“பஸ் டே” என்ற …..

by கிரி on March 3, 2011

சென்னைக் கல்லூரி மாணவர்களின் “பஸ் டே” பிரச்சனை பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கொண்டாட்டத்திற்க்காக செய்து கொண்டு இருந்த விஷயம் தற்போது மக்களிடையே கடும் எதிர்ப்பையும் எரிச்சலையும் பெற்று இருக்கிறது.

பஸ் டே என்றால் என்ன?

தாங்கள் தினமும் செல்லும் பேருந்து அதில் உள்ள ஓட்டுனர் நடத்துனர் ஆகியோருக்கு மரியாதை செய்யும் பொருட்டு பேருந்தை அலங்காரம் செய்து அதில் தினம் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி அனைவருடனும் சேர்ந்து இதை ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக அனைவரின் மனதிலும் நிற்கும் ஒரு சந்தோசமான நிகழ்வாக நிறுத்துவதே பஸ் டே என்பதன் நோக்கம். இதன் மூலம் அந்த பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பயணிகள் இடையே ஒரு சுமூகமான நிலை தொடர உதவுகிறது.

ஆனால் தற்போது நடப்பது என்ன? மாணவர்கள் தங்கள் பலத்தை! மற்றவர்களுக்கு காட்டுவதாக நினைத்து இந்த அருமையான பஸ் டே என்ற ஒரு விசயத்தையே அனைவரும் வெறுக்கும் ஒரு நிகழ்வாக்கி விட்டார்கள். போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்வதை தாங்கள் செய்யும் ஒரு பெரிய சாதனையாகவும் மச்சான்! எல்லோரையும் மிரட்டிட்டோம்ல .. ங்கொய்யாலே! அவனவன் அரண்டு போய்ட்டான் என்று கூறிக்கொண்டு தாங்கள் என்ன தவறு செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை தெரிந்தும் இளமை தரும் வேகத்தால் இதை பெருமையான நிகழ்வாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நான் சென்னையில் பணி புரிந்த போது தினமும் என்னுடைய அலுவலகத்திற்கு காலையில் 45B பேருந்தில் தான் செல்வேன். எனக்கு தெரிந்து சென்னையில் அதிகக் கல்லூரிகளை கடந்து வரும் பேருந்து இதுவாகத்தான் இருக்கும். பேருந்தில் அலுவலகம் செல்வதற்குள் ஒரு சில மாணவர்கள் செய்வதைப்பார்க்கும் போது நமக்கு பொறுமை இழந்து விடும். கானாப்பாடல் என்ற பெயரில் பேருந்தை உடைக்காத குறையாக தட்டிக்கொண்டு இருப்பார்கள். ஜன்னல் பக்கம் அமர்ந்து இருக்கும் பெண்களை ஏதாவது கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். இதைவிடக்கொடுமை அதில் தினமும் வரும் ஒரு பெண்ணிற்கு பட்டப்பெயர் வைத்து விடுவார்கள்.

அதை வைத்து தினமும் ஏதாவது கிண்டல் செய்து கொண்டு இருப்பார்கள். அதைப்பார்க்கும் நமக்கு கொலைவெறி ஆகி விடும். நாம் என்ன திரைப்படத்தில் வரும் கதாநாயகனா! உடனே குரல் கொடுக்க… ஏதாவது பேசினால் நம்முடைய மூஞ்சி முகரை எல்லாம் பேத்து விடுவார்கள் இல்லை கிண்டல் செய்து கொண்டு இருப்பார்கள். காரணம் கூட்டமாக இருக்கிறோம் என்ற தைரியம் தான். இதே தனியாக இருப்பவர் என்றால் எந்த வித சேட்டையும் செய்யாமல் அமைதியாக இருப்பார்கள்.

அப்ப கலாட்டா எதுவுமே இல்லாமல் மாணவர்கள் அமைதியாகவே இருக்க வேண்டுமா?

சரியான கேள்வி தான். கல்லூரி மாணவர்கள் என்றால் கொஞ்சம் கலாட்டா குறும்பு காதல் இவை எல்லாம் இருந்தால் தான் அது இயல்பாக இருக்கும். இவை எல்லாம் இல்லாமல் மாணவர்கள் என்றால் படிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நபராக நான் இல்லை. படிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்றால் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று அதுவும் இந்தக்காலத்தில் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கற்பனையில் வேண்டும் என்றால் நினைக்கலாம். அதுவே முடியுமா என்று சந்தேகமாக உள்ளது.

மாணவர்கள் தங்கள் கொண்டாட்டங்களை அளவோடு நிறுத்திக்கொண்டால் எவருக்கும் பிரச்சனை இல்லை பொதுமக்களும் ஒரு ஜாலியான நிகழ்வாக எடுத்துக்கொண்டு சென்று விடுவார்கள். அளவு மீறும் போது அநாகரீகமாக நடந்து கொள்ளும் போது தான் தங்கள் பொறுமையை இழக்கிறார்கள். சில பெண்கள் இவர்கள் செய்வதை ரசிப்பதால், அனுமதிப்பதால் அவர்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்யத் தூண்டுகிறது. இதை நான் நேரிலேயே பார்த்து இருக்கிறேன். சில விசயங்களை நாகரீகம் கருதி கூறாமல் விடுகிறேன். சில பெண்கள் இதைப்போல செய்வதால் பாதிக்கப்படுவது இதில் சம்பந்தப்படாத அப்பாவிப் பெண்கள் தான்.

Bus Day பஸ் டே என்ற .....பஸ் டே அன்று போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து விடுகிறார்கள். வழியில் செல்லுபவர்களை ஆபாசமான சைகைகளால் கிண்டலடிக்கிறார்கள், வழியில் உள்ளவற்றை சேதப்படுத்துகிறார்கள். இதன் பெயரா கொண்டாட்டம்? கொண்டாட்டம் என்பது தானும் மகிழ்ந்து தன்னை சார்ந்து உள்ளபவர்களையும் மகிழ்விப்பது. இவர்கள் செய்வது என்ன?

அரசுக்கு மாணவர்களை பகைத்துக்கொள்வதில் பயம் அதனாலே அரசு மற்றும் அரசியல்வாதிகள் மாணவர்களின் இந்த பஸ் டே என்ற பொறுக்கித் தனத்திற்கு ஆதரவு தருகிறார்கள். இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றம் வந்து கேள்வி கேட்கும் அளவிற்கு தங்கள் நிலையை வைத்து இருக்கிறார்கள். இது அனைத்தும் அரசியல்வாதிகள் அவர்கள் நன்மைக்காக செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் படிப்பில் கோட்டை விட்டு வேலை எதுவும் கிடைக்காமல் இந்த போட்டி மிகுந்த உலகத்தில் விழி பிதுங்கி கொண்டு இருக்கும் போது நினைப்பீர்கள் அடடா! நாம் தவறு செய்து விட்டோமோ! என்று ஆனால் அது காலம் கடந்த செயலாக இருக்கும்.

இதைப்போல அனைத்து மாணவர்களும் நடப்பதில்லை தங்களின் குடும்ப நிலை தன் எதிர்காலம் கருதி இதைப்போல விசயங்களில் கலந்து கொள்ளாமல் படிப்பில் கவனமாக இருப்பவர்கள் பலர் உண்டு. போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து கூட்டமாக சேர்ந்து அப்பாவியை மிரட்டி ஹீரோவாக காட்டிக்கொள்வது நீங்கள் என்ன! இதைக் கூட்டமாக செய்தால் எவரும் செய்ய முடியும். தலைநகரம் படத்தில் வடிவேல்… தான் ரவுடி என்பதைக் காட்ட அப்பாவியைப் போட்டு அடிப்பாரே! அது மாதிரி இருக்கிறது நீங்கள் செய்வது. ஹே! பார்த்துக்குங்க கூட்டத்துல கோவிந்தா போடுற நானும் ரவுடிதான்னு சொல்ற மாதிரி இருக்கு.

இதனால் பாதிக்கப்படுபவர்கள் எத்தனை பேர்? அவசரமாக மருத்துவமனை செல்பவர்கள், விமானத்தை ரயிலை பிடிக்கச் செல்பவர்கள், நேர்முகத்தேர்வு செல்பவர்கள், முக்கியமான அலுவலக வேலையாக செல்பவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கையில் இதைப்போல போக்குவரத்து இடையூறு செய்து விளையாடுகிறார்கள். இவர்களுக்கு இதன் பின் உள்ள வலி என்ன புரியப்போகிறது? இதில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களுடைய அம்மாவோ, அப்பாவோ, அண்ணனோ அல்லது தங்கையாகவோ கூட இருக்கலாம். சாலையில் செல்பவர்களின் மண்டையை வேறு உடைத்து இருக்கிறார்கள்.

இதை எல்லாம் தெரியாமல் செய்கிறார்கள் என்று மட்டும் யாரும் வக்காலத்து வாங்கி விடாதீர்கள். அனைத்தும் நன்கு தெரிந்தும் இதைப்போல செய்கிறார்கள். சரக்கடித்து இருக்கும் போது தன் அக்கா தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்களா என்ன? சரக்கடிச்சு இருந்தாலும் தான் இதை செய்யக்கூடாது என்ற அறிவு வேலை செய்கிறது அல்லவா! அப்புறம் என்ன மற்றவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வது?

உங்களுக்கு இப்போது இதன் வலி புரியாது.. நீங்களும் பின்னாளில் குடும்பத்துடன் அக்கா, தங்கை அல்லது மனைவியுடனோ செல்லும் போது எவனாவது ஒரு பொறுக்கி கம்முனாட்டி நீங்கள் செய்ததைபோல கீழ்த்தரமாக நடத்து கொள்ளும் போது உங்களுக்கு வலிக்கும் பாருங்கள்…. அப்போது புரியும் உங்களின் கொண்டாட்டத்தின் அளவு எந்த அளவில் இருந்தது என்று. உங்களின் குடும்பத்தினருக்கு இதைப்போல ஒரு நிலை வராமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

என்னுடைய facebook fan page ல் பல கல்லூரி மாணவர்கள் இணைந்து உள்ளார்கள் அவர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள்! கொண்டாட்டங்களில் ஈடுபடுங்கள் நிச்சயம் தவறில்லை இந்த வயதில் ஜாலியாக இருக்காமல் வயதான பிறகு கொண்டாட முடியும் இளமைக்கால சந்தோசங்களை என்றும் திரும்பப் பெற முடியாது. உங்கள் கொண்டாட்டம் மற்றவர்களை பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இப்படி எல்லாம் கூறுவதால் எந்தப்பயனுமில்லை என்று நன்றாகத்தெரியும் இருப்பினும் சொல்லத்தோன்றியது அவ்வளவே! மற்றவர்கள் கூறி யாரும் தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை தானாக மாறினால் தான் உண்டு.

feed icon16x16 பஸ் டே என்ற ..... Subscribe in a reader

Related posts:

  1. காமன்வெல்த் (சில) பெருமைகள்!
  2. கமர்சியல் திரைப்படங்களே ஏன் மக்களை அதிகம் கவர்கின்றன?
  3. காமன்வெல்த் வெற்றி மற்றும் கில்லி சிலி
  4. ஒரு காட்டுமிராண்டியின் உள்ளக்குமுறல்!
  5. செக்ஸ் ஒரு விரிவான பார்வை!

{ 18 comments… read them below or add one }

dr suneel March 3, 2011 at 9:18 AM

நானும் சென்னையில் ஆறு வருடம் இருந்துள்ளேன் ,உண்மையில் அன்று அவர்கள் செய்வது அராஜகம் இன்றி வேறேதும் இல்லை ,எரிச்சலின் விளிம்பில் அனைவரும் இருப்பார்கள் ,அசிங்கமான அநாகரீகமான சீண்டல்கள் ..
அட போங்கய்யா உங்கள தான் வருங்கால இந்தியான்னு பெருமை பீத்திக்கிட்டு இருக்காங்க ..வெளங்கிரும் …
யாரவது ஒருவர் சின்ன எதிர்ப்பை காட்டினால் கூட சவுண்ட் எகிறும் , நடத்துனரும் ஓட்டுனரும் மனதில் சொல்ல முடியாத துயரத்தோடு வண்டி ஓட்டுவார்கள் ..
தனி தனியாக இவர்கள் எல்லாம் மோசமானவர்களா -நிச்சயம் இல்லை
எல்லாம் குழு மனப்பான்மை படுத்தும் பாடு ..வேறு என்னத்த சொல்ல .

Reply

ராமலக்ஷ்மி March 3, 2011 at 9:20 AM

மிக நல்ல பதிவு. கடைசி பத்தியை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

Reply

மாணவன் March 3, 2011 at 9:31 AM

பஸ் டேவைபற்றி தெளிவான பார்வையுடன் சொல்லியிருக்கீங்க அண்ணே,

நீங்கள் சொல்வதுபோல்

//உங்களுக்கு இப்போது இதன் வலி புரியாது.. நீங்களும் பின்னாளில் குடும்பத்துடன் அக்கா, தங்கை அல்லது மனைவியுடனோ செல்லும் போது எவனாவது ஒரு பொறுக்கி கம்முனாட்டி நீங்கள் செய்ததைபோல கீழ்த்தரமாக நடத்து கொள்ளும் போது உங்களுக்கு வலிக்கும் பாருங்கள்…. //

அவர்களும் அந்த வலியை உணரும்போது தவறு செய்திருக்கிறோம் என்று வருந்துவார்கள் இந்த நேரத்தில் நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான் நினைக்க வேண்டியுள்ளது “ஒவ்வொரு வினைக்கு அதற்கு சமமான எதிர்வினை உண்டு”

Reply

Chitra Solomon March 3, 2011 at 11:03 AM

அடுத்த வருட கொண்டாட்டங்கள் போது, மாணவர்கள் பொது மக்களின் சாபத்தை அல்ல – வாழ்த்தை பெறுவார்கள் என்று நம்புவோம்.

Reply

manikandan.A March 3, 2011 at 6:18 PM

மிக அருமையான செய்தியை சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா,
நான் பச்சையப்பன் கல்லூரியில் பயிலுகின்றேன். இது போன்ற சம்பவங்கள் தினமும் பார்கின்றேன், சில சமயம் என் நண்பர்களே இச்செயலில் ஈடுபடுகின்றனர்.நான் அறிவுரை கூறினாலும் அதை எடுத்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் செய்கிற தவறினால் சில நல்ல மாணவர்களையும் மக்கள் திட்டி தீர்க்கின்றனர். இது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. நீங்கள் சொன்னதுபோல் மற்றவர்கள் கூறி யாரும் தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை தானாக மாறினால் தான் உண்டு.

Reply

balasubramanian March 3, 2011 at 6:37 PM

குடித்து கும்மாளமிட ஒரு தினம் வேண்டும். அதற்காகத்தான் இந்த பஸ் டே. இதை கண்டிப்பான முறையில் தடை செய்ய வேண்டும்…

Reply

maduraisaravanan March 3, 2011 at 10:43 PM

// கொண்டாட்டம் என்பது தானும் மகிழ்ந்து தன்னை சார்ந்து உள்ளபவர்களையும் மகிழ்விப்பது//

இதை புரிந்து கொண்டாடுபவர்கள் யாரும் இல்லை… பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Reply

ANaND March 3, 2011 at 10:59 PM

நீங்களே சொல்லிட்டிங்க சொல்லி ஒண்ணும் ஆகபோறது இல்லைனு…
நான் சின்ன பையன் ….. நான் என்ன சொல்லுறது

Reply

venkatasubramaniyan March 4, 2011 at 10:53 AM

தமிழக போலீஸ் பாவம் இவர்களின் அராஜகத்தை வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைமை (அரசியல்வாதிகளால்). மிகவும் நல்ல பதிவு கிரி. நன்றி

Reply

K.Ranganathan March 5, 2011 at 12:08 AM

இந்த மாணவர்கள் அவர்களின் அக்கா தங்கையுடன் இதே போல கொண்டாடினால் நன்றாக இருக்கும்.

Reply

Arun March 5, 2011 at 1:26 AM

கிரி,
அட்வைஸ் கூட வலிக்காம சொல்லுறீங்க உங்க பையன் கொடுத்து வெச்சவன் தான்:)

- அருண்

Reply

கிரி March 5, 2011 at 8:37 AM

சுனில் ராமலக்ஷ்மி மாணவன் சித்ரா மணிகண்டன் பாலா சரவணன் ஆனந்த் வெங்கடசுப்ரமணியம் ரங்கநாதன் மற்றும் அருண் வருகைக்கு நன்றி

@சுனில் நீங்கள் கூறிய குழுமனப்பான்மை தவறுகளை தைரியமாகச் செய்யத் தூண்டுகிறது.

@மணிகண்டன் ஜாலியாக இருப்பதில் தவறில்லை அது வரம்பு மீறும் போது தான் பிரச்சனையாகிறது.

@அருண் இப்பெல்லாம் அறிவுரை கூறுவது என்றால் அது காமெடியான நிகழ்வு. அறிவுரை எல்லாம் கேட்டு நடக்க இங்க யாரும் இல்லை.. அந்தக்காலம் எல்லாம் மலையேறி விட்டது. இது புரியாம அறிவுரை சொல்றேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காங்க.

Reply

R.Gopi March 5, 2011 at 9:03 AM

கிரி….

இந்த பஸ் டே கொண்டாட்டங்கள் சம்பந்தமாக நான் எழுதிய பதிவு இதோ :

“பஸ் டே” – அராஜக கொண்டாட்டங்கள்
http://jokkiri.blogspot.com/2011/02/blog-post_23.html

Reply

Muthukumar March 5, 2011 at 12:40 PM

நெனச்சத இப்பிடி படார்னு எழுதுங்க கிரி, கேட்டு / பாத்து திருந்துறவங்க இன்னும் இருக்காங்க. உங்களோட இந்த பதிவு ஒரு மாணவனோட மனச மாத்தினாலும் உங்களுக்கு வெற்றிதான். உங்களோட இயல்பான நடையும் பிராக்டிகலான கருத்தும்தான் உங்க எழுத்தின் பலமே, அதையே ஆயுதமா வச்சு சென்சிடிவ் விஷயங்கள்ல கூட அநாயாசமா கருத்து சொல்லலாம் நீங்க. :)

Reply

பிரவின்குமார் March 5, 2011 at 3:54 PM

//இப்படி எல்லாம் கூறுவதால் எந்தப்பயனுமில்லை என்று நன்றாகத்தெரியும் இருப்பினும் சொல்லத்தோன்றியது அவ்வளவே! மற்றவர்கள் கூறி யாரும் தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை தானாக மாறினால் தான் உண்டு.//

தெளிவான மற்றும் உண்மையான கருத்துப் பகிர்வு தலைவா..!!!

Reply

ilavarasan March 5, 2011 at 9:42 PM

வணக்கம் கிரி அவர்களே
மிக அருமையான கட்டுரை என்னைப் போன்றோரின் மனக்குமுறல்களை வலிமையாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
நன்றி

Reply

parameswaran.c March 6, 2011 at 9:14 PM

அன்பு நண்பரே,வணக்கம்.தாங்கள்” பஸ் டே” பற்றி மிகத் தெளிவாகக் கூறியுள்ளீர்.எல்லா மாணவர்களையும் தவறாக மதிப்பிடுவது தவறு.உதாரணமாக அதே பச்சையப்பன் கல்லூரி மாணவரான நண்பர் மணிகண்டன் வேதனையையும் இதே பகுதி கருத்துப் பதிவில் காண்கிறோம்.இது போல எத்தனை மாணவ நண்பர்கள் வேதனைப்படுவார்கள். அவர்களுக்காகவாவது நாம் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.என்ன செய்வது? BY – பரமேஸ் டிரைவர் -

Reply

கிரி March 8, 2011 at 8:11 AM

@கோபி ஏற்கனவே படித்து விட்டேன் :-) என்னத்தை சொல்லி என்ன ஆகப்போகுது!

@முத்துக்குமார் நன்றி முயற்சி செய்கிறேன்.

@இளவரசன் பிரவின் நன்றி

@பரமேஸ்வரன் அனைத்து மாணவர்களையும் நான் குறிப்பிடவில்லை. நீங்கள் சரியாக படித்தீர்களா என்று தெரியவில்லை

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed