Tuesday, March 31, 2009
Saturday, March 28, 2009
பாகிஸ்தான் காமெடிகள் :-))
மின்னஞ்சலில் வந்த படங்கள் இவை. இதை போல காமெடிகள் இந்தியாவிலும் நடக்கும் என்றாலும் இவர்களை மிஞ்சுவது கொஞ்சம் கடினம் தான் போல இருக்கு :-)

பதிவு செய்தது: கிரி @ Saturday, March 28, 2009
பிரிவு: நகைச்சுவை, படங்கள் COMMENTS (35)
Friday, March 27, 2009
"LKG" சேர்க்கை ஆச்சரிய(கலவர)ங்கள்
பாராளுமன்ற தேர்தலில் எம்பி சீட் கூட கிடைத்து விடும் போல இருக்கு LKG சீட் கிடைக்காது போல இருக்கு, மிகைப்படுத்தி கூறவில்லை விஷயத்தை கேளுங்க.
இந்த முறை ஊருக்கு ஒரு திருமணத்திற்காக தான் முக்கியமாக சென்றேன். என் அக்கா சென்னையில் இருந்து ஊருக்கு வருவது சந்தேகம் என்று கூறினார்கள், ஏன் என்று கேட்டபோது, ஸ்ரேயா (என் அக்கா பெண்) க்கு திங்கள் கிழமை நேர்முக தேர்வு (Interview) அதனால் சனி ஞாயிறு திருமணத்திற்கு வந்து சென்றால் அவளால் நேர்முகத்தேர்வு திங்கள் சரியாக செய்ய முடியாது!!! என்று கூறினார்..ஏய்! அவ என்ன IAS நேர்முக தேர்வா செய்ய போகிறாள்..இந்த அளவிற்கு பில்ட் அப் கொடுக்கிறே! என்று கலாய்த்தேன்.. அதற்க்கு என் அக்கா கொடுத்த விளக்கத்தை கேட்டு பீதி ஆகாத குறை தான்..
அது பின்வருமாறு
தற்போது அடையாரில் உள்ள பள்ளியில் (இவர்கள் இந்திரா நகரில் இருக்கிறார்கள்) இவளோட அண்ணன் படிக்கிறான், அதனால் இவளுக்கு அட்மிசனில் கொஞ்சம் கூடுதல் சலுகையாம் (அடடா! என்ன ஒரு தாராள மனசு)
இதே பள்ளியில் சேர்த்தால் தான் இருவருக்கும் விடுமுறை விடுவதில் பிரச்சனை இருக்காதாம், வேறு பள்ளிகள் என்றால் மாற்றி விடுமுறை வந்தால் எங்கள் (அம்மா) ஊருக்கு வருவது மற்றும் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு என்றார், ஏற்று கொள்ளக்கூடியதாகத்தான் இருந்தது.
இதற்க்கு அமைச்சர்கள் சிபாரிசு வேண்டுமாம், அமைச்சர்களுக்கு 30 இடம் வரை தான் கொடுப்பார்களாம் (நம்பினா நம்புங்க)
அப்ளிகேசன் வாங்க இரவு முழுவதும் பள்ளியில் வரிசையில் தேவுடு காக்க வேண்டுமாம் (விதி வலியது)
நன்கொடை 60000 (ஒரு சில பள்ளியில் 80000-100000 வரை) கட்ட வேண்டுமாம் ( நான் கூறிக்கொண்டு இருப்பது LKG பற்றி தான்)
இந்த கட்டணம் இல்லாமல் டெர்ம் கட்டணம் தனி (அதாவது மெயின் டிஷ் வேறு சைடு டிஷ் வேறு)
பெற்றோர் கண்டிப்பாக நன்கு படித்து இருக்க வேண்டும், அப்பொழுது தான் குழந்தைகளுக்கு சொல்லித்தர முடியுமாம்!! (அப்ப இவங்க எதுக்கு இருக்காங்கன்னு அந்த சரஸ்வதிக்கு தான் வெளிச்சம்)
பெற்றோர்களுக்கும் நேர்முகத்தேர்வு உண்டு (ஏன்யா! இப்படி அட்டகாசம் பண்ணறீங்க, வேலைக்கு சேரும் போதே ஒழுங்கா நேர்முகத்தேர்வு செய்தது இல்லை இந்த லட்சணத்துல இது வேறயா)
குழந்தையை சேர்க்கும் போது, குழந்தையின் தந்தையின் சம்பள தகவல்களை ( salary details) கண்டிப்பாக கொடுக்க வேண்டும், குழந்தையின் பள்ளி கட்டணங்களை கட்டக்கூடிய அளவிற்கு அவர் சம்பளம் பெறுகிறாரா என்று பரிசோதித்து பின்னரே குழந்தையை சேர்ப்பார்களாம் (இங்க layoff ல அவனவன் டவுசர உருவிட்டு இருக்கானுக, இதுல இதெல்லாம் வேறயா)
இவள் பயப்படாமல் நேர்முகத்தேர்வு செய்கிறாளா என்பதை சரி பார்க்க ஒரு பள்ளியில் ஒத்திகை பார்த்தார்களாம் (இதெல்லாம் நெம்ப ஓவர்)
இதை எல்லாம் கூட சகித்துக்கொண்டேன் கடைசியா ஒண்ணு சொன்னாங்க பாருங்க...இதுல தான் நான் கொலை வெறி ஆகிட்டேன்..
அது என்னன்னா! திருமணம் ஆனா கையோடு LKG யில் சேர்க்க முன்பதிவு செய்து கொள்கிறவர்கள் அதிகமாகி விட்டார்களாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இதை கேட்டவுடன் சிவாஜி படத்தில் ஸ்ரேயா, ரஜினியை கறுப்பாக இருக்கிறார் என்று கூறியவுடன்....விவேக் டேய்! கடைய மூடுங்கடா! பஸ் ஐ கொளுத்துங்கடா! னு கலாட்ட செய்வார்.. அது மாதிரி ஆகிட்டேன்..
என்னய்யா இது உலக அநியாயமா இருக்கு இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவரா இருக்குன்னு குதித்தேன்,
உடனே மொதல்ல உன் பையனுக்கு (இவனுக்கு இப்ப தான் 6 மாதம் ஆகிறது) என்ன பண்ணுறதுன்னு யோசி! சும்மா இப்படி சொல்றதுல ஒண்ணுமில்ல என்று கூறியதும் காற்று போன பலூன் மாதிரி ஆகிட்டேன். என்ன கொடுமை சார் இது!
கடைசியில் அவளோட அப்பளிகேசன் கொடுப்பது தள்ளிப்போனதால் வெற்றிகரமாக!! திருமணத்தில் கலந்து கொண்டார்கள், இதை பள்ளியில் ஒரு 10 முறை உறுதி செய்து இருப்பார்கள் :-))
அரசு பள்ளிகளில் கட்டணம் எதுவும் இல்லை மற்றும் ஒரு சில பள்ளிகளில் சிறப்பான கல்வி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் அங்கு படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறன் என்று சிறப்பாக இருந்தாலும் இன்னும் நாம் தனியார் பள்ளிகளிலே நமது குழந்தைகளை சேர்த்து வருகிறோம்.
தற்போது போட்டி உலகம் ஆகி விட்டபடியால் பெற்றோர்களும் மற்ற குழந்தைகளுடன் போட்டியிட தங்கள் குழந்தைகளை தயார் படுத்த வேண்டியதாக உள்ளது. எனவே கல்வி தான் முக்கியம் என்பதால் பணத்தை பற்றி கவலைப்படாமல் எப்படியாவது தங்கள் பிள்ளைகள் நன்கு படித்தால் போதும் என்று அனைத்து சிரமங்களையும் சகித்துக்கொள்கிறார்கள்.
இதை பயன்படுத்திக்கொண்டு பள்ளிகளும் கல்லூரிகளும் கொள்ளை அடிக்கும் நிறுவனங்களாக மாறி விட்டது. தற்போது கல்வி நிறுவனங்களை தொடங்குவது நல்ல வியாபாரமாக அனைவராலும் கருதப்படுகிறது.
இது குறித்து ஏற்கனவே ஒரு முறை Pre KG க்கு புலம்பி இருக்கிறேன், இது LKG பதிவு (அது போன வருஷம் இது இந்த வருஷம் :-D) கொஞ்சம் கூடுதல் தகவலுடன் ;-).
நல்லா கிளப்புறாங்ய்யா பீதிய...

பதிவு செய்தது: கிரி @ Friday, March 27, 2009
பிரிவு: பொது, விவாதம் COMMENTS (29)
Wednesday, March 25, 2009
சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா? கண்டிப்பா இதை படிங்க
நம்மில் பல பேர் சிறு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதில் என்ன தவறு இருக்கு! தலைவலி காய்ச்சல் என்றால் மருந்து எடுத்துக்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
நான் கூறுவது சிறு தலைவலி மற்றும் தொடக்க காய்ச்சலுக்கு மட்டுமே! தீவிர பிரச்சனைக்கு அல்ல.
நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே காரணம்.
கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்.
நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும். எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.
முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.
இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் (Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache) போன்றவை) மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.
இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.
டிஸ்கி
மேற்கூறிய அனைத்தும் தொடக்க நிலைக்கு மட்டுமே, இதற்காக நாமே மருத்துவராக கருதி கொண்டு அலட்சியமாக இருந்து விடக்கூடாது, குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பதிவு செய்தது: கிரி @ Wednesday, March 25, 2009
பிரிவு: அனுபவம், பொது COMMENTS (28)
Monday, March 23, 2009
இதுக்கும் சிரிக்கலைனா நீங்க சிடுமூஞ்சி தான் :-))
யோவ்! போட்டோகிராபர்! எத்தனை வாட்டியா இப்படி குதிக்கிறது! இந்த வாட்டியாவது ஒழுங்கா போட்டோ எடுத்து தொலை....
ஹி ஹி அது வேற ஒண்ணுமில்ல இந்த கோடை விடுமுறைக்கு என்னோட "ஆளு" வரேன்னு சொல்லிட்டா அதான் ..அதை நினைத்தேன் ஒரே குஜாலாகிட்டேன்
எதோ டாக் ஷோ போட்டியாம்! அதற்க்கு இவ என் மூலமா முதல் பரிசு வாங்கணும் என்று காலைல இருந்து இது வரை ஏழு வாட்டி குளித்து விட்டுட்டா .. எனக்கு பரிசு வருதோ இல்லையோ ..இப்படியே போச்சுன்னா எனக்கு ஜன்னி வந்து நான் சங்காகிடுவேன் போல இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்
உலகம் சூடாகுது சூடாகுதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க.... நான் நமக்கு குளுகுளுன்னு தான்னே இருக்குன்னு நினைத்து கண்டுக்காம இருந்தேன்..கடைசில நிற்கிறதுக்கு இந்த ஒரு ஐஸ் தான் இருக்கு. அடப்பாவி மக்கா! உங்க வண்டவாளம் எல்லாம் இப்ப தான் தெரியுது..
மக்களே! இதை நம்பாதீங்க..நான் நல்லா தூங்கும் போது என் முதலாளி அவன் குடித்துட்டு என் பக்கத்துல பாட்டிலை போட்டு நான் குடித்த மாதிரி செட்டப் செய்து எனக்கு "குடிகார நாய்" னு பட்டம் கட்ட நினைக்கிறான்.....நம்பாதீங்க! நம்பாதீங்க!!
நாங்க சிம்பு வீட்டு வெட்டுகிளி! அதனால நாங்க யாரா இருந்தாலும் இப்படி தான் அலப்பறை செய்வோம்
யோவ்! வெங்காயம் நீ ஜூம் செய்து நான் கிட்ட தெரியலையா.. கண்ண கேமரால இருந்து வெளிய எடுத்து பாரு! நானே கிட்ட தான் இருக்கேன்
ஏங்க! நான் தான் அப்பவே சொன்னேனே! இந்த டைட்டானிக் வேலை எல்லாம் வேண்டாம்னு..இப்ப பாருங்க!
மீன் மார்க்கெட்டுல இருந்த மீனு எடுத்து ..எதோ நாமலே கடலுக்கு போய் பிடித்த மாதிரி சீன் போட்டா.. அதை போய் நாம வாய்க்கால்ல நிற்கிறது கூட தெரியாம இவங்க வாய பொளந்து பார்த்துட்டு இருக்காங்க.. ஹய்யோ! ஹய்யோ!!
ஏய்ய்ய்ய்! கத்திட்டிருக்கோம்ல.... சைலன்ஸ்ஸ்ஸ்

பதிவு செய்தது: கிரி @ Monday, March 23, 2009
பிரிவு: நகைச்சுவை, படங்கள் COMMENTS (55)
Friday, March 20, 2009
பார்வை இருந்து பின் பார்வை இழந்தவருடன் ஒரு சந்திப்பு
இந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது என் அப்பாவின் நண்பரை பார்க்க வேண்டி இருந்தது, அவருடன் தொலைபேசியில் பேசி பழக்கம் இருந்தாலும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. அவரை சந்தித்த போது அவருக்கு பார்வை முழுவதுமாக தெரியாது என்று தெரிந்த போது எனக்கு ஆச்சர்யம் கலந்த சோகம் ஏற்பட்டது, இந்த சோகம் அவருடன் பேசிய பிறகு மறைந்து விட்டிருந்தது. அவருடன் பேசியதை ஒரு உரையாடலாகவும், கேள்வி பதிலுடனும் தொகுத்து இருக்கிறேன்
இனி உலகம் தெரிந்ததவருடன் ....
உங்களுக்கு முதன் முதலில் பார்வை குறைவு எப்போது ஏற்பட்டது
20 வருடமாக கண் பிரச்சனை உள்ளது, கடந்த 5 வருடமாக சுத்தமாக தெரிவதில்லை க்ளுக்கோமா பிரச்சனையால்
பார்வை தெரியவில்லை என்று உங்களுக்கு பெரிய குறைபாடாக தற்போது உள்ளதா!
எனக்கு 20 வருடமாக இந்த பிரச்சனை இருப்பதால் கண் பார்வை முற்றிலும் போய் விடும் என்று எனக்கு தெரியும், எனவே என்னை நான் தயார் செய்து கொண்டேன்
எந்த வழியில்?
பார்வை சுமாராக தெரிந்த போதே கண்ணாடி எதுவும் இல்லாமல் சவரவம் செய்து கொள்ளுவது போன்ற வேலைகள் செய்து என்னை பழக்கப்படுத்தி கொண்டேன். உண்மையில் கண் தெரிந்த போது செய்ததை விட தற்போது நன்றாக சவரம் செய்வதாக உணருகிறேன் (சிரிக்கிறார்)
பார்வை தெரிந்து தற்போது பார்வை இல்லாமல் இருப்பது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?
தற்போது இல்லை, காரணம் நான் இந்த புதிய உலகத்தில் வாழ பழகி கொண்டேன், எனக்கு எதுவும் சிரமமாக தெரியவில்லை. அனைத்தும் சிஸ்டமேட்டிக்காக உள்ளது
உங்களுடைய பொழுபோக்கு என்ன?
எனக்கு வானொலி கேட்பதில் அதிகம் விருப்பம். நான் அதிகம் BBC செய்திகள் கேட்பேன், கிட்டத்தட்ட 50 வருடமாக கேட்கிறேன்.
குறிப்பிட்ட நேரத்தில் கேட்பீர்களா?
ஆமாம்
உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் வரும் நேரத்தில் வேறு யாராவது உங்களை சந்திக்க வந்தால்... (இடையில் நான் நுழைந்ததால் இந்த சந்தேகம் எனக்கு :-D)
சில சமயம் சிரமமாக தான் இருக்கும், அதற்காக வந்தவர்களை கவனிக்காமல் இருக்க முடியுமா! அவர்கள் மூன்று முறை செய்திகளை ஒலிபரப்புவார்கள், அதனால் ஏதாவது ஒரு நேரத்தில் கேட்டு கொள்வேன்.
உங்களுக்கு எது பற்றி விசயங்களில் அல்லது செய்திகளில் ஆர்வம்?
எனக்கு Intellectual ஆன விசயங்களை பேசுவதில் தெரிந்து கொள்வதில் ரொம்ப விருப்பம்
உங்களை சந்திக்க உங்கள் நண்பர்கள் அதிகம் வருகிறார்களா?
நிறைய வருவார்கள் பேசி விட்டு செல்வார்கள்
எதை பற்றி அதிகம் பேசுவார்கள்?
பெரும்பாலும் சினிமா அரசியல் இது பற்றி தான் பேசுவார்கள், ஆனால் எனக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை (சிரிக்கிறார்)
உங்களுக்கு பார்வை சென்ற பிறகு நீங்கள் தெரிந்து கொண்ட முக்கிய விஷயம் என்ன?
தமிழ்
எப்படி? !!!
எனக்கு சிறுவயதில் ஆங்கிலத்தில் அதிக ஈடுபாடு, BBC போன்றவற்றில் அதிக விருப்பம். எனவே தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் விட்டு விட்டேன், தற்போது வானொலி மூலம் நன்கு தமிழ் கற்று கொண்டேன், கடவுள் முருகன் பற்றி வாழ்த்துப்பா கூட எழுதி இருக்கிறேன்.
(எடுத்து தந்து படிக்க கூறுகிறார், அதை படித்து காட்ட அதற்க்கு விளக்கம் கூறுகிறார்)
ஆங்கிலத்தில் poem நிறைய எழுதி இருக்கிறேன் தற்போது தமிழில் எழுதி கொண்டு இருக்கிறேன், நான் கூறுவேன் யாராவது எழுதுவார்கள்.
நீங்கள் செய்திகள் அதிகம் கேட்பதாக கூறினீர்கள், உங்களுக்கு இந்திய,தமிழக செய்திகள் பிடிக்குமா? உலக செய்திகள் பிடிக்குமா?
உலக செய்திகள்
ஏன்?
இந்தியாவில் அரசியல் செய்திகள் அதிகம் வருகிறது, எதுவும் சரி இல்லை. அனைவரும் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதிலே குறியாக இருக்கிறார்கள்.
(தமிழ் நாட்டில் உள்ள பிரபல அரசியல்வாதியையும் வட நாட்டு அரசியவாதியையும் சாடுகிறார்)
இத்தனை பணத்தை சம்பாரித்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?
பேச்சு எய்ட்ஸ் பற்றி திரும்புகிறது
எய்ட்ஸ் என்பது ஒரு நோய் அல்ல, ஒரு வைரஸ் அவ்வளோ தான், இதன் ஆரம்ப நிலை தான் HIV, இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் இது இருப்பதே தெரியாது நார்மலாக தான் இருப்பார்கள், பின் தான் அது எய்ட்ஸ் ஆக மாறும்.
இந்த வைரஸ் ன் வேலை என்னவென்றால் நம்முடைய எதிர்ப்பு சக்தியை காலி செய்து கொண்டே வரும், நமது எதிர்ப்பு சக்தி முழுவதும் போகும் நிலை வரும் போது தான் எய்ட்ஸ் என்ற நிலையை அடைகிறோம்.
எதிர்ப்பு சக்தியே உடலில் இல்லை என்றால் என்ன ஆகும்? உலகில் உள்ள மொத்த வியாதியும் இந்த வைரஸ் தாக்கியவரை வந்தடையும்.
நாம் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவருடன் சகஜமாக பழகலாம், அதனால் நமக்கு எந்தவித பாதிப்புமில்லை. சலூனில் ஒருவரின் முகத்தை சவரம் செய்த அதே பிளேடை பயன்படுத்துவது மிகவும் தவறான ஒன்றாகும்.
ஒருவேளை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சவரம் செய்து அவருடைய ரத்தம், நமக்கு செய்யப்படும் போது ஏற்படும் காயத்தில் பட்டால் நமக்கும் அந்த வைரஸ் தாக்கி விடும். எனவே இதை அறவே தவிர்ப்பது நல்லது.
ஆனால் ரத்தம் நம் உடலில் இருந்து வெளியே வந்து மிகவும் குறுகிய காலமே (வினாடிகளே) இருக்க முடியும், அதற்க்கு மேல் வெளி சீதோஷண நிலையை தாங்காது அதில் உள்ள வைரஸ்கள் அழிந்து விடும். நம் உடலில் இருக்கும் வெப்ப நிலையிலேயே அவற்றால் உயிருடன் இருக்க முடியும். இப்படி இருந்தாலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.
இவர் இது பற்றி கூறிய போது ஜூனியர் விகடனில்(என்று நினைக்கிறேன்) ஒரு முறை வந்த கட்டுரை நினைவிற்கு வந்தது, சில சைக்கோக்கள் திரைஅரங்கில் இருக்கையில் ஊசி வைத்து விட்டு அதில் "Welcome to Aids family" எழுதி வைத்து இருந்தார்கள், அதை பார்த்த பலர் நாம் அந்த ஊசியின் மீது பட்டு இருப்போமோ என்று பீதி ஆனது குறித்து செய்தி வந்து இருந்தது.
(எனக்கு நேரம் இல்லாததால் மேலும் அவரிடம் தொடரமுடியவில்லை, என் அக்கா பையன் வேறு பொறுமை இழந்து கொண்டு இருந்தான்)
நான் கிளம்ப வேண்டி இருப்பதால் பிறகு உங்களை சந்திக்கிறேன்
இருங்கள் (என் அப்பா, அக்கா மற்றும் என் அக்கா பையன் உடன் இருந்தார்கள்) காஃபி சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும், எங்க வீட்டு காஃபி சுவையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அன்பு அதிகம் கலந்தது
அவர் அன்பை மறுக்க மனதில்லாமல் அவரது வீட்டில் சமையலுக்கு உதவியாக இருக்கும் ஒரு அம்மா கொடுத்த காஃபியை குடித்த பிறகே கிளம்பினோம்.
உங்கள் அனைவரையும் ரொம்ப போர் அடித்து விட்டேன் என்று நினைக்கிறேன் (சிரிக்கிறார்)
உண்மையில் உங்களிடம் பேசிய பிறகு நான் தான் நிறைய தெரிந்து கொண்டேன். நான் உங்களிடம் இன்னும் நிறைய கேள்விகள் கேட்க நினைத்து இருந்தேன், எனக்கு நேரமில்லாததால் தற்போது கிளம்ப மனமில்லாமல் கிளம்புகிறேன்.
முடிந்தால் சிங்கப்பூர் செல்லும் முன் வந்து செல்
சரிங்க (ஆனால் திரும்ப செல்லமுடியவில்லை)
*********************************
எனக்கு நீண்ட நாட்களாக இந்த பார்வை தெரியாதவர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள், அவர்கள் மிகவும் சிரமப்படுவார்களா! பார்வை தெரியாததை நினைத்து வருந்துவார்களா! அவர்களின் அன்றாட அடிப்படை தேவைகளை எப்படி சமாளிக்கிறார்கள்! என்று பல சந்தேகங்கள் ஆனால் இவரிடம் பேசிய பிறகு எனக்கு அது பற்றிய சந்தேகங்கள் பல குறைந்தது, எனக்கு ஒரே ஒரு குறை இன்னும் பல கேள்விகள் கேட்க நினைத்து அவற்றை நேரமின்மையால் கேட்க முடியாமல் போனது, இதில் எனக்கு மிக மிக மிக மிக ஏமாற்றம்.
டிஸ்கி:
இவருடன் பேசி 20 நாட்களுக்கு மேலாகி விட்டபடியால் நான் அவர் கூறியதாக கூறிய வார்த்தைகளில் என் நினைவில் இருந்து ஏதாவது மாற்றி நான் எழுதி இருக்கலாம், முடிந்த வரை சரியாக எழுதி இருப்பதாக கருதுகிறேன் அப்படி ஏதாவது மாற்றி வார்த்தைகளை எழுதி இருந்தால் அவர் என்னை மன்னிப்பாராக.

பதிவு செய்தது: கிரி @ Friday, March 20, 2009
பிரிவு: அனுபவம் COMMENTS (29)
Friday, March 13, 2009
இந்திய பயண மசாலா அனுபவங்கள்
தலைப்பை பார்த்ததும் எதோ மசால் தோசை பற்றி சொல்ல போறேன்னு நினைத்துக்காதீங்க, இந்தியா சென்று வந்த போது பல கலவையான அனுபவங்கள், அதை ஒவ்வொரு பதிவா போட்டு மொக்கை போட வேண்டாம் என்று எல்லாத்தையும் கலந்து ஒரு பதிவா போட்டு விடலாம் என்று இப்படி....போர் அடிக்காம இருக்கும் என்று நினைக்கிறேன்.
எங்க ஊர்ல உள்ள கோவில் திருவிழாவிற்காக பாடல்கள் போட்டு ஒலிபெருக்கியில் அலற விட்டு கொண்டு இருந்தார்கள் (அதுவும் விடியற்காலையிலே). பாவம் பொது தேர்வு எழுதும் +2 வகுப்பு மாணவர்கள். இந்த கிறுக்கனுக எப்ப தான் திருந்த போறானுகளோ! இவங்க கிட்ட போய் ஏன்யா! இப்படி செய்யறீங்கன்னு கேட்டா நம்மை தான் திட்டுவானுக, அவங்க பசங்களே படித்தாலும் இதே நிலைமை தான். இருக்கிற கோவிலை யாரும் பராமரிக்க மாட்டேங்கிறாங்க புதுசு புதுசா கோவில் கட்டுறாங்க, என்ன விஷயம்னு பார்த்தால் அப்ப தான் கோவில் தர்மகர்த்தா ஆக முடியுமாம்..அப்ப தான் ஒரு மதிப்பு இருக்குமாம்..விளங்கிடும்.. ஏன்யா! இப்படி ஒரு விளம்பரம். ஆண்டவா! இவங்க இம்சைக்கு ஒரு அளவே இல்லையா!
*****************
என்னோட அக்கா பையன் அவனுக்கு அவனோட கல்லூரி நண்பர்கள் அனுப்பிய ஒரு வாய்ஸ் SMS கொடுத்தான், அதுல ஏர்டெல் கஸ்டமர் கேர் ல இருக்கிறவங்களை பலர் பயங்கரமா கலாய்க்கிறாங்க..ஒருத்தர் அங்கு போன் செய்து இந்த இடத்துல நிற்கிறேன் என்னோட வண்டி ரிப்பேர் ஆகி விட்டது யாரையாவது அனுப்புங்க என்று கூறுகிறார், அதற்க்கு அவங்க சார் இது ஏர்டெல் கஸ்டமர் கேர் னு கூற, நீங்க தானே எங்க இருந்தாலும் உதவிக்கு வருவோம்னு சொன்னீங்க என்று மொக்கைய போட்டுட்டு இருக்காரு, பாவம். இதில் பேசிய பலர் கொங்கு ஸ்லாங்கில் பேசினார்கள்.
இன்னொருத்தர் பேசுறதை கேளுங்க
சார் எனக்கு தினமும் ஒரு ருபாய் பிடித்துக்குறாங்க, இப்படியே போனா நான் எப்படி பணம் கட்டுறது
நீங்க என்ன Plan ல இருக்கீங்க
சார் நான் plan ல எல்லாம் போக முடியாது குடும்பம் பெருசு
உங்க மொபைல் என்ன plan ல இருக்கு
சார் எனக்கு மூணு அக்கா தங்கச்சி இத்தனை கஷ்டத்துல நான் plan ல போக முடியாது
சார் நீங்க சரியா சொன்னா தான் கூற முடியும்
அது தான் சார் எங்க குடும்பம் பெரு.....டொக்.. தொடர்பு துண்டிக்கப்படுகிறது..
இன்னொருவர்
சார் எனக்கு 141 ல இருந்து SMS வந்துட்டே இருக்கு, அதை நிறுத்துங்க
சரி சார் நிறுத்தி விடுகிறோம் ஆனால் அதற்க்கு 40 நாட்கள் ஆகும்
சார் இப்ப நான் பஸ் ல போயிட்டு இருக்கேன் என்னோட மொபைல் ல பேட்டரி குறைவா இருக்கு, என்னோட ஆத்தா என்னை திட்டும் என்று எதோ சொல்கிறார்..
இவர்கள் அனைவரும் கலாய்க்கிறார்கள் என்பது முதலில் பேசும் போதே தெரிந்து விடுகிறது, ஆனால் அவர்கள் பேசுவது ரெகார்ட் செய்யப்படுவதால் கஸ்டமர் கேர் நபர்கள் வேறு வழி இல்லாமல் அமைதி காக்க வேண்டி உள்ளது. ஒரு சிலர் மார்க்கெட்டிங் செய்கிறேன் பேர்வழி என்று நமக்கு ஃபோனை போட்டு கிரெடிட் கார்ட் வாங்குங்க அதை வாங்குங்க இதை வாங்குங்க என்று தொல்லை செய்வதை போல இவர்களுக்கு இதை போல தொல்லை. இதை போல மார்க்கெட்டிங் செய்யும் பெண்களிடம் எதையும் வாங்காமல் கடலை மட்டும் போடும் வில்லாதி வில்லன்களும் பலர் உண்டு. பிரச்சனைகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் :-)
*******************
குடும்பஸ்தன் வேற ஆகி விட்டபடியால் ஊருக்கு வருவது விட்டு போன கல்யாண வீட்டிற்கும் இழவு வீட்டிற்கும் சொந்தக்காரங்க வீட்டிற்கும் செல்லவே சரியாக உள்ளது. வெய்யில் வேற வறுத்தெடுக்குது ஏற்கனவே ரொம்ப "கலரா" இருப்பேன் வண்டில சுத்துனதுல சூப்பர் "கலர்" ஆகி விட்டேன், சுருக்கமா காஞ்சு கருவாடு ஆகிட்டேன்.
நம்ம பதிவர்கள் பரிசல் வேலன் வெயிலான் வால்பையன் சினிமா நிருபர்(அமைதி அமைதி) சென்னையில் அப்துல்லா (நம்பர் மாத்திட்டாரு அவசரத்துல கேட்டு போன் வேற பண்ணுல மன்னித்துக்குங்க) முரளிகண்ணன் மற்றும் பதிவுலகம் சாராத இணைய நண்பர்கள் வினோ சுந்தர் உட்பட பலரை பார்க்க முடியலை ஒரு சிலரிடம் பேசவே முடியவில்லை. பந்தா விடுறேன்னு நினைத்துக்காதீங்க, இந்த முறை உண்மையாகவே ரொம்ப பிசி, கவுண்டர் சொல்ற மாதிரி பிசியோ பிசி.
*******************
சரி சிங்கையில் தான் பாட்டு எதுவும் அதிகமா டிவில பார்க்க முடியல இங்க வந்து பார்ப்போம்னு பார்த்தா..மொக்கைனா மொக்கை அப்படி ஒரு மொக்கையா இருக்கு. போன் பண்ணி இவங்க பண்ணுற அலப்பறை தாங்க முடியல சத்தியமா! எப்படி தான் இப்படி போன் போட்டு நீங்க சூப்பர் உங்க உடை சூப்பர் உங்க பேச்சு சூப்பர் னு பேசிட்டு இருக்காங்களோ ..நம்பினா நம்புங்க 10 நாள்ல அரை மணி நேரம் கூட மியூசிக் சேனல் பார்க்கல நேரமும் இல்லை, போன் ல பேசுறதை விட விளம்பரம் வேற சகிக்கல எத்தனை விளம்பரம்டா! சாமி.
ஜெயா மியூசிக் ல அப்படி இல்லைன்னு கேள்வி பட்டேன்..எங்க ஊர்ல அந்த சேனல் தெரிய மாட்டேங்குது. முதலில் scv சேனல்ல வெறும் பாட்டு மட்டும் வரும் அதை ஆன் செய்து விட்டு என் வேலைகளை பார்த்துட்டு இருப்பேன், இப்ப அதற்கும் வழி இல்லை. என்னமோ போங்க! சேனல் தான் அதிகம் ஆகிட்டே போகுது பார்க்கிற மாதிரி சேனல் குறைந்து கொண்டே வருகிறது.
*******************
நான் சிங்கையில் இருக்கிற நினைப்பில் (அங்கு தனி கட்டணம் என்பதால் subcribe செய்யவில்லை) கிரிக்கெட் நேரலை இருப்பதையே மறந்து விட்டு செய்திகளில் வரும் ஸ்கோர் பார்த்து கொண்டு இருந்தேன், நினைவு வந்து பார்த்தால் போட்டி பாதி முடிந்து விட்டது, அடடா! வடை போச்சே மாதிரி ஆகிட்டேன். இந்த சேவாக் என்னங்க இந்த அடி அடிக்கிறார், என்னமோ! ஆட்டமே அடுத்த ஓவரில் முடிந்து விடுவதை போல சிக்ஸ் ஃபோர் னு பட்டய கிளப்புறாரு (மைதானம் வேறு சின்னது கேட்க வேண்டுமா). நியூசி டீம் ல சொன்னதை போல அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகிட்டாரு, எல்லோரும் இவன் எப்ப தான் அவுட் ஆகி தொலைவான் என்று பார்த்துட்டே இருந்து இருப்பாங்க..ஹி ஹி ஹி ஆனா நம்மாளுங்க பெரும்பாலும் அனைவருமே நல்லா விளையாடுனாங்க.
சச்சின் ஒரு போட்டியில் அடித்த அடியை பார்த்ததும் சரி எப்படியும் அன்வர் சாதனையை (194) முறியடித்து விடுவாரு என்று இருந்தேன் (ஓவர் நிறைய இருந்தது) கடைசில அடிபட்டு பெவிலியன் வந்துட்டாரு, அடப்பாவிகளா இப்படி கவுத்துட்டீங்களே னு டென்ஷன் ஆகிட்டேன். இந்தியா இப்ப என்னடான்னா! தொடரையும் கைப்பற்றி விட்டாங்க. நியூசி ல மட்டும் தான் நம்ம ஆளுங்க எடுபடாம இருந்தாங்க இப்ப அந்த குறையும் தீர்ந்து போச்சு. நம்ம ஆளுங்க இதுவரை அதிர்ஷ்டத்தில் வெற்றி பெறவில்லைனு சந்தோசப்பட்டுக்கலாம் :-)) வாழ்த்துக்கள் தோ(டோ)னி.
********************
எங்க ஊரில் இருந்து சென்னை வந்து தான் சிங்கை வந்தேன், என் அப்பா ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட் நம்பர் பார்த்தேன் அப்பாடா! (25) நடுவில் தான் இருந்தது கழிவறை பக்கம் இல்லை, பிறகு என் அத்தையும் சென்னை வருவதாக கூறியதால் அவருக்கும் முன்பதிவு செய்தார்கள் எங்கள் கோச்சிலேயே இடம் கிடைத்து விட்டது. ரயில் நிலையம் வந்த பிறகு பார்த்தால் அவரது இடம் 65 (தாமதமாக முன்பதிவு செய்ததால் அருகில் கிடைக்கவில்லை, அதே கோச்சில் கிடைத்ததே பெரிய விஷயம்) கடைசி இடம் அவ்வ்வ்வ்வ்வ்வ் வேற வழி இல்லாம அவரை என் இடத்தில் விட்டு விட்டு நான் அங்கே சென்றேன்.. என்ன கொடுமை இது! அடேய்! கிரி உனக்கு ராசி விடாம துரத்துகிறது என்று புலம்பி கொண்டே சென்றேன்.
கழிவறை கப்பையும் லைட் வெளிச்சத்தையும் கூட சகிச்சுக்கலாம் போல, சேலத்தில் ஒரு மார்வாடி கும்பல் (தலையில முக்காடு போட்டு கலர் கலரா புடவை கட்டுவாங்களே அவங்க தான்) ஏறியது மூன்று பெண்கள் ஒரு ஆண். யப்பா! என்ன வாய்டா சாமி! (தோல் வாய்னு கவுண்டமணி மாதிரி சொல்லிடாதீங்க) லொட லொட ன்னு பேசிட்டே வராங்க..மெதுவா பேசினா கூட பரவாயில்லை 10 ம் நம்பர் ல படுத்து இருப்பவனே டென்ஷன் ஆகிடுவான் அப்படி கத்துறாங்க..என் நிலைமை ம்ம்ம் என்னத்தை சொல்றது. இவங்க சண்டை எல்லாம் போட்டா எப்படி இருக்கும்னு கற்பனை செய்து பார்த்து பீதி ஆகி கம்முனு தூங்கிட்டேன்.
********************
சென்னை நண்பர்களுடன் நேரமில்லாததால் எங்கும் செல்ல முடியவில்லை, சரி படத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து "நான் கடவுள்" படம் "சத்யம்" திரை அரங்கில் சென்றோம், நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் என்றாலும் சத்யம் ல் பார்க்கலாம் என்று போனோம் அது என்னவோ எனக்கு சத்யம் திரை அரங்கம் மேல ஒரு காதல். நான் முன்பு பார்த்ததை விட அதிக மாற்றங்கள். சும்மா சொல்ல கூடாது சிங்கையில் கூட இதை போல திரை அரங்கு நான் பார்த்தது இல்லை. வாங்கும் பணத்திற்கு (ரொம்ப அதிகம் தான் அதுவும் ஸ்நாக்ஸ்... முடியல) சிறப்பாக உள்ளது.
திரை அரங்கிற்கு கூட்டம் வருவதே இல்லை என்று அனைவரும் புலம்பி கொண்டு இருக்கிறார்கள், இங்கே என்னடாவென்றால் நிற்க இடம் இல்லை அவ்வளோ கூட்டம் அதுவும் வார நாளில். பெரும்பாலும் இளசுகள் தான். ம்ம்ம் சென்னை பெண்கள் அழகாகி கொண்டே போகிறார்கள், ஒன்றும் சொல்வதிற்கில்லை ;-) நம்ம ஊர் நம்ம ஊர் தான்
*********************
என்னடா ஆளை (பின்னூட்டம்) காணோமே என்று திட்ட வேண்டாம், இரண்டுவாரம் இணையம் வரவில்லை (வரக்கூடாது என்றே இருந்தேன்), இப்ப நம்ம ஆளு அட! அது தாங்க என் பையன் வந்துட்டான் அதுனால அவன் கூட நேரம் செலவிடுவதையே விரும்புகிறேன். என்ன தான் சொல்லுங்க குழந்தைங்க கூட நேரம் செலவிடுவதில் இருக்கும் சுகமே தனி தான், அது இப்ப தான் எனக்கு (வாய்ப்பு கிடைத்தது) தெரியுது, சுகமான சுமை.
நெக்ஸ்ட் மீட் பண்றேன்

பதிவு செய்தது: கிரி @ Friday, March 13, 2009
பிரிவு: மசாலா மிக்ஸ் COMMENTS (36)








































