தலையை சொறியராறு! அதைபார்த்து குழம்பி நான் தலையை சொறிந்தேன் என்னடா இது! இவர் எதுக்கு இப்ப பணம் கேட்கிறாரு என்று விழித்தால் அவர் ட்ரைவரே இல்லை யாரோ ஒருவர். அடப்பாவிகளா! எப்படி எல்லாம் டெக்கினிக்கலா ஏமாத்துறாங்க என்று கடுப்பாகி விட்டது. இவருக்கு இது தான் வேலையே போல!

பெட்டியை இவர் தூக்கி வந்து இருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. ட்ராலியில் தள்ளிட்டு வரதுக்கு இவர் என்ன அதை நானே செய்துட்டு போகிறேன். நேராக டாக்சி தான் பிடிக்கப்போகிறோம் என்பதால் சில்லறையாகவும் பணம் இல்லை ஐம்பது ருபாய் அல்லது நூறு ரூபாயாக இருந்தது. இருந்த ஐந்து ரூபாயை கொடுத்தால் என்னை முறைத்து திட்டி முனகி விட்டுப்போகிறார். எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை.

அரசியல்வாதிகளுக்கு எல்லாம் சிறப்பு அனுமதி ராஜ மரியாதை என்பதால் இவர்களுக்கு சாமானியர்களின் கஷ்டம் பற்றி கவலையில்லை. இவர்களை எல்லாம் ஒரு நாள் நம்மைப்போல ஒரே ஒரு முறை சென்று வரக்கூறினால் தான் இவர்களுக்கு எல்லாம் நம்ம கஷ்டம் புரியும் அப்பவும் நடவடிக்கை எடுப்பார்களா என்பது சந்தேகமே!

நம் ஊரைப்பற்றி நன்கு தெரிந்து இங்குள்ள மொள்ளமாரித்தனம் எல்லாம் ஓரளவு புரிந்து வைத்து இருக்கும் நமக்கே இவர்கள் தண்ணி காட்டுகிறார்கள் என்றால் வெளிநாட்டினர் வந்தால் தலையில் மிளகாய் தான் அரைப்பார்கள். கட்டமைப்பு சரியாகாத வரை இதைப்போல சங்கடங்களும் ஏமாற்றுதல்களும் நிற்க வாய்ப்பே இல்லை. நாம தான் நம்ம ஊரை விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களிடம் பேசி வருகிறோம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அதில் துளி கூட அக்கறை இல்லை நேர்மையாக இருக்கும் வெகு சிலர் தவிர்த்து.

நம்ம சென்னை விமான நிலையத்தையும் சென்ட்ரலையும் பொறுப்பில் உள்ளவர்கள் நினைத்தால் எவ்வளவு அருமையாக மாற்றலாம் தெரியுமா? ஏக்கம் மட்டுமே பட முடிகிறது இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து.

கொசுறு

கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் புதிய மறுசீரமைப்பு விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின் பின்வரும் காணொளியில் உள்ளது போல் இருக்கும் என்கிறார்கள். கட்டி முடித்த பிறகு தான் உண்மை நிலவரம் தெரியும்.

feed icon16x16 சென்னை சென்ட்ரலும் விமான நிலையமும் Subscribe in a reader

Related posts:

  1. கடுப்பைக் கிளப்பிய ஏர் இந்தியா
  2. மோனோ ரயில் – “ஜெ” வின் இமாலயத்தவறு
  3. லஞ்சம் கொடுத்தவன் ஊழல் பற்றிப் பேசக்கூடாதா?
  4. அன்புள்ள இயக்குனர் பாலா அவர்களுக்கு…
  5. காமன்வெல்த் (சில) பெருமைகள்!

{ 19 comments… read them below or add one }

ஜோதிஜி December 15, 2011 at 7:58 AM

நம் அரசியல்வாதிகள் நமக்கு இது போன்ற விசயங்கள் மூலம் ஒரு பாடத்தை நடத்துக்கின்றார்கள்.

எப்போதும் உஷாராக இரு.

இந்தியாவில் வாழ வேண்டுமென்றால். இந்தியாவிற்கு வர வேண்டுமென்றாலும்.

Reply

Muthukumar December 15, 2011 at 9:44 AM

விமான நிலையத்தைப் பொறுத்த வரை எனக்கான அனுபவமும் 100% இதேதான். பிளைட் ஏற, இறங்க பயன்படுத்தும் ரன்வேயும் சென்னையில் மிகவும் கேவலமாக இருக்கும். பெட்டிகள் வரும் அந்த பெல்ட் அழுக்கா மிகவும் கேவலமா இருக்கும், நமது பெட்டி அந்த பெல்ட்டில் வரும்போது பெட்டி முழுதும் கருப்பா அழுக்காகிதான் வெளியே வரும். புதிதாக பெட்டி வாங்கி சென்னை விமான நிலையம் வருவோர் ரத்தக் கண்ணீர்தான் வடிக்கனும்.

விமானத்திலிருந்து பெட்டியை இறக்கி பெல்ட்டில் போடும்போது, விமான ஊழியர்கள் பெட்டிக்குள் இருக்கும் விலைமதிப்பு மிக்க பொருட்களை ஆட்டையைப் போடுவதில் தொடங்கி பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வரும்போது கஸ்டம்ஸ் செய்யும் கொடுமைகளைப் பற்றியும் புலம்பி இருக்கலாமே. கஸ்டம்ஸ் அதிகாரி ஒரு ஓரமாக நின்று கொண்டிருப்பார், இந்த அல்லக்கைகள் தான் சோதனை என்ற பெயரில் ஏமாந்த பயணிகளை மோப்பம் பிடித்துக் கொண்டிருப்பார்கள். எவனாவது கேமரா, லேப்டாப், டிவி என்று எதையாவது வைத்திருந்தால் நம்ம டிராபிக் போலிஸ் மாதிரி “ஆபிசர் அங்க இருக்காரு, அவருகிட்ட போனா, 8000 / 10000 கட்டணும்… பேசாம ஒரு 5000 ரூபா என்கிட்டே குடுத்துட்டு போயிட்டே இருங்க”-ன்னு ஆரம்பிப்பார். அங்க இருந்து தப்பிச்சு வெளியில வர்றதுக்குள்ள…. அய்யய்யோ!

இந்தக் கொடுமைக்கு என்றுதான் விடிவுகாலமோ? :(

சென்னைக்கு இரயிலில் நான் பயணம் செய்ததே கிடையாது, ஒரே ஒரு முறை பயணம் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன், அதுவும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தபோதுதான். ஆனாலும் மழை நேரங்களில் உள்ள சிரமங்கள் இப்படி உடனடி சித்திரவதைகளாவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

Reply

Rajan December 15, 2011 at 11:08 AM

என்னத்தை சொல்லறது போங்க ..நான் கூட இந்த விமான நிலைய கொடுமையை அனுபவிச்சிருக்கேன் ..ஒரு வேலையும் செய்யாமலே காசு பாக்கிற கும்பல் அங்க நெறைய திரிஞ்சிக்கிட்டிருக்கு. இதெல்லாம் அங்க இருக்கற பெரிய அதிகரிங்களுக்கு தெரியாமலா இருக்கும்? அதே போல நிறைய டிரைவர்களுக்கு வயசானவர்களுக்கோ குழந்தையோட அவஸ்த படரவங்களுக்கோ உதவி செய்யற மனசாட்சியே இல்லை. அரசியல் வியாதிகளுக்கு இதெல்லாம் எங்க தெரியும்? அவிக இலக்கேல்லாமே ஆயிரம் கோடிக்கு மேல எப்படி சுருட்டரதுங்கறதுதானே!

Reply

chandrashekar December 15, 2011 at 12:26 PM

வசதிபடைத்தவர்கள் வந்து செல்லும் இந்த இடங்களிலேயே இத்தனை வசதி குறைவுகள் என்றால் கொஞ்சம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் வந்து பாருங்க நடுத்தரவர்கத்த அங்க கட நடத்தறவங்களும் ஆட்டோக்காரர்களும் அடிக்கிற கொள்ளை, மழைநீர் சகதியான பேருந்து நிற்கும் மேடைகள், அசுத்தமான கழிவறைகள் நடைப்பாதைகள் எங்கும் எப்போதும் குப்பை, அதைவிடக் கொடுமை எந்தப் பேருந்தும் சுத்தமாகவோ பராமரிக்கப்படாமலோ இருக்காது, இந்த நிலைமை தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் என்றால் பிற இடங்களில் கேட்கவேண்டுமா தமிழ்நாட்டின் எந்தப் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தாலும் முதலில் வரவேற்பது மூத்திர நாற்றம் தான்

Reply

ஜோதிஜி December 15, 2011 at 1:37 PM

தமிழ்நாட்டின் எந்தப் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தாலும் முதலில் வரவேற்பது மூத்திர நாற்றம் தான்

நமக்கென்று ஒரு அடையாளம் வேண்டாமா சேகர்.

Reply

snkm December 15, 2011 at 3:42 PM

தமிழகம் இருப்பதிலேயே மிகவும் மோசமாக காணப் படுகிறது, உண்மையே. அதிலும் பல வெளிநாட்டவர்கள் வந்து செல்லக் கூடிய இடம் விமான நிலையம் அதுவே மோசமாக இருந்தால் அவர்களுக்கு நம்மைப் பற்றி எவ்வாறு நல்ல எண்ணம் ஏற்படும்?. எத்தனை தொழிற்சாலை களுக்கு வசதி செய்து கொடுத்தாலும் சாலைகள், விமான நிலையங்கள் , பேருந்து நிலையங்கள், ரயில் வண்டி நிலையங்கள் ஆகியவை முக்கியமாக தூய்மையுடன் பராமரிக்கப் பட வேண்டும்.
அரசியல் வியாதிகள் மக்களைப் பற்றி என்று சிந்தித்து இருக்கிறார்கள்?.
மக்களும் சரியாக பயன்படுத்துவதில்லை, அதையும் குறிப்பிட வேண்டும்.
உலகிலேயே பிளாஸ்டிக் பொருள்களை, சுற்றுப் புறத்தை ப் பற்றி சிந்திக்காமல் வீசி எறியும் பயணிகளைக் கொண்டது இந்திய ரயில்வே தான்.

Reply

Prabhu December 15, 2011 at 10:46 PM

Sariya sonninga

Reply

Arun December 15, 2011 at 11:17 PM

இந்த மாதிரி பதிவுகள் உங்களுக்கு எப்பவும் ஜுஜுபி தான். அழகான உரைநடை கிரி

- அருண்

Reply

ச. ஞானசேகரன் December 16, 2011 at 6:30 AM

எல்லோருடைய அனுபவங்களையும் சரியாக எடுத்து வைத்துளீர்கள். நன்றி

Reply

kannan December 16, 2011 at 8:42 AM

எழும்பூர் ரயில் நிலையத்தில் TTR பண்ணற அலம்பல பத்தி எழுதுங்க. ரயில்வே நிலையத்தில டிக்கெட் கொடுக்கிறவர் பண்ணற அநியாயத்தை பத்தி எழுதுங்க. ஒன் வே அறிவிப்பு எங்கயும் போடாம அந்த ரோட்ல போனா அதை காரணம் காட்டி காசு கேட்கிற டிராபிக் போலீஸ் பத்தி எழுதுங்க. ரெட் லைட்டே அடிச்சிட்டு போற 100 வாகனத்துல பாக்கறதுக்கு கொஞ்சம் பைசா உள்ளவங்கள பாத்து நிப்பாட்டி காசு வாங்கற போலீஸ் பத்தி எழுதுங்க. சாப்ட்வேர் கம்பனிகள் இருக்கற பெரிய இடத்திலையும் அந்த சிறுநீர் நாற்றம் வருவதை பத்தி எழுதுங்க.

Reply

பாமரன் December 16, 2011 at 6:04 PM

கிரி, விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் பத்தி எழுதி இருக்கீங்க. சென்னை பஸ் வசதியை விட்டுட்டீங்களே. மகா மட்டமான பேருந்து சேவைன்னா அது சென்னையில தான். பெங்களூர்ல பஸ் வசதி டாப் கிளாஸ். எல்லா தரப்பு மக்களின் பொருளாதார வசதிக்கும் ஏத்த மாதிரி வகை வகையா பேருந்துகள். எங்கே போறதுக்கும் வசதியா பேருந்துகள். ஆட்டோவுக்கு குடுக்குற காசுக்கு ரொம்ப குறைவாகவே தான் வால்வோ ஏ சி பஸ்சுக்கு ஆகுது. சுத்தமான பஸ்சுக்குள்ளே, நல்ல ஏ சி வசதியோட, FM பாட்டை கேட்டுக்கிட்டு பயணம் செய்யறது ஒரு சுகானுபவம். சென்னையில வால்வோவை பார்த்தா குமட்டுது. பெங்களூர்ல, வெளியூர் போற பஸ்ஸுங்க கூட, எத்தனை ரகம். KSRTC Online Booking அவ்வளவு வசதி. அது மட்டுமல்ல, எத்தனை இடத்துல Online Booking Counter வச்சு இருக்காங்க தெரியுமா? ஓசூர்ல கூட இருக்கு. SETC Online Booking Site ஐ ஒரு தடவை போய் பாருங்க கோவத்துல உங்க சிஸ்டத்தை உடைச்சுடுவீங்க.

மது கடைங்க கூட பெங்களூர்ல அவ்வளவு டீசெண்டா இருக்கு. தமிழ்நாட்டுலே அரசாங்கத்துக்கு வருமானத்தை அள்ளி குடுக்குற TASMAC, லோக்கல் சாராயக் கடை மாதிரி தான் இருக்கு. மக்களை இதுக்கு மேல ஒரு அரசாங்கம் கேவலப் படுத்த முடியாது. இதுல கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் வித்தியாசம் இல்லை.

அடிப்படை வசதிகளே சரியா இல்லாத ஒரு நகரத்தை நாட்டின் Metro City என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

Reply

rajesh v December 16, 2011 at 10:01 PM

mr. giri,

i never saw a airport. But, what you told about railway station is correct.

If you had visited the cmbt bus stand, you might have written about the shopkeepers who are selling food products more than the MRP rate and conductors who dont give proper change for long distance buses (especially conductors of chennai to theni route buses)

RAJESH V

Reply

கிரி December 17, 2011 at 11:06 AM

அனைவரின் வருகைக்கும் நன்றி

@ஜோதிஜி :-)

@முத்து எழுத நிறைய இருக்கு ..ஆனால் இதுவே ரொம்ப பெரிதாகி விட்டது.

@ராஜன் சார்! வேலையே பார்க்காம சம்பாதிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

@சந்திரசேகர் பேருந்துக் கதைகளை எழுதினால் தொடராகத் தான் எழுத வேண்டும்.

@SNKM அரசாங்கமும் அதிகாரிகளும் தங்கள் கடமைகளை சரியாக செய்தால் மக்களும் அதை பின்பற்றுவார்கள். உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதால் தான் இது போல நடக்கிறது.

@கண்ணன் :-)

@பாமரன் நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நம்ம ஊரில் கொடுக்கும் பணத்திற்கேற்ற தரம் இருப்பதில்லை என்பதே மிகப்பெரிய குறை.

@ராஜேஷ் இதை சந்திக்காதவர்களே இருக்க மாட்டார்கள். எரிச்சலாகத் தான் உள்ளது என்ன செய்வது.

Reply

Rajkumar December 18, 2011 at 10:24 PM

அண்ணாச்சி எனக்கு ப்ளைட்ட உட்டு கீழ இறங்குன உடனேயே கடுப்பாகுற விஷயம் சென்னை ஏர்போர்ட் கட்டமைப்பு மற்றும் ஆட்டோகாரன் பிரச்சினைதான். வெளியில போறோமே கொஞ்சம் அழகா போவோம்ன்னு பாத்ரூம் போனா அங்க சுத்தம் பண்ணாம பாசி படிஞ்சி கிடக்கும். கைகழுவும் பின்பு துடைக்க பேப்பர் வச்சிருக்க மாட்டான்.. இது தெரிஞ்சே நான் பிளைட்டிலேயே பேப்பர் வாங்கி வச்சிக்குவேன். ஆட்டோக்காரன் – சும்மா சொல்லக்கூடாது ‘சார் ஒருதடவை தானே வரீங்கன்னு ஆரம்பிப்பான்’. இப்போதான் நான் prepaid டாக்ஸி பார்த்தேன் இனிமே அதைதான் உபயோகப்படுத்தப் போறேன், இல்லையா அப்படியே வெளியில போன பஸ் ஸ்டாப் இருக்கு. ரெண்டு பாக்ஸ் ஏத்தி கோயம்பேடு போனோமா ஊருக்கு பஸ்ஸ புடிச்சோமான்னு போய்கிட்டே இருக்கணும் (பிளைட்டுல போறதவுட ஊருக்கு 8 மணிநேரம் பயணிப்பது ரொம்ப கொடுமை)
நான் பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன், இப்போ சென்னையில் கட்டிக்கொண்டிருக்கும் ஏர்போர்ட் – சைனாவில் உள்ள சாதாரண லோகல் (wuxi) ஏர்போர்ட் போலதான் இருக்கு இதுல எப்படி இவனுக 1000 க்கும் மேற்பட்ட flight மாசத்துக்கு பராமரிக்க போறானுகன்னு தெரியில. இன்டர்நேஷனல் ஏற்போர்டுன்னு பேரு வச்சிக்கிட்டு வெறும் 7 Boarding Gate எப்படி பத்தும் ? கடந்த 5 வருஷமா உலகிலேயே பெஸ்ட் ஏர்போர்ட் ஹாங்காங் தக்கவச்சிகிட்டு இருக்கு. உதரணத்துக்கு 32 – 80 bording gate செல்ல ஒவ்வொரு 3 நிமிஷத்துக்கும் free train இருக்குன்னா பார்த்துக்குங்க. படிக்க தெரியாதவன் கூட ஈசியா பயணிக்கலாம். சும்மா சொல்லல ஹாங்காங் ஏற்போர்டுல – எனக்கு வழி தெரியில நான் ப்ளைட் மிஸ் பண்ணிட்டேன்னு சொல்றவனுக்கு சத்தியமா என் சொத்தையே எழுதி வைக்குறேன். இத்துனூண்டு இருக்குற கேரளாவுல 5 க்கும் மேற்பட்ட (அனைத்து உலக விமானங்கள் சர்வீஸ் உண்டு) இன்டர்நேஷனல் ஏர்போர்ட் உண்டு. தமிழ்நாட்டுல மட்டும் ஏன் இப்படி என்று தெரியவில்லை. கன்னியாகுமரில உள்ள ஒருத்தன் சென்னை வழியாத்தான் போகனுமினா ரொம்ப கொடுமை. இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா ஏன் மேனேஜர் எனக்கு ஒவ்வொரு வருஷமும் 15 நாள்தான் லீவ் தரான் அதுல 4 நாள் பயனத்துலேயே போய்டுது.

அண்ணாச்சி இதெயெல்லாம் விட கொடுமையாக – நீங்க எப்பவாச்சும் நம்ம பெட்டி படுக்கைஎல்லாம் எப்படி unload பண்ணுகிரார்கள்ன்னு பார்த்துருகீங்களா. பாத்தீங்க டெரர் ஆயிடுவீங்க 16 கிலோ LED டிவி மேல 25 கிலோ சூட்கேஸ் இருக்கும்.

Reply

ஜோதிஜி December 18, 2011 at 11:44 PM

கிரி ஒன்றை கவனித்தீர்களா?

எல்லோருமே பொங்கு பொங்கென்று பொங்கி தீர்த்து விட்டார்கள். பெரும்பாலும் வெளிநாட்டில் பணிபுரிந்து உள்ளே வரும் போது நடக்கும் நிகழ்வுகள். ஆனால் ஒருவர் கூட இத்தனை துன்பங்கள், அதிகார துஷ்பிரயோகம், அலட்சியமான அதிகாரவர்க்கத்தினரை சகித்துக் கொண்டு உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றி பேசவில்லை. அவரவர் இழப்புகளை பெரிதாக நினைக்கும் நாம் இழப்புகளை மட்டுமே பார்த்து இழந்து போய்க்கொண்டிருக்கும் கமல்ஹாசன் சொல்லும் காமன்மேன் கோபம் எந்த அளவுக்கு உள்ளே இருக்கும் கிரி?

திருப்பூரில் இருந்து கோவை செல்லும் பேரூந்தில் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். தனியார் பேரூந்தில் அதிகமாக வேண்டுமென்றே இரண்டு ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டார். அவர் விடவில்லை. பெரிய களேபரத்தையே உருவாக்கி உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார். இறுதியாக உங்களை எல்லாம் ஆயிரம் அன்னா ஹாசரே வந்தாலும் திருத்த முடியாது என்று சொல்லிவிட்டு அருகே அமர்ந்திருந்த ஏராளமான தொழில்நுட்ப கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்களிடம் கேட்டார்.

ஏனப்பா உங்களை எல்லாம் நம்பி தானே நாடே இருக்கு . நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே என்றார். அதற்கு அவர்கள் சொன்ன பதில்.

எங்களுக்கு இந்த கூட வாங்கிய இரண்டு ரூபாயை சம்பாரிக்க திறமை இருக்கு. அதனால் எங்களுக்கு பிரச்சனையில்லை. உங்கள் அறிவுரை தேவையில்லை என்றார்கள்.

திகைத்துப் போய்விட்டேன்.

எங்கிருந்து மேலே சொன்னவர்களின் குறைகள் தொடங்குகின்றது என்பதற்காக இந்த சம்பவம்.

Reply

கிரி December 19, 2011 at 2:11 PM

@ராஜ்குமார் நீங்க முன்கட்டன டாக்சி பயன்படுத்துங்க அது தான் பிரச்சனை இல்லாதது. உங்கள் விடுமுறை பிரச்சனை பலருக்கும் இருக்கிறது. பெட்டி தூக்கிப்போடுவதை நானும் பார்த்து இருக்கிறேன். என்ன செய்வது?

@ஜோதிஜி இங்கே கூறியவர்கள் கூறியது அனைத்துமே இந்தப் பதிவில் சம்பந்தப்பட்டது என்பதால் மக்கள் பிரச்சனை பற்றி கூறவில்லை இதே மக்களைப் பற்றி எழுதி இருந்தால் அதற்கு தகுந்த மாதிரி பின்னூட்டம் போட்டு இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதுவுமில்லாமல் அதிகார வர்க்கத்தை சகித்து செல்லவே நமது அதிகார கட்டமைப்பு பழக்கி விட்டது அதை மீறி எதுவும் செய்தால் பாதிப்புக்கு உள்ளாவதால் அதை மீறி முயற்சி செய்ய யாரும் விரும்புவதில்லை. பின்வரும் விளைவுகளை சமாளிக்க யாரும் தயாராக இல்லை.

இதற்கு ஒரு சிறு உதாரணம் கூறுகிறேன்.. நான் சிங்கப்பூரில் ஒரு ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தேன் அப்போது அங்கே ரோந்தில் இருந்த ராணுவ வீரர் வந்து இங்கே புகைப்படம் எடுக்கக்கூடாது என்றார் நான் பதிலுக்கு இங்கே எடுக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லையே நான் எடுப்பதில் என்ன தவறு என்று கேட்டேன். அதெல்லாம் அனுமதிக்க முடியாது என்று கூறி அதை டெலிட் செய்ய கூறினார்கள். நானும் சிறிது வாக்குவாதம் செய்து விட்டு பின் டெலிட் செய்து விட்டேன். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் இதே நம் ஊராக இருந்தால் நான் எதிர் கேள்வி கேட்காமல் சொன்னதை செய்து இருப்பேன் அனுமதி இருக்கிறது என்று தெரிந்தும், காரணம் ரொம்ப பேசினால் அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்று தெரியும். சிங்கப்பூரில் நான் கேட்டதற்கு காரணம் அங்கே அரசாங்கம் கேள்வி கேட்கும் உரிமையை கொடுத்து இருக்கிறது கேட்பதற்கு பதில் கூற வேண்டும். அந்த ராணுவ வீரர் என்னை டெலிட் செய்ய கூறினாலும் நான் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பொறுமையாக பதில் கூறினார்.

எனக்கு அங்கே ஏதாவது அரசு இயந்திரம் வேலை செய்யவில்லை என்றால் தொலைபேசி செய்து அவர்களுக்கு புகார் தர முடிகிறது, தர தோன்றுகிறது அதே இங்கே என்னால் முடிவதில்லை காரணம் பொறுப்பான பதில் இல்லை அதோடு திட்டுகள் வேறு.

காமன் மேன் ஏன் நம்ம ஊரில் கேள்வி கேட்பதில்லை என்கிற காரணம் உங்களுக்கு புரிந்து இருக்கும்.

இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும் அதற்கு கொஞ்ச நேரம் முன்பு சுற்றுலா வந்த வெள்ளைக்காரர்கள் எடுக்கும் போது அவர்கள் எதுவும் கூறவில்லை ஆனால் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனக்கு இன்று வரை ஏன் அப்படி செய்தார்கள் என்று புரியவில்லை. நிறவெறி என்ற ஒன்றை தவிர.

நீங்கள் கூறிய பேருந்து சம்பவம் ரொம்ப மோசமானது. எனக்கு மாணவர்கள் மீது தவறு காண முடியவில்லை அவர்களுக்கு பணத்தின் மதிப்பை புரிந்து கொள்ளாத அளவிற்கு வளர்த்த அவர்கள் பெற்றோர்கள் மீது தான் கோபம் வந்தது. குறைந்த பட்சம் அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் இருந்து இருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது ஆனால் பணம் சம்பாதிக்கத் தெரியும் என்று கூறுவது இவர்கள் எக்காலத்திலும் பணத்தின் மதிப்பை உணர மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.

ஒரு தொழில் செய்கிறோம் நியாயமாக திறமையாக நடந்தும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது ஆனால் பணம் போனால் போகட்டும் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது என்னால் திரும்ப சம்பாதிக்க முடியும் என்று கூறுவது தன்னம்பிக்கை ஆனால் இந்த மாணவர்கள் கூறுவது பொறுப்பற்ற தனம்.

Reply

ரசிகன்டா December 20, 2011 at 10:10 PM

குரூப் ௧ தேர்வுக்கு தயார் செய்வது எப்படி

Reply

ரசிகன்டா December 20, 2011 at 10:12 PM

sorry giri

Reply

arjun December 20, 2011 at 10:23 PM

சென்னை விமான நிலையும், பேருந்து வசதியும் பெங்களுரு போல் மறுவதர்கே இன்னும் பல வருடங்கள் ஆகும் போல இதுலே சரவதேச level எல்லாம் நினைச்சு கூட பார்க்க கூடாது

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed