பற்றி எரியும் பிரிட்டன் – படங்கள் & காணொளி

ங்கிலாந்தில் உள்ள Tottonham மாவட்டத்தில் நடந்த ஊர்வலத்தின் போது ஏற்ப்பட்ட பிரச்சனையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் (கறுப்பர்) இறந்து விட்டார் அதனால் அங்கு பெரும் கலவரம் வெடித்து அது இங்கிலாந்து முழுவதும் பரவி விட்டது.

ஓரிரு நாளில் கலவரம் அடங்கி விடும் என்றே அனைவரும் நினைத்து இருந்தார்கள் ஆனால் கலவரம் நாளுக்கு நாள் அதிகமாகி தற்போது 16000 காவலர்களைக் கொண்டு அடக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டது.

வன்முறை என்றாலே அதைப் பயன்படுத்தி கொள்ளைகளும் நடைபெறும் அதற்கு இங்கிலாந்தும் விதிவிலக்கல்ல. ஒரு வரைமுறையே இல்லாமல் பல இடங்களில் கடைகளை உடைத்தும், ATM உடைத்தும் பொருட்களை அள்ளிச்சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இதில் ஆண் பெண் சிறுவர் என்று எந்த பாகுபாடுமில்லை.

நான் சென்னையில் இருந்த போது அரசியல் கட்சிகள் ஊர்வலம் நடந்தால் கடையை வைத்துள்ளவர்கள் எல்லாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பார்கள்.

தனியாகப்போய் அடித்தால் அது சண்டை ஆனால், அதே கூட்டமாகப் போய் அடித்தால் அது கலவரம்.

இவர்கள் ஊர்வலம் என்றால் அன்று பல கடைகள் குறிப்பாக டி நகரில் கடைக் கண்ணாடியை இவர்கள் உடைத்து விடாமல் இருக்க தார்ப்பாய் போட்டு மூடி இருப்பார்கள் தற்போதும் இது நடைமுறையில் உள்ளதா என்று தெரியவில்லை.

கலவரம் என்றால் பொறுக்கிகளுக்கு கொண்டாட்டம் தான்… பொறுக்கிகளுக்கு மட்டுமல்ல அவரவர் மனதில் தூங்கிக்கொண்டு இருக்கும் பொறுக்கியும் திருடனும் அன்று விழித்துக்கொள்வான். அது தான் இன்று இங்கிலாந்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

நேற்று வரை நாகரீகமாக தெருக்களில் நடமாடிக்கொண்டு இருந்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ரொம்ப நல்லவர்!! என்று நம்பியவர்கள் என்று கருதப்பட்டவர்கள் சுயரூபம் எல்லாம் இந்தக் கலவரத்தின் போது தான் தெரிந்து இருக்கும்.

கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கடைகளை நொறுக்கி திருடி இருக்கிறார்கள். கடைகளை உடைத்து LED TV, iPad, கடிகாரங்கள், கணினி, மின்சாதனங்கள், மதுபானங்கள், நகைகள் என்று அனைத்தையும் எடுத்து வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள்.

இளைஞர்கள் பெரும்பாலும் மதுபானங்களை திருடுவதிலேயே குறியாக இருந்து இருக்கிறார்கள்.

கொடுமையின் உச்சம் ஒரு இளைஞர்  அடிபட்டு ரத்தம் சிந்தி எழுந்திருக்க முடியாமல் இருக்க அவனை எழுப்பி பின் அவனிடம் இருந்த பொருட்களை மனசாட்சியே இல்லாமல் பறித்துச் செல்லும் காட்சி பார்ப்பவர்களைப் பதற வைக்கும்.

மனிதம் என்பதே சுத்தமாக கிடையாது என்று தான் தோன்றுகிறது.

தற்போது இவர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. மலேசியாவில் இருந்து படிக்க வந்து இருக்கும் 20 வயது இளைஞர் பெயர் Mohammad Asyraf Haziq. இவர் தனது நண்பரோடு சைக்கிளில் ரமலான் நோன்பில் கலந்து கொள்ள சென்ற போது இச்சம்பவம் நடை பெற்று இருக்கிறது.

20 பேர் கொண்ட குழு இவரை கீழே தள்ளி அடித்து இவரிடமிருந்து மொபைல் மற்றும் இவருடைய வாகனத்தை பறித்துச் சென்று இருக்கிறார்கள் அதோடு இவருடைய தாடையையும் உடைத்து விட்டார்கள்.

இந்த நிலையில் இருக்கும் போது தான் நீங்கள் பின்வரும் காணொளியில் பார்க்கப் போகும் சம்பவம் நடைபெற்றது.

இதன் பின் அங்கிருந்து லோக்கல் பெண் ஒருவர் இந்த இளைஞரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து இருக்கிறார். இதன் பிறகு facebook மூலம் இவருடைய நண்பர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து இந்த இளைஞர் கூறும் போது நான் தொடர்ந்து இங்கிலாந்திலேயே இருந்து எனது படிப்பை தொடர்வேன் என்றும் தற்போது உள்ள இடத்திலேயே (Barking) இருக்கப்போவதாகும் வேறு இடம் எதுவும் செல்லும் திட்டமில்லை என்று கூறி இருக்கிறார்.

இந்தக் காணொளி காட்டுத்தீயாக இணையத்தில் பரவி விட்டது. இந்த கலவரங்களின் முக்கிய அடையாளமாக இது குறிப்பிடப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து பிரதமர் David Cameron அதிர்ச்சி தெரிவித்து இருக்கிறார்.

சிறுவர்கள் எல்லாம் திருடிக்கொண்டு இருக்கும் செயல் நமது சமூகம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது என்று கூறி இருக்கிறார்.

கடைகளில் தங்கள் பொருட்களை பறி கொடுத்தவர்களின் நிலையை எண்ணிப்பார்த்தால் மிகக்கொடுமையாக இருக்கிறது. தங்கள் முன்னே தங்கள் கடை திருட்டுப்போவதை வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிப்பது மிக மிகக் கொடுமையான நிலை.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் தங்களுக்கு பிடிக்காத கடைகள் நபர்கள் அனைவரையும் இந்தக் கலவரத்தை வைத்து நொறுக்கி இருக்கிறார்கள். கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தி இருக்கிறார்கள் மற்றும் எவ்வளவு திருட முடியுமோ அவ்வளவு திருடி இருக்கிறார்கள்.

இது நாள் வரை வாய்ப்புக்கிடைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைத்து வைத்து இருந்தார்களோ அத்தனையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் அனைவரும் இவர்களுக்குப் பயந்து வீட்டில் இருக்கிறார்கள் எங்கேயும் செல்லாமல்.

இவர்கள் கொள்ளைகளுக்கு அதிகம் பிளாக் பெர்ரி மொபைலும், சமூகத்தளங்களும் உதவி இருக்கின்றன. மொபைல் மூலம் தகவல் அனுப்பி பல இடங்களில் கொள்ளை அடித்து இருக்கிறார்கள்.

அதே போல இவர்கள் கொள்ளையை உலகம் முழுக்க உடனே தெரியப்படுத்தியதும் சமூகத் தளங்களே! படங்களை வைத்து அடையாளம் கூற வசதி செய்து இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் சீக்கியர்கள் பரவி இருக்கிறார்கள் இங்கிலாந்திலும் அவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.

இந்தக்கலவரத்தைப் பயன்படுத்தி தங்களது வழிபாட்டுத் தலத்தை கலவரக்காரர்கள் சேதப்படுத்தி விடக்கூடாது என்று சீக்கியர்கள் ஆயுதங்களுடன் காவல் காக்கிறார்கள்.

உலகளவில் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் போது இங்கிலாந்தில் இதைப்போல நடந்து இருப்பது கவலை அளிக்கிறது. இந்த இழப்பில் இருந்து எளிதாக மீண்டு விடுவார்கள் என்றாலும் சிறிது காலம் எடுக்கும்.

எனக்கு தெரிந்து இங்கிலாந்து மக்களுக்கு இருக்கும் தற்போதைய ஒரே ஆறுதல் கிரிக்கெட்டில் இந்தியா அவர்களிடம் வாங்கும் தர்ம அடி மட்டுமே!

 UK riot

படங்களை க்ளிக் செய்தாலே போதுமானது. புதிய விண்டோவில் திறக்க வேண்டிய அவசியமில்லை.

Image Credits : http://catchalooter.tumblr.com/, www.todayonline.comhttp://www.reuters.com , www.bbc.com

{ 8 comments… add one }
 • EZ Driving Test (Free) August 11, 2011, 9:38 AM

  நல்ல பதிவு.
  Thanks,
  Priya
  http://www.ezdrivingtest.com

 • Mohamed Yasin August 11, 2011, 10:41 AM

  பதிவுக்கு நன்றி.. மனிதம் என்ற சொல் என்றோ மடிந்து விட்டது..

 • tharsigan August 11, 2011, 12:18 PM

  எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது .

 • ilavarasan August 11, 2011, 6:56 PM

  வணக்கம் கிரி அவர்களே.,,
  தகவல்களுக்கு நன்றி.

  சண்டைன்னு வந்துட்டா எல்லோருமே சமம்தான்.

 • ஜோதிஜி August 11, 2011, 10:20 PM

  கடந்த ௧௦ ஆண்டுகளாக பல வெளிநாட்டு நபர்களுடன் நேரிடையாக மறைமுகமாக தொடர்பு கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றேன். இதில் பலரையும் நெருக்கமான நட்பு வட்டத்தில் கூட வைத்துள்ளேன். என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். வளர்ந்த நாடுகள், வளர்ந்த நாகரிகம் என்று சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் வெறுமனே வார்த்தைகள்.தான். திருடன், மொள்ளமாறிகளை இந்த ஏற்றுமதி தொழிலில் சந்தித்துள்ளேன். எத்தனை குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்து குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் தெரியுமா? குறிப்பாக கனடாவைச் சேர்ந்தவர்கள். ஆப்பிரிக்கா நாட்டை பொதுவாக கருப்பு பட்டியலில் சேர்த்து வைத்து இருப்பார்கள். ஆனால் நீங்கள் பதிவில் சொல்லியுள்ள பல விசயங்களை ஐரோப்பிய நபர்களிடம் பார்த்துள்ளேன். பணம் என்ற மாயை எந்த நாகரிகத்திற்கும் கட்டுப்படாதது. அது இந்த நாடு அந்த நாடு என்ற பாகுபாடு பார்க்காதது. பல விதங்களிலும் குறைகள் அதிகம் உள்ள இந்தியர்கள் சிறப்பானவர்களே. இங்குள்ள அரசியல் அமைப்பு மட்டும் சரியாக இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு இந்தியனும் பெருமையாக சொல்லிக் கொள்ள இங்கு ஏராளமான விசயங்கள் உண்டு.

 • kanthimathi August 12, 2011, 7:11 AM

  காணொளி தந்து உண்மை நிலவரத்தை விளக்கியதற்கு நன்றி! கடைகள் நொறுக்கப் படுவதற்கு பரிதாபப் படுவது நமது உச்சகட்ட மனித நேயம். ஆனால் இம்மாதிரி வளர்ந்த நாடுகளில் insurance என்ற பெயரில் கடைக்காரர்கள் கறக்காமல் விடமாட்டார்கள். ஆனால் பொ… என்று குறிப்பிட்டிருப்பது கொஞ்சம் அதிகப்படியாகப் பட்டது எனக்கு. “சமுதாயத்தில் மாற்றங்கள் வர சண்டைகள் எல்லாம் சகஜமப்பா”, என்பது கார்ல் மார்க்ஸ் வாக்கு. ஜோதிஜி சொன்னதுபோல தரை இறங்கிவிட்டால் “கோட்” என்ன “சூட்” என்ன எல்லோரும் மனிதர்கள் தானே!

 • buruhani August 12, 2011, 7:17 PM

  படித்தவர்கள் வாழும் இந்த நாடு இப்படி பண்பில்லா மனிதர்களை வளர்த்தி விட்டிரிக்கிறதே ?

 • கிரி August 15, 2011, 8:38 AM

  அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஜோதிஜி நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். இதைப்போல இந்தியாவில் நடந்தால் ரவுடிகள் தான் இதைப்போல நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களே தவிர பொதுமக்கள் இதில் இறங்க மாட்டார்கள். மதக் கலவரத்தில் வேண்டும் என்றால் பொது மக்கள் ஈடுபடுவார்கள்.

  @காந்திமதி ரவுடிகளை பின் எப்படி அழைப்பது..சண்டைகள் சகஜம் தான் என்றாலும் இது சண்டை அல்ல..கொள்ளை. நான் மற்ற நாடு என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிச்சு திட்டினேன்.. இதே நம்ம ஊராக இருந்து இருந்தால் கண்டபடி திட்டி இருப்பேன் 🙂

Leave a Comment

facebook-domain-verification=3lzrs4v1d0rujft5vwoveqmq30dsyz